Wednesday, September 6, 2023

பாரதி பாடல் ‘கண்ணம்மா என் குலதெய்வம்’ - ஒரு விளக்கம்

இப்பொழுதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. உடனே அதைத் தாயே என்று கூப்பிடுகிறார் ஒரு கவிஞர். அதுவும் கண்ணனைப் பார்த்து ! கூப்பிட்டாலும் பரவாயில்லை. அதனிடம் போய் நாம் பாதுகாத்துப் போற்றிப் பேணி வளர்க்க வேண்டியிருக்க, அதனிடம் என்னைக் காப்பாற்று! உன்னைச் சரணடைந்தேன் என்றா சொல்வது?
சரணடைந்ததுதான் அடைந்தார். எதற்காகவாம்? பொன் வேண்டுமாம். உயர்வு வேண்டுமாம். புகழ் வேண்டுமாம். இதையெல்லாம் விரும்பிடும் இவரைக் கவலைகள் தின்னத் தகாது என்று அவற்றினின்றும் காக்க வேண்டிச் சரணடைகிறார்.
என்னது இது! கண்ணன் பிறந்திருக்கிறான். ஏதோ கவிஞர். அதனால் அம்மா என்று கூப்பிட்டார் என்று பார்த்தால், சரணம் என்றார். சரி பக்தி போலும் என்று பார்த்தால், பொன் வேண்டும், உயர்வு வேண்டும், புகழ் வேண்டும். இவ்வளவும் வேண்டும் என்பவர் அதையாவது கண்ணனிடம் கேட்கிறாரா? இல்லை. இதையெல்லாம் வேண்டும் தனக்குக் கவலைகளால் பாதிப்பு நேரக் கூடாது என்கிறார். கொஞ்சம் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறார் போலும்! இல்லை. மகாகவி பாரதி என்றால் அதில் ஆழ்ந்திருக்கும் கவியுளம் இருக்குமே!
கருத்துச் சுருக்கமாக இந்தப் பாடல் ‘கண்ணம்மா எனது குலதெய்வம்’ என்பது அமைந்திருக்கிறது.
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
ஏனென்றால்,
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
சரணடைந்ததாகத்தான் கூறுகிறார். ஆனால் அவர் பாடுவதற்கு ஆன விளக்கம் அவருடைய பாடல் பிறிதொன்றில் வழக்கமாகக் கிட்டும். இந்தப் பாடலுக்கு விளக்க உரையாக ஒரு பாடல் அமைந்திருக்கிறது. அதுதான் ‘கண்ணம்மா என் குழந்தை’ என்பது. அதில்,
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும் பொற் சித்திரமே!
என்று பாடுகிறாரா.. இப்பொழுது புரிந்தது அவர் வேண்டும் பொன் என்ன என்பது. பிள்ளைக் கனியமுது, செல்வக் களஞ்சியம் ஆன கண்ணம்மா அவரை என்ன செய்கிறது? கண்ணம்மா வந்தவுடனே கவிஞரைக் கலி தீர்த்து உலகில் ஏற்றம் புரிய வைத்து விட்டது. உயர்வும், புகழும் தன்னைப் போல் கண்ணம்மா வந்ததுதான் தாமதம், தாமாக உண்டாகிவிட்டன. ஆனால் இந்தப் பொன்னையும், உயர்வையும், புகழையும் விரும்புவதற்கு எது தடையாக இருந்தது? கவலைகள். கவலைகள் என்பன வைரஸ் மாதிரி. வாழும் உயிரைத் தின்று பெருகும். வளத்தைத் தின்னும். ஏன்? பொன்னாகவும், உயர்வாகவும், புகழாகவும் வந்து தோன்றும் கண்ணம்மா பாதுகாத்தால்தான் கவலைகள் போகுமா? ஆம்.
ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் எழுதுகிறார். ஜீவனாகிய இவன் செய்ய வேண்டியதெல்லாம் என்ன எனில் வெறுக்காமையும், விலக்காமையுமே செய்ய வேண்டியது. மற்றபடி ஜீவனின் நன்மைக்கு உண்டான அனைத்தும் கண்ணன் செய்து கொண்டிருக்கிறான்.
ஜீவனின் சாமர்த்தியமே நித்தமும் கவலைப் பயிராக்கித் தனக்குக் கடவுள் செய்யும் நன்மையைத் திறமையாக விலக்கிக் கொண்டு தட்டழிவதே ஆகும். ஜீவன் பிரார்த்திக்க வேண்டியதே பகவானிடம், தன்னைத் தன் கையில் காட்டிக் கொடுக்காமல் இருக்க வேண்டித்தான். ஏனெனில் தனக்கு நன்மை என்று நினைத்துத் தீமையைச் சூழ்த்துக் கொள்வதில் ஜீவன் மிகவும் கைதேர்ந்தது. எனவே கவலைகள் தன்னைத் தின்னத்தகாது என்று சரணடைகிறார்.
பார் படைத்தவன் தேரோட்டியாக அமர்ந்திருக்கிறான். ஆனால் அர்ச்சுனனோ கவலையில் விழுந்து உழல்கிறான். அர்ச்சுன விஷாதம் என்றால் அர்ச்சுனனின் கவலை.
என்ன கவலை? அதன் உருவம் என்ன? ஏழ்மை, மிடிமை, உள்ளத்தின் வறுமை, அச்சம். இவை நெஞ்சில் குடி புகுந்தால் பின்னர் ஒளி போய்விடும். ஏன் இதை ஜீவன் தானே போக்கிக் கொள்ள முடியாதா? தான் என்று ஜீவன் நினைத்ததால்தானே இந்த வறுமையும், அச்சமும் உண்டாவதே. இதைத்தான் அடுத்த கண்ணியில் பாடுகிறார் கவிஞர்.
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வணம்
நின்னைச் சரணடைந்தேன் என்கிறார். தான் என்பதில் நங்கூரம் போடும் பொழுது கவலைக் கடலில் ஆழும். அவன் செயல் என்று ஐக்கியமாகி ஒன்றும் பொழுது விண்ணாய் விரியும். விண்ணாய் விரிய வேண்டியது கவலையில் எத்துண்ணும் துரும்பாய் ஆவது என்ன மிடிமை! இதற்குக் காரணமே தான் தான் என்று அந்தரங்கத்தில் உணரும் உயிர் அச்சத்தில் நடுங்காமல் என்ன செய்யும்? தன்னிலிருந்து தன்னைக் காக்க தலைவன் தாளே சரண்.
தன் செயல் இல்லையாகி விட்டது இனி எல்லாம் அவன் செயல் என்றால் அப்பொழுது அங்கே துன்பம் என்பது ஏது? சோர்வுதான் ஏது? தோல்வி என்பதும் ஒன்றும் இல்லையே. கர்மம் நிஷ்பலம் ஆகும். ஆனால் கைங்கரியம் ஒரு நாளும் பொய்க்காதே! தன்னில் வைத்த பாரத்தை அவனில் வைத்துவிடும் போது அங்கு கர்மம் கைங்கரியத்தில் புகும் என்றல்லவோ பிள்ளை உலகாரியன் வாக்கு!
பின்னர்த் துன்பம் இல்லை, தோல்வி இல்லை, சோர்வு இல்லை என்றால் என்னதான் உண்டு அங்கே?
அன்பு ஒன்றுதான் உண்டு. சரி அது மனநிலை. ஆனால் நெறி? அந்த அன்புதான் நெறியும் ஆம்.
அன்பு நெறியாக ஆனால் அங்கே அறங்கள் தாமே வளரும். இதையே செந்நாப்போதார் வேறுவிதமாகச் சொன்னார். என்பு இல்லாத உயிரை வெயில் காயும். அதுபோல் அன்பு இல்லாத உயிரை அறம் காயும். அன்பு என்று ஒன்று இருந்தால் அது வெறுமனே இருக்காது. ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும். அந்தக் குழந்தைதான் அருள். அருள் இருக்கும் இடத்தில் அவ்வுலகம் தானே இருக்கும்.
அதெல்லாம் சரி. முதலில் அறம் என்றால் என்ன? திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என்கிறார். ஓஹோ!
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் என்றால், அந்த மாசு என்பது யாது? ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களில் விசேஷமானவர் லாடு மஹராஜ் என்னும் சுவாமி அத்புதானந்தர். லாடு மஹராஜுடன் ஒப்பிட்டால் ஸ்ரீராமகிருஷ்ணர் மிக அதிகமாகக் கல்வி கற்றவர் என்று சொல்லலாம் என்றால் லாடு மஹராஜ் எவ்வளவு கல்வி வாய்ந்தவர் என்பது புரியும். ஆனால் அந்த அத்புதானந்தர்தான் மிக முக்கியமான கேள்விக்குப் பதில் சொல்கிறார். மனத்தில் மாசு என்றால் என்ன? அவரைக் கேட்டார்கள். சித்த சுத்தி என்கிறார்களே? அப்படியென்றால் சித்தத்தில் இருக்கும் அழுக்கு எது? அசுத்தி எது? லாடு மஹராஜ் சொன்னார்: அது ஒன்றுமில்லை. நான் என்று தன்னையே மையமாக நினைக்கும் அகங்காரம் இருக்கே அதுதான் மாசு, அசுத்தி. அதை நீக்கினால் சித்தம் சுத்தியாகிவிடுகிறது.
இங்கே மகாகவி என்ன சொல்கிறார்? தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து இங்கு நின் செயல் செய்து நிறைவு பெறுவது என்கிறார். இந்த மனத்துக்கண் மாசு இருக்கும் வரையில் கவலைகள் தின்னும். மிடிமை, அச்சம் நெஞ்சில் குடிகொள்ளும். அறங்கள் தேயும். அன்பிலாத உயிரை அறம் காயும். இதையெல்லாம் நாம் கவனமாக எப்படிப் பார்த்துப் பார்த்து நீக்குவது? நம்மை நாமே காப்பது? ஒரே வழி. உத்தமமான வழி.!
நல்லது தீயது நாம் அறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக !
அப்படியென்றால் நீர் என்ன செய்கிறீர்?
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து இங்கு
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
பாவம்! பிறந்த குழந்தைக்கு நாம் எல்லாம் செய்ய வேண்டியிருக்க அதற்கு நாம் எவ்வளவு வேலை வைக்கிறோம் பார்த்தீர்களா?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***


Wednesday, May 31, 2023

A little reed has been enough..

Henri De Regnier என்ற ஃப்ரெஞ்சுக் கவிஞரின் கவிதை ஒன்று இப்படித் தொடங்குகிறது. 

A little reed has been enough
To make the high grass shake and thrill,
The willows tall,
The meadow wide,
The brooklet and the song thereof;
A little reed has been enough
To make the forest musical. 

ஒரு சின்ன புல் போதும் காட்டையே இசை கிளரும் வடிவாய் ஆக்கி விடுகிறது என்கிறார். காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை. அந்த முல்லையின் தெய்வமான மாயோன் குழலூதிய வண்ணம் காட்டை நிரப்புகிறான் என்கின்றனர் பத்தர்கள். மேற்படிக் கவிதையைப் படித்தவுடன் மனம் கொஞ்சம் ரீங்காரம் போடத் தொடங்கிவிட்டது. 

புல் ஒன்று போதும் 

புலர் போதம் ஆகும் 

புல் ஒன்று போதும் 

புவி நாதம் ஆகும் 

புல் ஒன்று குழலாகப் 

பரமன் இதழ் அமுதூறப் 

பிரபஞ்சத்தின் நாதம் 

பயில் கானம் ஆகும் 

புல் ஒன்று போதும்... 

கவிதையின் தன்மையே தொற்றிக் கொள்வதும், தோன்றிப் பின் தோன்றித் தோன்றுவதும். இசையின் கார்வைகள் போல், இசைவின் போர்வைகள் போல்.. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, March 9, 2023

பெண் என்னும் பெருந்தகைக்கு ...

பெண் என்னும் பெருந்தகைக்கு

உன்னோடு நான் பிறந்தேன்
உன்னோடுதான் நான் திரிந்தேன்.
உன்னோடு விளையாடி
உன்னோடு போராடி
உன்னோடு மன்றாடி
உன்னோடுதான் வளைய வந்தேன்.
தம்பியாக உன்னுடன் நான்
பிடித்த அடங்களில்
நீதான் விட்டுக் கொடுத்தாய்.
நீயாக சில நேரம்
உனக்கு அழகு அதுதான் என்று
உற்றோரும் பெற்றோரும் உபதேசித்து 
வேண்டா வெறுப்பாய்ச்
சில நேரம்.
ஆனால் தம்பியாக நான் உனக்குச்
செய்திருக்க வேண்டிய சேவைகள்தாம் எத்துணை!
நானும் செய்யவில்லை.
நாலும் அறிந்து சூழ் மனிதர்
எவரும் அதுதான் எனக்கு அழகு
என்று உபதேசித்து உறுத்தவில்லை.
ஆண்பிள்ளையின் அழகு என்று
அனைவராலும் ரசிக்கப்பட்டது.
விரசம் என்ன என்றால்
நீயும் ரசித்தாய்
என் தம்பி ஒரு முரடனென்று.
பண்படுத்திப் படுத்திய
பண்பாட்டின் அனிச்சைவினை
அது என்று நீ அறிவாயோ
அறியேன் அறிதொறும் என்னை
நாணம் கவிகிறது.
அண்ணனாக உன்னை
ஏவிக் கூவி அடக்கி நியமித்து
அதிகாரம் செய்திருக்கிறேன்;
ஆனால் அண்ணனாக நான்
காட்ட வேண்டிய பாசம்?
அக்கறை என்ற பெயரில்
அத்தனையும் மிச்சமாகி
நிற்கிறது மோசம்.
என் அண்ணா என்னிடம்
எவ்வளவு பாசம் !
என்று நீ விதந்தோதும்
கணம் ஒன்றில்
தூக்குக் கயிற்றில்
தொங்குகிறது என் உள்ளம்.
கல்யாணமாகிப் போய்விட்ட
கண்மணிகளை இழந்து
பாசக் குருடாய்
அலைகிறது நெஞ்சம்.
அண்ணன் என்ற முகமூடி களைந்து
அலறுகிறது அன்பின் உயிர்;
தம்பி என்ற தகவிழந்து
புயல்பறவையாய்த்
தடுமாறி அழிகிறது ஏழைப் பாசம்;
அடுத்த வீட்டுத் தோழியாய்
எதிர் வீட்டு நண்பியாய்
ஒரு வகுப்புச் சகியாய்
மேல் வகுப்புப் பாச தேவதையாய்
நீ வந்த போதெல்லாம்
நான் என்னை மட்டுமே
கண்டு கொண்டிருந்தேன்;
என் ஆண் அகங்காரத்தின்
உத்யான வனமாய் உன்னைக் கருதிய
என் பிழைக்கே உன்மத்தமானேன்.
அப்பொழுது எல்லாம்
உவந்து உவந்து நீ எனக்கு
உணர்த்திய குறிப்பையெல்லாம்
என் மமகாரத்தின் முற்றத்தில்
நீ ஆடிய நடனம் எனக் களித்தேன்.
தாயாகி நீ வந்த போது
தனயனாகிச் செல்வனாகித் திமிர்ந்தேன்;
பாட்டியாகி நீ வருங்கால்
என் படாடோபத்தின் பாசறை
என மகிழ்ந்தேன்;
ஆனால் என் போலித்தனம் எல்லாம்
கருகிப் போய்ச்
சுய உணர்வின் மின் தந்தியில்
அடிபட்ட இளம் புள்ளாய்
இருட்டில் சொட்டும்
பனிமழைக்கு நடுங்கி மாயும்
என் முன்னர் 
தெய்வமாகி
வந்து விடாதே!
பெண்ணே! 
இப்படிக்கு இந்த வேதனையுடன்
இறக்க விரும்பும்
ஓர் மனித உயிர். 
(ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் கவிதைகள், பக்கம் 198, தமிழினி, 2021)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Tuesday, March 7, 2023

வாழ்வதற்கான தத்துவம் - தொடக்கம்

’என்ன இப்படி இறங்கிவிட்டாய், திடீரென்று?’ என்று பார்க்கிறீர்களோ! நியாயம்தான். வைணவம், தத்துவம், வேதாந்தம், மெடஃபிஸிகல் என்று எழுதிக் கொண்டிருந்த ஆள் திடீரென்று ‘அன்றாட வாழ்க்கையைப் பார்ப்போம் அப்பா’ என்று விரக்தியடைந்து எழுதுவது போன்று தொடங்கவில்லை. உண்மையிலேயே என்ன தத்துவம், மதம், கோட்பாடு, யோக நிலை என்றெல்லாம் யோசித்தாலும் கடைசியில் மிஞ்சுவது என்ன? இதோ இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, இந்த வாழ்க்கை. உணவு, பசி, தூக்கம், விழிப்பு, உடல்நலம், அலைச்சல், கவலைகள், பிறகு கொஞ்சம் ஓய்வு, ஓய்வில் படிப்பு, சிந்தனை, அதிலும் கவலை, பிறகு ஏதோ நிம்மதி, பிரச்சனை, குடைச்சல், பின்னர் தீர்வு, பெருமூச்சு, இதற்கு நடுவில் நாளுக்கு நாள் வயதாகிப் போய்க் கொண்டிருக்கும் கண்ணிற்குத் தெரியாத சன்னமான ஓட்டம் -- இதெல்லாம் கலந்த உருவமாக வாழ்க்கை. அப்படியென்றால் எந்தத் தத்துவம், ஆன்மிகம், யோகம், அதீதம் என்றாலும் எல்லாம் நாமாகி நிற்கும், நடக்கும், நகரும், ஓடும், ஓடாமல் உட்காரும், பின் தொடரும் வாழ்க்கை என்பதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஏதாவது உதவி செய்தால்தான் அந்தத் தத்துவம், கோட்பாடு எல்லாவற்றிற்கும் அர்த்தம் ஏற்படுகிறது. இல்லையென்றால் ‘அப்பப்பா பெரிய விஷயம் எல்லாம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று மிகவும் நாசூக்காக நம்முடைய மனமே அதை ஓரத்தில் அல்லது கைக்கெட்டாமல் பரணில் வைத்துவிட்டு ஜாக்கிரதையாகத் தள்ளிப் போய்விடுகிறது. அதாவது வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்றை நம்மால் உண்மையில் அக்கறை கொண்டு ஈடுபட முடியவில்லை. இது குற்றமன்று. ஏன் எனில் இப்படித்தான் நாம் கட்டமைக்கப் பட்டிருக்கிறோம். இதுதான் நாம். மனிதர் என்று சொல்லும் போது மனம் உடையவர் என்ற பொருளில், மனம் என்பது வாழ்க்கை என்பது யாது, அதற்குத் தேவை என்ன என்பதைக் கைக்கொண்டும், தொடர்பில்லாதவற்றைத் தள்ளி வைத்தும் கரிசனமும் சிக்கனமும் காட்டி நம்மைக் கொண்டு செல்கிறது. தொடக்கத்திலேயே இந்த உண்மையைக் கௌரவமாக, வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுவிடுதல் நலம். 

இந்த இயல்பான உண்மையை ஏற்றுக் கொண்டான பிறகு நம் விஷயங்கள் கொஞ்சம் சுலபமானது போல் ஆகிவிடுகின்றன. வாழ்க்கையை அமுக்கி அதன் மேல் ஏறி நின்று எங்கோ வானத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மனம் தன் இயல்பான இயக்கத்திற்கு வந்து சேருவதில் நஷ்டம் எதுவும் இல்லை. லாபமே. இப்பொழுது ஒரு புதிய கேள்வி பிறக்கிறது. வாழ்வதுதானே வாழ்க்கை? பின் பேசாமல் வாழ்ந்து விட்டுப் போவதை விட்டுவிட்டு ஏன் அதற்கான தத்துவம் என்று யோசிக்க வேண்டும்? இது ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குப் பதிலாக ஓரமாக நின்று ரன்னிங் காமண்ட்ரி சொல்வது போல் ஆகாதா? ஆம். இந்தக் கேள்வியை நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். அதாவது புரியாத அதீத விஷயங்களைப் பற்றித்தான் தத்துவம் என்று நினைத்துப் பழகிய நமக்கு அன்றாடம் வந்து சேரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்வதைப் போல் பெரிய யோகம் எதுவும் இல்லை என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனாலும் வாழ்க்கைக்கான தத்துவம் என்று நாம் தொடர்ந்து பார்க்கும் பொழுது இந்தக் கேள்வி பொருந்தாது என்பது தானே புரியும். அதுமட்டுமன்று. நாம் ஏதோ அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றித்தான் பேசுகின்றன என்று நினைத்த பல தத்துவங்களும் உண்மையில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வந்துவிட்டுத்தான் வார்த்தைகளில் சிக்கிக் கொண்டு எங்கோ அந்தரத்தில் நின்றுவிட்டன என்பதும் நமக்குப் போகப் போகப் புரியும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, January 14, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 30

வங்கக் கடல்கிளர்ந்த மாவுரைகள் காட்டுபொருள்
திங்கள் முழுதும் திருப்பாவை தான்விளங்க
எங்கள் இயல்வும் எமைக்காக்கும் தன்னியல்வும்
மங்காப் புகழ்பறையாம் மாதவனார் சேவடியும்
சங்கத் தமிழிசைத்து நங்கள் குலம்வாழ
அங்கத் திருப்பாவை ஆண்டாள் அருளியவா
பொங்கு மலியுவகை பூரிப்பத் தாம்சொல்வார்
எங்கும் திருவருளால் தாம்மகிழ்வ ரெம்பாவாய்.

*

கப்பல்கள் நிறைந்து விளங்குவது கடலுக்கே ஒரு தனி அழகு. அருளிச்செயல் என்பது ஆழம் காண முடியாத கடல் போன்றது. ஆனால் கப்பல்களும், நாவாய்களும் நம்மைக் கடலின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அதன் அழகையும், ஆக்கங்களையும் காட்ட இயலும். அவ்வாறு நமக்கு உதவியாய் இருப்பன உரைகள். மார்கழி மாதமே திருப்பாவை மாதம் என்று சொல்லலாம் அளவிற்கு ஆண்டாளின் கிருபையால் நமக்கு வாய்த்தது. திருப்பாவையில் இருக்கும் ஆழ்பொருட்கள் எத்துணையோ! ஆயினும் முக்கியமாக நமக்குத் திருப்பாவை அறிவிப்பதோ ஜீவர்களாகிய நம்முடைய இயல்பையும், நம்மைக் காக்கும் பரம்பொருளின் இயல்பையும், பறை என்று குறிப்புச் சொல்லால் காட்டப்படும் கைங்கரியம், தொண்டு நாம் செய்ய வேண்டியதான மாதவனார் சேவடியையும் சங்கத் தமிழாக இசைத்து அருளியவள் ஆண்டாள். ஏன் சங்கத் தமிழ்? பரிபாடல் சொல்கிறது: ‘நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்?’ என்று. ’வாலறிவன் நற்றாள் தொழார் எனின் கல்வியால் என்ன பயன்?’ என்று கேட்கிறார் திருவள்ளுவர். பிரபன்ன குலம் என்பதற்கு உலகில் எந்த வேலிகளும், விலக்குகளும் கிடையாது. அந்த நம் பிரபன்ன குலத்திற்கு ஸ்ரீஆண்டாள் திருப்பாவையை அருளியிருக்கிறார் என்பதை நினைக்கும் தோறும் உளம்மலி உவகை நமக்கு விஞ்சுகிறது. அவ்வாறு உவகை மீதூறத் திருபபாவையைச் சொல்வோர் எங்கிருந்தாலும், இங்கு உலகில் இருக்கும் காலத்திலும், அங்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் காலத்திலும், இவ்வுலகில் எந்நாட்டில் எந்நிலையில் இருந்தாலும், அங்கிங்கென்னாதபடி எங்கும் சூழ்ந்த திருவருளால் ஆனந்தமயமாகவே வாழ்வார்கள். 

திருப்பாவை முப்பதில் தீந்தமிழால் வீட்டை
அருள்பாவை போற்றிப் புனைந்தேன் - மருள்தீர
மார்கழியில் ஆண்டாளம் மாதவனை மன்னியசீர்
ஆரமுதப் பாவின் அருள்.

அருளிச் செயலாகி ஆண்டாள் அளித்தாள்
மருள்மதியேன் நானும் மொழிந்தேன் - சிறுவர்தாம்
அன்னைசொலப் பின்னால் மழலை அரற்றுவதைப்
புன்சொல் எனவோ புகல்.

ஸ்ரீஆண்டாளின் திருப்பாவை முப்பதையும் அந்தந்தப் பாடலை அந்தந்த வார்த்தைகளே ஒலிக்கும் வண்ணம் இரசிக்க வேண்டும். அதில் ஆண்டாளைப் பற்றிப் போற்ற வேண்டும். திருப்பாவையின் அர்த்தங்கள் தெரியும்படி இருக்க வேண்டும் என்று ஏதோ ஓர் ஆசையில் இந்த முயற்சி. அன்னை சொல்கின்ற வார்த்தைகளைக் குழந்தைகள் திருப்பிச் சொல்லும் போது மழலையாகக் குதப்பும். இருந்தாலும் அன்னை அதைக் கண்டு கோபிப்பதில்லை. அதனால் ஆண்டாள் கோபிக்க மாட்டாள் என்று தெரியும். அதனால் நீங்களும் கோபப் படுவதை விட்டுவிட்டு ஏதோ உற்சாகம் என்று இரசிப்பீர்களாக! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, January 13, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 29

சிற்றஞ் சிறுகாலே நின்திருப் பாவையினை
முற்றா மதியுடையோம் வந்துநாம் சேவித்துப்
பெற்றதாம் பேருரைகள் நல்கும் பொருளாழ்ந்து
கற்றுன் திருவடிக்கே குற்றேவல் யாம்வாய்ந்தே
இற்றைப் படிப்பால் இயம்பியசொல் அன்றுகாண்
இற்றைக்கும் என்றைக்கும் நின்னருள் பாவையினால்
உற்றோமே யாவோம் உலகெலாம் ஒன்றாவோம்
மற்றைநம் வேகங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

இயற்கையின் அடிமைப் பாவைகளாய்த் திரிந்த நம்மைத் தம் திருப்பாவையினால் ஆண்டார் ஸ்ரீஆண்டாள். வாழ்க்கை முழுதுமே நீண்ட மறதியும், உறக்கமுமாய்க் கிடந்த நாம் கதிரவனுக்கு முன்னமேயே எழுந்து ஒளி வருவதற்கு முன்னர் அதற்கு வரவேற்பு நல்கும் குழாமாய்க் கூடி நிற்கின்றோம். நம் வாழ்வுக்கு ஒளி என்றும் வந்து கொண்டிருக்கிறது. அதை வரவேற்க நாம் சித்தமாய்ச் சன்னத்தமாகி நிற்பதற்குப் பெயர்தான் விழிப்பு. உலகத்தில் விழிப்பு என்பது அகங்காரத்தின் ஆட்டத் தொடக்கமாக ஆகிவிடுகிறது. ஆனால் திருப்பாவையில் விழிப்பு என்பது நம்மைப் பிரபஞ்ச இதயத்தின் கீதமாகப் புலரச் செய்கிறது. நன்றியில் தோயும் நம் இதயமோ ஸ்ரீஆண்டாளின் திருமுன்னர்ப் போய் நிற்கிறது. ‘அம்மா! நின் திருப்பாவையினைக் கற்றுச் சிற்றஞ்சிறுகாலை வந்து நாம் உன் திருவடிக்கே குற்றேவலாய் வந்து நிற்கின்றோம். குறை மதியுடையோம். உரைகளைக் கற்றுப் பொருள் உணர்ந்து அதனால் உன் திருவடிக்கே தீர்ந்து வந்து நாம் நிற்கிறோம் என்று இல்லை. படிப்பால் வந்த பக்குவம் அன்று இது. நின் பேரருளால் விளைந்த வாய்மை இது. நின் திருப்பாவையினால் அனைவரும் உற்றாராய் ஆகி உனக்கே ஆட்செய்ய வந்து நிற்கின்றோம். பிரிவினைகள் அகன்று உலகெல்லாம் ஒன்றானோம். எங்கள் வேகங்களை நல்வழியில் செலுத்தி எம்மை ஆள்வாய் அன்னையே!’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 28

கறவைகள் புன்சிரிக்கும் கல்விக்கே தேர்ந்தோம்
துறவிலோம் திண்மையிலோம் தீமைக்கே கற்றோம்
அறமிலாப் பாரிதனில் ஆண்டாளைப் பெற்றோம்
குறையொன்று மில்லாத கோதைமொழி கற்றோம்
உறவேல் நமக்கென்றும் ஓதுமுரை உற்றோம்
அறியாதப் பிள்ளைகளோம் அன்பினால் செய்யும்
சிறுமை மதிமாற்றிச் சிந்தையினை ஆளும்
பொறுமை யுனக்கேயாம் போந்தேலோ ரெம்பாவாய்.

கறவைகள் என்னும் ஆனினங்கள் நம்மைக் காணும் போது அவற்றை நாம் நன்கு நோக்கினால் ஏதோ ஓர் எள்ளல் நகை அவை புரிவது போல் இருக்கும். ’நான்கு காலில் நின்றுகொண்டு நாங்கள் வாழ்வதை விடவும் தரம் குறைந்துதான் இரண்டு காலில் நின்று, இருநிலம் எல்லாம் ஆண்டு, மதிவல்லமை கொண்டு மனிதர் என்று நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை’ என்று அவை சொல்லாமல் சொல்வது போல் தோன்றும். டாக்டர் டூலிட்டில் என்னும் படத்தில் வருவதைப் போன்று ஒருவேளை அவை பேசும் மொழி நமக்குப் புரியக் கூடுமானால் நமக்கு என்றும் இரத்தக் கொதிப்புதான். எனவேதான் ஓரிரு கணங்களுக்கு மேல் அவற்றை நாம் உற்று நோக்க முடியாது. ஏனெனில் நம் மனசாட்சியும் அவற்றோடு கட்சி சேர்ந்து விடுமோ என்ற பயம் என்றும் நமக்கு உண்டு. நாம் கற்ற கல்வியெல்லாம் பார்க்கப் போனால் கறவைகளின் புன்சிரிப்புக்கு எதிர் நிற்க முடிவதில்லை. ஆசைகளை அனுபவிப்பதைத்தான் மிகப்பெரிய சாதனை என்று கருதுகிறோம். உண்மையில் ஆசைகள் என்பவை இயற்கை நம்மை ஸ்விட்ச் தட்டி ஆட்டிவைக்கும் இயந்திரத் தனங்கள். இதை ஒரு நாளும் நாம் உணர்வதில்லை. உணர்ந்தாலும் நம்மிடம் உணர்வில் நிலைநிற்கும் திண்மை இல்லை. இயற்கையின் அடிமைகளாய் இருந்துகொண்டு நாம் கற்பது எல்லாம் தீமைக்கே குற்றேவல் என்று ஆகிவிடுகிறது. நாம் உள்ளூற அந்நியப்பட்டு நிற்பது எதனோடு என்றால் அறம் என்பதனோடு. இந்த அறமிலாப் பார் இதனில் நல்ல வேளையாக நாம் ஆண்டாளைப் பெற்றிருக்கிறோம். அவளுடைய மொழி குறை ஒன்றும் இலலாதது. குறையொன்றுமில்லாத கோதைமொழியை நாம் கற்பதே உய்வுக்கு வழி. நமக்கு உறவாக உரைகளையும் பெற்றோம். அறியாதப் பிள்ளைகளோம் நாம். அன்பு ஒன்றைக் கைக்கொண்டால் நம்முடைய சிறுமை மதியை மாற்றி நம் சிந்தையினை ஆளும் பொறுமை வாய்ந்தவள் ஸ்ரீஆண்டாள் ஒருவரே. அந்த ஆண்டாளையே அடைக்கலமாய் நாம் புகுகின்றோம்! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***