Saturday, February 26, 2022

பக்தித் துதிகள் ஒன்பது - தொகுதி ஒன்று

எளிய தமிழில் பொருளுடன் கூடிய பக்தித் துதிகள் ஒன்பது கீழ்க்கண்டவாறு தலைப்புகள் வரிசையாக ஹைபர்டெக்ஸ்ட் செய்யப்பட்டுத் தரப்பட்டுள்ளன. அந்தந்தத் துதியின் தலைப்பில் அழுத்தினால் துதியின் பக்கத்தைக் காட்டும். தேடிக் கஷ்டப்படாமல் படிக்க வசதியாகவும் இருக்கும். இது ஒன்பது துதிகள் அடங்கிய தொகுதி ஒன்று. மேலும் மொபைலில் படிக்க ஏற்றவாறு சௌகரியமும் செய்யப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன். அர்த்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் முக்கியத்துவம் தந்துள்ளேன். பண்டிதர்கள் பொறுத்தருள்க. 

1) கணபதி துதி 

2) அன்னையிடம் பிரார்த்தனை 

3) ஸ்ரீலலிதா பஞ்சரத்னம் 

4) அனுமனைத் துதி மனமே காலை மதியம் மாலையில் 

5) சுதர்சனாஷ்டகம் - சக்கரத்தாழ்வார் மீது எட்டு 

6) பராங்குசாஷ்டாகம் - நம்மாழ்வார் மீது எட்டு 

7) ஸ்ரீபஞ்சாயுத ஸ்தோத்ரம் - எளிய தமிழில் பொருளுடன்

8) ஸ்ரீத்வாதசநாம பஞ்ஜரம் - பன்னிரு நாமங்கள் பாதுகாக்கட்டும் 

9) தன்யாஷ்டகம் - ‘கொடுத்து வைத்தவர் எட்டு’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


கணபதி துதி

கணாதிப நமஸ்துப்யம் ஸர்வவிக்னப்ரசாந்தித I
உமாநந்தப்ரத ப்ராஜ்ஞ த்ராஹி மாம் பவஸாகராத் II
ஹராநந்தகர த்யான ஜ்ஞானவிக்ஞானத ப்ரபோ I
விக்னராஜ நமஸ்துப்யம் ஸர்வதைத்யைகஸூதன II
ஸர்வப்ரீதிப்ரத ஸ்ரீத ஸர்வயக்ஞைக ரக்ஷக I
ஸர்வாபீஷ்டப்ரத ப்ரீத்யா நமாமி த்வாம் கணாதிப II
(பத்ம புராணம், ஸ்ருஷ்டி கண்டம்)


பொருள் :
கணங்களின் தலைவரே! அனைத்து இடர்ப்பாடுகளையும் களைபவரே! உமாதேவிக்கு ஆனந்தம் விளைவிப்பவரே! அறிவே வடிவானவரே! உமக்கு நமஸ்காரம். பவஸாகரத்தினின்றும் என்னைக் காப்பாற்றுவீர்! ஹரனுக்கு ஆனந்தம் தருபவரே! ஞானமும் விஞ்ஞானமும் அளிப்பவரே! விக்னங்களையெல்லாம் அடக்கியாள்பவரே! உமக்கு நமஸ்காரம். அரக்கர்களை நீக்குபவரே! அனைத்து ப்ரீதி களையும் அளிப்பவரே! செல்வத்தைத் தருபவரே! அனைத்து யக்ஞங்களையும் ஒருவராய்க் காப்பவரே! அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவரே! உம்மைப் ப்ரீதியுடன் வணங்குகின்றேன் கணாதிபரே!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, February 25, 2022

ஸ்ரீத்வாதச நாம பஞ்ஜரம் - பன்னிரு நாமங்கள் பாதுகாக்கட்டும் !

நெடுங்காலமாக ஞானியரும், மக்களும் சொல்லும் துதிகளில் ஒன்று ஸ்ரீத்வாதச நாம பஞ்ஜரம் என்பது. த்வாதச என்றால் பன்னிரண்டு. பஞ்ஜரம் என்றால் கூடு, கூண்டு அல்லது கவசம், சுற்றிலும் பாதுகாக்கும் வளையம் அல்லது கூடம். 

ஏன் பன்னிரண்டு? இதற்கு மிஸ்டிகல் காரணங்கள் உண்டு. உலகில் இருக்கும் மிஸ்டிக் சம்ப்ரதாயங்கள் பலவற்றிலும் இந்தப் பன்னிரண்டு என்பது முக்கியமான எண். காலமே வருடத்திற்குப் பன்னிரண்டு பிரிவுகள் என்பது ஒரு புறம். வாழ்க்கையின் நன்மைகளும் பன்னிரண்டாகத்தான் பிரித்துப் பார்க்கச் சொல்லும் ஜோதிஷ சாத்திரம். பிரபஞ்ச விரிவில் நக்ஷத்திரங்களைப் பன்னிரு பிரிவுகளில் வகைதொகை செய்யவும் ஜோதிஷம் சொல்கிறது. பன்னிரண்டு என்பதைக் குறித்துப் பெரும் நூலே எழுதலாம். இந்த ஆழ்ந்த சூக்ஷ்ம விஷயங்களையும் அழகான துதிகள் ஆக்கி, பக்தியுடன் கலந்து தரும்பொழுது நாம் என்ன சொல்ல முடியும்? 

வாழ்க்கையின் பன்னிரண்டு நன்மைகளுக்கும் அருள் சக்திகளைப் பன்னிரு கடவுள் நாமங்களாகச் சொல்லி அதை அன்றாடம் சொல்வதிலேயே அந்த நன்மைகளை நம்முள் செயலூக்கத்திற்குக் கொண்டு வரும் முறைதான் இது. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்னும் பன்னிரு நாமங்களில் துயிலெழுப்பப்படுவன நம் வாழ்க்கையின் நன்மைகள் என்ற நினைவோடு இந்தத் துதியைப் படிப்பது சிறந்தது. 

இந்தத் துதியில் ஓர் அழகைப் பார்க்கலாம். கிழக்கு, மேற்கு, மேலே, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, கீழே, இதய மத்தி, உடல் முழுவதும் - என்ற கிரமத்தில் கடவுளின் நாமங்கள் இயங்கிக் காக்கின்றன என்பதுபோல் துதியானது அமைந்துள்ளது. அதாவது ஒருவர் கிழக்கை நோக்கி நின்று துதிக்கும் போது மனத்தால் கடவுளின் மூலம் 360 பாகைகளையும் ஓர்மை கொள்வது சிந்தித்துப் புரிந்துகொள்ளத்தக்கது.


புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநத ப்ரப: | 
பச்சாந்நாராயண; சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 

கிழக்கில் கேசவர் காக்கட்டும். அவர் சக்ரம் தரித்தவர். ஜாம்பூநதம் என்னும் தங்கத்தின் நிறம் கொண்டவர். மேற்கில் நாராயணர் காக்கட்டும். அவர் சங்கம் தரித்தவர். நீலமேக சியாமளர். 

இந்தீவரதளச்யாமோ மாதவோர்த்வம் கதாதர: | 
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 

இந்தீவர மலரின் இதழ்போல் கருநீல அழகர், கதை ஆளும் மாதவர். அவர் மேலே காக்கட்டும். கோவிந்தர் தெற்குப் பக்கத்தில் காக்கட்டும். வில்லாளர். சந்திரன் ஒளிதிகழ் மகான் அவர். 

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்ம கிஞ்ஜல்க ஸந்நிப: | 
ஆக்நேய்யாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதந: || 

வடக்கில் விஷ்ணு காக்கட்டும். கலப்பையைத் தாங்கியவர் அவர். தாமரையின் அகவிதழ் போன்ற நிறத்தர். அக்நி திசையான தென்கிழக்கில் அரவிந்த ஒளி திகழும் மதுசூதனர் காக்கட்டும். உலக்கை திகழும் கரத்தர். 

த்ரிவிக்ரம: கட்கபாணி: நிர்ருத்யாம் ஜ்வலனப்ரப: | 
வாயவ்யாம் வாமனோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமான் || 

திரிவிக்ரமர் கத்தியைத் தரித்தவர், தீப்பிழம்பென ஒளிர்பவர் நிர்ருதி திசையாம் தென்மேற்கில் காக்கட்டும். வடமேற்கில் வஜ்ராயுதம் தரித்த வாமனர் காக்கட்டும். இளம் சூரிய ஒளியாய்த் திகழ்பவர். 

ஐசான்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயுத: | 
வித்யுத் ப்ரபோ ஹ்ருஷீகேசோ ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 

ஈசான்ய திசையான வடகிழக்கில் தாமரைபோல் சுடரும் ஸ்ரீதரர் காக்கட்டும். ஈட்டி ஆயுதம் கொண்டவர். மின்னலென ஒளிவீசும் ஹ்ருஷீகேசர் கீழே திசையில் காக்கட்டும். சுத்தியலைத் தரித்தவர். 

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப: | 
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக: || 

இதய கமலத்தில் பத்மநாபர் திகழட்டும். ஆயிரம் கதிரொளிக்கீடான பிரகாசம் மிக்கவர். அனைத்து வல்லமைகளும், அனைத்து சக்திகளும் உடையவர். அனைத்தும் அறிந்தவர். அனைத்து திசையிலும் செல்லும் வல்லவர் காக்கட்டும். 

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோSபராஜித: | 
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர: ஸ்தித: || 

இந்திரகோபப் பூச்சிபோன்ற நிறத்தால் நம் கண்ணைக் கவரும் தோற்றத்தர். பாச வல்லிழையைக் கையில் கொண்டவர். பிறரால் வெல்லப்பட முடியாதவர். அவரே உடம்பில் உள்ளும் புறமும் வியாபித்து நின்று காக்கட்டும். 

ஏவம் ஸர்வத்ரம் அச்சித்ரம் நாமத்வாதச பஞ்ஜரம் | 
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந || 

பயம் நாஸ்தி கதாசந ஓம் நம இதி || 

இத்தகையதான பன்னிருநாமங்களால் ஆன இந்தக் கூண்டானது அனைத்துவிதமான பாதுகாப்பும் தருவது. எதிர்க்க இயலாதது. இந்தக் காக்கும் கூண்டினுள் நுழைந்து நான் சிறிதும் எந்தப் பயமும் அற்று நிம்மதியாக இருக்கிறேன். பயம் எதுவும் ஒரு போதும் இல்லை. அந்தப் பிரணவ வடிவான கடவுளை வணங்குகிறேன் இவ்வாறு. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Saturday, February 19, 2022

தன்யாஷ்டகம் - ‘கொடுத்து வைத்தவர்’ எட்டு

ஒரே ஒரு சுலோகத்தை மட்டுமே வாழ்நாள் முழுக்கவும் கற்று, நினைவில் கொண்டு தினம் சொல்லி ஒருவர் தோய்கிறார். ஆனாலும் அந்த ஒரு சுலோகத்தின் அர்த்தங்களில் தோய்வதால் மட்டுமே அவர் ஆத்ம ஞானம் என்னும் பாதையில் நெடுந்தூரம் முன்னேற்றம் கண்டுவிட முடியும் என்றால் அஃது இந்தச் சுலோகமான தன்யாஷ்டகம்தான். எத்தனை கிருபையும், யோசனையும் கொண்டு ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் இதை இயற்றியுள்ளார் என்பதை நோக்கும் போது நன்றியுணர்வே எழும். 

அதாவது உலகில் இந்த வார்த்தையைக் கேட்டிருப்போம். ‘அவருக்கென்னப்பா கொடுத்து வைத்தவர்!’ என்று மக்கள் பலரும் சொல்வார்கள். அதாவது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய சிறப்பு, வளம் பிறருக்குக் கிடைக்கும் போது இந்தச் சொல் வரும். அல்லது மிகச் செல்வாக்கான நிலையை, கூட இருந்த ஒருவர் அடைந்துவிட்டால் அவரைக் குறித்தும் இதுபோல் சொல்வார்கள். இவ்வாறு சொல்வதன் உள்ளே இருக்கும் உளவியலைக் கவனிக்க வேண்டும். தாம் எந்த நிலையை இலட்சியம் என்று கருதுகிறார்களோ, தாம் எதைக் குறித்து ஏங்குகிறார்களோ அதைப் பிறர் ஒருவர் அடையும் போது இவ்வாறு சொல்லத் தோன்றும். இந்த உள இயலை நன்கு கவனித்திருக்கிறார் ஸ்ரீபகவத்பாதர். பொதுமக்களின் இந்த உள இயலை அப்படியே ஆத்ம ஞானத்திற்கு இயல்பாக மனம் செல்லுமாறும், அதற்கான மறைமுக ஊக்கம் பிறக்கும் விதத்திலும் இந்த மனோபாவத்தையே வைத்து அவர் இயற்றியதுதான் தன்யாஷ்டகம். 

ஒரே ஒரு வித்யாசம், உலக விஷயங்களைக் குறித்து இந்த அங்கலாய்ப்பை, ‘கொடுத்து வைத்தவர்ப்பா’ என்ற சொலவடையைப் பயன்படுத்தாமல் வாழ்வை முழுவதும் ஆத்ம ஞானத்தில் ஈடுபடுத்தி, அதற்கே முற்றிலும் தம்மைத் தோய்த்துக் கொண்டவர்களைக் குறித்துப் பிறர் இவ்வாறு ‘அவருக்கென்னப்பா கொடுத்து வைத்தவர்’ என்று கருதுவது போன்று அமைத்து விட்டார். இதன் விளைவை யோசித்துப் பாருங்கள்! மனம் தன்னைப் போல் இந்த ஆத்ம ஞானத்தைக் குறித்து ஏங்கத் தொடங்கும். நாம் என்னவோ செய்து ஏதோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்போம். ஆனால் இப்படி எண்ணிப் பழகியதன் விளைவு நம்மை அறியாமல் ஆன்மிகத்தின்பால் நம் மனம் ஈர்க்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கும். ‘தன்ய:’ என்றால் பாக்கியசாலி, கொடுத்து வைத்தவர் என்று பொருள்படும். 


தத்ஜ்ஞாநம் ப்ரசமகரம் யதிந்த்ரியாணாம் 
தத்ஜ்ஞேயம் யதுபநிஷத்ஸு நிச்சிதார்த்தம் | 
தே தந்யா புவி பரமார்த்த நிச்சிதேஹா: 
சேஷாஸ்து ப்ரமநிலயே பரிப்ரமந்தி || 

புலனடக்கத்தை எது தருமோ அதுவே ஞானம். உபநிஷதங்களில் ஐயம் திரிபற நிச்சயிக்கப்பட்ட அர்த்தம் எதுவோ அதுவே அறியப்பட வேண்டியதான ஞேயம். புவியில் பரமார்த்தமான ஞானத்தை அடைய ஊக்கம் கொண்டு திகழ்பவர்கள் எவரோ அவர்களே பாக்கியசாலிகள், கொடுத்து வைத்தவர்கள். எஞ்சியோர் எல்லாம் பிரமைகளின் குடியிருப்பில் சுற்றி சுற்றி வருவோராய் இருக்கின்றனர். 

ஆதௌ விஜித்ய விஷயாந் மதமோஹராக 
த்வேஷாதி சத்ருகணம் ஆஹ்ருதயோகராஜ்யா: | 
ஜ்ஞாத்வா மதம் ஸமநுபூய பராத்மவித்யா 
காந்தாஸுகம் வநக்ருஹே விசரந்தி தந்யா: || 

(சாதாரண மனிதர் ஒருவரின் கனவு என்பது என்ன? வாழ்க்கையில் எதிர்ப்பான விஷயங்களை வெற்றிகொண்டு, சாதகமான வளங்களைச் சாதித்துக்கொண்டு, ஒரு நல்ல பெண்மணியை அல்லது பெண்மணி நல்ல கணவனை மணம் புரிந்து, ஒரு வசதியான வீட்டைக் கட்டிக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவதைத்தான் அந்தக் கனவு குறிக்கும். அந்தக் கனவுச் சித்திரத்தை எப்படிக் கையாள்கிறார் என்று இதில் பார்க்க வேண்டும்) 

முதலில் புலன் விஷயங்கள் என்பதை வெற்றிகொண்டு, கர்வம், மோகம், பற்று, வெறுப்பு முதலிய பகைகளை வென்று மனத்தை அடக்கி எய்திய யோக ராஜ்யத்தைச் சம்பாதித்துக் கொண்டார்கள். அடுத்து பெரும் ஞானச் செல்வமான பரமாத்ம ஞானத்தைத் தெரிந்துகொண்டார்கள். பிறகு பரமாத்ம வித்யை என்னும் நல்ல மனையாள் சுகத்தை தினம் அனுபவிப்பவர்களாய் காட்டையே பங்களா ஆக்கிக்கொண்டு திரிகிறார்களே இவர்கள் அன்றோ பாக்கியவான்கள், கொடுத்து வைத்தவர்கள் ! 


த்யக்த்வா க்ருஹே ரதிம் அதோகதி ஹேதுபூதாம் 
ஆத்மேச்சயா உபநிஷத் அர்த்தரஸம் பிபந்த: | 
வீதஸ்ப்ருஹா விஷயபோக பதே விரக்தா 
தந்யாச் சரந்தி விஜநேஷு விமுக்தஸங்கா: || 

வீட்டில் உள்ள தீவிர ஒட்டுதலைத் துறந்து, அது கீழ்நோக்கிய வழிகளில் ஒருவரைத் தள்ளும் காரணம் என்பதால், ஆத்ம ஞானத்தின்பால் உள்ள இச்சையின் காரணமாக உபநிஷதங்களின் அர்த்தங்கள் ஆகிய அருஞ்சுவையைப் பருகிக் கொண்டு, பற்றுதலை ஒதுக்கி, விஷயங்களின் சுகங்கள் ஆகிய வழிகளில் வைராக்கியம் பூண்டு, ஜனங்களை விட்டு ஒதுங்கி, பந்தபாசத்தினின்றும் விடுபட்டு நடப்பவர்கள், அவர்கள்தாம் எத்தனை பாக்கியசாலிகள், கொடுத்து வைத்தவர்கள்! 

த்யக்த்வா மமாஹமிதி பந்தகரே பதே த்வே 
மாநாவமாநஸத்ருசா: ஸமதர்சிநச்ச | 
கர்த்தாரம் அந்யம் அவகம்ய ததர்பிதாநி 
குர்வந்தி கர்மபரிபாக பலாநி தந்யா: || 

பந்தத்தை உண்டுபண்ணும் ’நான் என்னுடையது’ என்னும் இரண்டு நிலைகளையும் விட்டுவிட்டு, மானம் அவமானம் என்பனவற்றைச் சமமாகப் பார்த்துக்கொண்டு, உலகைப் படைத்த காரணன் ஒருவன் பிரபஞ்ச இயல்பினின்றும் அப்பாற்பட்டவனாய் உண்டு என்பதை உணர்ந்து, செய்யும் செயல்களால் விளையும் பலன்களை அவனுக்கே அர்ப்பணமாக ஆக்கிக்கொண்டு கடமைகளைச் செய்து போரும் அவர்கள் பாக்கியவான்கள், கொடுத்து வைத்தவர்கள்! 


த்யக்த்வைஷணாத்ரயம் அவேக்ஷித மோக்ஷமார்க்கா 
பைக்ஷாம்ருதேந பரிகல்பித தேஹயாத்ரா: | 
ஜ்யோதி: பராத்பரதரம் பரமாத்மஸங்கம் 
தந்யா த்விஜா ரஹஸி ஹ்ருத்யவலோகயந்தி || 

மனைவி, புத்திரர், செல்வம் ஆகியவற்றில் பற்றுகளாகிய மூவிதப் பற்றுகளையும் விட்டு, மோக்ஷமார்க்கத்தில் கருத்து செலுத்தியவராய், பிக்ஷையாகக் கிடைத்த அமுதாகிய உணவில் உடல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகின்றவர்களாய், ஆன்மிகத்தில் மறுபிறப்படைந்த அந்தப் பாக்கியவான்கள் இரகசிய இடத்தில் அமர்ந்து உயர்வற உயர்ந்ததான பரமாத்மா என்பதில் திகழும் அந்தப் பேரொளியை இதயத்தில் கண்டு தியானிக்கின்றனர். 


நாஸந்ந ஸந்ந ஸதஸந்ந மஹந்ந சாணு 
நஸ்த்ரீபுமாந்ந ச ந பும்ஸகம் ஏகபீஜம் | 
யைர்ப்ரஹ்ம தத்ஸமம் உபாஸிதம் ஏகசித்தை: 
தந்யா விரேஜு: இதரே பவபாசபத்தா: || 

பிரம்மமானது ஸத் என்றோ அஸத் என்றோ சொல்ல முடியாது. ஸத்தும் அஸத்தும் என்றும் சொல்ல முடியாது. பெரியது என்றும் சொல்லவொண்ணாது. சிறிய அணு என்றும் சொல்லவொண்ணாது. பெண் என்றோ, ஆண் என்றோ, அலி என்றோ சொல்லற்கரியது. ஒரே காரணமாய், இருக்கும் அனைத்திற்கும் இயன்றது. அந்த பிரம்மம் இப்படியும் அப்படியும் சாயாத சமமானது. அந்தப் பிரம்மத்தை ஒருமுகப்பட்ட சிந்தையினால் உபாசிப்பவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்களே பாக்யவான்கள். மற்றையாரோ பவபாசத்தினால் பிணிப்புண்டு அல்லலுறுகின்றனர். 


அஜ்ஞாநபங்க பரிமக்நம் அபேதஸாரம் 
துக்காலயம் மரணஜன்மஜராவஸக்தம் | 
ஸம்ஸாரபந்தனம் அநித்யம் அவேக்ஷ்ய தந்யா 
ஜ்ஞாநாஸிநா ததவசீர்ய விநிச்சயந்தி || 

ஸம்ஸாரபந்தம் என்பது அஞ்ஞானம் என்னும் சேற்றில் புதைந்து, சாரம் எதுவும் அற்றதாய், துக்கம் அனைத்திற்கும் கொள் இடமாய், மரணம், ஜன்மம், முதுமை என்னும் இவற்றோடு கூடியதாய், அநித்தியமானதாய் இருப்பது. அதை நன்கு பூர்ணமாக உணர்ந்த பாக்கியவான்கள் தங்கள் ஞானம் என்னும் ஒள் வாளால் அந்தப் பந்தத்தை வெட்டி நீக்கிவிட்டு பிரம்மம் ஒன்றையே இலட்சியமாக நன்கு நிச்சயிக்கின்றனர். 


சாந்தைர் அநந்ய மதிபி: மதுரஸ்வபாவை: 
ஏகத்வநிச்சித மனோபி: அபேதமோஹை: | 
ஸாகம் வநேஷு விதிதாத்ம பதஸ்வரூபை: 
தத்வஸ்து ஸம்யக் அநிசம் விம்ருசந்தி தந்யா: || 

மேலும் அத்தகைய பாக்யசாலிகள் செய்வது என்னவென்றால், சாந்தத்தில் நிலைத்தவர்களும், வேறொன்றில் செல்லா மதி படைத்தவர்களும், இனிய சுபாவம் உள்ளவர்களும், ஒரே தத்துவத்தில் ஊன்றிய மனம் வாய்ந்தவர்களும், மோகம் என்பது அறவே அகன்றவர்களும், ஆத்ம ஸ்வரூபத்தைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து அதனுருவாய் இருப்பவர்களுமான ஞானிகளோடு சேர்ந்து காடுகளில் அமர்ந்து அந்தப் பரவஸ்துவைக் குறித்து அடிக்கடி நன்றாக விசாரம் புரிகின்றனர். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*

Friday, February 18, 2022

ஸ்ரீலலிதா பஞ்சரத்னம்

கோவிலுக்குச் சென்று வழிபடும்போதோ, வீட்டில் பூஜையில் வழிபடும் போதோ ஒரு கிரமம் இருக்கிறது என்பதை இந்தத் துதியில் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் நமக்கு உணர்த்துவது போல் இருக்கிறது. அதாவது முதலில் தெய்வத்தின் முகமண்டலத்தை நினைவில் கொள்ளுதல், பிறகு நமக்கு அருள் செய்யும் கரங்களைப் போற்றுதல், பின்னர் அனைத்திற்கும் காரணமாய் விளங்கும் தெய்வத் திருவடிகள், அந்தத் திருவடிகளிலேயே நாம் சரண் அடையவேண்டும் என்பதைக் குறிக்க திவ்ய பாதங்களை வந்தனம் செய்தல். மனம், சொல், செயல் என்று மானஸ, வாசிக, காயிக மூன்று விதத்திலும் கடவுள் வணக்கம். பின்னர் தெய்வத் தத்துவத்தைக் குறித்து ஆழ்ந்து தியானித்தலாகிய அனுசந்தானம். நிறைவாக கடவுளின் நாமங்களை ஆனந்தத்துடன் கீர்த்தனம் செய்தல். ஸ்மரணம், பஜனம், வந்தனம், அனுசந்தானம், நாம கீர்த்தனம் என்று ஐந்து முக்கியமான பகுதிகளையும் அமைத்து உலகு புரக்கும் அன்னையாகிய ஸ்ரீலலிதாம்பிகையைத் துதிக்க நமக்கு உன்னதமான துதியைத் தந்துள்ளார். அதற்குப் பெயர் ஸ்ரீலலிதா பஞ்சரத்னம். 



ப்ராதஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் 
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம் | 
ஆகர்ண தீர்க்க நயநம் மணிகுண்டலாட்யம் 
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல பாலதேசம் || 

ஸ்ரீலலிதா அன்னையின் முகக்கமலம் அதையே காலையில் நினைக்கிறேன். கோவைபழம் போல் சிவந்த உதடுகள், பெரிய முத்தினால் இயன்ற மூக்குத்தியானது திகழ்கின்ற நாசி, காதுகள் வரை நீண்ட கடைக்கண் ஓடும் கண்கள், மணிகளால் செய்யப்பட்ட குண்டலங்கள் விளங்கும், புன்முறுவல் பூத்துத் திகழும், கத்தூரிமணம் விரியும் நெற்றித்தடம் - இவ்வாறு திகழும் முகக்கமலத்தை நினைக்கின்றேன். 



ப்ராதர்பஜாமி லலிதா புஜகல்பவல்லீம் 
ரத்நாங்குலீய லஸத் அங்குலி பல்லவாட்யாம் | 
மாணிக்யஹேம வலயாங்கத சோபமாநாம் 
புண்ட்ரேக்ஷு சாப குஸுமேஷு ஸ்ருணீர்ததாநாம் || 

ஸ்ரீலலிதாம்பிகையின் கைகளோ நினைத்ததையெல்லாம் அருளும் கல்பகக் கொடிகள் போன்றவை. ரத்னங்களால் இழைத்த மோதிரம், அந்த மோதிரம் திகழும் துளிர் போன்ற விரல்கள், மாணிக்கங்களால் அமைந்த வளைகள், வளைகள் அணியாகித் திகழும் வரமருளும் கைகளின் சோபை, வெண்ணிறக் கரும்புவில், பூவினால் இயன்ற அம்புகள், அங்குசம் என்றிவை சுடர்ந்து திகழும் கற்பகக் கைகள் விளங்கும் லலிதா அன்னையை காலையில் வழிபடுகிறேன். 



ப்ராதர்நமாமி லலிதா சரணாரவிந்தம் 
பக்தேஷ்ட தாந நிரதம் பவஸிந்துபோதம் | 
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம் 
பத்மாங்குச த்வஜ ஸுதர்சந லாஞ்சனாட்யம் || 

பக்தர்கள் வேண்டுவன எல்லாம் அளிப்பதிலேயே எப்பொழுதும் மும்முரமாய் இருப்பவளும், பவக்கடலில் காப்பாற்றும் ஓடமாக இருப்பவளும், பதுமத்தில் வீற்ற நான்முகன் முதலா அனைத்து தேவர்களும் வழிபட நின்றவளும், பத்மம், அங்குசம், த்வஜம், சுதர்சனம் ஆகிய ரேகைகளும் சின்னங்களும் விளங்கித் திகழும் ஸ்ரீலலிதா அன்னையின் சரண கமலங்களில் காலையில் வணங்குகிறேன். 



ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவாநீம் 
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம் | 
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம் 
வித்யேச்வரீம் நிகம வாங்மனஸாதிதூராம் || 

பரமார்த்த மங்களமாய்த் திகழ்பவள், பரமேச்வரனின் சக்தியாய் விளங்குபவள், த்ரயீ என்னும் வேதங்களின் அந்தமாக விளங்கும் வேதாந்தங்களால் உணரத் தக்க மஹிமை மிக்கவள், சற்றும் குறைவற்ற கருணையே ஆனவள், விச்வத்தின் படைப்பு, லயம், இருப்பு என்று அனைத்திற்கும் காரண பூதையாய் இருப்பவள், சகல வித்யைகளுக்கும் ஈச்வரியாய்த் திகழ்பவள், நிகமம் ஆகிய வேதத்திற்கும், வாக்கிற்கும், மனத்திற்கும் மிகத் தொலைவில் இருப்பவள் ஆகிய ஸ்ரீலலிதாம்பிகையைக் காலையில் துதிக்கின்றேன். 



ப்ராதர்வதாமி லலிதே தவ புண்யநாம 
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி | 
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீ பரேதி 
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி || 

அன்னையே! நினது புண்யநாமங்களை, காமேச்வரீ என்றும், கமலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், ஜகத்திற்கெல்லாம் உற்ற பெரும் ஜநநீ என்றும், வாக்தேவதையே என்றும், திரிபுரேச்வரீ என்றும் அழைத்து வார்த்தைகளால் காலையில் நின்னையே மொழிகின்றேன் ஸ்ரீலலிதாம்பிகையே! 



ய: ச்லோகபஞ்சகம் இதம் லலிதாம்பிகாயா: 
ஸௌபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே | 
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நா 
வித்யாம் ச்ரியம் விமலஸௌக்யம் அநந்த கீர்த்திம் || 

மிக அழகியதும் உயர்ந்த சௌபாக்யத்தைக் கொடுப்பதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் மீது இயன்ற இந்த ஐந்து சுலோகங்களை விடியற்காலையில் யார் படிக்கின்றார்களோ அவர்களுக்கு லலிதா அன்னை சீக்கிரம் பிரசன்னம் ஆகிறாள். அவர்களுக்கு வித்யை, செல்வம், குறைவற்ற சௌக்யம், எல்லையற்ற புகழ் ஆகியவற்றைத் தருகிறாள். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Monday, February 14, 2022

ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம் - எளிய தமிழில் பொருளுடன்

மனித குலத்திற்கு இயற்கையில் அறிவுடைமை என்பது ஏற்பட்டிருப்பினும், உணர்ச்சிகள், ஆசைகள், விபரீத எண்ணங்கள், பொருந்தாத கற்பனைகள் என்று பலவிதமான தடைகள் காரணமாக மனிதர் அல்லலுறுவதைப் பார்க்கிறோம். மனத்தால் ஏற்படும் கோளாறுகள் ஒரு புறம் என்றால், இயற்கையில் எதிர்பாராமல் திடீரென விளையும் நோய்கள், விபத்துகள் ஆகியன படுத்தும் பாடு கேட்கவே வேண்டாம். மனிதர் தம் ஆற்றலையே ஒழுங்கான முறையில் கையாண்டு வாழ்க்கையை வளமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளத் தெய்வ சக்திகளின் துணை பெரிதும் வேண்டப்படுகிறது. நம்பிக்கைதானே என்று சிலர் நினைத்தாலும் அந்த நம்பிக்கை தரும் பலம் உள இயல் ரீதியாக மிகவும் முக்கியமானது. நம் பெரியோர்கள் இந்த உள இயலை நன்கு அறிந்தவர்கள். தெய்வ சக்திகளைக் குறித்த பிரார்த்தனைகளை எத்தனையோ அரிய சுலோகங்கள் வாயிலாக நமக்கு அளித்துள்ளனர். அதில் ஓர் அரிய சுலோகம் இந்த ஸ்ரீபஞ்சாயுத ஸ்தோத்ரம். 

திருமாலின் ஐந்து ஆயுதங்களான சக்ரம், சங்கம், கதை, கத்தி, வில் என்று பஞ்ச ஆயுதங்களைக் குறித்தும் பிரார்த்தனையாக வருவது இந்தத் துதி. பிரபஞ்ச தத்துவங்களையே திருமால் தம் ஆயுதங்களாகத் தரித்துள்ளார் என்பது முக்கியமான கருத்து. உதாரணத்திற்கு, காலம் என்ற மாபெரும் தத்துவமே திருமால் கையில் சக்கரமாகத் திகழ்கிறது. பிரகிருதி தத்துவமே அவரது சங்கமாகத் திகழ்கிறது. வித்யைகள் அனைத்தும் ஒருங்கே அவரது வாளாகத் திகழ்கிறது. புத்தி தத்துவம் அவரது கதை. அஹங்காரத்தை உட்கொண்ட இந்திரியக் கூட்டங்கள் என்னும் தத்துவமே சார்ங்கம் என்னும் வில். எனவே தெய்வத்தன்மை வாய்ந்த ஐந்து ஆயுதங்களைக் குறித்த துதியானது திருமாலுக்கே ஆன துதியாக ஆகிறது. இந்தத் துதியால் நாம் பிரபஞ்ச தத்துவங்களையே உள்ளடக்கிப் பிரார்த்திக்க முடிகிறது என்பதுதான் இந்தத் துதியின் விசேஷம். 


ஸ்புரத் ஸஹஸ்ரார சிகாதி தீவ்ரம் 
சுதர்சனம் பாஸ்கர கோடி துல்யம் | 
ஸுரத்விஷாம் ப்ராண விநாசி விஷ்ணோ: 
சக்ரம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

கூர்முனை வாய்ந்த கடும் ஆரங்கள் ஆயிரம் மின்னழல் எழும், கோடி சூரியர் போன்று ஒளி பொங்கிச் சுடரும், தேவர்களின் பகைகளை உயிர்மாயச் செய்யும் திருமாலின் ஆயுதம் சக்கரம். அதனை எப்பொழுதும் நான் சரணடைகிறேன். 



விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய 
யஸ்ய த்வநிர் தானவ தர்பஹந்தா | 
தம் பாஞ்சஜன்யம் சசிகோடி சுப்ரம் 
சங்கம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

திருமாலின் வாயினால் ஊதப்பட்ட காற்றினால் நிறைந்து எந்தச் சங்கம் எழுப்பிய ஒலியானது தீயவர்களின் செருக்கை அழித்து விடுகிறதோ, அந்தச் சங்கமோ பார்ப்பதற்கு கோடி நிலவு எரித்தால் போன்று குளிர்ந்த வெண்ணொளி திகழ்கிறது. அந்தச் சங்கத்தையே எப்பொழுதும் சரணம் எய்துகிறேன். 

ஹிரண்மயீம் மேருஸமாந ஸாராம் 
கௌமோதகீம் தைத்ய குலைஹ ஹந்த்ரீம் | 
வைகுண்ட வாமாக்ர கராபிம்ருஷ்டாம் 
கதாம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

பொன்மயமாகச் சுடர்வது. வலுவில் மேருமலையை ஒத்தது. வைகுண்டநாதனாகிய திருமால் தமது இடக்கரத்தால் மெதுவாகத் தொட்டாலே சென்று தீயோரின் கூட்டங்களை வழிவழியாகத் தொலைத்து விடுவது. கௌமோதகீ என்னும் அந்தக் கதையை நான் எப்பொழுதும் சரணம் அடைகிறேன். 


ரக்ஷோSஸுராணாம் கடினோக்ர கண்டச் 
சேதக்ஷரச் சோணித திக்ததாரம் | 
தம் நந்தகம் நாம ஹரே: ப்ரதீப்தம் 
கட்கம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

தீமை புரியும் அரக்கர், அசுரர் ஆகியோரின் கடுமையானதும், உக்கிரமானதுமான கழுத்துகள் என்னும் வாதங்களையும், திரிப்புகளையும் முறியடிப்பதிலேயே எப்பொழுதும் மும்முரமாய் இருக்கும் கத்தி நந்தகம் என்னும் பெயர் கொண்டது. ஹரியின் கையில் திகழ்வது. அந்தக் கட்கத்தை நான் எப்பொழுதும் சரணம் அடைகிறேன். 


யஜ்ஜ்யாநிநாத ச்ரவணாத் ஸுராணாம் 
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய: | 
பவந்தி தைத்யாசநி பாணவர்ஷி 
சார்ங்கம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

எந்த வில்லின் நாணொலியைக் கேட்டதும் தேவர்களின் உள்ளம் பயம் நீங்கித் தெளிவடைகிறதோ அந்த வில்லானது சார்ங்கம் ஆகும். தீயோரின் கூட்டத்திற்கு இடியேறென அம்புமழை வீழ்த்தி அழிக்கும் தன்மையது. அந்தச் சார்ங்கம் என்னும் வில்லைச் சரணம் அடைகிறேன். 


இமம் ஹரே: பஞ்சமஹாயுதானாம் 
ஸ்தவம் படேத் யோSனுதினம் ப்ரபாதே | 
ஸமஸ்த துக்காநி பயாநி ஸத்ய: 
பாபாநி நச்யந்தி ஸுகாநி ஸந்தி || 

தினமும் காலையில் இந்த ஹரியின் ஐந்து பெரும் ஆயுதங்களைக் குறித்த துதியை யார் படிக்கின்றார்களோ அவர்களின் அனைத்து துக்கங்கள், பயம், பாபம் எல்லாம் அழிந்து போகின்றன. சுகமே விளைகிறது. 


வநே ரணே சத்ரு ஜலாக்நி மத்யே 
யத்ருச்சயாபத்ஸு மஹாபயேஷு | 
இதம் படந் ஸ்தோத்ரம் அநாகுலாத்மா 
ஸுகீபவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ: || 

வனத்தில் இருந்தாலோ, போர்க்களத்தில் இருந்தாலோ, அல்லது பகைவரின் நடுவே, நீரின் நடுவே, நெருப்பின் நடுவே, எதிர்பாராது விளைந்த ஆபத்துகளின் நடுவே பெரும் பயத்தில் மாட்டிக்கொண்டாலோ இந்தத் துதியைப் படிப்பவரின் மனம் துயரகன்று அவருக்குச் சுகமே விளையும். அனைத்து விதங்களிலும் அவர் காப்பாற்றப்பட்டவர் ஆகிறார். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, February 12, 2022

அனுமனைத் துதி மனமே! காலை, மதியம், மாலையில்...

அனுமன் என்பவர் கடவுளை ஸ்ரீராமனாகவே கண்டு அந்த அனுபவத்தில் தோய்ந்தவர். தொண்டன் என்னும் பக்தி மனநிலைக்கு மிக உயர்ந்த உதாரணமாக விளங்குபவர். காலம் காலமாகப் பாரதத் திருநாட்டில் வலிமை, நல்ல இதயம், மிக நுண்ணிய புத்தி கூர்மை, இடர்களையெல்லாம் கடந்து கடவுளுக்குரிய தொண்டை நிறைவேற்றும் பராக்கிரமம், சொல்வன்மை, ஆனால் அதேநேரம் யாரையும் மனம் நோகச் செய்யாத இனிய கூறும் நாகரிகம், உண்மையை என்றும் கைக்கொள்ளுதல், தம்மிடம் மிகப்பெரும் பலம் இருப்பினும் அதை அரக்கத்தனமாகப் பயன்படுத்தாமல் தெய்விகமாக அந்த வலிமையை அனைவருக்கும் பயன்படும்படிச் செய்தல் என்னும் நற்குணங்கள் அத்தனைக்கும் இளைஞர்களுக்கும், முதியோர்க்கும் ஒருங்கே ஓர் உத்வேகமாக விளங்கி வருவது அனுமன். அவரைக் குறித்து நெடுங்காலமாக ஒரு தோத்திரம், ஹனுமத் ஸ்மரண ஸ்தோத்திரம் என்று வழங்குகிறது. காலை, பகல், மாலை என்று மூன்று வேளைகளிலும் அனுமனை நினைத்துப் பார்ப்பதால் மேற்கூறிய நற்குணங்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஊக்கமுடன் எழுவதற்குக் காரணமாகிறது. 


ப்ராதஸ்மராமி ஹனுமந்தம் அநந்தவீர்யம் 
ஸ்ரீராமசந்த்ர சரணாம்புஜ சஞ்சரீகம் | 
லங்காபுரீதஹன நந்தித தேவ வ்ருந்தம் 
ஸர்வார்த்த ஸித்தி ஸதனம் ப்ரதித ப்ரபாவம் || 

அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதில் வல்லவர் 
மிகுந்த மகிமை கொண்டு விளங்குபவர் 
எல்லையற்ற ஆற்றல் வாய்ந்து திகழ்பவர் 
ஸ்ரீராமசந்திரரின் இணையடித் தாமரையில் வட்டமிடும் வண்டு போன்றவர் 
தீயோரின் இடங்களை அழித்துத் தேவர்களுக்கு மகிழ்ச்சி தந்தவர் 
அந்த அனுமந்தரைக் காலையில் வணங்குகிறேன். 

மாத்யம் நமாமி வ்ருஜினார்ணவ தாரணைக 
தீரம் சரண்யம் உதிதானுபம ப்ரபாவம் | 
ஸீதாSSதிஸிந்து பரிதோஷண கர்ம தக்ஷம் 
வந்தாரு கல்பதரும் அவ்யயம் ஆஞ்ஜநேயம் || 

(S - என்று சுலோகத்தின் நடுவில் குறி வந்தால் குழம்ப வேண்டாம். அங்கு ‘அ’ என்ற உச்சரிப்பு என்று பொருள். இரண்டு S வரும்போது ஆ என்று கொள்ளலாம். இது சுலோகங்களை எழுதும் போது நெடுநாளைய ஒரு வழக்கம்) 

நம்மைப் பாபக் கடலைத் தாண்டவைப்பதில் தவறாத உறுதி பூண்டவர். சரணம் புகத் தகுந்த தெய்வம் அவர். தனக்குவமையில்லாப் பேராற்றலைக் காட்டுபவர். சீதையின் துயர்க்கடலை வற்ற அடிப்பதில் வல்லவர். வணங்கும் அடியார்க்குத் தேய்வற்ற நன்மைகளைப் பொழியும் கற்பக மரமே அவர். அத்தகைய ஆஞ்ஜநேயரை மதியம் வணங்குகிறேன். 

ஸாயம் பஜாமி சரணோபஸ்ருதாகிலார்த்தி 
புஞ்ஜப்ரணாசனவிதௌ ப்ரதிதப்ரதாபம் | 
அக்ஷாந்தகம் ஸகலராக்ஷஸ வம்சதூம 
கேதும் ப்ரமோதித விதேஹஸுதம் தயாளும் || 

சரணடைந்தோரின் துயரங்களை ஒருசேரக் குவித்து அழித்துவிடுவதில் பெரும் நிபுணர். விளங்கித் தோன்றும் வல்லமை மிக்கவர். அக்ஷனுக்கு அழிவாய் வந்தவர். அனைத்துத் தீயபுந்தி அரக்கர்களை வழிவழியாக மாய்ப்பதில் தூமகேது அவர். விதேஹரின் புத்ரியான சீதைக்கு மகிழ்ச்சியை விளைவிப்பவர். தயையின் உருவம் அவரே. அத்தகைய அனுமனை சாயங்காலத்தில் வழிபடுகிறேன். 
(தோத்திரக் குறிப்புகள் உதவி நூல் -- ஸ்ரீஹனுமத் ஸ்துதிமஞ்ஜரீ, மஹாபெரியவாள் ட்ரஸ்ட்,) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, February 11, 2022

அன்னையிடம் பிரார்த்தனை

யா ஸ்ரீ: ஸுக்ருதினாம் பவநேஷு அலக்ஷ்மீ: 
பாபாத்மனாம் க்ருததியாம் ஹ்ருதயேஷு புத்தி: | 
ச்ரத்தா ஸதாம் குலஜன ப்ரபவஸ்ய லஜ்ஜா 
தாம் த்வாநதா: ஸ்ம பரிபாலய தேவி விச்வம் || 

நல்லவர்களின் உறைவிடங்களில் ஓங்கும் செல்வமாக நீ இருக்கிறாய். பாபிகளிடம் அலக்ஷ்மியாக இருப்பதும் நீ. பக்குவப்பட்டவர்களின் இதயத்தில் புத்தியாக விளங்குவதும் நீ. ஸத்துக்களின் சிரத்தையாக நீயே இருக்கிறாய். நல்லொழுக்கம் வாய்ந்தவர்பால் பிறந்து வளர்வோரிடத்தில் மிளிரும் வெட்கமாக நீயே இருக்கிறாய். அன்னையே! உன்னையே வணங்கினோம். உலகம் அனைத்தையும் பாதுகாத்தருள்வாய்! 

மேதாஸி தேவி விதிதாகில சாஸ்த்ர ஸாரா 
துர்காஸி துர்கபவஸாகர நௌரஸங்கா | 
ஸ்ரீ:கைடபாரி ஹ்ருதயைக க்ருதாதிவாஸா 
கௌரீ த்வமேவ சசிமௌலிக்ருத ப்ரதிஷ்டா || 

அனைத்து சாத்திரங்களையும் உணரவல்ல மேதைமையாக நீயே இருக்கிறாய். கடத்தற்கரிய பவ சாகரத்தைக் கடப்பதற்கேற்ற படகாகவும் நீயே விளங்குகிறாய். கைடபன் போன்ற அசுரர்களை அழிக்கவல்ல திருமாலின் இதயத்தில் விளங்கும் ஸ்ரீதேவி நீ. தலையில் நிலவு சூடிய சிவனின் பாகமான கௌரியும் நீயே. 

தே ஸம்மதா ஜனபதேஷு தநாநி தேஷாம் 
தேஷாம் யசாம்ஸி ந ச ஸீததி பந்துவர்க்க: | 
தந்யாஸ்த ஏவ நிப்ருதாத்மஜ ப்ருத்ய தாரா 
யேஷாம் ஸதாப்யுதயதா பவதீ ப்ரஸந்நா || 

யாரிடம் நீ அகம் மகிழ்ந்து அருள் பூத்துக் குன்றாத வளத்தை வழங்குகிறாயோ அவர்களே ஜனங்களிடம் இதயம் ஒப்பிய நன்மதிப்பைப் பெறுகிறார்கள். அவர்களே மெய்யான புகழை அடைகின்றனர். அவர்களின் உறவுகள் கெடுதல் உறுவதில்லை. தனம், மக்கள் செல்வம், வேலைக்காரர், மனைவி கணவர் என்று அவர்களே உலகில் சிறந்து வாழ்கின்றனர். 

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசேஷ ஜந்தோ: 
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி | 
தாரித்ரிய துக்க பயஹாரிணி கா த்வதந்யா 
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா || 

கஷ்டத்தில் உன்னை நினைத்தால் எந்த உயிர்க்கும் உள்நிலவும் அச்சத்தை மிச்சமின்றி நீக்கிவிடுகிறாய். நன்றாக இருக்கும் போது உன்னை நினைத்தாலோ அளவற்ற சுபங்களை ஈட்டும் புத்தியை அருள்கிறாய். ஏழ்மை, துக்கம், அச்சம் அனைத்தையும் முழுதும் அழிக்கும் உன்னை விட்டால் வேறுயாருண்டு அம்மா! அல்லல்படும் உயிர்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவும் அருள்வடிவம்? 
(மார்க்கண்டேய புராணத்தில் வரும் சில சுலோகங்கள்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, February 7, 2022

பராங்குச அஷ்டகம் - நம்மாழ்வார் மீது செய்யுள் எட்டு

நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூரில் அவதரித்தவர். பிறந்த கணம் முதல் உலகியலை முற்றிலும் அகற்றிக் கடவுள் என்ற ஒரு விஷயத்திலேயே ஊறி நின்றவர். புளியமரத்தினடியில் சென்று அதே பகவத் தியானத்தில் அமர்ந்துவிட்டவர். தமிழ்ப் புலவர். கோவை இலக்கியவகையில் திருவிருத்தமும், அந்தாதி நடையில் வெண்பாவாக பெரிய திருவந்தாதியும், திருவாசிரியமும், திருவாய்மொழி ஆயிரம் பாட்டு அந்தாதியாகப் பாடியருளியவர். அந்தத் திருவாய்மொழியில் ஏதோ ஒரு பத்துப் பாசுரங்கள் தேசாந்திரிகளாக வரும் சிலர் பாட அதை உற்றுச் செவிமடுத்த நாதமுனிகள் அவர்களை வினவி, அதன் முழு ஆயிரம் பாட்டும் எங்கே கிடைக்கும் என்று தேடித் திரிந்து மீட்டது நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். அதிலும் திருவாய்மொழி தமிழ் வேதத்தே நடுவண் சிறப்பு பொலியும் தன்மையது. கடவுளே தமக்கு உகந்த ராஜ்ஜியமாக அந்தத் திருவாய்மொழியைக் கொண்டிருக்கிறார் என்பதால் பகவத் விஷயம் என்னும் சிறப்பும் மிக்கது. தமிழில் வெளிப்பட்ட வேதம் என்று நாதமுனிகள் தொடங்கி, ஸ்ரீராமானுஜர் வழியாக, கோயில் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள் என்று அத்தனை பூர்வாசாரியர்களும் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் ‘பிரபன்ன குலமாகிய எங்கள் குலத்தின் ஆதித் தலைவன்’ என்று கொண்டாடுகிறார்கள். கொண்டாடுவதோடில்லை. வழிபடுகிறார்கள். வழிபடுவது மட்டும் இல்லை. நம்மாழ்வாரையும், அவரது சொற்களையுமே தம் உயிர்நிலையாகக் கொண்டு இறும்பூதடைகின்றனர். ஸ்ரீவேதாந்த தேசிகரோ நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஓதி ‘தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே’ என்று விம்மிப் பெருமிதம் அடைகிறார். ஏதோ ஒரு காலத்தில் சொன்னார்கள். அப்புறம் நாளாவட்டத்தில் அதெல்லாம் மாறிவிட்டது என்று ஆகக் கூடாது என்பதற்காக ஒரு வேலை செய்தார்கள் அந்தப் பெரியோர்கள். என்ன அது? 

பெரியோர்கள் பல சமயம் நம்மாழ்வார் விஷயமாகச் செய்திருக்கும் தனிச் செய்யுட்களையும், கூரத்தாழ்வான் செய்துள்ள இரண்டு செய்யுட்களையும், ஸ்ரீபராசர் பட்டர் நம்மாழ்வார் மீது செய்திருக்கும் செய்யுள் ஒன்றையும், ஜீயர் நாயனார் செய்த செய்யுள் ஒன்றையும் சேர்த்து எட்டுச் சுலோகங்களையும் பராங்குச அஷ்டகம் என்று பெயரிட்டு விட்டனர். அஷ்டகம் என்றால் எட்டுச் செய்யுள். அந்தப் பராங்குச அஷ்டகத்தைத் தினம் தினம் வைணவர்கள் யாவரும் தமது அன்றாடம் பூசையின் கடைசியில் சொல்லித் தியானிக்க வேண்டும் என்று வைத்துவிட்டனர். அஃது பல நூற்றாண்டுகளாக விடாமல் ஒவ்வொரு வைணவனின் பூஜை அறையிலும் ஒலிக்கிறது. அவர்தம் மனத்தில் தியான விஷயமாக நிலவுகிறது. பிழைப்பின் நிமித்தமாக உலகின் எந்த மூலைக்குப் போனாலும் சரி, ஒரு வைணவ வீட்டில் தினசரி பூஜையில் ஒலிக்கும் தவறாத பகுதி இந்தப் பராங்குச அஷ்டகம். 

சற்றே நின்று நிதானித்து யோசித்துப் பாருங்கள். திருமால் காதலில் ஒரு தமிழ்ப் புலவர் பாடிய பிரபந்தங்கள். திருமாலின் சிந்தையிலேயே தோய்ந்தமர்ந்த ஒரு தமிழ்க் குழந்தை. அவர்தான் திருமால் அடியார் குலத்தின் ஆதித் தலைவர் என்றும், அவர் அடி சூடுவதே தம் தலைக்கு உற்ற பெரும் பேறு என்றும், தினமும் வழிபாட்டில் அவரைப் போற்றிப் புகழ்ந்து ஓர்மை கொள்வதே பல நூற்றாண்டுகளாக விடாமல் வருகின்ற வழக்கமாகவும் ஆகி நிற்பதற்கு யார் காரணம்? நாதமுனிகளின் கனவை நனவாக்கி நன்கு நிலைப்படுத்திக் காலம் வென்ற கோலமாய் ஆக்கியது அந்தப் பெருமகன் ஸ்ரீராமானுஜர் அன்றோ! அவரை அடியொற்றி வந்து தழைத்த ஆசிரியன்மார் அன்றோ! 

முதல் சுலோகம் : 

த்ரைவித்ய வ்ருத்தஜன மூர்த விபூஷணம் யத் 
ஸம்பச்ச ஸாத்விகஜனஸ்ய யதேவ நித்யம் | 
யத்வா சரண்யமசரண்ய ஜனஸ்ய புண்யம் 
தத்ஸம்ச்ரயேம வகுளாபரணாங்க்ரி யுக்மம் ||

த்ரைவித்யா என்னும் வேதத்தில் துறைபோய வைதிகர்க்குச் சென்னியில் சூடும் அணியாகத் திகழ்கிறது. சாத்விகமான மனிதரின் நிலைத்த அருநிதியமாக விளங்குகிறது. புகலற்ற மனிதர்களின் ஒரே புகலாகவும் புண்ணியமாகவும் காக்கிறது. அது எதுவென்னில் வகுளாபரணர் என்னும் நம்மாழ்வாரின் மலரடியிணையே ஆகும். அந்தத் திருவடிகளை வணங்குவோமாக. 

இரண்டாவது சுலோகம் : 

பக்திப்ரபாவ பவதத்புத பாவபந்த 
ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌகபூர்ண: | 
வேதார்த்த ரத்னநிதி: அச்யுத திவ்ய தாம 
ஜீயாத் பராங்குச பயோதி: அஸீமபூமா || 

பக்திப் பெருக்கெடுத்து அற்புதமான உணர்வின்பாவங்களாய் உருத்திரண்டு உன்னதத் திருமால் காதலே வெள்ளமிடச் சுவையனைத்தும் முழுமையாய் விளங்குவதும், வேதார்த்தங்கள் நன்கு விளங்கித் தோன்றும் ரத்தினநிதியாய், நிலைபெயரா அச்சுதன் மருவி மகிழும் திவ்ய நிலையமாய், அளவற்ற மகிமையுடைத்தாய்த் திகழும் பராங்குசன் என்னும் நம்மாழ்வாராகிய பெருங்கடல் என்றென்றும் விளங்குவதாகட்டும். 


மூன்றாவது சுலோகம் : 

ருஷிம்ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணாதத்வம் இவ உதிதம் | 
ஸஹஸ்ரசாகாம் யோSத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்மஸம்ஹிதாம் || 

கிருஷ்ணன்பால் வேட்கையெனும் தத்துவமே வடிவுகொண்டாலொப்பத் தோன்றியவரும், ஆயிரம் பாசுரங்கள் விளங்கும் தமிழ்மறையைக் கண்டுணர்ந்தவருமான அந்த ருஷியை நாங்கள் போற்றித் துதிக்கின்றோம். 


நான்காவது சுலோகம் : 

யத்கோஸஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் 
நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர: | 
யந்மண்டலம் ச்ருதிகத ப்ரணமந்தி விப்ரா: 
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய || 

மாந்தரின் புற இருட்டைத் தன் ஆயிரம் கதிர்களால் நீக்கும் சூரியன் போன்று அவர்தம் அக இருட்டை ஆயிரம் பாசுரச் சுடர்களால் யார் நீக்குகின்றாரோ, யாருடைய மொழியில் நாராயணன் சங்கசக்கரபாணியாய் எப்பொழுதும் உறைகின்றானோ, சூரியமண்டலத்தை வேதமந்திரங்களால் ஏற்றித் தொழுது கையெடுத்துக் கும்பிடுவது போன்று, மண்டலித்தல் என்னும் அந்தாதியாக அமைந்த திருவாய்மொழியைத் தந்த யாருடைய ஊர் காதில் பட்டதும் வைதிகர்கள் கையெடுத்துக் கும்பிடுகிறார்களோ அந்த வகுளபூஷணர் என்னும் நம்மாழ்வாராகிய கதிரவனை வணங்குகிறோம். 


ஐந்தாவது சுலோகம் : 

பத்யு: ச்ரிய: ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வக்ஞ ஸம்பதம் | 
ப்ரபந்நஜந கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீபராங்குசம் || 

திருமால் திருவருளால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவரும், பிரபன்னஜனங்களுக்கெல்லாம் நடுநாயகமாய்த் தலைவர் ஆனவரும் ஆன ஸ்ரீபராங்குசர் என்னும் நம்மாழ்வாரைச் சரணம் புகுகிறேன். 


ஆறாவது சுலோகம் : 

சடகோப முநிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் | 
அக்ஞானாம் ஜ்நாந ஜனகம் திந்த்ரிணீமூல ஸம்ச்ரயம் || 

கோணல் புத்தியுள்ளவரின் துர்புத்தியை நீக்குபவர், அஞ்ஞானத்தில் இருப்பவருக்குள் ஞானத்தைப் பிறப்பிப்பவர், புளியமரத்தின் அடியில் சென்று அமர்ந்தவருமான சடகோப முநியாகிய நம்மாழ்வாரை வணங்குகிறேன். 


ஏழாவது சுலோகம் : 

வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் | 
ய: ச்ருதேருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா || 

வகுளாபரணர் (வகுளமாலையைத் தரித்தவர்) உலகிற்கே ஆபரணம் ஆனவர். வேதத்தின் உத்தரபாகம் என்னும் உபநிஷதங்களை அவரே தமிழ் மொழியில் திவ்யமான பிரபந்தமாய்த் தந்தார். அந்த ஜகத்திற்கே ஆபரணமான வகுளாபரணரை வணங்குகிறேன். 


நமஜ்ஜனஸ்ய சித்தபித்தி பக்திசித்ர தூலிகா 
பவாஹிவீர்ய பஞ்ஜனே நரேந்த்ர மந்த்ரயந்த்ரணா | 
ப்ரபன்னலோக கைரவ ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா 
சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத்துநோது மே தம : || 

தம்மை வணங்கும் ஜனங்களின் சித்தச் சுவரில் பக்தியின் சித்திரத்தை எழுதும் ஓவியக்கோல் போன்று இருக்கிறது, சடம் என்னும் மாயையை முனிந்த நம்மாழ்வாரின் கையில் விளங்கும் முத்திரை. மேலும் அதுவே உலகியல் ஆகிய கொடிய பாம்பின் விஷத்தை முறிக்கும் வைத்தியனின் மந்திரயந்திரம் போன்றும் இருக்கிறது. மேலும் பார்த்தால் பிரபன்னர்களாகிய திருமால் அடியார்கள் என்னும் ஆம்பல் மலர எழுகின்ற இனிய குளிர்நிலவம் போன்றும் திகழ்கிறது. அந்தச் சடத்தின் பகையாகிய நம்மாழ்வாரின் கைமுத்திரை எப்படியாவது என்னுடைய அக இருளைப் போக்கியருள வேண்டும். 
(குறிப்புகள் : ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியரின் ஸ்ரீராமானுஜன் இதழ்கள்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Saturday, February 5, 2022

சுதர்சன அஷ்டகம் - சக்கரத்தாழ்வார் மீது எட்டு சுலோகங்கள்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய அழகிய சுலோகங்களில் ஒன்று சுதர்சன அஷ்டகம். அஷ்டகம் என்றால் எட்டு சுலோகங்கள். சொல்லும் போதே மிகுந்த மன எழுச்சியைத் தரக் கூடியது. மனக்கஷ்டங்களைத் தீர்க்கவல்லது.

ஆறு கோணச் சக்கரத்தைப் பின்னணியில் கொண்டு சக்கரத்தாழ்வார் சந்நிதியில் கண்டு வழிபட்டிருப்போம். சக்கரத்தாழ்வாருக்குப் பெயரே சுதர்சனர் என்பதாகும்.

ஸு தர்சனம் என்றால் நற்காட்சி என்று பொருள். அனைத்து நன்மைகளுக்கும் அச்சாணியாய் அமைவது நல்ல காட்சியாகும். நாம் காண்பது சரியாகவும் நன்மையாகவும் அமைவதுதான் நம் முன்னேற்றத்தின் தொடக்கம். அத்தகைய காட்சி ஒருவருக்கு காலத்தில்தான் கனிந்து வரவேண்டும். எனவேதான் சுதர்சனர் காலம் என்ற தத்துவத்தைக் குறிப்பவராய் இருக்கின்றார்.

காலம் என்ற தத்துவத்தைத் தம் கையில் சக்கரமாக ஏந்தி ஆள்பவர் நாராயணர். நாராயணர் என்ற பெயரே பெரும் பொருளுடையது. நாரம் என்றால் நீர் என்று பொருள். மேலும் நித்யமான தத்துவங்களையெல்லாம் ஒரு சேரக் குறிக்கும் சொல்லும் நாரம் என்பதாகும். நாரம் என்றால் உயிர்கள் என்றும் பொருளாகும். அயநம் என்றால் புகல். சென்றடையும் இடம். உயிர்களுக்கெல்லாம் உற்ற புகலாய் இருப்பவன் என்பதை நாராயணன் என்னும் பெயர் குறிக்கும். அவர் கையில் சுழலும் காலச்சக்கரம் சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வான்.

சுதர்சனரின் அருளால் நமக்கு ஸ்ரீகடாக்ஷம் கிட்டுகிறது. திருமகள் பார்வை என்பதே நன்மை அனைத்துக்கும் வித்து. என்றால் இந்தச் சுலோகம் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை உணரலாம். அத்தனையும் உள்ளடக்கி ஸ்ரீ வேதாந்த தேசிகர் அழகான, சிறிய சிறிய செறிவான பதங்களால் இந்தச் செய்யுளை இயற்றியிருப்பது மிகவும் சிறப்பு. இதை நெடுங்காலமாகப் பலரும் சொல்லி வருகின்றார்கள். பொருளும் உணர்ந்து சொன்னால் கூடுதல் சிறப்பன்றோ!

*

முதல் சுலோகம் : 

ப்ரதிபட ச்ரேணி பீஷண
வரகுண ஸ்தோம பூஷண
ஜநிபய ஸ்தாந தாரண
ஜகதவஸ்தான காரண I
நிகில துஷ்கர்ம கர்சன
நிகம ஸத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன II

பகைகளின் அணிக்குப் பயமானவர்
உயர்குணங்கள் எல்லாம் அணியானவர்
பிறவியச்சம் நீக்கிக் காப்பவர்
பிரபஞ்சம் நிலைக்கும் காரணம் ஆனவர்
தீச்செயல் அனைத்தும் துடைப்பவர்
நல்வழி அனைத்தும் காட்டுபவர்
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன !
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன !!




இரண்டாவது சுலோகம் : 

சுபஜகத் ரூப மண்டன
ஸுரகண த்ராஸ கண்டன
சத மக ப்ரஹ்ம வந்தித
சத பத ப்ரஹ்ம நந்தித |
ப்ரதித வித்வத் ஸபக்ஷித
பஜதஹிர் புத்ன்ய லக்ஷித
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


நலந்திகழ உலகுருவாய் ஒளிர்பவனே!
தேவர்கள் அச்சத்தை மாய்ப்பவனே!
இந்திரன் நான்முகன் வணங்க நின்றவனே!
எண்ணிலா மறைகள் போற்றி மகிழ்பவனே!
மெய்ப்புகழ் ஞானியர் பக்கல் நின்றவனே!
அகிர்புத்ன்ய ருத்ரன் போற்றும் பரம்பொருளே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன!
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன !!



மூன்றாவது சுலோகம் : 

ஸ்புட தடிஜ்ஜால பிஞ்ஜர
ப்ருதுதர ஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ன விக்ரஹ
படுதர ப்ரக்ஞ துர்க்ரஹ |
ப்ரஹரண க்ராம மண்டித
பரிஜந த்ராண பண்டித
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


நின்றொளிரும் மின்னல்கள் சூழ் பொன்னுருவே !
பொங்குசுடர் மண்டும் பெரும் கூடாய் பொலிந்தவனே!
தேவர்கள் சூழ்ந்தமர்ந்த யந்திர விக்ரகனே!
மதிமிகுந்த அறிஞர்களும் மனம் கொள்ள அரியவனே!
ஆயுதப்படைகள் பொலிய அருள்பூத்து நின்றவனே!
அடியவரைக் காப்பதிலே தவறாத பண்டிதனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



நான்காவது சுலோகம் : 

நிஜபத ப்ரீத ஸத்கண
நிருபதி ஸ்பீத ஷட்குண
நிகம நிர்வ்யூட வைபவ
நிஜபர வ்யூஹ வைபவ |
ஹரி ஹய த்வேஷி தாரண
ஹர புர ப்லோஷ காரண
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


மெய்யான பதம் அடைந்து மகிழும் ஞானியர் சூழ இருப்பவனே!
இயல்பாய்ப் பொலிந்த குணங்கள் ஆறும் பூரணமாய்த் திகழ்பவனே!
வேதங்கள் விளக்கி ஓயும் வைபவம் மிக்கவனே!
சத்யமாய் விளங்கும் பரம் முதலிய வ்யூஹங்களில் ஒளிர்பவனே!
இந்திரனார் எதிரிகளை முறியடிக்கும் வல்லவனே!
புரமெரித்த அரனார்க்குத் துணைசெய்யும் புங்கவனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



ஐந்தாவது சுலோகம் : 

தநுஜ விஸ்தார கர்த்தன
தநுஜ வித்யா நிகர்த்தன
ஜநிதமிஸ்ரா விகர்த்தன
ஜகதவித்யா நிவர்த்தன |
அமர த்ருஷ்ட ஸ்வவிக்ரம
ஸமர ஜுஷ்ட ப்ரமிக்ரம
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


அசுரர் வளராது அழிக்கும் ஆற்றலோய்!
அசுரரின் மாயையை அகற்றும் திறலோய் !
பிறவிப் பேரிருள் போக்கும் பெருஞ்சுடரே !
பக்தரின் அவித்தையை நீக்கும் நிர்மலனே!
அமரர் வியக்கும் தன் விக்ரமம் மிக்கோனே!
சமர்களில் பிரமித்திடும் செயல்பல செய்வோனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



ஆறாவது சுலோகம் : 

ப்ரதிமுகாலீட பந்துர
ப்ருதுமஹா ஹேதி தந்துர
விகடமாலா பரிஷ்க்ருத
விவிதமாயா பஹிஷ்க்ருத |
ப்ருதுமஹா யந்த்ர தந்த்ரித
த்ருட தயா தந்த்ர யந்த்ரித
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ||


காப்பதற்கு எப்பொழுதும் ஒரு காலை முன்வைத்தபடி நீ நிற்கும் அழகால் உருக்குகின்றாய்!
பெரிதும் மகத்தானதுமான படைகள் பூண்டு நிற்பவனே !
உன் அருளில் உள்ளம் நிறைந்து பக்தர்கள் சூட்டிய பல்வித மாலைகளை அவர்கள் உள்ளம் குளிர அணிந்து நிற்பவனே!
விதவிதமான மாயைகள் எத்தனை வரினும் அவையெல்லாம் அண்டாதபடிப் புறத்தில் ஓட்டுபவனே!
பெரும் மகத்தான யந்த்ரமான ஸம்ஸாரத்தைச் சுழட்டும் வலவா!
ஆனாலும் பக்தர்கள்பால் தயை என்பதால் கட்டப்பட்டு அவர்கள் அன்பிற்கு ஆடும் யந்த்ரம்போல் இருப்பவனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



ஏழாவது சுலோகம் : 

மஹித ஸம்பத் ஸதக்ஷர
விஹித ஸம்பத் ஷடக்ஷர
ஷடர சக்ர ப்ரதிஷ்டித
ஸகலதத்வ ப்ரதிஷ்டித |
விவித ஸங்கல்ப கல்பக
விபுத ஸங்கல்ப கல்பக
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ||


மகத்தான ஞான நிதி வாய்த்த ஞானிகளின் அழியாத பேறே!
விதித்தபடி உன்னை உபாசிப்பவருக்கு அனைத்து வளமும் தரும் ஆறெழுத்து மந்திரமாய் அமைந்த விஷ்ணுவே!
ஆறு கோணங்கள் திகழும் சக்கரத்தில் நிலைபெற்றவனே!
தத்துவங்கள் அனைத்திலும் பெயராமல் நிலைகொண்டவனே!
விதவிதமான சங்கல்பங்களைச் செய்து நீ கருதியதை முடித்துவிடுகிறாய்!
தேவர்களின் சங்கல்பங்களையெல்லாம் அருளும் கல்பகமரமாய் விளங்குகின்றாய்!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



எட்டாவது சுலோகம் : 

புவன நேத்ரஸ் த்ரயீமய
ஸவனதேஜஸ் த்ரயீமய
நிரவதி ஸ்வாது சிந்மய
நிகிலசக்தே ஜகந்மய |
அமித விச்வ க்ரியாமய
சமித விஷ்வக் பயாமய
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


உலகத்தினர்க்கு புலனுக்கெட்டாத கடவுளைக் காணவல்ல கண் போன்ற வேதமயனே!
வேள்விகளுக்கு இன்றியமையாத முத்தீயாய்த் திகழ்பவனே!
ஆரா அமுதே நிறைந்த சின்மயனே!
சக்திகள் அனைத்துமாய்த் திகழ்பவனே! உலகுள் உறைபவனே!
அளவற்ற உலகின் படைப்பு முதலிய கிரியையானவனே!
புறமெங்கும் சூழும் வியாதிகளைத் தணித்துப் பயத்தை நீக்குபவனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம் படதாம் வேங்கடநாயக ப்ரணீதம் |
விஷமேSபி மநோரத: ப்ரதாவந்ந விஹந்யேத ரதாங்க துர்யகுப்த: ||


இருநான்கு சுலோகமிது
எல்லையற்ற சுவையுளது
வேங்கடநாதர் இயற்றியது
இதைப் படிப்பவரின் மனோரதங்கள் நிறைவேறும்
விஷமத்தால் அலைபாய்ந்திடினும்
விறல்மிகு சக்கரம் காத்திடுமே
வேண்டிய நன்மைகள் விளைந்திடுமே. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, February 4, 2022

ஆகமம் என்பதன் பொருள்

ஆகமம் என்ற வார்த்தை அடிக்கடிப் பேசப்படுவதைக் கேட்டிருப்போம். ஆன்மிகம், கோவில், வழிபாடு, சமயச் சான்று நூல் என்னும் கருத்துகள் சமபந்தமாக இந்தச் சொல் நம் காதில் அடிக்கடி விழுந்துகொண்டிருக்கும். அதே நேரத்தில் வேதம், சாத்திரம் என்னும் சொற்களும் பிரபலமாகப் பயன்படுபவை. இந்த அளவிற்கு இல்லையென்றாலும் கொஞ்சம் நன்கு கற்றவர்கள் மத்தியில், அல்லது சமயச் சொற்பொழிவுகளில் காதில் விழக்கூடிய சொற்கள் நிகமம், பிரமாணம் என்பன. பொதுவாக இந்தச் சொற்களுக்குப் பொருள் என்ன என்பதைக் குறித்த ஒரு சின்ன தெளிவாக்க முயற்சிதான் இப்பொழுது இதில் நாம் பார்க்கப் போவது. எளிய அறிமுகம் என்பதால் அனைத்தையும் உள்ளடக்கி, மேற்கோள்களை விரித்து விரிவாகப் பார்த்தால் தொடங்கியவுடன் பலருக்கும் தூக்கம் வந்துவிடக் கூடும். எனவே பொருள் தெரியாமலேயே இந்தச் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாகக் கொஞ்சம் தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் என்பவர்களுக்காக எழுதப்படுவது இது. எனவே பண்டிதர்கள் மன்னிக்க வேண்டும். 

வேதம் என்றால் என்ன என்று அடிப்படையாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டால் ஆகமம் என்பது இன்னும் புரியும். வேதம் என்பது அறிவு, அறிவது என்னும் பொருளுடையது. அப்படிப் பார்த்தால் நாம் எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். ஒவ்வொரு துறையிலும் அறிவு என்பது ஏற்படுகிறது. அந்தப் பொருளில் வேதம் என்ற சொல் பயன்படுகிறதா? என்றால் சிறிது வேறுபாடு இருக்கிறது. 

உலகில் பல துறைகளிலும் நாம் அடையும் அறிவு பிரத்தியக்ஷம் என்னும் புலனறிவு, அனுமானம், பரிசோதனை, அதைத் தொடர்ந்து பரிசோதனையின் முடிவுகளை ஒருங்குற ஆய்ந்து விளக்கம் என்னும் முறைகளால் ஏற்படக் கூடியது. ஆனால் கடவுள் என்ற விஷயத்தில் இவ்வாறு புலனறிவு, அனுமானம், பரிசோதனை என்னும் முறைகளால் அறிய முடியாது. புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது கடவுள். கண்ணால் ஏதோ ஒரு சமயம் கண்டதை வைத்துத்தான் அனுமானம் என்பதையும் நம்மால் செய்ய முடியும். எனவே கடவுள் விஷயத்தில் அனுமானமும் உதவாது. பரிசோதனை சொல்லவே வேண்டாம். அப்படியென்றால் கடவுளைப் பற்றி எப்படி அறிவது? அதற்குக் கடவுளே தம்மைக் குறித்து தம் அருளால் ஒவ்வொரு காலங்களில் ஒவ்வோர் இடங்களில் அருளாளர்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது உலகில் வழங்கும் பல மதங்களிலும் உள்ள நம்பிக்கையாளர்களின் கருத்து. சில நூல்கள் மனிதர்கள் மூலம் வந்திருப்பினும் அந்த நூல்கள் அவர்களால் எழுதப்பட்டவை அன்று. கடவுள் அருளால் அவர்கள் மூலமாக வெளியானவை என்பது அவர்களின் கருத்து. 

அப்படிக் கடவுள் அருளால் வெளிப்பட்ட நூல்களை இந்துமதத்தில் வேதம் என்கிறோம். சுருதி, மறை, வேதாந்தம், உபநிஷதங்கள் என்று பல பெயர்களிலும் சொன்னாலும் அடிப்படையில் வேதம் என்பது என்ன என்பதை இப்பொழுது நாம் ஒருவாறு புரிந்துகொள்ள முடியும். அதாவது இந்திரியங்களுக்கு எட்டாத தத்வார்த்தமான கடவுள் என்பதை அறிய நமக்கு வாய்த்த வழிதான் வேதம் என்பது. 

கடவுள் என்பதோ புலன்களுக்கு அப்பாற்பட்டது என்னும் போது அவரைக் குறித்து வேதம் சொல்வதுதான் நமக்கு அறுதியான அறிவு என்பதால் நிகமம் என்றும் சொல்லப்படுகிறது. என்றோ அருளாளர்களின் மூலம் வெளிப்பட்டு நமக்குக் கிடைத்த கடவுள் இயல் குறித்த அறிவு நமக்கு வழிவழியாக வந்து சேர்ந்திருப்பதால் அதை ஆகமம், (வழிவழியாக வந்து சேர்ந்தது) என்றும் நூல்களில் வித்வான்கள் சொல்வதைப் பார்க்கலாம். 

அது மட்டுமின்றி, பொதுவாக அறிவைப் பெறும் வழிகள், அளவை (epistemology) என்ன என்று நியாய சாத்திரம் சொல்லும் போது பிரத்தியக்ஷம், அனுமானம், சப்தம் அல்லது ஆப்தவசனம் அல்லது ஆகமம் என்று மூன்று என்றும் சொல்கிறது. உலக விஷயங்களை அறிய பிரத்தியக்ஷமும் அனுமானமும் பயன்படுகின்றன. உலகைக் கடந்த அறிவான கடவுள் இயலைக் குறித்து அறிய சப்தம் அல்லது ஆகமம் என்பதுதான் வழி என்று பொருளாகிறது. ஆப்த வசனம் என்றால் நம்பிக்கைக்குகந்த, சான்றாண்மை மிக்கவர்களின் வார்த்தைகள் என்று பொருள். 

இப்பொழுது ஆகமம் என்றால் வழிவழியாய் வந்த ஞானம் என்று ஒரு பொருளும், ஆப்தர்களால், நம்பிக்கைக்கு உகந்த நல்லோர்களால் சொல்லப்பட்ட உபதேசம் என்றும் இருபொருள்கள் கிடைக்கின்றன. நாளடைவில் ஆகமம் என்ற இந்தச் சொல் இந்தப் பொருள்களின் அடிப்படையில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுப் பரவலாகப் புழக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே வேதம் என்றால் கடவுள் அருளால் அருளாளர்கள் மூலம் வெளிப்பட்ட கடவுள் இயலைக் குறித்த ஞானம் என்றும், ஆகமம் என்றால் நம்பிக்கைக்கு உகந்த சான்றோர்களால் உபதேசிக்கப்பட்டு வழிவழியாக வந்த நூல்கள் என்றும் பயன்பாடு ஏற்பட்டிருக்கிறது. 

மேலும் ஒரு வேறுபாடு. வேதம் என்றால் புலன்களுக்கு எட்டாத தத்துவ விஷயங்களைக் குறித்த விசாரங்களின் வடிவில் உண்மையைப் படிப்படியாக உணர்த்திக் கடவுள் இயலை நம் உணர்விற்குக் கொண்டு வருவது. ஆனால் ஆகமத்தில் இந்தக் கடவுளின் வடிவத்தை வழிபட வேண்டும் என்று முதலிலேயே திடமான முடிவுடன் ஆரம்பிப்பதால் எப்படி வழிபடுவது, வழிபாட்டின் நுணுக்கங்கள் என்ற விஷயங்கள்தாம் முக்கியமாக சொல்லப்படிருக்கும். ஆகமங்களைப் பெரும்பாலும் முனிவர்கள், யோகிகள் இயற்றியிருப்பார்கள். அல்லது அவரவர்கள் வழிபடும் கடவுளே ஒரு முனிவர்க்குச் சொன்ன வழிபாட்டு முறைகளாக இருக்கும். பொதுவாக இந்துமதத்தில் கடவுளின் சிவ மூர்த்தியைக் குறித்த ஆகமங்கள், விஷ்ணு மூர்த்தியைக் குறித்த ஆகமங்கள், சக்தி மூர்த்தியைக் குறித்த ஆகமங்கள் என்று இருக்கின்றன. 

ஆனால் ஆகமம் என்று பொதுவாக அருள்வாய்ந்த ஞானிகளாலும் யோகிகளாலும் உபதேசிக்கப் பட்ட வழிகள் என்னும் பொருளிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக ஜினரால் உபதேசிக்கப்பட்டது ஜினாகமம், புத்தரால் உபதேசிக்கப்பட்டது புத்தாகமம். 

இந்துமத ஆகமங்களைப் பார்த்தால் பொதுவான ஓர் அமைப்பு புலனாகிறது. அதாவது தம் இஷ்டமாக ஒருவர் தேர்ந்துகொண்ட தெய்வத்தை எப்படி வழிபடுவது என்பதைப் போதிக்கின்றன ஆகமங்கள். ஒருவர் தம் வீட்டில் கடவுள் அறை ஒன்றை அமைத்து அதில் தினமும் பூஜைநெறியில் வழிபாடு செய்யலாம். மேலும் தெய்வத்திற்கான கோயிலுக்குச் சென்று பல பக்தர்களோடு வரிசையில் நின்று வழிபடலாம். பெரும்பாலான மக்கள் பின்பற்றும் வழி இது. மேலும் யாரோ ஒருவர் பக்தியில் சிறந்து ஆர்வமுடன் அமைதியாகத் தினமும் நேரம் ஒதுக்கி யோக முறையில் தன்னால் இயன்றமட்டும் ஜபம், தியானம் என்று ஈடுபட்டு வழிபடலாம். இன்னும் சிலரோ ஆன்மிகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டவர்களாய்த் தத்துவ விசாரச் சிந்தனைகளில் ஈடுபட்டுப் பெரும்பகுதி நேரம் தெய்வத்தைக் குறித்தும், தம் ஆத்மாவைக் குறித்தும் ஆழ்ந்த சிந்தனை, தியானம் என்று தம் வாழ்நாளை நற்போதாக ஆக்கலாம். இதில் நான்கு விதங்கள் பார்த்தோம் அல்லவா! வீட்டில் வழிபாடு, தனி மனித மற்றும் வீட்டில் உள்ளவர்க்கான ஒழுக்க நெறிகள், கோயில் வழிபாடு மற்றும் சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், தனிப்பட யோகத்தில் வழிபாடு, ஞான விசாரத்தில் ஆழ்ந்து தோய்தல் என்னும் நான்கு வித ஈடுபாடுகளையும், வழிபாட்டு நெறிகளையும், ஒழுக்க நெறிகளையும் ஆகமம் நன்கு விளக்கமுறப் போதிப்பதைப் பார்க்கலாம். 

ஆகம நூல் ஒன்றை நீங்கள் திறந்தால் அதில் நான்கு பாதங்கள் வரும். சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என்பன. பாதம் என்றால் பகுதி என்று பொருள். சரியா மார்க்கம், கிரியா மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம் என்றும் சொல்வதுண்டு. சில ஆகம நூல்களில் இதில் சில பாதங்கள் சிறப்பாகச் சொல்லப்பட்டு மற்ற பாதங்கள் சுருக்கமாகக் கருத்துகள் தரப்பட்டிருக்கும். சரியை என்றால் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய நெறிகள், கிரியை என்பது கோயில் நிர்மாணம், உற்சவாதிகள், பூஜை நெறிகள் முதலியன. வீடு, சமுதாயம், தனி மனித மற்றும் சமுதாய ஒழுக்கம், தவம், ஞானம் என்று ஒருமித்த பார்வைதான் ஆகமம் புகட்டும் பாதை. 

சைவ ஆகமம், வைஷ்ணவ ஆகமம், சாக்த ஆகமம் ஒவ்வொன்றிலும் பல முனிவர்களும் தந்த ஆகமங்கள் உண்டு. காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், சுப்ரபேதம், விஜயம், வீரம், ரௌரவம் முதலிய 28 ஆகம நூல்கள் சைவத்தில் உண்டு. ஈச்வர சம்ஹிதை, ஜயாக்ய சம்ஹிதை, பரம சம்ஹிதை, பாரமேச்வர சம்ஹிதை, பௌஷ்கர சம்ஹிதை என்று பல சம்ஹிதைகள். மேலும் பாஞ்சராத்திரம், வைகானஸம் என்ற பிரிவுகள் கொண்டது வைஷ்ணவ ஆகமம். சாக்த ஆகமத்தில் தக்ஷிணம், வாமம், கௌலம் என்று பல பிரிவுகள், அவற்றுக்கான தந்திரங்கள், யாமளங்கள். 

ஆகமம் என்பது கோயில் சார்ந்த சொல்லாக நமக்குப் பழக்கத்தில் வந்துவிட்டது ஒரு விதத்தில் சரியே. ஏனெனில் கோயில் நிர்மாணம், மூர்த்திப் பிரதிஷ்டை, பூஜா விதிகள், உற்சவக் கிரமங்கள் என்று பல விஷயங்களும் நமக்கு ஆகமங்கள் போதிக்கின்றன. ஆயினும் ஆகமம் என்னும் சாத்திரம் இன்னும் விரிந்த பொருள் பொதிந்தது என்பதை நாம் உணர முடியும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***