Wednesday, February 26, 2020

ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள்

உபநிஷதங்களின் கருத்துகளை மீமாம்ஸை நெறிப்படி நூலாக, பொருந்திய தர்க்கம், சான்றுகள் கொண்டு கிரமமாகத் தரப்பட்டவை ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்னும் வேதாந்த சாத்திரம். அதை அருளியவர் ஸ்ரீகிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசர். ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் நான்கு அத்யாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திலும் நான்கு பாதங்கள். ஆக நான்கு அத்யாயங்களுக்கு மொத்தம் பதினாறு பாதங்கள் என்ற கணக்கு.

இதில் முதல் அத்யாயத்தின் பெயர் ஸமன்வய அத்யாயம். இரண்டாம் அத்யாயத்தின் பெயர் அவிரோத அத்யாயம். மூன்றாம் அத்யாயத்தின் பெயர் சாதன அத்யாயம். நான்காம் அத்யாயத்தின் பெயர் பல அத்யாயம்.

முதல் அத்யாயத்தின் பெயர் ஏன் ஸமன்வய அத்யாயம்? உபநிஷதங்களில் ஜகத் காரணமாகச் சொல்லப்படும் வாக்கியங்கள் அனைத்தின் பொருளும் சித் அசித் என்பவற்றினின்றும் வேறுபட்ட இலக்கணமுடைய ப்ரஹ்மத்தினிடத்தில் நன்கு பொருந்தி ஸமன்வயப் படுகிறது என்பதை யுக்தி ரீதியாகக் கிரமமாக தர்க்க முறைப்படி முதல் அத்யாயம் நிரூபிப்பதால் அதற்கு ஸமன்வய அத்யாயம் என்று பெயர். பிரம்மம் இந்த ஜகத்தின் காரணம், இந்த ஜகத்து பிரம்மத்தைக் காரணமாகக் கொண்டு கார்யமானது என்பதில் ஏற்படக் கூடிய ஐயங்கள், மாறுபட்ட எண்ணங்கள் ஆகியவற்றை நீக்கித் தெளிவுபடுத்தும், விரோதங்கள் இல்லையென்று நிரூபிக்கும் அத்யாயம் ஆகையாலே இரண்டாம் அத்யாயம் அவிரோத அத்யாயம். ஆக முதல் இரண்டு அத்யாயங்களாலும் பிரம்மம் என்பதைப் பற்றிய ஐயம், தெளிவின்மை எதுவும் இல்லாத, நிரூபிக்கப்பட்ட போதத்தை ஏற்படுத்துவதால் முதலிரண்டு அத்யாயங்களும் முற்பகுதியான இரட்டை அத்யாயங்கள் என்று சொல்லப்படுகின்றன. (பூர்வ த்விகம்)

மூன்றாம் அத்யாயம் பிரம்மத்தை அடையும் மார்க்கத்தை, அடைவிக்கும் சாதனத்தைப் பற்றிப் பேசுகின்ற அத்யாயம். எனவே மூன்றாம் அத்யாயத்திற்கு சாதன அத்யாயம் என்று பெயர். நான்காம் அத்யாயமோ அந்தச் சாதனத்தால் நிறைவாக அடையப்படும் பலம் என்பதைப் பற்றிப் பேசுவது. எனவே நான்காம் அத்யாயத்திற்குப் பெயர் பல அத்யாயம். மூன்று நான்காம் அத்யாயங்களைச் சேர்த்து உத்தர த்விகம் என்று சொல்வது வழக்கம். (பிற்பகுதியான இரட்டை அத்யாயங்கள்)

நான்கு அத்யாயங்கள், ஒவ்வொரு அத்யாயத்திலும் நான்கு பாதங்கள் என்று பார்த்தோம் அல்லவா? அதைப் போல் ஒவ்வொரு பாதத்திலும் பல அதிகரணங்கள் என்ற பகுப்பு உண்டு. ஒவ்வொரு அதிகரணத்திலும் குறிப்பிட்ட ஸூத்திரங்கள் உண்டு. ஆக ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஸூத்திரங்களை நூற்றுக்கணக்கான அதிகரணங்கள் என்றபடிப் பிரித்து, ஒவ்வொரு பாதங்களுக்கும் இவ்வளவு அதிகரணங்கள் என்று, ஒவ்வொரு அத்யாத்திற்கும் நான்கு பாதங்கள் என்றபடி, மொத்தம் நான்கு அத்யாயங்கள் கொண்ட சாத்திரமாக இருப்பது ஸ்ரீபிரஹ்ம ஸூத்திரம் என்னும் வேதாந்த சாஸ்திரம்.

இதில் ஒவ்வொரு அதிகரணமும் உபநிஷதத்தின் முக்கியமான கருத்தைத் தம்முடைய ஆய்வுக்கான விஷயமாகக் கொண்டிருப்பதால் அந்தந்த உபநிஷதக் கருத்து அடங்கிய உபநிஷத வாக்கியம் அந்தந்த அதிகரணத்திற்கு விஷய வாக்கியம் எனப்படும். இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? உபநிஷதங்கள் என்பவைதாம் மிக முக்கியமான அடிப்படையான ஒரே சான்று நூல் நம் ஹிந்து மதத்திற்கு என்பது புலனாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Tuesday, February 25, 2020

நம்மாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு அருளிச்செய்தது ஸ்ரீபெரியாழ்வார். நம்மாழ்வாரும் ஒரு திருவாய்மொழியைத் தாம் அனுபவித்த திருப்பல்லாண்டு என்னும்படி அருளிச் செய்திருக்கிறார். அது எந்தப் பத்துப் பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழி?

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி ‘அங்கும் இங்கும்’. இரண்டாம் திருவாய்மொழியில் ‘பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற்றோடு பால்மதி ஏந்தி ஓர் கோல நீல நன்னெடுங்குன்றம் வருவதொப்பான்’ என்று பாடினார். உடனே இத்தகைய வடிவோடே இந்தப் பொல்லாங்கு நிறைந்த ஸம்ஸாரத்திலே வருகிறானே என்று பதறி, அவன் காப்பவன், தாம் காக்கப்படும் உயிர் என்பதையெல்லாம் நினைவின்றி அவனுக்குப் பரிவார் யாரும் இல்லையோ என்று அவன் தனிமைக்கு வெறுத்து பீதராகிறார் அல்லது அவன் தனிமைக்குப் பரிவதில் தமக்கு யாரும் துணைசேரவில்லையே என்று தம் தனிமைக்கு வெறுத்துப் பாசுரம் அருளிச்செய்கிறார். இந்தப் பத்து பாசுரங்களும் நம்மாழ்வாரின் திருப்பல்லாண்டு என்று அருளிச்செய்வர் - என்று அனுபவிக்கிறார் அரும்பத உரையாசிரியரான குணக்கரம்பாக்கம் ராமாநுஜ ஜீயர். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டோடு பக்கம் வைத்து அனுபவிப்பதும் ஓர் அனுபவம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

வேதாந்தம் உபநிஷத்து ப்ரஹ்ம ஜ்ஞானம்

வேதாந்தம் என்பது உபநிஷதம் என்பதைக் குறிக்கும். வேதத்தின் நிச்சயம், நிர்ணயமான தத்துவக் கருத்து, வேதம் என்ன சொல்லவந்ததோ அந்த முக்கியமான கருத்து நிறைவுபெறும் பகுதி என்ற பொருளில் உபநிஷதம் என்பதுதான் வேதத்தின் அந்தம். அந்தம் என்றால் கடைசிப் பகுதி என்ற பொருளில் இதைப் புரிந்துகொள்ளக் கூடாது. உபநிஷதங்கள். மிக முக்கியமான உபநிஷதங்கள் என்று பத்து உபநிஷதங்களைக் கவனத்தில் கொண்டு ஆசாரியர்கள் உரைகள் எழுதியுள்ளனர். காலத்தால் முன் வந்த ஆசாரியர் ஸ்ரீஆதிசங்கரர்.

உபநிஷதக் கருத்துக்களைத் தொகுத்து மீமாம்ஸை நெறிப்படி, தர்க்க ரீதியாகத் தந்திருக்கும் நூல் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் எனப்படும் வேதாந்த ஸூத்திரங்கள். சுலோகங்கள் வடிவில் உபநிஷதக் கருத்துக்களை பக்தி தோய தந்திருக்கும் நூல் ஸ்ரீமத் பகவத் கீதை. ஆக உபநிஷதங்களே முதன்முன்னம் முக்கியமான ஏக ப்ரமாணம். அதன் கருத்துக்களை விளக்கவும், நெறிப்படுத்தித் தரவும் உதவும் நூல்கள் கீதையும், வேதாந்த ஸூத்திரங்களும் ஆகும் என்பது இப்பொழுது நமக்குப் புரிந்து கொள்ள முடியும். அப்படியென்றால் உபநிஷதம் என்றால் என்ன? இதைப் பற்றி யாரேனும் நம பண்டைய ஆசாரியர்கள் விளக்கம் தந்துள்ளனரா என்று பார்த்தால் மிகத் தெளிவாக விளக்கம் தந்துள்ளனர்.

பகவத்பாதரான ஸ்ரீஆதிசங்கரர் தமது உபநிஷத் வியாக்கியானங்களில் உபநிஷதம் என்றால் எதைக் குறிக்கும் என்று தெளிவுபட விளக்கியிருக்கிறார். ஓரிடத்தில் ஈரிடத்தில் அன்றிப் பல இடங்களிலும் அறுதிபட அவர் விளக்கியிருக்கும் நேர்த்தி அழகு!.

ஆத்மஞானத்தைப் போதிப்பதுதான் உபநிஷதம் என்பது அவர் பல இடங்களிலும் விளக்கும் கருத்து. அது மட்டுமன்றி, உபநிஷதம் என்ற சொல்லே ஆத்ம ஞானம் என்பதையே குறிக்கும் என்றும், அதனாலேயே ஆத்மஞானத்தைப் போதிக்கும் வித்யைக்கே உபநிஷதம் என்பதே பெயராக வந்துவிட்டது என்றும் கூறுகிறார்.

தைத்திரீய உபநிஷதத்தின் வியாக்கியானத்தில் அவர் கூறுவது: “அத ப்ரஹ்ம வித்யார்த்தோபநிஷத் ஆரப்யதே| உபநிஷத் இதி வித்யா உச்யதே|.. ப்ரஹ்மண உபநிகமயித்ருத்வாத், உபநிஷண்ண வா அஸ்யா பர ச்ரேய இதி | தத் அர்த்தத்வாத் க்ரந்தோபி உபநிஷத்” -

பொருள் - “எனவே ப்ரஹ்மத்தைப் பற்றிப் போதிக்கும் இந்த உபநிஷத் ஆரம்பிக்கப் படுகிறது. ஆத்மா பற்றிய வித்யையே உபநிஷதம் என்று சொல்லப்படுகிறது. ப்ரஹ்மத்தின் நெருக்கத்தில் ஒருவரை அழைத்துச் செல்வதாலும் உபநிஷத். பரம ச்ரேயஸ் என்பதைத் தருவதாலும் உபநிஷத். இந்தப் பொருளிலேயே கிரந்தத்திற்கே உபநிஷதம் என்று பெயர்.’

ப்ருஹதாரண்யக உபநிஷத வியாக்கியானத்தில் ஸ்ரீஆதிசங்கரர் கூறுவது: “ஸேயம் ப்ரஹ்மவிதயா உபநிஷத் சபதவாச்யா, தத்பராணாம் ஸ ஹேதோ: ஸம்ஸாரஸ்ய அத்யந்த அவஸாதநாத்; உபநி பூர்வஸ்ய ஸதே: தத் அர்தத்வாத் | தாதர்த்யாத் க்ரந்தோபி உபநிஷத் உச்யதே “

பொருள்: ‘இந்த ப்ரஹ்ம வித்யைக்கே உபநிஷதம் என்று பெயர். இதைச் சார்ந்து கற்பவரிடமிருந்து இந்த ஸம்ஸாரத்தை அடியோடு நீக்கிவிடுகிறது. உபநி என்னும் முன்னொட்டும் ஸத் என்னும் தாதுவினோடு சேரும் போது இந்தப் பொருளையே தருகிறது. அதே பொருளில்தான் நூலிற்கும் உபநிஷத் என்று சொல்லப்படுகிறது.’

ஈஸாவாஸ்ய உபநிஷதத்தில் ஸ்ரீஆதிசங்கரர் கூறுவது: “ஸர்வாஸாம் உபநிஷதாம் ஆத்ம யாதாத்ம்ய நிரூபணேந ஏவ அபேக்ஷயாத், கீதாநாம் மோக்ஷதர்மாணாம் ச ஏவ பரத்வாத்”

பொருள்: ‘அனைத்து உபநிஷதங்களுக்கும் உட்கிடக்கையாவது என்னவெனில் ஆத்மாவின் உண்மையான இயல்பை நிரூபிப்பதே ஆகும். கீதைக்கும் மற்று மோக்ஷதர்மம் போன்ற நூல்களுக்கும் அதுவே நோக்கம் ஆகும்.’

இப்பொழுது நமக்கு உபநிஷதம் என்றால் என்னவென்று தெளிவாகியது அல்லவா? உபநிஷதம் என்றால் வேதாந்தம். வேதத்தின் அந்தம் எனப்படும் அர்த்த நிச்சயம். நிர்ணயமான வேத அர்த்தம். வேதத்தின் உட்கருத்து என்னவோ அது நிறைவேறின அறுதியான பகுதி. அந்த உபநிஷதம் என்றாலே பொருள் ஆத்மஞானம் என்பதே ஆகும் என்று கல்வெட்டி உரைத்தாற்போல் ஸ்ரீஆதிசங்கரரின் விளக்கத்தின் பின்னர் நமக்கு என்ன குழப்பம் இருக்க முடியும்?

உபநிஷதம் என்பதைப் பற்றித் தமது தைத்திரீய உபநிஷத வியாக்கியானத்தில் ஸ்ரீகூரநாராயண ஜீயர் கூறுவது: “பரஸ்ய ப்ரஹ்மண: ஸமீபே வாசகதயா நிஷீதந்தி இதி உபநிஷத:| பரப்ரஹ்ம பிரதிபாதகத்வாத் தத்ப்ராப்தி ஹேதுத்வாச்ச பரவித்யா ஏதா: |”

பரப்ரம்மத்தின் சமீபத்தில் கற்பவரைக் கொண்டு போய் வைப்பது என்பதால் உபநிஷதம். பரப்ரஹ்மத்தை நன்கு விளக்கிப் புரிய வைப்பதாலும், அந்த பரப்ரஹ்மத்தை அடைவதற்கான காரணமாக இருப்பதாலும் பரவித்யை என்று ஆகிறது.

உபநிஷத் என்றால் ப்ரஹ்மஞானம் என்பதைக் குறிக்குமா?

சாந்தோக்ய உபநிஷத் பாஷ்யத்தில் ஸ்ரீரங்கராமானுஜ முனிவர் கூறுவது: “உபநிஷத் சப்தேந உபநிஷத் ஜன்யம் ப்ரஹ்மாத்மகத்வ ஜ்னானம் உச்யதே”

’உபநிஷத் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது உபநிஷத் மூலமாக உண்டாகும் ப்ரஹ்மாத்மகத்வ ஜ்னானம் என்பதே ஆகும்.’

வேதம் என்பதன் முக்கிய நோக்கமே ஆத்ம ஞானத்தை மனிதருக்குப் போதிப்பதுவே ஆகும் என்பதில் நூலும் தெளிவு, நோக்கமும் தெளிவு பின் ஏன் குழப்பம் நம்மிடம் தேவையில்லையே.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Wednesday, February 19, 2020

அஹமஸ்மி அபராத சக்ரவர்த்தி:

ஜீவர்களாகிய நமக்குச் சாதிக்க முடிந்ததெல்லாம் தெய்வத்திடம் புரியும் அபராதமே. அதையும் செய்துவிட்டு, வெட்கமும் இன்றி அந்தத் தெய்வத்திடமே பிரார்த்தனைக்கும் நிற்போம். இந்த விதத்தில் நாம் அபராத சக்ரவர்த்தி என்கிறார் ஸ்வாமி வேதாந்த தேசிகர். அதையும் நம்மை நோக்கி நேரே சொல்லாமல் ஏதோ தமக்குச் சொல்லிக் கொள்வது போல் சொல்கிறார். ‘அஹமஸ்மி அபராத சக்ரவர்த்தி:’ என்று தயாசதகத்தில். தெய்வத்திற்கும் மிகவும் கருணை. இந்த ஜீவன் செய்யும் அபராதங்களைப் பொருட்படுத்தாமல் இவன் ஐயோ என்று போய் நிற்கும் போது அருளும் புரிகிறது. எந்த ஜீவன் என்று கணக்கில்லாமல், அது இந்திரனும் சரி, சாதாரண மனித ஜீவனும் சரி. இதை மிக அழகாகப் பாடிக் காட்டுகிறார் ஸ்வாமி தேசிகன் தமது யாதவாப்யுதயத்தில்.

‘க்ருதாபராதேஷு அபி ஸாநுகம்பம்
க்ஷேமங்கரம் க்ஷேத்ர விவேசகாநாம் |
விச்வோபகார அத்வர பத்த தீக்ஷம்
வேத்யம் பரம் வேதவிதோ விதுஸ்த்வாம் || ‘

அபராதம் செய்பவர்களிடம் ஐயோ பாவம் என்னும் உள்ள நெகிழ்ச்சி உடையவன்; இது தேகம் இது தேகத்தினின்றும் வேறான ஆத்மா, இது க்ஷேத்ரம் இது க்ஷேத்ரஜ்ஞன் என்ற விவேகம் புரிவோருக்கு க்ஷேமம் செய்பவன்; அவன் சதா ஒரு வேள்வி புரிந்தவண்ணம் இருக்கிறான் அது என்ன எனில் அனைவருக்கும், விச்வத்திற்கும் உதவுவது என்னும் வேள்வியில் எப்பொழுதும் தீக்ஷை கொண்டவனாய் இருக்கிறான்; அறிஞர்களுக்கு அறியவேண்டியவற்றுள் மிக உயர்ந்த அறிய வேண்டிய பொருளே அவன் தான்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Sunday, February 16, 2020

பாகவத சேஷத்வம்

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்க அரங்கன் சேவடி அடையும் சடகோபன் ஏன் மறுபடியும் நம்மிடம் வருகிறார்? அதுதான் ஸ்ரீவைஷ்ணவத்தின் உச்சம். பகவானை அடைதல் என்பது ஆரம்பநிலை அவ்வளவே. அந்த பகவத் காதல் என்பது பாகவதர்களிடம், பகவானின் பக்தர்களிடம் தொண்டு பூணும் அன்பாக மாறுவதுதான் முதிர்ந்த நிலை. முதிர்ந்த நிலைக்குப் போன பக்திதான் நிலைக்கும்.

என்னை ஏன் இந்த நிலைக்கு முதலில் இந்த ஸம்ஸாரத்தில் ஆளாக்கினாய்? என்று தம் முன் தோன்றும் பகவானிடம் நம்மாழ்வார் மடியைப் பிடித்துக் கேள்வி கேட்கிறார். அவரும் ஏதேதோ சொல்லிச் சமாளிக்கிறார். ம்..ம்.. அதெல்லாம் செல்லுபடியாகவில்லை. என்ன செய்வது?

முதலில் --- யார் சார் கோவிலுக்கெல்லாம் போறது? கடவுள் இருக்குன்னு சொல்றீங்களா? என்னம்மோ நமக்கு அதெல்லாம் அவ்வளவு... சாரி.... மற்றவங்க போறத நான் தடுக்க மாட்டேன் என்ன.... - இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும் ஜீவன்தான்,... பிறகு....... உலகம் அல்பம் அஸ்திரம் அசுகம் என்றெல்லாம் பட்டுப் பட்டுத் தெரிந்து பின்னர் ஐயோ அப்பா எங்க இருக்க யாராவது இருக்கீங்களா... தெய்வம் என்று ஒன்று கிடையாதா... நான் இப்படிக் கத்தறேனே காதுல கேட்கல்லியா.... என்று பரிதபித்து...

அப்புறமும் இதன் பக்குவம் நிலை நிற்க வேண்டுமே, அதற்காக கடவுள் பொறுமையாக இந்த ஜீவனுக்குப் பக்குவம் முதிரும்படியாகச் செய்து, பகவான் இல்லாமல் வாழ்வு இல்லை என்று இந்த உலக வாழ்வே அடிக்கொதிக்கும் பாலை வெப்பமாகச் சுடும் அளவிற்கு வந்து.... சரி இப்பொழுது முகம் கொடுக்கலாம் என்று வந்து நின்றால் .... ஜீவனுக்கு கடந்தகாலம் எல்லாம் நினைத்துப் பகீர் என்கிறது!

முதலில் எனக்கு ஸம்ஸாரத்தில் ஆழ்ந்து என்னையும் உன்னையும் மறந்த துர்கதி ஏன் ஏற்பட்டது? அதற்குச் சொல் பதில். நீ அப்பொழுதும்தானே பார்த்துக்கொண்டு நின்றாய்? இதற்குத்தான் மடிபிடித்த கேள்வி என்பது. எப்படி இதற்கு பகவான் பதில் சொல்லுகிறார்? - பராக்கு காட்டித்தான். குழந்தை அடம் பண்ணால் ஏதொ அதையும் இதையும் காட்டி கவனத்தைத் திருப்புவது போல - அதெல்லாம் இருக்கட்டும் ஆழ்வீர்! பாரும் நீர் அடையப் போகும் நிலையைப் பாரும். உமக்காக திருநாடு என்ன அமளிதுமளி படுகிறது என்று பாரும்! - என்று காட்டித்தான் மறக்கடிக்கிறார்.

அப்படியெல்லாம் போய் அடைந்துவிட்டு மறுபடியும் அடியார்குழாம் கூடுவதற்கே வந்து விடுகிறார் ஆழ்வார் என்றால் ஸ்ரீவைஷ்ணவத்தின் அறுதியான வார்த்தையை உரைத்தவர் ஸ்ரீஆண்டாள் என்றுதானே அர்த்தம்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

எல்லாரும் போந்தாரோ

ஒல்லை நீ போதாய்
உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ?
போந்தார் போந்தெண்ணிக்கொள்.

முழு திருப்பாவையின் பா4வகனம் புரிய வேண்டும் என்றால் இந்த வரிகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அத்தனை பேரும் கடைத்தேற வேண்டும். ஒருவர் இழக்கக் கூடாது. எண்ணு. தலையை எண்ணு. யாரு மிஸ்ஸிங் பாரு? - என்ன மனநிலை இது! இது முடியுமா? எல்லாருக்கும் திறந்து வைத்திருக்கும் பொதுச்சொத்தா? பக்குவம், தகுதி ஒன்றும் இல்லையா? என்னென்னவோ கேட்கலாம்? ஆனால் அதெல்லாம் அந்த ஸ்ரீஆண்டாளின் கோஷ்டிக்குக் காதிலேயே விழாது. ஓர் உயிரும் இழக்கவே கூடாது. மொத்த பூர்வாசாரியர்களின் குழாமும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. அது என்ன? ஆழ்வார்கள், நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீஸ்ரீமணவாளமாமுனிகள் பர்யந்தம் இதே மனப்பான்மையா? அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி என்று ஸ்ரீஆண்டாளை ஏன் கொண்டாடமாட்டார்கள்?

நஞ்சீயரை ஒருவர் கேட்டார். ‘ஒருவருக்கு வைஷ்ணவத்தன்மை உண்டு என்று எப்படி அறிவது?’

தெருவில் ஒருவர் போகிறார். அவர் காலில் ஏதோ குத்துகிறது. அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறவருக்கு ‘ஐய்யோ’ என்று வலித்ததாகில் அவருக்கு பகவத் சம்பந்தம் இருக்கிறது என்று பொருள். ...அப்படியில்லாமல் ‘வேண்டும் நன்னா படணும்.......’ என்று தோன்றுமேயானால் அந்தப் பேர்வழிக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று அறியலாம்.

நாராயணன் என்ற ஒற்றை நாமத்தில் உலகை எழுதி வாங்கிவிட்டவர்களிடம் என்ன பேசுவது?

*
கென்னத் கோச் என்னும் கவிஞர் சொல்கிறார் - 'வார்த்தை ஒவ்வொன்றுக்கும் இசை இருக்கிறது. கவிஞர்கள் அதைக் கச்சிதமாக அமைப்பில் வைக்கும் போது சொல்லின் இசையைக் கேட்க முடிகிறது'. காலம், ஞாலம், உயிர்கள், கடவுள், நாம் என்று எல்லாவற்றையும் ஒரே அள்ளலில் விழுங்கும் சாமர்த்தியம் கவிதைக்கில்லாமல் வேறு எதற்கு உண்டு? இதில் பல்கால் குயிலினங்கள் கூவினால் என்ன? மாதவிப் பந்தலில் ஊசலாடுவது நம் மனங்கள் அனைத்தும் என்று முடிவான பின்பு, தத்துவமாவது தகவாவது? இதெல்லாம் தெரிந்துதானே அந்தச் சரியான கள்ளன், எல்லாவற்றையும் தாண்டி, அண்டம் கடந்து, மனம் வாக்கு எட்டா சேய்மையனாய்ப் போய் ஒளிவது நம் உள்ளத்துள் என்றால் பக்தியின் ஜ்யோமெட்ரியும் வேறு. பாவனையின் டோபோக்ரஃபியும் வேறுதானே! இதில் வெயிலில் காயவைத்த வடாம் போன்ற நம் வார்த்தைக் குப்பைகளைக் கிளறி என்ன செய்யப் போகிறோம்?

*
இது என்ன மனோபாவம்! அவதார புருஷர்களான ஸ்ரீராமகிருஷ்ணர் போன்றோரின் வாழ்விலும் பார்க்கிறோம். அவர்கள் அவதரிக்கப் போகிறார்கள் என்றதுமே அவர்களைக் கருவாய்த்த பேறுடைய பெற்றோருக்கு பல திவ்ய காட்சிகளும், தேவதா உருவங்களும் கண்ணுக்குத் தெரிவதும், பெரும்பாலும் அன்னார் அயிர்த்துப் போவதும் பின் தேறுவதுமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் ஆய்ச்சியர் மத்தியில் ஸ்ரீகிருஷ்ணன் வளரும்காலத்து அத்தனை தேவர்களும் வந்துபோன வண்ணம் இருந்திருக்கின்றனர். இது நன்றாக ஆய்ச்சியர் கண்ணுக்கு இலக்காக நடந்திருக்கிறது. ஆனால் சிறிதாவது அலட்டிக் கொள்ள வேண்டுமே! கேட்டால் என்ன சொல்லியிருப்பார்கள்? - ஆமாம்.. இவங்களுக்கு என்ன வேறு வேலை.... நம்ம கண்ணனைக் கொஞ்ச நேரமும் ஓய்வு எடுக்க விடுவதில்லை. எல்லாம் தங்கள் சுயகாரியம். முடிஞ்சுதோ அப்புறம் அதற்குச் சிறிதும் நன்றியே இன்றி கண்ணனுடனேயே எதிர்த்து நிற்பது... இதெல்லாம் என்ன ஆட்கள்? இந்த மனப்பான்மையில் இருக்கும் ஆய்ச்சியர்களின் கவலை எல்லாம் என்னவென்றால் கண்ணனைக் காணவேண்டும், அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும், அவனை ரசிக்க வேண்டும், அவன் புகழ், அவன் நடையழகு, அவன் சொல்லழகு, அவன் பார்க்கும் பார்வை, அவன் உறக்கம் கலைந்து எழும் அழகு, தூங்கும் போதைய சௌந்தர்யம் - இதையெல்லாம் பார்த்துப் பார்த்துக் களிப்பில் பொங்குவது....

ஜகந்நாதன், லோக நாயகன், மோக்ஷம் தரவல்ல முகுந்தன்.... அவனே... முதன்முறையாக தனது நித்திய வாழ்வில் இப்பொழுதுதான் தன்னையே புதிய முறையில் தான் பார்க்கப் படுவதையும், தான் புத்தம் புது இதுவரை இல்லாத நூதனமான முறையில் நடத்தப்படுவதையும் கண்டு அசந்துபோய்... ஆனாலும் இந்த இயல்பான விதமான சூழ்நிலை தனக்குப் பெரும் ஆசுவாசமாக இருப்பதைக் கண்டு நிம்மதியுடன் பூரித்து நிற்கிறான். படைப்பு என்னும் பெரும் ப்ராஜக்டை என்ன அலட்சியமாகத் தூக்கிக் கடாசுகிறார்கள் இந்த ஆயர் பெண்கள்! முப்பத்துமூவர் அமரராம் - அவர்கள் முகம் தெரிந்தவுடனேயே ஓடிப்போய் முன்சென்று அவர்களுடைய நடுக்கம், கப்பம் என்னும் கம்பம் நீக்குகிறாயே.... கொஞ்சம் தான் விடேன்... படட்டும்... மெதுவாகப் போய் அவங்க காரியம் செய்யக் கூடாதா.... எல்லாம் சுயகாரியவாதிகள், காரியம் முடிஞ்சதும் எதிர்க்கும் நல்லவர்கள்.... ஏதோ முகாந்தரத்துக்காக வந்தவங்க கிட்ட அப்படி ஓடி ஓடி செய்யற.... நாங்க உன் முகத்திற்காகவே வந்து நிற்கிறோம், உன் துயிலெழும் போது அந்தக் கண் அழகைக் காணவே வந்து நிற்கிறோம்... எங்க கிட்ட என்னடான்னா... ம் யாரு எங்க வந்தீங்க.... அது இதுன்னு ஆயிரத்தெட்டு ஃபார்மாலிடி பார்த்துக்கிட்டு... என்ன இது... கிச்சுனா? யம்மா நப்பின்னாய்! நீதான் சரி இவனுக்கு. கொஞ்சம் கவனி.... உன்னாலத்தான் எங்கள் மனோரதம் நிறைவேறும்.

உலகத்தில் இருக்கும் கடவுள் கருத்து, பக்தி பூஜை எல்லாம் ஒரு தட்டு. ஆய்ச்சியரின் மனப்பாங்கு ஒரு தட்டு. மற்றவற்றில் நாம்தான் கையேந்தி நிற்போம். கடவுள் முன்பு. ஆய்ச்சியரின் வழியில் அவன் கையேந்தி. இதெல்லாம் எழுத முடியாது சார்! நமது குப்பை உலகத்தில் இதற்கான வார்த்தைகள் இல்லை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Saturday, February 15, 2020

புழக்கடை தோட்டத்து வாவி

கிருஷ்ணனே ஆகிய அரங்கன் மெய்க்காட்டு கொள்ளும் இடம் ஆயிரக்கால் மண்டபம். ‘எங்கே அவன் எங்கே அவன் என்று தேட வேண்டாம், என்னைக் கண்டீரோ என்னைக் கண்டீரோ என்று பத்தி உலாத்தும் பரமன் இடம் பாவைக்களம்.

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து
ஆம்பல்வாய் கூம்பின காண்.

இந்தப் புழக்கடை தோட்டத்து வாவி நம்முடைய உள்ளம்தான். தெரியாத விஷயத்தில் பேசும் வாய் நம்முடையது. விஷயம் தெரிந்தால் வாயடைத்துப் போகும். மனம் கடந்த விஷயத்தை சுத்த மௌனம் வாய்த்த மனம் பிரதிபலித்துக் காட்டும். ஆம்பல் வாய் கூம்புவதும் உள்ளேதான். செங்கழுநீர் வாய் நெகிழ்வதும் உள்ளேதான்.

Analysis has to end and Intuition has to blossom.

நம்முடைய வீட்டுப் புழக்கடைதானே? நமக்குத் தெரியாமல் ஒன்று நடந்துவிடுமா என்ன? உள்ளம்தான் நம்முடையது என்ற பேர். நடப்பதெல்லாம் நம்மைக் கேட்டா நடக்கிறது? புறக்கண் எப்பொழுது மூடும் என்பதும் நம் கையில் இல்லை. அகக்கண் எப்பொழுது மலரும் என்பதும் நம் கையில் இல்லை. வேளை வந்தால் சங்கூதுவதும் அவன் தான். தகுந்த வேளையைக் கொணரும் சக்கிரத்தைச் சுழற்றுவதும் அவன் தான். - சங்கொடு சக்கிரம் ஏந்தும் தடக்கையன். நம் உள்ளமெல்லாம் செங்கழுநீர் வாய்நெகிழட்டும். பங்கயக்கண்ணானைப் பாடுவோம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Friday, February 14, 2020

நினைத்துப் பார்த்தால்!

சிலவற்றை நாம் நன்கு உணராமல் இருக்கும்வரை வண்டி நன்றாக ஓடுகிறது. இந்த உலகம், உலக வாழ்வு, அதன் இயல்பு இதெல்லாம் ஏதோ நிகழ்ச்சி நிரலாகப் போகும்வரை ஆகா அடுத்தது அடுத்தது என்று காரியம் போகிறது. ஆன்மிகம், உலகியல், பாரமார்த்திகம், லௌகிகம், இகம், பரம், போதும் இந்த உலக வாழ்க்கைக்குச் செய்து கொண்டது, இனி அப்பாலைய நிலைக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டாவோ என்றெல்லாம் சௌக்கியமாகக் கவலைப்பட முடிகிறது. ஆனால் ஒரு கணம் நாம் என்ன செகிறோம், எங்கு இருக்கிறோம், என்ன இதெல்லாம், வாழ்க்கையின் நிலை என்ன, அதில் நம்முடைய ஸ்திதி என்ன, நான் என்பது யார் இந்த மாதிரியான குடைச்சல் தொடங்கிவிட்டால் பின்பு ஒரு கட்டுச்சோறும் ஒன்றும் பயன்படுவதில்லை. அந்த மந்த்ரம் இந்த மந்த்ரம், இந்த ஜபம், அந்த ஹோமம் எல்லாம் நாம் என்று செய்து என்று மனம் நிலைநின்று, இந்த உலகியல் நம்மிடம் விட்டு அகன்று, அப்பொழுதுதான் புது லோடு எல்லாம் கொண்டுவந்து இறக்குகிறது வாழ்க்கை. பழைய மிச்சம் தீர்ந்துவிட்டது என்று நினைத்தது கூடச் சரியில்லை, அதுவே இன்னும் ஒரு மோழி கிடக்கிறது என்று உணரும்போது என்று விடிவுகாலம்? இல்லை இல்லை இதெல்லாஅம் ஒரு நாழிகையில் முடித்துவிட்டு அப்புறம் முழுக்க ஜபம், ஹோமம் என்று உட்கார வேண்டியதுதான், அந்தப் புராணத்தில் பார்த்தேன் ரொம்ப பவர்ஃபுல் மந்த்ரமாம், ஒரு மண்டலம் ஜபித்தாலே அவ்வளவு எஃபெக்டு, இப்படி ஒருவர் நினைத்துக்கொண்டே இருந்தால் நிச்சயம் அவரைப் போல் ஒரு வெகுளி யாருமே இருக்க மாட்டார்கள். என் போன்றோருக்கெல்லாம் ஏதோ அவனாகத் தன்னை மட்டுமே பார்த்தபடி பக்கத்தில் இருக்கும் அம்மாவின் ஐயோபாவம் என்ற சிபாரிசால் மனம் இரங்கி அருள் செய்தால்தான் உண்டு.

நம்பிள்ளையிடம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இதைப் பற்றிக் கேட்க நம்பிள்ளை சொன்னார் என்று பதிவு தருகிறது வார்த்தாமாலை. ஏதோ திக்பிரமை பிடித்த நெஞ்சுக்குக் கொஞ்சம் ஆச்வாசம்!

“ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஸம்ஸாரத்தினுடைய பொல்லாங்கையும், மந்த்ரங்களினுடைய பன்மையையுங்கண்டு பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய; ஆகையாலன்றோ தானே உபாயமாக வேண்டுவது என்றருளிசெய்தார்.”

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

துயிலெழுப்புதல்

தெய்வ மானிடர்களின் செயல்கள் அறிதற்கு அரியன. அவர்களுக்கு என்ன கிடைக்கிறது அதில்? ஏன் அவர்கள், விழுவதையே விரும்பும் நம்மைத் தூக்கி நிமிர்த்தி விண்ணுயர அழைத்துச் செல்லத் துடிக்கிறார்கள்? எத்தனை அருளாளர்கள் வந்து நம்மிடம் தோற்றுப் போயிருக்கிறார்கள்? அத்தனை பேர் சொன்னதையும் விழுங்கி ஏப்பம் விட்ட கணக்கு யாருக்கு நினைவில் இருக்கும்? ஆனாலும் விடாமல் நம்பால் பரிவு கொண்டு வருகிறார்கள். நம்மில் ஒரு பகுதி அவர்களிடமிருந்து ஓடி ஒளிகிறது. ஆனால் ஒரு பகுதி அவர்களுக்குக்காக ஏங்கிக் கதறுகிறது. அவர்கள் பார்வையில் நாமெல்லாம் விழுந்து எழுந்து சரியும் சிறு கன்றுகள். அவர்களிடம் இருக்கும் குணமோ தாய்மை. அத்தனை தெய்வ மனிதர்கள் அனைவரிடமும் இருந்த ஒற்றைக் குணம் தாய்மை. அவர்களோ பனித்தலை வீழ நம் வாசல் கடைபற்றி நின்று ‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்?’ என்று சளைக்காமல் நம்மை எழுப்புகிறார்கள்.

நம்மை எழுப்புவது இருக்கட்டும். ’இந்த மக்களிடம் எத்தனைதான் ஓலியாடுவது? யாரும் கவனிக்கும் பாடில்லை. பேசாமல் நாம் ஆழ்ந்து சமாதிநிலையில் நன் அனுபவத்தைப் பார்ப்போம்’ என்று இருக்கும் தெய்வ மனிதர்களையும் போய் எழுப்புகிறார்கள்.

இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்?

எழுப்பினாரா இல்லையா? பெரும் சோதிக் கடலான இடத்திலிருந்து ஓர் குழந்தை திவ்ய தேஜஸுடன் தவழ்ந்து வந்து ஆழ்ந்த சமாதி நிலையில் உறைந்து நின்ற முனிவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, ‘நான் போகிறேன். நீங்கள் வரவில்லையா?’ என்று இளநகை ததும்ப எழுப்பிவிட்டுத் தானே வந்தது? அறிதுயிலில் ஆழவிடவில்லையே! முனிவரை சிகாகோ பார்லிமண்ட் தொடங்கித் தம் அரும்பணியை ஆற்றாமல் விடவில்லையே?

கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
கனையிருள் அகன்றது

என்று அறிதுயிலும் அரங்கனை எழுப்பினார் தொண்டரடிப்பொடியார். கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் என்று கிருஷ்ணானுபவத்தில் தோய்ந்து தம்முள் இருப்பவர்களையும் விடாமல் எழுப்புகிறாள் ஸ்ரீஆண்டாள். ஸ்ரீஆண்டாளுக்கு ஒரே நோக்கம் வெறும் கன்றுகள் நிலையில் தத்தித் திணறும் நாம் உணர வேண்டாமா? இதற்கு மேலும் தூங்கினோம் என்றால் ஒரு வேளை பசுக்களும் கன்றுகளும் நம்மிடம் வந்து ‘ஃபார் எ சேன்ஜ் நீங்க போய் கொட்டிலில் படுத்து உறங்குங்கள். நாங்கள் வீட்டுவாசிகளாக இருக்கிறோம்’ என்று சொன்னாலும் சொல்லும். எதற்கு வம்பு? எழுந்து விடுவோம்.

’‘கறவைகள் பின் சென்று
கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து
உன் தன்னைப் பிறவிபெறுந்தனைப்
புண்ணியம் யாமுடையோம்.
குறைவொன்றுமில்லாத கோவிந்தா!
உன் தன்னோடு உறவேல்
நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது.
அறியாத பிள்ளைகளோம்..’’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Thursday, February 13, 2020

கரந்த ‘ஸெல்’ இடந்தொறும்..!

ஒரு ஸெல். பயலாஜிகல் யூனிட். எவ்வளவு நுண்ணியது !. அதற்குள் ஓர் உலகமே வேலை செய்கிறது. வெறும் உலகம் அன்று. தகவல் தொழில்நுட்ப உலகம். நாம் தொலைபேசி பேசும் இந்த செல்லைச் சொல்லவில்லை. டிஎன்ஏ உருவாவது புரதத்தால். புரதம் உண்டாகவும் டிஎன்ஏ வேண்டியிருக்கிறது. அப்படியெனில் எது முதலில் உண்டாகி எதற்குக் காரணமாகிறது? சரி. ஒரு புரதம் தேவை என்றால் என்ன தேவை எவ்வளவு தேவை என்று தகவல்கள் பரிமாறப் படுகின்றன. தகவல்கள் ஏந்தியபடி ஒரு நுண்ணிய புரி, கண்ணுக்கெல்லாம் தெரியாது. அந்தத் தகவலைப் படித்து வேண்டியதைச் செய்ய உடனே உற்பத்தியில் இறங்கக் காத்திருக்கும் ஒன்று. வேனோ லேனோ எல்லாம் அங்கு எந்தத் தொடர் இணையம் இருக்கிறது? ஒரு சின்ன ஸெல்லுக்குள் இன்னும் கண்டுபிடிக்காத மர்மங்கள்.

நம்மாழ்வார் ஒரு பாட்டில் சொல்கிறார்.

கரந்த சில் இடம் தொறும்
இடம் திகழ் பொருள் தொறும்

சில் இடம் என்றால் மிக நுண்ணிய சரீரங்கள், இடம் என்றாலே நுண்ணிய சரீரம் என்று பார்க்கிறார். அந்த மிக நுண்ணிய இடம் அதனுள் எல்லாம் திகழும் பொருள். இங்கு பொருள் என்றால் உயிர். ஸோ... எவ்வளவு நுண்ணிய என்று போனாலும் அங்கும் அங்கைக்கேத்த சரீரம், அந்தச் சரீரமாகிய இடத்துள் திகழும் பொருளாகிய உயிர், இந்த இடம் உயிர் என்பனவற்றுள் திகழும் நாராயணன். எப்படித் திகழ்கிறான்? அந்த நுண்ணிய ப்ரதேசமே பெரும் பரந்த அண்டம் என்று சொல்லலாம்போல் முழுக்க வியாபித்து இருக்கிறான். ஒன்றையும் மிச்சம் வைப்பதில்லை. ஒவ்வொரு உயிரினுள்ளும் அவனுடைய விலாசம். அவனுடைய வாசம். அவனுடைய பர்மனண்ட் அட்ரஸ். ஒவ்வொரு உயிரும் அவனுடைய ரெஸிடன்ஸ்.

அவன் ஹிரண்யன் பைத்தியக்காரன். இங்குள்ளானா, இங்குள்ளானா என்று சும்மா ஒவ்வொரு பொருளையும் காட்டியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ‘எனக்குள் உள்ளானா?’ என்று கொஞ்சம் அந்தர்முகமாகத் தனக்குள் யோகப் பார்வை பார்த்திருந்தால் போதும். மற்ற ஆர்ப்பாட்டமெல்லாம் தேவையில்லை என்று ஆகியிருக்கும். இந்த அசுரர்களே கொஞ்சம் அசடு. எல்லாம் தவம், யோகம் என்று பண்ணும். கடுமையாகப் பல ஆண்டுகள் பண்ணும். அப்புறமும் காசைக் கொடு, நிலத்தைக் கொடு, இன்பத்தைக் கொடு, நீண்ட வாழ்நாள் ஜாலியாக இருக்கக் கொடு என்று தேகத்தைத் தாண்டி ஆன்மிகத்துக்குப் போகாது புத்தி.

இங்கேயோ திருப்பாவையில் எல்லாரும் ஆன்மிகத்தை அடைந்தே ஆகவேண்டும் என்று பெரும் பேராசை படுகிறாள் ஸ்ரீஆண்டாள். ‘நான் அடைந்துவிட்டேன். ஏதோ என்வரைக்கும் போதும் அப்படியே யோகத்தில் ஆழ்ந்து கிருஷ்ணனை அனுபவிக்கிறேனே’ என்று சொல்வோரையும் எங்கேயாவது பரவச நிலைக்குப் போய்விடப் போகிறதே என்று ‘நீ என்ன ஊமையா? செவிடா? அனந்தலா? யாராவது மந்திரிச்சு பெருந்துயிலில் விழுந்தாயோ?’ என்று திட்டு மேல திட்டு. இதில் கிருஷ்ணன் மேல வேற சந்தேகம். உள்ளே கிருஷ்ணன் வேறு இருக்கிறானா? எல்லாம் எல்லாரையும் விட்டுவிட்டு தனியாக ஆகிறதா?

*
ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரனிடம் கேட்கிறார் - உனக்கு என்ன வேண்டும்? கேள்.

என்றும் கொஞ்சமும் டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் சமாதி நிலையில் ஆழவேண்டும்.

அய்யய்ய... என்ன இது இவ்வளவு சின்ன விஷயத்துக்கு ஆசைப் படுகிறாய்? நீ என்னவோ பெரும் ஆலமரமாகப் பல உயிர்களும் தங்கி வாழ்ந்து போகும் அளவிற்கு பெரிதாகக் கேட்பாய் என்று நான் எதிர்பார்த்தேன்..!’
*
உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ...
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Tuesday, February 11, 2020

அடிப்படை நூல் ஒன்றா மூன்றா ?

ஹிந்துமதத்தின் அடிப்படை நூல்கள் மூன்று என்று பார்த்தோம். அதை ப்ரஸ்தான த்ரயம் என்று அழைப்பது வழக்கம். உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்கள் என்பவை அந்த மூன்று. ப்ரஸ்தானம் என்றாலே கிரமம், அணிவகுப்பு, முறை, அமைப்பு என்ற பொருள்கள் உண்டு. ஹிந்துசமுதாயத்தில் கல்வி முறை, குருகுலம், பயிற்றுவிக்கும் பனுவல் ஆமைப்பு என்ற நெறிகள் தோன்றிய காலம் தொட்டே இந்த ப்ரஸ்தானம் என்னும் கருத்து வந்துகொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த ப்ரஸ்தான த்ரயம் என்ற சான்று நூல்களின் கிரமத்திலும் மூன்று தனித்தனி நூல்களை நாம் பிரமாணம் என்று கருதுகிறோமா? அல்லது ஒன்று பிரமாணம் தன்னிலேயே எதையும் சாராமல். மற்றவை அந்த ஒன்றை நன்கு விளக்கவும், முறைப்படுத்தி பயன்பாட்டிற்கு அளிக்கவும் தோன்றிய துணை நூல்களும், விளக்க நூல்களும் ஆகுமா என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது ஆழ்ந்து நோக்காமல் ஓரளவிற்குத் தெளிவுடன் பார்க்கும் பொழுது ஆம், உபநிஷதங்கள் ஒரு சான்று நூல், ஸ்ரீமத் பகவத் கீதை ஒரு சான்று நூல், ஸ்ரீப்ருஹ்ம சூத்திரம் ஒரு சான்று நூல். ஆக சான்று நூல்கள் மூன்று சரிதானே என்று தோன்றும். இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்கள் என்ன செய்கின்றன? உபநிஷதங்களில் விரவியிருக்கும் கருத்துகளை ஒருங்குற க்ரமமாக அமைத்து ஸிஸ்டமடைஸ் செய்திருக்கிறது. உபநிஷதக் கருத்துகளை மீமாம்ஸை அமைப்பில் ஒருங்குற அமைத்திருக்கிறது. ஆக அடிப்படை நூல் என்னவோ உபநிஷதங்கள்தாம். உபநிஷதங்களின் கருத்துகளை ஓர் நெறிப்பட நாம் வேதாந்த சூத்திரங்கள் என்னும் ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்களில் காண்கிறோம். இந்த வேதாந்த சூத்திரங்கள் என்னும் வார்த்தைக் கோவையே மிகவும் பொருள் நிறைந்தது. வேதாந்தம் என்பது பார்க்கப் போனால் உபநிஷதங்கள். ஏன் உபநிஷதங்களை வேதாந்தம் என்கிறோம்? வேதத்தின் அந்தம் என்றால் என்ன? அந்தம் என்ற பதம் பல பொருள் உடையது. நிச்சயம், நிர்ணயம், பர்யவஸானம் என்னும் பொருள்கள் இங்கு தொடர்புடையன. வேதத்தின் நிச்சயம், வேதத்தின் நிர்ணயம், வேதத்தின் பர்யவஸானம் என்று நாம் கருதும் போது என்ன புரிந்துகொள்கிறோம்? அன்றாடம் தோன்றி மறையும் வாழ்க்கையில் எதை நிலைத்த, நித்தியமான தத்துவங்களாய் வேதம் நிச்சயம் என்று அறுதியிட்டுக் காட்டுகின்றன என்று பார்த்தால் அந்தத் தீர்மானமான, நிர்ணயமான கருத்துகளை வேதம் உரைக்கும் பகுதி வேதாந்தம் ஆகும். பல படித்தரங்களில் வேதம் விளக்குவதற்காகச் சொல்லிக் கொண்டு போந்து இறுதியில் எதில் அனைத்தும் நிறைவு அடைகிறது என்ற ஈறுநிற்கும் தத்துவங்களைக் காட்டும் போது அது வேதாந்தம் ஆகும். அவ்வாறு வேதம் தன் அறுதியான தத்துவ நிச்சயங்களைப் பொதிந்து காட்டும் பகுதிகளே உபநிஷதங்கள் என்று அழைக்கப்படும். இது ஏதோ ஒரு நூலில் கடைசி பக்கங்கள் என்றபடிப் புரிந்துகொள்ளுவது பொருந்தாததும், தவறானதும் ஆகும்.

உதாரணம் ஒன்றை நோக்குவோம். ஒருவருக்கு நீங்கள் ஒரு விஷயத்தை விளக்கத் தொடங்குகிறீர்கள். முதலில் மிகவும் உயிரான பகுதியை, மையமான பகுதியை எடுத்ததும் சொல்லிவிட மாட்டீர்கள். கேட்பவரின் மனப்பான்மைக்கு ஏற்ப படிநிலையாக விளக்கிக்கொண்டு போய் அவர் நன்கு புரிந்துகொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார் என்றதும் நீங்கள் ஆரம்பிக்கும் பொழுது மனத்தில் கருதியிருந்த முக்கியமான கருத்தை வெளிப்படையாகச் சொல்லி நிறுவுவீர்கள் அல்லவா? நீங்கள் விளக்குவதைக் கேட்ட ஒருவர் முதலில் நீங்கள் சொல்ல ஆரம்பித்ததுதான் உங்களுடைய மனத்தில் முதலிலேயே இருந்தது என்றும், கடைசியில் சொல்லப்பட்டது காலப் போக்கில் பின்னால் சேர்க்கப் பட்டது என்றும் வாதம் செய்வாரானால் எவ்வளவு பேதைமையானது ஆகும் நினைத்துப் பாருங்கள்.! இப்படித்தான் நாம் வேதாந்தம் என்றால் வேதப் பகுதிக்குக் கடைசியில் சேர்க்கப்ப்பட்டது என்று ஏதோ நாம் கருதியபடியெல்லாம் சொல்லுகிறோம். அஃது அவ்வண்ணம் இல்லை என்பதை முதலிலேயே நன்கு புரிந்து கொள்வது தெளிவுக்கு வழிவகுக்கும்.

எனவே வேதாந்தம் என்பது வேதம் என்ன சொல்ல ஆரம்பித்ததோ அந்த மையமான, மூலக் கருத்து. அஃது நிச்சயமான வடிவில் பல விளக்கங்கள், புரிந்துகொள்ளும் துணைக் கருத்துகளுக்குப் பிற்பாடு பக்குவம் கருதிச் சொல்லப்படுகிறது. வேதத்தின் நிச்சயம் என்ற பொருளிலும், வேதத்தின் நிர்ணயமான பகுதி என்பதாலும், வேதம் எதைச் சொல்ல வந்ததோ அந்த பாரமார்த்திகக் கருத்து நிறைவுக்கு வந்துசேரும் பகுதி என்பதாலும் உபநிஷதங்களுக்கு வேத அந்தம், வேதாந்தம் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த வேதாந்தத்தின் கருத்துகளை தந்த்ரமாக (தந்த்ரம் என்றால் நூல் அல்லது சூத்திரம்) தர்சனமாக, மீமாம்ஸையால் ஆக்கி அளிக்கப் பட்டதால் வேதாந்த சூத்திரங்கள் என்ற பெயர் ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்களுக்கு ஏற்பட்டது. ஆக உபநிஷதக் கருத்துகளை நூல்வடிவம் ஆக்கப்பட்டதே வேதாந்த சூத்திரங்கள். இப்பொழுது சொல்லுங்கள் உபநிஷதங்கள் ஒரு தனி நூல், வேதாந்த சூத்திரங்கள் ஒரு தனி நூல் என்று இப்பொழுது சொல்வோமா? இவ்வண்ணம் ஆழ்ந்து புரிந்துகொண்ட பின்பு நமக்கே இயல்பாகத் தோன்றும் உபநிஷதங்களே மூலமான சான்று என்று.

அடுத்து ஸ்ரீமத்பகவத் கீதைக்கு வருவோம். கீதை என்பது உபநிஷதங்களின் சாரம் என்பதை கீதையின் த்யான சுலோகமே சொல்கிறது. இன்னும் சித்திரமாகவும் சொல்கிறது. உபநிஷதங்கள்தாம் பசுக்கள். அந்தப் பசுக்களின் பால்தான் கீதை என்கிறது அந்த சுலோகம்.

எனவே நம் ஹிந்துமதத்திற்கு மூலநூல் என்பது உபநிஷதங்கள். அந்த உபநிஷதக் கருத்துகளை மீமாம்ஸை என்னும் பனுவல்தர்க்க நெறிப்படி வாதப்ரதிவாதம் சித்தாந்தம் என்னும் அமைப்பில் வழங்குவது வேதாந்த சூத்திரங்கள். உபநிஷதங்களின் கருத்துகளைச் சாரமாகத் திரட்டி பக்தி தோய்ந்த பாக்களாகத் தந்திருப்பது ஸ்ரீகீதை.

உபநிஷதங்கள் என்னும் வேத அந்தத்தை, வேதாந்தத்தை அனைத்து வழிபாட்டு நெறிகளும் ஏற்கின்றன. எனவேதான் சுவாமி விவேகாநந்தர் கூறுகையில் நமது ஹிந்துமதத்தை இன்னும் ஒரு பெயரால் அழைக்க வேண்டுமெனில் வேதாந்த மதம் என்று அழைக்கலாம் என்றார்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Monday, February 10, 2020

தூக்கமும் திருப்பாவையும்

நன்கு வாய்க்கு ருசியாக உண்பது, விளையாடுவது, நன்கு தூங்குவது, தூக்கத்திலும் அந்த விடியறதுக்கு முன்னாடி எழுந்திருக்கவேண்டுமே என்னும்போது வந்து கவியற தூக்கம் இருக்கே... யப்பா அதுபோல சுகம் உண்டா..... இந்த மாதிரியான most indulging moments of life இதற்கெல்லாம் உலகத்தில் யாராவது கவிதை பாடியிருக்கிறார்களா தெரியாது. ஆனால் ஸ்ரீஆண்டாள் பாடியிருக்கிறாள். வெறுமனே பாடவில்லை. தூக்கத்தையும், எழுந்துகொள்ளச் சோம்பல்பட்டுச் சுணங்குகிற தருணங்களையும் அப்படியே கடவுள் காதலாக மாற்றி ஒரு ரசவாதமே செய்துவிடுகிறாள். காலையில் குழந்தைகளை எழுப்புகின்ற தாய்மார்கள் படும்பாடு தெரியும். ‘எழுந்திரு நேரம் ஆச்சுபார்’ என்றால் வருகின்ற பதில்கள் தினுசு தினுசா வரும். எழுந்துகொள்வது போல் உடம்பை அப்படி ஒரு நெளி நெளித்து ஆள் நகர்ந்தாகிவிட்டது என்றவுடன் மொத்த போர்வையையும் எடுத்து நன்றாகப் போர்த்திக்கொண்டு, காலை கையை எல்லாம் சுருக்கி நத்தை மாதிரி உள்வாங்கிச் சொக்குகிற தூக்கம் அடேயப்பா..... பாதி நனவு, பாதி கனவு, பாதி விழிப்பு, பாதி துயில் என்ற அந்தத் தருணத்தையும் பகவானை நினைக்கும் தருணமாக மாற்ற ஸ்ரீஆண்டாள் ஒருவரால்தான் முடியும். திருப்பாவை பாடியபிறகு யாரும் காலையில் தூக்கச் சண்டையை திருப்பாவை நினைவில்லாமல் அனுபவிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து
உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்

நம் வசத்தில் இருக்கும் தருணம், நாம் அவசத்தில் நம்மை இழந்திருக்கும் தருணம் எல்லாவற்றையும் பகவத் சிந்தனமாக மாற்றியே தீருவது என்று ஸ்ரீஆண்டாள் முடிவே செய்த பின்னர் கலிகாலம் எப்படித் தொடர்ந்து இருக்க முடியும்?. நாம் அவளுடைய அருளுக்கு ஏங்க வேண்டாம். மறுக்காமல் ஏற்றுக்கொண்டாலே போதும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Sunday, February 9, 2020

விண்ணுக்குள் விளங்கும் மண்

தெய்வமோ நம்மை உயர்த்த இங்கு வந்து அவதரிக்கிறது. நம்மில் ஒருவராய், நாம் அதனை விரும்ப வேண்டும் என்று நம்மை நம்பி இருப்பதுவாய்த் தன்னைத் தாழவிட்டுப் பரிமாறுகிறது. நமக்காகத் தெய்வம் அழும் அழுகை விண்ணெல்லாம் கேட்கிறது. அழுகின்ற தெய்வத்தின் வாயில் பார்க்கிறோம். அதன் உள்ளே நாம் நமது என்று நினைத்துக் கொண்டிருக்கும் மண் முழுவதும் அங்கு இருக்கிறது. மண் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. அதனை உணர்ந்து நாமும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் தெய்வத்திற்குள் நமது வாழ்வு என்று ஆகியிருக்கும். ஆனால் நாமோ தான் தனது என்று பேதம் பிரமித்து, மண் நமது என்று மயக்கம் ஆழ்ந்து விண்ணை அண்ணாந்து நோக்குகிறோம். நாம் நம்மை உணர்ந்தால். நாம் நம்மை உணரும்வரை தெய்வம் அழுகையை நிறுத்தப் போவதில்லை. விண்ணெல்லாம் கேட்கும் அழுகை! பெரியாழ்வார் சொல்கிறார்:

’விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்; உன்வாயில்
விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி
மதுசூதனே என்றிருந்தேன்.’

மகாகவி பாரதியார் பாடுகிறார்:

‘தன்னை மறந்து ஸகல உலகினையும்
மன்ன நிதம்காக்கும் மஹாசக்தி - அன்னை
அவளே துணையென்று அமைவெய்தி நெஞ்சம்
துவளாதிருத்தல் சுகம்.’

நாம் என்ன செய்வது? நமக்கு இந்நிலையில் கைகொடுப்பது பிரார்த்தனை மட்டுமே. அவளிடமே பிரார்த்திப்போம் -

‘மர்மமான பொருளாம் - நின்றன்
மலரடிக்கண் நெஞ்சம்
செம்மையுற்று நாளும் - சேர்ந்தே
தேசு கூட வேண்டும்.’

தெய்வத்திற்குள் நாமும் நம் உலகும் அமைவுறக் காணும் பக்குவம் அந்தத் தெய்வமே நமக்குத் தரவேண்டும். நம்மால் ஆனது இதய பூர்வமான தாபம்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

அகவிழியும் வானமும்

வாழ்க்கையில் மண் என்பது நமது அன்றாடத் தேவைகள், கவலைகள், சூழ்நிலைகள், நம்மை எதிர்பார்க்காமல் உலகத்தின் இயல்பால் நம் யதார்த்தத்தைத் தாங்கும் அடிப்படை என்னும் இவற்றைக் குறிக்கிறது. மண் என்பது புலன்களின் அடிப்படை. அனைவருக்கும் அந்த அடிப்படையில் பெரும் கருத்து வேறுபாடு உண்டாதல் சாத்தியமில்லை. ஏனெனில் நம் இஷ்டத்தைச் சார்ந்திராமல் தன் இயல்பில் இருப்பது மண். ஆனால் இந்த ’மண்’ மட்டுமே போதும் என்று இருந்திருந்தால் ஒரு விதத்தில் எந்தப் பேச்சும் இல்லாது போயிருக்கும். உயிரின் இயல்போ மண்ணில் எழுந்து நின்றாலும், விண்ணில்தான் தன் நிறைவை எய்தும் என்றபடியாய் இருப்பது.

விண் என்பது உணர்வில் கிளர்ந்து விரிவது. வாழ்வின் அர்த்தம், அர்த்தங்களின் மேல் அர்த்தங்கள் ஒருங்குறத் திகழ்ச்சி பெறும் தொடர் பொலிவு என்பது மனத்தை புஷ்கலமாக ஆக்கும் சித் ஆகாசத்திற்கு விண் என்பது குறியீடு. அதாவது ஆன்மிகம். நாம் ஏற்கனவே பார்த்தபடி இந்த ‘மண்’ விண்’ என்னும் இரட்டையை விளக்க நிச்ரேயஸம் ~ அப்யுதயம் என்னும் இரட்டை இலட்சியம் உதவும். ஆன்மிக நன்மை என்பது நிச்ரேயஸம் என்றும், ஒருங்கிணைந்த உலக வாழ்வின் முன்னேற்றம் ஆன்மிகத்தின் முகாந்தரமாக அமைவது என்னும் இரட்டை இலட்சிய கருத்தாக்கத்தை ஹிந்துமதம் மிகவும் கவனத்திற்குக் கொண்டு வருகிறது என்று பார்த்தோம். இந்த இரட்டை என்பதை ‘உபயம்’ என்ற சொல் சுட்டும். சாத்திரங்களில் ‘உபயார்த்தம்’ என்றாலே இந்த ஆன்மிக உலக நன்மையின் கூட்டு என்ற பொருளில் வழங்கும். தமிழ் இலக்கியங்களிலோ இருமைக்கும் நன்மை, இம்மை, மறுமை என்று இதனைச் சுட்டுவர்.

நம் மகாகவி பாரதியார் இந்தக் கருத்தாக்கத்தை எப்படி ஒரே பாட்டில் சொல்கிறார் என்பது அறிந்து வியப்புறத் தக்கது.

‘கனவென்றும் நனவென்றும் உண்டோ? - இங்கு
காண்பது காட்சி அல்லால் பிறிதாமோ?
மனையில் இருப்பது வானம் - அந்த
வானத்தின் வந்தவர் தேவர் முனிவர்
நினைவது செய்கை அறிவீர் - எந்த
நேரத்தும் தேவர்கள் காப்பது வையம்
வினவிற் பொருள் விளங்காது - அக
விழியைத் திறந்திடில் விண்ணிங்கு தோன்றும்.
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.’

வானம் ~ வையம் என்ற இரட்டையாய் வைத்து பாரதியார் பாடுவது அழகு! இதை விசாரத்தால் அறிவதை விட அகவிழியைத் திறந்தே விண் என்பதைக் காணலாகும் என்கிறார். ’என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’ என்பது சடகோபன் காட்டிய யோக சக்ஷுஸ்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

கூத்து, பாவம், ரஸம்

என்னுடைய பல ஆர்வங்களில் அவ்வப்பொழுது என் ஈடுபாடு செல்லும் துறை கூத்து. இதில் ஒரு பகுதி எனக்குத் தந்தை வழித் தகவாக, நாடகம் என்ற வகையில் வந்து சேர்ந்திருக்கிறது. அவர் (ஸ்ரீ ஆர் வேணுகோபால்) ஆர்வ முனைவோர் குழுவாக நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு 1960களில், 1970களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் திருச்சியில் பேராசிரியர் திரு சி எஸ் கமலபதியுடன் பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார். இப்பொழுதுதான் அந்தப் பெரும் மனிதர் தந்தை என்ற கட்டத்துள் இருந்து வெளியில் வந்து எத்தகைய நுட்பம் செறிந்தவராக இருந்தார் என்பது புலனாகிறது. 'கை போன திசையில் கண் போக வேண்டும்' 'ஒரு அபிநயம் தொடுத்த பின்னர்தான் முதலில் எடுத்த அபிநயத்தை வாங்க வேண்டும்' என்றெல்லாம் அவர் நடிப்பின்போது தலையில் அடித்தாற்போல் கூறியது ஏன் என்று இப்பொழுதுதான் புரிந்துகொள்கிறேன். அப்பொழுதெல்லாம் அவர் வார்த்தைதான் சாத்திரம். இப்பொழுதுதான் அவர் எத்தகைய இயல்பெருக்கத்தின் வரவாற்றில் நின்று பேசினார் என்பது புரிகிறது. வாழ்வின் மூல ஆதாரங்களோடு சேர்ந்து முளைத்த அந்தக் கூத்தின் பைம்பூப்பு இப்பொழுதுதான் பரதரின் நாட்டிய சாத்திர வழியிலும், இளங்கோ அடிகள் தயவிலும், அடியார்க்கு நல்லார் தயவிலும், மேலை நாட்டுச் சான்றோர் தயவிலும், புரிய வருகிறது.

கூத்து என்றால் என்ன? குதி, குதித்தல் என்பதின் அடிப்படையாய் வந்தது கூத்து என்றும் சொல்கிறார்கள். தொலைக் காட்சியில் பாட்டு போட்டதும் சிறு குழந்தை தை தை என்று குதிக்கிறது. ஆனால் அதன் மொழியில் அது கூத்து. பாட்டு என்றவுடன் நமக்கு வாய், குரல், ஓசை, காது என்பதெல்லாம் மனத்தடத்தில் வந்து நிற்பது போன்று கூத்து என்றவுடன் உடல்தான் - கைகள், கால்கள், பாதங்கள், விரல்கள், முகம், கண், நடை இவையெல்லாம் வந்து மனத்தில் நிற்கின்றன. அன்றாட வாழ்விலும்தான் நாம் இந்த அவயவங்களை வைத்துக்கொண்டு செயல் புரிகிறோம். அப்பொழுது, செய்யும் செயல் எல்லாமே கூத்தா? இல்லை. கூத்து என்னும்பொழுது அதில் ஓர் உணர்ச்சி, ஒரு கருத்து, மனித குலத்தின் அனுபவங்களில் வந்து சேர்ந்த நிலைத்த விழுமங்களைப் பற்றிய ஒரு கருத்து அங்கு நிகழ்த்தப்படுகிறது. உடல் மொழியாகிறது. எலும்பு, நரம்பு, தசை, இரத்தம், வியர்வை இவற்றால் ஆகிய உடல் தன் குரம்பை என்ற தோற்றத்திலிருந்து மறைகிறது. நிகழ் பனுவல் ஒன்றிற்கு நேர்மொழியாக ஆக்கப்படுகிறது. பார்க்கவும், கேட்கவும், முகரவும், ருசிக்கவும், உற்றறியவும் பயன்பட்ட புலன்கள், பிடிக்கவும், நடக்கவும், அமரவும், செயல்புரியவும் பயன்பட்ட அங்கங்கள் மொத்தத்தில் உலகத்தில் உயிர் இயங்கப் பயன்பட்டவையெல்லாம் ஓர் உயிர் மற்றோர் உயிரின் உணர்விற்கு ஒரு கருத்தை, ஓர் உணர்ச்சியை, அந்த உணர்ச்சியின் கலைப்படிவத்தை உணர்த்த, அதிலிருந்து பல்வேறு உணர்வலைகள் கிளைக்க வாய்ப்பான மொழியாக ஆவதற்கு இயன்ற இயல் கூத்து. இங்கும் நான் கவிதைக்குச் சொல்வது போன்று ஒன்று மறைய வேண்டியிருக்கிறது. அந்த அற்ற இடத்தில் மற்ற பல வந்து பல்க வேண்டியிருக்கிறது. இதை கலைக்கே ஆன மூல சூத்திரமாக ஆக்கலாமோ என்ற எண்ணம் எனக்கு எழுவதுண்டு. அதாவது இயற்கையின் புறப்பொருள், புறவாய்ப்பு ஒன்று மறைய வேண்டும். அங்கு உணர்வு பலவகைகளில் இட்டு நிரப்ப வேண்டும். அப்பொழுது ஆங்கே கலை தோன்றும். இயற்கையின் பொருளோ வாய்ப்போ மறையாத வரையில் அங்கு தெரிவிக்கும் நிகழ்ச்சிதான் நடந்துகொண்டிருக்கும்.

Communication by its transcendent transformation or trans-deformation begets art.

'தெரிவிப்பு தான் அற்றுக் கடந்த புலத்தில் அமைக்கும் மீவடிவப் புணர்ப்பு கலையின் தோற்றுவாய்' என்று சொல்லிப் பார்க்கலாமோ?

'ஏன் கூத்து?' என்பது 'ஏன் படைப்பு?' என்பதைப் போன்றே முட்டின இடத்தில் முடங்கி நிற்கும் கேள்வி. புட்களிலும், விலங்குகளிலும் கூட அவை வியூகமிட்டுச் சமயத்தில் கூத்துபோல் நிகழ்த்தும் இயக்கங்கள் உயிரியல் ரீதியாகத் தேவையற்றது என்றுதான் விஞ்ஞானம் சொல்லமுடிகிறதே வொழிய ஏன் அவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்பதற்கு அறுதியான விடை இல்லை. உயிரின் பரிணாம அடிப்படையில் 'உள்ளது சிறக்கும்' என்ற விதிக்கேற்ப வந்து சேர்ந்த மனிதன் உயிரின் அடிப்படை இயல்பொன்றில் பங்கு கொள்கிறான் என்பது இப்பொழுதைக்கு நமக்கு வாய்த்த புழங்கு கருத்து. Human ethology போன்ற உணர்வொப்பியல்கள் மேலும் தெளிவு ஏற்படுத்திக்கொண்டே இருக்கட்டும். கூத்து என்பதற்கு இந்தப் புழங்கு கருத்தே இப்பொழுதைக்குப் போதும்.

பௌதிகம், உணர்வு என்ற இருமுனைகளுக்கு இடையில்தான் மனிதனின் பட்டுவாடா நடந்துகொண்டிருக்கிறது. பௌதிகத்தையே முற்ற முழுக்க உணர்வாக ஆக்கும் முயற்சியும், உணர்வை பௌதிகப்படுத்திப் பார்த்துவிடும் தீவிரமும் மனிதனால் தவிர்க்கவே முடியாத ஊசல். இதற்கிடையில்தான் மனித வாழ்வின் விகசிப்புகள் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. கூத்து இந்த இருமுனைகளுக்கிடையில் எங்கோதான் ஒற்றைக்கால் ஊன்றி நிலைக்கிறது. இளங்கோ அங்கிருந்துதான் பேசத் தொடங்குகிறார்:

"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்துப்
பதினோ ராடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின் கொளுத்துங் காலை"
(சிலப்பதிகாரம்: 1.3.12 - 17)

கூத்தில் இரண்டு வகை. அகக்கூத்து, புறக்கூத்து. இங்கும் அகம் புறமா? இல்லை இது வேறு அகம் புறம். அகச்சுவை பற்றி வருவது அகக்கூத்து. குணங்கள் பற்றி வருவது. குணங்கள், நல்லமைதியின் செறிவு (சத்வம்), பரபரப்பு, (ரஜஸ்), தொய்வின் இருட்டு (தமஸ்) என்பன. உள்ளத்தின் நிலையை உடலில் வாங்கிப் பேசும் கூத்து அகக்கூத்து எனலாம். அகச்சுவை இந்த மூன்று குணங்களைச் சுட்டும். இந்த அகக்கூத்தில் தேசி, வடுகு, சிங்களம் என்று மூன்று வகை. இதை மெய்க்கூத்து என்கிறது அடியார்க்குநல்லார் உரை. இந்த மெய்க்கூத்து மெய்யாகிய உடலின் பல தொழில்களை ஏற்படுத்துவது. பெரும்பாலும் வடுகு என்ற மார்க்கமும், தேசியும் சேர்ந்து அகக்கூத்து என்று சொல்லப்படும். இதைத் தவிர்த்து மற்றவை புறக்கூத்து என்பதில் அடங்கும். ஆனால் இருவகைக் கூத்து என்பதில் பலவகை 'இரண்டுகள்' உண்டு போல் தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் சொல்கிற இருவகைக் கூத்து, அகக்கூத்தில் இருவகைக் கூத்து. 'இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து' (சிலப். 3.12) என்ற வரிக்கு அரும்பத உரையாசிரியர் தேசி, மார்க்கம் என்ற இரண்டு என்று கூறுகிறார். அடியார்க்குநல்லார் சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என்ற இரண்டு என்கிறார். சாந்திக் கூத்தில் நான்கு வகை. சொக்கம், மெய், அவிநயம், நாடகம். சொக்கம் என்பது சுத்த நிருத்தம். 108 கரணங்களைக் கொண்டது. மெய் முன்னர் கூறியது போல் அகக்கூத்து. அவிநயம் மிடறு, கழுத்து, கை, சரீரம் என்ற நாலிலும் காட்டுவதற்கேற்ப நால்வகைப் படுவது. நாடகம் ஒரு கதைப் பொருளைத் தழுவி அதற்கேற்ப நடத்தப்படுவது. ஏன் சாந்திக் கூத்து என்று சொல்லப்பட்டது? நாயகன் சாந்தத்தோடு ஆடியதால் சாந்திக் கூத்து என்கிறார் உரைக்காரர். விநோதக் கூத்து என்பது குரவை கலிநடம், குடக் கூத்து, கரணம், நோக்கு, தோல்பாவை என்கிறார். அது என்ன விநோதம்? வென்றி வேந்தர் விநோதம் காணும் போது ஆடப்படுவது என்பது உரையாசிரியரின் கருத்து. அதாவது தீவிரமான கலை ஈடுபாட்டிற்கு 'சாந்தி'யும், பெருமித உணர்வுகள் நிலவும் போது பொழுதுபோக்கிற்கு 'விநோதமும்' கைக்கொண்டனர் போலும்.

புறக்கூத்து என்பது பதினொரு ஆடல், விலக்குறுப்பு பதினான்கு வகைப்பட நடத்தப்படும் நாடகங்கள். விலக்குறுப்பு பதினான்கு ஆவன: பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதம் என்பவை. பதினோரு ஆடல் என்பன: மாயவன் ஆடிய அல்லியம், விடையோன் ஆடிய கொடுகொட்டி, அறுமுகத்தோன் ஆடிய குடை, குன்றெடுத்தோன் ஆடிய குடக்கூத்து, முக்கண்ணான் ஆடிய பாண்டரங்கம், கண்ணன் ஆடிய மல்லாடல், வேல் முருகன் ஆடிய துடி, இந்திராணி ஆடிய கடையம், காமன் ஆடிய பேடு, கொற்றவை ஆடிய மரக்கால், கொல்லிப்பாவை வடிவாய் திருமகள் ஆடிய பாவை ஆகியன. சிலப். 3.158 - 159: "நாட்டிய நன்னூல் நன்கு கடைப் பிடித்துக் காட்டினள் ஆதலின்.." என்ற வரிக்கு உரையெழுதும் அடியார்க்குநல்லார், 'தாண்டவம், நிருத்தம், நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டினும் நாட்டியம் என்றது புறநடத்தையாகலின், அதனை நூல்களில் சொன்ன முறைமை வழுவாமல் அவிநயித்துப் பாவகம் தோன்ற விலக்குறுப்புப் பதினாலின் நெறி வழுவாமல் ஆடிக்காட்டினாள்' என்று எழுதுகிறார்.

ஆக, கூத்து என்பது மூன்று கூறுபாடு உடையது என்பது தேற்றம். அவற்றில் நாட்டியம் என்பது புறக்கூத்து என்பதும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் ஏகப்பட்ட குறிப்புகள் உரையில் விரவிக் கிடக்கின்றன.


'பரதார்ணவம்' என்ற நூலில் பார்த்தேன். எந்தை கூறிய கருத்தின் நூற்சான்று கிடைத்தது. அதாவது ஒரு சுலோகம் கூறுகிறது:

'அங்கேன ஆலம்பயேத் கீதம்,
ஹஸ்தேன அர்த்த ப்ரதர்சனம்,
சக்ஷுர்ப்யாம் பாவயேத பாவம்,
பாதாப்யாம் தாள நிர்ணய:'


'யதோ ஹஸ்த: ததோ த்ருஷ்டி:
யதோ த்ருஷ்டி: ததோ மன:
யதோ மன: ததோ பாவ:
யதோ பாவ: ததோ ரஸ:'

'அங்கங்களில் இசையட்டும் கீதம்
அம் கைகளில் இலகட்டும் பொருள்
கண்களில் தெரியட்டும் பாவம்
காலடியில் நிற்கட்டும் தாளம்'

'கையெங்குச் செல்கிறதோ
நோக்கு அங்குத் தொடர்கிறது
நோக்கு எங்கு நிற்கிறதோ
மனம் அங்கு நுழைகிறது.
மனமெங்குத் தங்கிடுமோ
பாவம் அங்குத் தழைக்கிறது
பாவம் எங்குத் திகழ்ந்திடுமோ
ரஸம் அங்கு மிளிர்கிறது'
(தமிழாக்கம் என்னுடையது)

என்பது அந்தச் செய்யுள். காலடி என்பது தாளம் காட்டுவதற்கு. பாவத்தைக் காட்ட கண்கள். பொருளைக் குறிக்க கைகள்; பாட்டின் அல்லது இசையின் அலைப்போக்குகளைக் காட்ட அங்க அசைவுகளின் தொகுப்புகள். கைகளில் காட்டும் அபிநயங்கள், முத்ரைகள் இவற்றின் வழி கூத்தரின் நோக்கு சென்றால்தான் பார்ப்பவரின் நோக்கும் அங்கு ஒத்திசைந்து மனத்தை இசைவிக்கும். கூத்தரின் மனமும், அதன்வழி அவருடைய பாவமும் எழுந்தால்தான் பார்ப்பவருடைய மனமும் இசைந்து அவர்களிடத்தில் ரஸ உணர்வைத் தோற்றுவிக்கும். அது என்ன பாவம்? ரஸம்? பாவம் என்றால் நிகழ்த்தப்படும் கருத்திற்குச் சேர உள்ளத்தின் நெகிழ்வைப் பொலியக் காட்டும் மெய்ப்பாடு. இது முக்கியமாகக் கண்களில் தெரியவரும். அப்பொழுது நோக்கு என்றால் என்ன? கண்களில் பார்வையின் வேறுபாடு. கோபப்பார்வை, குளிர்ந்த பார்வை, குரூரப் பார்வை, கம்பீரப் பார்வை, காதல் பார்வை இப்படிப் பலவிதம். இவையிற்றால் கூத்தர் பாவத்தை நிகழ்த்திக் காட்ட வாய்ப்பு ஏற்படுகிறது. நிகழ்த்துபவர் முனையில் எது பாவமாக நிற்கிறதோ அது பார்ப்பவர் முனையில் ரஸமாக உருவெடுக்கிறது. பாவம் வரையில், நிகழ்த்தும் கூத்தரின் கோணம்; ரஸம் ரசிப்பவரின் கோணம். இந்த ரஸத்தேர்ச்சி உள்ளவர்தான் ரசிகர்.

இந்த ரஸம் என்றால் என்ன? கூத்தர் முதன் முன்னம் ஒரு கூத்து நிகழ்த்துவதற்குமுன் தாம் உள்ளம் தோய்ந்த ஒரு கணத்தை, அந்தக் கணத்தில் தம்முள் விரவியெழுந்த உணர்வலைகளை வெளியில் ஒருவருக்குத் தன் உடலையே மொழியாக்கி உடல் நகர்வுகளை வாக்கியமாக்கி, கண், கை, அங்க அசைவுகள், காலடி வைப்புகள், மெய்யில் வடிவ வேறுபாடுகள் இவற்றால் ஆகிய இலக்கணத்தைக் கொண்டு அவரையும் அந்த நிலையை அடைந்து அதையொத்த உணர்வலைகளைப் பெறுவிக்க முனைகிறாரே அந்தத் தோய்வு, பெறுபவர் முனையில் எழும்போது, அந்தக் கலையுள்ளத்தின் நெகிழ்வு நிலையை ரஸம் என்ற சொல் குறிக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்

ஆனைச்சாத்தன் எங்கும் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! (அதை எங்கு பார்த்து வைத்தார்கள் இவர்கள்! விடியலுக்கு முன்னம் ஆனைச்சாத்தன் கூட்டிலிருந்து பிரியும்பொழுது பகல் முழுவதும் இனி சந்திக்க மாட்டோம். இரவுதான் இனி பார்ப்பது என்று ஏதோ தொட்டு தொட்டுப் பேசுவது போன்ற த்வனியில் பேசுமாம். அன்று பகல் முழுவதற்குமான பேச்சை இப்பொழுதே பேசிவிட்டுப் போகலாம் என்று) ரொம்ப நல்ல பெயர் சொல்லித்தான் விளிக்கிறார்கள் - பேய்ப்பெண்ணே! இரண்டு வரி தாண்டவில்லை. ’நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?’ உள்ளே உணர்வில் உறவுகொண்டோர் என்ன சொன்னாலும் பொருள் ஒன்றுதான் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.

ஓர் ஆய்ச்சி தன் பெண்ணிடம், ‘இந்தா மோர், தயிர், நெய்; விற்று வா’ என்று கொடுத்தால் அவள் சென்று விற்றாளாம் - ‘கோவிந்தனை வாங்கல்லியோ... கிருஷ்ணனை வாங்கல்லியோ.... ஸ்ரீயப்பதியை வாங்கல்லியோ...’ என்று. உள்ளே ஓடும் பா4வம் என்னவோ அதைத்தானே விற்க முடியும்?

நாராயணன் மூர்த்தி கேசவன் -

பெற்றவளைக் கண்டால் பிடிக்கவில்லை என்று கோபித்துக்கொண்டு சத்திரத்தில் போய்ப் படுத்தது பிள்ளை. விடமாட்டாத உறவால் தான் செய்த உணவையே சத்தரக்காரனை விட்டு ‘நான் செய்தது என்று சொல்லாதே. துப்பிவிடும். நீயாகக் கொடுத்தது என்று கொடு’ என்று சொல்லித் தாய் கொடுக்கிறாள். அப்படி உறவு முறையால் முகம் காட்டாமல் உள்நின்று காப்பவன் நாராயணன்.

ஜன்ம கர்ம ச மே திவ்யம் - என் பிறப்பும் செயலும் தெய்விகமானவை என்று தானே வியக்கும்படியாக வந்து தோன்றி அடியார் தன்னைக் காணலாம்படியும் பழகலாம்படியும் வந்து பிறக்கும் தயையின் உருவம் மூர்த்தி.

தன் அடியாருக்கு என்ன இன்னல் வந்தாலும் அதைத் தானேற்று முடிப்பவன் கேசி வதம் செய்த கேசவன்.

நாராயணனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

மூர்த்தியைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

எங்களுக்கு எல்லாம் இன்னதைச் செய் இன்னதைத் தவிர் என்னும் நாயகப் பெண்பிள்ளாய் அல்லவா நீ?
பகவானைப் பெற்று அதைத் தனி உணவாக நீ மட்டும் உண்பாயோ?

ஊரெல்லாம் தம் உயிராகிய பகவானை மறந்து பிணம் போல் மக்கள் கிடக்க, நாம் மட்டும் யோக முறையில் அவனைக் கிட்டி அனுபவிக்கும் மணம் புரிவது அழகா? பிணம் கிடக்க மணம் புணரலாமோ? என்று நாடு வாழ வழிவகை என்ன என்று முனைந்தவர்கள் அன்றோ நாதமுனிகளின் வழிவந்தோர்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Saturday, February 8, 2020

ஆன்மிகமும் அன்றாட வாழ்க்கையும்

ஆன்மிகம் என்பது அன்றாட வாழ்க்கையை வெறுத்து ஒதுக்குவது அன்று. உணர்வு கனிந்த ஞானத்தால் பெற்ற தெளிவுகளின் ரீதியாக வாழ்வை நெறிப்படுத்துதலே ஆன்மிகம் என்பதன் நடைமுறை ஆகும். எனவேதான் ஹிந்துமத சாத்திரங்கள் ஆரம்பம் முதற்கொண்டே மிகத் தெளிவாக இலட்சியங்களை நம் கருத்தில் கவனப் படுத்துகின்றன. காலத்திற்கும், மாற்றத்திற்கும் அப்பாற்பட்டதான, நிலைத்த, சைதன்யம் நன்கு விரிவடைந்த நிலைமைத்தான இலட்சியத்தை நிச்ரேயஸம் என்று உரைக்கின்றன. அந்த நித்திய தத்துவங்களின் விளக்கத்தை நோக்கியும், அதன் வழியிலும் அமையும் அன்றாட வாழ்க்கையின் செழிப்பை அப்யுதயம் என்று சொல்கின்றன. ஹிந்துமதமானது பல சமயம் சில கருத்துகளை இரட்டை வடிவிலேயே வலியுறுத்தும். நாம் அஃது ஏதோ கணக்கிடுவதற்காக வேண்டி இரண்டு கருத்துகளை ஒருங்கே சொல்கிறது என்று நினைக்கலாம். ஆனால் அதுபோல் இல்லை. பல சமயம் நாம் நன்கு ஆழ்ந்து கற்றோமானால் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். ஹிந்துமதம் இரட்டை வடிவத்தில் ஒரு கருத்தாக்கம் சொல்லும் பொழுது அந்த இரட்டையில் ஒரு பகுதி மற்றோரு பகுதிக்கு இன்றியமையாது வேண்டப்படுவது என்பது அதன் பொருளாகும். அதாவது அந்த இரண்டில் ஒன்றை விடுத்து, அலட்சியப்படுத்தி மற்ற ஒரு பகுதியை மட்டும் கருத்து செலுத்துதல் நம் புரிதலில் குறைபாட்டை உண்டாக்கும் என்பது அதன் உட்கிடையாகும்.

உதாரணத்திற்கு, பரமாத்மாவின் குணங்களைச் சொல்லும் பொழுது ’சகல கலயாண குணங்களே வடிவமானவர் ~ எந்தவித தோஷங்களுக்கும் இல்லாத, தோஷங்களுக்கே எதிரிடையானவர்’ என்ற இந்தவித இரண்டு விவரிப்புகளையும் ஒருங்கே இரட்டையாகத்தான் சொல்ல வேண்டும் என்பது சாத்திரங்கள் வலியுறுத்தும் கருத்தாகும். வேதாந்த சாத்திரத்தில் அவ்வாறு வலியுறுத்தும் பகுதிக்கு உபயலிங்காதிகரணம் என்றே பெயர். இரண்டுவித அடையாளங்களான ’குணம் முழுமையும் உடைமை ~ குற்றங்கள் அறவே இன்மையும், குற்றங்களுக்கு நேர் எதிரானமையும்’ என்பது அதன் பொருளாகும்.

இதைப் போன்றதுதான் தனி மற்றும் சமுதாய வாழ்வின் இலட்சியங்களைச் சொல்லும் பொழுதும் ’நிச்ரேயஸம் ~ அப்யுதயம்’ என்பதைச் சேர்த்தே இரட்டையாகக் கருத வேண்டும். இதில் நிச்ரேயஸம் என்பது ஆன்மிக வளர்ச்சியும் ஆக்கமும் ஆகும். அப்யுதயம் என்பது சமுதாயத்தின் ஒருங்கிணைந்த முன்னேற்றம் ஆகும். சமுதாயத்தை அலட்சியம் செய்துவிட்டு, ஒரு மனிதர் தம்முடைய அன்றாட வாழ்க்கையை உதாசீனம் செய்துவிட்டு ஆன்மிகத்தில் மட்டுமே வளர்ச்சி பெற நினைப்பது முழுமையான வழி ஆகாது. அல்லது ஆன்மிக நன்மையை முற்றிலும் மறந்துவிட்டு சமுதாய மேம்பாட்டையும், தம்முடைய தனி வாழ்க்கையின் பொருள் இன்பம் சார்ந்த வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்வது அர்த்தம் உள்ளதாக ஆகாது. பாரதம் சிறந்து விளங்கிய காலங்களில் எல்லாம் இந்த ஒருங்கிணைந்த இலட்சிய வாழ்க்கையை நன்கு போற்றி வளர்க்கத் தவறியதே இல்லை; இனி வருங்காலத்திலும் அஃது அவ்வண்ணமே முழுமையான நோக்கமும், பூர்ணமான தெளிவும் பெற்று விளங்கும் என்பதை பகவான் ஸ்ரீஅரவிந்தர் தமது இந்திய மறுமலர்ச்சி என்னும் நூலில் விளக்கும் அழகு அலாதியானது:

“One thing seems at any rate certain, that the spiritual motive will be in the future of India, as in her past, the real originative and dominating strain. By spirituality we do not mean a remote metaphysical mind or the tendency to dream rather than to act. That was not the great India of old in her splendid days of vigour,—whatever certain European critics or interpreters of her culture may say,—and it will not be the India of the future. Metaphysical thinking will always no doubt be a strong element in her mentality, and it is to be hoped that she will never lose her great, her sovereign powers in that direction; but Indian metaphysics are as far removed from the brilliant or the profound idea-spinning of the French or the German mind as from the broad intellectual generalising on the basis of the facts of physical science which for some time did duty for philosophy in modern Europe. It has always been in its essential parts an intellectual approach to spiritual realisation. Though in later times it led too much away from life, yet that was not its original character whether in its early Vedantic intuitional forms or in those later developments of it, such as the Gita, which belong to the period of its most vigorous intellectual originality and creation. Buddhism itself, the philosophy which first really threw doubt on the value of life, did so only in its intellectual tendency; in its dynamic parts, by its ethical system and spiritual method, it gave a new set of values, a severe vigour, yet a gentler idealism to human living and was therefore powerfully creative both in the arts which interpret life and in society and politics. To realise intimately truth of spirit and to quicken and to remould life by it is the native tendency of the Indian mind, and to that it must always return in all its periods of health, greatness and vigour.”
(The Renaissance in India and Other Essays on Indian Culture, Volume 20, The Complete Works of SriAurobindo, pp 24 )

பகவான் ஸ்ரீஅரவிந்தரின் தெளிவாக்கம் நம்மை வழி நடத்தட்டும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஓங்கி உலகளந்த திருப்பாவை

ஓங்கி உலகளந்ததே, ஒரு பொருளும், அது உயிருள் பொருளாக இருக்கட்டும் அல்லது உயிரில் பொருளாக இருக்கட்டும், அனைத்துப் பொருட்களுக்கும் தான் அந்தர்யாமியாக நிற்கின்றதை, அனைத்தும் தன் அதீனம் என்பதை முத்திரை குத்திய திருவிக்கிரம அவதாரம். அனைத்தும் அவனுடையதாய் இருக்க யார் வந்து அதை மறுத்துவிடப் போகிறார்கள்? யாரும் இல்லை. அவனை விட, அவனில் வேறாய் ஏதேனும் ஒரு தத்துவம் உண்டென்றால் அல்லவோ பேச்சே. அவ்வாறு பேசநின்ற ஒன்றும் இல்லை என்னும் போது ஏன் இந்த உரிமைக் காப்புப் பிரச்சனை? யார் அதை எதிர்க்கப் போகிறார்கள்? வேறு யார்? இந்த ஜீவன் இருக்கிறதே இதுதான். அதாவது நான், நீ, அவர், அவர்கள் ஆகிய நாம்தான் ஒரு காலத்தில் இல்லையென்றாலும் ஒரு காலத்தில் நமக்கும் அவனுக்கும் ஒட்டு இல்லை உறவு இல்லை என்று துணிந்து சொல்வோம். தாயாய், தந்தையாய், அனைத்து உறவுமாய், நிலைத்த நட்பாய், நிர்கதிக்கு வந்து கைகொடுக்கும் நிதியாய், வழிகாட்டும் பெரும் வித்யையாய் இருக்கும் அந்தத் திருமாலையே இல்லையென்போம். இருக்கு என்றால் எங்கே ப்ரூஃப் என்போம்? ஆனால் பேசும் நாம் தூக்கத்தில் எங்கே போகிறோம் தெரியாது? சிறுவயதில் இருந்த நாம் எங்கே போனோம் தெரியவில்லை. அதற்கெல்லாம் ப்ரூஃபா கேட்போம்? இல்லையே. இல்லாத விஷயம் எல்லாம் நமக்கு சர்வ நிச்சயம். சந்தேகமே வராது. ஆனால் என்றும் உளன் கண்ணன் என்ற சாச்வத தத்துவம் மட்டும் நமக்கு என்றுமே ஐயப்பாடுதான். தொண்டரடிப்பொடியாழ்வார் சொன்னார் - உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்தபின்னை ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன் ஊர்’ எது? அரங்கம் அன்றே!

அவனும்தான் அளந்தான். ஆனால் நம் அகங்காரம் அடங்காமல் ஆடுகிறது. நம் அகங்காரத்தையும் சகித்துக்கொண்டு பக்குவப்படுத்தி ஒரு முப்பது பாட்டைச் சொல்லவைத்து நாளடைவில் ‘நான் திருமாலின் சொத்து’ என்று ஏங்கவைத்துவிடும் வல்லமை தெய்வத் தீந்தமிழ்க் கோதைக்கன்றோ கைவந்தது! நாம் ஏதோ அந்நியம் என்ற நினைவை ஒழித்து, திருமாலுக்கே சேஷம், திருமாலுக்கே தீர்ந்தவடிமை என்னும் தெளிவு பிறந்து, ஸ்ரீஆண்டாளுக்கே பாங்கியர் என்று சொல்லலாம்படியான பக்குவம் வந்து தெய்வத்தின் திட்டத்தில் பங்கெடுத்தால் என்ன என்ன நிலைகள் நமக்கே வாய்க்கின்றன! நம் உறவு யார் என்று புரிகிறது. உயிரின் உறவான உத்தமன் ஆதிமுதல் நம்மைக் காத்து நம் நற்கதிக்காக தான் உழைத்துவரும் தயாளு என்றும் புரிகிறது. அவனுக்கு உரியவராக நாம் ஆனோம் என்றால் பின்னர் தெய்வத்தில் தோயும் மனம் வாய்ந்த நட்புக்கு ஏங்கும் நிலையும் வருகிறது. நல்நட்புகள் திரளாக ஆகும் நிலையும் இந்த உலகிலேயே திருநாட்டைக் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. பொலிக பொலிக என்று வகுளமணம் எங்கும் பரவுகிறது. திருவாய்மொழியை நாடி உளம் ஏங்க, அதன் உட்பொருள் வளத்தை வாரி வழங்கும் வற்றா விரிவுரைகள் நம் காதுக்குத் தேனாய் இனிக்கின்றன. இத்தனைக்கும் வேண்டியது பாங்கான மனம். அதை மட்டும் எங்கே சம்பாதிப்பது? அதுதான் தெரியவில்லை என்று நாம் சோர்ந்து போகவேண்டாம். அந்த பாங்கான மனம், அதை அருள்வது என்பதுதான் ஸ்ரீஆண்டாளின் திருப்பாவை. பின் என்ன மிஞ்சும்? எங்கே அருள் எங்கே அருள் என்று நாம் திரிந்தது போக நீங்காத அருளே எங்கும் நிறைந்திருக்கும் எம்பாவாய் - என்று நம் மனத்தையே நலங்கெழு பாவையாக விளிக்கும் நிலையன்றோ ஓங்கி நிற்கிறது !

ஓங்கி யுலகளந்த உத்தமனார் சேவடிக்கே
தாங்கித் தமராக்கித் தான்செலுத்தும் தீந்தமிழாள்
பாங்கியராய் யாமுமிங்கு பங்கெடுத்தால் பற்பநாபன்
ஓங்குபுகழ் பாடி உயிரில் உறவாகித்
தேங்குமகிழ் தெய்வத் திரளுக்கே தான்வாடி
வாங்க உளம்நிறைக்கும் வற்றா விரிவுரைக்கே
பாங்காகிப் பக்குவமாய்ப் போந்த மனமுடையீர்!
நீங்கா அருளே நிறைந்தேலோர் எம்பாவாய் !
(இரசனைத் திருப்பாவை, ஸ்ரீரங்கம் மோகனரங்கன்)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Friday, February 7, 2020

ரசனைத் திருப்பாவைச் சிந்தனைகள்

ஸ்ரீஆண்டாள் பாடிய திருப்பாவை என்பது உபநிஷத்ஸாரம் என்பது சம்ப்ரதாயப் பெரியோர்களின் ஏகோபித்த கருத்து. சுருதிசதசிரஸ் சித்தம் அத்யாபயந்தி - மறைமுடி திகழும் ஒள்ளிய நுண்பொருளை மனிசர்க்கும், மாதவர்க்கும் ஒருங்கே எடுத்துரைக்கும் தலைவி ஸ்ரீஆண்டாள். கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் - என்றார் தந்தையார். திருமகளாருக்கு, புவிமாது வந்து நம்மை உயர்த்தப் பிறந்த பெருமாட்டியாம் ஸ்ரீஆண்டாளுக்கு யாரும் விலக்கில்லை, எதுவும் விலக்கில்லை. ‘உனக்கென்ன வேறுடையை?’ என்று ஒதுங்கிப் போவோரையும் தலைமுடி பிடித்து வந்து தாமோதரனார்க்கு ஆட்படுத்தும் தண்ணருளே உருவாய் வந்த சுடர்க்கொடி. ஸ்ரீராமாநுஜர் எப்பொழுதும் வாய்வெருவும் பாசுரமாகத் திருப்பாவையைக் கொண்டார் என்பதும், ஸ்ரீராமாநுஜரைக் கோயில் அண்ணரே என்று ஸ்ரீஆண்டாள் அருளப்பாடு விளித்தாள் என்பதும் அபிமானத்தால் மட்டுமன்றி ஆழ்பொருள் கொண்டவை.

ஸ்ரீஆண்டாளின் திருக்கழல் ஆர் கழல். பிரிவினை, வேறுபாடு ஒன்றும் இன்றி அனைத்து உயிர்களும் சென்று சூழும் கழல் ஆர் கழல். யார் எவர் எவ்வுயிர் என்று நோக்காமல் அனைத்தையும் சென்று அருளால் சூழ்ந்து வளைத்து உய்விற்குத் திருப்பும் கழல் ஆர் கழல். அந்த ஆர்கழலைச் சிந்தித்து, அவள் அருள் தரும் தெம்பில் திருப்பாவையைத் தோய்ந்து இரசிக்கும் பொழுது, அந்தத் தமிழ்வேத உபநிடதப் பெருநூலுக்கு வாய்த்த பொன்னுரைகள், அந்த உரைகளில் குறையாமல் பெருகும் பொருள் வளங்கள், இவற்றை யாரோடு உரைப்பது? யாருக்கு அதில் ஈடுபாடு? ஈடுபாடு இருக்கும். ஆனால் உள்ளே குதித்து முழுக ஓர் உளப்பாங்கு வேண்டுமே? யாரைக் குறை சொல்ல முடியும்? அவரவர் கவலை ஆயிரம். அதில் அவரவர் நியாயமும் ஆயிரம். உலகத்தாருக்கு எது பகலோ அது யோகிக்கு இரவு. யோகிக்குப் பகல் உலகத்தாருக்கு இரவு என்று ஸ்ரீகீதை புகன்றாலும், அதையும் மீறியல்லவா ஸ்ரீஆண்டாள் உலகத்தவர், யோகிகள் என்ற பிரிவு இல்லாமல் எல்லாருக்கும் ஒரே பகலாகக் காலத்தை ஆக்கிவிட்டாள் அல்லவா?

நள்ளிரவு யாமம் கடக்கின்றது. வெளியில் எங்கும் இருள். இருளா? எந்தப் பொருளும், எந்தக் காலப் பிரிவும் அதன் சொந்த இயல்பு கிடையாதே! அனைத்துமே திருமாலுக்கு ஏங்கி, அவன் நினைவில் அன்றோ தோய்ந்து கிடப்பன! எனவே இது இருள் இல்லை. இது யாமமும் இல்லை. கரிய மேனிப் பிரானின் வண்ணத்தைச் சுமந்து இந்தத் திருவரங்கத்தில் உலவும் யாரோ நித்ய சூரிதான் இந்த யாமமும், இருளும். ஆம். இந்த யாமத்தை நிறுத்தி உன் பெயர் என்னவென்று கேட்டால் ‘நிறத்தைப் பார்த்தால் தெரியவில்லை? கிருஷ்ணன்.’ என்று சொல்லிப் போகின்றனவே! ஆம் இருள் உண்மையில் அறிவில் அன்றோ இருக்கிறது. அறிவின் இருள் அகன்றால் பின்னர் நித்யம் பகல் அன்றோ! புந்தியில் புலரி எழுவதற்கு அருள் ஸ்ரீஆண்டாள் அன்றோ செய்ய வேண்டும்!

வையத்தில் வாழ்வது என்றால் திருமாலின் குணக்கடலில் ஆழ்வது என்பதுதானே! அவ்வாறு வாழ்ந்து போகாமல் எதில் மக்கள் நாளும் நாளும் ஆழ்ந்து மடிகின்றார்கள்? அந்தோ வெய்ய துயர்க் கடலிலா ஆழ்வது? சக்ரவர்த்தியாரின் மகவுகள் பிச்சையெடுத்தா பிழைப்பது? உலகமுண்ட பெருவாயனின் குடல்துடக்கு கொண்டவர்கள் குமையும் துயர்களிலா தம் நெஞ்சு வேவது? உபநிஷதம் ஓங்கி ஒலிக்கிறதே! - உத்திஷ்டத! ஜாக்ரத! ப்ராப்யவரான் நிபோதத! - எழுந்திடு! விழித்திடு! அடையவேண்டிய இலட்சியத்தை நினைத்துப் புறப்படு. இதைத்தானே முப்பது பாட்டிலும் உரைப்பதோடன்றி, ஒவ்வொருவர் வீட்டின் வாயிலிலும், உணர்ந்தவர்கள் ஒன்றுகூடி வந்து நின்று உறங்குவோரை எழுப்பியே தீருவது என்று ஆக்கியவர் ஸ்ரீஆண்டாள் அன்றோ! ஐயகோ! மனிதருக்குக் கன்றுகளை விடவா அறிவு குறைந்து போய்விட்டது? குன்றம் ஏந்திய கோவிந்தனின் கழல் நாடி கன்றுகள் சரண் புகுந்து நிற்பனவே! அந்தக் கன்றுகளுக்கு யார் போய் திருப்பாவை யாராவது சொன்னார்களா? ஆனால் மனிதருக்கு பூமிப்பிராட்டியே வந்து பிறந்து திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே என்று சொல்லி எழுப்பியும், திருமாலின் திருவருளில் யாம் தோய மாட்டோம், வெய்ய துயர்க்கவலைக்கே நாங்கள் விலைபோவோம் என்று கூறுவார் உண்டோ? ஆனால் மக்களுக்கு திருமாலின் நினைவு வரவேண்டும் என்றால் அதற்கு முதன்முன்னம் சத்வகுணம் தலைதூக்க வேண்டும். ஜநார்த்தனனின் திருக்கண்ணோக்கம் இன்றி சத்வகுணம் மனத்தில் தலைதூக்காது. எனவேதான் ஸ்ரீஆண்டாள் திருப்பாவையை அனைவரையும் அழைத்துக்கொண்டு போய் அரங்கநகரப்பனுக்கு எழுப்பி உரைக்கின்றாள். நாங்கள் எல்லாம் வந்துவிட்டோம். வரமாட்டேன் என்று அடமாகத் தூங்குவோரை எழுப்ப முதலில் உன் அருள் வேண்டும். அவர்கள் மனத்தில் சத்வம் தலைதூக்கியது என்றால் எங்கே எங்கே என்று கேட்டுக்கொண்டு அவர்களே வந்து சேர்ந்துவிடுவார்கள்.

மார்கழித் திங்கள் மதியத்தே மால்நினைந்து
ஆர்கழலைச் சிந்தித்து ஆண்டாள் திருப்பாவை
தேரும் பொழுதத்துத் தித்தித்த தீஞ்சுவைகள்
யாரோ டுரைக்கேன்யான் யாமம் கடந்தாலும்
பாரோர் பையத் துயின்று பின்னிருளும்
காரோத வண்ணர்க் கரிய திருமேனிப்
பேரோதும் பெற்றித்தாய்ப் புந்திப் புலரியெழத்
தாராய் நறுங்கோதாய் தண்ணருளே யெம்பாவாய்.

*
வையத்து வாழாதே வெய்ய துயர்க்கடலில்
பையவே மாழாந்து புல்லும் கவலைக்கே
ஐயகோ தாம்விலையாய் ஆனார் வழியொற்றி
நைவதுவோ நானிலத்தீர்! நாளும் சுடர்க்கொடியே
தைவந்த பூச்சூட்டித் தான்திகழும் அச்சுதனார்
கைவந்த குன்றின்கீழ் கன்றுகளும் தாமகிழ
உய்யும் திருப்பாவை உத்தமனுக் கோதியதும்
வையத்தீர் நாம்வாழ வாழ்த்தீரோ எம்பாவாய்.
(இரசிகத் திருப்பாவை, ஸ்ரீரங்கம் மோகனரங்கன்)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

கூண்டுக் கிளி

நாமும்தான் ஏகப்பட்ட திறனாய்வு தியரிகள் எல்லாம் வைத்திருக்கிறோம். எனக்கும் அவற்றில் பெரும் மயக்கம்தான். ஆனால் இலக்கியம் என்று சொன்னால் என்னதான் சொன்னாலும் எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் ரசிப்பதற்கு என்றுதான் முதல் முக்கியத்துவம். மற்ற தியரிக்கள் எல்லாம் இதற்கு எவ்வளவு உபயோகம் என்றுதான் தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால் திவ்ய ப்ரபந்தங்களுக்கு வியாக்கியானங்கள் எழுதித் தந்திருக்கும் வைணவத்தின் முந்தைய ஆசிரியர்களின் கொடை அபாரம். அதுவும் அனைத்துக்கும் உரைப்பெருக்கு அளித்த ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையை நினைத்தால் மனம் நெகிழவே செய்கிறது. மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றித் தாம் அனுபவித்துப் போகாமல் நாடு வாழணும், நயம்நாடும் நெஞ்சங்களும் பயனுற வேண்டும் என்று கருதிய அந்தக் கருணை ஆசான் அளித்துள்ள பேருரைகள்தாம் எவ்வளவு பெரும் துணை! - பொழுதுபோக்க வேண்டும் என்றாலும் சரி அல்லது பரமநிலையின் படிக்கட்டுகளில் கொஞ்சமேனும் ஏறிப்பார்க்க வேண்டும் என்றாலும் சரி. பக்தி என்ற ஓர் உன்னதமான மனப்பான்மையில் எப்படிக் கடவுள் பற்றிய கவிதையை அணுகியிருக்கிறார்கள் என்று அறிய ஒரு நளினமான வழி. ஒன்றுமில்லை. இரண்டு வரிகள் - நாச்சியார் திருமொழியில் -

”கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும்;
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
உலகளந்தான் என்று உயரக் கூவும்;...”

இதற்கு என்ன நாம் பொருள் சொல்லிவிட முடியும்? கூடு இருக்கிறது. அதில் கிளி. அது கோவிந்தா கோவிந்தா என்று சொல்கிறது. உண்ணக் கொடுக்காமல் பட்டினி போட்டால் ‘உலகளந்தான்’ என்று குரல் உயர்த்திக் கூப்பாடு போடுகிறது - இதற்கு மேல் என்ன சொல்லிவிட முடியும்? ஆனால் பக்தி என்னும் அற்புதமான மனநிலை எப்படிப் பார்க்கிறது! வளர்த்த கிளி ஏன் கூட்டில் இருக்கப் போகிறது. அது சுதந்திரமாக வீட்டில், தலைவியின் அறையில் கட்டற்றுத் திரியப் போகிறதுதானே. எப்பொழுதும் கண்ணனின் பெயர்களையே சொல்லிக் குழறிக் குழறி ஸ்ரீஆண்டாளுக்கு முக மலர்ச்சியை விளைத்தவண்ணம் திரியும் கிளிக்குக் கூண்டு என்பது சும்மா பேருக்குத்தானே.

ஆனால் இன்று ஏன் நிலைமை மாறிவிட்டது? கூண்டில் அடைக்கும் தாழ்ப்பாள் ஆணியையெல்லாம் தேடி எடுத்துக் கிளியையும் கூண்டில் அடைத்தாயிற்று. ஆமாம். கண்ணனையோ காணவில்லை. அவனும் தரிசனம் கொடுத்தபாடில்லை. வீட்டில் உள்ளாரும் உளமறிந்து கடவுளிடம் கொண்டு சேர்ப்பாரும் இல்லை. இந்தக் கிளியோ சமயம் போது தெரியாமல் ஸ்ரீகிருஷ்ணன் நாமங்களையே எதிரும் முன்னும் பின்னுமாக வந்து சும்மா குழறி வெறுப்பேற்றுகிறது. போடு கூண்டில். அப்பொழுதாவது வெறுமனே இருக்கிறதா? எவ்வளவு நாமங்கள் இருக்கின்றன. ஏன் திருப்பாவையில் தானே அவ்வளவு நிச்சயமாகச் சொன்ன நாராயணன் என்ற நாமம் இல்லையா? அதைச் சொல்லலாம் அல்லவா? இந்தக் கிளிக்கு இருக்கும் கொழுப்பு இருக்கிறதே.... எந்த நாமத்தைச் சொன்னால் நாம் அதிகமாக ஏக்கம் அடைவோமோ அந்த நாமத்தையாகப் பார்த்துச் சொல்கிறது. நாராயண நாமத்தைச் சொன்னாலாவது - நாராயணனே நமக்கே பறை தருவான் என்று ஆறியிருக்கலாம். ஆனால் பரிதவிக்கும் தன்னை ஏங்கவிட்டுச் சிறிதும் லட்சியமின்றி கன்றுகாலிகளின் பின்னே போன கோவிந்த நாமத்தையா குழறுவது? இது வேண்டும் என்றே கொழுப்புக்குச் செய்வதுதானே? எல்லாம் நாம் வேளாவேளைக்கு ஊட்டிவிடவும் கொழுப்பு ஏறித்தான் கிடக்கிறது. பட்டினி போடு. அப்பொழுது பேச்சு எங்கிருந்து வரும்? ஊணொழித்தால் வீண் அடங்கும் என்று சொல்வார்கள்தானே.

ஆனால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அரங்கன் முன்னால் அருளிச்செயல் விண்ணப்பிக்கும் அரையர்கள் அன்று பாடிக்கட்டும் பகுதிகளை நன்கு உயர்ந்த உச்சத்தாயியில் பாடி அரங்கனை உகப்பிக்க வேண்டி, தமது குரலை நன்கு பதப்படுத்தி, பட்டினிவிட்டால்தான் குரல் பிசிறு இல்லாமல் ஓங்கி வரும் என்பதற்காக உபவாசம் இருந்து அரையர்சேவை சாதிப்பது போன்று இந்தக் கிளியும் பட்டினி போட்டவுடன் அழகாக உயர்ந்த உச்சத் தாயியில் ‘உலகளந்தான்’ என்று கூவத் தொடங்கிவிட்டது! ஐய்யோடா..... இதற்கு கோவிந்த நாமமே மேல்.... இந்த உலகை அளந்தான் என்றால் இதோ பார்க்கும், அத்தனை பொருட்களிலும் அவன் திருவடிகளின் தடயம் அல்லவா தெரிகிறது! எங்கும் ஒரு பொருள் மிச்சமின்றி அவன் நினைவை ஏற்படுத்திய வண்ணம் இந்தக் கிளியின் குரலும் எல்லாப் பொருளிலிருந்தும் கிளம்புவது போல் எங்கு திரும்பினாலும் இது என்ன தோற்றம்.....!

இந்த இரண்டு வரிகளில் ஒரு Opera வையே கண்டுபிடிக்க முடிகிறது ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையால்! அவர் கையைப் பிடித்துக்கொண்டே கூடுதலாக ஒரு பொருள் உரைத்துப் பார்ப்போமா? அந்தக் கிளியை வெறும் கிளி என்று எண்ணாமல் மனம் என்பதற்கான ஒரு குறியீடு என்று நினைத்துப் பாருங்கள். மனம் கண்டதையும் எண்ணும், பிதற்றும், பேசும், மாறும், திரியும். ஆனால் பக்தியில் ஆழ்ந்த மனமோ, கடவுள் நினைவில் தோய்ந்து பழகிய மனமோ என்னதான் அதன்போக்கில் சுதந்திரமாக விட்டாலும் வேறு எதையும் எண்ணாது பேசாது எங்கும் வெளியே திரியாது. நமக்கு, நம்மைச் சுற்றி, நம்மோடு கூடவே பகவானின் நினைவுகளை ஏற்படுத்திய வண்ணமே வளையவரும். இதுவே என்ன ஒரு நிலை! பெரும் தடையாக இருந்த ஒன்று நமக்கு அடங்கிய கிளியாய் அவன் பெயர்களையே குழறித்தரும் கிள்ளையாய் ஆகிவிடும் நிலை! ஸ்ரீராமகிருஷ்ணரின் பரவசநிலையில் அவர் மனம் உலக நினைவுக்கே வராமல் முரண்டு பிடிக்கும். அவர் தன் பின் தலையில் அடித்துக் கீழேவா கீழேவா நான் இவர்களோடு பேச வேண்டும்; இவர்களுக்குச் சில சொல்லவேண்டும் - என்று பெருமுயற்சி எடுத்து மனத்தை உலக நினைவுக்குக் கொண்டு வருவார். அதாவது கிளியைக் கூண்டில் அடைப்பார். ஆனால் யாரேனும் பகவானைப் பற்றிய கீதம் பாடவேண்டியதுதான் தாமதம், மறுபடியும் ஜிவ்வ்வ்வ்வ்... இந்த நிலையை அண்ணாந்து பார்க்கிறோம் அம்மாடி.. என்ன நிலை இது... என்று. ஆனால் உண்மை என்னவென்றால் நாமும் போக வேண்டிய நிலை இதுவே. நமக்கும் உரிமை உள்ள நிலையும் இதுவே. அப்படிப்பட்ட நாம்தான் இப்படிக் குப்பையில்.... சரி வேண்டாம் என்னத்துக்கு... எல்லாம் காலத்தில் நடந்தே தீரும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

கருவூர் சி கிருஷ்ணஸ்வாமி நாயுடுவும் கிருஷ்ணோபநிஷத்தும்

1930, 1940 களில் நடந்த ஒன்று. வேதாந்தக் கல்வி என்பது தமிழ் மொழியின் வாயிலாக நன்கு தொடர்ந்து நடந்தேறியது என்பதை விளக்கும் விதத்தில் கருவூர் சி கிருஷ்ணசாமி நாயுடு என்பார் திருப்பதி சுவாமிகள் போன்றோரிடம் அத்வைத சித்தாந்தத்தை நன்கு பயின்றவர்களில் ஒருவர். பெரும் செல்வந்தர். தமது பெருஞ்செல்வத்தை அனைத்தையும் வேதாந்தக் கல்வியை வளர்ப்பதற்கே செலவிட்டார். கருவூரில் கிருஷ்ண மந்திர வேதாந்தாசிரமம் என்று ஓர் ஆசிரமம் ஆரம்பித்து, அதற்கு நிலைத்த தனமாக தமது செல்வத்தை வைத்து, அங்கு பெரியோரைப் பேணல், ஞானநூல் பயிலல், தத்துவம் ஆராய்தல் போன்ற ஆன்ம சாதனைகளின் இடமாக ஆக்கி, அதனை நன்கு நிர்வகித்து வருமாறு தமது மனைவியார், மற்று குமாரத்திகள், சுற்றத்தார் என எல்லோரையும் அதில் ஈடுபடுத்தி வந்தார். ஸ்ரீகிருஷ்ண யஜுர் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரான ஸ்ரீகாசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளைக் கொண்டு அதர்வ வேதத்தைச் சேர்ந்தது என்று கருதப்பட்ட ஸ்ரீகிருஷ்ணோபநிஷத்து என்பதை மந்திரமும், பதவுரையும், விளக்க உரையுமாகத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து நன்கொடையாகவே அனைவருக்கும் வழங்கினார். தமிழில் வேதாந்தம் வளர்த்த மகனீயர்களைத் தொழுவோமாக!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*** 

இண்டக்ரல் ஹ்யுமானிஸம்

காப்பிடலிஸம் சரியா? கம்யூனிஸம் சரியா? இந்த விவாத சிந்தனைகளின் இடையே பண்டிட் தீன்தயாள் உபாத்யாயர் அவர்களின் இண்டக்ரல் ஹ்யுமானிஸம் என்னும் நூலில் வரும் இந்தக் கருத்து சிந்தனைக்குரியதாக இருக்கிறது:

“Both these systems, capitalist as well as communist, have failed to take account of the ‘Integral Man’, his true and complete personality and his aspirations, One considers him a mere selfish being hankering after money, having only one law, the law of fierce competition, in essence the law of the jungle; whereas the other has viewed him as a feeble lifeless cog in the whole scheme of things, regulated by rigid rules, and incapable of any good unless directed. The centralisation of power, economic and political, is implied in both. Both, therefore, result in the dehumanisation of man. ...

“We want neither capitalism nor socialism. We aim at the progress and happiness of ‘Man’, the Integral Man. The protagonists of the two systems fight with Man on the stake. Both of them do not understand Man, nor do they care for his interest.”

‘ஒருங்குறத் திரண்ட முழுமனிதர்’ என்பது ஒரு மனிதர் என்பவரின் முழுமையையும் கணக்கில் கொண்டு, முழுமையை மட்டுமே அன்றி அதில் உள்ளடக்கமான தனித்தனி அம்சங்களையும் போதிய கவனம் கொள்வது என்று புரிந்து கொள்ளலாமா?

***

சாம்யுவல் பெக்கட்

சாம்யுவல் பெக்கட் பற்றிய ஒரு வீடியோ, ஒன்றரை மணி நேரம் ஓடுகிறது. அவருடைய ‘வெயிட்டிங் ஃபார் கோடோ’ என்பதன் மைய த்வனியிலேயே டாக்யுமண்ட்ரியையும் எடுத்திருக்கிறார்கள் போலும். அந்த மையக் கருத்து வியாபித்திருக்கிறது. ஃப்ரான்ஸில் யுத்த காலத்தின் போது ஐரிஷ் ஆஸ்பத்திரியில் வேலை செய்யத் தொடங்கிய காலத்தில் அவர் கண்ட யுத்த கோரம் அதுவரை மந்தகதியில் போய்க்கொண்டிருந்த அவருடைய எழுத்தைத் தீவிரமும், ஆழமும் உடையதாக ஆக்கியது என்று விளக்குகிறார்கள். ‘வெயிட்டிங் ஃபார் கோடோ’ என்பது விளையாட்டு உலகத்தின் ஒரு சொற்கோவையாக இருந்ததாம். அதை அவர் கையாண்டுள்ளார். அதை உண்மையாக மொழிபெயர்க்க வேண்டுமெனில் ‘பெருசா ஏதாவது நடக்குமா வாழ்க்கையிலே’ என்று சொல்லலாம். இப்படிப் பெரும் நிகழ்வுக்குக் காத்திருந்து ஆனால் கடைசிவரை எதுவும் நடக்காமல் ஒரு நாள் போல் மறுநாள் என்று போகும் சராசரி வாழ்க்கையின் ஒரு யதார்த்த சிந்தனை சாம்மின் பங்களிப்பு எனலாம். ஆனாலும் அந்த புனரபி தினம் தினம் என்ற பார்வையையும் எங்கள் திருச்சிக்காரர் அநாயாசமாகச் சொல்லிவிடுகிறார் என்னும் போது - ‘யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*** 

நம்பிக்கையும் அவநம்பிக்கையும்

நம்பிக்கைகளின் முறிவுபோல் கொடிய வியாதி எதுவும் இல்லை. பழங்கால மனிதருக்கு வசதிகள் இல்லை; அறிவின் பெருக்கங்கள் இல்லை; இன்னும் பல இல்லைகள் இருந்திருக்கும். சரிதான். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கைகளின் தெம்பு இருந்தது. ஓராயிரம் இன்னல்களைச் சமாளிக்கும் ஆற்றலை நம்பிக்கை தரும். ஆனால் அனைத்தும் வெற்றாகிப் போன பாழின் குமைச்சலை நம்பிக்கையின் முறிவு தரும் போது தாங்கும் ஆற்றல் உயிருக்கு இல்லை. காரணம் உயிர் நம்பிக்கையில் பிறந்தது.

பிறந்த குழந்தை அழுதால் பெற்றவரும் மற்றவரும் மகிழ்ச்சியில் சிரிக்கின்றார்கள். அது ஏன் அழுகிறது? என்ன நம்பிக்கை! தன் அழுகைக்கு அங்கே அணைத்து ஊட்டும் கரம் காத்திருக்கும் என்று ஏதாவது புரோநோட்டிலா கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்து பிறந்தது? தகப்பன் குழந்தையை தலைக்கு மேல் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறான். குழந்தை சிரிக்கிறது. ஊக்கி மேல ஊக்கி மேல... என்று மீண்டும் மீண்டும் ஒன்ஸ் மோர் கேட்கிறது. என்ன உத்திரவாதம்? குழந்தை நம்பவில்லை. நம்பிக்கையாகவே இருக்கிறது. வளர வளர குழந்தையின் உலகம் சிதைகிறது. நம்பக் கூடாது, நிர்ணயம் செய்துகொள், நிரூபணம் கேள். உத்திரவாதம் இருந்தால் அடியெடுத்து வை. ஆம் அவநம்பிக்கைதான் அறிவின் தொடக்கம். தன்னைப் போல் மனித உயிர் காக்கப் படுவதில்லை. தன்னைக் காத்துக்கொள்ள அதுதான் கற்க வேண்டும். அவநம்பிக்கை என்னும் கடினமான பாடத்தை அது திறம்பட கற்கவேண்டும். அவநம்பிக்கையையே நம்பிக்கையாகவும் ஆக்கிக் கொள்ள முடியாது. தத்தக்கா பித்தக்கா என்று நடந்து அது எங்கு வந்து சேர வேண்டும்? தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கைக்கு வந்து சேர வேண்டும். சேருமா தெரியாது.


நம்பிக்கையின் ஒற்றை எழுத்து ‘ஏ’. ஏகாரம் சர்வநிச்சயமான நம்பிக்கையைக் குறிக்கிறது. 

தெய்வக் குழந்தை ஸ்ரீஆண்டாள் எவ்வளவு ஏகாரம் போட்டுச் சொல்கிறாள்! நாராயணன் + ஏ; நமக்கு + ஏ. பறை தருவான். 

நாராயணனே தருவான். 

நமக்கே தருவான். 

பறை - வாழ்க்கை தெய்விகமாக ஆவதற்கான ஒரு குறியீடு. நம் வாழ்க்கையை தெய்விகமாகவே ஆக்கியே தீருவான். எத்தனை ஏகாரம் எத்தனை ஏகாரம்.! அவநம்பிக்கை நம்மைத் தயார் செய்யட்டும். அவள் நம்பிக்கை நம்மை வழிநடத்தட்டும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

திருப்பாவைக்கு ரசனைப் பாடல் முப்பது - இரண்டாம் பகுதி

திருப்பாவை 16 - 'நாயகனாய் நின்றநந்த கோப னுடைய'

இதுவரையில் விழிப்புற்ற ஜீவர்களாகிய பெண்கள் தங்களுக்குள் அனைவரையும் எழுப்பிக் கொண்டார்கள். ஒருவரும் விட்டுப் போகாமல் எழுந்து வந்து விட்டார்கள் என்றதும் இப்பொழுது அனைவரும் பெரும் கோஷ்டியாகச் சேர்ந்து சென்று பரம்பொருள் பரமபுருஷனின் கோயில் வாசலில் நின்று உள்ளே புகுவதற்கான விண்ணப்பம் இடுகிறார்கள். அனைவருக்கும் உள்ளே இருக்கும் ஒன்றை அனைவரும் சேர்ந்து தமக்குப் புறத்தில் வைத்துக் கண்டு பேசி ஆடிப் பாடிக் காதல் செய்து காணும் ஆனந்தத்தை இப்பாட்டு தொடங்கிச் செய்கிறார்கள். உலக இன்பம் என்றால் அதற்குத் தனிமைதான் முதலில் வேண்டியிருக்கும். ஆனால் பகவானை, பரம்பொருளை, பரமபுருஷனை ஜீவர்கள் அனுபவிக்கும் காலம் காலமான ஆனந்தத் தேடுதலுக்கு மொத்த ஜீவ சமுதாயமும் ஒருவர் பாக்கியில்லாமல் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்னும் பேரவா என்பதுதான் தேவையாக இருக்கும். அதைச் சொல்கிறது திருப்பாவை. அதை நிகழ்த்திக் காட்டுகிறது இப்பாட்டு தொடங்கி.

இதற்கான ரசிகப் பாடல் --

நாயகன் நாரணன் நங்கையராம் நல்லுயிர்காள்
வேய்ங்குழல் ஓசை விதித்த திருப்பாவை
மாயனை நாடித்தான் மாதவனார் கோயில்முன்
தூயோர்தம் தொல்லுரைகள் நற்றுணையாய் நாமணுகி
ஏய்ந்தமன மென்னும் இணங்குநல் காவலனால்
தோய்ந்த உளமென்னும் நந்தகோ பன்தன்னால்
ஆயன்தான் ஆதியில் நேர்ந்த உயிர்த்தொண்டே
வாய்ந்துநாம் வாழ விழைந்தேலோ ரெம்பாவாய். 


திருப்பாவை - 17  - அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் -

மிக அருமையான ஆன்மிக அர்த்தங்களைப் பொழிகிறார்கள் பூர்வாசாரியர்கள் தம் உரைகளில். உயிருக்கு உடை, நீர், உணவு என்பது என்ன என்ன என்ற சிந்தனையைக் குறிப்பு காட்டுகிறார்கள். உயிரின் ரூபத்தை எது நிரூபிக்கிறதோ அது அம்பரம் ஆகிய உடை. தாரகமாக உயிருக்கு எது இருக்கிறதோ அது நீர். உயிரைத் தன் உண்மையான இயல்பில் நன்கு செழிக்க வளர்க்கிறது எதுவோ அது சோறு என்று அவர்கள் காட்டும் பொருள் மிஸ்டிஸிஸத்தில் மிக உன்னதமான அர்த்தமாகும். உலக மிஸ்டிக் பள்ளிகள் எல்லாவற்றுக்கும் கேந்திரம் என்னலாகும் சங்கத் தமிழ் மாலை முப்பதும் செப்பிய ஆண்டாளின் அருளோதயம். இத்தனையும் வாய்ந்தால்தான் கடவுள்பேறு. இத்தனையையும் எது தரும்? பரம ஹிதமே வடிவு கொண்ட இதயம் எதுவோ அதுதான் இவற்றைத் தரும். ஹிதம் என்றால் மன்னுயிர்க்கு நன்மையையே வேண்டும் உள்ளம். அந்த உள்ளமே முழு வடிவு எடுத்து வந்தால் எப்படி இருக்கும்! அந்த ஹிதமே வடிவு கொண்டதுதான் நந்தகோபர். சகல உயிர்களுக்கும் நன்மை விழையும் சிந்தையோடு, அனைத்து உயிர்கள் பாலும் பிரியமே வடிவு கொண்டால் அந்த பிரியமயமான வடிவமே யசோதை. இவ்வாறு சகல உயிர்கள் பாலும் ஹிதமயமான இதயமும், சகல உயிர்கள் பாலும் பிரியமே வடிவுகொண்ட சிந்தையும் சேர்ந்துதான் உயிர்களுக்கு பரம்பொருளைப் பெற்றுத் தர முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள். நமது அகவாழ்வில் இந்த நந்தகோபனையும், யசோதையையும் வாழ விடுகிறோமா? அல்லது கம்சனையும், பூதனையையும் திரிய விடுகிறோமா? என்பது அவரவர்க்குத் தானே தெரியும்? உள்ளமாகிய பள்ளிக் கட்டிற் கீழே யசோதை ஆச்சியையும், நந்தன் என்ற அந்த இடையர் குலக் கொழுந்தையும் கொஞ்சம் குடியமர்த்திப் பார்த்தால் அல்லவோ தெரியும் கோகுலம் சதா சர்வ காலமும் நம் உள்ளத்தில் உயிரின் அந்தரங்கத்தில் ஒரே விளையாட்டும் கும்மாளமுமாக இருக்கிறது என்பது! அதற்கு நமது மனம் ஒத்துழைக்க வேண்டாமா? அதனால்தானே வாசலில் காவல் நிற்கும் மனத்தைத் தன்னக்கட்டிக் கொண்டார்கள் முதலில். அந்த மனமாகிய காவலன் ஓம் பறைந்தால் பின்னர் உள்கட்டில் வந்து புகுர என்ன தடை? அந்த மனம் மட்டும் நமக்கு நன்மையை விரும்பும் ஒன்றாக ஆகிவிட்டது என்றால் நாம் கவலையே பட வேண்டாம் நிச்சயம் உள் கட்டில் நந்தகோபனும், யசோதை ஆச்சியும் பரம்பொருளை கண்ணின் பாவை போல் நோக்கிக்கொண்டு நமக்காகக் காத்திருப்பதைப் பார்க்கலாம். இந்த பரம பாவனமான, தூய நல் சேதியை உலகுக்கு உற்சவம், கொண்டாட்டம் என்ற உருவில் மார்கழி முப்பது நாளும் உலகுக்குத் தந்த தமிழுக்கும், தமிழனுக்கும் அல்லவோ நாம் முதலில் கோயில் கட்ட வேண்டும்! வேறு எந்த மொழியில், உலகத்திலேயே இப்படி இந்த மகோன்னதமான உயிர்க்குல நன்மைச் செய்திக்கு உரைகள் மேல் உரைகள் இட்டுப் பெரும் திருவிழாவாக ஆக்கித் தந்திருக்கிறார்கள்.? ஆனால் கேட்பதற்குத்தான் ஆள் யார் இருக்கிறார்கள்? ஆனானப்பட்ட 'திருப்பாவை ஜீயர்' என்னும் பெயருள்ள எம்பெருமானாரே தோற்றுப் போய், 'திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைத்தாலும் கிடைப்பார்கள்; ஆனால் திருப்பாவைக்கு ஆள் கிடைப்பது அரிதிலும் அரிது; ஆண்டாளே சொல்லி ஆண்டாளே கேட்கும் அத்தனை' என்று கைவாங்குவாரேயானால் என்போலியர் எம்மூலை!

இதற்கான ரசிகப் பாடல் -
அம்பரமும் தண்ணீரும் சோறும் நமக்காகும்
உம்பர்கோன் உத்தமன்பால் உள்ளும் உயிருமாய்
எம்பிரான் தாளிணையில் என்றுமே காதலாகிச்
செம்புலத்துப் பெய்நீராய்ச் சேர்ந்தென்றும் ஒன்றிவாழும்
அம்புலத்துக் கான்றவழி ஆண்டாள் தகவுரைத்தாள்;
நம்பிகாள் நங்கைமீர்காள் நாடுமினோ நல்லுரைகள்;
நம்பரும் நன்மையெலாம் நானிலம் காணலாகும்
வம்புலாம் சீர்திகழ வாழ்த்தேலோ ரெம்பாவாய்.


திருப்பாவை 18 - எம்பெருமானார் திருப்பாவை -

'உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்' 


இதற்கான ரசிகப் பாடல் -

உந்து மதகளிறாய் உன்மத்த மாகிமனம்
தந்ததொல்லை தீரத் திருப்பாவை தான்தந்தாள்
அந்தமிலா வாழ்ச்சிக்கே அச்சாரம் தானானாள்
கந்தம் கமழும் குழலால் கிருட்டினனைப்
பந்தித்து வைத்தே பரமாகத் தந்தருளிச்
செந்தமிழ் வேதியர்க்கே செப்பும் மொழியானாள்
வந்தித் தவருரைத்த வானுரைகள் வாசித்தே
சிந்தித்து வாழ்பொருளே செப்பேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 19 - குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

இதற்கான ரசிகப் பாடல் -
குத்து விளக்காகிக் கோதுகலப் பாட்டாகி
வித்துமாய் வீட்டிற்குத் தானாம் திருப்பாவை
நத்தி நமக்காக நாச்சியார் தானருளப்
புத்தியோகு தானருளும் பூரணன் பள்ளிகொள்ளும்
தத்துவமும் தண்தகவும் தெள்ளுரைகள் தாம்விளக்க
எத்துக்கிவ் வின்னாமை இப்பாரைத் தான்நலியும்
தித்திக்கும் பாடல் திகட்டா அருளமுதம்
பத்தியுடன் பாடிப் பொலிந்தேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 20 - 'முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று'

இதற்கான ரசிகப் பாடல் -
முப்பத்துப் பாட்டிற்குள் மாதவனைப் பூட்டியே
எப்போதும் நந்தமக்கே எய்ப்பில்வைப் பாக்கினாள்
செப்பன்ன மென்முலையாய்ச் சீருரைக்குள் ஆட்பட்டே
அப்பாஞ்ச சன்னியனும் ஆரா வமுதானான்
கப்பம் தவிர்த்திங்கு காதலாய்க் கண்ணனுக்கே
எப்போதும் ஏங்கி இயல்வதாம் வாழ்விதனில்
முப்பதும் முந்துரையும் உக்கமும் தட்டொளியாய்
இப்போதும் என்றும் இயம்பேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 21 - 'ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப'

இதற்கான ரசிகப் பாடல் -
ஏற்ற நலங்கள் இயல்வாகித் தாம்சுடர
மாற்றா மதிநலத்தால் பேருரைகள் தாமொளிரப்
போற்றியாம் பாடத் திருப்பாவை தந்தருளி
ஆற்றப் படைத்தவர் அஞ்சுகுடிக் கோர்மகளாய்
ஊற்ற முடைய உத்தமனைத் தான்வரித்தாள்;
நாற்றத் துழாய்முடி நாரணனை நாம்பெறவே
தோற்றே அவள்தமிழில் தொல்புகழ் பாடிப்போய்
ஆற்றா தடிபணிந்தே ஆழ்ந்திடுவோ மெம்பாவாய்.

*


திருப்பாவை 22 - 'அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான'

இதற்கான ரசிகப் பாடல் -
அங்கண்மா கர்வத் தகங்காரம் விட்டகன்று
செங்கமலை தானருளச் செய்யதிருப் பாவைக்கே
எங்கள் இதயமெலாம் ஏக்கமும் கொண்டதுவால்
மங்காப் புகழுடைய மாகுரவோர் தம்முரையால்
சங்கத் தமிழ்மாலைச் செய்யபொருள் போந்ததுவால்
திங்களும் ஒண்சுடரும் தண்கதிர் கண்மலர
எங்கள்மேல் சாபம் இழிந்து திருமாலும்
அங்கண்ணால் நோக்கி அருளேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 23 - 'மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்'

இதற்கான ரசிகப் பாடல் -
மாரி பெயல்நெஞ்சில் மாவுணர்த்தும் காலத்து
வேரி கமழ்சிந்தை வீடளிக்கும் வேராகிச்
சீரிய சிங்கா தனமாம் திருப்பாவைப்
பேரியல்வே பல்குநல் பாங்கான பேருரைகள்
மூரி நிமிர்ந்து முழங்கிடவே யாம்வந்த
காரியம் ஆராய்ந்து கண்ணன் கருணையினால்
சீரிய சிந்தையும் சிந்தாநல் பத்திமையும்
ஆராய்ந் தருளநாம் ஆர்த்திடுவோ மெம்பாவாய்.

*


திருப்பாவை 24 - 'அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி'

இதற்கான ரசிகப் பாடல் -
அன்றிவ் வுளமெலாம் ஆண்டாள் அடிபோற்றி
சென்றங்கு நம்மகந்தை செற்றாள் திறல்போற்றி
பொன்றவே சங்கை புகன்ற உரைபோற்றி
கன்றுதீய சிந்தை கெடுத்தாய் கழல்போற்றி
குன்றாத காதல் கொடுத்தாய் குணம்போற்றி
வென்றே எமையெடுக்கும் நின்தாள் விறல்போற்றி
என்றென்றுன் பாசுரமே ஏத்தி உரைகொள்வான்
இன்றுயாம் வந்தோமால் ஏற்றேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 25 - 'ஒருத்தி மகனாய்ப்  பிறந்தோ ரிரவில்'

இதற்கான ரசிகப் பாடல் -
ஒருத்தி மொழியாய்ப் பிறந்தே உரவோர்
அருத்த வுரையாய்ப் பரந்தே ஒளிர
தரிக்கிலா தாகிநம் தீங்கு கழியக்
கருத்தைக் கவர்வித்துக் கள்ளம் அகற்றி
விருப்பென்ன நின்ற நெடுமாலாய் வேயர்
திருப்பாவை தந்த தமிழால் திருமால்
திருத்தக்க அன்பால் தமியர்யாம் பட்ட
வருத்தமும் தீர்ந்துநாம் வாழ்ந்தேலோ ரெம்பாவாய்.

*



திருப்பாவை 26 - 'மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்'

இதற்கான ரசிகப் பாடல் -
மாலாய் மனவண்ணம் மாதவற்கே ஆகிடுமால்
வாலறிவர் தாம்விரித்த வானுரைக்கே ஏங்கிடுமால்
பாலாழி விட்டிங்குப் பார்வண்ணம் தாங்கிடுமால்
நூலாழி நுட்பம் நுவன்றநம் கோதைக்கே
மாலாகி நெஞ்சழிய மன்னுபெரு வாழ்வுக்காம்
சாலப் பெரும்பறையும் சங்கமுடன் நீள்கொடியும்
ஞாலமெலாம் உள்ளடக்கும் ஞான விதானமும்
ஆலின் இலைகிடந்தே ஆள்வானை ஆண்டாளைக்
கோல விளக்காகக் கொள்வோம்நாம் எம்பாவாய்.

*


திருப்பாவை 27 - 'கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னை'

இதற்கான ரசிகப் பாடல் -
கூடாரைக் கோவிந்தன் வெல்லும் உரையாகி
நாடாரை நாரணர்க்கே ஆட்படுத்தும் ஆண்டாளைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடும் நயக்கும் நல்லுரையும் நாவினிக்கச்
சூடகமும் தோள்வளைக்கும் மாலுக்குத் தோதாகிப்
பாடும் அகச்செவியின் பூவாகிப் பேருரைகள்
ஆடும் பொருளாழம் ஆடையும் பாற்சோறும்
மூடுநெய் தோய முழங்கேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 28 - 'கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்'

இதற்கான ரசிகப் பாடல் -
கறவைகள் புன்சிரிக்கும் கல்விக்கே தேர்ந்தோம் 
துறவிலோம் திண்மையிலோம் தீமைக்கே கற்றோம்
அறமிலாப் பாரிதனில் ஆண்டாளைப் பெற்றோம்
குறையொன்று மில்லாத கோதைமொழி கற்றோம்
உறவேல் நமக்கென்றும் ஓதுமுரை உற்றோம்
அறியாதப் பிள்ளைகளோம் அன்பினால் செய்யும்
சிறுமை மதிமாற்றிச் சிந்தையினை ஆளும்
பொறுமை யுனக்கேயாம் போந்தேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 29 - 'சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்'

இதற்கான ரசிகப் பாடல் -
சிற்றஞ் சிறுகாலே நின்திருப் பாவையினை
முற்றா மதியுடையோம் வந்துநாம் சேவித்துப்
பெற்றதாம் பேருரைகள் நல்கும் பொருளாழ்ந்து
கற்றுன் திருவடிக்கே குற்றேவல் யாம்வாய்ந்தே
இற்றைப் படிப்பால் இயம்பியசொல் அன்றுகாண்
இற்றைக்கும் என்றைக்கும் நின்னருள் பாவையினால்
உற்றோமே யாவோம் உலகெலாம் ஒன்றாவோம்
மற்றைநம் வேகங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை - நிறைவுத் திருப்பாவை - வங்கக் கடல்கடைந்த'

இதற்கான ரசிகப் பாடல் - 

வங்கக் கடல்கிளர்ந்த மாவுரைகள் காட்டுபொருள்
திங்கள் முழுதும் திருப்பாவை தான்விளங்க
எங்கள் இயல்வும் எமைக்காக்கும் தன்னியல்வும்
மங்காப் புகழ்பறையாம் மாதவனார் சேவடியும்
சங்கத் தமிழிசைத்து நங்கள் குலம்வாழ
அங்கத் திருப்பாவை ஆண்டாள் அருளியவா
பொங்கு மலியுவகை பூரிப்பத் தாம்சொல்வார்
எங்கும் திருவருளால் தாம்மகிழ்வ ரெம்பாவாய்.

* * *

திருப்பாவை முப்பதில் தீந்தமிழால் வீடும்
அருள்பாவை போற்றிப் புனைந்தேன் - மருள்தீர
மார்கழியில் ஆண்டாளம் மாதவனை மன்னியசீர்
ஆரமுதப் பாவின் அருள்.
***
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


திருப்பாவையின் பாடல்களின் முதல் சொற்களை வைத்துக் கொண்டே ஒரு கவிதை. அழகியமணவாளப் பெருமாள் நாயனாரைப் படித்ததனால் வந்த விளைவோ?

*
மார்கழி மதியால் வையம் வாழும்
ஓங்கி உலகளக்கும் ஆழி மாயன்
புள்ளும் சிலம்பும் கீசுகீசென்னும்
கீழ்வானம் வெளுக்கும்
தூமணி மாடத்தில் நோற்கும் சுவர்க்கம்
கற்றுக் கறவை கனைத்திளங் கன்றுக்கிரங்கும்
புள்ளின்வாய் உங்கள் புழக்கடையில்
எல்லும் இளங்கிளியும்
நாயகனாய் நின்று
அமபரமும் தண்ணீரும் சோறும்
உந்து மத களிறும்
குத்து விளக்கெரிய
முப்பத்து மூவர் ஏற்ற கலங்களில்
அங்கண் மாஞாலம் மாரிமலை முழைஞ்சில்
அன்றிவ்வுலகம் அளக்கும்
ஒருத்தி மகனாய் மாலும் மணிவண்ணமும்
கூடாரை வெல்லும்
கறவைகள் சிற்றஞ் சிறுகாலை
வங்கக் கடல்கடையும்.

***