Saturday, December 31, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 16

நாயகன் நாரணன் நங்கையராம் நல்லுயிர்காள்
வேய்ங்குழல் ஓசை விதித்த திருப்பாவை
மாயனை நாடித்தான் மாதவனார் கோயில்முன்
தூயோர்தம் தொல்லுரைகள் நற்றுணையாய் நாமணுகி
ஏய்ந்தமன மென்னும் இணங்குநல் காவலனால்
தோய்ந்த உளமென்னும் நந்தகோ பன்தன்னால்
ஆயன்தான் ஆதியில் நேர்ந்த உயிர்த்தொண்டே
வாய்ந்துநாம் வாழ விழைந்தேலோ ரெம்பாவாய்.

வல்லவனான கண்ணன் நினைத்தால் உயிர்கள் அவனை நோக்கித் திரும்பி அவனிடமே ஈடுபாடு கொள்ளத்தான் வேண்டும். உலக உயிர்களுக்கெல்லாம் ஏக நாயகன் ஆன கண்ணனின் அழகிலும், ஆணையிலும், ஆதரவிலும் ஈடுபட்டுத் தரித்து நிற்கும் ஜீவர்கள் அனைவருமே அவனுக்கு உற்ற நங்கையர் போன்றவர்கள். உலக விஷயங்களில் பொதுவாக ஆண் என்பதற்கு முக்கியத்துவமும், முனைப்பும் தரப்படுகிறது. அது சரியா தவறா என்பதை விட வழிவழியாக வரும் ஒரு பழக்கச் சிந்தனை என்றும் சொல்லலாம். ஆனால் உண்மையான ஆன்மிகம் என்பது பெண்மையின் கண்களைக் கொண்டு உலகைக் காணப் பழகுதல். பெண்மை என்பதை உள்ளபடி நன்கு புரிந்து கொள்ளும் பொழுதே ஆண் என்பது பொருளுள்ளதாக ஆகிறது. பெண்மை என்றால் அலட்சியம், மென்மை, வலிமையின்மை, சார்ந்து இருக்கும் தன்மை என்றெல்லாம் சொல்லித் தன்னைப் பெருமைப் படுத்திக் கொள்ளும் போது ஆண் வெற்று மனப்பாரத்தில் மாட்டிக் கொள்ளும் ஜீவன். ஆனால் கடவுளே ஒரே நாயகன். அவனுக்கு உற்ற, அவனை என்றும் சார்ந்தே இருக்கும் தன்மை பெற்ற, அவனால் தன் நன்மையும், ஆனந்தமும், வாழ்ச்சியும் என்று, என்று இந்த ஜீவன் உணர்கிறதோ அன்றே தன் உள்ளார்ந்த இயல்பு ஆன சேஷத்வம் கடவுளை நோக்கப் பெண்மையாக உணரப் படுகிறது. அப்பொழுது இதுவரையில் தான் ஆட்சி செலுத்தும் பெண்மை என்பது மாறித் தனக்குப் போதிக்கும் குருவே பெண்மை என்ற போதம் எழுகிறது. அந்தப் போதம் எழுந்தால்தான் திருப்பாவையும் புரிகிறது. அந்தக் கண்ணனின் குழலோசையே வேறு வடிவில் திருப்பாவையாகி அனைவரையும் ஈர்க்கிறது. கடவுளை விட்டு விலகி ஓடும் ஜீவர்களை இப்படித் திருப்பாவை என்னும் குழலோசையால் ஒன்றுறப் பிணத்து ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனம் இன்றி அனைவருக்கும் மாதவனை விட்டுப் பிரிய மனம் இன்றி ஆக்குவதால் அவன் மாயனே! தூயவர்களின் நல்லுரைகளால் தெளிந்து அந்த மாயனின் கோயில் வாசலின் முன்னம் கூடி நிற்கும் திருப்பாவை கூட்டத்தார்க்கு ஒரு பொது நன்மை உண்டு. அவர்களுடைய மனமே அவர்களுக்கு உற்ற காவலனாகி விட்டது இப்பொழுது. தோயும் உளமே அவர்களுக்கு நந்தகோபனாக ஆகிவிட்டது. பகவத் விஷயத்தோடு நம்மைச் சேர்த்து வைப்பது எதுவோ அதுவே உண்மையில் நந்தகோபன். இந்த உயிர்கள் என்னும் பசுக்களைச் சிருட்டிக்கு ஆதியில் அவ்யக்தம் என்னும் கொட்டிலில் அடைக்கும் ஆயன் அவன். அவனே இந்தப் பிறப்பில் திறந்து விட்டு மேய்க்கின்றான். ஆதியிலேயே இந்த உயிர்களுக்கு இயல்பாக விதித்ததே சேஷத்வம் கொண்டு செய்யும் தொண்டே ஆகும். அந்த உயிர்த்தொண்டை நாம் உணர்வின் முதிர்வில்தான் புரிந்து கொள்ளவும் இயற்றவும் முடியும். அந்த உயிர்த்தொண்டு வாய்ந்து விட்டால் அதுவே உண்மையில் வாழ்ச்சி ஆகும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 15

எல்லே இளம்நெஞ்சே! இன்னம் தயங்குதியோ
அல்லல் படுவதுமேன் ஆன்றோர் உரையுளவே
வல்லையுன் கற்பனைகள் வாலறிவும் யாமறிதும்
வல்லீர்நும் பேருரையில் யானேதான் ஆழ்ந்திடுக
ஒல்லைநீ இவ்வுலகிற் கோதாமல் உந்தனக்கோ
எல்லாரும் தோய்வாரோ தோய்வார்தாம் தோய்ந்தறிய
வல்லானை ஆழ்வார்கள் வாழ்வான விண்ணாண்டாள்
நல்லானை நம்பியைநாம் பாடேலோ ரெம்பாவாய்

பகவத் விஷயத்தைப் பற்றி அனைவரும் அறிய வேண்டாமோ? நீரே உமக்குள்ளேயே திருப்பாவையைக் கற்று மகிழ்ந்தால்மட்டும் போதுமா? - என்று தனித்தவம் இயற்றும் ஒருவரை ஒதுங்கிப் போகவிடாமல் ஆண்டாள் கூட்டத்தார் அனைவரும் வந்து கூப்பிட, தனித்தவம் இயற்றும் அவரோ இவர்களுக்குப் பதில் சொல்வதாக அமைந்த பாட்டு இது. 

இளம் நெஞ்சத்தை உடையவரே! (இளம் என்பது அழகைக் குறிக்கும்) பகவத் விஷயத்தில் தோய்வதால் அழகான நெஞ்சத்தை உடையவரே! இன்னமும் ஏன் தயங்குகிறீர்? எப்படிச் சொல்வது என்று கவலைப் படுவானேன்? ஆன்றோரின் உரைகள்தாம் இருக்கின்றனவே! போதாததற்கு உம் கற்பனைவளமும் பெரியதன்றோ! வாலறிவன் நற்றாளை அறியக் கூடிய பெரும் அறிவையும் படைத்தவர் அன்றோ நீர்! 

நானா? சரிதான். உங்கள் பேச்சுதான் பெரும் வலிமையோடு இருக்கிறது. அதன் அழகில் நான்தான் ஆழ்ந்து போகிறேன். 

ஏன் இப்படிப் பதிலாடிக் கொண்டு காலம் கடத்துகிறீர்? இந்த உலகிற்கு ஓதாமல் ஒளித்து வைத்துக் கொள்ளப் போகிறீரா? உமக்குப் பெரும் அறிவும், பகவத் விஷயத்தில் இத்தனை ஈடுபாடும் உண்டாக்கி வைத்தது அனைவருக்கும் அளிக்க அல்லவா? 

என்ன சொல்லுகிறீர்கள்? பகவத் விஷயத்தைச் சொன்னால் யார் கேட்பார்கள்? திருப்பாவையின் மகிமையைச் சொன்னால் கேட்பதற்கு ஆள் எங்கே? முன்னால் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தோர் கூட இப்பொழுதெல்லாம் நான் மொபைலில் கூப்பிட்டால் எடுப்பதில்லை. வழியில் எங்கோ பார்க்க நேர்ந்தால் வந்த வழியே திரும்பி வேறு வழியில் போய்த் தப்பித்துக் கொள்கிறார்கள். இன்னும் பலரோ என்னுடைய செல் எண்ணை ப்ளாக்கே பண்ணி விட்டதாகத் தெரிய வருகிறது. வாட்ஸப்பில் கண்டு பிடித்துவிடுவேனோ என்று செட்டிங்ஸை மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். காரணம் ஒற்றைக் காரணம். இவரிடம் பேசினால் பகவத் விஷயத்தைப் பேசுகிறார் என்பது. 

அடடா! இப்படியா மனம் தளர்வது? ஆள் வைத்து அடிக்காமல் இருக்கிறார்களே, அதிலிருந்தே தெரியவில்லையா, அவர்களுக்கு ஏதோ கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது என்று? மேலும் ஓடுவோர் ஓடட்டும். ஓடிப் பிறகு அவர்களாகவே வந்து சேர்ந்து கொள்வார்கள். இப்பொழுது தோய்வாரும் இருக்கிறார்களே? 

எங்கே? 

வாரும் வெளியே! வந்து தோய்வார் யார் என்று கண்டறிய வந்து பார்ப்பீராக! 

எல்லாம், வல்லவன் வகுத்த வழி அல்லவா? அந்த வல்லவனை, ஆண்டாளுக்கு மிகவும் நல்லவனைப் பாடுவோம் வாரும்! அவன் மனம் வைத்தால் வேண்டாம் என்று ஓடுவோரும் விரும்பி வருவார்கள். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Thursday, December 29, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 14

உங்கள் புழக்கத்தால் உள்ளத்துள் கோவிந்தன்
திங்கள் கதிர்முகம் தண்ணருள் செய்துநின்றே
எங்களை முன்னம் எழுப்பிடச் செய்தானால்
சங்கத் தமிழ்மாலை சூட்டும் சுடர்க்கோதை
துங்கப் பொருளுரைக்கும் தூயோர்தம் தெள்ளுரைகள்
அங்கப் பறைகொள்ளும் ஆர்வத்தால் வாசற்கண்
சங்கை அகற்றியே சேர்ந்தியாம் கற்பதற்கே
நங்களோ டுங்களை நாடிவந்தோ மெம்பாவாய்.

உடலின் உறவுகள் புழங்கும் போது பாசமும், உலகியல் பிணக்கங்களும், கோப தாபங்களும் தலைதூக்குகின்றன. ஆனால் ஆத்ம உறவுகளாக இருக்கக் கூடிய ஆண்டாளின் திருப்பாவைக் கூட்டத்தாரின் புழக்கத்தில், உள்ளத்தில் கோவிந்தனின் திங்கள் கதிர்முகம் எழுகிறது. தண்ணருள் பரவும் போது யாரையும் விட்டுப்போகாமல் கூட்டுகிறது. உலக விஷயம் ஆட்களைத் தனிமைப் படுத்துகிறது. ஆனால் பகவத் விஷயமோ ஆசையுடையோர்க்கெல்லாம் உரைமின், வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் என்று அனைவரையும் கூட்டுகிறது. ‘ஸங்கச்சத்வம் ஸம்வதத்வம் ஸம்வோமனாம்ஸி ஜானதாம்’ - ஒன்றுறக் கூடுங்கள்; ஒன்றுற உரையாடுங்கள்; ஒன்றுறச் சிந்தியுங்கள்’ என்று ரிக்வேதம் கூறுகிறது. அனைவரையும் கூட்டும் தமிழ்மாலையான திருப்பாவை சங்கத் தமிழ்மாலை ஆகிறது. உலகப் பொருட்களில் ஆழும் போது மேலும் மேலும் கீழ்மை அடைகிறது மனம். ஆனால் பகவத் விஷயத்தில் ஆழும் போதோ மேலும் மேலும் உயர்வை எய்துகிறது. தூய்மையை அடைகிறது. துங்கம் எனில் உயர்வு, பெருமை, தூய்மை என்பன பொருளாம். அவ்வாறு ஆழ்ந்து தூயோரான பெரியோர்கள் பின்வருவோரும் தெளிய வேண்டி உரைத்தவைகள் தூயோர்தம் தெள்ளுரைகள் ஆகின்றன. பகவத் விஷயத்தைக் குறித்து ஆழ்ந்த தாத்பர்யம் என்ன என்று தேடும் போது நம்மைக் கண்ணனிடத்தில் அர்ப்பணித்து, அவன் கைங்கரியத்தில் ஈடுபடுவதே நமக்கு உற்ற இயல்பும், சிறப்பும் என்று தெளிதலே ஆகும். அவனுக்கு உற்ற கைங்கர்யம் என்பதுவே பறை என்னும் சொல்லால் குறியீட்டு முறையில் குறிப்பிடப்படுகிறது. அந்தக் கைங்கர்யத்தையும் அவனிடமிருந்தே பிரார்த்தித்துப் பெற வேண்டும் என்பதையே ஆண்டாள் திருப்பாவையில் ‘பறை’ என்பதை அவனிடம் வேண்டிப் பெறுவதாகப் பாடுகிறாள். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது பறை என்பது வாத்தியம் என்பதைக் குறித்தாலும், அதன் உட்பொருள் கைங்கரியம் என்பதாகும். இந்த நுட்பங்கள் தெள்ளிய பேருரைகளை அனைவரும் ஆழ்ந்து ஈடுபட்டுக் கற்பதால் புரிய வருகின்றன. அவ்வாறு கற்கவே, தனிமைப் படுவோரையும் விடாமல் கூட்டிச் செல்ல விழைவதே ஆண்டாள் கற்பித்த நெறி. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, December 28, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 13

புள்ளின்வாய்க் கூற்றினில் பார்வண்ணம் கண்டெழுந்து
கள்ளம் தவிர்ந்துநீ கோதைமொழி கூறாயோ?
உள்ளம் புலர்ந்துநீ உத்தமனை நாடாயோ?
விள்ளற் கரியபொருள் விந்தையாம் பேருரைகள்
மெள்ள உனக்கே முயங்கித் திளைத்திடவோ?
தள்ளத் தகுமோ? தரணிவாழ வேண்டாமோ?
பிள்ளைப் படியுரைத்துப் பாருலகு தானுய்ய
மெள்ளப் புகன்று முழங்கேலோ ரெம்பாவாய்.

புள் என்பது கருடனைக் குறிக்கும். கருடன் என்பது வேதம் என்பதற்கான குறியீடாக வைணவம் உரைக்கிறது. வேதாத்மா விஹகேச்வர: - பறவைகளில் தலைவனான கருடன் முழுவதும் வேதவடிவமானவன் - என்று ஸ்ரீஆளவந்தாரின் சதுசுலோகீ கூறுகிறது. வேதம் என்பதே புலன்களுக்கெட்டாத பரம்பொருளைப் பற்றித் தெரிவிப்பதாகும். உலகத்தையெல்லாம் உள்ளே ஈச்வரன் உள்ளுயிராய் நின்று தாங்குகிறான் என்று உபநிஷதம் கூறுகிறது. ‘ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்’. வேத வாக்கியங்களைப் ’புள்ளின் வாய்க்கூற்று’ என்பது குறிக்கிறது. பாரை வெறுமனே ஊனக்கண் கொண்டு நோக்கினால் காலம், தேசம், வர்த்தமானம், பொருட்கள், ஜீவர்கள் என்று தெரிகின்றனர். ஆனால் வேத வாக்கியங்களாகிய சாத்திரக் கண் கொண்டு நோக்கினால் அதே உலகம் கடவுளின் விசுவ வடிவமாகக் காட்சி தருகிறது. இதையே திருமூலர், ‘மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில்  மறைந்தது மாமத யானை; பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே’ என்று பாடுகிறார். உலகைக் கடவுளின் வடிவமாகக் கண்டு அதில் தான் ஓர் அங்கம் என்று உணர்வது உண்மையான உள்ளம். அதுவே உலகம் என்ற அகங்கார மயமாகக் கண்டு தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது உள்ளத்தின் கள்ளம். எனவே புள்ளின் வாய்க்கூற்றினில் பார்வண்ணம் காணும் பொழுது கள்ளம் தவிர்கிறது. உள்ளத்தில் உண்மை ஒளிர்கிறது. உள்ளத்தில் புலரும் பொழுது உயிர் உத்தமனை நாடியே தீரும். இவ்வாறெல்லாம் உயர்ந்த தத்துவங்களையும், அனுபவங்களையும் தன்னகத்தே கொண்டது நம்பிள்ளை போல்வார் அருளிய முப்பத்தாறாயிரப்படி போன்ற உரைகள். இவற்றில் எல்லாம் தோய்ந்து ஆழும் ஒருவரைக் குறித்து உலகின்பால் கவலை கொண்டவர் ஒருவர் சொல்வதாக அல்லது பாடுபவர் தாமே தம் நெஞ்சுக்கு உரைப்பதாக இங்கே நாடகப் பண்பு அமைந்திருக்கிறது. ‘இவற்றையெல்லாம் நீங்களே உங்களுக்குள்ளேயே அனுபவித்துக் கொண்டு அமைதியாகச் செல்ல முடியுமா? உலகம் வாழ வகை செய்ய வேண்டாமா? யாரும் கேட்க விரும்புவதில்லை என்று சொல்லித் தள்ளிவிட முடியுமா? ’பாருலகு உய்ய பகவத் விஷயம் அனைவரையும் கூட்டிச் சொல்ல வேண்டும்’ என்று ஸ்ரீஆண்டாள் இட்ட கட்டளையை மறக்கலாமா? உலகினர் நிச்சயம் இதில் ஈடுபடுவார்கள் என்று பொறுமை காத்து, மெல்லப் புகன்று அவர்களை வெற்றி கொள்ளுவதன்றோ ஆண்டாளுக்குச் செய்யும் தொண்டு? 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Tuesday, December 27, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 12

கனைத்திளம் கற்றவர் கல்விக் கிரங்கி
நினைத்துளம் வீற்றெழில் நாரணர்க் காக்கும்
பனித்துடல் மெய்விதிர்ப்பப் பத்திமை செய்யும்
குனித்தவக் கோவலன் கொண்டிடச் செய்யும்
தனித்தவம் மாற்றித் திரள்விசும் பாற்றும்
வினைமுகம் பாற்றியே விண்ணெறி காட்டும்
மனத்துக் கினியநம் மாதவன் கோதை
புனைந்த தமிழ்மாலை போற்றுவோ மெம்பாவாய். 

திருப்பாவை என்ன செய்கிறது நம்முள்? கற்றவரே ஆயினும் கண்ணன் அருள் இல்லாது போனால் பிரபத்தி நெறியில் ஈடுபாடு தோன்றாது என்பதை இராமாநுசர் ஒரு வித்வானுக்கு உபதேசித்தும் அவர் தமக்கு அதில் ருசி தோன்றவில்லை என்று சொன்னார் என்று வியாக்கியானங்கள் தெரிவிப்பதில் பார்க்கிறோம். கல்வியினால் ஆய பலன் பிரபத்திதான் என்பதைக் கல்வெட்டாக ஆக்கிவைத்தார் திருவள்ளுவர். ‘கற்றதனால் ஆய பயன் என் கொல்? வாலறிவன் நல் தாள் தொழார் எனின்?’ அந்தத் துர்க்கதியெல்லாம் கற்றவர்க்கு ஏற்படாமல், அவர்கள் நெஞ்சத்தில் குடிகொண்டு காக்கிறது திருப்பாவை. கல்வியின் பயனை நாம் எய்தச் செய்கிறது நாரணர்க்கு ஆக்குவதன் மூலமாக. கல்வி என்பது அகங்காரத்தின் கையாளாக ஆகாமல் கடவுள் காதலுக்கு ஊற்றாக ஆகும் போது அங்குத் தொடர்ந்த பரவச அலைகள் எழுந்தவண்ணம் உள்ளன. அண்டபேரண்டத்திற்கெல்லாம் நாயகனான கோபாலனை ஈர்த்து நம்பால் கனிவுடன் கருத்துகொள்ளும் படியாகக் குனிக்கிறது ஆண்டாளின் அருள். குனித்தல் என்றால் வளைத்தல். நாம் முக்தி என்றவுடன் விட்டால் போதும் நம் வரையில் காரியம் ஆனால் போதும் என்று தனித்தவம் என்று முயலாமல் கண்ணன் அடியார் என்ற திரளாக்கி அந்த விண்ணும் விழைந்து நம்மோடு கலக்கும்படி ஆக்குவதும் திருப்பாவை. வினை செய்தால் அதன் பலன் என்பதே நாம் பழகிய நெறி. வினைப்பலன் சுமந்து, வினைப்பயம் விரட்ட வினையே ஈட்டும் வாடிக்கை நம்முடையது. அதை மாற்றி விண் நெறி காட்டும் திருப்பாவை. மாதவனோ நம் மனத்துக்கு இனியவன். மாதவன் கோதையான ஆண்டாளோ நம் மனத்துக்கு இனியவர். ஆண்டாள் அருளிய திருப்பாவையோ நம் மனத்தில் தங்கி நம்மை மாதவனுக்கும், மாதவன் கோதைக்கும் இனியவர் ஆக்கும் ரஸவாதம். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



Monday, December 26, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 11

கற்றுக் குரவர் குணங்கள் பலபொலிந்து
உற்றார் உவகைக்கே ஓதுதமிழ் வேதத்தில்
பெற்ற பலபொருளும் பேணும் மறைமுடியாய்
உற்ற திருப்பாவை ஓதினாள் நற்பாவை
கற்ற மதியுடையோம் கண்ணன் கழலிணையே
உற்ற கதியுடையோம் ஊக்கத்தில் ஒன்றானோம்
எற்றைக்கும் யாம்கவலோம் எவ்வுலகும் சுற்றமென
உற்ற உணர்வில் உகந்தேலோ ரெம்பாவாய். 

ஆத்ம குணங்கள் நன்கு விளங்குகின்றவரான ஆசிரியர்கள் தாம் தேடியதை அடைந்த ஆனந்தத்தில் கற்று, அதுவே தமக்கு யாத்திரையாய்ப் பொருந்துகின்ற சிறப்புடையது தமிழ்வேதம் என்னும் திவ்யப் பிரபந்தங்கள். திவ்யப் பிரபந்தங்களின் உட்கருத்தை நன்கு பொலியக் காட்டுவது திருப்பாவை. அதுமட்டுமின்றி, வேதங்களின் சிரங்கள் எனப்படும் உபநிஷதங்களின் தாத்பர்யத்தையும் தன்னகத்தே தெளிவுபடுத்தி நிற்பது திருப்பாவை. நமக்குத் திருப்பாவையைத் தந்து நம்மை மாதவனுக்கு ஆட்படுத்தியது மட்டுமின்றி, திருமாலுக்கும் நம் நிலைமையை உணர்த்தி அவனை வலுக்கட்டாயமாக நமக்கு அருள் செய்ய வைப்பவளும் ஆண்டாளே. அதனாலேயே அவளை நாம் திருப்பாவை ஓதிய நற்பாவை என்று சொல்லலாம். திருப்பாவையைக் கற்ற மதிவாய்ந்த நாம் நிச்சயம் கண்ணன் கழலிணையை மறக்க மாட்டோம். அதைப் போலவே பகவத் விஷயத்திற்கு அனைவரும் உரியர் என்ற தெளிவை நாம் அடைவதால் ஊக்கத்தில் ஒன்றுபடுவோம். பின்னர் என்றைக்குமாக நம்மிடத்தில் கவலை இல்லாததாகிவிடும். எவ்வுலகும் நமக்குச் சுற்றமே என்று உண்டாகும் உணர்வினில் உத்தமன் உகக்க, அதில் நாம் உகக்க, உயரிய ஆன்ந்தமே வாழ்வாகிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



Sunday, December 25, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 10


நோற்றுச் சுவர்க்கம் புகுந்தாலும் நாமினியும்
ஏற்ற அருந்துணையாய் ஈடன்ன பேருரைகள்
ஆற்றப் படைத்தோம் அழிவுறோம் ஆண்டாளைப்
போற்றிப் புகலடைந்தோம் பூமன்னு மார்பனடி
ஏற்றும் தகவுடையோம் இவ்வுலகம் வாழ்ந்திடவே
ஆற்றும் பணிகற்றோம் அல்லல் அகன்றிடவே
ஊற்றுப் பெருக்காகி உள்ளம் புரந்திடவே
போற்றித் தொழுது புகன்றேலோ ரெம்பாவாய்.

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று நோற்பவர்களுக்கும் அதைப் பலனுடையதாக  ஆக்கிக்கொடுப்பவன் நாராயணனே. அவன் கையில் பாரத்தைப் போட்டுவிட்டு தான், தன்முனைப்பு என்று ஒன்றில்லை என்பவர்க்கும் அவனே பலன் தருபவன். ஆனால் அதற்காக அவன் தரும்போது தருகிறான், அது வரும்போது வருகிறது என்று இருப்பது யாருக்கும் ஒவ்வாத ஒன்று. பிரபத்தி என்று இருப்பவர்க்கும் கைங்கர்யத்தில் ஈடுபாடு, தம்முடைய இயல்பைப் பற்றிய ஞானத்தில் ஊன்றி நிற்றல், அடையும் பலனாகிய அவனிடத்தில் அடங்கா ஆர்வம் இதெல்லாம் வேண்டும். இத்தனையும் நமக்கு வாய்க்கச் செய்வது ஈடு போன்ற பேருரைகள். எனவே நம் ஸ்வரூபத்திற்குக் கேடு என்னும் அழிவு நமக்கு உண்டாவதில்லை. பகவத் விஷய தத்வார்த்தமெல்லாம் தன் முப்பது பாடல்களில் நமக்கு என்றும் மனத்திலும், நாவிலும் நிலைக்கும்படிச் செய்தவள் ஆண்டாள். அவளைப் போற்றிப் புகலடைந்து விட்டோம். பூமன்னு மார்பன் ஆகிய திருமாலின் திருவடியான நம்மாழ்வாரை ஏற்றும் தகவு உடையோம் நாம். இவ்வளவு நாள் இவ்வுலகம் நலியும்வகையில் செயால்புரிவதுவே பணி என்று இருந்த நாம் இவ்வுலகம் வாழும் வழியில் பணி செய்யக் கற்றோம் ஆண்டாள் தயவினால். அல்லல் அகன்றது. ஊக்கம் வற்றாத ஊற்றாகிப் பெருகும் உள்ளம். அதை நன்கு புரந்திட நாம் செய்ய வேண்டியதோ ஆண்டாளையும், திருப்பாவையையும் போற்றிப் புகழ்ந்து தொழுது நடத்தலே ஆகும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, December 24, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 09

தூமணி மாடத்துக் கற்றுத் தெளிந்திடவே
தாமோ தரனார்க்குத் தக்க நெறியென்றே
நாமுணரச் சொன்ன திருப்பாவை நற்பொருளால்
ஊமையரோ முள்ள முணர்வெழுந்து உன்னதமாய்த்
தீமை யகன்று திறல்விளங்கு மன்பிற்குச்
சேமம் புகன்றிட்ட செய்யமறைப் பாவைக்கு
நாமம் நவின்று நலந்திகழ் கோதைக்கே 
நாமென்றும் ஆளாய் நவின்றேலோ ரெம்பாவாய். 
 
 
பகவானின் சுத்தசத்வமயமான விக்ரஹத்தை, ஐந்துமறைப் பொருளில் துலங்கும் பஞ்சோபநிஷன்மயமான விக்ரஹத்தைத் தூமணி மாடம் என்கிறது ஸ்வாபதேச உரை. ’துவளில் மணிமாடம்’ என்று திருவாய்மொழி சொல்வதற்கும் இங்குத் தூமணிமாடம் என்று சொல்வதற்கும் வேறுபடும் நயம் சொல்கின்றன உரைகள். ஜீவனுக்கும் தூய இயல்புதான், அதுவும் நித்யம்தான். ஆயினும் ஜீவனின் இயல்பு மலினத்திற்கு ஆளாகிப் பின்னர் அந்த மலினமே பின்னாட்டாதபடித் தூய்மை துலங்கத் திகழ்வது. ஆனால் பகவானின் தூய்மையோ எல்லா மலினத்திற்கும் என்றும் எதிர்த்தட்டானது. ஜீவனின் இயல்புக்குத் துவளில் மணிமாடம் குறியீடு என்றால் பகவானின் இயல்பிற்குத் தூமணிமாடம் குறியீடாகிறது. இவ்வாறு  பல ஆழ்பொருள்களை நாம் கற்றுத் தேர்ந்து, தெளிந்து தாமோதரனார்க்கு ஆட்பட்டிருத்தலே தக்க நெறி என்று நாமுணரச் சொன்னது திருப்பாவை. ஒருவர் தாம் அடைந்திருப்பதோ அல்லது என்றும் உலகில் கலவாது உயர்விண்ணகத்தே நிலைத்து இருப்பதோ, அதைவிடவும் மண்ணில் உழலும் மாந்தரைக் கடைத்தேற்ற, அனைவரையும் ஒரு கூட்டத்துள் ஆக்கி உத்தமனுக்கு ஆட்படுத்த விழைவதுதான் திருப்பாவை. நமக்கு எது நன்மை என்று கேட்டால் நாம் அந்த விஷயத்தில் ஊமையாகி நிற்போம். நமக்கு இருக்கும் பெருங்குறை என்ன என்று கேட்டால் கடவுளைப் பற்றிய ஞானம் என்று சொல்ல வாய் எழாது ஊமையாய் நிற்போம். கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லிப் பிரார்த்திக்கச் சொன்னால் ஏதாவது சொப்பு, பொம்மை, மிட்டாய்களைக் கேட்டு வாயடைத்து நிற்போம். நல்லூழ் காரணமாக, அவனுடைய அருளால் அவனே தன்னை நமக்குக் காட்டிக்கொடுத்தால் அப்பொழுதும் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாமல் வாயடைத்து நிற்போம். வாய்படைத்த ஜீவன் என்று நமக்குப் பெயர். ஆனால் எல்லாவற்றுக்கும் ஊமையாவதும் நாம்தான். திருப்பாவை நம்மைப் பேச வைக்கிறது. பரமனைப் பற்றிப் புகழ்ந்து, பராவிப் பேச வைக்கிறது. தானாக அவனைப் பற்றிச் சொல்வேன் என்று கிளம்பிய வேதம் ஒன்றும் சொல்ல முடியாமல் மனத்தோடு வாக்கும் சேர்ந்து திரும்ப வந்தது. ஆனால் அவன் உள்ளே நின்று மாயக் கவியாய் தன்னைத் தான் பாடிய திருவாய்மொழி காலம்தோறும் பேசி பேசி வாய்வெருவும் வியாக்கியானங்களைத் தந்தவண்ணம் உள்ளது. கடவுள் பேச்சில்தான் உணர்வு எழும். எழுந்த உணர்வு ஒண்டாமரையாள் கேள்வனை நோக்கும். அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா பக்தி பெருகும். அது அத்தனைக்கும் சேமம் செய்த பெட்டகமே திருப்பாவை. அவன் நம்மை, நம்மிலிருந்து மீட்பது ஆச்சரியம். அவன் மாமாயன். அவன் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நம்மை அவன் கிருபைக்கு ஆளாக்குவது அன்னையாகிய திருமகள். அவன் மாதவன். இதை உணர்ந்தால் அந்தக் கணமே இருப்பிடம் வைகுந்தம். அவன் வைகுந்தன். ‘மாமாயன் மாதவன் வைகுந்தன்’ என்று என்று நம்மை அவன் நாமம் பலவும் புகல வைக்கிறாள் ஆண்டாள். நம்மைத் தெய்விகத்தின்பால் ரஸவாதம் செய்கிறது திருப்பாவை. அந்த நலம் திகழ் கோதைக்கே நாம் என்றும் ஆளாய் ஆவோமாக! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 
 
***



Friday, December 23, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 08

கீழ்வானம் வெள்வரைக்க கோவிந்தன் வாசற்கீழ்
ஆழ்ந்தோம் அருமறைகள் ஆண்டாள் அருள்செய்ய
வாழ்ந்தோம் வரம்பெற்றோம் வையம் திருநாடாய்
ஏழ்மைக்கும் உய்ய இயன்றநல் ஈடாகித்
தாழ்ச்சி தவிர்ந்தோம் நமனுக்கிங் கென்கடவோம்
வாழ்ச்சி விழைந்தோம் விரிநீர் உலகெங்கும்
சூழ்ச்சி தவிர்ந்து சுடரும் மனத்துள்ளீர்
ஏழ்பாரு முய்ய இயம்பேலோ ரெம்பாவாய். 

கிழக்கில் வானில் ஒளியின் கோடுகள் படிந்து காட்டுவது வெள்வரைத்தல். விரைவில் புலர்ந்துவிடும் என்பதற்கான கட்டியம். புறத்தில் சூரியன் புலர்வதும் அகத்தில் போதம் எழுவதும் ஒன்றுதான். கதிரவனைக் கண்டதும் மலர்வது தாமரை. கடவுளின் போதத்தில் மலர்வது உணர்வு. ‘ஒண்டாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு’ என்கிறார் பொய்கையார். கீழ்வானம் வெள்வரைத்தவுடன் கோவிந்தன் வாசலில் கூடிவிடுவது இயற்கை. மறைகளை ஓதியவரும் அதன் உள்ளர்த்தத்தைத் தவறவிட்டனர். அத்தகைய அருமைப்பாடுடைய உட்பொருளை யாவரும் இழக்கவொண்ணாதபடி அருளியவள் ஆண்டாள். அதனால் வாழ்ந்தோம். அவனுக்கே உரியவராய் அனைத்து கைங்கர்யங்களும் இயற்றும் வரம் பெற்றோம். பிறகு என்ன? வையம் திருநாடு ஆகியது. உலகம் ஸ்ரீவைகுண்டமாக மாறியது. பிறவி என்பதே கைங்கர்யத்திற்கான வாய்ப்பாக மாறியது. அவனுக்குத் தந்தையாய், அவனுக்குத் தாயாய், அவனுக்குத் தோழனாய், அவனுக்குக் காதலியாய், அவனுக்குக் குழந்தையாய், அவனுக்குச் சீடனாய் எத்தனை முறை பிறந்தாலும் என்ன, அத்தனையும் அடிக்கழஞ்சு பெறும் அன்றோ! நாம் பெற்ற கைங்கர்ய வரத்தைக் காக்கும் கவசம் போல், ஈடு போல், ஈடு என்னும் வியாக்கியானம் நமக்கு இருக்க என்ன குறை? நமக்கு ஏது தாழ்ச்சி? நமனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லை. இந்த வாழ்ச்சியை உலக உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய விழைவு. கடைசி உயிர் இதைப் பெறும்வரை நாம் அவன் தொண்டில் பிறக்க ‘நாயந்தே’ என்று சித்தமாக  இருக்கிறோம். வாழ்ச்சி பெற, இதயம் திறந்தால் போதும். இழப்பதற்குத்தான் ஏகப்பட்ட சூழ்ச்சி. அந்தச் சூழ்ச்சியை எல்லாம் தவிர்ந்து உலகத்தில் உள்ளீர்! சொல்லுங்கள் திருப்பாவை! உணருங்கள் திருப்பாவை! உங்கள் வாழ்க்கை திருப்பாவை வாழ்க்கையாய் மலரட்டும்! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Thursday, December 22, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 07

கீசுகீ சென்றுநம் உள்ளம் கிளுகிளுப்பப்
பேசுதிருப் பாவைப் பலபதியம் பார்த்தனையோ
வாச நறுங்குழல் கேசவனும் நம்வாழ்வில்
தேசு பொலியவும் தீர்ந்தவன் சேவடிக்கே
ஆசு கடிந்தேநாம் ஆளாக ஆண்டாளும்
பேசும் திருவுளமும் திண்பொருளும் ஓர்ந்தனையோ
நாயகத் தென்மனமே! நாரா யணன்கீர்த்தி
வாசிக்க விண்ணும் விழைந்தேலோ ரெம்பாவாய். 

புற விஷயங்கள் நம் மனத்தில் பெரும் இரைச்சலை உண்டாக்கி, அமைதியையே அரிய விஷயமாக்கி விடுகிறது. ஆனால் பகவத் விஷயமோ உள்ளத்தின் உள் ஆழத்தில் என்றும் அமைதியான ஆனந்தக் குமிழ்களைப் பூத்தவண்ணமே இனிக்கிறது என்றும். கடவுளில் ஈடுபட்ட ஒருவரைப் பார்த்தால் அவர் ஆரா அமுதை அகத்தே தேக்கியவராய் இருக்கிறார். கீசுகீசு என்று தெய்வ சுகம் அவருள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. அத்தகையோருக்குத் திருப்பாவையின் பாசுரங்கள் என்றும் புதுமையின் விளை இடமாகத்தான் தெரிகிறது. யாரும் இல்லையென்றாலும் அவர்களுக்கு அவர்களுடைய மனமே நல்ல துணையாக அமைந்துவிடுவதால் அவர்கள் என்றும் சத்சங்கத்திலேயே இருப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள். ‘திருப்பாவையில் அந்தப் பாசுரத்திற்கான விளக்கம் பார்த்தாயா? இங்கே எப்படி ஈடுபட்டிருக்கிறார்கள் கண்டாயா? ஆண்டாள் கிருபையாலே நாம் கேசவனுக்கே ஆட்பட்டு நம் வாழ்வே எப்படித் தேசு பொலிகிறது! ‘அனைத்து மணங்களும் அவனே’ ஸர்வகந்த: என்று மறை சொல்லும் பரமவாசனையான கேசவன் நமக்குள் மணப்பது நம் உள் நாசிக்குப் புரிகிறதே! அவன் சேவடிக்கு ஆளாகும் போது நம் அறியாமையால் சிலவற்றைக் கவனிக்க மாட்டோம். அவனோ பரமதயாளுவாகையாலே நாம் கேட்டதைக் கொடுத்து விடுவான். அவனை நமக்காக என்று பற்றும்போது நாம் குறுக்கிக் கொள்கிறோம். அவனுக்கே நம்மை ஒப்படைத்துவிடும் போது பூர்ணமாகிறோம். அவனை நம் முயற்சியால் அடைகிறோம் என்னும் போது அதை வியாபாரம் ஆக்கிவிடுகிறோம். ஆனால் அவன் நம்முள் விளங்க நாம் தடையாக இல்லாமல் நாம் விலகிவிடும் போது செய்வன திருந்தச் செய்தவர் ஆகிவிடுகிறோம். இதையெல்லாம் நமக்கு ஆண்டாள்தான் சொல்லித்தந்து நம்மைப் பயிற்றிப் பரமனுக்கு உரியவராய் ஆக்குகிறாள். ஆசு கடிந்தே நாம் ஆள் ஆக ஆண்டாள் பேசுகின்ற திருவுளம் அவள் பாசுரங்களில் பொதிந்து கிடப்பதை அசைக்க முடியாதபடி நம்முள்ளத்தே வியாக்கியானங்கள் பதிவிடுகின்றன. இவ்வளவு ஈடுபாடு கொண்ட என் மனமே ! என் நாயகம் அல்லவோ நீ! அங்கே பார்! திருப்பாவை முழக்கம் கேட்டு விண்ணும், தன் கதவம் சாளரம் எல்லாம் திறந்து வைத்துக்கொண்டு வைத்த விழி வாங்காமல் கேட்பதை ! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



Wednesday, December 21, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 06

புள்ளும் சிலம்பிற்றால் போதச் சிறகார்ந்து
கள்ளம் தவிர்ந்திங்கு கண்ணனும் வாரானால்
குள்ளக் குளிரக் குடைந்துதிருப் பாவைக்கே
தெள்ளமுத விள்ளுரைகள் தீங்குரவோர் தாமியற்றிப்
பள்ள மடையாக்கிப் போந்தார்நம் நெஞ்சத்தை
விள்ளற் கரியனாம் வேதப் பெருமானும்
உள்ளம் கலந்தொளிர உற்றபொழு தாயிற்றால்
துள்ளி யெழுந்து தோய்ந்தேலோ ரெம்பாவாய்.

பொழுது விடிவதற்கு முன்னே புட்கள் ஒலிக்கின்றன. போதம் எழுவதற்கு முன்னர் ஆர்வங்கள் பொங்குகின்றன. ஆனால் கள்ளம் தவிரும்வரை மாயக்கள்வன் வருவதில்லை. நம்முடைய கள்ளம் என்ன? அவனுடையது இந்த ஆத்மா. இதை நம்முடையது என்று நாம் நினைத்ததுதான் ஆதி முதல் கள்ளம். அவன்தான் நம்மைக் காக்க முடியும். ஆனால் நாமே நம்மைக் காத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். அதுவே அடுத்து அடுத்து நாம் செய்யும் கள்ளம். கள்ளம் நம்முள்ளிலிருந்து முற்றும் அகன்றால் கண்ணன் என்றுமுளன், எங்குமுளன் என்ற உண்மை நமக்கு நிதர்சனம் ஆகும். என்றுமிருந்தும், எங்குமிருந்தும், இங்குமிருந்தும், நம்முளிருந்தும் ஆனபோதிலும் அவன் இல்லை என்று நாம் நினைக்கும்படியாக நிற்கிறானே அதுவே அவன் செய்யும் கள்ளம். உற்றவர்க்கு உணர்த்தியும், செற்றவர்க்கு ஒளித்தும் அவன் ஆடும் நாடகம்! அவனுக்காக ஏங்கும் ஏக்கம் அத்தனை உயர்ந்தது! அந்த ஏக்கம் நம்மைத் திருப்பாவையிலும், அதற்குத் தெள்ளமுதமான விளக்க உரைகள்பாலும் ஆழ்ந்து ஈடுபட வைக்கிறது. அப்பொழுது நம் நெஞ்சம் அவன் அருள்பாயும் பள்ளமடையாகிவிடுகிறது. அப்படி ஆக்கிவிடுகிறார்கள் பூர்வாசாரியர்கள். தேடி எங்கும் காணாத பரம்பொருள், திருப்பாவையிலும், அதன் உரைகளிலும் நாம் ஈடுபட்டு ஆழும்போது தானும் கூடவந்து நம்மோடு குளிர்ந்தாடுவது போன்ற உணர்வு நமக்கு உண்டாகிறது. ஆம் அதற்கான நேரம் வந்துவிட்டது. துள்ளியெழுந்து தோய்வோம் வாருங்கள் ! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 05

மாயனைப் பாடியே மாதவனை நாம்பாடி
தூயோமாய்ச் சேவித்தால் தண்ணளியும் தாரானோ
சேயன் எனினுமே சேவைக் கரியானோ
ஆயர் குலவிளக்காய் ஆரா வமுதானான்
வேயர் குலவிளக்கால் வாழ்வில் துணையானான்
நேயன் நிமலன் நமக்கென்றும் அண்ணித்தான்
மாயப் பிறவி மயக்கறுத்தே மாமதியால்
ஆய தனக்கே அறக்கொள்வா னெம்பாவாய். 

மாயன் என்றாலே ஆச்சரியமானவன் என்று பொருள். ஆம். அவனைப் பற்றி நினைக்காமல் இருக்க என்ன என்ன உண்டோ அத்தனையிலும் நாம் ஆழ்ந்துள்ளோம். ஆயினும் எப்படியோ அவன் நம் வாழ்வில் புகுந்து ஆட்கொண்டு விடுகிறான். அவனுடைய ஆச்சரியமான வழிகளே நமக்கு உய்வு தருவன. ‘வந்தாய்போலே வாராதாய். வாராதாய் போலே வருவானே’ என்கிறார் ஆழ்வார். அவன் நமக்காக இவ்வளவு முனைவதும், கனத்த நம் வினைகளைக் காணாதான் போலே நம்பால் அருள் பூப்பதும் எதனால்? அவன் மாதவன் என்பதனால். மா என்னும் திருமகள் நமக்காகப் பரிந்து புரியும் அருளால். அவனை நம் நோக்கங்களுக்காகச் சேவித்தல் என்பது இன்றி, அவனிடம் நம்மை முழுவதும் அர்ப்பணிக்கும் போது, நமக்காக என்பது இன்றி நம் உள்ளம் உரை செயல் எல்லாமே அவனுக்காக என்று ஆகும் போது அது தூய்மையாகச் சேவித்தல் ஆகிறது. அவன் அதற்காகத்தான் காத்திருக்கிறான். அவனுடைய ஆதி நோக்கத்தை நாம் பூர்த்தி செய்யும் அந்தக் கணத்தில் அவனுடைய குளிர்ந்த அருள் நம் மீது பாய்கிறது. அந்தப் பக்தி நம்மிடம் ஏற்படும்வரை அறிவினால் அறிய அரியவனாய் இருந்த அவனே பக்தியினால் சேவைக்கு எளியனாய் ஆகிறான். கண்ணனைப் பற்றி நினைத்தால் ஒவ்வொன்றும் ஆரா அமுதம்தான். ஆயர் குலவிளக்காய் உதித்தவன். ‘வேயர் பயந்த விளக்கான’ ஆண்டாளால் நம் வாழ்க்கையில் என்றும் துணையாக நிற்பவன். நேயம் என்னும் தூய சிநேகமே வடிவானவன். அவனை நினைக்கும்தொறும், சொல்லும் தொறும் நம்மை மலம் அகற்றித் தூய்மை ஆக்குபவன். நம் உயிருக்கும் உயிரானவன். எனவே நம்மை விட நமக்கு அண்மையானவன். அவித்தை என்னும் கர்மங்களால் கட்டுண்டு பிறவியிலிருந்து பிறவி என்னும் மாய மயக்கில் உருளும் நம்மை, மயக்கறுத்து, பூர்ண ஞானம் ஆன மாமதி தந்து, நமக்கு என்றும் ரக்ஷகன் ஆகிய தனக்கே முற்றிலும் ஆளாய்க் கொள்வான். ஏனெனில் ஆண்டாளின் பலம் நமக்கு உண்டு. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 04

ஆழி சுழற்றிடும் அச்சுதனை அன்பினால்
வாழ்வில் சுழற்றிய வான்கோதை பேசினாள்
ஆழ்பொருள் அத்தனையும் ஆசிலோர் தாம்வடித்தார்
ஊழிதோ றூழி யுளத்தில் பெயராமே
வாழி யுலகளந்த வண்ணத் திருமாலைப்
பாழில் பிறவி பயிலுமோர் நற்றுணையாய்
வாழ்த்தி மனத்திருத்தி வஞ்சமிலா வாழ்க்கையினில்
ஏழ்மைக்கும் ஈடாய் இயற்றுவோ மெம்பாவாய். 

‘இந்தப் பரமஞானத்தைக் காலம் கனியும் போது உனக்குள்ளேயே பெறுவாய்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன் பகவத் கீதையில். காலம் கனியும் போதே பக்குவமும் பிறக்கிறது. ஆனால் காலத்தை ஒருவர் கருத்தை நோக்கிச் சுழட்ட வேண்டியிருக்கிறது. காலமோ திருமாலில் கையில் சுழலும் ஆழி. காலம் பிறழாமல், தவறாமல் சுழட்டும் திருமால் அச்சுதன். அச்சுதன் என்றாலே தவறாதவர் என்று பொருள். ஆனால் பிரபஞ்சத்தையே சுழட்டும் அச்சுதனையும் சுழட்டும் இரகசியத்தைக் கண்டவள் ஆண்டாள். அவள் மண்ணின் மாவடிவம். ஆனாலும் விண்ணையும் வளைத்த கோதை. அந்த இரகசியமோ அன்பு. அனைத்துலக இரகசியமும் ஒற்றை வார்த்தையில் அடைந்து கிடக்கிறது. அருளைத் தேடி அலைகிறது உயிர். ஆனால் அந்த அருளோ ஒரு தாய் பெற்றெடுக்கும் குழந்தை என்பதைச் சொல்லுகிறார் திருவள்ளுவர். ‘அருள் என்னும் அன்பு ஈன் குழவி’. அன்பு என்னும் தாய் அருள் என்னும் குழந்தையைப் பெறுகிறது. காரணம் அன்பில் கட்டுண்டு போகிறது கடந்தும் கரந்தும் இலகும் கடவுள். அன்பின் உருவாய் ஆனவள் ஆண்டாள். அந்த வான்கோதை பேசிய பேச்சனைத்தும் பேசாப் பொருளைக் கர்ப்பம் தரித்தது. அவள் பேச்சின் ஆழத்தை உணர்ந்த ஆசிரியர்கள் குற்றமேயற்றவர்கள். என்ன குற்றம்? இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர், ஆண் பெண் என்று பிரிவினை பார்க்கும் குறையற்றவர்கள். ’எல்லோரும் போந்தாரோ’ என்று கேட்கும் ஆண்டாள், ‘வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வாருங்கள்’ என்று அழைக்கும் பெரியாழ்வாரின் மகள். ஆழ்வார்களின் தன்மையையும் விஞ்சி நிற்கும் பேரியல்பு உடையவள் ஆண்டாள். அவள் கூறிய ஆழ்பொருளை நல்லாசிரியர்கள் தம் விரிவுரைகளில் தேக்கி வைத்தார்கள். அந்த ஆழ்பொருளில் தோய்ந்தவர்கள் பின் எதற்காக ஊழியைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்கள்? ஊழிக்கு முன்பிருந்து ஊழிக்குப் பின் வரையில் உள்ளதனைத்தும் உலகளந்தானின் திருவடிகீழது என்னும் போது உத்தமனை விட்டு யார்தான் பிரிவது எப்போது? அவன் நினைவு விலகாமல் இருக்கும் போது பிறவியே பாழ் இல்லாத பிறவியாக ஆகிவிடுகிறது. அவனை மறந்தால் அந்த முத்தியும் பாழ் ஆக முடிகிறது. மாயக் கள்வன் மனத்தில் இருந்தால் வாழ்க்கையில் வஞ்சம் இருப்பதில்லை. நெஞ்ச நிறைவும் குறைவதில்லை. அலைபோன்று எழுவதே இயல்பாக இருக்கும் பிறவியை எழுமை என்றே சொல்லலாம். எத்தனை முறை எழுந்தாலும் அவன் பேர் வாயில் உண்டே! பின் என்ன இந்த உலகமே வைகுந்த நாடுதானே! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 03

ஓங்கி யுலகளந்த உத்தமனார் சேவடிக்கே
தாங்கித் தமராக்கித் தான்செலுத்தும் தீந்தமிழாள்
பாங்கியராய் யாமுமிங்கு பங்கெடுத்தால் பற்பநாபன்
ஓங்குபுகழ் பாடி உயிரில் உறவாகித்
தேங்குமகிழ் தெய்வத் திரளுக்கே தான்வாடி
வாங்க உளம்நிறைக்கும் வற்றா விரிவுரைக்கே
பாங்காகிப் பக்குவமாய்ப் போந்த மனமுடையீர்!
நீங்கா அருளே நிறைந்தேலோர் எம்பாவாய் ! 

ஓங்கி உலகளந்த உத்தமன் அத்தனை உயிருக்கும் பொதுவாய்த் தன் சேவடியைக் காப்பாக வைத்தான். ஆனால் அதை உயிர்கள் உணரவில்லை. கன்றுகள் உணர்ந்தாலும் கல்மன மனிதர்கள் உணரவில்லை. ஆனால் அப்படி விடமுடியாது ஸ்ரீஆண்டாளால். அவளோ பூமியின் அவதாரம். மனிதர்பால் பொறுமையும், கனிவும் கொண்டு அவர்களைத் தாங்கி நிற்பவள். அவர்களைத் தன்னுடையவர் ஆக்குகிறாள். தன்னுடைய தீந்தமிழில் ஈடுபடுத்துகிறாள். உணர மறுத்த மனிதரோ தம்மைப் போல் ஆண்டாளின் கோஷ்டியில் சேர்ந்துவிடுகின்றனர். ஆமாம். ஏன் அந்தத் திருமால், உத்தமன் மறுக்கின்ற உயிர்களையும், மறக்கின்ற உயிர்களையும் விடமாட்டாமல் இப்படித் துரத்தித் துரத்திக் காக்கின்றான்? காரணம் குடல் துடக்கு என்கின்றனர் உரைவரைந்த உத்தமர்கள். ஆம் அவன் பத்மநாபன் அல்லவா? அவனுடைய எழுகமலக் கொப்பூழில் பூத்ததுதானே இந்த உலகம்! அவனுடைய இந்தக் காரணமே அற்ற பேரருள் அன்றோ அவனுடைய பெரும் புகழ் ஆவது! அதை உணர்ந்த மறுகணம் வாய் அவனைப் பாடாமல் என்ன செய்யும்? உயிருக்கும், அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியா உறவு அன்றோ! மகிழ்ச்சி அடைந்தால் அடுத்தகணம் மறைவது உலக இயற்கை. ஆனால் மறையாமல் தேங்கி நிற்கும் மகிழ்ச்சி என்பது ஆண்டாளின் குரலுக்குச் செவிசாய்த்துச் சேரும் தெய்வத் திரளில்தான் பார்க்க முடியும். அனுபவிக்க அனுபவிக்கப் பெருகும் ஆனந்தம். கணம் கூட அந்தத் திரளைப் பிரிந்தால் முடியாது என்ற வாட்டம். அதுதான் பகவத் விஷயத்திற்கான சிறப்பு! ஆனால் காலம் கடந்து போனால், அந்தத் தெய்வத் திரளுமே மறைந்து போமோ? இல்லை. அந்த ஆனந்தத்தை என்றைக்குமாக நிலைத்து நிற்கச் செய்வன விரிவுரைகள். கற்பவரின் ஈடுபாடு ஆழம் ஆக ஆகப் பொருளும் வளம் மிகுந்துகொண்டே போகும் அதிசய உரைகள்! அதற்குரிய பாங்கை அடைந்த மனங்கள், தம் பக்குவத்தால் பகவத் விஷயத்தில் ஆழும் போது அங்கு அருளும் நீங்காமல் நிறைந்து விளங்குகிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 02

வையத்து வாழாதே வெய்ய துயர்க்கடலில்
பையவே மாழாந்து புல்லும் கவலைக்கே
ஐயகோ தாம்விலையாய் ஆனார் வழியொற்றி
நைவதுவோ நானிலத்தீர்! நாளும் சுடர்க்கொடியே
தைவந்த பூச்சூட்டித் தான்திகழும் அச்சுதனார்
கைவந்த குன்றின்கீழ் கன்றுகளும் தாமகிழ
உய்யும் திருப்பாவை உத்தமனுக் கோதியதும்
வையத்தீர் நாம்வாழ வாழ்த்தீரோ எம்பாவாய்.

*

வையத்தில் வாழ்வது என்றால் திருமாலின் குணக்கடலில் ஆழ்வது என்பதுதானே! அவ்வாறு வாழ்ந்து போகாமல் எதில் மக்கள் நாளும் நாளும் ஆழ்ந்து மடிகின்றார்கள்? அந்தோ வெய்ய துயர்க் கடலிலா ஆழ்வது? சக்ரவர்த்தியாரின் மகவுகள் பிச்சையெடுத்தா பிழைப்பது? உலகமுண்ட பெருவாயனின் குடல்துடக்கு கொண்டவர்கள் குமையும் துயர்களிலா தம் நெஞ்சு வேவது? உபநிஷதம் ஓங்கி ஒலிக்கிறதே! - உத்திஷ்டத! ஜாக்ரத! ப்ராப்யவரான் நிபோதத! - எழுந்திடு! விழித்திடு! அடையவேண்டிய இலட்சியத்தை நினைத்துப் புறப்படு. இதைத்தானே முப்பது பாட்டிலும் உரைப்பதோடன்றி, ஒவ்வொருவர் வீட்டின் வாயிலிலும், உணர்ந்தவர்கள் ஒன்றுகூடி வந்து நின்று உறங்குவோரை எழுப்பியே தீருவது என்று ஆக்கியவர் ஸ்ரீஆண்டாள் அன்றோ! ஐயகோ! மனிதருக்குக் கன்றுகளை விடவா அறிவு குறைந்து போய்விட்டது? குன்றம் ஏந்திய கோவிந்தனின் கழல் நாடி கன்றுகள் சரண் புகுந்து நிற்பனவே! அந்தக் கன்றுகளுக்கு யார் போய் திருப்பாவை யாராவது சொன்னார்களா? ஆனால் மனிதருக்கு பூமிப்பிராட்டியே வந்து பிறந்து திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே என்று சொல்லி எழுப்பியும், திருமாலின் திருவருளில் யாம் தோய மாட்டோம், வெய்ய துயர்க்கவலைக்கே நாங்கள் விலைபோவோம் என்று கூறுவார் உண்டோ? ஆனால் மக்களுக்கு திருமாலின் நினைவு வரவேண்டும் என்றால் அதற்கு முதன்முன்னம் சத்வகுணம் தலைதூக்க வேண்டும். ஜநார்த்தனனின் திருக்கண்ணோக்கம் இன்றி சத்வகுணம் மனத்தில் தலைதூக்காது. எனவேதான் ஸ்ரீஆண்டாள் திருப்பாவையை அனைவரையும் அழைத்துக்கொண்டு போய் அரங்கநகரப்பனுக்கு எழுப்பி உரைக்கின்றாள். நாங்கள் எல்லாம் வந்துவிட்டோம். வரமாட்டேன் என்று அடமாகத் தூங்குவோரை எழுப்ப முதலில் உன் அருள் வேண்டும். அவர்கள் மனத்தில் சத்வம் தலைதூக்கியது என்றால் எங்கே எங்கே என்று கேட்டுக்கொண்டு அவர்களே வந்து சேர்ந்துவிடுவார்கள். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***



திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 01

திருப்பாவை முப்பதுக்கும் ரசித்து ஒரு ரசனைத் திருப்பாவையாகப் பாடிப் பார்க்கும் பேராசை இந்த விபரீத முயற்சி. அதாவது அனைத்துப் பாடல்களிலும் ஆண்டாள் பற்றிய குறிப்பு, திருப்பாவையின் சிறப்பு, அதைக் கற்கத் தூண்டும் ரசனைக் குறிப்பு ஆகியன அமைந்து வர வேண்டும் என்று சங்கல்பம். 

*

மார்கழித் திங்கள் மதியத்தே மால்நினைந்து
ஆர்கழலைச் சிந்தித்து ஆண்டாள் திருப்பாவை
தேரும் பொழுதத்துத் தித்தித்த தீஞ்சுவைகள்
யாரோ டுரைக்கேன்யான் யாமம் கடந்தாலும்
பாரோர் பையத் துயின்று பின்னிருளும்
காரோத வண்ணர்க் கரிய திருமேனிப்
பேரோதும் பெற்றித்தாய்ப் புந்திப் புலரியெழத்
தாராய் நறுங்கோதாய் தண்ணருளே யெம்பாவாய். 

ஸ்ரீஆண்டாள் பாடிய திருப்பாவை என்பது உபநிஷத்ஸாரம் என்பது சம்ப்ரதாயப் பெரியோர்களின் ஏகோபித்த கருத்து. சுருதிசதசிரஸ் சித்தம் அத்யாபயந்தி - மறைமுடி திகழும் ஒள்ளிய நுண்பொருளை மனிசர்க்கும், மாதவர்க்கும் ஒருங்கே எடுத்துரைக்கும் தலைவி ஸ்ரீஆண்டாள். கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் - என்றார் தந்தையார். திருமகளாருக்கு, புவிமாது வந்து நம்மை உயர்த்தப் பிறந்த பெருமாட்டியாம் ஸ்ரீஆண்டாளுக்கு யாரும் விலக்கில்லை, எதுவும் விலக்கில்லை. ‘உனக்கென்ன வேறுடையை?’ என்று ஒதுங்கிப் போவோரையும் தலைமுடி பிடித்து வந்து தாமோதரனார்க்கு ஆட்படுத்தும் தண்ணருளே உருவாய் வந்த சுடர்க்கொடி. ஸ்ரீராமாநுஜர் எப்பொழுதும் வாய்வெருவும் பாசுரமாகத் திருப்பாவையைக் கொண்டார் என்பதும், ஸ்ரீராமாநுஜரைக் கோயில் அண்ணரே என்று ஸ்ரீஆண்டாள் அருளப்பாடு விளித்தாள் என்பதும் அபிமானத்தால் மட்டுமன்றி ஆழ்பொருள் கொண்டவை.

ஸ்ரீஆண்டாளின் திருக்கழல் ஆர் கழல். பிரிவினை, வேறுபாடு ஒன்றும் இன்றி அனைத்து உயிர்களும் சென்று சூழும் கழல் ஆர் கழல். யார் எவர் எவ்வுயிர் என்று நோக்காமல் அனைத்தையும் சென்று அருளால் சூழ்ந்து வளைத்து உய்விற்குத் திருப்பும் கழல் ஆர் கழல். அந்த ஆர்கழலைச் சிந்தித்து, அவள் அருள் தரும் தெம்பில் திருப்பாவையைத் தோய்ந்து இரசிக்கும் பொழுது, அந்தத் தமிழ்வேத உபநிடதப் பெருநூலுக்கு வாய்த்த பொன்னுரைகள், அந்த உரைகளில் குறையாமல் பெருகும் பொருள் வளங்கள், இவற்றை யாரோடு உரைப்பது? யாருக்கு அதில் ஈடுபாடு? ஈடுபாடு இருக்கும். ஆனால் உள்ளே குதித்து முழுக ஓர் உளப்பாங்கு வேண்டுமே? யாரைக் குறை சொல்ல முடியும்? அவரவர் கவலை ஆயிரம். அதில் அவரவர் நியாயமும் ஆயிரம். உலகத்தாருக்கு எது பகலோ அது யோகிக்கு இரவு. யோகிக்குப் பகல் உலகத்தாருக்கு இரவு என்று ஸ்ரீகீதை புகன்றாலும், அதையும் மீறியல்லவா ஸ்ரீஆண்டாள் உலகத்தவர், யோகிகள் என்ற பிரிவு இல்லாமல் எல்லாருக்கும் ஒரே பகலாகக் காலத்தை ஆக்கிவிட்டாள் அல்லவா?

நள்ளிரவு யாமம் கடக்கின்றது. வெளியில் எங்கும் இருள். இருளா? எந்தப் பொருளும், எந்தக் காலப் பிரிவும் அதன் சொந்த இயல்பு கிடையாதே! அனைத்துமே திருமாலுக்கு ஏங்கி, அவன் நினைவில் அன்றோ தோய்ந்து கிடப்பன! எனவே இது இருள் இல்லை. இது யாமமும் இல்லை. கரிய மேனிப் பிரானின் வண்ணத்தைச் சுமந்து இந்தத் திருவரங்கத்தில் உலவும் யாரோ நித்ய சூரிதான் இந்த யாமமும், இருளும். ஆம். இந்த யாமத்தை நிறுத்தி உன் பெயர் என்னவென்று கேட்டால் ‘நிறத்தைப் பார்த்தால் தெரியவில்லை? கிருஷ்ணன்.’ என்று சொல்லிப் போகின்றனவே! ஆம் இருள் உண்மையில் அறிவில் அன்றோ இருக்கிறது. அறிவின் இருள் அகன்றால் பின்னர் நித்யம் பகல் அன்றோ! புந்தியில் புலரி எழுவதற்கு அருள் ஸ்ரீஆண்டாள் அன்றோ செய்ய வேண்டும்! ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


***

Friday, December 9, 2022

சிறுகதை என்றால் ....

கதை சொல்லிகள் நம் கிராம வாழ்க்கையில் பழக்கம்தான். இரவின் கடையாமம் வரை ஒயிலாடும் காடா விளக்குகள் அவிந்து தூபமாய்க் கேட்ட கதைகளை அசைபோடும். ஆயினும் சிறுகதை நம் வரலாற்றில் புதுசுதான். காரணம் சிறுகதையில் இருக்க வேண்டியது கதை அன்று. கதையின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. சரி விவரணைகளோ என்னில் இல்லை. விவரணையின் ஒரு தோற்றமே. அது மட்டுமன்று. சிறுகதை என்பது கவிதையின் ஒரு மூர்ச்சனையையும் தன்னுள் கொண்டது. கவிதை என்றால் கற்பனை; தரையில் கால் பாவாக் கிறக்க மொழிதலோ என்னில் அதுவுமன்று; யதார்த்தத்தின் நங்கூரம் கழண்டுவிடக் கூடாது. எனவேதான் சொன்னேன் நம் வரலாற்றில் சிறுகதை முற்றிலும் புதியது. 


நமது சிறுகதை ஆசிரியர்களில் பலரும் சிறுகதை என்ற பேரில் நெடுங்கதை, குறுங்கதை, அளவுக் கதை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறார்கள். கதை கேட்கும் ஜோரில் நாமும்  அதில் பழகிப் பழகி நமக்கு உண்மையான சிறுகதையைப் படித்தால் ஆச்சரியமாக இருக்கக் கூடும். 'இதில் என்ன இருக்கிறது? பெரிசாகச் சொல்கிறார்களே இதைப் பற்றி' என்று. அதாவது 'கதை சிறுத்து...' என்பதுதான் சிறுகதையின் உயிர்நாடி. கொடி இடையாளை 'இடை சிறுத்து' என்பார்கள். அதாவது இடை இருக்கிறதோ இல்லையோ என்று சந்தேகிக்க வேண்டும் படி இருக்கிறதாம். உடலின் மேற்பகுதியும், கீழ்ப்பகுதியும் இருப்பதால் இடை என்று ஒன்று இருக்கிறது என்று யூகிக்க வேண்டியுள்ளதாம். இது எந்தக் கொடி இடையாளுக்குப் பொருந்துமோ தெரியாது. ஆனால் 'கதை சிறுத்து' என்பதில் இதைப் பொருத்திப் பார்த்தால் ஓரளவிற்குச் சரிப்படும். அதாவது சிறுகதையில் கதை இருக்கிறதாக ஊகிக்கும்படி இருக்க வேண்டும். நன்றாக உப்பி, இளந்தொந்தி, பெருந்தொந்தி என்றபடி கதையம்சம் இருந்தால் அது சிறுகதை என்பதற்குச் சேராது என்பது நான் பார்த்த வரையில் மேலை நாட்டுச் சிறுகதைகளின் ரீதி, கொள்கை. ஆனால் நாங்கள் சுதேசிப்பற்று மிக்கவர்கள்; எங்கள் நாட்டில் நெய்த கதை எப்படி ஆயினும் அதையே மகிழ்ந்து, அதிலேயே பரவசமாகி நிற்போம் என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது. சிறுகதை என்பது நம்மைவிட்டு நழுவியபடியே இருக்கும். 


சிறுகதை என்பதில் கதை சொல்வது எப்படி ஒரு விடமுடியாத பழக்கமாக நம்மவரிடத்தில் தொற்றிக்கொண்டுள்ளதோ அதைப் போலவே கட்டக் கடைசியில், 'நச்' சங்கதிகளும். அதாவது நிகழ்வின் ஓட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அதெல்லாம் முக்கியமில்லை. எல்லாம் சேர்ந்து கடைசி ஒரு புள்ளியில் போய் கண்ணாடி போட்டு உடைத்தாற்போன்று ஒரு டணார். அதற்காகவே நம் மனமும் காவு காத்துக்கொண்டு இருக்கும். இதுதான் சினிமாத்தனம். அல்லது இந்தக் கதை கேட்கும் பழக்கத்தைத்தான் பின்னால் சினிமா வந்து காசாக்கிச் சினிமாத்தனமாக ஆக்கிவிட்டது என்று சொல்லலாம்.
அதாவது நாட்டுப்புறத் தெம்மாங்கு இசைக்கும் இசையியல் நுணுக்கம் மிக்க யாழிசை காட்டும் 'பிடிக்கும்' உள்ள வித்யாசம் இந்தக் கதை சொல்லல்களுக்கும், சிறுகதை என்பதற்கும் உண்டு. நமது மக்கள் கடந்த பல பத்தாண்டுகளாகவே சினிமா அபிமானம் அதிகப்பட்டு  வருகிறார்கள் என்பதன் விளைவு சிறுகதை என்று வந்ததும் சும்மா சின்னக் கதையா சொல்லணும் அவ்வளவுதானே என்ற எண்ணம் பரவத் தொடங்கிவிட்டது. நமது சிறுகதை உலகத்தில் மிகக் குறைவானவைகளே சிறுகதைகளாகத் தேரும். மற்றவை எல்லாம் வெறும் கதைகளே. சிறுகதையாளர்களின் லிஸ்டும் மாறும். இந்தக் குழப்பம் இங்கு மட்டுமன்று. வடக்கே, கிழக்கே எங்கு பார்த்தாலும் எல்லாரும் குட்டி வியாசர்கள் வால்மீகிகளாக இருக்கின்றார்களேயன்றி, சிறுகதை என்ற டெக்னிகல் பர்ஃபெக்க்ஷன் அதைப்பற்றிப் பெரிதும் பிரக்ஞை இருப்பதாகவும் தெரியவில்லை. இவர்களிடம் இதுதான் சிறுகதை என்று உலகத்தரம் வாய்ந்த சிறுகதை ஒன்றைக் காட்டினால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள். 

ஒரு அடர்ந்த செடியின் நடுவே ஒரு முத்து விழுந்துவிட்டது. நீங்கள் இதோ இந்த இடத்தில் அந்த முத்து இருக்கிறது என்று செடி கொடிகளை விலக்கிக் கண்ணுக்கு அந்த முத்து மட்டும் தென்படும் வகையில் காட்டுகிறீர்கள். அவ்வாறு காட்டுவதில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் முயற்சி சிறுகதை. வாழ்க்கையின் அடர்ந்த அனுபவங்கள் மிக்கச் செடிகொடிகளிடை நீங்கள் காட்ட விரும்பும் ஏதோ முத்துப் போன்ற அம்சம் எப்படிக் காட்டப் படுகிறது? அனைத்தையும் விலக்கினால்தான் தெரியும். அப்பொழுதுதான் விண்ணொளியும், கண்ணொளியும் அங்கு விழுந்து அந்த முத்தின் இருப்பை உணரும். கதை சொல்லல் என்பது முத்தைக் காட்டுவது ஆகாது. செடி கொடி எல்லாவற்றையும் விவரிக்கும். அந்தச் செடியில் வந்தமர்ந்து சென்ற பறவையினங்களைப் பதியவைக்கும். உள்ள செடி கொடி ஒரு புதர் என்றால் கதை என்பது அதைக் காடாக்கும். ஒண்டிக்கொண்டிருந்த விலங்கு திடீரென்று வெளிப்பட்டு ஓடிய நிகழ்வைப் பேசும்; அங்கு பூத்த மலர்கள், காய்கனி வகைகள் இவைபற்றியும் தெரிவிக்கும். ஆனால் முத்து? ஆம் அதுவும் அங்கே எங்கோ உள்ளேதான் விழுந்து கிடக்கிறது. 


அதாவது கதை என்பதில் எங்கோ இதிகாசத் தனமை உள்ளேயே புதைந்து கிடக்கிறது. நாம் இதிகாசத்தை விட்டு வெளிவரும் பொழுதுதான், இதி ஹ ஆஸம் – இது இவ்வாறு நடந்தது என்னும் ஒன்றிலிருந்து வெளிவரும் போதுதான் சிறுகதை நம் கண்ணில் படுகிறது. உண்மையில் வியாசர் என்ற அந்தப் பெரும் கிழவர் மிக விவரமானவர். படைப்புலகில் இன்றும் அந்தக் கிழவனை விஞ்ச ஆளில்லை. இதிகாசமாக ஒரு முக்கியக் கதையை ஓடவிட்டுவிட்டு அப்புறம் என்ன செய்கிறார் பாருங்கள்? ஏகப்பட்ட சிறுகதைகள். மனித வாழ்வின் தோய்விலும், தொய்விலும் கருவைத்த எத்தனையோ முத்துக்கள் அவரால் சிறுகதைகளாகப் பொதிந்து வைக்கப் பட்டுள்ளன. உண்மையில் அவைதான் வியாசரின் பர்ணசாலை. 


நாவல் எழுதுவது எப்படி என்று வழிகாட்டிகள் இருக்கலாம். நெடுங்கதை, குறுநாவல், கதை இவற்றிற்கு கைட் போடலாமாக இருக்கும். ஆனால் சிறுகதை எழுதுவது எப்படி என்று வழிகாட்டி போடுவது ஒரு வித ஹாஸ்யமே. ஏனெனில் சிறுகதை என்பது பார்வை சார்ந்த விஷயம். கவிதையைப் போலவே சிறுகதையும், ஒரு கலைஞன் சிறுகதையைப் பார்க்கிறான் என்பதைச் சார்ந்தது. மற்றவர்களுக்கு மொட்டையாகத் தெரியும் இடத்தில் சிறுகதையைப் பார்ப்பவன் எழுதுவது சிறுகதை. கவிதை எழுதுவது எப்படி என்பது எவ்வாறு வெட்டிப் பொழுது போக்கோ அப்ப்டியே சிறுகதை எழுதுவது எப்படி என்ற வியாபாரமும். 


ஹென்றி டேவிட் தோரோ கூறியது கண்ணில் பட்டது. Not that the story need be long, but it will take a long while to make it short. நெடுநேரம் பேசிக்கொண்டு இருப்போம். சரி இப்ப முடிவா என்ன சொல்ல வரேன்னா...என்று சொல்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்துக்குத்தான் to make the long story short என்ற வழக்கப்படியான சொற்பொருள் கோவை பயன்படுகின்றது. இங்கு கொஞ்சம் தோரோ அந்தச் சொலவடையைச் சிறிதே திருப்புகிறார். It takes a long while to make it short என்று.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் to make the long story short கதையைச் சுருக்குவது என்பது மிக நெடிய நேரத்தை எடுத்துக் கொள்வது. இங்கு சுருக்குவது என்றால் precis writing அன்று. ஜ்ழானரில் கதையம்சம் தொட்டுக்கொ தொடைச்சுக்கோ என்று இருக்கும்படி ஒரு மானிட வாழ்வின், உயிர்க்குல புழக்கத்தின் இண்டு இடுக்குகளில் காணாமலே போய்விடும் சில மறைகணங்களை அப்படியே பிடித்து அதை மெருகு துலக்கி, மைக்ராஸ்கோப் வைத்துக் கண்ணுக்குக் காட்டுவது. நாவல் என்பது panoramic view என்றால் அதற்கு நேர் பிரதிகோடி சிறுகதை.-- microscopic view . தூர தரிசனியில், காட்சிமாலை தரிசனியில் எவ்வளவு அதிகப்படியான பரிமாற்றங்களின் கொண்டு கொடுத்தல்களைக் காட்ட முடிகின்றதோ அது நாவல். Telescopic view, the big view  சராசரி வாழ்விலேயே கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படாமலே போய்விடும் நுணுக்கமான மனித சுபாவப் பரிமாற்றங்களின் உள்புறங்களைத் தோன்றி மறையும் கணத்திற்குள் பிடித்துக் காட்டிவிடும் நுண்தர்சனி சிறுகதை.
கதை என்றால் என்ன என்பது கேள்வி கேட்கும் வரை நன்றாகப் புரிகின்ற விஷயம். அது என்ன என்பது எப்படி முடிவானாலும் எனக்குச் சம்மதமே. கதை என்றால் என்ன என்று முடிவு பண்ணி அதில் சின்னது சிறுகதை என்று முடிவுக்கு வரமுடியாது என்பது நான் உணர்த்த வரும் விஷயம். அதைப்போல சிறுகதை என்றால் கதை அங்கு இல்லை. கதை ஏதோ இருப்பதாக ஊகிக்க மட்டுமே முடிகிறது என்று பொருள். 


சிறுகதை இலக்கணம் வைத்துக்கொண்டுதான் கதை எழுதணுமா? படைப்பு எந்த இலக்கணத்தையும் ஒப்பு நோக்கிப் பிறவாது. அதாவது, நிறைய பக்கங்கள் வரும்படி நெடுங்கதையாக எழுதுவதற்கு நடுவில் ஒரு சின்ன சம்பவம், ஒரு விவரிப்பு, மனத்தைத் தொடும் ஒரு நிகழ்வு இதைச் சுருக்கமாகச் சொல்லி ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்திற்குள் படித்துவிடும்படி எழுதினால் அது சிறுகதை என்று பேர் வந்திருக்கும். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆலாபனை? என்று உங்களுக்குத் தோன்றினால் அதிலும் தவறில்லை. ஏனென்றால் எதேச்சையான தொடக்கங்கள் அப்படித்தான் அமையும். ஆனால் அங்கிருந்து சிறுகதை என்ற வடிவம் எந்த நிலைக்கு வளர்ந்து நிற்கிறது என்பதுதான் வியப்பு. தான் இது இல்லை, அது இல்லை என்று தன்னைத் தன் வகைப்பாட்டைத் தவிர பிறிதொன்றோடு ஒரு சேரக் கட்டுவதைத் தவிர்க்கும் போக்கில் சிறுகதையின் பிரத்யேகத் தன்மையை இனங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி. ஏதோ நல்ல கதையாகப் படித்தோம். ரசித்தோம் என்று போகாமல் இலக்கிய இன்பம் என்பது ரசிப்பதோடு சேர்த்து, இலக்கிய வகைப்பாடுகளை நன்கு அறுதியிடுவதிலும் அறிவின் ஊக்கம் செயல்படுவது ரசனையை ஆழப்படுத்துவதும், திறம் மிகச்செய்வதும் அல்லவா? 


கதைகளின் நடுவே கதையற்ற புள்ளிகளைக் காண்பதும் காட்டுவதும் சிறுகதை. வால்மீகி சொல்லும் ஸ்ரீராமனின் கதை நெடுகப் போகிறது. அடுத்து அடுத்து ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என்று கதை பின்னிப் போகிறது. ஆனால் சிராவணனின் உபாக்யானம். அங்கு கதை அற்றுப் போய் நின்று விடுகிறது. அது சிறுகதை. வில்லில் சரம் தொட்டு விட்ட தசரதனின் குறி சிராவணன் அன்று. அம்பும் அவனைக் குறிக்கொண்டு போகவில்லை. எந்த அசுரனையும் இலக்கு வைத்து தசரதன் எய்யவும் இல்லை. வேட்டை, உல்லாசம், வேந்தர்தம் பொழுதுபோக்கு, அதில் கொடிய விலங்கு இறந்தால் ஒரோவழி நாட்டுக்கும் உபகாரம். ஆனால் இறந்த விலங்கு என்ன விதத்தில் கொடியது? அதுவும் அது தண்ணி குடித்தது என்றால் அதனால் நாட்டிற்கு என்ன தீங்கு? ஒன்றும் இல்லை. சப்த வேதி என்ற அஸ்திரத் திறமை தெரியும். அதை நிரூபித்துக் காட்ட ஒரு யதேச்சையான சந்தர்ப்பம். சப்தத்தை அறிந்தான் தசரதன் ஆனால் சப்தார்த்தம் பிழையாகி விட்டது. நதியின் பிழையன்று நறும்புனலின்மை. அதுதான் சிறுகதை. பெரும் காதையைச் சொல்லவருகின்ற வால்மீகி ஏன் இவ்வாறு கதையே அற்று, ஸ்தம்பித்த இந்தச் சூன்ய கணத்தைப் பதிவு செய்தான். அங்குதான் அவன் சிறுகதை ஆசிரியன். கிரௌஞ்ச பட்சியைக் கொன்ற அம்பு வேடனின் இலக்கு. ஆனால் சிராவணனைக் கொன்ற அம்பிற்கு இலக்கு எதுவும் இல்லை. நட்ட நடுவானில் நம் கண்ணை உறுத்துகின்ற கூர் முனை அம்பாக இன்றும் தழல்கிறது சிராவணன் என்னும் சிறுகதை. 


அந்தச் சிறுகதை முடிந்ததும் நீள்கதை மீண்டும் பாய்கிறது. ஸ்தம்பித்த கணம் விட்டு அனைத்தும் நகர்கின்றன. அந்தச் சிராவணனைக் கொன்றதால் தசரதன் தன் மகனைப் பிரிய நேர்ந்தது. -- இப்படிச் சொன்னதும்தான் கதைக்கு ஒரு பெருமூச்சு!. அப்பாடா எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று. ஆனால் சிறுகதை புரியாத புள்ளியில் மூர்த்தண்யத்துடன் நிற்கும். சால்சாப்புச் சொல்லி மழுப்பாது. ஏனெனில் அதற்குக் கதையைப் பற்றிச் சிறிதும் இலட்சியமே இல்லை. கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும். 


கதை சொல்வது ஆதிகால ஊக்கம். மனிதர் கதை சொல்லிகள்தாம். மனத்தில் அடர்ந்து மண்டி வளர்ந்து பெருகுவதும் கதைகள்தாம். கதைகளுக்கு நடுவில்தான் மனிதன் பிறக்கிறான். முலைப்பால் கிட்டாத குழந்தை இருக்கலாம். ஆனால் மனத்தில் கதை ஊட்டாத குழந்தை இல்லை. எனவேதான் நம் மனமே நம்மைப் பற்றிச் சிந்தனைகள் இடும்போதே பாருங்கள் குட்டிக் குட்டிக் கதைகளாகப் பின்னிக்கொண்டே போகும். 


ஒன்றுமில்லை. கடைத்தெருவுக்குப் போகவேண்டும்; ஒரு வேலையாக என்று நினைக்கும் போதே அங்கும் உள்ளே ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு குட்டி கிளைமாக்ஸ், ஒரு சின்ன ஆண்டி கிளைமாக்ஸ், ஒரு குட்டியூண்டு ப்ளாட் எல்லாம் அதுபாட்டுக்கு மினி எம் எம்மில் ஒரு பக்கத்தில் ஓடும். மனிதன் கதையாடுவது சுபாவம். கதைகளின் நடுவே தன் இருப்பைக் கற்பனை செய்து ஒரு பாதுகாப்பைத் தேடிக்கொள்வது உளவியல் ஒத்தடம். ஆனால் இந்தச் சர்வ ஜன பொதுமையிலிருந்து அந்தர்முகமான பாதைக்கு மாறுகிறது, மாற்றுகிறது கதையாடல் போன்ற ஒன்று. ஆனால் அங்குக் கதையாடல் இல்லை. கதைகள் ஓய்வு பெறுகின்றன. சுழலும் பம்பரம் சுற்றி ஓயும் கிடைவட்ட அசைவு மட்டுமே அந்தச் சொல்லாடலில் தோற்றும் கதைத்தோற்றம். இதற்கு உண்மையில் 'அகதா' என்று பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறுகதை என்று வளர்ந்துவிட்டிருக்கிறது. 


புத்தர் வீட்டைத் துறந்து காட்டுக்குப் போனதைக் கதையாகச் சொல்ல முடியும். ஆனால் புத்தர் போதி மரத்தின் அடியில் சட்டென்று குமிண்சிரிப்புத் துலங்க ஸ்தம்பித்த கணத்தைச் சிறுகதையால்தான் குறிப்பு காட்ட முடியும். மகள் வந்தது; அவள் சொன்னது; எங்கும் திரிந்தது; அனைவரும் சேர்ந்து பல கொட்டங்கள் அடித்தது; -- கதை. மகள் கிளம்பிப் போன இரவு விமானம் ஏற்றிவிட்டு வந்து படுத்துக் காலை விழித்ததும் அவள் விட்டுச் சென்ற பொருள், ஆளுக்கு ஒரு மூலையைப் பார்த்த வண்ணம் விடும் நெட்டுயிர்ப்பு, கனத்த கலைக்க விரும்பாத மௌனம், நிரம்பி வழியும் வெறுமை -- சிறுகதை.

***