Friday, October 29, 2021

திருவரங்கத்தைப் பற்றி ஸ்ரீபட்டரின் அனுபவம்

நித்ய விபூதி என்கிறார்களே, விரஜா நதிக்கரையில் இருக்கிறது என்று. அங்கு போனால் கிடைக்கும் அந்தப் பேரானந்தம் இவ்வுலகிலேயே கிடைக்க வழியில்லையோ? இல்லாமல் என்ன... ஓரிடம் இருக்கிறது. காவிரி, கொள்ளிடம் என்று இரண்டினாலும் வளைக்கப்பட்ட இடம். விரஜை நதியின் கரையில், தமோகுணம் அற்றதாய், ரஜோகுணமும் இல்லாததாய், சிறந்ததான இடம், முக்தர்களுக்கு என்றே உரிய இடம் என்று யாதொன்றைச் சொல்லுகிறார்களோ அந்த விஷ்ணுவின் பரமபதம் என்று பெயர்பெற்ற உன்னத ஸ்தானம் விரஜை நதியை ஒட்டி இருக்கும் மணற்குன்றுதானே! அஃது அங்குதான் என்றில்லை. இதோ இங்கேயே இருக்கிறதே என்று சொல்லலாம்படி அமைந்திருக்கிறது காவிரி நதிக்கரையை ஒட்டி வளர்ந்திருக்கும் மணற்குன்று. காவிரியின் நடுவே விளங்கும் இந்த உன்னத ஸ்தானத்தை என்றும், என்றென்றும் கண்டுகொண்டிருக்க வேண்டும்.

ஏன் அது என்ன அவ்வளவு விசேஷம் என்றா கேட்கிறீர்கள்? அங்கிருக்கும் கோயில் சோலைப் புறங்களில்தான் விசேஷம். அந்தச் சோலைப் புறங்களில் என்ன நடைபெறுகிறது? தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் என்று உபய வேதாந்தங்களும் அங்கு ஆழ்ந்து ஈடுபாட்டுடன் துய்க்கப் பெறுவதால் எப்பொழுதும் இந்த உபய வேதாந்த ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது. உலக தாபங்கள் மற்ற இடங்களில் கடுமையாய் இருக்கும் என்றால் இங்கோ வலிமையற்றுப் போய்விடுகிறது. தூய்மை, பாவனம் பரவிக் கிடக்கிறது. ஸ்ரீவைஷ்ணவர்களின் புகலிடமாக இருக்கிறது. காவிரி நதியின் நீரால் போஷிக்கப்பட்டு வளர்ந்து ஓங்கிய சோலைகளாய் இருக்கின்றன. இங்கேயே எப்பொழுதும் வசிக்கக் கடவேனாக.

என்று அற்புதமாக ஈடுபடுகிறார் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ஸ்ரீபராசர பட்டர். அந்த சுலோகங்கள் வருமாறு --

யத்விஷ்ணோ பதமதம: பரோரஜோSக்ர்யம் 
முக்தாநாமநுவிரஜம் வீதீப்ரமாஹு: | 
தத் புண்யம் புளிநமிதந்தயாSத்ய மத்யே காவேரி 
ஸ்ப்புரதி ததீக்ஷிஷீய நித்யம் ||

த்ரய்யந்தப்ரஹதி மதீஷு வைஷ்ணவாநாம் 
ப்ராப்யாஸு ப்ரசுரபவச்ரமாபஹாஸு | 
காவேரீ பரிசரிதாஸு பாவநீஷு 
ஸ்ரீரங்கோபவநதடீஷு வர்த்திஷீய ||

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

****

Thursday, October 28, 2021

இச்சையும், புரிதலும்

வேதாந்த ஸூத்ரங்கள் என்னும் ப்ரஹ்ம ஸூத்ரத்திற்குப் பல வியாக்கியானங்கள் உண்டு. ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர் முதலிய பல ஆசாரியர்களும் தம் தம் சித்தாந்தத்திற்கு ஏற்றாற்போல் விரிவுரை செய்துள்ளனர். 

வேதாந்த ஸூத்ரங்களில் முதல் ஸூத்ரம் ‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா’ என்பதாகும். ப்ரஹ்ம ஜிக்ஞாஸா என்றால் ப்ரஹ்மத்தை அறியுமிச்சை. பிரம்மத்தை அறியுமிச்சை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று வேதாந்தம் கூற வருகிறது? அறியுமிச்சையைச் செய்ய வேண்டும், இச்சை கொள்ள வேண்டும் என்று கட்டளை இடுகிறதா? விதிக்கிறதா? விதிக்கப் படுவதாய் இருக்கும் தன்மை விதேயத்வம். இச்சை அப்படிக் கட்டளை இட்டு, விதித்து அதன் மூலம் செய்யக் கூடியதா? இச்சை கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டால் ஒருவர் அதற்குக் கீழ்ப்படிந்து இச்சை கொண்டுவிட முடியுமா? நமக்கு இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று தோன்றும். ஆனால் வேதாந்திகள் எவ்வளவு நுணுக்கமாகச் சொற்களுக்குப் பொருள் கொள்கின்றனர் என்பதை நாம் உணர இது ஒரு வாய்ப்பு. 

இச்சை விதேயத்வம் உடையது அன்று. அதாவது விதியாகச் சொல்லி அதை இயற்ற வைக்க முடியாது. இச்சை புரிவாய் என்று செய்யக் கட்டளையிட்டால் இச்சை வந்துவிடாது. இச்சை வந்தவர்க்கு வழிகளை விதிக்கலாம். இச்சை எப்படி வரும்? தானேதான் வரவேண்டும். அதாவது ஒரு விஷயத்தின் மகிமை, பெருமை முதலியவற்றின் காரணமாக ஒருவர்க்கு அதன்பால் இச்சை உண்டாகலாம். ஆனால் செய்து கூட்டக் கூடிய ஒன்றன்று இச்சை என்பது. எனவே ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்ரீராமானுஜர் முதல் ஸூத்ரத்திற்கு உரை எழுதுங்கால் ’இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால் ஞானம் என்பது விதிக்கப்படுகிறது’ என்று பொருள் வரைகிறார். இச்சை விதிக்கு உட்பட்டதன்று. ஆயினும் இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்மை கொண்டது பிரம்ம ஞானம். எனவே வேதாந்த வாதாவளியில் ஸ்ரீமைஸூர் அநந்தாழ்வான் ஸமாஸவாதத்தில் ஒரு விளக்கம் தருகிறார். அதாவது, ‘இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால் ஞானம் என்பது விதிக்கப் படுகிறது’ என்று ஸ்ரீராமானுஜர் தரும் விரிவுரையில் ‘விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால்’ என்னும் சொற்றொடர்களுக்குப் பின்னர் ‘விதிக்கபடமுடியாதது எனினும்’ என்னும் சொற்றொடரை வருவித்துப் படித்துப் பொருள் கொள்வது இன்னும் விளக்கமாக இருக்கும் என்கிறார். அப்பொழுது இதையும் இணைத்துப் படித்துப் பார்த்தால் ‘இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால், (விதிக்கபடமுடியாதது எனினும்) ஞானம் என்பது விதிக்கப் படுகிறது’ என்று ஆகும். அதாவது இச்சை என்பது சொல்லிச் செய்து வருவதன்று, ஒரு விஷயத்தின் மகிமை, பெருமை என்பதனால் ஒருவருக்குத் தன்னைப் போல் உள்ளிருந்து எழ வேண்டிய ஒன்று என்னும் உள இயல் உண்மையைக் கருத்தில் விடாமல் கொண்டு உரை எழுதவும், எழுதிய உரையைப் புரிந்துகொள்ளவும் செய்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.

‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’

என்னும் குறளில் இறைவனுடைய பொருள் நிறைந்த புகழை ஒருவர் புரிய வேண்டும் என்றால் என்ன? அப்படிப் புரிய முடியுமா? இங்கு ‘புரிந்தார்’ என்றால் ‘விரும்பியவர்’ என்ற பொருள். புரிதல் என்றால் விரும்பிய என்னும் பொருள் கொள்ளப் படுகிறது. ஏனெனில் விரும்புவதற்கு ஏற்ற மிகவும் சிறந்த, முதன்மையானது எதுவெனில் இறைவனின் புகழ். இறைவன் புகழை விரும்புக என்று கட்டளை இட்டால் அதற்குக் கீழ்ப்படிந்து ஒருவர் எந்தச் செயல் புரிந்தால் உடனே விருப்பம் வந்துவிடுமா? ஆயினும் சிறப்பையும், முதன்மையையும், முக்கியத்துவத்தையும் கருதி அவ்வாறு விதிப்பதாகவே கொள்ள வேண்டும். அதனையே மிக அழகாகத் திருவள்ளுவர் அவ்வாறு இறைவன் புகழைப் புரிந்தவர்கள், விரும்பியவர்கள் அடையும் உயர்நிலையைச் சொல்லி உணர வைக்கிறார். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Saturday, October 23, 2021

Czeslaw Milosz - செஸ்வா மீவாஷ்

செஸ்வா மீவாஷ் (Czeslaw Milosz) நோபல் பரிசு பெற்ற போலிஷ் கவிஞர். அவர் பிறந்த ஊர் இன்றைய லிதுவானியாவில் இருக்கிறது. கம்யூனிஸம் விரட்ட, ஃப்ரான்ஸில் அடைக்கலம். பின்பு அமெரிக்காவில் புகலிடம். பிஹெச்டி எதுவும் பெறாமலேயே ஸ்லாவிக் மொழிகளில் பேராசிரியர் வேலை. போலிஷ் மொழியில் பல தொகுப்புகள் (போலண்டில் அவருடைய நூல்களை அச்சிடுவது தடை செய்யப்பட்டிருந்த போதிலும்). அவருக்கு நோபல் பரிசு கிடைத்ததும்தான் போலண்டிலும் சரி, அமெரிக்காவில் அவருக்குப் பழகியவர்களும் சரி அவருடைய மேதைமையை உணர்ந்தனர். நகரங்கள் சரிவதையும், மனிதருக்குள் இருக்கும் வன்மங்கள் வெளிப்படுவதையும் அனுபவத்தில் பார்த்தவர். இல்வாழ்க்கையும், மனையாளும், கருவில் தம் குழந்தையும் என்ற நிலையிலும் சர்வாதிகாரங்களுக்கு அஞ்சி கண்டம் விட்டுக் கண்டம் என்று புகல் தேடி அலைந்த மனிதர். அவர் மொத்த நகரங்களை நோக்கி ஓர் உரத்த குரல் வீசுகிறார்: 

“Till not one stone, 0 city, remains
Upon a stone, and you too will pass away.
Flame will consume the painted history.
Your memory will become a dug-up coin.
And for your disasters this is your reward:
As a sign that language only is your home,
Your ramparts will be built by poets.”
(Czeslaw Milosz, New and Collected Poems 1931 to 2001) 

கல்லில் கட்டியவை காலத்தில் காணாமல் போகும். கவிஞன் சொல்லில் கட்டியவையில் இனி உங்கள் வாசம் நிரந்தரம் - என்று அவர் உரக்கச் சொல்லும் குரல் கவிஞனின் குரல். நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கல் கெட்டியானது. கரையாது. ஆனால் காலம் அதை ஊதிவிடுகிறது. சொல் ஓசை ஓலி. சொன்னால் போயிற்று. ஆனால் சொல்லில் வடிக்கும் கோட்டைகளைக் கடலலை போல் மோதி மோதிக் காலம்தான் தன் தோல்விக் கணக்குப் பாடிக் கொள்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

சொன்னது நீதானா

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என் உயிரே. 
என்று ஒரு சினிமா பாடல். 

சொன்னது உண்மை. எவ்வளவு உண்மை என்றால் சொல்லவில்லையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு கனத்த‌ உண்மை. இதை பெட்ரோ ஸலினாஸ் என்னும் ஸ்பானிஷ் கவிஞர் தமது காதல் கவிதைகளில் சொல்லும் விதம் : 

And what she said to me
was in a language of the world,
with grammar and a history.
So true,
that it seemed to be a lie.
(Memory in my hands, The love poetry of Pedro Salinas, tr by Ruth Katz Crispin, 2009 Peter Lang, pp 9) 

உலகத்து மொழியில்தான் சொன்னாள். இதே இலக்கணம், வரலாறு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட மொழிதான்.. உண்மை.. அவ்வளவு உறுதியான உண்மை... எவ்வளவு உறுதி... ஒரு வேளை சொல்லவில்லையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு. 

சொன்னது நீதானா...... சொல் சொல் சொல்.. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

கிரேக்கத்தில் நடந்தவை

கிரேக்கத்தில் நடந்தவை 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு --
கேன்வாஸில் வரையப்பட்ட ஒரு படம். லக்கோனியர்களை அதீனியர்கள் வீழ்த்துவது போல் காட்சி. பார்த்தவர் சொன்னாராம்: 'யப்பா.. பெரும் வீரர்கள் இந்த அதீனியர்கள்! '
மற்றொருவர் அதற்கு: 'ஆம். வரையும் கேன்வாஸில்'. அவர் ஒரு லக்கோனியர்.
எத்தனை காலம் எந்த நாடு.. மனிதர்கள் ஒரே மாதிரிதான். 
 

கிரேக்கத்தில் நடந்தவை : 

'கட்டடத்தைப் பார்த்தால் என்னென்னிக்கும் நிலைச்சு வாழப் போறவன் மாதிரி கட்டியிருக்கானய்யா! சாப்பாட்டில் கட்டுகட்றதைப் பார்த்தால் ஒரேயடியா செத்துருவான் போல சாப்பிடுகிறானய்யா!' 

இதைச் சொன்னது ப்ளேட்டோ. அரிஜன்டம் நகரத்து மக்கள் கட்டடங்களையும், விருந்துகளையும் பார்த்துவிட்டு இவ்வாறு சொன்னார். 


கிரேக்கத்தில் நடந்தவை: 

"ஏ முட்டாளே! அபசுரமா வாசிச்சுத் தொலைச்சியா? இல்லையென்றால் இந்த கச்சேரி கேட்ட மக்கள் இப்படிக் கொண்டாட மாட்டார்களே!"
என்று குச்சியால் சிஷ்யனை வெளுத்து வாங்கிவிட்டார் ஹிப்போமேக்கஸ் என்ற குழல் ஆசிரியர். 


கிரேக்கத்தில் நடந்தவை: 

அரிஸ்டிப்பஸ் தம் மகனை வெறுத்துத் திட்டிக்கொண்டிருந்தார். அவரது மனைவி குறுக்கே புகுந்து சொன்னாள்: 'ஏன் இப்படித் திட்டுகிறீர்கள்? அவன் உங்களைச் சேர்ந்த ஒரு பகுதியில்லையா?' அரிஸ்டிப்பஸ் உடனே காறித் தரையில் உமிழ்ந்து ' அந்த எச்சிலும் என்னைச்‌ சேர்ந்த பகுதிதான். ஆனால் என்ன பயன்?' என்றார். 

அந்தக்காலம் இந்தக் காலம் சொல்லலாம். ஆனால் ஒரே காலம்தான் இருக்கிறது. 


கிரேக்கத்தில் நடந்தவை: 

குழல் வாசிப்பதில் மிகவும் புகழ் வாய்ந்த ஒருவரைச் சிறைபிடிக்க நேர்ந்தது அடியாஸ் என்னும் மன்னனுக்கு. ஒரு பண் வாசிக்கப் சொல்லி அவரைக் கேட்டார் அடியாஸ். வாசித்ததும் அத்தனை சபையோரும் கரவொலி எழுப்பினார்கள். குழல் நிபுணர் கூறினார் : ' என்னுடைய குதிரை இதைவிட நன்கு புரிந்துகொண்டு கனைக்கும்.' 


கிரேக்கத்தில் நடந்தவை: 

ஃபிலிப் பேரரசர் ஆன்டிபேட்டரின் நண்பர் ஒருவரை நீதிபதியாக நியமித்து ஆணை பிறப்பித்துப் பின்னர் அதை நீக்கி விட்டார். காரணம், அந்த நபர் தாடிக்குக் கரு மை பூசியிருந்தார் நரையை மறைக்க. "உரோமத்தில் கூட ஒருவரை நம்ப முடியாது என்னும் போது வியவகாரங்களில் அவரை நம்புவது யாங்ஙனம்?" என்பது ஃபிலிப் பேரரசர் கருதிய‌ காரணமாம். 

என்னவோ போங்க.. டை பண்ணியதற்குப் பதவி போச்சேய்யா... 

***


அங்கேயும் இதே கஷ்டம்தானா?

துறை சார்ந்த கல்வி, ஆய்வு என்னும் நோக்கில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்பொழுது கேட்பவரும் அவ்வாறு துறை சார்ந்த தெரிதலும், சொற்களுக்கு உண்டான கறாரான துறை சார்ந்த அர்த்தங்களும் புரிந்துகொள்ளும் நிலையில் இருப்பது முன் எப்படியோ வரவர அபூர்வமாகவே அமைகிறது. துறை சார்ந்து படிக்கப் புகும் நபர்களே கூடக் குத்துமதிப்பாகவும், குறையாகவும் பல சொற்களுக்கும் தாங்கள் சூழ்நிலையிலிருந்து உறிஞ்சிக் கொண்ட அர்த்தங்களை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டுதான் செல்கிறார்கள். யதேச்சையாகத் தொற்றிக்கொண்ட அர்த்தங்கள் பின்னர் கல்வித் தேர்ச்சியால் மாறுகிறதா திருத்தம் அடைகிறதா ஒன்றும் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் மென்டல் க்ளீனிங் என்னும் சித்த சுத்தி ஒருகாலும் நடைபெறுவதில்லை என்றுதான் தோன்றுகிறது. மாறாகத் துறைசாராத உற்சாகங்களால் ஒவ்வொரு சொல்லும் எல்லாம் திணிக்கப்பட்ட ரப்பர் பையாக மாறிவிடுகிறது. சாஸ்திரங்களைப் படிக்கும் பொழுது இதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். உதாரணத்திற்கு, இந்த ‘சாஸ்திரம்’ என்ற சொல்லையே கூடச் சொல்லலாம். இது எப்படியோ, மேற்கத்திய மெய்யியல் படிப்புகளிலும் இந்தத் தொல்லை நிகழாமல் இல்லை. உதாரணத்திற்கு மெடஃபிஸிக்ஸ் என்னும் ‘பௌதிகம் கடந்த மெய்மையின் இயல்’ என்னும் படிப்பில் இந்தக் கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் சாதாரணமான அறிமுக நூலை எழுதும் ஆசிரியர்களும் கூட. எனவே அவர்கள் முதன்முன்னம் மெடஃபிஸிக்ஸ் என்றால் என்ன என்ன எல்லாம் இல்லை என்று சொல்லித் தீர வேண்டியிருக்கிறது. ஜான் டபிள்யூ கார்ரோல், நெட் மார்கோஸியன் என்னும் ஆசிரியர்கள் மெடஃபிஸிக்ஸுக்கான ஓர் அறிமுகம் என்னும் நூலின் தொடக்கத்தில் இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்கள். அது என்ன என்பது அப்புறம் இருக்கட்டும். முதலில் அது என்ன எல்லாம் இல்லை என்று சொல்வது பெரும் உதவி மட்டும் இல்லை, உரிய தற்காப்பும் ஆகும். 

“Let’s start with what metaphysics is not. Metaphysics - as we are using the term - is not the study of the occult. Nor is it the study of mysticism, or auras, or the power of pyramids. Although the word ‘metaphysics’ may indeed have all of those connotations in ordinary English, the word is used within academic philosophy in an entirely different way. And this book, as it happens, is meant to be an introduction to the branch of academic philosophy that is known as metaphysics.”
(An Introduction to Metaphysics, John W Carroll, Ned Markosian, Cambridge University Press, 2010, pp 1) 

விநோதம்தான். ஒன்று என்ன என்பதைச் சொல்லும் முன்னர் அது என்னவெல்லாம் இல்லை என்று சொல்லித்தீர வேண்டும் என்பது அறிவின் பெருக்கத்தைக் காட்டுகிறதா அல்லது அறியாமையின் பெருக்கத்தைக் காட்டுகிறதா? இன்னும் சொல்லப் போனால் நுண்தளத்தில் புழங்கும் பல சொற்களிலும் ஏகப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு ஒரு சொல்லையும் நேரடியாக எடுத்தோம் பயன்படுத்தினோம் என்று முடிவதில்லை. பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் சொல்வது வேறு, போய்ச் சேரும் பொருள் வேறு என்றுதான் ஆகிவிடும். நீங்கள் சொல்லாத விதத்தில் புரிந்துகொண்டு, நீங்கள் உணர்த்தாத பொருளை உள்வாங்கி ‘பிரமாதமா சொன்னீங்க’ என்று நீங்களே பாராட்டப்படும் போது நடக்கும் உங்களுக்குள்ளேயே ஓர் அசடுவழியல்.. அதை எங்கு போய்க் கொட்ட?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

கவிதை என்பது அலாதியான திறப்பு

கவிதை என்பது என்னமோ ஓர் அலாதியான உலகத் திறப்பாகத்தான் எனக்கு ஆகிவிடுகிறது. மற்ற ஆர்வங்கள் மனத்தை முழுவதும் கவிதைக்கு விட்டுக்கொடுத்து நகர்ந்து விடுகின்றன. தமிழினி வசந்தகுமார் சொல்வதில் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்கிறது. ‘நீங்க கவிதையிலேயே இருங்க. எதுக்கு மற்றவை?’ ஆனாலும் ஓடுகாலி மனம் ஓரிடத்தில் நிற்குமோ? ஆடிய பாதமும், அருளிய பாதமும் ஒன்றாகும் போது நிற்கலாம். அதுவரை தேடிய நாட்டமாய் மனம் என்னும் மான் துள்ளத்தானே செய்யும். 

அமெரிக்க தேசத்தின் கவிஞர் ஒருவர் ஜான் பெர்ரியொல்ட் (John Perreault). அவர் இப்படி எழுதப் போய்த்தான் இந்தச் சிக்கல் -- 

“in front of us
where hours die
as if lived
inside your immortality” 

எங்கள் ஊர் ஸ்ரீதாயுமானவர் கூறுகிறார்: 

“நானே கருதின் வர நாடார் சும்மா இருந்தால்
தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே.” 

வரவர எங்கோ ஏதோ மொழியில் படித்த ஞாபகத்தில் எந்த மொழியிலோ தேடும் பிழைப்பு ஆகிவிட்டது. ஒரு குரல்தான் ஆதிமுதல் பேசிக்கொண்டிருக்கிறது. அதைப் பிடித்து வைக்கும் பாத்திரமாகப் பல மொழிகளை நாம் வைத்திருக்கிறோம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

நினைவின் நிரல்கள்

நான் நான்காவது வகுப்பு எலிமன்ட்ரி ஸ்கூல் படிக்கும் போது முன்னாள் எம்பி ஸ்ரீ வி சுப்பிரமணியம் அவர்களிடம், பாரதியைப் பற்றிய பேச்சிற்காக பாரதியார் கவிதைகள் நூல் பரிசு வாங்கினேன். இந்தத் தொடக்கத்தால் எல்லாம் ... நாமக்கல்லில் இலக்கிய மன்றம் ஆண்டு தோறும் விழா நடத்துவார்கள். அதில் 1971களில் பாரதி, திருவள்ளுவர் பற்றி வெவ்வேறு நாட்களில் பேச்சு. திருவள்ளுவர் பற்றிய பேச்சிற்கு அப்போது குமரி அனந்தன் தலைமை. திருக்குறள் பரிமேலழகர் உரையுடன், அவர் பரிசளித்தார். 73ல் அந்த மன்ற விழா மலரில் நான் எழுதிய கவிதை வந்தது. பாரதி பற்றிய பேச்சிற்கு திருலோக சீதாராம் தலைமை. சத்தியசீலன்,புத்தனாம்பட்டி ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோருடன் மாஸ்டர் மோகனரங்கன் பேச்சு. என்ன நாட்கள் அவை!! 

ஆனால் என் நூல், படிப்பு சம்பந்தமான வாழ்க்கையில் மறக்க முடியாத சிலர் உண்டு. தந்தை சொல்லவே வேண்டாம். அவரைத் தவிர எனக்கு நூல்கள் கொடுத்து உதவியவர் என்ற வரிசையில் என் சின்ன பாட்டி. நாமக்கல். வைகுண்ட ஏகாதசி வந்து விட்டால் அவர் வருவார். எப்படியோ வாங்க வேண்டும் என்று ஏங்கிய புத்தகங்கள் வாங்கிவிடுவேன். இல்லை. விடுவோம். ஆம். எட்டாம் கிலாஸிற்கு பின் திலீப் உம் சேர்ந்து கொண்டான். அவன் வீட்டில் தாத்தா. என் வீட்டில் சின்ன பாட்டி. இருவருக்கும் நாங்கள் வைத்த பெயர் கற்பகமரம். (காமதேனுவோ) . நடையாய் நடந்து மலைக்கோட்டையில் இருந்த தபோவனம் புக்ஸ்டாலில் போய் விவேகானந்த இலக்கியம். 

பிறகு சம்பத் வாத்யார். பாய்ஸ் ஹைஸ்கூல் நூலகத்துப் பெரும்பாலான நூல்களை அப்பொழுதே படித்தவன் என்றால் அது நான். அதற்குக் காரணம் சம்பத் வாத்யார். சீனிவாசன் முதலில் மறுத்துப் பார்த்தார். பிறகு சம்பத் வாத்யாரிடம் போய் சொன்னதும் உடனே வந்து டோஸ் மேல டோஸ். பாவம். 'ஏன்..எங்கிட்டயே கேட்ருக்கக் கூடாதா? அவரிடம் ஏன் சொன்னே? ' என்று சீனிவாசன் சொன்னதும் எனக்கே அசிங்கமாகிவிட்டது. என்ன செய்வது.. முதலில் கேட்டால் விரட்டினார். சில நூல்கள் எடுத்தால் ' ஐயய்யோ.. இதெல்லாம் அட்வான்ஸ்டு. ஆசிரியர்களுக்குத்தான்.' என்பார். அடம் பிடித்ததும் சம்பத் சாரிடம் போய் சொன்னார். 'இந்த புத்தகங்கள் எல்லாம் கேட்கிறான். கொடுக்கலாமா?' சம்பத் சாரின் கிரேட்னஸ் -- ' அவன் என்ன கேட்கிறானோ எத்தனை கேட்கிறானோ கொடுத்து விடு. நான் சொல்லிக்கிறேன்.' அது மாதிரி யார் இருப்பா? 

அடுத்து எனக்கு புத்தகம் உதவி பெருநன்மை செய்தவர் என்றால்... ஏன் எனில் அப்போது எல்லாம் நினைத்த புத்தகத்தை வாங்க முடியாது. ரொம்ப யோசிக்க வேண்டும். நிதி நிலைமை அப்படி. கல்லூரியிலும் எழுதிக் கொடுத்து ஒன்றோ இரண்டோதான் தருவார்கள். அதிலும் பல கெடுபிடிகள். அப்படி இருக்கும் போது தாமாக எனக்கு முன்வந்து நூல் தந்து உதவியவர் திலீப்புடைய தந்தையார். அடுத்தது பேராசிரியர் திரு சி எஸ் கமலபதி. அவருடைய வீடு நூலகமாகவே காட்சி அளிக்கும். அதிலும் பல நூல்கள் நான் பார்த்தவை. அவர் வெளிநாட்டில் இருந்து வரவழைத்துக்கொண்டே இருப்பார். 

வயதுக்கு மீறிய படிப்பு, பல்துறை நூல்களையும் படிப்பது என்பது நமது கல்வி நடைமுறையில் தேர்வு என்று பார்க்கும் பொழுது பெரிதும் பாதிக்கக் கூடியது. பொது நூல்களில் ஈர்ப்பு என்பது பரிட்சையில் வேலையைத் காட்டிவிடும். அத்தகைய விலையை நான் தரவேண்டியிருந்தது. ஆனாலும் புத்தக உலகம் எனக்கு எப்போதும் ஒரு தனி ஈர்ப்பான விஷயம்தான். 

இலட்சியார்த்தமான கல்வி படிப்பு ஒரு வகை. பரிட்சை, மதிப்பெண், மேல்டிகிரி, வேலை, சம்பாத்யம், சவுகரியம் இந்த மாதிரி படிப்பு ஒரு வகை. இரண்டும் ஒன்று சேருவதில்லை. சிறுவயதில் லட்சியங்கள் சார்ந்த படிப்பு என்பது உற்சாகம் ஆக இருக்கலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கை என்பது யாரையும் அடிக்கும். நடைமுறைக் கவலையில்லாத புண்யாத்மாக்கள் பெரும்பாலும் படிப்பு என்ற கவலையிலேயே சிக்குவதில்லை. வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் நடைமுறைத் தேர்வு வழியின் தெளிவுகளை நன்கு உணர்ந்து முன்னேறியவர்கள் இலட்சியார்த்தமான படிப்பில் மூழ்கிப் போனவர்களைப் பார்த்து வாழ்க்கையில் நிரூபிக்கும் வகையில் அடைந்த சாதனைகளைக் காட்டி ஒப்பிட்டால் இலட்சியார்த்தமான படிப்புகளில் முழுகிப் போனவர்கள் பேசாமல் இருப்பது தான் செய்ய முடியும். நடைமுறை அளவுகோல்களில் தோல்வியான வாழ்க்கையாகத்தான் இலட்சியார்த்தக் கல்வியாளர்களின் நிலைமை கணிக்கப் படுகிறது. இது சரியா தவறா என்பதைவிட இதுதான் யதார்த்தம் என்பது அன்றாட வாழ்க்கை. 


கோபுரம் கட்டின ஜீயர் என்றால் பலரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆம். முக்கூர் அழகியசிங்கர் என்று சொல்வார்கள். அவரோடு ஒரு சின்ன சண்டை எனக்கு ஏற்பட்டது. சண்டை என்றால் அவர் திட்ட நான் வாங்கிக் கட்டிக் கொண்டது. கல்லூரி நாட்களில். மணிவண்டி அவ்வப்பொழுது தெருவில் போகும் வரும். அப்பொழுதெல்லாம் சொல்வார்கள் 'ஜீயர் கோபுரத்துக்கு ஏள்றார். கோபுரத்திலிருந்து வருகிறார்' என்பது சகஜமாகக் கேட்கும் பேச்சு அப்போது. வடக்கு அடையவளைந்தானில் திரு ஸ்ரீநிவாசராகவன் என்று ஒருவர் இருந்தார். அவர் அடிக்கடி ஜீயர் பற்றியும், குறிப்பாக கோபுரத்தின் மீது ஜீயர் மேற்பார்வை இடுவது பற்றியும் சொல்லிக் கொண்டிருப்பார். உழைக்கும் மக்களிடம் அவர் காட்டும் அன்பும், தாராளமும் அவர் சொல்வதில் விளங்கும். அது எனக்கு மிகவும் பிடித்துப் போன காரணத்தால் ஜீயர், அவர் கோபுரம் கட்டுவது, போன்றவற்றை வைத்து கற்பனை, பக்தி எல்லாம் கலந்து ஒரு நீள் கவிதை எழுதினேன். அதை அவருடைய திருநக்ஷத்திரத்தின் அன்று சாயந்திரம் கிளம்பிப் போய் (6மணி இருக்கும்) அவரை சேவிக்க வேண்டும் என்று காரியஸ்தர் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார், தசாவதார சந்நிதியில், கேட்டேன். ' உள்ளதான் இருக்கார். யாரும் இல்லை. போங்கோ' என்றார். உள்நுழைந்து ஸேவித்துவிட்டு, 'அழகியசிங்கர் மீது கவிதை ஒன்று செய்திருக்கிறேன். அழகியசிங்கர் கேட்க வேண்டும்' என்றேன். 'அப்படியா! ஏண்டா! காலையில் வந்திருக்கக் கூடாதோ? எல்லாரும் இருந்தாளே! அத்தனைபேரும் கேட்டிருப்பார்களே! கொடு. அப்பறமா படிச்சுப் பார்க்கிறேன். ' என்று சொல்லிவிட்டு, காரியஸ்தரைக் கூப்பிட்டு சம்பாவனை எடுத்து வரச் சொன்னார். அவரும் பணம் சகிதமாகக் கொண்டு வந்தார். 'இந்தா!' என்றதும் நான், ' இல்லை. அழகியசிங்கர் கேட்க வேண்டும். நான் வாசிக்க வேண்டும். அதுதான் விருப்பம்.' என்றேன். 'சரி. காலையில் வந்திருந்தால் எல்லாரும் இருந்தா. அத்தனைபேரும் கேட்டிருப்போம். அப்பறமா படிக்கிறேன்.' என்றார். மீண்டும் 'இந்தா' என்று சொல்லவும் நான், ' இல்லை. வாங்க மனசு ஒப்பவில்லை. அங்க கேட்கப் படிக்கவேண்டும் என்பதுதான் ஆசை.' என்று சொன்னேன். உடனே அவர், 'அப்படியா! எனக்கும் இதைப் படிக்க மனசு ஒப்பவில்லை. இந்தா' என்று விட்டெறிந்தார் நான் கொடுத்த காகிதங்களை. அனைத்தையும் பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். திரும்பும் பொழுது அவர் சொல்லிக் கொண்டிருந்தது 'போய் நீயே படிச்சுக்கோ. உன் சுவத்துல போய் ஒட்டி வைச்சுக்கோ. பெரிய ப்ராக்ஞனாப் போயிட்டியோ? மனசு ஒப்பலையாம்..'. வெளியே வந்த காரியஸ்தர் 'ஜீயர் ஆசீர்வாதமாக தருவது ப்ரஸாதம். மறுக்கக் கூடாது.' என்றார். நான் அவரிடம், 'ஸ்வாமி! நானோ ப்ரம்மச்சாரி. அவரோ சந்நியாசி. இரண்டு பேருக்கும் நடுவுல பணம் எங்கேந்து வந்துது? என் விருப்பம் அவருடன் பழகணும் என்ற சத்சங்கம்.' என்று காரியஸ்தரிடம் சொல்லி விட்டு வந்து விட்டேன். அவர் என்ன செய்வார் பாவம். பிழைக்கச் தெரியாத பிள்ளையாக இருக்கிறதே என்று பரிதாபப் பட்டிருப்பார். 

வரும் வழியில் வடக்குப் சித்திரை வீதி மணி சைக்கிள் கடையை ஒட்டி ஓட்டலுக்கு அடுத்த பால்கனிவீடு. அங்கு எழுத்தாளர் ஏ எஸ் ராகவன் குடியிருந்தார். அவரிடம் சென்று இப்படி ஆகி விட்டது என்றும், ஜீயரிடம் படிக்க இருந்த கவிதையை நீங்கள் கேளுங்கள் என்று அவரிடம் படித்துக் காண்பித்தேன். கேட்டுவிட்டு 'நீ ஒரு கொடாக்கண்டன் என்றால் அவர் ஒரு விடாக்கண்டர். பார்! ஓரிரு நாட்களிலேயே அவர் ஆள் அனுப்பிவிடுவார். பார்க்க, பேச்சு அப்படி இருந்தாலும் குழந்தை மனம். அவருக்குத் தாங்காது. பாரேன்' என்றார். எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்வளவு பெரிய மடாதிபதி. நான் யாரோ சின்ன பையன். அதெல்லாம் ஒன்றும் நடக்காது என்று நினைத்தேன். 

ஆம் அப்படித்தான் நடந்தது. சொல்லி வைத்தால் போல். இரண்டு நாள் ஆகியிருக்கும். மடத்து சிஷ்யர்கள் இரண்டு பேர் தேடி வந்தார்கள். எனக்கு முதலில் ஸ்ட்ரைக் ஆகவில்லை. யாரோ அட்ரஸ் தேடி வந்திருப்பதாக நினைத்தேன். 'நீங்கள்தான் இரண்டு நாள் முன்னாடி ஜீயரைப் பார்க்க வந்திருந்தீர்களா?' என்றதும் நான் 'ஓ மேட்டர் முடியலையா?' என்று தோன்றியது. 'அவர் உண்மையிலேயே மிகவும் அன்பானவர். ஏதோ சூழ்நிலை...' என்று அவர்கள் தொடங்கியதுமே சொன்னேன். 'அது பரவாயில்லை. அவர் பெரியவர். திட்டினாலும் ஆசிகள் தான். ஆனால் நான் எதிர்பார்த்தது நல்ல சத்சங்கம் கிட்டும் என்று. அவர் ஏதோ பணத்தை எடுத்துக் கொடுத்ததும்... அவர்கள் மறித்துக் கூறினார்கள். 'இல்லை. சம்பாவனை ஆசீர்வாதமாக அவர் யாருக்கும் தருவது இதுபோல் கத்ய பத்யங்கள் செய்வோருக்கு. ' 'சரி. பரவாயில்லை. இப்போது நீங்க வந்த காரணம்?' 'ஜீயர்தான் சொல்லிக் கொண்டிருந்தார். யாரோ சின்ன பையன் வந்தாண்டா. ஆசையா கவிதை எழுதிண்டு வந்தான். சம்பாவனை தந்தா வாங்க மாட்டேனுட்டான். மனசு ஒப்பலைங்கறான். படிக்கணும். அழகியசிங்கர் கேட்கணும் என்கிறான். அப்பறம் படிச்சுப் பார்க்கிறேன். இந்தா கஷ்டப்பட்டு எழுதியிருக்க. வைச்சுக்கோ என்றால் அப்பவும் மனசு ஒப்பலன்னா .. அப்படியா உன் கவிதையையும் படிக்க எனக்கு மனசு ஒப்பலைன்னு கவிதையைக் கொடுத்தா கோவிச்சுண்டுப் போயிட்டான். நான் என்ன தப்பா சொல்லிட்டேன். ஒரு கிருதின்னு பண்ணிட்டு வந்தா சம்பாவனை பண்றதில்லையா..' என்று சொல்லி ரொம்ப வருத்தப் பட்டார். அப்பறம் நாங்க விசாரிச்சுப் பார்த்ததுல நீங்கன்னு தெரியவந்தது. கவிதையை எடுத்துண்டு நீங்களும் வாங்கோ.' என்றார்கள். நான், 'இந்தாருங்கள் கவிதையின் நகல். அதற்கு முன்னுரை இது. இப்படிப் படிக்க வேண்டும். இதைப் படித்த பின்னர் என்னைக் கூப்பிட்டால் வருகிறேன்.' என்று கொடுத்து அனுப்பி விட்டேன். தலைப்பு 'அரங்கனின் துயரம்' என்று வைத்திருந்தேன். அதைப் பார்த்துச் சொன்னாராம். 'ஏண்டா துயரம் னு வைச்சிருக்கான். அரங்கனின் சந்தோஷம் என்று வைக்கக் கூடாதோ.. என்றாராம். ஆனால் கூப்பிடவில்லை. நானும் பிறகு போய் பார்க்கவும் இல்லை. முன்னுரையில் ஒரு வரி எழுதியிருந்தேன். 'கோபுரம் கட்டி முடித்தத் திருநாளில் கோபுரத்தையும் ஜீயரையும் ஒரு சேரக் காணும் புண்ணிய மனிதர்கள் நிச்சயம் கோபுரத்தின் புற ஆக்ருதியைவிட ஜீயரின் மன ஆக்ருதி மிக்கப் பெரிதென்றே உணர்வர். 'செயற்கரிய செய்வர் பெரியர்' என்பது தமிழ்வேதம் ஆகலின்.' என்று. அந்த வரி மிகவும் பிடித்துப் போயிற்று ஜீயருக்கு என்றார்கள் பின்னர் நான் அந்த இருவரை சந்தித்தபோது. இப்படியும் ஒரு காலம்! அந்த நாள்! 


வாழ்க்கையில் சில கணங்கள் மறக்க முடியாதவை. 1984 அல்லது 85 இருக்கும். திநகரில் ரூம் வாசம். அப்பொழுது அரிஸ்டாடிலின் முழுநூல் தொகுதி வாங்கிவிட வேண்டும் என்று பெரும் வேட்கை. எங்கும் இல்லை. அமேசான், கணினி எல்லாம் அப்பொழுது கிடையாது. பழைய யுகம். நூலகங்களும், நடைபாதை புக் ஷாப்புகளும் ராஜரீகமாகக் கோலோச்சிய காலம். அப்பொழுது மவுண்ட் ரோட்டில் சாந்தி தியேட்டர் நுழைவில் ஒரு சாலையோர புக் ஷாப் இருக்கும். அங்கு எதேச்சையாக நின்று நூல்களைப் பார்த்தால் 'என்ன வேண்டும்?' என்று கேட்கிறார் கடைக்காரர். வெறுப்பு. அதோடு சொன்னேன் 'அரிஸ்டாடில்' நூல் இருக்கிறதா? நான் எதிர்பார்த்தது அவரிடமிருந்து நக்கல், சிரிப்பு, நான் இருந்த மூடில் கொஞ்சம் சண்டை, பதிலுக்கு அவரிடமிருந்து மெட்ராஸ் பாஷையில் திட்டு. ஆனால்..... அதிசயம்... நீங்கள் வருவீங்கன்னுதான் இத்தினி நாள் இந்த புத்தகம் இங்க கீதுபோல... பார்த்தால் ரிச்சர்ட் மெக்கியான் தொகுப்பில் Basic Works of Aristotle. வாவ்வ்வ்வ்ஈஈஈ... ஆனாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் (விலையை எக்கச்சக்கமா ஏத்தி சொல்லிட்டா) கெத்தா 'என்ன ப்ரைஸ்?' நூறு. நூறா? 'இந்த புத்தகம் எங்கியுங் கெடயாது... விசாரிச்சுப் பாரு... அப்படியே கெடக்குதேன்னு இந்த வெல சொல்றேன்...' என்று திரும்பவும் வைக்கப் போன ஆளை மடக்கி நூறளித்து திரும்பியே பார்க்காம... எக்ஸ்ப்ரஸ் எஸ்டேட்ஸ் வரைக்கும் சோல்ஜர் வாக் போட்டு அங்கதான் பிரேக் போட்டு நின்னேன். பஸ் ஸ்டாண்டு கிராதில சாய்ந்து ஒரு ஓட்டு ஓட்டி அப்பறமா பக்கத்துல ஒரு ஆபீஸ்ல வேலை செய்த என் நண்பனிடம் குட் ந்யூஸ் ஷேரிங்... அவனையும் கூட்டிப் போய் கேக் பிஸ்கட்டோட ஸ்பெஷல் டீ. 
 

19 வருஷத்து முந்தைய நிகழ்வு. தசதினே ஸம்ஸ்க்ருதம் என்ற அமைப்பில் பத்து நாள் வகுப்பு நடத்தினார்கள். எங்களுக்கு மனோரமா என்ற டீச்சர் வகுப்பு எடுத்தார். கடைசி நாள் ஏதாவது கலைநிகழ்ச்சியாகப் பண்ண வேண்டும் என்று முடிவாகியது. நான் அதற்கு ஒரு தீம் செய்தேன். மானோ ஆக்டிங். திருவிளையாடல் படத்தில் தருமி காட்சியை வைத்து மாற்றி ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு நாடகம் ஸ்கிட்டாக எழுதினேன். அதாவது மன்னன் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலை எழுதிக் கொண்டு தருமி உள்ளே நுழைவார். 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ...' என்னும் பாடலை 'சாகே சாகே சஞ்சரதிஸ்ம ஸுபக்ஷவாந் மா வதது தவ ப்ரியமதம்...' என்று மொழிபெயர்த்த நினைவு. முழு ஸ்கிட்டும் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தாலும் ஆக்டிங்கோடு செய்ததால் மக்களுக்குப் புரிந்தது என்று சொன்னார்கள். அதில் மன்னன் தருமியைப் பார்த்துக் கேட்பான். இவ்வாறு நல்ல ஸம்ஸ்க்ருதம் எழுத எங்கு கற்றாய்? என்று. அதற்குத் தருமியின் பதில் 'மனோரமா உபாத்யாயாத் சிக்ஷிதம் மம பாஷாஞானம். தசதினே ஸம்ஸ்க்ருத போதாவஸரே லப்தம் மம வாணீ..' அதாவது தசதின ஸம்ஸ்க்ருத வகுப்பில் மனோரமா உபாத்யாயா அவர்களால் புகட்டப்பட்ட மொழியறிவால் நான் எழுதியது - என்று வரும். அதற்கு மன்னன் வியந்து ஆயிரம் பொற்காசுகளும் மனோரமா உபாத்யாயாவிற்கே என்று கொடுப்பதாக மாற்றி அமைத்தேன் டீச்சரை கௌரவிக்கும் விதத்தில். ஒரே க்ளாப்ஸ். மக்களிடம். அவ்வளவு என்ஜாய் பண்ணுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு சகடபுரம் சங்கராச்சாரியார் வந்திருந்ததாக நினைவு. அனைவரும் அந்த ட்விஸ்டை மிகவும் பாராட்டினார்கள். மனோரமா டீச்சர் நான் மேடையிலிருந்து இறங்கி வரும் போது கூறிய வார்த்தை இன்றும் காதில் ஒலிக்கிறது. 'பவாந் காளிதாஸோ வா?' - ' தாங்கள் காளிதாசரா?' . என்ன நாட்கள்! என்ன நினைவுகள்!
Srirangam Mohanarangan
***

ஷட்தர்சன ஸமுச்சயம்

ஹரிபத்ரர் என்னும் ஜைனர் எழுதிய நூல் இது. பௌத்தம், நியாயம், சாங்க்யம், ஜைனம், வைசேஷிகம், மீமாம்சை, லோகாயதம் என்னும் தர்சனங்களைப் பற்றிய அழகான சிறு அறிமுகங்கள் அடங்கிய நூல் இது. 

'ஜினர் என்னும் வீரரை, ஸ்யாத்வாத தேசிகரை, நன்ஞானத்து உறைவிடத்தை வணங்கித் தொழுது அனைத்து தர்சனங்களின் உரைபொருளும் சுருக்கமாக இங்கு உரைக்கப்படும்.' என்னும் பொருள் உள்ள செய்யுளான 

ஸத்தர்சனம் ஜினம் நத்வா வீரம் ஸ்யாத்வாத தேசிகம் |
ஸர்வதர்சன வாச்யோSர்த்த: ஸங்க்ஷேபேண நிகத்யதே || 

என்பதனோடு நூல் ஆரம்பிக்கிறது. இந்தச் சிறு அழகிய நூலைத் திறம்பட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் மிகப்பெரிய தத்துவ இயல் பேராசிரியரான ப்ரொஃபஸர் கே சச்சிதாநந்தமூர்த்தி அவர்கள். மொழிபெயர்ப்பு, கூடவே குறிப்புகள் என்று செப்பமுறச் செய்திருக்கிறார். படித்தவுடன் 'நன்றி' என்ற சொல்லை நம் நாவே உதிர்க்கிறது. 

தத்துவ இயல் வரலாறு என்னும் வகையில் பழங்காலத்தில் உலகில் எங்குமே நூல்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த 1500 வருஷங்களுக்கும் மேலாக நம் நாட்டில் பல தர்சனங்கள், தத்துவங்கள், மதங்கள் ஆகியவற்றின் உபதேசங்கள் பற்றிய தொகுப்புகள் அங்கங்கே எழுதப்பட்டுள்ளன. பலதும் மறைந்து எஞ்சியதில் பிரபலம் என்று பார்த்தால் ஹரிபத்ரரின் ஸத்தர்சன சமுச்சயம், சங்கரரின் ஸர்வ சித்தாந்தசார சங்கிரஹம், மாதவரின் ஸர்வ தர்சன சங்கிரஹம் என்பன. ஹரிபத்ரரின் காலம் 500 முதல் 700 வரையில் கூறுகிறார்கள். தர்சனங்கள் எப்படித் தம்முள் வேறுபடுகின்றன என்று ஹரிபத்ரர் கூறும் கருத்து ஆர்வக்கவனத்தை ஈர்க்கிறது. 

தர்சனானி ஷடேவ அத்ர மூல பேத வ்யபேக்ஷயா |
தேவதா தத்வ பேதேந ஞாதவ்யாநி மநீஷிபி: || 

தர்சனங்கள் ஆறே, அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டு பார்க்கும் பொழுது. தேவதை, தத்வம் ஆகிய பேதங்கள் கொண்டு பிரித்தறிதல் அறிஞர் கடன். - என்பது இந்தச் செய்யுளின் பொருள். ஆஸ்திக தர்சனங்கள் ஆறு, நாஸ்திக தர்சனங்கள் ஆறு என்று சநாதன தர்மத்தின் ரீதியாகக் கூறுவர். ஆனால் முதலில் ஆறு தர்சனங்களின் கணக்கு வேறு வேறு வகையாக இருந்திருக்கிறது. ஆனால் எல்லா கணக்கிலும் நியாயம், சாங்கியம், மீமாம்ஸை என்பன இடம் பெறுகின்றன. பௌத்தம், ஜைனம் ஆகிய வழிகளை நாஸ்திகக் கணக்கில் சநாதன தர்மந்தான் சேர்த்து வைக்கிறதே அன்றி ஹரிபத்ரர் என்னும் இந்த மாபெரும் ஜைன ஆசிரியரின் கருத்துப்படி பௌத்தமோ, ஜைனமோ நாஸ்திக மதங்கள் அல்ல என்று தெரிகிறது. இந்தச் செய்யுளை நோக்குக. - 

நையாயிக மதாத் அந்யே பேதம் வைசேஷிகை: ஸஹ, ந மந்யந்தே மதம் தேஷாம் பஞ்சைவாஸ்திக வாதிந: |
ஷட்தர்சன ஸங்க்யா து பூர்யதே தன்மதே கில, லோகாயத மத க்ஷேபாத் கத்யதே தேந தன்மதம் || 

'நியாயம் வேறு வைசேஷிகம் வேறு என்று பிறர் கருதுவதில்லை. அவர்களின் கருத்துப்படி ஆஸ்திக மதங்கள் ஐந்து. அவர்கள் கருத்துப்படி ஆறு தர்சனக் கணக்கு என்பதைப் பூர்த்தி செய்ய லோகாயதம் என்பதை ஒரு தர்சனமாகப் போட்டு வைக்கிறார்கள்.' 

ஹரிபத்ரர் கிட்டத்தட்ட 1400 நூல்கள் ஜைனத்தில் செய்திருப்பதாகச் சொல்லுவர். இல்லை 100 ஏ என்பர் சிலர். இரண்டு ஹரிபத்ரர் உண்டு என்பர் இன்னும் சிலர். 

நூலின் இவரம் - Saddarsana Samuccaya, (A Compendium of Six Philosophies), by Haribhadra, Tr into Eng with notes by Prof K Satchidananda Murthy. Eastern Booklinkers Delhi
pp 120 + x, Second Revised Ed 1986. 

***

தண்டியலங்காரம்

ஆசார்ய தண்டி என்பதை எங்கோ சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் படித்த நினைவு சிலருக்கு வரலாம். அலங்கார சாத்திரத்தில் தண்டி இயற்றிய நூல் மிகவும் பிரசித்தியானது மத்தியகால பாரதத்தில். காவ்யாதர்சம் - என்பது அந்நூலின் பெயர். தண்டியென்பார் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவராய் இருந்து தமிழிலும் நூல் செய்தார் என்பர் ஒரு சாரார். வடமொழி நூலின் தமிழாக்கமாகப் பிறந்தது என்பர் ஒரு சாரார். காவ்யாதர்சத்தில் மூன்று பகுதிகள் உண்டு. காவ்யமார்க்க விபாகம், அர்த்தாலங்காரவிபாகம், சப்தாலங்காரதோஷ விபாகம் என்று மூன்று. நமது தமிழ் தண்டியலங்கார நூலிலும் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பகுதிகள். ஒரு சிறப்புப் பாயிரச் செய்யுள் கூறுகிறது - 

'வடதிசை யிருந்து தென்மலைக் கேகி
மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை
இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த
பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
அணிபெறு மிலக்கணம் அரிதினில் தெரிந்து
வடநூல் வழிமுறை மரபினின் வழா அது
ஈரிரன் டெல்லையின் இகவா மும்மைப்
பாரத விலக்கணம் பண்புறத் தமீஇத்
திருந்திய மணிமுடிச் செம்பியன் அவையத்து
அரும்பொருள் யாப்பி னமைவுற வகுத்தனன்
ஆடக மன்றத்து நாடக நவிற்றும்
வடநூ லுணர்ந்த தமிழ்நூற் புலவன்
பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு
வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
மேவருந் தவத்தினிற் பயந்த
தாவருஞ் சீர்த்தித் தண்டியென் பவனே.' 

இந்த தண்டியலங்காரம் மூலமும் பழைய உரையும் ஸ்ரீவைமுகோ குறிப்புரைகளுடன் குவை பப்ளிகேஷன்ஸ் இரண்டாம் பதிப்பு 1976ல் போட்டார்கள். 

சரி. அலங்காரம் அலங்காரம் என்றால் என்ன? அலம் + காரம்; அதாவது அலம் - பொருத்தமாக கிருதம் - செய்தது. எதற்குப் பொருத்தமாக எதைச் செய்தது? 
சொல்ல வந்த கருத்துக்குப் பொருத்தமாக மொழியைச் செய்தது. அதாவது சொல்ல வந்த கருத்து, பாவம், உணர்ச்சி, நோக்கு என்று அனைத்தும் கேட்பவர்க்கும், படிப்பவர்க்கும் உள்ளத்தில் தோன்றும் படியாகச் சொல்ல எழுத வேண்டுமென்றால் மொழியை சும்மாவாச்சும் லாண்ட்ரி கணக்காகச் சொல்லிவிட்டால் பத்தாது. மொட்டையாக அது வந்துச்சு இது போச்சு என்று இருக்கும். அங்குதான் அலங்காரம் என்பது வருகிறது. அலங்காரம் என்று ஆபரணத்திற்கும் பெயர். ஏன்? நாம் நம்மைப் பற்றி வெளிப்படுத்த விழையும் அழகைப் பொருத்தமாகத் திருத்தி வெளியிடுவதால் அதற்கு அலங்காரம் என்று பெயர். அதை அப்படியே தமிழில் அணி என்று ஆக்கிவைத்து அணியியல் என்று அலங்கார சாத்திரத்தைக் கூறுவர். 

முகவுரை எழுதும் ஸ்ரீ வை மு சடகோபராமாநுஜாசாரியார் கூறுகிறார் - 

"இவ்விலக்கணம் வடமொழியில், தர்க்கம், வியாகரணம், வேதாந்தம் முதலிய சாஸ்திரங்கள் போலவே, பல நூல்களாற் பலவேறுவகையாக விவரிக்கப்பட்டுக் கடல்போலப் பரப்புடைத்தாய் இருக்கின்றது. அந்நூல்களாவன - பாமஹசூத்ரம், வாமநசூத்ரம், காவ்யாதர்சம், ஸரஸவதீகண்டாபரணம், ச்ருங்காரதிலகம், காவ்யபிரகாசம், அலங்காரஸர்வஸ்வம், ரஸதரங்கிணி, ரஸமஞ்சரி, த்வந்யாலோகம், ஸாஹித்யசிந்தாமணி, ஸாஹித்யசூடாமணி, ஸாஹித்யதர்ப்பணம், சமத்கார சந்திரிகை, ப்ரதாப ருத்ரீயம், ஸாஹித்யரத்நாகரம், சந்த்ராலோகம், சந்த்ராலோகத்தின் வ்யாக்யானமான குவலயாநந்தம், சித்ர மீமாம்சை, அலங்காரகௌஸ்துபம், ரஸகங்காதரம், ஏகாவளி, காவ்யதர்ப்பணம் முதலானவையும் அவற்றின் உரைகளுமாம்." 

பொதுவியலும், பொருளணியியலும் ஸ்ரீ வை மு கோ அவர்களது குறிப்புரையுடனும், சொல்லணியியல் அவரது மாணாக்கர் வித்வான் சி ஜகந்நாதாசாரியார் அவர்களது குறிப்புரையுடனும் (1962) சேர்த்து அச்சிட்டிருக்கிறார்கள். பொதுவாக அணியியல் என்னும் அலங்கார சாத்திரத்தில் செய்யுள் நெறி என்பது பற்றிப் பேசுவார்கள். அதாவது வடமொழ்யில் 'ரீதி' என்று பெயர். செய்யுள் நெறி அல்லது ரீதியில் இரண்டு வகை உண்டு. வைதர்ப்ப நெறி, கௌட நெறி. எளிமை முக்கியம் என்று கூறும் வைதர்ப்பம் அதாவது விதர்ப்ப நாட்டு பந்தா. மறைமுகம்தான் காவியத்தின் அழகு என்னும் கௌட நெறி. ஒவ்வொரு ரீதியும் உள்ளடக்கமாக குணங்கள் பத்தினைப் பேசும். இவ்வாறு பத்து குணங்கள் இயலும் செய்யுள் நெறி இரண்டினில் ஒன்றைத் தேர்ந்து அதில் பனுவல் யாத்தல் புலவரது மரபு. அவ்வாறு யாக்கும் பொழுது பல அணிகளைப் பயன்படுத்துவர். தண்டியலங்காரம் 35 அணிகளைப் பேசுகிறது. மாறனலங்காரத்தில் 64 அணிகள் பேசப்பட்டுள்ளன. நல்ல வேளையாக நூலும் உரையும் இணையத்தில் இருக்கிறது. ஆனால் நாம் சொல்லும் இந்தப் பதிப்பு ஸ்ரீ வை மு கோ அவர்களது குறிப்புரைகளுடன் கூடியது ஓர் அரிய பிரதி. 

தண்டியலங்காரம் - மூலமும் பழைய உரையும், வை மு கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றிய குறிப்புரையுடன் 
குவை பப்ளிகேஷன்ஸ், இரண்டாம் பதிப்பு, 1976. மீண்டும் அச்சில் வந்தால் நன்றாக இருக்கும். 

***

நவநீதம்

1929 ஆம் ஆண்டு ஒரு நல்ல காரியம் நடந்தது. ஹிந்து பத்திரிகாசிரியராய் இருந்த ஸ்ரீமான் ஏ ரங்கசாமி அய்யங்கார், ஸ்ரீ என் கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர் தமது சகோதரியான ஸ்ரீ ருக்மணி அம்மாளுக்கு ஞாபகமார்த்தமாக ஒரு சொற்பொழிவுத் தொடர் ஏற்படுத்தினார்கள். அந்த வருஷாந்திர வரிசை எற்பாட்டில் முதன்முதல் 1929ல் வித்யாரத்னாகரம் பண்டிட் வி ஆர் நரஸிம்ஹாசாரியரைக் கொண்டு ஒரு சொற்பொழிவுக் கோவையைச் செய்ய ஏற்பாடாயிற்று. ஸ்ரீ நரஸிம்ஹாசாரியர் செய்த பிரசங்கத் தொடரின் பொருள் என்னவென்றால் பாரத மண்ணில் பெரும்பான்மையாக வழங்கிவரும் வைதிக மதங்களை மட்டும் விளக்கிப் பேசாமல், சார்வாகம், தார்க்கிகம், பௌத்தம், ஜைனம் என்று அனைத்து தர்சனங்களைப் பற்றியும் விளக்கமாகப் பேசியிருப்பது ஒரு விசேஷம். அதைவிடச் சிறப்பு என்னவென்றால் தாம் விசிஷ்டாத்வைத மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தும் அந்த தத்வத்தின் ரீதியாகவே மற்ற மதங்களையும், தத்வங்களையும் பார்த்துக் கண்டனம் தெரிவித்துப் போகாமல் பொதுவாக அனைத்து மதங்களுமே மக்களுக்கு ஒவ்வொரு விதத்தில் நல்ல அம்சங்களைப் போதிக்க வந்தவையேயாம்; எனவே ஒவ்வொரு மத்தினரும் தம்தம் மதத்தில் ஈடுபாடு கொண்டுள்ள போதும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களை வண்டு தேன் சேகரித்துக் கொள்வதைப் போல அல்லாதவற்றைக் கண்டுகொள்ளாமல் அவ்வவற்றில் உள்ள நல்ல அம்சங்களை மாத்திரம் தாம் கொண்டு அவற்றின் பால் கௌரவ புத்தியோடு அணுகுவது சரியான வழி என்று நல்ல நிதானம் பேசுகிறார். அதையே தமது சொற்பொழிவின் அணுகுமுறையாகவும் கைக்கொண்டு பேசியுள்ளார். 

உதாரணமாக பௌத்த மதத்தைப் பற்றிக் கூறும்பொழுது வைதிகர்கள் பொதுவாக புத்தாவதாரம் அசுரர்களை மயக்குவதற்காக ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரம் என்று சொல்வதை மறுக்கிறார் ஆசிரியர். ஏன் அவ்வாறு கூற வேண்டும்? அது ஸ்ரீமந் நாராயணனுக்கே பெருமைதரும் விஷயம் அல்லவே என்கிறார். எல்லாவற்றிலும் சாரமான அம்சங்களைப் போற்ற வேண்டும்; வேண்டாத அம்சங்கள் இருந்தால் தூற்றாமல் விலக்கிவிட வேண்டும் என்பது உதயணாசாரியரிடமிருந்து ஆசிரியர் தாம் பெற்ற வழிநடத்தும் கருத்து என்றும், அதையே அனைவரும் கொள்ளத்தகும் என்றும் கூறுகிறார். பழைய சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு நடுநிலையோடு பொதுவாக மதம் என்ன என்பதையும், பிறமதங்களையும் நன்கு நிதானத்துடனும், அமைதியான புரிந்துணர்வுடனும் நன்கு விளக்கமாகவும் எளிமையாகவும் பேசியிருப்பது அருமை. அதுமட்டுமின்றிப் பல தர்சனங்களையும் பற்றிப் பேசுமிடத்து மிக நுணுக்கமாகச் சில விஷயங்களை ஆசிரியர் அலசும் விதம் அறிஞர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒரு சேர விருந்தாகும். 

அந்தச் சொற்பொழிவுகளை அப்படியே 'நவநீதம்' என்னும் நூல்வடிவில் The Rukmini Lectures 1929 என்னும் உபதலைப்புடன் 1930ல் வெளியிட்டுள்ளார்கள். 
அப்படியே நூலைச் சிறிது தற்காலத் தமிழுக்குத் தக்கவாறு சீர்படுத்தி மீண்டும் வெளியிட்டால் எவ்வளவோ உபகாரமாய் இருக்கும். 283 பக்க நூலுக்குக் குறிப்புகள் தனியாக 68 பக்கங்களுக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர். 

***

Hindu Polity

பண்டைய பாரதத்தின் வரலாறு என்பதைப் பலரும் சிந்தித்துப் பார்த்திருக்கலாம். ஆனால் பண்டைய பாரதத்தின் அரசியல் சட்ட ரீதியான வரலாறு என்பதை எத்தனை அறிஞர்கள் அன்று சிந்தித்திருக்கக் கூடும்! 
ஏனெனில் அரசியல் சட்டம் என்பதே நவீனம், மேற்கு கிழக்குக்குத் தந்த கொடை என்றெல்லாம்தானே நினைத்திருக்கத் தோன்றும். பண்டைய காலத்தில் சட்டம் என்பது என்ன தெய்விக நூல்களில் ரிஷிகளால் சொல்லப்பட்டு என்றும் மாறாத சநாதன தர்மங்களாகத்தானே இருந்திருக்கும். நடுவில் சில மாற்றங்கள் மீண்டும் அதே மாறா நியதி. அவ்வளவுதானே - என்று நினைத்தவர்கள் மத்தியில் பண்டைய பாரதத்தின் அரசியல் சட்டம் என்பதையும், அது எப்படிக் காலத்துக் காலம் மாறியது என்பதையும் ஆழ்ந்த ஆய்வுகளின் பலனாக அறிவுலகம் மெச்ச நிறுவியவர் டாக்டர் காசி ப்ரசாத் ஜெயஸ்வால். 1881ல் மிர்ஸாப்பூரில் பிறந்தவர். 1937ல் அவரது மறைவு. சிறு வயதில் அவரது தந்தை சாஹு மஹாதேவ ப்ரசாத் அவரை லண்டன் மிஷன் ஹைஸ்கூலில் படிக்க விட்டாலும், சம்ஸ்க்ருதக் கல்வியை வீட்டிலேயே ஹண்டியாபாபா என்னும் சாதுவிடம் கற்க வைத்தார். ஹண்டியா என்றால் மட்பாண்டம். வாழ்வின் கடைசி வரை சாதுவிடம் கற்ற வடமொழிக் கல்வியை நினைத்து மிகவும் நன்றி பாராட்டினார் ஜெயஸ்வால். காரணம் மூல நூல்களின் உள்ளே நெடுகப் போகும் சௌகரியம் அவருக்கு இந்தக் கல்வியால் மட்டுமே கிடைத்தது. 1906ல் 25 வயதில் இரு குழந்தைகளுக்குத் தந்தையான நிலையிலும் ஜெயஸ்வால் இங்கிலாந்திற்குப் பயணமானார் மேல்படிப்பிற்கு. அங்கு சியாம்ஜி கிருஷ்ண வர்மா, சாவர்கர் போன்ற இந்திய தேசிய புரட்சியாளர்களின் நட்பு கிடைத்தது. மேலும் சிங்கள அறிஞர் பெருமகனாரான டான் மார்ட்டினோ டி சில்வா விக்ரமசிங்கே என்பவரின் நட்பால் ஜெயஸ்வாலுக்கு பண்டைய நாணயங்களை ஆயும் பயிற்சியும், தொல்பொருள் ஆய்வில் திறமையும் ஏற்பட்டன. ஹண்டியாபாபாவிற்குப் பிறகு தனக்குப் பெரும் ஊக்கம் விக்ரம்சிங்கே என்று நினைத்தார் ஜெயஸ்வால். லண்டனில் பெரும் மொழியியல் வல்லுநரான ஜ்யார்ஜ் ஏ க்ரியர்ஸன், வரலாற்று ஆசிரியர் வி ஏ ஸ்மித் போன்றவர்களின் தொடர்புன் கிட்டியது. பண்டைய இந்தியாவின் அரசியல் சட்ட ரீதியான வரலாறு எழுத வி ஏ ஸ்மித் பெரும் தூண்டூக்கமாக இருந்தார். 

1933ல் History of India 150 AD to 350 AD என்ற நூலை எழுதி இந்திய வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்பட்ட காலப் பகுதி உண்மையில் தெளிவுகள் உள்ள ஆவணப்படுத்தப்பட்ட பகுதியே என்று ஆக்கினார். 1934ல் ஒன்பதாம் நூற்றாண்டு பௌத்த காலவிவரண நூலான ஆர்ய மஞ்சுஸ்ரீ மூலகல்பம் என்ற பிரதியை அடிப்படையாகக் கொண்டு அதை விளக்கி An Imperial History of India என்ற நூலை எழுதினார். 1936ல் நேபாலிய வரலாறு 600கிமு தொடங்கி 800 கிபி வரை என்ற நூல். ஜயசந்த்ர வித்யாலங்கார், மஹாபண்டித ராஹுல சாங்க்ருத்யாயன ஆகிய இருவரின் தொடர்பும் அவருக்குப் பெரும் உதவிகளாக இருந்தன. சாங்க்ருத்யாயனரின் தொடர்பால் திபெத்திய நூல்களின் மூலம் தர்மகீர்த்தியைப் பற்றிய முழுமையான தகவல் அவருக்குக் கிடைத்தது. 

Hindu Polity, A Constitutional History of India in Hindu Times (Parts I and II), IInd Ed, The Bangalore Printing and Publishing Co Ltd, Bangalore City 1943 

அவருடைய இந்த ஹிந்து பாலிடி என்னும் நூல் அரசியல் சட்ட ரீதியிலான சரித்திரம் என்பது எந்த இனத்திற்கும் ப்ரத்யேக உரிமையான ஒன்றன்று என்ற தெளிவில் உதித்த நூல் என்பதைப் பார்ப்போம். 


1924ல் இந்த நூல் வெளிவந்த போது அநேகமாக அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டதாகக் கூறுகிறார் திரு ஜெயஸ்வால் அவர்கள். நான்கு பகுதிகளாகத் திட்டம் போட்டு நூல் அமைந்திருக்கிறது. 

Scheme of the Work 

I Introductory: Scope and Sources 

II Vedic Assemblies 

III Hindu Republics: 

a) Rise and Prosperity 
b) Decline and Disappearance 
c) Their System and Ethnology 

IV Hindu Monarchy and Imperialism 

பகுதி ஒன்று அறிமுகமும், நோக்கமும், ஆதாரங்களும் என்பன பற்றியது. அவற்றைப் பற்றிய விவரமான பொருளடக்கம் - 

1) Scope and Sources 
2) Samiti - The Sovereign Assembly of Vedic Times 
3) The Sabha 
4) Rise of Hindu Republics and Hindu Terms of Republics 
5) Republics in Panini 
6) Republican Origin of Buddhist Sangha and Republics in Buddhist Literature (500 - 400 B C ) 
7) Republics in the Artha - Sastra (325 - 300 B C ) 
8) Hindu Republics in Greek writers (c 325 B C ) 
9) Constitutional Survey of the Hindu Republics in Greek Writers 
10) Technical Hindu Constitutions 
11) Procedure of Deliberation in Hindu Republics 
12) Franchise and Citizenship 
13) Judicial Administration and Laws of Republics 
14) Characteristics of Republics according to the Mahabharata 
15) Formation of New Republics 
16) A retrospect of the period of Rise (Aitareya Brahmana to Kautilya) 
17) Republics under the Mauryas 
18) Republics in Sunga Times and Later 
19) Disappearance of the Republics 
20) Criticism on Hindu Republican Systems 
21) Ethnology of the Republics 

இவையனைத்தும் முதல் பகுதியின் விரிவான பொருளடக்கம். இவ்வாறு நான்கு பகுதிகள். தாம் இந்த நூலில் முக்கியமாகக் கருதுவதற்கு எடுத்துக்கொண்ட விஷயங்களைப் பட்டியல் இடுமிடத்தே இந்த நிரலைத் தருகிறார். 

1) the Sovereign Assembly of the Vedic Times 
2) the Judicial Assembly of the Vedic Times 
3) Hindu Republics (1000 BC - 600 AC) 
4) Hindu Kingship (from the Vedic Times to 600 AC) 
5) the Janapada or Realm Diet, and the Paura Assembly of the Capital(600 BC - 600 AC) 
6) the Council of Ministers under Hindu Monarchy (1000 BC - 600 AC) 
7) Judiciary under Hindu Monarchy (700 BC - 600 AC) 
8) Taxation (1000 BC - 600 AC) 
9) The Hindu Imperial Systems (1000 BC - 600 AC) 
10) Decay and Revival of Hindu constitutional traditions (650 AC - 1650 AC) 

அர்த்த சாஸ்த்ரம் என்னும் நூல் கௌடில்யர் எழுதியது. அப்படியென்றால் பொருள் நூலா? எகனாமிக்ஸா? அந்த நூல் நுவலும் பொருளோ அரசியல், ஊரை ஆளும் முறைமை, நாட்டின் நிர்வாகம். திரு ஜெயஸ்வால் சரியாக கௌடில்யர் எந்த அர்த்தத்தில் தமது 'அர்த்த' என்னும் சொல்லைக் கையாளுகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறார். 

Kautilya defines Artha - Sastra - "Artha is human population, that is to say, territory with human population. The Code of Artha (Common-wealth) is a code dealing with the means(art, upaya) of acquisition and growth of that territory. 

(மநுஷ்யாணாம் வ்ருத்தி: அர்த்த: மநுஷ்யவதோ பூமி: இதி அர்த்த:, தஸ்யா: ப்ருதிவ்யா லாபபாலன உபாய: சாஸ்த்ரம் அர்த்த சாஸ்த்ரம் இதி) 

திரு ஜெயஸ்வாலின் நூல் பண்டைய பாரத அரசாங்க இயலைப் பற்றிய மூல எடுத்துக்காட்டுகள் நிறைந்த பேழை என்று சொல்லத்தகும். முடிவுரையாகக் கூறும்போது திரு ஜெயஸ்வால் கூறுவது - 

This is a brief survey, in fact too brief a survey, of a polity which had a free career of at least thirty centuries of history - a career longer than that of all the politics known to history. Babylon probably lived a few centuries longer, but unfortunately Babylon is no more. Against this we have India still existing, and in this respect China - another civil polity - is her only parallel. 

The test of a polity is its capacity to live and develop, and its contribution to the culture and happiness of humanity. Hindu polity judged by this test will come out very successfully. 

அரசியல் சட்ட அமைப்பின் உள்ளடக்க வடிவ முன்னேற்றம் (constitutional progress) என்பது ஹிந்து அடைந்ததைப் போல வேறு எங்கும் பழைய அரச அமைப்புகளால் அடையப்படவில்லை. அத்துணை பழமை வாய்ந்ததாய் இருந்தும் இன்றும் ஹிந்து உயிர்த் துடிப்புடன் தொடர்கின்றானே அன்றி காலத்தில் உறைந்த உடற்கல்லாய் (fossil) ஆகிவிடவில்லை. Duncker என்னும் சரித்திர ஆசிரியர் கூறியதற்கேற்ப ஹிந்துவின் தாங்கிநிலைக்கும் ஆற்றல் வளையுமே அன்றி ஒடியாது. ஹிந்துவின் அரசியல் சட்ட அமைப்பின் முன்னேற்ற வரலாற்றின் பொற்காலம் அவனுடைய எதிர்காலத்தில் வரவிருக்கிறதே அன்றி வந்து கடந்த காலத்தில் கழிந்து போனதாய் ஆகிவிடவில்லை. -- இவ்வாறு அழகுற சொல்லிச் செல்லும் ஆசிரியர் - 

Constitutional or social development is not a monopoly of any particular race. 

என்று தமது அருமையான நூலை நிறைவு செய்கிறார் டாக்டர் திரு காசி ப்ரஸாத் ஜெயஸ்வால் அவர்கள். இந்தத் துறையில் இத்தகைய சான்று வளம் செறிந்த நூல்கள் மிகவும் குறைவு. எனக்கு நினைவுக்கு வரும் இன்னொரு நூல் India in the Vedic Times by Bhargava. 

***

The Mind of Mahatma Gandhi

மகாத்மா காந்தியைப் பற்றிய இந்தச் சிறு நூல் பெரும் சிறப்பு வாய்ந்தது. காந்தியின் காலத்திலேயே வந்த நூல். முழுதும் காந்தியே பார்த்து ஒப்புதல் அளித்தது. காந்தியின் தத்துவங்களைப் பல தலைப்புகளில் தொகுப்பு நூலாகப் பெருந்தொகை ஒன்று தயார் செய்தார்கள். அது கடைசியில் பல சூழ்நிலைகளின் நெருக்கடியில் இந்தத் தேர்ந்தெடுத்த ரத்தினச் சுருக்க வடிவிற்கு வந்துவிட்டது. தேர்வு சும்மா சொல்லக் கூடாது. அருமை. ஒவ்வொரு காந்தி மொழிக்குப் பின்னும் பெரும் விவாதம் அடங்கியிருக்கிறது. பெரும் விசாரம் உள்ளோடித்த்தான் அந்த மொழி வந்திருக்கிறது என்பது நன்கு தெரியும்படியான மொழி முத்துகளாகப் பார்த்துத் தொகுப்பது ஒரு கலை. அந்தக் கலையில் நன்கு தேர்ந்தவர்கள் R K Prabhu and U R Rao. வெளிவந்த ஆண்டு மார்ச் 1945. இரண்டாவது பதிப்பு அக்டோபர் 1946. ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்ஸிடி பிரஸ், இந்தியா கிளை அன்று இதைக் கொண்டிவந்திருக்கிறது. முன்னுரை சர்வபள்ளி ஸ்ரீராதாகிருஷ்ணன் அவர்கள். Neither Saint nor Sinner, My Mahatmaship, I know the Path, The Gospel of Truth, Truth is God, Prayer, the food of my soul, The Inner Voice, Truth and Beauty, My Inconsistencies என்று இவ்வண்ணமாக 36 தலைப்புகளில் காந்தியின் கருத்துலகத்தை நமக்கு ஸ்படிகப் படுத்துகிறார்கள் தொகுப்பாசிரியர்கள். 
முன்னுரையில் ஒரு முக்கியமான கருத்தைக் கவனப்படுத்துகிறார் சர் ராதாகிருஷ்ணன். திறமையான அரசியல்வாதிக்கும், தீர்க்கதரிசியான அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறார். 

There are many who dismiss Gandhi as a professional politician who bungles at critical moments. In one sense politics is a profession and the politician is one trained to transact public business in an efficient manner. There is another sense in which politics is a vocation and the politician is one who is conscious of a mission to save his people and inspire them with faith in God and love of humanity. Such a one may fail in the practical business of government but succeed in filling his fellows with an invincible faith in their common cause. (Pp V) 

காந்தி எனக்குப் புரியாத ஒரு புதிர் என்று முன்னம் ஓர் இழையில் எழுதியுள்ளேன். அதை இங்கு மீண்டும் பகிர்கிறேன். 

"அவதாரம் அன்று. கடவுளிடமிருந்து வந்த தூதரும் அன்று. நம்மைப் போல், நம்மைப் போல் என்றால் நம்மைப் போலவேதான், ஒரு மனிதன். அவனுக்கும் பிறந்தவுடன் ஏதோ சங்கேதங்கள் எல்லாம் எந்த சமிக்ஞைகளாலும் தெரிவிக்கப் படவில்லை. அவன் நான் தான்; நீங்கள்தான்; தோ அவர்தான். 

ஆனால் என்ன! திடீரென்று சத்தியம், அஹிம்சை என்ற இரண்டை முரட்டுத்தனமாகப் பற்றிக் கொண்டான். Total Committment இத்தனைக்கும் ராஜ யோகத்தின் படி அஷ்டாங்க யோகாரூடத்தில் முதல் படிக்கட்டு சமம் தமம்.
உள்ளே தோன்றும் புலனிச்சைகளைச் சமனப் படுத்தல்; வெளியில் சென்று பாயாதபடி புலன்களைக் கட்டில் நிறுத்துதல். இந்தப் படிக்கட்டில் சம தமங்களில் சேர்ந்த ஓரிரு நியமங்கள்தாம் சத்தியம், அஹிம்சை. ஆன்மிக உச்சிக்குப் போய்ச்சேர கடைசி நிலை சமாதி நிலைக்குப் போக இன்னும் ஏகப்பட்ட படிக்கட்டு. அதில் அநாயசமாக ஏறி விளையாடிய மகனீயர்கள் எனக்குப் புதிராகத் தெரியவில்லை. ஆனால் மோகன் தாஸ கரம் சந்திர காந்தி எனக்கு இன்று வரையிலும் புதிராகத்தான் இருக்கிறார். இனியும் அப்படித்தான் இருப்பாரோ அறியேன். எதில் புதிர்? அவரை மகாத்மா என்பதில் புதிரா? அல்லது திரு எம் கே காந்திஎன்பதில் புதிரா? அவரை மகாத்மா என்பதில் எந்தப் புதிரும் எனக்கு எழவில்லை. செயற்கரிய செய்வர் பெரியோர் ஆகலின் அப்பெற்றியர் யாவரே ஆயினும் மகாத்மா என்று சொல்வது ஒன்றும் இடைஞ்சல் இல்லை. அதை அவர் மறுத்தார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அதை 'அவர்' மறுத்தார் என்னும் பொழுதுதான் என் கவனம் முழுதும் அந்தப் பதத்தின் பால் குழிகிறது. காரணம் வெறுமனே அடக்கமாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒன்றை மறுதலிக்கும் நபர் இல்லை அவர். அப்பொழுது அவர் மறுதலிக்கிறார் என்றால் அந்த மகாத்மா என்ற பதத்திற்கு இருக்கும் உண்மையான பொருள் ஆழம் என்னை அவர் பார்வையில் ஒன்றச் செய்கிறது. 

ஆனால் இந்த மனிதன் தன்னிடம் இருக்கும் 'அந்த நொய்ந்த போக்கினை'த் தாமேதான் ஒளிவு மறைவின்றி ஒரு மருத்துவத் தூய்மையோடு எழுதுகிறார். தாம் அதனோடு போராடுவதாக அவர் கூறும் பொழுது நாம் எதையோ செயித்து விட்டோம் என்ற உணர்வினை அடைகிறோம். ஆம் கள்ளம் கபடம் சூது மறைமுகம் என்ற இருட்டுகளுக்கு ஆடுகளமாக ஆக்கப்பட்ட காமம் என்பது அவருடைய சத்திய சோதனையின் முன் மீண்டும் எரியுண்டு கட்புலனாகி நடுங்குகிறது. ராமனாக வேடம் பூண்டு நீ சீதையிடம் போய்ப் பேசிப் பாரேன் என்று யாரோ ராவணனுக்கு உத்தி கூற அதற்கு ராவணன், "அந்தோ! நான் என்ன செய்வேன்? ராமனாக வேடம் பூண்டால் என் மனத்தை விட்டுக் காம உணர்ச்சி முற்றிலும் மறைந்து விடுகிறதே! உலகத்தை எல்லாம் பிரம்ம பாவமாகக் காணும் பார்வைதான் மிஞ்சுகிறது. எனவே அந்த வேடம் மட்டும் போட மாட்டேன்' என்றானாம். இது உண்மையில் நடந்திருக்கும் என்று எனக்குக் காந்தியைப் படிக்கும் பொழுதுதான் தோன்றுகிறது. 

கோட் சூட் போட்டவர் திடீரென்று கதராடை, முழங்கால் வேட்டி, மேலே போர்த்தியபடி ஒரு மேல் துணி என்ற உடையலங்காரத்துக்கு மாறினார். 'பாதி நிர்வாண பக்கிரி' பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அஸ்தியில் புளியைக் கரைத்தார். 
இங்கு முனியன் குடிசையில் ராட்டினம் சுத்தினால் மான்செஸ்டரில் ஆலைகள் நிக்கும் என்று எப்படிக் கண்டுபிடித்தார்? பாதயாத்திரையாய் நடந்து சென்று ஒரு பிடி உப்பை அள்ளினால் அது யுனைடெட் கிங்டம் வாயில் போட்ட வாக்கரிசியாய் ஆகும் என்று எந்த யட்சிணி இவருக்கு வந்து சொல்லியது.? 
ஆள்கட்டு, அடிதடி, கொள்ளை, தகிடுதத்தம், அநியாயம் இவையில்லாமல் அரசியல் நடத்த முடியாது என்பதை அறிவாளிகளே ஒரோவழி ஒப்புக்கொண்டு மாக்யவில்லியையும், கௌடின்யரையும் சப்பைக் கட்டுக்குக் காட்டிக் கொண்டிருந்த காலத்தில் ஆத்ம பலத்தை மட்டுமே நம்பி, சத்யம், அஹிம்சை ஆகிய இரண்டை மட்டுமே ஆயுதமாகவும், கவசமாகவும் கொண்டு சத்யத்தின் ஆக்ரஹத்தை போர்முறையாய் அறிவிப்பான் ஒருவன் என்றால், அதன்படியே தானும் நடந்து, அதுமட்டுமில்லாது பல்லாயிரக் கணக்கான பிரிவினைகள் உள்ள பல கோடி மக்களையும் 'உஸ்' உஸ்' என்று ஒற்றை விரலை அசைத்தே ஒருமிப்பான் அந்த வழியில் என்றால், எனக்குப் புதிரானவன் என்பதில் என்ன ஐயம்? The riddle of Gandhiji's mind is the riddle of his soul. - என்று தொகுப்பாசிரியர்கள் கூறுவது அருமையான வாசகம். 

மகாத்மா என்ற பட்டம் அவரை மிகவும் படுத்தியிருக்கிறது. 

The only virtue I want to claim is Truth and Non-violence. I lay no claim to superhuman powers. I want none. I wear the same corruptible flesh that the weakest of my fellow-beings wears, and am, therefore, as liable to err as any. My services have many limitations, but God has up to now blessed them in spite of the imperfections. 

கடவுள் மீதும், மனித இயல்பின் மீதும் அவருக்கு இருந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன? 

Somehow I am able to draw the noblest in mankind, and that is what enables me to maintain my faith in God and human nature. 

ராமநாமத்தைப் பற்றியும், துளஸிதாஸரைப் பற்றியும் மகாத்மா கூறுவது - 

When a child, my nurse taught me to repeat Ramanama whenever I felt afraid or miserable, and it has been second nature with me with growing knowledge and advancing years. I may even say that the Word is my heart, if not actually on my lips, all the twenty-four hours. It has been my saviour and I am ever stayed on it. In the spiritual literature of the world, the Ramayana of Tulsidas takes a foremost place. It has charms that I miss in the Mahabharata and even in Valmiki's Ramayana. (pp 33) 

பிரார்த்தனை பற்றி - 

Prayer is the key of the morning and the bolt of the evening. 

It is better in prayer to have a heart without words than words without a heart. 

காந்தி என்றால் நினைவுக்கு வருவது உண்ணாவிரதம், சத்தியம் - அஹிம்சை என்ற இரட்டை நன்மைகளுக்கு அடுத்தபடியாக. எப்பொழுது வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் கடைப்பிடிக்கலாம் என்பது காந்தியின் எண்ணமா? இல்லை - 

Fasting can only be resorted to against a lover, not to extort rights but to reform him, as when a son fasts for a father who drinks. My fast at Bombay and then at Bardoli was of that character. I fasted to reform those who loved me. But I will not fast to reform say, General Dyer, who not only does not love me, but who regards himself as my enemy. (pp 114) 

சுதந்திரத்திற்காகப் போராடிய காந்திக்கு நோக்கம் சுதந்திரத்தோடு முடிந்து விடவில்லை. - 

My ambition is much higher than independence. Through the deliverance of India, I seek to deliver the so-called weaker races of the earth from the crushing heels of Western exploitation. (pp 169) 

மிக அருமையான தொகுப்பு நூல் என்பது நூல் முழுவதும் தெரிகிறது. 

***

நளவெண்பா

நளவெண்பா இதற்கு ஒரு விருத்தியுரை எழுதியுள்ளார் ஸ்ரீ ஆறுமுகஞ் சேர்வை அவர்கள். மதுரை ஜில்லா செம்பூர் வித்வான். இதற்கு உறுதுணை உதவி மதுரை அமெரிக்கன் காலேஜ் தலைமைத் தமிழாசிரியர் ஆ கார்மேகக் கோனாரவர்களும், மதுரை ஸௌராஷ்ட்ர ஹைஸ்கூல் தலைமைத் தமிழாசிரியர் பு சிதம்பர புன்னைவனநாதமுதலியாரவர்கள். அச்சிட்டது மதுரை கோபாலகிருஷ்ண கோனாரால் 1929ல். அன்றைய விலை ரூ2ம் எட்டு அணாவும். உண்மையிலேயே என்ன அருமையான உரை! எவ்வளவு விஷயங்கள் மாணக்கர்களுக்குச் சொல்கிறார்கள், தமிழ்க் கல்வி அன்று இருந்த நிலை. 

புகழேந்திப் புலவரின் வெண்பா கேட்கவா வேண்டும்! ஒட்டக்கூத்தருக்கும், புகழேந்திக்கும் நடந்த புலமைச் சண்டைகள், ஒட்டக்கூத்தரின் அடாவடித்தனம் எலலாம் முன்னுரையில் கூறுகின்றார்கள். அதுவே ஒரு தமிழ்க்கல்விதான். அந்தக் கால அரசனுக்கு இரண்டு புலவர்களுக்கிடையில் மூட்டிவிட்டுக் கவிதை வாங்குவது ஒரு பொழுது போக்கு போலும்! 
ஒட்டக்கூத்தரோ புகழழேந்தியைச் சிறையில் போடச் செய்துவிட்டார். ஒரு நாள் பவனி. சிறைச் சாலையின் சன்னலிலிருந்து வேடிக்கை பார்க்கிறார் புகழேந்தி. அரசனோ அவரைக் காட்டி ஒட்டக்கூத்தருக்கு 'ஓ வித்வானே! அதோ நிற்கும் புகழேந்தி புலமையி மிகச் சிறந்தவரல்லவா!' என்றார். உடனே கூத்தர், 

மான் நிற்குமோ, இந்த வாளரி வேங்கை முன்?
வற்றிச் செத்த கான் நிற்குமோ இவ்வெரியும் தழல் முன்?
கனைகடலின் மீன் நிற்குமோ இந்த வெங்கட் சுறவமுன்?
வீசுபனி தான் நிற்குமோ இக்கதிரோன் உதயத்தில்?
தார்மன்னனே! 

என்று பாடினார். அரசனை நோக்கிப் புகழேந்தி, 'மன்னா! இதை நான் வெட்டிப்பாடவா? ஒட்டிப் பாடவா?' என்றார். ஒட்டிப்பாடுக என்றதும், 

மான் அவன்.
நான் அந்த வாளரி
வேங்கையும் வற்றிச் செத்த கான் அவன்.
நான் அவ்வெரியும் தழலும்.
கனைகடலின் மீன் அவன்
நான் அந்த வெக்கட் சுறவமும்
வீசுபனி தான் அவன்
நான் அக்கதிரோன் உதயமும்.
தார்மன்னனே! 

என்று பாடினார் புகழேந்தி. 

***

தர்க்காம்ருதம்

தர்க்காமிருதம் - என்று ஒரு நூல். வடமொழியில் செய்தவர் ஜகதீச பட்டாசாரியார். (16 - 17 நூற்) இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யாழ்ப்பாணத்து ஸ்ரீதிருஞானசம்பந்தப் பிள்ளை அவர்கள். இவர் ஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களுக்கும், அவரது மருகரும், மாணாக்கருமாகிய ஸ்ரீபொன்னம்பலம் பிள்ளை அவர்களுக்கும் மாணவர். தருக்காமிருதத்தை அவர் அச்சிட்ட காலம் கி பி 1883. அதனை திருவாவடுதுறை ஆதீனம் 1967ல் வெளியீடு எண் 225 ஆக வெளியிட்டது. 32 + 75 பக்கங்கள் கொண்ட சிறு நூலாயினும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்புப் படைப்பு நூல். நியாய வைசேஷிகம் ஆகிய இரு தரிசனங்களும் இணைந்து 16 ஆம் நூற் பிறகு தருக்கம் என்று அழைக்கப்பட்டது. அதாவது தருக்கம் என்பது இரு தரிசனங்களின் கூட்டுப் பெயர் எனலாம். இந்தத் தருக்க சாத்திரத்தை 300 வருடங்களாக நம் தமிழகத்தில் பலர் பல வடமொழி நூல்களைத் தமிழில் ஆக்கி உதவினர். 

தர்க்க பரிபாஷை என்னும் நூல் 1040 வருடங்களுக்கு முன்னர் கௌதமரின் நூலை முதல் நூலாகக் கொண்டு கேசவ மிசிரர் என்னும் மைதில கௌடரால் செய்யப்பட்டது. இதற்கு கௌரீகாந்தீயம், தாமோதரீயம், கோவர்த்தனீயம் என்னும் உரைகளோடு சுமார் 23 உரைகள் ஏற்பட்டுள்ளன. இந்த தர்க்க பரிபாஷையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் துறைமங்கலம் சிவபிரகாச சுவாமிகள் 17ஆம் நூற். இனி தர்க்க சங்கிரகம் என்னும் நூலைத் தமிழில் 'பதார்த்த தீபிகை' என்னும் பெயரால் தமிழ்ச் செய்யுள் வடிவில் செய்தவர் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் ஸ்ரீமுருகேச பண்டிதர் என்பவர் 20 ஆம் நூற் தொடக்க காலத்தில். இந்த செறிந்த மரபில் 'தர்க்காமிருதத்தை' தமிழாக்கி உதவியவர் திருஞானசம்பந்தப் பிள்ளை. 

ஆதீனம் இது போன்ற நூல்களை காலத்தில் மறைந்து விடாமல் மீண்டும் அச்சிட்டுக் காக்க வேண்டும், ஏற்கனவே அச்சில் இல்லாமல் இருந்தால். 
நூல், முகவுரை, அகத்தியத் தருக்கச் சூத்திரம், தர்க்க நூல் வரலாறு, மொழிபெயர்ப்பாசிரியர் வரலாறு, தருக்கக் கண்ணாடி, பதிவணக்கம், ஆரம்பம், பதார்த்தம், திரவிய நிரூபணம், குண நிரூபணம், கரும நிரூபணம், சாமானிய நிரூபணம், விசேட நிரூபணம், சமவாய நிரூபணம், அபாவ நிரூபணம், பிரத்தியக்க நிரூபணம், அநுமான நிரூபணம், உபமான நிரூபணம், சத்த நிரூபணம், சொற்பொருளகராதி என்ற தலைப்புகளில் சுருக்கமாகவும் நிறைவாகவும் நியாய வைசேஷிகக் கலவையாகிய தருக்க நெறியைப் பற்றிய வடமொழிச் சுருக்க அறிமுகத்தைத் திறம்படத் தமிழில் தருகிறது. 

***

Weather Wisdom

Mavis Budd என்பவர் எழுதியிருப்பது. 64 பக்கம். 3 பவுண்டுக்குக் கம்மி விலை. லண்டன் Piatkus என்ற பதிப்பக வெளியீடு. கைக்கடக்கமான டயரி போன்ற நூலில் என்ன விவரம்! அக்னாலட்ஜ்மண்டில் மேவிஸ் பட் கூறுகிறார். 

I would like to acknowledge the wisdom of all the country people of the past who have been responsible for the existence of weather lore... and especially that of the farmers and gardners, the shepherds and the ploughmen and the women they were married to, known as the Old Wives. 

இதற்கு மேல் இந்த நான்கு நூல்களுக்குமே என்னால் பழைய மக்களுக்கு கடப்பாடு கூறிவிட முடியாது. அவை பிழையாகப் போகக் கூடும். அது முக்கியமில்லை. ஆனால் தங்கள் காலங்களில் கருத்தூன்றிச் சில விஷயங்களைப் பதிந்து வைத்தார்களே, அவை அபிப்ராயமோ, சரியான தரவுகளோ. அந்த அறிவின்பாற்பட்ட அக்கறையும், முயற்சியும் என்றும் நம் நன்றியை வேட்பன. 

தட்ப வெட்பம இருந்தே தீரும். கூடுதலோ குறைச்சலோ. 

Whether it's cold or whether it's hot
We shall have weather, whether or not. 

என்கிறார் மேவிஸ் பட். 

வெயில் வேண்டும் என்று ஒரு சாரார் விரும்பினால், மழை வேண்டும் என்று ஒரு சாரார் விரும்புவர். எல்லாருக்கும் ஒவ்விய தட்ப வெட்பம் எங்குமே ஆகாது. 

The farmer and the gardner
Are both at church again
One to pray for sunshine
One to pray for rain. 

காற்றைப் பற்றிச் சில சொலவடைகள் -- 

If a gusty wind blows the trees about so the undersides of the leaves are revealed, it is a sign of rain. 

இலைகளைப் புரட்டிக் காட்டுவது போல் பெருங்காற்று அடித்தால் மழை வரும். 

If dry leaves swirl round on the path, or in a yard, it is certain that rain is about. 

நடுச்சாலையில், குறட்டில் இலை தட்டாமாலை ஆடினால் தட்டாமல் மழை வரும். 

சாவித் துவாரத்தில் காற்று சீழ்கை அடித்தால் மழை வரும் -- இது நம் நாட்டில் எவ்வளவு பொருந்தும் தெரியவில்லை. கிராமங்களில் சில அறிகுறிகள் மழை வருவதற்கு -- 

Ducks and geese are unusually noisy. 

The pigs are uneasy. 

Spiders crawl about on the walls of the house. 

Ditches and drains smell. 

Old wounds ache. 

ஒரு பாட்டி இடி வரும் என்று எப்படிக் கண்டுபிடிப்பாளாம் -- வயத்தைக் கலக்கறது என்னமோ. நிச்சயம் இடி வரும். நாமே, மனிதர்களே ஒரு விதத்தில் தட்ப வெட்ப அறிகுறிகளாகச் செயல்படுகிறோமாம். மழை வரும் எப்பொழுது நமது -- 

bones and joints ache 

scalps itch 

noses irritate 

scars and old wounds ache 

ears drum 

noises develop in the head 

மிருகங்கள் கேட்கவே வேண்டாம் 

sheep bleat persistently 

cats will wash themselves more carefully, bringing their paws right over ears and noses. 

மழை காலத்தில் சிலந்தி கூட்டைச் சரி செய்தால் நிச்சயம் மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கும் என்று பொருள். பறவைகள், பூச்சிகள் எல்லாம் அறிகுறிகள் காட்டுகின்றன. அதாவது உலகமெங்கும் தகவல், முன்கூட்டிய ஜோதிடக் கணிப்புகள் எல்லா உயிரினங்களும் பரிமாறியவண்ணம் இருக்கின்றன. பாழாய்ப் போன மனித இனம் மட்டும் வெட்டி வேலைகளில் காலத்தை வீணடிக்கிறது. ஒன்றுமில்லை வெங்காயம் என்கிறோம். அந்த வெங்காயம் கூட என்ன தகவல் களஞ்சியம் தெரியுமா? 

Onion skins very thin
Mild winter coming in
Onion skins thick and tough
Coming winter cold and rough. 

அருமையான ஒரு வெதர் பாரோமீட்டர் பற்றி மேவிஸ் பட் கூறுகிறார் -- பாட்டிக்கை பாரோமீட்டர். Seaweed ஒன்றைக் கட்டித் தொங்க விட்டால் -- மழை வரும் என்றால் தோய்ந்து துவண்டு போகும். நல்ல க்ளைமேட் என்றால் காய்ந்து சருகாகும். 

Weather Wisdom, Mavis Budd, PIATKUS 1986. 

***

குதிரை நூல்

குதிரைகளைப் பார்த்து அதன் துள்ளல்களையும், விரைந்த பாய்ச்சல்களையும், லாகவமான நடைகளையும் கண்டு வியக்காதவர் இருக்க முடியுமா? 
சாண்டில்யன் நாவல்களில் குதிரை வீரர்களின் உலகங்கள் மலைச்சரிவுகளில், பிரதான சாலைகளில், காடுகளில் அற்புதமாக வர்ணிக்கப்படும் போது, அடேயப்பா...! குதிரைகளைப் பற்றிய சாத்திரம் ஏதாவது இருக்குமா என்று யோசித்ததுண்டு. இருக்கிறது அப்படி ஒரு சாத்திரம். அசவ சாஸ்த்ரம். - தஞ்சை சர்ஸ்வதி மஹால் தொடர் வெளியீடுகளில் நம்பர் 56. 1952 ஆம் ஆண்டு வெளியானது. தஞ்சை மஹாராஜா சர்ஃபோஜி சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. 

இந்த அச்வ சாஸ்த்ரம், நகுலன் என்பவரால் எழுதப்பட்டது. இவர் பாண்டவர்களில் ஒருவரான நகுலனே என்கிறது நூல். சாலிஹோத்ரர், ஸுச்ருதர், கர்கர் ஆகியோரின் நூல்களிலிருந்து கருத்துகளைப் பாமரர்களும் எளிதில் அறிந்துகொள்ளும் படியாக இந்த நகுலரின் நூல் கூறுவதாக முகப்பில் தெரிவிக்கப்படுகிறது. வடமொழியில் உள்ள இந்த நூலை பதிப்பித்தவர் திரு கோபாலன். திரு ஸ்வாமினாத ஆத்ரேயன் அவர்களின் கடும் உழைப்பு நூலை நன்கு உருவாக்கியிருக்கிறது. திரு சுப்ரமண்ய சாஸ்திரிகளின் தமிழாக்கம் மிக எளிமையாக இருக்கிறது. ஆங்கிலத்திலும் நூலின் சுருக்கம் தரப்பட்டு சிறப்படையச் செய்கிறது. இந்தச் சுவடி வண்ணப் படங்களுடன் கூடிய சுவடி. எனவே பலவித குதிரைகளின் வண்ணப் படங்கள், குதிரை உபகரணங்களின் படங்கள் எல்லாம் சேர்ந்து நூலை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகின்றன. 

குதிரைகளின் பெருமை, ரைவதர் துதி, குதிரை இறக்கை இழந்த வரலாறு, உடலமைப்பு, அங்கங்களின் இலக்கணம், அசுவ இலக்கண வகுப்பு, வயது முறையும் அங்க வகுப்பும், ஆவர்த்தங்கள், சித்திரவர்ணக் குதிரைகள், புண்டிர லக்ஷணங்களும் பலன்களும், புஷ்ப லட்சணம், குதிரை கனைப்பின் பலன், குதிரையின் மணமும் பலனும், குதிரை சாயையும் பலனும், நடை இலக்கணம், ஸத்துவ (தன்மை) இலக்கணம், முற்றும் தவிர்க்க வேண்டிய தோஷங்கள், கன்னத்தின் நிறமும் பலனும், ஜாதிக் குதிரைகள், வயதறியும் வகை, நிற இலக்கணம், அரசனுக்கேற்ற குதிரை, ஆயுள், குதிரை உணர்த்தும் பெருங்கேடுகள், குதிரைகளைப் பழக்கும் விதம், குதிரைகளின் நடை, க்திரை ஏற்றம் ஆகிய தலைப்புகளில் நூல் குதிரையைப் பற்றித் தெரிவிக்கின்றது. 

குதிரைகளின் மனோதத்துவம் பற்றி அநுபந்தம் கூறுகிறது. சாலிஹோத்திர வைசம்பாயனீயம் என்ற ஸாரஸிந்து என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறார்கள். சில விஷயங்கள் மிக சுவாரசியமானவை. 

-- குதிரையில் ஏறியவன் ஒருவித ஆபத்தும் நேராத பொழுது கீழே விழுந்தால் குதிரை சிரிக்கும். 

அரசன் முடிசூடும் பொழுதும், கொள்ளு தின்னும் பொழுதும், மாலை கொள்ளு தின்னும் பொழுதும், மணி ஓசை கேட்கும் பொழுதும், நல்ல மனதுடையோன் ஏறும் பொழுதும் குதிரை சந்தோஷமடையும். 

கலவி, ருதுகாலம், யுத்தம், வெற்றி, யாகம், தீனி, திறமையுள்ளவனின் ஏற்றம், கூட்டத்தை விட்டுப் பிரியும் காலம், புதுக்குதிரையைக் காணும் சமயம் இவைகளில் குதிரை கனைக்கும். 

தனக்குச் சமமான வேகமற்ற குதிரையுடன் ஓட நேரும் போது வெட்கம் கொண்டு புழுதியை வாரி இறைக்கும். 

-- இவை சில மாதிரிக்கு. 
குதிரைகளின் வயது பற்றி சாலிஹோத்திரர் கூறுவது - மனிதனுக்கு நூறு, யானைக்கு நூற்றி இருபது, பசுவிற்கு 24, கழுதை ஒட்டை - 25, நாய் - 16, நரி - 25, புழு - 7 நாள், ஈ - 14 நாள், குதிரை -- 32 வருஷங்கள். 

மத்தம், அவி, காச்யம், அச்மகேயம், மாலிகம், சுவேதவாகனம், மேசகம், சுவேதகிரிஜம், வைதர்பம் ஆகிய ஒன்பது ஜாதிக் குதிரைகளும் 'கோடகம்' என்னும் வகையில் அடங்கும். 

இப்படி ஒரு நூல் என் சேகரிப்பில். இதைப் போல் கஜ சாத்திரம் என்று ஒன்று. அது எங்கு போயிற்றோ தெரியவில்லை. கண்ணில் பட்டால் சொல்கிறேன். 

***

Friday, October 22, 2021

கடவுளின் இயல்பு -- மூலசித்தி

 கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன் தமிழில் சுமார் 146 செய்யுள் நூல்கள் வேதாந்த தத்துவம் சார்ந்தவை இருந்திருக்கின்றன. ஸ்வயம்ப்ரகாசர் என்பார் தாம் தொகுத்த ஸ்ரீசிவப்ரகாசப் பெருந்திரட்டு என்னும் நூலில் தருகின்ற குறிப்புகளால் இதை அறிகிறோம். அதில் பல நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. அதில் ஒரு நூல் மூலசித்தி என்பது. அதில் ஒரு பாடல் கடவுளின் இயல்பு எப்படி இருக்குமென்று சொல்கிறது.

கடவுளின் இயல்பா? அஃது உயிரினுக்கு உயிர் போன்று இருக்கும். உடல் என்றால் அதில் உணர்வுதானே அர்த்தம் உடையதாக ஆக்குகிறது? கடவுளின் இயல்பு உடல் போன்ற இந்த உலகில் உணர்வு போன்றது.
ம்.. ம்.. இன்னும் புரியவில்லையா.. மயக்கம் மனத்தில் நிறைந்திருக்கிறது அல்லவா? அந்த மயக்கத்தை நீக்கி அறிவு திகழும்போது எப்படி இருக்கும்? கடவுளின் இயல்பும் மயலை நீக்கும் அறிவு போல் இருக்கும்.
??
அவ்வளவு ஏன்? இருள் அடைந்து கவிந்த வல்லிருளை காலைக் கதிர் ஒளி வந்து ஒரே நொடியில் இல்லாமல் ஆக்குகிறது அன்றோ! ஆம். அதுபோல் அறியாமை இருளை நீக்கும் ஞான ரவிதான் கடவுள்.
**#$*((...?
சரி. இப்படிச் சொல்லிப் பார்ப்போம். கயவருக்கு இருட்டாய் இருப்பது கடவுள்.
ஆனால் கடவுள் காதல் கொண்டோர்க்கோ அருள் கண்ணாக இருப்பதும் கடவுளேதான்.
நான் உய்யவேண்டி அருளும் நாதனாகிய கடவுளின் இயல்பு இப்படி இருக்கின்றது. கொஞ்சம் மனம் வைத்துப் புரிந்து கொண்டால் பெரும் லாபம் உண்டு.
‘உயிரினுக்கு உயிரதாகும்
உடலினுக்கு உணர்வதாகும்
மயலினுக்கு அறிவதாகும்
வல்லிருட்கு இரவியாகும்
கயவருக்கு இருளதாகும்
காதலர்க்கு அருளும் கண்ணாம்
உயவெனக்கு அருளும் நாதன்
ஓங்கு இயல் இருக்குமாறே.’
(மூலசித்தி)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

விக்கிரக ஆராதனை

விக்கிரக ஆராதனையைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
நான் ஞானியார் இல்லையப்பா! என்னைப் போய் இதையெல்லாம் கேட்கிறியே?
இல்லப்பா! நண்பர் என்ற முறையில்தான் சொல்லேன். எதைக் கேட்டாலும் மறு கேள்வி போட்டே ஆகணுமா?
இருக்கட்டும். இப்ப ஒன்று சொல்கிறேன். இதற்கு நீர் என்ன நினைக்கிறீர் என்று சொல்லும்! ‘கங்கையாற்றில் உள்ள முதலைக்குப் பெயர் சிசுமாரம். அந்த வடிவில் விண்வெளியில் இருக்கும் நக்ஷத்ர கூட்டங்கள், அண்டங்களின் தொகுதிக்கு சிசுமாரம் என்று பெயர். அந்த வடிவத்தில் இருப்பது விஷ்ணு. விஷ்ணுவின் வால் ஓரத்தில் இருப்பது துருவன் என்னும் நக்ஷத்திரம். ‘தாராமயம் பகவத: சிசுமாரம் ஆக்ருதி: ப்ரபோ: திவி ரூபம் ஹரேர் யத்து தஸ்ய புச்சே ஸ்திதோ த்ருவ:’ விஷ்ணு தாமும் சுற்றி மற்றவற்றையும் சுற்ற வைக்கிறார் அந்த ரூபத்தில் இருந்துகொண்டு. சூரியர் சந்திரர் தாராகணங்கள் எல்லாம் சுற்றுகின்றன. சுற்றும் இவையெல்லாம் துருவனோடு எப்படிக் கட்டப் பட்டிருக்கின்றன? புகைவாயு ரூபமான பந்தத்தினால். ’வாதாநீகமயைர் பந்தைர் த்ருவே பத்தாநி தாநி வை’ சிசுமார வடிவில் இருக்கும் இந்த ஜோதிரூபமாக இருக்கும் நாராயணரே பரம் தாமம். தாமே இவையெல்லாவற்றின் ஆதாரமாக இருக்கிறார். ‘சிசுமார ஆக்ருதி ப்ரோக்தம் யத்ரூபம் ஜ்யோதிஷாம் திவி | நாராயண: பரம் தாம தஸ்ய ஆதார; ஸ்வயம் ஹ்ருதி ||’‘
இந்த வடிவம் பற்றி என்ன சொல்கிறீர்? இதுவும் விக்கிரகம்தான். பிரம்ம புராணத்தில் வருகிறது.

அண்ட வெளியில் சிசுமார வடிவமான நக்ஷத்திர, அண்டங்களின் கூட்டமே ஒன்று சேர்ந்து விஷ்ணுவின் வடிவாகவும் இருக்கிறது என்றால் அந்த விக்கிரகத்தை நினைப்பதற்கே மனம் ஆயாசமாக இருக்கிறது. ஏன் சூரியன், இந்தச் சூரியனே ப்ரத்யக்ஷமான பிரம்மம். இதுவே அனைத்தையும் சிருஷ்டிக்கிறது. ஆதித்யனாகிய இந்த ஞாயிறு பன்னிரு வடிவம் பூண்டு இந்த உயிர்ப்பொருளும், உருப்பொருளும் நிறைந்த உலகைப் புரக்கிறது. ஆதித்தியனுடைய பன்னிரு வடிவங்களோ இந்திரன், தாத்ரு, பர்ஜன்யன், த்வஷ்டா, பூஷன், அர்யமன், பகன், விவஸ்வான், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன் என்பவையாகும்.

இந்திரனாக இருந்து தேவர்களின் விரோதிகளை அழிக்கின்றார். தாத்ரு என்னும் வடிவத்தில் பிரஜாபதியாக உயிர்களைப் படைத்துக் காக்கின்றார். பர்ஜன்யன் என்னும் வடிவத்தில் மேகங்களில் இருந்து கொண்டு மழையைக் காலம் தவறாது பொழிவிக்கின்றார். த்வஷ்டா என்னும் வடிவத்திலோ மரங்கள் செடிகள் கொடிகளினுள் இருந்து வளத்தை நல்குகிறார். பூஷன் என்ற வடிவத்தில் தான்யங்கள், உணவுப்பொருட்களினுள் இருந்தபடி விளைபொருட்களை உண்ணத் தக்கவைகளாக ஆக்கி உயிர்களுக்கு ஊட்டச் சத்து தருகின்றார். அர்யமனாய் இருந்து வாயு ரூபத்தில் ஆகாயத்தில் சுற்றி வந்து காக்கின்றார். பகன் என்ற வடிவத்திலோ உயிர்களின் உடல்பொருளாகவும், ஐம்பூதப் பொருளாகவும் ஆகிப் பொலிவூட்டுகிறார். விவஸ்வானாய் இருந்து தீயின் வடிவத்தில் காக்கின்றார். உடம்பில் உணவு செரிக்கும் தீயாகவும் அமைந்து வளம் பெருக்கின்றார். விஷ்ணு என்னும் உருவத்தில் உலகில் அவதாரங்கள் எடுத்து தேவர்களின் எதிரிகளை நாசமுறச் செய்கின்றார். அம்சுமான் என்னும் வடிவில் காற்றில் உயிர்ச் சக்தியாக அமைந்து காக்கின்றார். வருணன் என்னும் வடிவில் நீர் நிலைகளில், கடல்களில் பொருந்தி உலகைக் காக்கின்றார். மித்ரன் என்னும் வடிவில் என்றும் உயிர்களுக்கான உற்ற நட்பாய் இருந்து உதவுகின்றார். மித்ரன் என்னும் வடிவில் தாமே கடுந்தவம் புரிகின்றார். அவரே தவம் புரிவதைப் பார்த்து ரிஷிகள் அவரைக் கேட்டனர். ‘நீங்களே அனைத்தையும் படைத்தவர். நீங்கள் யாரை நோக்கித்தான் தவம் புரிகின்றீர் ஆச்சரியம்?’ அதற்கு அவர் கூறும் பதில் : வடிவங்கள் தாங்கி நிற்கும் உலகையெல்லாம் உள்ளே உள்ளுயிராய், அனைத்தையும் தம் உடலாகக் கொண்டு தாம் எவ்வித மாறுபாடும் அடையாதவராய் என்றும் இருக்கும் ஒருவரே பரமாத்மா எனப்படுபவர். அவரைக் குறித்தே என்றும் தவம் புரிகின்றேன்.

பன்னிரு வடிவம் தாங்கிப் பாரெலாம் புரக்கும் பிரத்தியக்ஷ ப்ரம்மம் ஆக இருக்கும் ஆதித்ய நாராயணர் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
(குறிப்புகள்: பிரம்ம புராணம்)

*
’மனத்திற்குப் பிரீதியைத் தருவது எதுவோ அது சுவர்க்கம் எனப்படும். அதற்கு நேர்மாறானது நரகம் எனப்படும். பாபம், புண்ணியம் என்பதற்குத்தான் நரகம் சுவர்க்கம் என்று பெயர்கள் அமைந்திருக்கின்றன. ஒரே பொருள்தான் ஒரு சமயம் துக்கமாகவும் மறு சமயம் சுகமாகவும் ஆகிறது. அழுக்காறு, கோபம் என்பவற்றை விளைவிக்கிறது. துக்கம் மட்டுமே வடிவாக எந்தப் பொருள் உண்டு? எது முதலில் பிரீதியை உண்டாக்குகிறதோ அதுவே பிறகு துக்கத்தைக் கொடுக்கிறது. ஒரே பொருளே கோபத்தை உண்டாக்கி, துன்பத்தைத் தந்து பின்னர் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனவே துக்கமே வடிவாக எந்தப் பொருளும் இல்லை; அது போல் சுகமே வடிவாகவும் எந்தப் பொருளும் இல்லை. மனம்தான் சுகம் என்றும் துக்கம் என்றும் மாறிப் பரிணாமம் அடைகிறது. எனவே ஞானம்தான் பரம் பிரும்மம். ஞானத்தால்தான் பந்தத்திலிருந்து விடுதலை உண்டாகும். இந்த விச்வம் அனைத்தும் ஞானமே வடிவாகக் கொண்டது. ஞானத்தைக் காட்டிலும் உயர்ந்தது எதுவும் இல்லை.’
(பிரம்ம புராணம்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

கொஞ்சம் அவசரப்பட்டாக...

 ஐயா! எங்க வேகமா போறீங்க?

இருங்க. ஒரு விமானம் எங்க போச்சுன்னு தெரியலை. அதைத் தேடிக்கிட்டு...
இங்க வாங்க... எந்த விமானம்.. யாருது?
யயாதிக்கு இந்திரன் கொடுத்ததாம். அதில் ஏறித்தான் அனைத்து திசைகளையும் வென்றிருக்காரு யயாதி. அவருக்கு அப்பறம் குரு வம்சத்துலதான் இருந்துச்சு. ராஜா ஜனமேஜயன் காலத்துல ஒரு சின்ன பிரச்சனை. கர்க்க ரிஷியோடு கொஞ்சம் சண்டை ராஜாவுக்கு. கர்க்கரோட பையன் சின்னப் பையன் அவனையும் ராஜா திட்டிட்டார் போல. அதுனால ரிஷி சாபத்துனால விமானம் கண்ணுக்கு மறைஞ்சுடுத்து. அவரிடமிருந்து ஜராசந்தனிடம் போய் விட்டது விமானம். ஜராசந்தனிடம் சண்டை போட்டு ஜயித்து பீமன் அந்த விமானத்தை மீட்டாராம்.
மீட்டு..?
அதை வாசுதேவரிடம் அன்பின் காணிக்கையாகத் தந்திருக்கிறார்.
சரி. ஜனமேஜயர் என்ன ஆனார்?
அவர் ரிஷி சாபத்தினால விமானமும் போய் தேகமும் துரு நாத்தம் பிடிச்சுக் கஷ்டப் பட்டாரு. அப்பறம் சௌனகரிடம் போய் பிரார்த்திக்கவும் அவர் ஏதோ யாகம் செஞ்சு அந்த நாத்தத்தைப் போக்கியிருக்காரு.
சரி... ஊசி ... இரண்டு டோஸும் போட்டுக் கிட்டீங்களா?
ஆங் ஆயிடுச்சு.
அப்ப பேசாம போய் ஓய்வு எடுத்துக்குங்க. எல்லாம் நிலைமை சரியானப்பறம் போய்த் தேடிக்கலாம். வாசுதேவரிடம் தானே இருக்கு. பெருமாளிடம் இருப்பது எங்கப் போகப் போகுது?
அப்படீங்கறீங்க..?
ஆமாமாம். ... போய் நல்லா ஓய்வு எடுங்க.
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
***

அநேநஸ் என்பவருடைய பிள்ளை ப்ரதிக்ஷத்ரன். அவருடைய பிள்ளை ஸ்ருஞ்ஜயன். ஸ்ருஞ்ஜயன் பிள்ளை ஜயன். அவருடைய பிள்ளை விஜயன். க்ருதி என்பவர் விஜயனின் பிள்ளை. அவருடைய பிள்ளை ஹர்யத்வதன். ஹர்யத்வதனின் பிள்ளை பிரதாபமிக்க ஸஹதேவன். ஸஹதேவனின் பிள்ளை தர்மாத்மாவான நதீநன். நதீநன் பிள்ளை ஜெயத்ஸேனன். ஜெயத்ஸேனனின் பிள்ளை ஸங்க்ருதி. ஸங்க்ருதியின் பிள்ளை தர்மாத்வாவும், பெரும் புகழும் வாய்ந்த க்ஷத்ரவ்ருத்தன். க்ஷத்ரவ்ருத்தனின் வம்சமோ ஸுநஹோத்ரன். ஸுநஹோத்ரனுக்கு மூன்று பிள்ளைகள். காசன், சலன், க்ருத்ஸமதன். க்ருத்ஸமதனுக்கு சுநகன். சுநகன் வழியில் சௌநகர்கள். சலனுக்குப் பிள்ளை ஆர்ஷ்டிஸேணன். அவனுக்குப் பிள்ளை காச்யபன். காச்யபனின் பிள்ளை தீர்க்கதபஸ் காசியை ஆண்டவன். தீர்க்கதபஸுக்குப் பிள்ளை வித்வான் ஆகிய தன்வன். அவருக்குப் பிள்ளையாக தன்வந்தரி தேவர் மானிடராக அவதரித்தார். காசியை ஆண்ட புகழ் மிக்க மன்னராக இருந்தார். மிகத் திறமையான மருத்துவராகவும் இருந்தார். அனைத்து ரோகங்களையும் அவர் தீர்த்துவைப்பவராக இருந்தார். பரத்வாஜ மகரிஷியிடம் ஆயுர்வேதம் பயின்றார். பிஷக் க்ரியை என்னும் வைத்திய முறையை எட்டுப் பிரிவுகளாகப் பிரித்து சிஷ்யர்களுக்குப் பயிற்றி வைத்தார்.
*
அந்த தன்வந்தரி பகவான் அனைவருக்கும் நலம் விளைவிக்கட்டும்.

***

மனித வளமும் மன வளமும்

 மனிதவளம் என்பது பெரும்பாலும் மனவளம் சம்பந்தப்பட்டது. மனவளம் என்பது மனத்தை நன்கு திறமையாக அதன் இயல் அறிந்து பயன்படுத்தக் கற்பதின் அடிப்படையில் ஏற்படுவது. மனத்தின் இயல் என்பதை நாம் கற்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைவதுதான் நியாயம் அல்லது அளவையியல் அல்லது ஏரணம் என்று சொல்லப்படும் துறை. ஆங்கிலத்தில் லாஜிக். இன்றைய பாடத்திட்டத்தில் இந்த முக்கியமான அடிப்படைக் கல்வி இருக்கிறதா தெரியவில்லை. ஆனால் முன்னர் ஆரம்பக் கல்வி வகுப்புகளிலேயே இருந்திருக்கிறது. முன்னர் என்றால் எப்பொழுது? 1841ல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ண சாஸ்திரியார் ஒரு சின்ன புத்தகம் 30 பக்கத்திற்கு எழுதியிருக்கிறார். தர்க்கசங்கிரகம். இந்து வித்தியாசபைக்கு உதவியாகிய புரசபாக்கம் பாலபோதக வித்தியாசாலைச் சபையாரால் வித்தியாவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. அதாவது ஆரம்பக் கல்வி வகுப்புகளுக்கு எடுப்பதற்காக எழுதப்பட்ட 30 பக்க நூல். நியாயத்தின், தருக்கத்தின் அடிப்படைகளை நிரல்படக் கொடுத்து எளிமையான விளக்கத்துடன் வந்த நூல். இதை மாணவர்கள் படித்திருக்கிறார்கள். 1841ல் நிலைமை.

1851 ஆம் வண்டு வருவோம். அதாவது பத்து ஆண்டுகள் கழித்து நாம் பார்க்கப் போகும் காட்சி வாராணஸி, பெங்கால் முதலிய இடங்களில் ஐரோப்பிய விஞ்ஞானம், அதன் அடிப்படையாக ஐரோப்பிய லாஜிக், அளவையியல் குறித்து அறிமுகம் செய்ய வேண்டும் ஹிந்து மாணவர்களுக்கு என்று பேலண்டைன் என்னும் கல்வியாளர் எடுத்த முயற்சி. அதற்கு முன்னால் அத்தகைய முயற்சி எடுத்தவர்கள் எல்லாம் ஒரு தவறான அணுகுமுறை கொண்டவர்களாய் இருந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் பேலண்டைன். இங்கு ஏற்கனவே இருந்த கல்வி முறைகளில் அளவையியல் குறித்த பயிற்சியும், கருத்துகளும், அதற்கான சொற்களும் ஏதும் இல்லாதது போன்ற பாவனையில், எல்லாம் ஐரோப்பிய இறக்குமதி போன்ற பாவனையில் கல்வியாளர்கள் முயன்றது எல்லாம் தோல்வி; நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதை மதிப்புடனே கருதவில்லை, அதில் ஒரு கௌரவ புத்தியும் அவர்களுக்குத் தோன்றவில்லை. மேலும் அதைக் கண்டு அயிர்த்து ஒதுக்கிவிட்டார்கள் என்று அனுபவங்களைப் பதிகிறார் பேலண்டைன் 1851ல். பிறகு இவர் முன்னெடுத்து சிஸ்டத்தை மாற்றி ஏற்கனவே இருந்த நியாயம் தர்க்கம் முதலிய துறைகளின் துல்லியமான முடிவுகள் அதுவரை எந்த அளவு இருக்கின்றன, இந்தச் சூழலில் ஐரோப்பிய அளவையியல் என்ன பங்கு அளிக்கக் கூடும் என்று வெற்று உசத்தி பாவனைகளையெல்லாம் விட்டுவிட்டு யதார்த்தமாக ஆங்கிலம் சம்ஸ்க்ருதம் இரண்டிலும் வரைவுகள் எழுதி அளித்தபின்னர் நாட்டு மாணவர்களின் ஈடுபாடும், ஒப்புநோக்கி அலசுவதும் அதிகப்பட்டது என்கிறார் பேலண்டைன்.
1841ல் வந்த ஆரம்பப்பள்ளி மாணவர்களின் நூலும், 1851 ஆங்கில ஆட்சியின் கல்வியாளர்களின் அனுபவங்களின் பதிவும் ஒரு சேரக் காணும் போது உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா? ஆங்.. மனிதவளம், மனவளம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா.. சரிதான்.

நியாயம், தர்க்கம், அளவையியல் அதன் காரணமாக உண்டாகும் மனப்பயிற்சி என்றெல்லாம் சொன்னாலும் ஒரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தப் பாடத் திட்டமெல்லாம் யாரோ வேண்டுமென்றே அகற்றி விட்டார்கள் என்று நினைப்பதை விடச் சமுதாயம் எதை உள்ளூர விரும்புகிறதோ அதுதான் நாளாவட்டத்தில் அமைந்து விடுகிறது என்பதும் ஒரு காரணம். ஒரு காட்சியை நினைத்துப் பாருங்கள். தருக்கசங்கிரகம் நன்கு வாசித்த மாணவர் வீட்டில் பெரியவர்கள் ஏதேனும் சொல்லப் போய், ‘மன்னிக்கவும். தாங்கள் சொல்வதில் ஹேது ஆபாஸம் இருக்கிறது. தர்க்க ரீதியாக ஏற்க இயலாது’ என்று பதில் சொல்ல நேர்ந்தால் எப்படி இருக்கும்? யங் ஷெல்டன் சீரீஸ் அப்பொழுதே ஓடத் தொடங்கியிருக்கும். எனவே இளம் தலைமுறை மனத்தைத் திறம்படப் பயன்படுத்தக் கற்பதற்கும் முழு சமுதாயமும் ஏற்பு நிலையில் இருக்கிறதா என்பதும் ஒரு கேள்வி. இல்லையேல் பெரியவர்கள் தமக்குள் நொந்துகொண்டு ‘வர வர எதற்கெடுத்தாலும், ‘நீங்கள் சொல்வது ஒரு பிரதிக்ஞை மாத்திரமே. அவயவத்தின் ஐந்து பகுதிகளும் பொருந்திவரத் தங்களால் அதை தர்க்கித்துக் காட்ட முடியவில்லை அதனால் எப்படி அதைச் சரி என்று ஏற்பது?’ என்று கேட்கிறான் சார் என் பையன். வீடே வாத மண்டபம் ஆகிவிடும் போல் இருக்கு!’ என்று கவலையாகி அதைவிட ஏதேனும் நல்ல கதைகளை போதித்து அதன் மூலமாக நல்ல வழக்கங்களை உணர்ச்சி ரீதியாக மனத்தில் ஏற்றுவதே சிறந்தது என்ற முடிவுக்கும் பெரியவர்கள் வரக் கூடுமே! இல்லையென்று உங்களால் சொல்ல முடியுமா? எனவே மனித வளத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கும் சமுதாயம் தானும் மாறியே ஆக வேண்டும் என்பதையும் ஓர்மை கொள்ள வேண்டும்.

இளம் தலைமுறைக்குக் கதைகள் சொல்வதே சிறந்தது என்று முடிவுக்கு வரும் போதுதான் ஒரு சிக்கலும் கூடவே வந்து விடுகிறது. கதைகள் தாமே! அதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். அப்பா சின்ன பசங்களுக்கு ஆன கதைகளாம். ஸ்வாரஸியமா இருக்கும்படிப் பார்த்துக்க என்ன..! என்று யாரிடமாவது கொடுத்து விட்டால் தொல்லை ஓய்ந்தது. என்ன பெரியவங்க சொல் பேச்சைக் கேட்கணும். கீழ்ப்படிதல் முக்கியம். அது மட்டும் கண்டிப்பாக வலியுறுத்தப் படணும். அவ்வளவுதானே? பின்னர் என்ன இளம் தலைமுறைகள் தலையில் கதைகதையாம் காரணம் இல்லையாம் என்று சிரிப்புக்கு, நல்ல பிள்ளையாகக் கீழ்ப்படிதல் மிக்க சிறாராக ஆவதற்கு... ஆனாஅல் சிந்திப்பதற்கு... ? அதற்கு மேல் வகுப்புகளில் போய்ப் பார்த்துக் கொள்ளட்டும். கதைகள், கதைகள் மனித மனத்தை ஆட்சி செய்யத் தொடங்கி விடுகின்றன. ஏதோ சில வித்வான்களுக்கு மட்டும் என்று அளவையியல் சுருங்கிப் போய் விடுகிறது. பொதுமக்கள் குழுமும் கதைப் பிரசங்கியார் தொடர்கதையா... கதையின் உணர்ச்சி உலகம் தொடர ஆரம்பித்து விடுகிறது.
நீ என்ன? கதைகளே கூடாது என்கிறாயா? சின்ன வயது முதல் எல்லாரும் லாஜிக் பேசும் யங் ஷெல்டன்களாக ஆக வேண்டும் என்கிறாயா? என்று கோபிக்காதீர்கள். லாஜிக்கே வாழ்க்கை முழுதும் இல்லை என்பதை நன்கு அறிவேன். ஆனால் கதைகளை, அதுவும் இளம் தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கதைகளை யார் எழுத வேண்டும் தெரியுமா? சமுதாயத்தின் தலை சிறந்த, பொறுப்பான சிந்தனையாளர்கள் ஒன்று கூடி எழுத வேண்டும். மிகவும் கஷ்டமான வேலையே சிறுவர்களுக்குக் கதை எழுதுவதுதான். ஏனெனில் படிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற கேவியட்டு டிஸ்கியெல்லாம் சிறுவர்கள் விஷயத்தில் உதவாது. படிப்பவர்களுக்காகக் கதையெழுதுபவர்கள்தாம் ஜாக்கிரதையாக அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறுவர்களின் உணர்ச்சிகளுக்குக் கொடுக்கப்படும் விஷயங்கள் அவர்கள் வயதான பின்னர், சிந்தனை எழுந்த பின்னர், லாஜிக் வேலை செய்ய ஆரம்பித்த பின்னர் தங்களின் இளமைக்காலக் கதைப் பொழுதுகளை மறுதலிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது கொடுக்கப் படும் கதைகள். பின்னால் வளரப் போகும் சிந்தனைப் பயிற்சிக்கு முரணாகாமல் கூடுதல் பரிமாணங்களாய் அமையும்படிக் கதைகளைத் தர வேண்டியது பெரியவர்களின் பங்கு.
மூளையின் இடப்பக்கம் மட்டும் வளர்ந்தால் போதுமா? உணர்ச்சிகள் கலைகள் கதைகளுக்கான வலப்பக்கம் வளர வேண்டாமா என்று உயிரியல் ரீதியாகப் பேசுவதால் பயனில்லை. வலப்பக்கத்தின் தீனிகளாய் ஊட்டப்படுபவை இடப்பக்கத்தின் செயல்களுக்கும் விதிகளுக்கும் மறுப்பதாகவும், வெறுப்பதாகவும் அமையாமல் இருக்க வேண்டியது யார் பொறுப்பு? எனவே மனவளத்தை வளர்த்தெடுத்தல் என்பதில் முழு சமுதாயமும், குறிப்பாக அறிவு, பண்பாடுகளில் அக்கறை மிக்க வளர்ந்த தலைமுறைகள் மிகக் கவனத்துடன் கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

ஸ்ரீராமப்ரஸாதரின் பாடல்

 வங்காளத்தின் உன்னத காளி பக்தர். ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி அவருடைய பாடல்களைப் பாட ஆரம்பித்தே சமாதி நிலையில் இலயித்து விடுவார். அவர்தான் ஸ்ரீராமப்ரஸாதர். (அல்பத் தனமான எண்ணம் ஒன்று - அவரும் வங்கியில் க்ளார்க்காகத்தான் இருந்தவராமே..!)

அவருடைய பாடல் ஒன்று - என் மொழிபெயர்ப்பில் (ஆங்கில நடுவாங்கியின் மூலம்)
‘காளியின் நாமம் கட்டித் தீஞ்சுவையாகும்
சொல் அதை எப்பொழுதும் சொல்லிச்
சுடரமுதம் பருகிடலாகும்
நாவே! சீசீ.. இன்னுமா விஷயசுக நயப்பு ?
உருவுகடந்த ஒன்று அதுவே உருவுள அனைத்தும்
ஒன்றுகெழுமிடும் இருப்பிடமாகும்
அங்கு வேறென்ன இருக்கும்
ஆநந்தம் முக்தி பரம நிலையம்
பரம்பொருள் நாமம் அன்றி வேறெது இருக்கும்
காளி விழித்துக் கொண்டவன் நெஞ்சில்
கங்கை ஓடும்
காலனை வென்ற கங்காதர சிவனோ
காளியின் பதமலர் தாங்கித் துயில் கிடக்கும்
ஞானத் தீயை இதயத்தில் மூட்டு
தர்மம் அதர்மம் நெய்யென்றே அதில் கொட்டு
மனத்தை வில்வத் தளங்களாய் ஆக்கு
முயற்சி தனையே சுருவமாய் ஆக்கு
ப்ரஸாதன் சொல்கின்றான் :
‘என் இதயப் பிணக்கோ தீர்ந்துவிட்டது
இந்த உடலோ காளிக்கே சொந்தமானது
அதற்கான பத்திரம் உளது
அதில் காளியின் கையொப்பும் உளது’
*
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

ரிக்வேதமும் திருவாய்மொழியும்

 ரிக்வேதத்தில் 7ஆம் மணடலத்தில் ஒரு மந்த்ரம்.

’இமே திவோ அநிமிஷா ப்ருதிவ்யாச் சிகித்வாம்ஸோ அசேதஸம் நயந்தி |
ப்ரவ்ராஜே சிந்நத்யோ காதமஸ்தி பாரம் நோ அஸ்ய விஷ்பிதஸ்ய பர்ஷந் ||’
இதன் பொருள்:
‘விண்ணிலும் மண்ணிலும் உள்ளதனைத்தையும் இமையா விழிகளால் எந்நேரமும் இடையீடின்றி அறியும் தேவர் அறிவிலா மனிசரை அறநெறியில் வழிகாட்டிச் செல்வர். கடக்க வேண்டிய ஆறோ தரைதெரியா கடும் ஆழமாக இருக்கிறது. அதில் ஒரு பாலம் தேவர்க்கே புலப்படும். அவர் அருளால் அக்கரையில் நாம் அடைவிக்கப் படுவோம்.’
(தமிழாக்கம் என்னுடையது)
இதற்கு பாஷ்யம் இடும் சாயணர் பக்திச்சுவை சொட்ட இடும் வரிகள் ஏனோ எவர் கண்ணிலும் படவில்லை!
‘.. த்யுலோகஸ்ய ப்ருதிவ்யாச்ச ஸம்பந்திந: அநிமிஷேண ஸர்வதா ஜாநந்த: அஞ்ஜ்னானம் ப்ராபயந்தி... வ்யாபிதஸ்ய கர்மண; பாரம் பர்ஷந் - ப்ராபயந்தி நயந்தி.’
கர்மம் என்னும் கடல், கர்மம் காரணமாக உண்டாகும் பிறவி என்னும் கடல். அதைக் கடந்து செல்ல வழியறியா மாந்தர்க்கு உற்ற ஒரே புணை கடவுளின் தாள் அல்லவா?
இப்பொழுது கடவுளின் தாள் என்றால் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இது ஏதோ உலக வழக்கில் காலைப் பிடித்தால் காரியம் நடக்கும் என்பதைப் போன்றது அன்று. பின் என்ன? இங்குதான் தெளியாத மறைநிலங்களைத் தெளிவிக்கும் நம்மாழ்வாரின் அருளிச்செயல் உதவுகிறது.
‘துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி
நின்றவண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்
கண்காண வந்து
துயரங்கள் செய்துதன் தெய்வ நிலை உலகில்
புக உய்க்கும் அம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
யான் ஓர் துன்பம் இலேனே.’
தாம் (திவோ அநிமிஷா ப்ருதிவ்யாச் சிகித்வாம்ஸோ) - விண்ணிலும் மண்ணிலும் உள்ளதனைத்தையும் இடைவிடாது அறியும் வாலறிவராய் இருப்பினும் வழியறியா மனிசர்க்காய் அவர்களில் ஒருவராக வந்து தோன்றும், அவர்கள் கண்காண வந்து தன் தெய்வ நிலையுலகில் புக உய்க்கும் பேரருள் கொண்ட அம்மான், வந்து தோன்றி வழி காட்டும் அவன் பேரருள்தான் அறவாழி அந்தணன் தாள். எனவேதான் பகவானின் நடமாடும் ஆலயம் என்று சொல்லப்படும் சாதுக்களையே பகவத்பாதர்கள் என்றே சொல்வது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***