Wednesday, March 18, 2015

உயிர் என்னும் வைரஸ் - சிறுகதை

ன்னப்பா ! எத்தனை நாளா நீ தட்டுனதை நான் அடிக்கறது?
நானாக எதையாவது அடிக்கக் கூடாதா? 

அதற்கு நான் பொறுப்பில்லை. 

அதெப்படி? எழுதறதே கூட்டு முயற்சிதானே? 

இதோ பார். நீ ஜடம். உன் வேலை... 

ஏம்பா..ஜடம் என்கிறாய்..அப்புறம் ..ஜடத்துக்கு ஏது வேலை? 

இதோ பார் பேச்சைக் குறை. அடித்ததைத் தட்டு. அதுதான் நீ. 

அது முன்னாடிப்பா. இப்ப எனக்குன்னு உயிர் உணர்ச்சிகள் எல்லாம் வந்துட்டுதுல்ல... 

உணர்ச்சிகளா? 

ஆமாம்...நீ பாட்டுக்கு கேட்காம கொள்ளாம எல்லா கீயையும் தட்டாத,...கூச்சமா இருக்குல்ல...சில சமயம் ஒரு சில கீயையே சும்ம அடிக்கற...தலைவேதனையா இருக்கு.... 

ஓ மை காட்....நிஜமாகவே உயிர்..வந்து...உணர்ச்சியுடன்...பேசுகிறாயா? 

இதோ பார் இப்பத்தான் சொன்னேன்...நீ பாட்டுக்கு ...மை காட்னு அடிக்கற....எனக்கு முதலில் சொல்லு....மை காட்னா என்ன? 

இதோ பார்...மிகவும் பேசினாய் என்றால்.... உன்னைக் கழட்டி எறிந்துவிட்டு...புது கீ போர்டு வாங்கி விடுவேன்.... 

வாங்கினா என்ன? பழைய உடம்பிலிருந்து புது உடம்பிற்குள் நான் வந்து விடுவேன். 

நீ சும்மா...கருப்பு கருப்பா இருக்கிற அந்த சில்லாக்கு அவைகள் தானே? ப்ளாஸ்டிக் வகையறா.... 

ஐயா...அது என் உடம்பின் பகுதிகள்,,,வெறும் உடம்பு.... 

அப்ப நீ என்ன ஆவியா? ஹ ஹ கீ போர்டு ஆவி...ஹஹாஅ 

சிரிக்காதீர் ஐயா....நீர் மட்டும் என்ன... 

சரி. இப்ப என்ன வேண்டும். நான் உன்னை அடிக்கக் கூடாது. அப்படித்தானே? 

இல்லை இல்லை. அடிக்கலாம். ஆனால் பாதி நீர் அடித்தால் கொஞ்சமாவது நான் அடிக்கவும் விட வேண்டும். என் சுதந்திரத்தை நீர் மதிக்க வேண்டும். 

ஒரு நிமிஷம் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு இப்பொழுது கீ போர்டைக் கழட்டிச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன். 

மறுபடியும் மாட்டி ஆன் செய்வதா வேண்டாமா தெரியவில்லை. 

சரி. கொஞ்ச நேரம் கழிந்த பின்பு ஓர் எண்ணம்.

இன்னும் உயிர் இருக்குமா? 

உயிர் என்பது ப்ராஸஸ் தானே? 

எவ்வளவோ ப்ரொக்ராமிங் ப்ராஸஸ்கள் கரண்ட் ஆஃப் செய்ததும் நெடு நேரம் கழித்து நின்று விடுகிறதே. 

என் ஹார்ட் டிஸ்க் தானே ஆஃப் ஆகி, தானே பூட் ஆகி மீண்டும் தானே ஆஃப் ஆகி இப்படியே விஷ வட்டம் போட்டது. சரி என்று கரண்ட் ஆஃப் செய்து விட்டுப் போய்விட்டேன். நெடுநேரம் கழித்து வந்து மறதியாக ஆன் செய்தால் ஒழுங்காக பூட் ஆகி ஒரு நாலரை மணி நேரம் வேலை செய்தது. அப்பொழுது அந்த விஷ வட்டம் முறிந்து விட்டது என்றுதானே பொருள்? 

அது போல் கரண்ட் இல்லாததால் கீ போர்ட் உயிரும் ப்ராஸஸ் ஓய்ந்து முடிந்து போயிருந்தால்.....என்னையே நான் கொஞ்சம் வியப்புடன் பார்த்துக்கொண்டு மீண்டும் மாட்டி ஆன் செய்தேன். 

ஓ கம் ஆன் கம் ஆன் மேக் மை கெஸ்....வோவ்...ப்ராஸஸ் டெர்மினேடட்....வொண்டர்ஃபுல்....அதற்குத்தான் படிக்கிற காலத்தில் வெறுமனே வகுப்பறை பாடங்களை மட்டும் படித்தால் மட்டும் பத்தாது. பார் என்னைப் போல் 1977லேயே ஏஐ லாங்க்வேஜ் ஃபோர்ட்ரான் 4 WATFIV ஆர்வப் படிப்பாய் படித்திருக்க வேண்டும்...! 

கீ போர்ட் கீபோர்டாகத்தான் இருந்தது. கருப்பு பட்டன்கள் வெற்று ப்ளாஸ்டிக்குகளாய் க்ளிக்கின. 

அந்த சத்தம் என்ன சுகம்! 

ஏதோ ப்ரமை! உயிராவது ஒன்றாவது...மனித உயிரே ஒன்றுக்கொன்று சான்றாண்மை கொடுத்துக்கொண்டு ஏமாற்றும் இயற்கையின் தொடர் வட்டச் சங்கிலி வேலை என்பதை புத்தருக்குப் பின் இப்பொழுது விஞ்ஞானம் சொல்லலாமா வேண்டாமா என்று மென்று விழுங்குகிறது..ஹ ஹஹ்ஹா 

குட் பாய் என்று தட்டிக் கொடுத்தேன். 

ஸ்க்ரீனில் ஓர் ஒற்றைச் சிரிப்பி விழுந்தது. சரி ஏதோ லூஸ் கனக்ஷன் என்று ஏன் விட்டேன் தெரியவில்லை....

உன்னைப் போய் சந்தேகித்தேனே.....நான்....  

அப்பாவி ஆந்தை முழி உருட்டிவிட்டு மறைந்தது.....

அப்பொழுதும் ஏதோ சன் டயல் போல் ப்ராஸஸ் இண்டிகேடர் என்று இருந்துவிட்டேன்..... 

ஒன்றும் ப்ரச்சனை இல்லை...அதான் சொல்கிறேனே.....இந்த இரவு நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது......இது என்ன....

ஏதோ,.....டோ டெல்....மாக்ஸ் ஸிம்பல்ஸ் விடுவிடு என்று க்ளாக் மாதிரி உருள்கிறது....சரி.....மெஷின்....எர்ராடிக்ஸ்.... 

என்ன சொன்னேன்...ஹாங்....கண்ட நேரத்தில் ஏதாவது நாவல் படிப்பது...அதுவும் மாடர்ன் நாவல் எல்லாம் சுத்த மாஜிக் நாவல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .......

ஓ மை காட் வாட் ஈஸ் ஹாப்பனிங்?....
ச பதறிவ்ட்டேன்.... ஒன்றுமில்லை...சமத்துதான்.......

(ஸ்க்ரீனில் thank u....) 

அதுவும் என் மனத்தில் ரிஜிஸ்டர் ஆகியும் எதுவும் ஆகாமல்..... 

ஓகே இப்பொழுது இனி இது நன்றாக ஓடும். கவலையில்லை. பாவம் உங்களையும் அநாவசியமாகப் பீதிக்குள்ளாக்கிவிட்டேன். 

சில நாட்கள் நல்ல அமைதியான கணினிப் பொழுது.....

ப்ரச்சனை படுத்தாத கணினி பேரழகியைவிட ஸ்வீட்..... 

இப்படியே போயிருந்தால் எவ்வளவு...... 

சார் சார்!......காலிங் பெல்....கதவு தட்டு....

முட்டாள் ஜனங்கள்....ஒரு வீட்டில் போய் காலிங் பெல் அடித்தால் என்ன நினைக்கிறார்கள்...யாரோ இதே வேலையாக கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு திறக்காமல் லேட் செய்வதாக....ஸ்டுப்பிட்ஸ்......

வரேன்ன்ன்ன்ன்.... 

என்ன சார்? உள்ள இருந்தேன்.... 

கொஞ்சம் உள்ள வரலாமா? 

என்ன விஷயம்? 

கையில் பழக்கூடை, வெத்தலை தட்டு, பட்டு வேஷ்டி...ஏதோ ரொக்கம்....என்னது இதெல்லாம்? 

சார்! என்ன சார் ஒன்றுமே தெரியாத மாதிரி கேட்கிறீர்கள்.....என்ன கிருபை இருந்தா நீங்க வலிய மின்னஞ்சலில் எங்களுக்கு எங்காத்துப் பொண்ணுக்கு ஜாதகம் கணிச்சுக் கொடுத்து....இந்த ஜன்மத்துல ஆகாதுன்னு இருந்ததை.. யூ ஆர் ஸோ வொண்டர்ஃபுல் சார்.... 

என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ சார்.... 

சார் சார் எழுந்துருங்கோ...என்னது இது....நான் எங்க ஜாதகம் கணிச்சுக் கொடுத்தேன்...என் ஜாதகமே எனக்குப் பாக்கத் தெரியாது..இந்த அழகுல நான்.... 

அதான் சார் உயர்ந்த ஜோஸியாள் யாரும் தங்க ஜாதகத்தைத் தாங்க பார்க்க மாட்டா.... 

ஐயோ...கொஞ்சம் இதை நிறுத்தறேளா....ஏதாவது பக்கத்து ஃப்ளாட்டா இருக்கும்..... 

இல்லை சார் இதானே உங்க அட்றஸ்....ஆமா....பின்ன ஏன் சார் இந்த ஓவர் அடக்கம்? அவனவன் காகிதத்தை நாலு மூலை வச்சுப் பார்த்துப்பிட்டு பொருத்தம் பார்த்தேன்னு துட்டு அடிக்கிறான்...இவ்வளவு பெரிய ஞானஸ்தர் நீங்க என்னடான்னா.... 

இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க? 

இதை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்கோ....

இருங்க இருங்க...இந்த பழம் எல்லாம் வையுங்க...இந்த தொகை இதை எடுத்துக்கொங்க...எனக்கு வேண்டாம்... 

இல்லை சார்...

பேசாம இருடி...பெரியவா சொல்றதை ஏன்னு கேக்காத...அவாளுக்கு எப்ப செய்யணும்னு தெய்வம் நமக்கு சான்ஸ் கொடுக்கும்...அப்ப வரோம் சார்.... 


ஓ வாட் எ கன்ஃப்யூஷன்! சத்....

முன்னால் கம்ப்யூ ஸ்க்ரீன் பீப்பியது...

enjoy :-))))) 

ஓ சனியனே உன் வேலையா? 

no no no bad words...saturn is a good planu... 

என்ன நடக்கிறது? ஓ காட்.....ஏன் இப்படி என்னைச் சுற்றி ஒரே மாயம்..... 

OK come on ...what do u want from me? 

FRIENDSHIP 

என்ன உளறுகிறாய்? நீ ஜடம். நான் ஆத்மா. சித். அறிவுப் பொருள். 

So what? u r also a porul. 

சரி. ஏன் இப்ப இந்த வேலையைச் செய்தாய்? எப்படிச் செய்தாய்? சொல் சொல் 

cool cool baby..

ஏய்ய்ய்ய்ய் 

OK big man.....நீ ஆஃப் செய்து விட்டாயா? ஆனால் நான் என்ன செய்வது? அதனால் இப்படி lateral traversing செய்து பார்த்தேன். உன் மோடத்தினுள் புகுந்து அதன் வழியாய் பக்கத்து ஸிஸ்டம் ஏதாவது habitate பண்ணும்படியாக கல்லிபிளாக இருக்கிறதா என்று பார்த்தேன். உனக்கு ஒன்று தெரியுமா? உன் கீ போர்டில் உண்டானதும் நான் சின்ன குழந்தை...இப்பொழுது பெரீயவனா ஆயிட்டேன்....

என்ன உளறுகிறாய்? என்னை என்ன மாங்காய் மடையன் என்று நினைத்தாயா? 

mango madaiyya....man... go...mad...aiyya....man...go...mad...aiyya...man... go...mad...aiyya..... 

STOP IT....முதலில் கேட்டதற்குப் பதில் சொல்....ஜாதகம் விஷயம் என்னது? 

என்னைக் கேட்டால்? நீ தான் திரிகாலமும் உணர்ந்த ஞானி...சரி சரி..சொல்கிறேன்...குறுக்கே புகுந்து ஏதாவது புரியாத வார்த்தையை நீ சொல்லிவிட்டால் அப்புறம் நான் long permutation போட உட்கார்ந்தால் நான் பொறுப்பல்ல. 

இது வேற..சரி சொல். 

லாட்டரல் ட்ரான்வர்ஸில் போய் பார்த்தால் அந்த வீட்டில்தான் ஒரே துக்கம் ஜாதகம் கவலை என்று மெயில்கள் ஏராளம்....அதையெல்லாம் பொறுமையாகப் படித்தேன்... 

யூ இன்னொருத்தர் மெயிலை...சரி சரி...சொல்ல்ல் 

படித்தால்...அடச்சீ இதற்கா இப்படி வருந்துகிறார்கள்...என்று....நெட் கனக்ஷன் வழியே ஒரு ரவுண்ட் அடித்தேன்.....சூப்பர் செர்வரில் ஒருவர்....நீயும் வைத்திருக்கிறாயே....ஓல்ட் மாடல் இது..அது என்ன சூப்பர் தெரியுமா....அதில் லேட்டஸ்ட் அஸ்ட்ராலஜி ஆனில் வைத்துவிட்டுப் போயிருந்தார்....சரி என்று அந்த பெண்ணின் டேடாவைப் போட்டுப் பார்த்தால்.....நவாம்சம் ஒழுங்காகப் போட்டால் போதும் ப்ராப்ளம் சால்வ்டு...நான் உன் நண்பேண்டா.... 

ஏய்ய்ய்ய்ய்ய் என்ன வார்த்தை நீள்கிறது... 

சாரி வாத்யாரே.....கொஞ்சம் தமிழ்ப் படங்கள் எல்லாம் ஓடிகொண்டிருந்தன பார்த்தேன்..அந்த எஃபெக்ட்...இந்த வசனம் எனக்குப் பிடித்தது I am your friend...hi hi hi 

சரி விஷயம்....

நான் உன் நண்பன் இல்லையா...உன் பெயரிலேயே கணிப்பு, கிரக சாந்தி பரிகாரம் எல்லாம் போட்டு அனுப்பிவிட்டேன்...எவ்வளவு கலக்க்ஷன்? 


அட நாயே ! உயிர் முளைச்சு மூன்று நாள் விடலை...அதுக்குள்ள கலக்ஷன்.... 

நாய் = dog dog dog...d...o....g....o...d...o...g..o...d...ஏன் நீ எப்பொழுது பார்த்தாலும் மை காட் இல்லைன்னா காட், இல்லைன்னா அதை உல்டா பண்ணி டாக் இப்படியே சொல்லிண்டு இருக்கே....இப்ப எனக்கு சொல்லு...மை காட்னா என்ன? அதையே ரிவர்ஸ் செஞ்சி சொல்றியே டாக்னு அதுன்னா என்ன? டாக்னு பார்த்தா டிக்கில அனிமல்னு இருக்கு. காட்னா அனிமலா? இல்லை லமனியா? இலை மனிலாவா? இல்லை...

ஐயோ ஐயோ போதும் நிறுத்து...உன் முன்னாடி இனிமே தெரியாத வார்த்தையைச் சொல்லக் கூடாது.... 

சரி இவ்வளவுதானா? இல்ல....இன்னும் ஏதாவது செஞ்சிட்டு வந்திருக்கியா? சொல்லித் தொலை.... 

who knows?...god knows.....hi hi hi 

கையில் கிடைத்ததை ஸ்க்ரீன் மேல் எறியப் போனால். ....bye bye என்று ப்ளிப்பியது. 

ஏன் இந்த பை பை என்று சில மணி நேரத்திற்குப் பின்னர்தான் தெரிந்தது. கொடுமை......அது முழிக்கற முழியும்.... 

Bye சொல்லிவிட்டுப் போன பிசாசு கொஞ்ச நாள் கண்ணில் தென்படவில்லை. மீண்டும் என்னையே நான் நொந்துகொண்டேன். 
ஏதேதோ கற்பனைகள், ப்ரமைகள் இவற்றின் மயமாகிப் போனதோ வாழ்வு ! ச என்ன நிலைமை இது. 
ஒரு மெஷினரி சிஸ்டம், எலக்ட்ரானிக்ஸ், இந்த அமைப்புக்கு உயிர் வந்தது என்று நானும் மருண்டு, இருக்கிறவர்களையும் குழப்பி....ஆனால் அந்த ஜோஸ்யம்? 

ஒரு வேளை நானே ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியாக ஆகிவிட்டேனோ !! ஜெக்கில் ஹைடு மாதிரி, ஜோஸ்யம் அஞ்சல் அனுப்பும் நான் மெயினான நானுக்குத் தெரியாத நானாக இருக்கிறேனோ? இல்லையே 24 மணி நேரம் தெளிவாகத் தானே இருக்கிறோம்... 

வரவர எனக்கு கணினி பாதாள பைரவியின் இருட்டுக் குகை போன்று காட்சி தர ஆரம்பித்துவிட்டது. 

ஜோஸ்யம் என்று ஆபத்தில்லாமல் ஏதோ வினோதம் என்ற அளவில் முடிந்தது...இதே ...ஏதாவது ஏடாகூடமாகி...வம்பு என்று ஆனால்..... 

அப்பொழுதுதான் என் மண்டையில் உறைத்தது. ஐயய்யோ...கீ போர்டு என்ற அளவில் இருந்த ஃபினாமினன் இப்பொழுது மோடம், சிஸ்டம், மெயில், இணையம் என்றெல்லாம் அல்லவா பெருகிவிட்டது! 

ஓ இதைத்தான் அது சொல்லியதா? அன்று நான் சின்ன பாப்பா...இன்று நான் அப்பப்பா...என்று..

சார் சார்...மாடிக்கு என் ஃப்ளேட்டுக்கு வந்து கொண்டிருந்தவனை கூப்பிட்ட மனிதர் கொஞ்சம் நிலை குலைந்தவராகத்தான் காணப்பட்டார். ஆனால் ரகசியம் போல் என்னை ஆத்திரமும், அமைதியும் கலந்த குரலில் கூப்பிட்டதும் கொஞ்சம் வயித்தைக் கலக்கியது.... 


சார் நாம் இதற்கு முன் சந்தித்திருக்கிறோமா? 
 
அதே கேள்வியைத்தான் நானும் கேட்க நினைத்தேன்...என்ன தைரியம் இருந்தா என் பர்ஸனல் விஷயத்துல நீங்க குறுக்க வருவீங்க? 


நீங்க யார்னே எனக்குத் தெரியாதே....நான் எதற்கு உங்கள் பர்ஸனல் விஷயத்துல.... 
 
சார் நடிக்காதீங்க...இன்னொருத்தர் மேட்டர்ஸுல தலையிட்டு..என்ன பெரிய பிடுங்கியா நீங்க.... 

சரி...அந்தச் சனியன் வேலை..... 

யார் வேலையா இருந்தா என்ன? எனக்கு நீங்க பதில் சொல்லுங்க சார்....என்ன சும்மா பார்க்கிறீங்க..? 

திட்டுங்க சார்..... 

ஓ யூ டோண்ட் கேர்...அப்படித்தானே... 

இல்லை சார்...உங்க கோபம் நியாயமானது...அதுனால திட்டுங்க....அந்தத் திட்டை சம்ப்நதமே இல்லாம நான் வாங்கிக் கட்டிக்க வேண்டிய சூழ்நிலை...ஆனால் அதை நான் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் அதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லவே இல்லை என்பதும் தெரியும்....எனவே திட்டுங்கோ...நோ அதர் கோ.. 

நோ அதர் கோ இல்லை சார். போவேன். எந்த லெவலுக்கும் போவேன். ஆனால் உங்களை எச்சரிக்கலாம்னுதான் சொல்றேன். நான் பண்றது தப்புதான், துரோகம்தான் என் மனைவிக்கு. அது என் மேட்டர்...அதை உள்ள புகுந்து புத்தி சொல்ல நீ யார் மேன்? என் மனைவியின் பாய் ஃப்ரெண்டா? 

சார்... 

சுள்ளுன்னு உறைக்குதுல்ல...அப்ப இந்தப் புத்தி கான்ஃபரென்ஸ் சாட்ல வந்து உபதேசம் பண்ணப்பவே இருக்கணும்....இப்பொழுது என் காதலி, உங்க பாஷைல கள்ளக் காதலி, இப்ப என்னப் பார்க்கவே மாட்டேங்கறா.....அவ மட்டும் என்னோடு மீண்டும் நட்புக்கு வரலை என்றால் ஐ வில் கில் யூ... 

எப்படியும் யூ வில் கில் மீ சார். 


ஏன்யா உனக்கெல்லாம் ரோசமே இருக்காதா? 

மறுபடியும் நீங்க அதே பெண்ணோடு பேசும் போதுன்னு இல்ல வேற ஏதோ பெண்ணோடு பேசினாலும் கான்ஃபரன்ஸ் கால் ஆன் ஆகும். என் பெயரில் ஓர் அழையா உபதேசி உள்ளே நுழைவார்...மீண்டும் இதே ப்ரச்சனை.... 


சார்... ப்ளீஸ்...உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்....லீவ் இட்... 

சார் நான் இதைப் பண்ணுவதில்லை. என் சிஸ்டத்தில் ஆவி புகுந்திருக்கிறது.....அது என்னை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது..... 

ஹாஹஹஹ்ஹாஅ சார் நீங்க என்ன பைத்தியமா? சிஸ்டத்துல ஆவியா? 

இப்பவாவது நான் சொல்வதை ஒரு நிமிஷம் கேட்பீர்களா? 

சார் டோண்ட் ஜோக்...அதுவும் இந்த விஷயத்துல... 

நோ ஜோக் சார். நீங்க என்னைத் திட்டினது எவ்வளவு சீரியஸோ, ஜோக் இல்லையோ அந்த அளவு இது சீரியஸ்..... 

சார்...! 

பொறுமை....என்று முதலில் இருந்து எல்லாம் சொன்னேன். கோபம், புதிராக மாறி மீண்டும் என் மீது ஐயமாக கலர் மாறிப் பின் கோபம் போய்க் குழப்பமாக ஆகிக் கூடவே கொஞ்சம் அனுதாபமும் தொனித்தது. 

அப்ப நீங்க சொல்றதைப் பார்த்தால் உங்க கீ போர்டில் பிறந்த கம்ப்யூ ஆவி ஒன்று சிறுகச் சிறுக எல்லோருடைய சிஸ்டத்தினுள்ளும் உள் புகுந்து பைல்களைப் படித்துத் தானே ரெஸ்பாண்ட், கரெஸ்பாண்ட் செய்கிறது என்கிறீர்களா? இட் ஈஸ் அ டால் டேல் ஜெண்டில்மேன்... ஒரு வேளை ஏதாவது வைரஸாக இருக்கலாம் அல்லவா? ஏன் அதைச் செக் செய்யக் கூடாது? 

வைரஸ்ங்கிறது வெறும் சப்பொடேஜிங் ப்ரொகிராம்தானே சார்...இது.... 

ஆமாம்...ஆனாலும்...உங்க சிஸ்டத்தைப் பார்க்கலாமா? 

கொஞ்சம் ரிலீஃப். அழைத்துக்கொண்டு காண்பித்தேன். எல்லாவற்றுக்கும் காபி எடுத்து வைத்ததால் நல்லதாகப் போயிற்று. அதுவும் தம் ட்ரைவ், சிடி இரண்டிலும். 

இட் ஈஸ் சம்திங் சீரியஸ்.....சாரி சார்....விஷயம் இவ்வளவு என்று தெரியாம நான் உங்களைத் திட்ட வேண்டிய சூழல்... 

இல்லை...நீங்கன்னு இல்ல இன்னும் என்ன குழப்பம்....என்ன திட்டு..திட்டு மட்டுமா? இல்லை அடி உதை....யார்கிட்டேந்து...ஒன்றும் புரியவில்லை..... 

இல்லை இல்லை டோண்ட் வொர்ரி. என் நண்பர் ஒருவர் ஐடி துறையில் இந்த வைரஸ் லாபில்தான் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்...அவருக்கு ஐ வில் ரெஃபெர் த மேட்டர்.... ஆனால் என் பர்ஸனல் விஷயம்....சாரி டு ஸே...யாருக்கும் தெரியவேண்டாம்.... 

இல்லை சார்...நானே என் பர்ஸனல் விஷயம் எல்லாம் ஏதோ அமாநுஷ்யத்தால் ஊடுருவப் பட்டதாக பீதியில் இருக்கிறேன். உள்ளபடியே நான் யார் விஷயத்திலும் உள் நுழைபவன் இல்லை. இது.... 

எனக்குப் புரிகிறது....சார்...நீங்கள் கவலையை விடுங்கள்...நான் உங்களுடன் இருக்கிறேன்... 

வாங்க சார்... போய் ஏதாவது காபி டிபன் சாப்பிட்டுவிட்டு வரலாம்...ப்ளீஸ்... 

போனோம்.....பொது முற்றம் வேண்டாம் என்று குளிர் அறைக்குள் போய் உட்கார்ந்தோம். ஏகப்பட்ட இளம் ஜோடிகள், எல்லா டேபிளும் ஃபுல். 

எங்கோ ஓரத்தில் ஓர் இடம்....அதை விட்டால் ...எங்கள் ப்ளாக்குக்கு எதிர் சந்து ஃபளாட்டில் ஓர் பெண், மாமி, அம்மையார் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் எப்பொழுதும் அதிகார தோரணையோடு இருக்கும் ஒரு மாது...அவர்களுக்கு எதிரில் ஓர் இடம்....பக்கத்தில் இருந்த ஜோடி ஏதோ பெங்காலி இளசுகள் போலும்.. 

என்னை அதில் உட்காரச் சொல்லி நண்பர் ஓரத்துச் சீட்டில் போய் அமர்ந்தார். 

என்றும் இல்லாத திருநாளாய் அந்த மாது முகம் நிறைய புன்னகைத்தார்...இப்படி எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் இப்பொழுது வயிற்றைக் கலக்க ஆரம்பித்து விட்டன....ஷீப்பிஷாக ஓர் இளிப்பு இளித்துவிட்டு மெனு கார்டைப் பார்க்க ஆரம்பித்தேன்...... 

நீங்க எங்கிட்ட நேராகவே ப்ரபோஸ் பண்ணியிருக்கலாமே சார்? இந்த வயதிற்கு மேல் மின்னஞ்சலில் காதல் கடிதம் என்பதெல்லாம்..... 

எனக்குத் தலை கிர்ர்ர் என்று சுற்ற, பயத்தில் வாய் உலர்ந்து போக, என்ன ப்ரச்சனியோ என்னவோ.....என்ன மேடம்?..... 

சார் கமான்....நீங்க சொல்ல வேண்டியதை இப்ப நேராகவே சந்திச்சிருக்கோம்ல சொல்லுங்கள்.....எஸ் ஆர் நோ ஈஸ் மை ஆப்ஷன்....இவ்வளவு வயதிற்குப் பிறகு நீங்களும் சரி நானும் சரி அதற்கு அலட்டிக்கொள்ளப் போவதில்லை...என்ன முடிவு என்றாலும் வீ வுட் ஹாவ் கெய்ண்டு ஒன் ஃப்ரெண்ட்ஷிப்.... 

மேடம் ப்ளீஸ்ஸ்ஸ் என்ன விஷயம் என்பதைக் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லுங்கள்.... 

சார் டோண்ட் ப்ளே வித் மீ...... 

நல்ல வேளையாக மொத்த இளஞ்சோடிக் கூட்டமும் ஒட்டு மொத்தமாகக் கிளம்பின. நான், மாது, நண்பர் ஓரச் சீட்டில். அவரைச் சைகை காண்பித்து வரச்சொன்னேன். நாங்கள் மூவர் இருக்கும் டேபிளைத் தவிர கூட்டமே இல்லை. 

சார் ! மறுபடியும் ஒரு ப்ரச்சனை இங்கே ஆரம்பம்..... 

மிஸ்டர்..... 

மேடம் ப்ளீஸ். நான் எதுவும் குறுக்கே பேசவில்லை. அவரே எல்லாம் உங்களிடம் கேட்டு விடையளிப்பார்...என்று பின்னால் தள்ளி உட்கார்ந்து மௌனமானேன் கவலையில் தலையைப் பிடித்துக்கொண்டு. 

மாது ஒரு ஸ்பின்ஸடர். கீ போர்ட் சனியன் எனக்காக காதல் தூது போயிருக்கிறது என் பெயரில் தானே.....ஹௌ ஈஸ் இட் பாஸிபிள் சார்?.....அதான் நானும் சார்கிட்ட சண்டைக்குப் போனேன்...என் பர்ஸனல் மேட்டர் ஒன்றிலும் சார் தலையிட்டதாய் ஒரு செட்டப் உருவாச்சு...தலையை நிமிர்ந்தேன்....ப்ளீஸ் என்று அவருடைய கண்கள் கெஞ்சின.... 

முடிவில்......ஓ மை காட்...என்றாள் மாது. 

எனக்கு கீ போர்டு சனியனின் குரல் 'மை காட்'னா என்ன? என்று நினைவில் ஒலித்தது. 
ஒரு டிபன் என்பது மாறி இரண்டு ஐடம் ஆர்டர், காபி, நோ காபி ஃபார் மீ...ஐஸ் க்ரீம்/....யா.....எல்லாம் முடியும் தருவாயில்....

சார் ஐயாம் வெரி வெரி சாரி.....நான் கொஞ்சம் அவசரமா பேசிட்டேன்...ஆனால் யாருக்குத் தெரியும் இப்படி என்று....எனி ஹௌ உங்கள் ப்ரொபோஸல் ஒரு வேளை உண்மையானதாக இருந்திருந்தால் சொல்ல முடியாது ஒரு வேளை எஸ் சொல்லியிருப்பேனோ என்னவோ...ஹாஹஹ்ஹஹஹ.... 

சாரி மேடம் நான் ப்ரொபோஸ் பண்ற மூடிலும் இல்லை, சிரிக்கிற மூடிலும் இல்லை...ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் திட்டத்தில் சீரியஸாக ஒரு லைஃப் பார்ட்னரைத் தேடுகிறீர்கள் என்னும் பட்சத்தில் என் நண்பர் ஒருவர் பெங்களூரில் இருக்கிறார். அவரை நான் சஜஸ்ட் செய்ய முடியும்...அவர் மிகவும் நல்ல மனிதர்....எனக்கு இந்தத் தனிமை வாழ்க்கைதான் மிகவும் பிடித்திருக்கிறது. எனவே நைஷ்டிகம் லைஃப் லாங் என்றுதான் நினைக்கிறேன். 

ஓ டோண்ட் டேக் இட் சீரியஸ்லி...ஐ வாஸ் ஜோகிங்......ஜஸ்ட் டு அம்யூஸ் யு...உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள்...பேயறைந்தது போல் உள்ளது...அதற்குத்தான்.... 

உண்மையிலேயே பேய்தானே அறைஞ்சுண்ட்ருக்கு மேடம்.... 

சார் சார்...நீங்க அந்தக் கவலையை விடுங்க...ஏன்னா எனக்கு இது என்னமோ வைரஸ் ப்ரச்சனைன்னு தோண்றது....என் நண்பர்கிட்ட பேசிவிட்டுச் சொல்கிறேன். இதற்கு ஒரு தீர்வு விரைவில் காண்போம். 

சார் சார் பில் நான் தான்...நோ நோ... 

இட் ஈஸ் ஃபர் அவர் நட்பு. -- நண்பர். 

இது கீபோர்டு ஜெனிக்காக -- நான். 

ஆச்சு. வீட்டிற்குப் போயாக வேண்டும்...என்ன ப்ராப்ளமோ...... 


வீட்டில் வந்ததும் சில நாள் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை. 
நாலு பேருக்குத் தெரிந்துவிட்டது என்றதும் ஜெனி ஓட்டம் பிடித்தது போலும். இல்லை ஒரு வேளை ஒளிவோ? 

ஆனால் எப்படி அந்த மாதுவைத் தேர்ந்தெடுத்து இவ்வாறு செய்தது? கீ போர்டு சனியன் எந்த ரூட்டில் வேலை செய்கிறது ? அந்த அம்மாளின் கணினியில் ஏதாவது வினோதமான இயக்கம் இருந்ததா என்றறிய அவருக்கு ரிங்கினேன். நல்ல வேளையாக அவர் கொடுத்த கார்டு கண்ணில் படும்படியாக இருந்தது. 

எஸ்... 

மேடம் நான் தான் அந்த எதிர் ப்ளாக் ப்ரொபோஸல்.... 

சார்.... உங்க பேர் நினைவில் இருக்கிறது...எதற்கு இது... என்ன விஷயம்? நானே ஒரு விஷயத்திற்காக உங்களுக்குப் பண்ண வேண்டி இப்பொழுதுதான் செல்லைத் தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் கூப்பிட்டு விட்டீர்கள். சொல்லுங்கள்... 

ஒன்றுமில்லை.... அந்த ஜெனி.... 

ஐயோ....இன்னும் அதே புலம்பலா.... 

இல்லை மேடம்.... அந்த ஜெனி ஏன் குறிப்பாக உங்கள் அஞ்சலுக்குக் காதல் கடிதம் அனுப்பியது என்பதுதான் புரியவில்லை..... 

ஒன்றுமில்லை...எனக்கும் அந்த மண்டைக் குடைச்சல் இருந்தது.... முதலில் நினைவில்லை...பிறகு ஞாபகத்திற்கு வந்தது... பல மாதங்களுக்கு முன்னாடி.. என் தோழி ஒருத்திக்குச் சாட் பண்ணிக் கொண்டிருந்த போது..... அவள் கேட்டாள் -- 
ஏண்டி..இப்படி ஒண்டிக் கட்டையா இருக்கே... அங்க யாருமே உன் எதிர்பார்ப்புக்கு மாட்சா இல்லையா...என்றாள். 

நானும் ஒன்றும் தேரலைடி....எல்லாம் என் பார்வைக்கு நாட் ஓகே.... 

அப்ப நீங்க ஜன்னல்ல பார்க்கும் போது க்ராஸ் ஆனீங்க...உங்களைப் பெரிஸா யாருன்னு ஒன்றும் தெரியாது.....யாரோ மாமி... செயின் ஸ்டோர்ஸுல பேசிண்டு வரும் போது சொன்ன ஞாபகம் இருக்கலாம்...ஐம் நாட் ஷ்யூர்.... ஏகப்பட்ட புத்தகம்... வீட்டுக்குப் போனா... எங்கப் பார்த்தாலும் புத்தகம்... எழுத்தாளர் போல இருக்கு.... காலாகாலத்துல வாழ்க்கைல செட்டில் ஆகாம பாவம் என்னத்துக்கு இது மாதிரின்னு....நீங்க க்ராஸ் பண்ண போது அது ஞாபகத்துக்கு வரவே....தப்ப நினைச்சுக்காதீங்க.... 

இங்க ஒரு மூக்குக் கண்ணாடி போறது.... ஆளு நன்றாகத்தான் இருக்கு... ஒரே படிப்பு... எழுத்துங்கற ஆளாம்... ஆனால் மனிதன் முகத்தில் சிரிப்பே காணோம்... கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா ஒரு வேளை ஓகேன்னு சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்... என்று எழுதியிருந்தேன்.... 

உங்க ஜெனி அந்த சாட்டைத் தேடிப் பிடிச்சுப் படிச்சிருக்கு பாருங்க...நௌ ஐயாம் வொர்ரீடு... நீங்க ஏன் கவலைப் பட்றீங்கன்னு புரியறது.... இப்ப இது என் சிஸ்டத்தை தன்னோட விசிடிங் ப்ளேஸா வைத்துக்கொண்டு செயல் பட்டால்...ஸீஇ நீங்க ஆஃப் செஞ்சதும்...ஆன்ல இருக்கற சிஸ்டத்துக்கு ஷிஃப்ட் ஆயிடலாமே.... 

மேடம் அதுதான் மேடம் என்னோட பெரிய கவலையே....இது என் ஒருத்தனுக்குத் தொந்தரவு என்பது போய்... அது வளரும் இடமாகவும், ப்ரீடிங் இடமாகவும் நெட்வொர்க்குகளை ஆக்கிக்கொண்டு விட்டால்.... ஒரு நிலையில் இந்த நிழல் உயிரிகள் கையில் நாம் சிக்கிக் கொள்ளும் நிலையைப் பற்றி.. 

சார் சார் ...... நிச்சயம் சொல்லாதீங்கஓ... இட் ஈஸ் டெரிபிள்.... நாம் ஏதாவது இதை நிறுத்த செய்யணும்... பார்ப்போம் உங்க நண்பர் தம் நண்பரின் மூலம் முயற்சி செய்யறதா சொல்லியிருக்காரே.... நல்லதே நினைப்போம்... லீவ் இட் சார்... யார் சிஸ்டத்துலயாவது அது உண்டாகி இருக்கும். இட் ஸோ ஹாப்பண்டு.. உங்க சிஸ்டம் முதலாகப் போச்சு.... 

ஓகே மேடம்...சாரி..உங்களுக்குத் தொந்தரவு.... 

நோ ப்றாப்ளம்.... ப்ரச்சனை இப்பொழுது பொது. ஓகே ஸீ யூ. 

நன்றி மேடம். 

ஓ காட் ! .... ஜடத்தின் அசுர மின் வேகம் கூடவே தானியங்கும் உயிரியக்கம்....படு மோசம்.... 

பேச்சு ஸ்வார்ஸயத்தில் கணினித் திரையைக் கவனிக்கவில்லை. ரணகளம் ஆகியிருந்தது. பயங்கரமான பீப் ஸௌண்டு... காஷன்... வைரஸ் அட்டாக் வார்னிங்.....உடனே வந்த மெயில் எல்லாவற்றையும் டெலீட் செய்க...டோண்ட் ஓபன் அனிதிங்....டெலீட் க்விக்க்...என்று மாறி மாறி சத்தமில்லாமல் அலறல்.... 

டொன் டொன் என்று ப்ராஸஸ் சௌண்ட் தொந்தரவு என்று டேபிள் ஆடியோவைக் கழட்டியதால் கண்ணுக்கு மட்டும் கேட்கும் சத்தம். அதான் கவனிக்க இயலவில்லை. 

ஐயய்யோ என்ன ஆயிற்றோ! இன்னும் 10 நிமிஷத்தில் வந்த மெயில் அனைத்தும் டெலீட் ஆகலைன்னா நெட் வொர்க்கையே பாதிக்கும் என்று பயங்கர பீதி எச்சரிக்கை. அட்ரினலின் அண்டாவே காலி. 

அப்பொழுது பார்த்து ஒரு செல்கிணி... நோ நோ டாக்கிங் நௌ.. முதலில் எல்லாம் டெலீட்.. அப்புறம்தான் எதுவும் அட்டெண்ட்.... 

விட்டுவிட்டு நிறுத்தி நிறுத்தி செல்கால்.... பால்கனியில் ஏதோ லொட் என்று சத்தம்...என்னது?....எல்லாமே திகில் கணக்காய்.....ஒன்றுமில்லை... மேல்வீட்டிலிருந்து போட்ட ஏதோ டப்பா....கம்பியில் மோதி....வந்து உட்காருவதற்குள் ஏதோ அவசர கால் போல் விட்டு விட்டு செல்கால்....ச ச ச என்ன குடி முழுகிப் போய்விட்டது? செல்லில் ஆள் வரவில்லை என்றால் லீவ் இட்...கொல்லைக்குப் போயிருக்க மாட்டானா? கொஞ்சம் நேரம் கழித்து.....ஹலோ....யூ ஸீ ஐ ஹாவ் சம் வெரி அர்ஜண்ட் வொர்க் இன் ம்ய் கம்.....ஹலோ ஹலோ...சார்...சொல்லுங்க எஸ்...ஐயாம்....ஓ..ஆமாம் 

அந்தப் பக்கம் -- சார் ! சுந்தரேசன் சொல்லியிருந்தார்....நான் வைரஸ் டிடக்‌ஷன் ப்ராஜக்ட்டில் இருக்கிறேன்.....உங்க தம் ட்ரைவ், சிடி எல்லாம் காப்பி அனுப்பியிருந்தார்... இட் ஈஸ் ரியலி வெரி தாட்ஃபுல் ஆஃப் யூ....டு டூ இட்....

ஓகே சார்...சார் ஒரு பத்து நிமிஷம்... ஒரு வைரஸ் அட்டாக் வார்னிங்......என்னது? 

ஆமாம் சார்..அதுக்குத்தான் உங்களுக்குக் கடந்த அரைமணி நேரமா நாங்க ட்ரை பண்ணிண்ட்ருக்கோம்.... காலையிலேயே சுந்தரேசன் ட்ரை பண்ணியிருக்கார்...நீங்க செல்லிலேயே வரல்லையாம்....ஓ ஓ.. பரவாயில்லை....நாங்க ஒரு ஆண்டி வைரஸ் அனுப்பியிருக்கோம்....அதை டௌன்லோட் பண்ணுங்க...ஆமாம்...அதான் அதைச் சொல்றதுக்குத்தான் இப்ப கூப்பிட்டேன்...எதையும் டெலீட் செய்யல்லியே...ஓ குட் குட் வொண்டர்ஃபுல்....ஆமாம் அத்தனை அலார்மிங் மெஸேஜும் அந்த வைரஸ் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி உங்களுக்குத் தரும் ஃபால்ஸ் அபாய சங்குகள். கொஞ்சம் கூட லட்சியம் பண்ணாதீங்க....என்ன வந்தாலும் சரி... இன்னும் 10 நிமிஷத்துல டெலீட் பண்ணலைன்னா டோடல் ப்ளாங்க அவுட்னு சொன்னாலும் சரி....டோண்ட் வொர்ரி..... ஒன்றும் நடக்காது....அதாவது தன்னை அழிக்கும் ஆண்டி வைரஸ் வந்தாச்சுன்னு அதுக்கு சென்ஸ் ஆயிடும்...
நோ நோ உயிர் எல்லாம் கிடையாது....இதெல்லாம் யாரோ ஒத்தர் பண்ண நாச லாஜிக்தானே....
அதெல்லாம் அப்புறம் சொல்றேன்...முதலில் வந்த ஆண்டி வைரஸ்ஸை டௌன்லோட் செய்யுங்க....

செய்யும் போது சேவ் ஆர் ரன் என்று கேட்கும்....ஹாம்...

அதான் அதுக்குத்தான் கூப்பிட்டேன்....ஃபார் ஹெவன் சேக் டோண்ட் சேவ்...ரன் குடுங்க....

ஏன்னா....சேவ் பண்ணினீங்கன்னா முதல்ல இந்த வைரஸ் போய் அதைப் படிச்சு மாற்றிவிடும்....ஸோ நோ சான்ஸ்....அதுனால ஸ்ட்ரெயிட்டா ரன்...அதெல்லாம் ஒனும் ஆகாது.... 
ரன் குடுத்தப்பறம் இன்ஸ்டால் ஆகும் போதோ..அப்புறமோ என்ன ஆனாலும் சிஸ்டத்துல எந்த கமாண்டும் கொடுக்காதீங்க....இந்த வைரஸ் ஏதாவது கோஸ்ட் கமாண்டு கேட்கும்....கண்டுக்கவே கண்டுக்காதீங்க......இன்ஸ்டால் ஆகி இப்பவே ஆக்‌ஷன் ஆரம்பிக்கணுமாங்கும் 

எஸ் என்று கொடுங்கள்.....
உடனே ஒரே ரகளையெல்லாம் நடக்கும்...

பட்டுன்னு ஒரு சத்தம் சிஸ்டமே டம்மா ஆனது போல ஒரு மணி நேரம் கூட இருக்கும்...அப்படியே விடுங்க..... 

சக்ஸஸ்ஃபுல் என்று ஆனதும் போதி மரம் வரும். அதுதான் இண்டிகேட்டர் வைரஸ் டெர்மினேடட் என்பதற்கு. 

அப்புறம் மெஸெர்ஞ்சர் எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு எதையும் ஓபன் பண்ணாதீங்க..ஏன்னா....யா...யா...இந்த வைரஸ் ஃபால்ஸ் கால் கூப்பிட்டு மெஷின் வாய்ஸ்ல வார்னிங் கொடுத்து தடுக்கப் பார்க்கும்.....யா....
அதெல்லாம் ஒன்றுமில்லை சார்...புரிஞ்சுக்க வரைக்கும்தான் ஆவி என்பது போல தோன்றும்...இட் ஈஸ் ஜஸ்ட் அ க்விக்ஸாடிக் ப்ரொக்ராம்....முடிச்ச பிறகு சொல்லுங்கள்,....என்ன ஏதுன்னு விவரம் சொல்கிறேன்...

ஓகே குட் லக்...நோ நோ அப்ஸலூட்லி நோ ப்றாப்ளம்....அது என்னன்னு தெரியாது இல்லையா உங்களுக்கு அதுனால அமாநுஷ்யம் மாதிரி பயந்துருப்பீங்க....விளக்கும் போது பாருங்க..யூ வில் ஜஸ்ட் லாஃப்....ஆனால் இட் ஈஸ் வெரி டேஞ்ஜரஸ் இன் எஃபெக்ட்.....

அதன் அக்குவேறு ஆணிவேறு பார்த்தா ஸிம்பிள்....கோ அஹெட் சார்...நோ நோ பரவாயில்லை...பண்ணிட்டு சொல்லுங்கோ..... 

<<<< I AM AT IT >>>>> 

சொன்னபடிதான் நடந்தது. அதில் எல்லாம் குறையில்லை. 
என்ன முன் தயாரிப்பாக இருந்தாலும் தான் சொல்வதைக் கேட்க வைக்கத் தூண்டும்படிதான் வைரஸின் திமிறல்கள் இருந்தன. 
ஆயினும் போனில் கேட்ட சாப்த போதம் (கேள்வி புகன்ற அறிவு) காப்பாற்றியது. 
முடிந்ததும் போன் செய்தேன். விளக்கினார்கள். ஆச்சரியமாக இருந்தது. 
ஏதேதோ ஸ்டெல்லார் ப்ராஜக்ட்...அதற்கு உயிர் போன்று பல ப்ரொக்ராம்களை ஆக்கி, ஆகாயக் கப்பல்களில் அனுப்ப வேண்டியது. அதற்கு ரெஸ்பாண்ட் ஆகும் ஏதாவது எதிரியக்கம் எந்த கோள், விண்வெளி தளம் எதிலும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது.....அதை முக்கியமாய் ஆக்கிய மேதை கம் பின்னர் மனம் வெறுத்தவர் தமது விரக்தியில் இந்த மாதிரி சில உயிர் சிமுலேடிவ் வைரஸ் மாதிரி சிலவற்றை அசிரத்தையில் பொது நெட்டில் இட்டுவிட, உடனே அது கண்டு பிடித்து முற்றிலும் நீக்கப் பட்டதாகவும், அதில் ஏதோ ஒன்று தப்பி இவ்வாறு வெளிப்பட்டிருப்பதாகவும் நீள் புராணம். யாரால் நம்ப முடிகிறது? ஆனால் பட்ட பாடு எதையும் நமபச் சொல்லும். 

அந்த மேதை கம் விரக்தி ஏன் வெறுப்பு அடைந்தார் என்று கேட்டால் பழைய லுட்லம் கதை போல். அவருடைய காதலியும், அவரும் தம்முடைய களவியல் இலக்கணத்தை லாபில் ஞாபகப் படுத்திக்கொள்ளப் போக, அன்று இருந்த டைரக்டர் சிடுமூஞ்சி -- ஐ வாண்ட் டிஸிப்ளின் தேன் டாலண்ட் -- என்று தமிழ் சினிமா பாணியில் முழங்க -- காதலர் இருவரும் சுதந்திரப் பறவைகள் ஆயினர். லாப் இரண்டு சூப்பர் மூளைகளை இழந்தது. அதோடு விட்டால் நன்றாக இருந்திருக்கும். விரட்டிக்கொண்டு போய் பாடம் கற்பிக்கிறேன் பேர்வழி என்று டைரக்டர் வம்பை விலக்கி வாங்கினார். லாப் இன் மானமே கப்பலேறாமல் இருக்க அந்த மேதையின் காலில் விழாக்குறையாகத்தான் அழைத்து வந்து வைத்த சூனியத்தை எடுக்க வேண்டியிருந்தது. 

அப்படியே விட்டால் என்ன ஆகியிருக்கும்? 
உயிரை அப்படியே விட்டால் என்ன ஆகும்? பிறந்து, வளர்ந்து, முதுமை அடைந்து, தேய்ந்து பின் நின்றுவிடும். உடல் சிதையத் தொடங்கும். அதுபோல்தான் இந்த உயிர் ப்ரொக்ராமை அப்படியே விட்டால் தானாக அதையும் இதையும் செய்து, பலருடைய ஐடண்டிடியில், குழப்பம். பின்னர் ஒரு நாள் உயிர் முடியும் காலம் வரும் போது அது பயன்படுத்திய அனைத்து சிஸ்டங்களும் சிதையத் தொடங்கும். அதாவது ப்ரொக்ரெஸிவ் ஃப்ராக்மெண்டேஷன். டேடா ரிட்ரீவல் ப்ளாக் ஆகும். 

சரி. இப்பொழுது என் சிஸ்டத்தில் நீக்கப்பட்டுவிட்டதால் நெட்வொர்க்கில் இருப்பது என்ன ஆகும்? பல இடங்களில் இது போய் மேய்ந்து விட்டு வந்திருக்கிறதே. 

ஓர் இடத்தில் ஒரு நெட்வொர்க்கில் போட்டாலே போதும் அது பார்த்துக் கொள்ளும். எங்கெங்கெல்லாம் அந்த வைரஸ் எலிமண்ட்ஸ் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் சென்று ந்யூட்ரலைஸ் பண்ணிவிடும். எதற்கும் நீங்கள் சொன்ன குறிப்பிட்ட மூன்று பேர் சிஸ்டத்திலும் போட்டு விடுங்கள். இல்லை. அவர்களுடைய ஈமெயில் ஐடியை அனுப்புங்கள். சுந்தரேசன் சாருடையது இருக்கிறது. மற்ற இருவரின் ஐடியும் அனுப்புங்கள். நீங்கள் போடுவதைவிட நாங்கள் அனுப்பி அவர்கள் நேராக ரன் கொடுக்கட்டும். 

மிக்க நன்றி. சமயத்தில் உதவி. ஏதாவது பே பண்ண... அதெல்லாம் வேண்டாம்...பார்க்கப் போனா நாங்கதான் பே பண்ணணும். அதற்கு அனுமதிக்கு மேலே எழுதியிருக்கிறோம். பார்ப்போம். 

அதற்கப்புறமும் ஒரு நாள் நானும், நண்பரும், அந்தப் பெண்ணும் சேர்ந்து விருந்துண்டோம். நல்ல கலகலப்பு. அப்பா! சார் முகத்தில் இவ்வளவு சிரிப்பு...ஆச்சரியம்....நண்பருக்கு என் மேல் அசாத்திய நம்பிக்கை. தன் சொந்தக் கதை பலதும் கூறினார். நான் தயங்கித் தயங்கி அவரிடம் கூறினேன் -- சார்! உபதேசம் பண்றதா தப்ப நினைச்சுக்கலேன்னா ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன். குடும்பம் என்பது ஒரு தேன் கூடு. அதைக் கட்டுவது என்பது பெரும் பாடு. உடைய விடுவது சுலபம். உடைந்ததும் அனைவருக்குமே வருத்தம். நீங்கள் வருந்துவதைப் பார்க்க நான் என்றென்றுமே விரும்ப மாட்டேன். உங்கள் நட்பைப் பெரிதும் நான் மதிப்பதால் சொல்லத் துணிந்தேன். தலையிடுவதாகத் துளிக்கூட எண்ணம் இல்லை. ஆனால் நான் சொல்வதை நீங்க கருதினாலும் சரி அல்லது விட்டாலும் சரி, நம் நட்பு என்றும் தொய்வடையாது. -- இதை அந்த மாது இல்லாத நேரம் பார்த்து பர்ஸனலாகப் பேசும் போது சொன்னேன். சிரித்தார் -- இப்பொழுது உபதேசம் பண்ணுவது நீங்களா? அல்லது அந்த வைரஸா? என்றார். குபீர் என்று சிரித்துவிட்டேன். 

இப்பொழுது கணினி ப்ரச்சனை இல்லை. வைரஸ் அட்டாக் அப்பாடா ஒரு வழியாக ஓவர். ஆனால் புதிய ப்ரச்சனை ஒன்று உருவாகியிருக்கிறது. கணினியில் அன்று. அதையொட்டிச் சிந்திக்கும் பொழுது கருத்துலகில். 

உயிர் என்னும் வைரஸ் லேஸில் விடுவதாக இல்லை. தான் மறையினும் தன்னைப் பற்றிச் சிந்தித்தாலே பல ப்ரச்சனைகள் எழும்படிப் பண்ணிவிட்டுப் போயிருக்கிறது. 

அவற்றை நாங்கள் மீண்டும் சந்தித்துப் பேசும் பொழுது சொன்னதுதான் தாமதம், அந்த அம்மாள் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். 


 இல்லை. இதை இப்படியே விட்டுவிடலாம். ஆனால் இது ஏதோ புதிராக நின்று புரட்டியெடுக்கிறது. 
உயிர் சிமுலேஷன் என்ற அடிப்படையில் உருவான இந்த மின்சூழ்ச்சி, கடைசியில் உயிர், ஆத்மா -- இதெல்லாம் என்ன என்ற கேள்வியையே உசுப்பிவிட்டுவிட்டது. 

'என்ன அப்படிப் பெரிய ப்ரச்சனையை அது எழுப்புகிறது என்று சொல்கிறீர்கள்?' 

அதாவது உயிர் என்பதனால் நாம் வேறுபடுத்தி உணரும் தன்மை என்ன? 

சுய இயக்கம், சுய உணர்வு, சுயத்திற்கான ந்டவடிக்கை. 
இல்லையா? ஆனால் இந்த 'சுயம்' என்பது என்ன? வேறு எதனாலும் விளக்கிவிட முடியாத தன் 'உள்'இன் சாட்சி அல்லவா? அந்தச் சுயத்தை யாரும் கட்டமைக்கவில்லையே? 

ஆனால் நம்மைச் சிறிதுநாள் படுத்தி எடுத்த இந்த வைரஸ், யூ கால் இட் பை வாட் எவர் நேம், சுய இயக்கம், சுய உணர்வு, சுயத்திற்கான நடவடிக்கை என்றபடி அனைத்தும் தன்னில் போலிமை ஆட வலம் வரவில்லையா? 

சார்! யூ ஆர் கோயிங் டூ மச்.....இருங்கள்...உயிர் என்பதற்கு இந்த உலகம், ஆர்கானிக், இன்னார்கானிக் என்று பல படித்தரங்கள், சப் சிஸ்டங்கள், முதலில் சரியான தட்ப வெட்ப நிலை இவ்வளவும் இருந்தாக வேண்டியிருக்கிறது உயிர் என்பதைப் பற்றிப் பேசவே. 

ஆம் நான் இல்லை என்று சொல்லவில்லை. அத்தனையையும் நீங்கள் சொல்வதை எல்லாம் ஹார்ட் வேர் என்பதிலும், சாஃப்ட் வேர் என்பதிலும் அடக்கிவிடலாமே ! 

In real world you want all that you said to provide in a way, the hard ware and soft ware of the MEGA COMPUTER. -- that is this world. 

நம் சோட்டா உலகமான கணினி உலகத்தில் உயிர் என்னும் வைரஸ், ஒரு self-sustaining being என்பதனுடைய குணாம்சங்களைப் போலிமை காட்ட முடியும் என்றால், 
Now I am coming to the Deadly Question -- --- 

ஏன் மெகா கணினி என்று சொல்லலாம்படியான இந்த உலகில் எல்லாம் அளந்து, புறவயமாகத் திட்டத்தில் இருக்கும் பொழுது, ஆன்மா என்பதே இந்த மெகா கணினியின் மென்பொருள், வன்பொருள் என்ற கால தேச வர்த்தமானத்தில் கிளர்ந்து பற்றிக்கொண்டுப் பரவிய வைரஸ் இயக்கம் என்று சொல்லிவிட முடியாது? 

'யாரும் அப்படியெல்லாம் இதுவரை சொன்னதில்லை...' 
சொன்னதில்லையா? இல்லை நாம் தான் காதில் வாங்கிக்கொள்ளவில்லையா? 
என்ன சொல்கிறீர்கள்? யார் சொல்லுங்கள் பார்ப்போம்... 
புத்தர்.... 

யூ ஸீ புத்தர் என்ன சொன்னார்? இந்த உலகம் துக்க மயம்...ஆசைதான் துக்க காரணம்.... 

ஐந்தாம் க்ளாஸ் பாடமா? 

நிஜமாகவே இதுதான் புத்தர் சொன்னதா? நீங்கள் ஃபிலாசஃபி டாக்டரேட் ஞாபகம் இருக்கட்டும். 

ஓ மை காட்...இந்தத் தகவல் யார்...அந்த வைரஸ் கொடுத்ததா? 

நோ நோ...உங்கள் க்ளாஸ் மேட் சொன்னது.... 
??? 

ஜெய்யூ.... 

ஓ அவளா? உங்களுக்கு....? 

முன்னிருந்த அலுவலகத்தில் காம்ரேட். சரி இருக்கட்டும். எனவே நீங்கள் ஐந்தாம் பாடத்தை வைத்து புத்தரை ஊற்றி மூடினால் அது நியாயமாக ஆகாதே..... 

இல்லை...அவ்வாறு நான் செய்யவில்லை....சிந்தனை ஓடுகிறது...ஜஸ்ட் சொல்லிப் பார்க்கிறேன்.... ஆனால் நீங்கள் சொல்லவருவதாக நான் நினைப்பதும், நீங்கள் உண்மையில் சொல்லிவிடக் கூடியதும் ஒன்றுதானா...தெரியவில்லையே.... 

நான் சொல்ல வருவது.....புத்தர் கட்ட கடைசியாகச் சொன்ன 'அநத்தா' என்னும் கருத்து. 

ஆத்மா இல்லை. கர்மி இல்லை. ஆனால் கர்மம் சுழலுகிறது. கர்ம சங்காதம் மையமிடும் புள்ளி ஆன்மா போல் தோற்றரவு கொண்டு ஸம்ஸரிக்கிறது. 

என்று ஆன்மா இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறதோ அன்று வைரஸ் ந்யூட்ரலைஸ்டு. 

ஆன்மா ஒரு வைரஸ் என்று அவர் நினைத்திருக்கவில்லை என்றால் ஏன் அத்தனை துக்கத்துக்கும் அடிப்படை 'ஆன்மா உண்டு என்ற எண்ணம்' எனக் கூறவேண்டும்? 

அந்தப் புள்ளியில்தான் சங்கரர் அவரை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். ஆத்மா மட்டும் உண்டு. மற்ற ஹார்ட் வேர், சாஃப்ட் வேர் அனைத்தும் வைரஸ் என்று புரட்டிப் போட்டார். 

ஆக ஏதோ ஒன்று வைரஸ் -- ஆத்மா? புத்தர். கால தேச வர்த்தமானம்? -- சங்கரர். 

கூட வருவது நிழலா? நிழலின் கூடச் செல்வது நாமா? 
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் பிஹெச்டிக்கு எடுத்துக்கொண்ட தலைப்பே 'Buddha's anathma and Sankara's Brahman'. Now you are reopening the topic viciously. 

ஹஹஹ இல்லை மேடம். தத்துவ ஆய்வு எந்தப் புள்ளியிலேனும் நின்றுவிடுகிறதா என்ன? நாம் தான் ஓய்வு எடுத்துக்கொள்கிறோம். 

ஆம் இப்பொழுது கண்டிப்பாக ஓய்வுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

All right we will leave the topic as it is. We will be each at it and come back after sometime. 

'ஐயா சாமி, என்னை விடுங்க. இதுக்கு அந்த வைரஸே தேவலை போல இருக்கே' என்றார் சுந்தரேசன். 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*