Tuesday, March 31, 2020

முகம் பார்க்கும் கண்ணாடி

என்ன அழகான கருத்து, பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரரின் சுலோகமொன்று!

நாம் ஏன் கடவுளை வணங்குகிறோம்? நமக்குத்தானே வருத்தம், பயம், தேவை எல்லாம். நமக்கு ஒன்று தேவை என்றால் உடனே கடவுளிடம் போய் முறையிடுகிறோமே ஏன்? இதற்குப் பல ஞானிகளும் பல விதங்களில் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஸ்ரீஆதிசங்கரர் சொன்ன பதிலில் என்னமோ ஓர் அழகு, ஓர் ஆழம்!

ஸ்ரீஆதிசங்கரர் கேட்கிறார்: நீ கண்ணாடியைப் பார்ப்பதுண்டா? ஆமாம். நீ நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டதாக நினைத்துக் கொண்டிருந்தாய். ஆனால் கண்ணாடியில் பார்த்ததும் அடடா நெற்றிக்கு இட்டுக்கொள்ள மறந்துவிட்டதே என்று போய் எடுத்துவந்து எந்த நெற்றியை அலங்கரிக்கிறாய்? கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பத்தின் நெற்றியையா? இல்லையே. கண்ணாடிக்கு முன்னர் நிற்கும் பிம்பமாகிய உன் நெற்றியில்தானே அலங்காரம் செய்கிறாய்? அது போல் உன்னை நீ மேம்படுத்த விரும்பினால், அல்லது நீ இந்த தேகி என்று நினைப்பாயாகில் உனக்குள்ளே பிரபுவாக உணரப்படுகின்ற உன் ஜீவனுக்கு நன்மை செய்ய வேண்டும், அழகு செய்ய வேண்டும் என்று நீ கருதினாயாகில் போ! கடவுளாகிய ஸ்ரீந்ருஸிம்ஹனைப் போய் வழிபடுவாய்.

”த்வத் ப்ரபு ஜீவப்ரியம் இச்சஸி சேத்
நரஹரி பூஜாம் குருஸததம் |
ப்ரதிபிம்பாலங்க்ருதி த்ருதி குசலோ
பிம்பாலங்க்ருதிம் ஆதநுதே || “

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

அன்னையே! அருள்வாய்

Om. Oh Mother
Of Ananda
Of Chaitanya
Of Satya
Supreme !
Protect us. 

”The first condition is a healthy humility which makes
you realise that unless you are sustained, nourished,
helped, enlightened, guided by the Divine, you are nothing
at all. There now. When you have felt that, not only
understood it with your mind, but felt it down to your
very body, then you will begin to be wise, but not before.”
(Mother to children as comments on Sri Aurobindo's book The Mother)

அம்மா! எங்களுக்கு இந்த ஆரோக்கியமான அடக்கமுடைமையை அருள்வாய்!

அறியாமையும், இருளும் நீங்கி உன் அருளே வாழ்வு எமக்கு என்று உணரும் அறிவையும், உன் அருளை மறைக்காது அடங்கும் ஒளியுடைமையும் எமக்கு அருள்வாய் அன்னையே!

***

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் பற்றி

வேதாந்தம் என்றால் உபநிஷதம். வேதத்தின் அந்தம் என்றால் என்ன பொருள் என்றெல்லாம் முன்னர் பார்த்தோம். நீங்களும் படித்திருப்பீர்கள். அந்த உபநிஷதங்களின் கருத்துகளை யுக்தி பூர்வமாக மீமாம்ஸையின் நெறிப்படி நூற்பாக்களாக வடித்து, கிரமமான உரிய தர்க்கங்களுடன் சாத்திர வடிவமாக்கியது ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்பதையும் முன்னர் எழுதியிருக்கிறேன். உபநிஷதக் கருத்துகளை, ஸ்ரீமத் பகவத் கீதையின் துணையுடன் ஸூத்ரங்களாக ஆக்கியதால் வேதாந்த ஸூத்ரங்கள் என்றே பெயர் பெற்றது ஸ்ரீப்ரஹ்ம ஸுத்ரங்கள் என்னும் ப்ரஸ்தான நூல். அந்த ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரத்தில் நான்கு அத்யாயங்கள், ஒவ்வொரு அத்யாயத்திற்கும் நான்கு பாதங்கள் என்று பார்த்தோம் அல்லவா? நான்கு அத்யாயங்களின் பெயர்கள் ஸமன்வயம், அவிரோதம், சாதனம், பலன் என்பவையாகும். இதற்கும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்.

மூன்று ப்ரஸ்தான கிரந்தங்களான உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்பனவற்றிற்கு வியாக்கியானம் எழுதிய ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார் என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமங்களின் அமைப்பையும் பார்த்தால் ஸ்ரீபகவந் நாமங்களின் வரிசைத் தொகுப்பாகவும் மட்டுமில்லாமல் அந்த திவ்ய நாமங்களைத் தொகுப்பாக்கி, ஒத்த கருத்துடைய நாமங்களின் உள்தொகுப்புகள் என்றும் ஒரு கிரமத்தில் அமைத்துத் தந்திருக்கும் உட்கருத்து நமக்கு வியாக்கியானங்களின் வழியே நோக்கும்பொழுது புலப்படுகிறது. அஃது என்னவெனில் ப்ரஸ்தான த்ரயங்களின், அதாவது உபநிஷதங்கள், ஸ்ரீகீதை, ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் ஆகியவற்றின் கருத்துகளைச் செவ்வையாகக் கற்று மனம் கொள்ள முடியாமல் இருக்கும் நம் போல்வாருக்காகவே போலும் ஸஹஸ்ரநாமங்களின் அமைப்பிலும், உள்பகுப்பிலும் அமைத்த கருத்துகளிலேயே வேதாந்த நிச்சயங்களை மனனம் செய்து ஜபிப்பாருக்கு உள்ளம் கொள்ளும் விதத்தில் நமது ஹிந்துமத ஆசார்ய பெருமக்கள் தந்துள்ளனர்.

இதே கிரமத்தில் சாக்தத்தின் பெரும் நூலான ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களையும் அமைத்திருக்கின்றனர் என்பது நாம் அறியுங்கால் இன்பம் பயக்கவல்லது. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீபாஸ்கரராயர் என்பாருடைய விரிவான வியாக்கியானம் அமைந்திருக்கிறது. சம்ஸ்க்ருதத்தில் அமைந்த அரிய அந்த உரையை நல்ல தமிழில் ஆக்கி, கூடவே அரும் பெரும் ஆய்வுக் குறிப்புகளையும் சேர்த்து, பாஸ்கர ராயரின் வியாக்கியானத்திற்கு மேலும் பொலிவு கூட்டும் விதமாக வெளியிட்டவர் ப்ருஹ்மஸ்ரீ G V கணேசய்யர் அவர்கள். அதில் முன்னுரை எழுதியிருக்கும் ஸ்ரீஅருட்கவி ந ஸுப்ரஹ்மண்ய ஐயர் அவர்கள் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்கள் எப்படி வேதாந்த ரீதியாகப் பகுப்புகளைத் தன்னகத்தே கொண்டு துலங்குகிறது என்பதை எழுதிக் காட்டுகிறார். மிக அரிய கருத்து இது.

“இந்த ஸஹஸ்ரநாமாக்களின் ஆதிமுதல் அந்தம் வரையிலுள்ள தொடர்பைக் கூர்ந்து நோக்குவோமாயின், ஸமன்வயம், அவிரோதம், சாதனம், பலன் என நான்காக வகுக்கப்பட்டுள்ள பிரஹ்ம ஸூத்ரத்தின் அமைப்பு இதற்கும் ஏற்படுகின்றது.”

என்று எழுதும் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஐயர் நாமங்களின் அந்தப் பகுப்புகளையும் பிரித்துக் காட்டுகிறார்.

1, 2 , 3 நாமங்கள் - தடஸ்த லக்ஷணம்

4 - 131 நாமங்கள் - ஸமன்வயம்

132 - 256 நாமங்கள் - அவிரோதம்

257 - 274 நாமங்கள் - ஸாதனம்

275 - 999 நாமங்கள் - பலவித சாஸ்திர சித்தாந்தங்களைக் கொண்டும், யுக்திகளைக் கொண்டும் மனன நிதித்யாஸனங்களைச் செய்தல்

1000 நாமம் - அபரோக்ஷ சாக்ஷாத்கார வடிவ பலன்

என்று அவர் காட்டும் ரீதியில் அம்பிகையின் நாமங்களை நாம் அனுசந்தானம் செய்தால் நாமஜபம், கூடவே வேதாந்த ஜ்னானம், தியானம் அனைத்தும் நம்மை அறியாமலேயே ஏற்படும் விதத்தில் அமைத்து வைத்திருக்கும் பெரியோர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

’தடஸ்த லக்ஷணம்’ என்று ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தின் முதல் மூன்று நாமங்களைக் குறிப்பிடுக்கிறார் அருட்கவி ஸ்ரீஸுப்ரஹ்மண்ய ஐயர். தடஸ்த லக்ஷணம் என்றால் என்ன? வேதாந்தம் ஒரு வஸ்துவுக்கு இரண்டு லக்ஷணங்கள் கூறுகிறது. லக்ஷணம் என்னில் இயல்பு, கேரக்டரிஸ்டிக் என்று பொருள் கொள்ளலாம். என்ன இரண்டு லக்ஷணங்கள்? தடஸ்த லக்ஷணம், ஸ்வரூப லக்ஷணம் என்னும் இரண்டு.

ஒரு பொருள் இருக்கிறது. (பொருள் = வஸ்து) அஃது புறத்தில் சூழ்நிலையோடு இயக்கம் உறும்போது சில தன்மைகளை வெளிப்படுத்துகிறது. அந்த இயல்பை தடஸ்த லக்ஷணம் என்பர். ஆனால் அந்தப் பொருளே சூழ்நிலையோடும், புறத்தில் எதனோடும் இயக்கம் கொள்ளாதிருக்கும் பொழுதும் அதனுடைய இருத்தல் இயல்பாகச் சில தன்மைகள் இருக்கின்றன. அந்த இயல்பிற்குப் பெயர் ஸ்வரூப லக்ஷணம். ஒரு வஸ்துவின் தன்னளவிலான உரிய இயல்பு ஸ்வரூப லக்ஷணம். அதே வஸ்து வேறொன்றுடன் தன் சூழலில் கொள்ளும் தொடர்பில் வெளிப்படும் இயல்பு தடஸ்த லக்ஷணம் என்றும் சொல்லலாம். இந்த இரு லக்ஷணங்களைப் பற்றி ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் தமது சிவஞான மாபாடியத்தில் எழுதுங்கால் இங்ஙனம் உரைப்பார்:

“பெத்தத்தில் நின்ற நிலைபற்றிக் கூறும் இலக்கணம் ஆகந்துகம் ஆகலில் பொதுவியல்பு என்றும், முத்தியில் நின்ற நிலைபற்றிக் கூறும் இலக்கணம் சகசம் ஆகலில் சிறப்பியல்பு என்றும் ஆயின...... பலபொருட்கும் பொதுவாய இலக்கணம் பொதுவியல்பு என்றும், ஒரு பொருட்கே உரிய இலக்கணம் சிறப்பியல்பு என்றும், அளவைநூலால் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறு. தடத்தலக்கணம், சொரூபலக்கணம் என்னும் வடசொற்குப் பரியாயப் பெயராய் ஈண்டுக் கூறப்படும் பொது இயல்பு, சிறப்பு இயல்பு வேறு எனத் தெரிந்து உணர்ந்து கொள்க. இவ்விருவேறு வகைக்கும் சொல்லொருமை மாத்திரை பற்றியே மயங்கற்க.”

(ஆகந்துகம் - பின்வந்துசேர்ந்தது; சகசம் - உடன்தோன்றியது)

வேதாந்தம் என்னும் உபநிஷதம் வழிசார்ந்த அணுகுமுறை ஹிந்துமத வழிபாட்டு நெறிகள் அனைத்திற்கும் பொதுமொழியாக அமைந்திருக்கிறது. பொதுமொழியின் தெளிவில், தம்தம் வழிபாட்டுச் சிறப்பு நுட்பங்களை ஆகமங்கள் என்ற வடிவில் ஒவ்வொரு வழிபாட்டு நெறியும் கைக்கொண்டு தம்தம் அளவில் சிறந்து விளங்கும் சம்ப்ரதாயங்களாகத் திகழ்வதுவே ஹிந்துமதத்தின் பொதுமை ஒருமையும், சிறப்புகளின் பன்மையும் ஒருங்கே மிளிரும் பான்மையாகும். இனி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தில் தடஸ்த லக்ஷணம் என்று குறிக்கப்பட்ட முதல் மூன்று நாமங்களுக்கு வருவோம்.

முதல் மூன்று நாமங்கள் ஸ்ரீமாதா, ஸ்ரீமஹாராஜ்ஞீ, ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ என்பவை ஆகும். இந்த நாமங்களின் ரஹஸ்யப் பொருட்கள் நுணுகிக் கற்க வேண்டியவை ஆகும். ஸ்ரீபாஸ்கரராயரின் வியாக்கியானம் எத்துணை அருந்துணை என்பது நுணுகிக் கற்பாருக்கு விளங்கும். ஸ்ரீ என்னும் பொருளுக்கு எவ்வளவு அர்த்தங்கள் உண்டு, மாதா, அன்னை என்றே முதல் நாமம் தொடங்கும் காரணம் என்ன, மா என்பது அளத்தல் என்னும் பொருளும் கொண்டது. அதனால் அன்னையாக உலகை அவள் அளந்து இட்டருளிய கருணை பெறப்படும். இன்றைய விஞ்ஞானமும் பிரபஞ்சமே மொத்தம் 19 எண்கள் துல்யமான மதிப்பில் தவறாமல் இருப்பதுவே பிரபஞ்சம் என்ற ஒன்றே இருக்கக் காரணம் என்று சொல்லும் பொழுது இதன் ஒப்பீடு உணர்ந்து இன்புறத் தக்கதாம். ராஜ்ஞீ என்பதுவே ராணீ என்று ஆகும். உலகைக் காக்கும் கருணையைக் குறிக்கும் நாமம். ஸிம்ஹம் என்பது ஹிம்ஸை என்பதன் எழுத்து மாற்றாகக் கொண்டு ஆசனம் என்பது நீக்குவது என்னும் பொருளில் சம்ஹாரம் என்னும் பொருளும் மூன்றாவது திவ்ய நாமமான ஸ்ரீமத் ஸிம்ஹாசனேசவரீ என்பதற்குக் கூறுகிறார் ஸ்ரீபாஸ்கரராயர். ஸிம்ஹத்தை ஆஸனமாக உடையவள் என்னும் முதல் பொருளும் நுணுக்கமாகப் பார்க்குமிடத்து சம்ஹாரப் பொருளும் விளங்குவதை உரையின் உதவியால் அன்றி எப்படி உணர இயலும்?

ஆக முதல் மூன்று நாமங்களும் சிருஷ்டி, ஸ்திதி அல்லது பாலனம், சம்ஹாரம் என்னும் ஜகத் காரணப் பொருளாக அமைந்து விளங்குவன. இந்தப் படைப்பில் வந்துள்ள நமக்கோ உய்வு என்பதுவே பெரும் முக்கியமான, உடனடித் தேவை என்பதால் அன்னை, அதுவும் அவளே அத்தனை அன்னைத் தத்துவத்திற்கும் உருவமானவள் என்பதாலேயே முதல் நாமம் ஸ்ரீமாதா என்று தொடங்குகிறது என்னும் உரைநுட்பம் மிகவும் நம்மை உருக்கவல்லது. சூழ்நிலையில் இயக்கம் கொள்ளும் போது ஒரு வஸ்துவின் இலக்கணம்தான் தடஸ்த லக்ஷணம் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கேற்ப முதல் மூன்று நாமங்களையும் தடஸ்த லக்ஷணம் என்னும் பிரிவில் பகுத்துக் காணும் விளக்கம் எவ்வளவு அரிய பார்வை!

ஸ்ரீபாஸ்கர ராயர் தமது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வியாக்கியானத்தில் கூறும் அரிய கருத்துகளில் ஒன்று: ஸ்வர்க்கம் அடைய வேண்டும் என்னும் விருப்பம் உள்ளவன் தர்ச, பூர்ணமாஸ யாகங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது யக்ஞ சாஸ்திரங்களில். ஆனால் உடனே அடைகிறானோ என்ற கேள்வி எழலாம். உடனே அடையாவிட்டாலும் வாழ்க்கை முடிந்தவுடன் அவன் அதன் பலனான ஸ்வர்க்கத்தை அடைகிறான். அதுவரை அவனுடைய யாகம் செய்த பலன் அபூர்வம் என்ற வடிவில் சேமிக்கப்பட்டு இருக்கிறது. அப்பொழுது அவனுக்கு ஸ்வர்க்கம் பலனாகக் கிடைப்பது என்பது அபூர்வத்தின் வழியாக கிடைக்கிறது என்று யாக்ஞிகர்கள் சொல்லுகிறார்கள். அதேபோல் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்வதால் அம்பாளுடைய ப்ரீதி உடனே ஏற்பட்டு விடுகிறது. அவளுடைய ப்ரீதியினால் அநந்தமான பலன்கள் சொன்னவருக்குக் கிடைக்கப் பெறுகிறது. ’ஸ்ரீமாது: ப்ரீதயே தஸ்மாத் அனிசம் கீர்த்தயேத் இதம்’. ஆனால் எந்தப் பலனைக் காட்டிலும் மிக உயர்ந்த பலன், நிலைத்த பலன் அம்பாளின் ப்ரீதியே அன்றோ! என்று கூறுகிறார்.

தாம் தமது வியாக்கியானத்தை எந்தச் சான்று நூல்கள், எந்தச் சான்றான சம்ப்ரதாயங்கள் ஆகியவற்றை மூலமாகக் கொண்டு இயற்றுகிறோம் என்று அவர் கூறுவதைப் பார்க்கும் பொழுது மிகப் பழங்காலத்திலிருந்தே நமது ஹிந்துமதத்தில் இருந்துவரும் பிரஸ்தானங்களின் கிரமம் எத்தகையது என்பதை உணர்கிறோம்.

ச்ருதி ஸ்ம்ருதி நியாய புராண ஸூத்ர
கோசாகம ஸ்ரீகுரு ஸம்ப்ரதாயாத் |
நிச்சித்ய நிர்மத்ய க்ருதாபி டீகா
சோத்யைவ ஸத்பிர்மயி ஹார்தவத்பி: ||

’ச்ருதி, ஸ்ம்ருதி, நியாயம், புராணம், ஸூத்ர, கோச, ஆகமங்களிலிருந்தும், ஸ்ரீகுருவினுடைய ஸம்ப்ரதாயத்திலிருந்தும் நிச்சயம் பண்ணிக் கடைந்தெடுத்து இந்த பாஷ்யமானது பண்ணப்பட்டிருந்த போதிலும் அது என் மீது தயவோடு கூடிய ஸத்துக்களால் சரிபார்த்துத் திருத்தப் படுவதற்கு அர்ஹம்தான்’
சுற்றுப்புற உலகை அறியாமல் வெறுமனே விழித்த நிலை எவருக்கேனும் ஞாபகம் இருந்தால் ஒன்று புரியவரும். அதாவது கனத்து, புலனுகர்வுகளால் ஆன உலகம், அறிய அறிய என்ன ஆகிறது? அதன் நுட்பங்கள், அதன் அடிப்படைத் தத்துவங்கள், அதன் அர்த்தங்கள் மேலும் மேலும் விளங்கும்போது கட்டையாய்க் கல்லு போன்று இருந்த உலகம் காணாமல் போகிறது. அங்கு அறிவு என்னும் அக்கினி அந்த உலகம் ஆகிய விறகை, புலனுகர்வுகள் ஆகிய இந்தனத்தைப் பற்றி எரிந்து புரிதல் என்னும் சக்திமயமாக ஆக்கிவிடுகிறது. அந்த அறிந்து கொள்ளுதலின் அடிப்படை உட்குருத்து என்னவென்று பார்த்தால் அதுதான் ‘சித்’ என்பதாகும். ‘சித்’ என்பதை மட்டுமே தன்னந்தனியாக ஒருமித்துக் கண்டால் அதுவே ப்ரஹ்மம். அந்த ப்ரஹ்மமே சித் அக்கினியின் குண்டம். அந்த சித் அக்னி குண்டத்தில் எழுகின்ற அருளின் வடிவே அன்னை. சித் அக்னி குண்ட ஸம்பூதா. ப்ரஹ்மாண்ட புராணம் ஒரு செய்தியைச் சொல்லுகிறது. அசுரர்களின் பிடியிலிருந்து உலகை விடுவிக்க தேவர்கள் அன்னையை அழைக்க அமைத்தது சித் அக்னி குண்டம் என்று. ப்ரஹ்மமும், சக்தியும் ப்ரகாச ரூபமும், விமர்ச ரூபமும் ஆகும் ஒரே பாரமார்த்திகம். ப்ரஹ்மமும், காளியும் ஒன்றே. மண்டலமிட்டு அசையாமல் நிற்பதும், பேரியக்கமாக இயங்குவதும் இரு வேறு நிலைகள் என்பார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

அன்னையின் ஆவிர்பாவம் எந்த நோக்கத்திற்காக நடக்கிறது? அதாவது இந்த உலகம் வெறுமனே அலட்சியமான அறிவுமயம் இல்லை. இதன் உண்மையான உருவம் அருள்மயம். அந்த அருளிலிருந்து தன்னைப் புறத்தாக்கி, தான் தனது என்னும் பிடியில் தன்னைக் கொடுத்துத் தன் கேட்டிற்கு விரைந்து ஓடுகிறது மனிதர்களின் உலகம். அருளை விரும்பாத மனிதப் போக்கிற்கு அஸுரம் என்று பெயர். ஆனாலும் மனித உயிரின் உள் இயல்பே அருளைச் சார்ந்து இருப்பது. அஸுரத்தின் மயக்கில் ஆட்பட்ட மனிதமோ தன் இயல்பிற்கு விரோதமாய் ஓடுகிறது. ஆனாலும் அதன் இதயத்தில் தன் நிர்க்கதிக்கான தாபம் எழுகிறது. கணங்கள் கணங்களாய் அந்தத் தாபம் எழுவதுதான் தேவக் கூட்டம். தேவ கணங்கள் மனிதத்தை அஸுரத்தின் பீடையிலிருந்து மீட்க அயராது பாடுபடுகிறார்கள். பித்து பிடித்த நிலையில் குழந்தை தனக்கு மருந்து புகட்டும் அம்மாவின் கரங்களையே கடித்துவிட்டு ஓடுவதுபோல் மனித உயிர்கள் அழிவிலிருந்து காக்கும் தேவ கரங்களை வெறுத்து அஸுரப் பிடியை நோக்கி ஓடுகிறார்கள். ஒன்றுமில்லை. ஒரு கணம். மனித உயிர் சற்று நிதானித்து நின்று தன்னை முற்றிலும் தேவர்களின் காப்பில் ஒப்புக் கொடுத்து விட்டால் போதும். அஸுரம் நொறுங்கித் தெறித்து அழிந்துவிடும். மனித ஆத்மாவின் உள்திறனை உண்டு கொழுப்பது அஸுரம். எதனால் அவ்வாறு செய்ய வல்லதாகிறது? மனித உயிரின் அனுமதியால். அந்த அனுமதி மறுக்கப்பட்டால்? அடுத்த கணம் அஸுரம் மறையும். அந்த திவ்ய முகூர்த்தத்திற்காகவே தேவ கணங்கள் சதா சர்வகாலமும் தொழில் புரிகின்றன, உறக்கமின்றி. எனவேதான் தேவர்களை இமையாநாட்டத்தவர்கள் என்கிறோம். ஆத்மாவின் தற்காப்புப் படைகள் தேவர்கள். அந்தத் தேவர்கள் நம் நலனுக்காக, நம் உய்விற்காக ப்ரஹ்மத்தின் அருள்வடிவை ஆவிர்பாவம் கொள்ள இறைஞ்சுகிறார்கள். அந்த அருள்வடிவாம் அன்னையின் தோற்றம் தேவ கார்யத்திற்காக நலமுற எழுந்த வடிவம் என்று போற்ற நமக்குக் கற்றுத் தருகிறது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம். தேவகார்ய ஸமுத்யதா.

பதினேழாம் நூற் பிற்பகுதி தொடங்கி பதினெட்டாம் நூற் மத்திவரையிலும் ஞானப்பெருவாழ்வு வாழ்ந்தவர் ஸ்ரீபாஸ்கரராயர். அவருடைய காலத்தில் பாரதத்தில் அவர் போகாத ப்ரதேசம் இல்லை என்கின்றனர். பல ராஜாக்களுக்கும் தீக்ஷை அளித்து ஆன்மிக புனர் உயிர்ப்பு ஊட்டியவர் நம் பாரதத்திற்கு என்றால் இந்த மகான் எனலாம். யோசித்துப் பாருங்கள் என்ன என்ன கஷ்டங்கள் இருந்திருக்கும்! பெரும் தெய்விக சக்திகள் வாய்ந்தவர் என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? ஸ்ரீபாஸ்கரராயர் என்ன என்ன நூல்கள் இயற்றியுள்ளார் என்று பார்த்தால் பிரமிப்புதான் விஞ்சுகிறது. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம உரையான ஸௌபாக்ய பாஸ்கரம். ஸ்ரீகணபதி ஸஹஸ்ரநாம உரையான கத்யோதம். பாவநோபநிஷத் பாஷ்யம். கௌல உபநிஷத் பாஷ்யம், திரிபுரோபநிஷத் பாஷ்யம், துர்கா சப்தசதீயின் உரை குப்தவதீ, வாமகேசுவர தந்த்ர உரை ஸேது பந்தம், சிவாஷ்டோத்தர சதநாம உரை, வரிவஸ்யாரஹஸ்யமும் உரையும், சிவதண்டகம் முதலிய மந்த்ர தந்த்ர சாஸ்த்ர நூல்கள். வாதகுதூஹலம் என்னும் மீமாம்ஸா தர்சன நூல், வரதராஜரின் லகுசித்தாந்த கௌமுதீயின் உரை ரஸிகரஞ்ஜனி, நியாய மண்டனம் என்னும் நியாய சாஸ்திர நூல், சந்தோ பாஸ்கரம், சந்த: கௌஸ்துபம், விருத்த சந்த்ரோதயம் என்னும் பிங்கள ஸூத்ரத்தை ஒட்டிய சந்தஸ் சாஸ்த்ர நூல்கள். இவரின் வித்வத் பெருமையை எடுத்துக் காட்டும் நூல்கள் மூன்று. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் உரை, ஸ்ரீகணபதி ஸஹஸ்ரநாம உரை, ஸேது பந்தம் என்னும் மூன்று. வரிவஸ்யா ரஹஸ்யத்தில் சாக்த தந்த்ரத்தின் ஸ்ரீவித்யை உபாஸனையின் ரஹஸ்யங்களைப் பொதிந்து எழுதியுள்ளார். ’இதெல்லாம் நமக்குப் புரியாது சார்’ என்ற கீறல் விழுந்த கிராமஃபோன் ஒலி எப்பொழுது நம்மிடை இல்லாமல் ஆகுமோ!

தமது பாஷ்யம் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு அனைத்துப் பிரதேசங்களிலும் வதியும் வித்வத் சமூகத்திற்கு மிகுந்த உவப்பைத் தருவதாகுக என்று வேண்டுகிறார் ஸ்ரீபாஸ்கர ராயர். அவ்வாறு வேண்டும் பொழுதிலேயே அற்புதமான ஒரு செய்தியை நமக்குச் சொல்லுகிறார். என்னவெனில் பாரதம் முழுமையும், கிழக்கில் காமரூபம் வரையில், மேற்கில் ஸிந்துநதி பாயும் காந்தாரம், தெற்கில் ஸ்ரீராமனால் உண்டாக்கப்பட்ட (ரசித) ஸேதுவரையில், வடக்கில் கடும்பனியால் நுழைய அரிதான கேதாரம்வரையில் வித்வத் ஸமாஜங்கள் இருந்தன என்கிறார். வித்வத் ஸமாஜா ஸந்தி. அங்கிருக்கும் அனைத்து வித்வான்களுக்கும் இந்த இப்படிப்பட்ட யத்நமானது (முயற்சியானது) சுகத்தைத் தரட்டும். யே யே தாந் ஏஷ யத்ந: ஸுகயது. இதுவோ சாக்த சம்ப்ரதாய நூல். அதற்கு உரை எழுதுகிறவர் சாக்தர்களின் சம்மதி இருந்தால் போதும் என்று நினைப்பதுதானே. அவ்வாறில்லை.

(அங்குதான் ஹிந்துமத அமைப்பை நாம் உணரவேண்டும். பாரதத்தின் நான்கு திசை எல்லைவரையில் இருக்கும் வித்வான்களின் ஆமோதிப்பு என்பதுதான் எந்த ஒரு குறிப்பிட்ட ஸம்ப்ரதாய நூலாக இருந்தாலும் கூட மிகவும் அவசியம் என்று கருதப்பட்டது. பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரரும் தமது அத்வைத சித்தாந்த ரீதியான பாஷ்யத்தை தம்மை ஏற்றுக்கொண்டு தம் பின்னால் வருகின்ற சிஷ்யர்கள் மட்டும் ஒப்புக்கொண்டால் போதும் என்று எண்ணவில்லை. அவரும் இந்த பாரத அனைத்து வித்வத் சமாஜங்களும் தமது பாஷ்யத்தைக் கண்ணுற்று கண்டனம் சொல்ல முடியாமல் இருந்தால்தான் தமது சித்தாந்தம் வித்வான்களால் கொண்டாடப்பட்டது என்னும் சிறப்பை அடையும் என்று எண்ணினார். பல நூற் கழித்து வந்த ஸ்ரீராமாநுஜரும் தமது ஸ்ரீபாஷ்யம் என்பது தம்மை ஒப்புக்கொண்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் மாத்திரம் படித்து ஏற்றுக்கொண்டால் போதும் என்று எண்ணவில்லை. அவரும் அனைத்து பாரத வித்வத் ஸமாஜங்கள் கண்ணுற்று ஏற்க வேண்டும் என்று கருதினார். தன்னைப் பின்பற்றுவோர் மட்டும் ஏற்றால் போதும் என்று அவரும் நினைக்கவில்லை. எந்த ஒரு சித்தாந்த ஸ்தாபகரும், ஸம்ப்ரதாயத்தினரும் இந்த விதமான ஹிந்துமதப் பொதுமையின் உயர்ந்த வித்வத் ஒருமையை நோக்கித்தான் தத்தம் கருத்துகளை முன்வைத்தனர்.)

கிழக்கில் காமரூபம், மேற்கில் காந்தாரம், தெற்கில் ஸேது பந்தம், வடக்கில் கேதாரம் என்ற எல்லைகளின் உள்பரப்பில் வதியும் எண்ணற்ற வித்வத் ஸமாஜங்கள் எல்லோரும் தம்தம் வழிபாட்டினால் வேறு வேறு ஆகமங்களைக் கைக்கொண்டு இருக்கலாம். ஆனால் அவர்களின் வித்வத் என்பது, அவர்களின் சாஸ்திர வித்யை என்பது பொதுவாக சதுர்தச வித்யா ஸ்தானங்கள் என்பதைக் கொண்டது. அங்குதான் ஹிந்துமதத்தின் பொதுமையின் ஒருமை என்பது இருக்கிறது. வழிபாடுகள் சிறப்பின் பன்மை என்றபடி வேறுபடும். இந்த அமைப்பு ரிக்வேத ரிஷிகளின் காலம் தொட்டு வந்துகொண்டிருப்பது. ‘பரம்பொருள் ஒன்றே. ஞானிகள் அந்தப் பரம்பொருளைப் (வழிபாட்டிற்காக) பலவாறு விவரிக்கின்றனர்’ - ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி - என்பது ரிக்வேத மந்திரம். பதினேழாம் நூற் ல் வதிந்த ஸ்ரீபாஸ்கரராயரும் சொல்வது இதையேதான்.

’ஆப்ராச: காமரூபாத்த்ருஹிண
ஸுதநத ப்லாவிதாதா ப்ரதீசோ
காந்தாராத் ஸிந்துஸார்த்ராத்
ரகுவர ரசிதாதா ச ஸேதோரவாச: |
ஆகேதாராத் உதீசஸ்துஹிநகஹநத:
ஸந்தி வித்வத் ஸமாஜா
யே யே தாநேஷ யத்ந: ஸுகயது
ஸமஜாந் கச்சமத் கர்துமீஷ்டே || ’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

கந்தரலங்காரம் சிந்தனைகள்

கந்தரலங்காரத்தைப் படிக்கப் போனால் கந்தன் கவியைப் படிக்க ஏன் இவ்வளவு காலம் கடத்தினீர்? என்று கேட்டாலும் என்ன பதில் சொல்வது? தலையைக் கவிழ்ப்பதல்லால்?. பதிலையும் அவரே சொல்லித் தருகிறார். அதுதான் சிறப்பு.

”சளத்தில் பிணிபட்டு அசட்டுக்
க்ரியைக்குள் தவிக்குமென்றன்
உளத்தில் பிரமத்தைத் தவிர்ப்பாய்
அவுணர் உரத்து உதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக்
களித்துக் குடித்துவெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட
வேல்தொட்ட காவலனே.”

ஆறுமுக தேசிகனார் செய்யும் ஓர் அரிய உபதேசம்! மிகத் தெளிவாக விளக்குகிறார். எதை? அநாதியிலே வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத் தெளிவாக விளக்கும் குரு. அவருடைய தெளிவான உபதேசத்திற்குப் பின்னர் புரியவருகிறது. அஃது அருளில் விளைந்த ஆனந்தத் தேன் என்று. அதுவும் ஒளியில் விளைந்த உயர்ஞானத்து பூதரத்தின் உச்சியின் மேல் இருக்கும் அருளில் விளைந்த ஆனந்தத் தேன் என்று.

“ஒளியில் விளைந்த உயர்ஞான
பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்ததொர் ஆனந்தத்
தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்
பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வாமுகம்
ஆறுடைத் தேசிகனே.”

வள்ளிமணாளன் எனக்கு ஒன்று உபதேசித்தான். யார்? தேனென்றும் பாகென்றும் உவமிக்கொணா மொழியுடைய தெய்வவள்ளியின் கோன். ஆனால் அவர் உபதேசித்ததை எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்லிப் புரியவைப்பது? வான் என்று சொல்லலாமா? இல்லை. காற்று என்று சொல்லலாமா? இல்லை. தீ, நீர் மற்றும் மண் என்றெல்லாம் சொல்ல முடியாது. சரி. தான் மற்றும் நான் என்று சொல்லித் தெரிவிக்க முடியுமா? ம்..ம் இல்லை. சரி சரீரத்துடன் உள்ளதா? அல்லது சரீரம் இல்லாததா? முடியாது. என்ன சொல்லியும் அவன் சொன்ன உபதேசத்தைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. நானும் சொல்ல வேண்டும் என்றுதான் பார்க்கிறேன். என்னவென்று எதைச் சொல்லிப் புரிய வைப்பது?

“தேனென்று பாகென்று உவமிக்கொணா
மொழித் தெய்வவள்ளி
கோனன் றெனக்குப தேசித்தது
ஒன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று
நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி
யன்று சரீரியன்றே.”

இவ்வாறு ஒன்றும் சொல்ல முடியாமல் ஒரு நிலைக்கு என்னை ஆட்படுத்திச் சும்மா இருக்கும் நிலைக்குள் எனைப் புகவிட்டவன் அவன்.

”சொல்லுகைக் கில்லையென் றெல்லாம்
இழந்துசும் மாஇருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்ட
வாஇகல் வேலன்நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக்
கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத்
தோளண்ணல் வல்லபமே.”

சரவண பவகுஹ சரணம் சரணம்
சண்முக நாதா சரணம் சரணம்

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

மாவலிபால் அன்று மூவடி கேட்டு அளந்த திருமால் மூதண்ட கூட முகடு முட்டத் தம் சேவடியை நீட்டினார். அந்த மாலின் மருகனான குமரனின் அழகிய இளம் பாதங்களோ மூன்று இடங்களில் பட்டவண்ணம் இருக்கின்றன. எங்கு எங்கு? போர்க்களத்தில் மயிலின் மீதும், தேவர்களின் தலைகள் மீதும், என்னுடைய பாக்களை வடித்த ஏட்டிலும் தொட்டவண்ணம் இருக்கின்றன குமரனின் பாதங்கள் என்கிறார் ஸ்ரீஅருணகிரிநாதர்.

”தாவடி ஓட்டு மயிலும்
தேவர் தலையிலுமென்
பாவடி ஏட்டிலும் பட்டதன்
றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட
கூட முகட்டுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான்
மருகன்தன் சிற்றடியே.”

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஒரு பாட்டு. ஒரு வேளை அவருக்கு அப்பொழுதே தெரிந்திருக்குமோ!

ஸ்ரீஅருணகிரிநாதர் சொல்கிறார்: ‘மனத்தைப் பொறிகளின் வழியே போகாமல் தடுப்பீர்களாக!. வெகுளியாகிய கோபத்தை விட்டுவிடுங்கள்; தானம் என்றும் கொடுப்பீர்களாக! (வெளியே போகலாமா?) அதெல்லாம் இருந்தபடியே ஓரிடத்தில் இருங்கள்.’

என்ன சொல்றீங்க? ஏகப்பட்ட பிரச்சனை.

‘அப்படியா? ஏழுபாரும் உய்வடையும் படியாக, சூரனையும், குன்றத்தையும் ஒருங்கே திறக்கும் சக்தி வாய்ந்ததான, துளைத்துப் பொடியாக்கும் வல்லமை மிக்க அந்த சக்தி வாய்ந்த வேலை விடும் கோனாகிய முருகனின் அருள் வந்து தானே உங்களுக்கு வெளிப்படும். கவலைப் படாதீர்கள்.’

ஸ்ரீஅருணகிரிநாதப் பெருமான் பாடிய பாட்டு. கந்தரலங்காரம்:

“ தடுங்கோள் மனத்தை விடுங்கோள்
வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோள் இருந்த படியிருங்
கோள்எழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம்
திறக்கத் துளைக்க வைவேல்
விடும்கோன் அருள்வந்து தானே
உமக்கு வெளிப்படுமே.”
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***
ஓரலை ஓய்ந்தால் ஓரலை எழும் கடல் போன்றது பிறவிக் கடல். அந்தக் கடலில் விழமாட்டார்கள். எவ்வளவு சிறப்பு இருந்தாலும் அனைத்தையும் கெடுக்கும் வறுமை. அந்த வறுமையால் வாட மாட்டார்கள். இரண்டும் உறுதி ஆகிவிட்டதா? என்ன இரண்டும்? ஆன்மிக நன்மை, வாழ்வின் வளம் என்பதான இகபரம் எனப்படும் நிச்ரேயஸம், அப்யுதயம் என்ற இணைந்த இலட்சியங்களை ஹிந்துமதம் நமக்குக் காட்டுகிறது என்று முன்னர் பார்த்தோம் அல்லவா? அந்த இரண்டு இலட்சியங்களும் பூர்த்தியாகிவிடும். யாருக்கு? ஸ்ரீஅருணகிரிநாதரிடம் கேட்போம்:

“முடியாப் பிறவிக் கடலில்
புகார்முழு தும்கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்
படார்வெற்றி வேல்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள்
அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு
நாமம் புகல்பவரே.”

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Friday, March 20, 2020

’நான் ஏன் பிறந்தேன்’

நான் ஏன் பிறந்தேன்? என்ற கேள்வி நம் எல்லோருக்குமே ஒவ்வொரு சமயம் எழக் கூடிய ஒரு கேள்விதான். புதிராக, விரக்தியாக, தோல்வியில் அல்லது மனத் தாழ்மை உணர்ச்சியில் இந்தக் கேள்வி பிறக்காத மனித மனம் இல்லை. இது ஜீவன் தன்னைத் தானே ஓர்மை கொண்டு விமரிசனப் பார்வை பார்ப்பதையும் குறிக்கும். ஒரு விதத்தில் இது நல்ல கேள்வியும் கூட எனலாம். ஏனெனில் சமயத்தில் நம் வாழ்வின் இலட்சியம் யாது என்னும் இலட்சியத் தெளிவையும் இது ஏற்படுத்தக் கூடும்.

ஒற்றை வரியில் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்றால், நாம் ஏன் பிறந்தோம், மனிதரின் வாழ்வு எதற்காக ஏற்படுகிறது என்றால், கடவுளைக் காண்பதுவே மனித வாழ்வின் இலட்சியம். ஒரு வேளை நமக்கு இது சிரிப்பைத் தரலாம். எழுதுபவர் ஏதோ பழங்காலத்திலிருந்து தப்பித் தவறி வந்து விட்டாரா என்றும் தோன்றலாம். ஆனால் இது உண்மையாகும். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. கடவுள் என்றால் என்ன? கடவுளைக் காணல் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் ஏன் அது இயல்பாக தன்னைப் போல் புரிவதில்லை போன்ற பல விஷயங்கள் இதில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவை. இதை நான் ஏதோ மதத்தைச் சார்ந்து சொல்கின்ற பதில் அன்று. மதம் என்பதையே நாம் ஏற்காமல் போனாலும் கூட இந்த விஷயம் உண்மையாக இருக்கும்.

அதாவது கடவுள் என்ற வாழ்வின் இலட்சியம் என்பது என்ன? இதைப் புரிந்துகொள்ள நாம் முதலில் கடவுள் என்ற கருத்தைப் பார்க்காமல் மனித வாழ்க்கையின் இயல்பைப் பார்ப்போம். கடவுள், மதம் என்ற சிந்தனைகளே அற்ற ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவர் பிறந்து, வளர்ந்து, பல அனுபவங்கள் பெற்று வாழ்வின் முதிர்ச்சியில் என்ன உணர்கிறார்? தம்முடைய வாழ்வின் தொடக்கத்தில் தாம் எப்படி இருந்தாரோ அந்த நிலையினின்று நெடுந்தூரம் தாம் மாறி, புரியாத பல விஷயங்கள் புரிந்து ஓரளவு தேற்றம் பெற்ற ஜீவனாய்த்தான் அவர் தம்மை உணரவேண்டும். இன்னும் புரியாத விஷயங்கள் பல இருக்கின்றன என்ற உணர்ச்சியே அவருக்கு ஓர் ஆழமான அமைதியை, பொறுமையைத் தருகின்றது என்று உணரக் கூடும். அது நியாயமே. ஏனெனில் வாழ்வு, உலகம் என்பதன் அமைப்பே பார்த்தால் புரியாமல் இருந்தவை புரிய வருகின்றன என்றபடிதான் அனுபவம் அமைகிறது. இதை பக்தர் உணர்ந்து வியக்கும் போது இவ்விதம் கூறுகிறார்: ‘அறியாதன அறிவித்த அத்தா’.

ஏன் அவ்வளவு அனுபவங்கள் அடைந்துதான் அந்தப் புரிதல், தேற்ற உணர்வு ஏற்பட வேண்டுமா? கஷ்டப் படாமலேயே ஏன் படிப்பினைகளை நாம் கற்க இயலாதா? என்று ஒருவித ஈஸிசேர் மனப்பான்மையில் நாம் விழையக் கூடும். ஆனாலும் வாழ்வின் தன்மையோ ஒரே படித்தாகத்தான் இருக்கிறது. நாம் எதை அனுபவிக்கிறோமோ அதைத்தான் நம்மால் திடமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அல்லது நம் மனம் நன்கு பக்குவம் அடைந்தால் பிறருடைய அனுபவங்கள் பற்றிய மொழிவைக் கொண்டு ஒத்து உணர்ந்து நாம் நம் அனுபவத்தைச் சிக்கனமாக ஆக்கிக் கொள்ளவும், படிப்பினைக்கான கால அவகாசத்தை ஓரளவு சுருக்கி அடுத்தகட்ட படிப்பினைகளை நோக்கி முன்னேற முடிகிறது. இந்த அறியாமையிலிருந்து அறிந்துகொள்வதற்குப் போகும் பயணமே கடவுளை நோக்கிய பயணம்தான். எனவே கடவுள் என்பவரை நாம் ஏதோ எங்கோ இருக்கின்ற பெரிய ஆள் என்று தொடக்க நிலைச் சித்திரங்களோடு நிற்காமல் சிறிது ஆழ்ந்து போனோம் என்றால் அறிவின் முதிர்ச்சியும் அறிவின் முழுமையுமே கடவுள் என்ற பெயரால் குறிக்கப் படுவது.

இதை வேறு விதத்தில் சொன்னால் ஆரம்ப நிலையில் அனுபவத்தைப் பொறுத்த மட்டில் இருட்டில் இருக்கும் ஜீவன் தன் வாழ்வின் முதிர்ச்சியில் இன்னும் அதிக ஒளியான நிலைக்குப் போயிருக்கிறது எனலாம். அறிவையும், ஒளியையும் பொறுத்தே அனுபவம், வாழ்க்கை என்பதன் குறுக்கம், பெருக்கம் என்பது அமைந்திருப்பதனால், வாழ்வின் நீட்சி என்பது கூடுதல் அறிவு, கூடுதல் விளக்கம் என்று பொருள்படுகிறது. எனவேதான் நான் ஏன் பிறந்தேன் என்பதன் பதிலாக அமைவது கூடுதல் அறிவிற்காகவும், கூடுதல் ஒளிவிளக்கத்திற்காகவும், கூடுதல் வாழ்வின் நீட்சிக்காகவும் என்பதுவே பதிலாக ஆகும். இந்த மூன்று வித தன்மைகளையும் ஒரு பெரும் நிலையாக நாம் புரிந்துகொண்டால் அதுவே கடவுள் என்பதாகும். கடவுள் என்பது பூரண ஞானம், பூரண ஜோதி, பூரணமான வாழ்வு ஆகும். நாம் கடவுளைக் காணவே பிறக்கிறோம் என்று சொல்லும் போது காண்பது என்றால் இந்த உயிரின் பயணத்தைக் குறிப்பதாகும். அறிவை நோக்கி; ஒளியை நோக்கி; நித்யமான வாழ்வை நோக்கி. இதையே உபநிஷதங்கள் சாந்தி மந்திரமாக நமக்குக் கற்பிக்கின்றன.

அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

இந்த மூன்றும் நிறைந்த நிலையான கடவுளுக்கு உரிய வடிவமும், பெயரும் ஆக இருப்பது பிரணவம் ஆகும். எனவே பிரணவத்தைச் சொல்லி அந்தக் கடவுளின் அருள் நம் வாக்கிலும், செயலிலும், உள்ளத்திலும் பூரண சாந்தியை விளைவிக்கட்டும் என்பதையே பிரார்த்தனையாகப் பல்லாயிரக் கணக்கான வருஷங்களாக ஹிந்துமதம் நமக்கு வைத்திருக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பதினைந்து உபநிஷதங்களின் தமிழாக்கம்

வில்லவரம்பல் குப்புசாமி ஐயர் நமக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்தான். ஸ்ரீபகவத் கீதையின் மூன்று சித்தாந்த பாஷ்ய அர்த்தங்களுடனும் தமிழில் கொண்டு வந்தவர் என்று பார்த்தோம். அவரே 1888 ல் ஒரு பதினைந்து உபநிஷதங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருள் எழுதி தமிழில் கொண்டு வந்திருக்கிறார். என்ன பதினைந்து உபநிஷதங்கள்?

கைவல்லியம், அம்ருதபிந்து, நாரயண, மைத்திராயணி, மைத்திரேய, ஸர்வசார, நிராலம்ப, ஆத்மபோத, நாரதபரிவ்ராஜக, ஸ்கந்த, பைங்கள, சாரீரக, வராக, கலிசந்தாரண, முக்திக - என்பவை அந்த உபநிஷதங்கள். இவற்றை மொழிபெயர்ப்பதில் அவர் தமக்கு உதவிய நண்பர்கள் இருவரைச் சுட்டுகின்றார். ஆச்சரிய தர்ப்பணம் என்னும் நூலைச் செய்தவரான பென்ஷன் சிரஸ்தேதார் ப்ரம்மஸ்ரீ பொன்முடி வெங்கட்ரமணய்யர், பென்ஷன் டிப்ட்டி கலெக்டரான வெங்கடேசய்யர் ஆகிய இருவரும் சொன்னதை எழுதினேன் என்கிறார். அப்படியென்றால், என்ன ஆண்டு? 1888. இதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சிகாகோ சர்வமத மஹாசபை நடக்கப் போகிறது. அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் அனைவரும் ஒருமித்து எவ்வளவு ஆழமாகவும், நெடும்பயன் விளையுமாறும் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கிறார்கள் என்பதை உணர வேண்டாமா?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்


***

Thursday, March 19, 2020

நம் முன்னோர்கள் காட்டிய வழி

சங்கராநந்தர் என்று ஒரு மகான். பஞ்சதசி அருளிய வித்யாரண்யரின் குரு. சங்கராநந்தர் அருளியது ஆத்மபுராணம் என்னும் நூல். 13 - 14 நூற். பெரும் யோகி. லம்பிகா யோகம் என்னும் முறையால் நெடுநாள் பூமிக்குள் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புராணங்கள் அனைத்தின் நோக்கமும் ஆத்ம ஞானம் என்னும் போது ஆத்ம புராணம் என்றே ஒரு கிரந்தம் எழுதியது சாலவும் சிறந்தது. நாமெல்லாம் ‘நான் புராணம்’ எழுதுவதில் வல்லவர்கள். எப்பொழுது பார்த்தாலும், எதைத் தொட்டாலும் ‘நான் அப்படி, நான் இப்படி’ என்று ஒரு கணமும் ஓய்வின்றி நாம் பாராயணம் செய்வது ‘நான் புராணமே’ அல்லவா! அதை மாற்றி ஆத்ம புராணம் என்று யோசிக்கக் கற்றால் அடைய வேண்டியது அடையப் பட்டதாகும் என்று நினைத்தாரோ என்னவோ!

இந்த ஆத்ம புராணத்தை ஒருவர் ஹிந்தியில் மொழிபெயர்த்தார் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர். அவர் எங்கு பிறந்தார் எப்பொழுது என்ற விவரங்கள் அகப்படவில்லை. அவர் பெயர் சுவாமி சித்கனானந்த கிரி என்பதாகும். சிந்து தேசத்தில் பிறந்தவர் என்று அத்தேசத்தவர்கள் சொல்லுகின்றனர். இவருடைய ப்ரஹ்மச்சர்ய ஆஸ்ரமத்தின் போது ஹரித்வாரில் இருக்கும் கனகல் என்னும் தீரத்தில் இருந்து நியாய வியாகரணங்கள் வாசித்துப் பின்னர் வேதாந்தம் பயில காசி க்ஷேத்ரம் சென்றடைந்தார் என்று தெரிகிறது. அங்கு ஸ்ரீபரமஹம்ஸ பரிவ்ராஜகாசாரியரான சுவாமி உத்தவாநந்த கிரி என்பவரிடம் சந்நியாச தீக்ஷை பெற்றார். பிறகு சில காலம் மனம் முற்றிலும் ஒடுங்கி நிர்விகற்ப சமாதியில் ஆழ்ந்திருந்தார். பின்னர் தம் பணி ஏதோ இருப்பது போன்று தெய்வ சங்கல்பத்தினால் தீர்த்த யாத்திரை என்று புறப்பட்டுப் பல கோவில்களைத் தரிசித்து, கத்தியவாட்டில் இருக்கும் பவநகர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு திவான்களாக இருந்த ஸ்ரீகௌரிசங்கர், விஜயசங்கர் என்னும் அதிபக்குவிகளான சாதகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அங்கேயே பதின்மூன்று ஆண்டுகாலம் இருந்து பல நூல்களை அருளினார். திவான்கள் வேண்டிக் கொண்டதற்கேற்ப ஹிந்தி பாஷையில் நான்கு முக்கியமான பெட்டகம் அனைய நூல்களைத் தந்தார். சங்கராநந்தரின் ஆத்ம புராணம், ஸ்ரீபகவத் கீதைக்குக் கூடார்த்த தீபிகை, ப்ரஹ்மஸூத்ரங்களின் அர்த்தங்கள் நிரம்பியதான தத்வாநுஸந்தானம், பல நியாய நூல்களின் கருத்துகளை ஒருங்குறத் தொகுத்துத் தந்ததான நியாயப் பிரகாசம் என்பவையே அந்நான்கு. கணாத தர்க்கம், கௌதம தர்க்கம் இரண்டையும் பயன்பாடு கருதி விளக்கம் சுருக்கமாகக் கூறிய நூல் நியாயப் பிரகாசம். நியாயம், வைசேஷிகம் என்னும் இரண்டு தர்சனங்களின் சாரம் எனலாம்.

இந்த நான்கு நூல்களையுமே தமிழில் கொண்டு வந்துள்ளனர் என்றால் மிகவும் அதிர்ச்சி அடையமாட்டீர்களே ! ஆம். ஆத்ம புராணம் கோவிலூர் மடாலயத்து ஸ்ரீவீரசுப்பைய சுவாமிகளால் நல்ல தமிழ் நடையில் ஆக்கப்பட்டிருக்கிறது. சுவாமி சித்கனானந்த கிரி அவர்கள் அருளிய ஸ்ரீபகவத் கீதையின் கூடார்த்த தீபிகை என்னும் நூலையும் ஸ்ரீவீர சுப்பைய சுவாமிகளே தமிழில் கொண்டு வந்துள்ளார். ப்ரஹ்மஸூத்ர அர்த்தங்களை ஒருங்குறத் தெளிவிக்கும் நூலான தத்வாநுஸந்தானம் என்னும் நூலை ஸ்ரீ கா அரங்கநாதம் பிள்ளை என்பவர் மொழிபெயர்த்துள்ளார். நியாயப் பிரகாசம் என்னும் பென்னம் பெரிய நூலினை ஸ்ரீசாது இரத்தின வேதாந்த விசாரணை சபையினருள் ஒருவராகிய ஸ்ரீநாகரத்தின நாயகர் மொழிபெயர்த்துள்ளார். அதனை வேதாந்த விசாரணைச் சபையில் ஒருவரும், தர்க்க வேதாந்த சாஸ்திரங்களில் வல்லுநரும் ஆகிய ஸ்ரீமுருகேச முதலியார் அவர்கள் நன்கு பரிசோதித்து வெளியிட்டுள்ளார். 1907 தொடங்கி இந்நான்கு நூல்களும் 1917க்குள் வந்து நிறைவேறியிருக்கின்றன. மொத்தம் 3500 சொச்சம் பக்கங்கள், மூன்று ஆயிரத்து ஐந்து நூறு, நுணுகிய பிரிண்டு. என்ன சாதனை இது! இதை உணரும்போது உங்களுக்கு மயிர்க்கூச்செறியவில்லையா? இதுவோ நடந்த சாதனைகளில் ஒரு பத்து சதவிகிதம் அவ்வளவே.

நம் முன்னோர்கள் அவர்கள் ஸ்ரீவீரசுப்பைய சுவாமிகளோ, ஸ்ரீகரபாத்திர சுவாமிகளோ, ஸ்ரீவடிவேலு செட்டியாரோ, ஸ்ரீமுருகேச முதலியாரோ, ஸ்ரீநாகரத்தின நாயகரோ, ஸ்ரீராமசந்திர ஐயரோ, ஸ்ரீசிவசுப்ரமண்ய ஐயரோ, ஸ்ரீராமசாமிப் பிள்ளையோ இன்னும் கணக்கில் அடங்காத பெரியோர்கள் அவர்கள் காலத்தில் ஹிந்து சமுதாயம் எப்படி ஒருங்குற இயங்கி அளப்பரிய சாதனைகள் இயற்ற இயலும், ஆன்மிகச் செல்வம் எப்படிப் பாதுகாப்பது என்பதை நமக்கு ஒளிமிகுந்த வழிகாட்டிகளாக நின்று செய்து காட்டவில்லையா? அவர்களின் வழித்தோன்றல்கள் அன்றோ நாம்! வீண்கதை பேசி, வெற்று பிணக்கங்கள் கொண்டு, செய்ய வேண்டிய அருஞ்செயல்கள் அத்யாவசியப் பணிகள் எவ்வளவோ எஞ்சி இருக்க, வீணே இயலாமை பேசி இருப்போமா? ஒருகாலும் மாட்டோம். என்ன சுமார் ஒரு அரைநூற்றாண்டாக ஒரு நெடிய மறதி. ஒரு ஜெனெரேஷன் கேப் அவ்வளவே. விட்டுப் போனதைத் தொடரவும், முன்னிலும் பெரிய சாதனைகள் செய்யவும், பழங்காலத்தில் ஆக்கபூர்வமான அம்சங்களைக் கொண்டு, வேண்டாதனவற்றைக் கைவிட்டு முன்னேற, இத்தகைய ஒளிமிகுந்த முன்னோர்களின் உதாரணங்கள் நம்மைத் தூண்ட ஓய்வோமோ! அன்றைவிட இன்று ஹிந்து சமுதாயத்தில் படித்த பெருமக்கள் எவ்வளவு பெருக்கம்! அத்தனை பேரும் ஒரு மனத்தராய் நம் முன்னோர்களின் சீரிய நற்பணியைத் தொடர்வோமே.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

உபநிஷதம் கூறும் ப்ராஹ்மணத்துவம்

உபநிஷதங்களில் அரிய ஓர் கருத்து. யார் கிருபணன்? ஒருவர் தன்னிடம் செல்வம், திறமை, பெரும்பேறு இவை இருந்தும் அவற்றைத் தாமும் அனுபவிக்காமல் பிறருக்கும் பயனின்றி யார் மரணித்து விடுகிறாரோ அவரைக் கிருபணன் என்று சுட்டுகிறது. சென்று மறைவது செல்வமன்று; அரைநொடியில் மறைவது ஆற்றலன்று; நில்லா சுகங்கள் எவையும் நிலைப்பேறன்று. பின்னர் எது உண்மையான செல்வம்? உண்மையான ஆற்றல்? உண்மையான பெரும்பேறு? ஆத்ம ஞானம் ஒன்றே நிலையானதும், உண்மையானதுமான செல்வம், ஆற்றல், பெரும்பேறு ஆகும். அந்த ஆத்ம ஞானத்தை யார் இந்தப் பிறவியிலேயே அடையாமல் இறப்பைத் தழுவுகிறாரோ அவர் என்ன சிறப்பு இருந்தாலும் சரியே அவரே உண்மையில் கிருபணன் ஆகிறார். சரி. அப்படியென்றால் இந்த வாழ்க்கையிலேயே பெற வேண்டிய பெரும்பேறான ஆத்மஞானத்தைப் பெற்றுவிட்டவரை யார் என்று அழைப்பது? அதாவது கிருபணன் என்பதற்கு நேர் எதிர்ப்பதமாக என்னவென்று அவரைச் சொல்வது? ஆத்மஞானம் பெற்ற ஒருவரே அவர் எவரேனும் பிராஹ்மணர் ஆகிறார். இங்கு கிருபணன் என்பதற்கு நேர் எதிர்ச்சொல்லாக பிராஹ்மணன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது உபநிஷதம்.

’யோ வா ஏதத் அக்ஷரம் கார்க்கி அவித்வாஸ்மாத் லோகாத் ப்ரைதி ஸ க்ருபண:’

’அத ஏதத் அக்ஷரம் கார்க்கி விதித்வாஸ்மாத் லோகாத் ப்ரைதி ஸ ப்ராஹ்மண:’

உபநிஷதங்கள் வர்ணக் குறிப்பாக இல்லாமல் ஆன்மிக ஞானமுடைமை என்பதைக் குறிப்பதற்காக இவ்விதம் பயன்படுத்தியிருப்பதை நாம் கவனம் கொள்ள வேண்டும். ஆத்ம ஞானம் பெறாமை கிருபணம். ஆத்மா ஞானம் உடைமை பிராஹ்மணம் என்னும் பொருளில் உபநிஷதத்திலேயே ஆளப்பட்டிருக்கிறது. இங்கு ப்ரஹ்ம என்னும் சொல்லில் வரும் ப்ரஹ் என்பது பெருக்கம், விரிவு, பொலிவு, வளமை என்னும் பொருளில் இவ்வாறு சொல் ஆளப்பட்டிருப்பது சிறப்பாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

குடும்பம் என்பதின் முக்கியத்துவம்

மனித சரித்திரத்தை ஊன்றிக் கவனித்தால் நமக்கு ஒன்று புரியவரும். என்னவெனில் நாகரிகம், வளர்ச்சி, பாதுகாப்பு, கல்வி, தொடர்ச்சியான அனுபவ அறிவின் படிநிலை வளர்ச்சி என்பதெல்லாம் மனித குலத்தில் நிலைபெற்றது என்பது ’குடும்பம்’ என்ற அமைப்பு உருவான பிற்பாடுதான். குடும்பம் என்பது தோன்றுவதற்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாது. ஏனெனில் மனிதர் எவரும் தோற்றத்தின் பொழுது தனிமனிதராய்த் தோன்றுவதில்லை. குடும்பத்தின் அங்கமாகத்தான் எந்தத் தனிமனிதரும் ஏற்படுகின்றனர். மனிதக் குழந்தையின் முழுவளர்ச்சி என்பது பெரிதும் மனத்தின் வளர்ச்சியாக இருப்பதால் மனம் நன்கு வளர்ச்சி அடையும் நிலைவரையில் அதற்குப் பாதுகாப்பான சூழ்நிலை தேவையாகிறது. மனத்தின் வளர்ச்சியே மனித வளர்ச்சி என்பதால்தான் கல்வி, வழிவழி அனுபவம், பாரம்பரியம், உணர்ச்சிகளை நன்கு பயிற்றும் உறவுமுறைப் பரிமாற்றங்கள் ஆகியன எல்லாம் ஒருங்கே நடைபெறும் அமைப்பாக குடும்பம் அமைகிறது.

அம்மா என்பவள் ஆகப்பெரும் முதன்முன்னம் அன்பு என்னும் பயிற்சி அளிக்கும் ஆசிரியை ஆகிறாள். ஆனால் மனித ஜீவனின் முழுவளர்ச்சிக்கு அவள் தொடக்கமே. இன்றியமையாத தொடக்கம். அடுத்த நிலையில் மிக முக்கியமாக வந்து அமைவது அப்பா என்னும் குடும்பத் தலைவரின் பயிற்சி. உலகம் என்ற பச்சை நிஜத்தை அப்படியே மனித மனம் உள்வாங்குவது, எந்தப் பயிற்சியும் இல்லாமல், ஆக்க பூர்வமானதாக இருக்காது. சுயசிந்தனை என்பது நன்கு வடிவாகி இயக்கம் பெறச் சிலகாலம் எடுத்துக் கொள்கிறது. சுய சிந்தனையும் மனித மனத்தின் வளர்ச்சியில் வெற்றிடத்தில் திடுமென உண்டாவதன்று. எனவேதான் தந்தை பார்வைகளைச் செம்மை படுத்துபவராக அமைகிறார். உலக அனுபவங்களைத் திறம்பட எதிர்கொள்ளும் அனுபவப் பாடங்களைக் குழந்தைக்குக் கடத்தும் முக்கியமான பயிற்சி அவரிடமிருந்து கிடைக்கிறது. இத்தகைய முகாந்தரமான பயிற்சிகளை நன்கு செரித்த ஜீவன் சமுதாயம், உலகம் என்ற விரிவில் முன்னோர் அளித்துச் சென்ற கல்விச் செல்வங்களை அடைய குரு என்பவர் மிக அத்யாவசியமாகிறார். ஆசிரியர், பள்ளிக்கூடம், என்னும் அமைப்புகளில் வளரும் ஜீவனுக்கு மனத்தின் நேரடியான பயிற்சி தொடங்குகிறது. ஆயினும் குடும்பம் என்ற பயிற்சியைச் செவ்வனே முடிப்பதற்கேற்ப கல்விச்சாலை என்பது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. குடும்பம் என்பது நல்ல மாணவர் என்னும் வரையில் உருவாக்குகிறது என்றால் கல்விச்சாலை நல்ல மனிதர் என்ற பயிற்சியைக் கொடுக்கிறது. அதை முடித்த பின்னர்தான் தனிஒரு மனிதர் என்பவர் சமுதாயத்தில் தோற்றம் பெறுகிறார். நல்ல தனி மனிதர்கள் என்பதன் அடித்தளமாக இருப்பது குடும்பம். எனவே குடும்பத் தலைவர் என்பவரே ஜீவனுக்கு தொடக்க நிலையில் கல்விச்சாலையாகவும் அமைகிறார். ‘குடும்பம்’ என்னும் உயிர்ச் சமுதாய நிறுவன கேந்திரத்தை அலட்சியப் படுத்தி தனி மனிதர் பற்றிய சித்தாந்தம் எதுவும் எழுவது இயல்பானதாகவோ, நன்மையானதாகவோ இருப்பதில்லை. தைத்திரீய உபநிஷதம் இந்த இன்றியமையாத கேந்திரமான அமைப்பை மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ என்று செறிவுறச் சொல்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Monday, March 16, 2020

சுவாமி விவேகாநந்தர் சிகாகோவில் பேசும் தருணத்தில்

சுவாமி விவேகாநந்தரைப் பற்றி அவர் காலத்தவர்கள் சொன்னவற்றில் சிலர் சொன்னவை மிகவும் யோசிக்கத் தக்கனவாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ஸ்ரீராஜாஜி அவர்கள் சொன்னது:

“..... Looking back into recent history one sees clearly how much we owe to Swami Vivekananda. He opened the eyes of India to her true greatness. He spiritualised politics. We were blind and he made us see. He is the father of Indian freedom, political, cultural and spiritual."

அடுத்து ஸ்ரீஅரவிந்தர் கூறியது :

”The going forth of Vivekananda marked out by the Master (meaning Sri Ramakrishna) as the heroic soul destined to take the world between his two hands and change it, was the first visible sign to the world that India was awake, not only to survive but to conquer.

Swami Vivekananda was a soul of puissance, if ever there was one, a very lion among men. We perceive his influence still working gigantically, we know not well how, we know not well where, in something that is not yet formed, something leonine, grand, intuitive, upheaving, that has entered the soul of India, and we say. Behold! Vivekananda still lives in the soul of his Mother, and in the Soul of her children."

ஆனால் சுவாமி விவேகாநந்தர் சிகாகோவில் பேசிய அந்தத் திரு முகூர்த்தத்தில் அவர் எப்படி இருந்தார்; எப்படி அங்கு இருந்த இந்தியாவை நேசிக்கும் கண்களுக்கு எப்படித் தெரிந்தார் என்பதைப் பற்றிய விவரம் அங்கும் இங்குமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் சுவாமி விவேகாநந்தர் அங்கு அந்தக் கணத்தில் தத்துவம், சமயஞானம் பேசமட்டும் தாம் அனுப்பப்பட்டவராக உணரவில்லை. பாரத ராணியின் தூதுவர் என்பது அவருடைய ப்ரக்ஞையில் மிகவும் விஞ்சி நின்ற ஒன்று. இன்று உள்ளது போல் அன்று பாரதம் என்பதை உலக அளவில் யாரும் சரியாக உணரவில்லை. பாரதம் தன்னைத் தன் சொந்தக் குரலில் வெளிப்படுத்தும் தருணம். அதை ஓரளவிற்கு உள்ளபடிப் பதிவு செய்திருப்பது டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார்:

”A striking figure, clad in yellow and orange, shining like the sun of India in the midst of the heavy atmosphere of Chicago, a lion head, piercing eyes, mobile lips, movements swift and fast—such was my first impression of Swami Vivekananda, as I met him in one of the rooms set apart for the use of the delegates to the Parliament of Religions. Monk, they called him, not unwarrantably, but warrior-monk was he, and the first impression was of the warrior rather than of the monk, for he was off the platform, and his figure was instinct with pride of country, pride of race—the representative of the oldest of living religions, surrounded by various gazers of nearly the youngest. .. India was not to be shamed before the hurrying arrogant West by this her envoy and her son. He brought her message, he spoke in her name, and the herald remembered the dignity of the royal land whence he came. Purposeful, virile, strong, he stood out, a man among men, able to hold his own.

On the platform another side came out. The dignity and the inborn sense of worth and power still were there, but all was subdued to the exquisite beauty of the spiritual message which he had brought, to the sublimity of the matchless truth of the East which is the heart, the life of India, the wondrous teaching of the Self. Enraptured, the huge multitude hung upon his words; not a syllable must be lost, not a cadence missed ! ‘That man a heathen !’ said one, as he came out of the great hall, ‘and we send missionaries^ to his people ! It would be more fitting that they should send missionaries to us.’
(courtesy: https://www.vivekananda.net/ )

ஒவ்வொருவரின் பார்வை ஒவ்வொரு விதம். அவரைச் சந்தித்தவர்கள், அவருடைய எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவர்கள் எனப் பலரும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கருத்தைப் பார்க்கும் பொழுது ஒரு சித்திரம் கிடைக்கும். அது ஒரு அனுபவம். ஆயினும் இவர்களின் கருத்துகள் எங்கோ கிட்டத்தில் நம்மைக் கொண்டு போவது போன்ற ஓர் எண்ணம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்தித்தல்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்க்க முடியுமா? என்ன கேள்வி இது என்கிறீர்களா? ஆம். அவரைப் பார்க்கும் வழி ஏதேனும் இருந்தால் எனக்கும் ஆசைதான். முடியாது என்கிறீர்களா? ஆமாம். முடியாதுதான். ஆனால் ஒரு வழி இருக்கிறது. நீங்களும் கொஞ்சம் ஒத்துழைத்தால் அந்த வழியாகப் போய்ப் பார்க்கலாம். என்ன வழி அது? என்ன வழி? நமக்கு உள்ளது ஒரே வழி. படிப்பு. படிக்க வேண்டியதைக் கொஞ்சம் விழிப்புடன் படித்தால் பார்வை திறக்காமலா போகும்? மர்மம் வேண்டாம் சொல்கிறேன்.

இப்பொழுது ஒருவரைப் பார்த்துவிட்டு ஒருவர் ஏதாவது சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒருவேளை அவர் அவருக்கு வேண்டப்பட்டவராக இருந்தால் ஒரு பக்கமான சித்திரம்தான் கிடைக்கும். ஆனால் எந்த விதத்திலும் பார்த்தவர் பார்க்கப்பட்டவருக்கு வேண்டப் பட்டவரோ சார்பு உள்ளவரோ இல்லை; இன்னும் பார்க்கப் போனால் எதிர்ப்பு, அல்லது அலட்சிய அல்லது சம்பந்தப் படாமல் வெறும் பார்வையாளராகப் பார்க்கும் அயல் மனப்பான்மை கொண்டவராக இருந்தால் நிச்சயம் அவர் சொல்வது யாரைப் பற்றிச் சொல்கிறாரோ அதைக் கவனிக்கலாம் அல்லவா? அதாவது யாரைப் பற்றி அவர் சொல்கிறாரோ அவரைப் பற்றி நிச்சயம் உயர்வாகத்தான் சொல்ல வேண்டும் என்ற மெனக்கெட்ட எண்ணம் சொல்பவருக்கு இருக்க வாய்ப்பில்லை. அதுவும் சொல்பவர் மிகப் பெரிய நிறுவனத் தலைவர்; சொல்லப் படுபவரோ அந்தக் காலத்தில், அந்தச் சூழல்களில் அன்றைய தேதிக்குப் பெரும் மனிதரோ, பிரபலமோ இல்லை; ஆனால் கொஞ்சம் பைத்தியம் பிடித்த ஆள் என்று ஐயோ பாவம் என்று சொல்லப்படும் ஒரு நபர் அவ்வளவே. ஆனால் ஏன் இப்படிப் பட்ட ஒருவரைப் பார்க்க நேர்ந்தது என்றால் தாம் எந்த நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறாரோ அதன் தலைவர், அவர் இந்த மனிதரைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு வருகிறார்; அதனால் அப்படிக் கொஞ்சம் அடிக்கடி வந்து பார்க்கும் பழக்கம். கொஞ்சம் வருஷங்கள் முன்னாடி கூட தேவேந்திரநாத் தாகூர் தமது நிறுவன மீட்டிங் ஒன்றிற்கு இவரைக் கூப்பிட்டுவிட்டுப் பிறகு ஆளைவிட்டு இவர் வரவேண்டாம் என்று தவிர்க்கவில்லையா! ஏனெனில் இவர்பாட்டுக்குப் பலர் முன்னிலையில் இவருக்கு அடிக்கடி நேரும் பித்து நிலையா இல்லை பரவச நிலை என்று சுயநினைவே இல்லாமல், சரியாக உடை உடுத்தாமல், நாகரிகம் அவ்வளவாக இல்லாமல் ஆகிவிட்டது என்றால் வேண்டாம் வேண்டாம் என்று தவிர்க்கவில்லையா? அவரைப் பார்க்க கேசவ சந்திர சேனர் ஆசைப் படுகிறார் அவ்வளவே. நாமும்தான் கூடப் போய்ப் பார்ப்போமே. இதற்கு என்று நாம் தனியாகப் போகப் போகிறோமா? என்றுதான் ப்ரதாப்சந்திர மஜும்தார் வந்து பார்க்கிறார். எப்பொழுது? 1879ல். அப்பொழுது பொரொமொஹொம்ஸொ என்பவருக்கு இப்பொழுது இருக்கும் பிராபல்யம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் மிகச்சிலர் பொரொமொஹொம்ஸொ தேப் என்று சொல்வார்கள். பொதுவாக, சுற்றி உள்ள மக்கள் சோடா சொட்டொர்ஜி என்பார்கள். ஏதோ சிலர் மட்டும் தாகுர் என்றுதான் சொல்வார்கள். பழைய ஹிந்து மதத்தின் சநாதன தர்மத்தின் பக்தர் அவர். படிப்பறிவெல்லாம் கிடையாது. பாவம். பக்தி உணர்ச்சி மயமான அதுவும் அடிக்கடி தன் நினைவு இழந்துவிடுகிற பரவச நிலைக்கு ஆட்படுகிற ஓர் எளிய பக்தர். பிரம்மசமாஜம் என்ற நவயுக சமுதாய சீர்திருத்தமான, அறிவார்ந்த புதிய உதயமான ஆன்மிக மார்க்கம் எங்கே? இவர் எங்கே? -

இப்படிப்பட்ட மனநிலையில் ஒருவர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்க்க வருகிறார், அதுவும் 1879ல், (1893ல்தான் அமெரிக்காவில் சிகாகோ பேரவை நினைவிருக்கட்டும்; 1879ல் நரேனுக்கே 12 வயதுதான்) அப்படி ஒருவர் 1879ல் பார்க்கப் போகிறார் என்றால் நாமும் கூடப் போய் ஒட்டிக்கொண்டால் நேரிலேயே பார்த்துவிட்டு வந்துவிடலாமே? என்ன சொல்கிறீர்கள்? வாங்க வாங்க -

”My mind is still floating in the luminous atmosphere which that wonderful man [Sri Ramakrishna] diffuses around him whenever and wherever he goes. My mind is not yet disenchanted of the mysterious and indefinable pathos which he pours into it whenever he meets me. What is there in common between him and me? I, a Europeanized, civilized, self-centred, semi-sceptical, so-called educated reasoner, and he, a poor, illiterate, unpolished, half-idolatrous, friendless Hindu devotee. Why should I sit long hours to attend to him —I who have listened to Disraeli and Fawcett, Stanley and Max Muller, and a whole host of European scholars and divines? I who am an ardent disciple and follower of Christ, a friend and admirer of liberal-minded Christian missionaries and preachers, a devoted adherent and worker of the rationalistic Brahmo Samaj — why should I be spellbound to hear him?

And it is not I only, but dozens like me who are the same. He has been interviewed and examined by many. Crowds pour in to visit and talk with him. Some of our clever, intellectual fools have found nothing in him. Some of the contemptuous Christian missionaries would call him an imposter or a self-deluded enthusiast. I have weighed their objections well, and what I write now I write deliberately.

The Hindu saint is a man under forty. He is a brahmin by caste; he is well-formed in body naturally, but the dreadful austerities through which his character has developed appear to have disordered his system. Yet, in the midst of this emaciation, his face retains a fullness, a childlike tenderness, a profound, visible humbleness, and unspeakable sweetness of expression, and a smile that I have seen on no other face that I can remember. A Hindu saint is always particular about his externals. He wears the ochre cloth, eats according to strict rules, refuses to associate with men, and is a rigid observer of caste. He is always proud and professes secret wisdom. He is always guruji, a universal counsellor and a dispenser of charms. But this man is singularly devoid of such claims. His dress and diet do not differ from those of other men except in the general negligence he shows towards both, and as to caste, he openly breaks it every day. He most vehemently repudiates the title of guru, or teacher. He shows impatient displeasure at any exceptional honour which people try to pay to him and emphatically disclaims the knowledge of secrets and mysteries. He protests against being lionized and openly shows his strong dislike to be visited and praised by the curious. The society of the worldly-minded and carnally-inclined he carefully shuns. He has nothing extraordinary about him. His religion is his only recommendation. And what is his religion? It is orthodox Hinduism, but Hinduism of a strange type."
(Protap Chandra Majumdar, Theistic Quarterly Review, 1879 in Ramakrishna As We Saw Him, ed Swami Chetanananda, pp 386-387, Advaita Ashrama, 2008)

ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர் யாரேனும் எழுதியிருந்தால் கூட நமக்கு என்ன தோன்றும்? அவருக்கு ஈடுபாடு. அதனால் அவருக்கு அப்படித்தான் கண்ணில் படும். ஆனால் இங்கோ அப்படிச் சொல்ல முடியாது. பார்ப்பவருக்கு ஏதாவது விமரிசனம் செய்ய இடம் இருந்தால் செய்து தள்ளுபடி பண்ணும் மனப்பான்மைதான் இருக்கும். ஆனால் அவருக்கும் காணக் கிடைத்தது என்ன என்பதுதான் நமக்கு டெலஸ்கோப் மாதிரி உதவியாக இருக்கிறது. விளைவு ஸ்ரீராமகிருஷ்ண தரிசனம். இது ஒரு பகுதிதான். இன்னும் பெரிய கட்டுரை. அதை முழுவதையும் நூலில் தந்திருக்கிறார்கள். முழுவதையும் படிக்கும் பொழுது ‘ஏய்... உண்மையிலேயே அப்படித்தான் இருந்திருக்காரூருருரு...’ என்றுதான் கத்தத் தோன்றுகிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஸ்ரீபாகவத ஸாரம் ஸ்ரீஅண்ணா

நிகம கல்பதரோர் கலிதம் பலம்
சுகமுகாத் அம்ருதத்ரவ ஸம்யுதம் |
பிபத பாகவதம் ரஸமாலயம்
முஹுரஹோ ரஸிகா புவிபாவுகா: ||

நிகமம் என்னும் வேதக் கற்பகத் தருவினின்றும்
சுகருடைய வாயினின்றும் நழுவி விழுந்ததாம்
பாகவதம் என்னும் கனி, அமுதமே நிறைந்தது;
ரஸனை மிக்கவர்களே! முடிவின்றித் திளையுங்கள்.

பாகவதத்திலும் தமிழில் பல மொழிபெயர்ப்புகள் வந்ததுண்டு. ஆயினும் இரண்டு வால்யூம்களாக ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஸ்ரீ அண்ணா சுப்ரமண்யம் அவர்கள் ஸாரமாகத் திரட்டி ஏழுநாளில் படிக்கும் நிரலாக அமைத்துத் தந்த அந்த ஸ்ரீபாகவத ஸாரத்தைப் படித்த எவர்தான் பண்டிதர் ஆகாமல் இருப்பார்?

அவரைப் பார்த்துப் பேசவும், அவர் வீட்டிற்குச் சென்று அவரது பூஜையைக் காணவும் கிடைத்தது ஒரு பாக்கியமே. ஸ்ரீராமகிருஷ்ணரின் நேர்சிஷ்யரான தாரக் என்னும் சுவாமி சிவாநந்தரின் சிஷ்யர். அவருடைய பாகவத ஸாரத்தில் கீழ்க்குறிப்புகளே என்ன மதிப்பு! அதனோடு கூட அந்த ஆன்மிகம் துலங்கும் தமிழ்நடை மூலத்தை அப்படியே படித்த கம்பீரத்தையும், அர்த்தத்தின் ஆழத்தையும் ஒருங்கே தரக்கூடியது. பரமரிஷிப்யோ நம:
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ப்ரஸ்தான பேதம் என்னும் நூல்

’இதையும் கொண்டுவந்துட்டாங்கப்பா!’ என்றுதான் ஒரு நூலைப் பார்த்ததும் சொல்ல வேண்டியிருக்கிறது. அது என்ன நூல்? ஸ்ரீமதுஸூதன சரஸ்வதி அவர்கள் பல கிரந்தங்களை இயற்றியருளிய மகான். அவர் சிவமஹிம்நஸ்தோத்ர வியாக்கியானத்தில் ஏழாவது சுலோகத்தில்

த்ரயீ சாங்க்யம் யோக: பசுபதி மதம் வைஷ்ணவமிதி
ப்ரபிந்நே ப்ரஸ்தாநே பரமிதமத: பத்யமிதி ச |
ருசீநாம் வைசித்ர்யாத் ருஜுகுடில நாநாபதஜுஷாம்
ந்ருணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ ||

(’த்ரயீ என்னும் வேதம், சாங்க்யம், யோகம், பசுபதிமதம், வைஷ்ணவ மதம் என்று வழிகள் வெறு வேறாக ப்ரஸ்தானங்களைச் சார்ந்து பின்பற்றப் படுகின்றன. அவரவர்களின் ருசியின் வித்யாசத்தால் வழி சுருக்கமோ, நெடிய வழியோ பின்பற்றப்படும் பலவேறு வழிகளும் கடலைப் பல நதிகளும் பல இடங்களிலிருந்து பலவாறு வந்து கலப்பதைப் போல், உன்னையே அனைத்து வழிகளும் வந்தடைகின்றன.’ - இந்த சுலோகத்தையும் இதன் பொருளையும் சிகாகோ சர்வமத மஹாசபையில் சுவாமி விவேகாநந்தர் எடுத்துச் சொல்லி விளக்கினார் என்பது குறிக்கொள்ளத் தக்கது)

இதில் ‘த்ரயீ’ என்னும் பதத்திற்கே மிகப்பெரிய வியாக்கியானம் இட்டிருக்கிறார். அதாவது த்ரயீ என்றால் வேதம், சாத்திரம் என்ற அர்த்தத்தில், சாத்திர ப்ரஸ்தானங்கள் என்ன என்ன? எது முக்கியமான முதன்மையான ப்ரஸ்தானம், எது துணை விளக்கமான ப்ரஸ்தானம் (ப்ரஸ்தானம் என்றால் ஸிலபஸ், சான்று நூல்களின் தரவரிசை என்று கொள்க), எந்த எந்த சம்ப்ரதாயத்தில் இந்த ப்ரஸ்தானங்களை எப்படி எப்படி முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று நன்கு விளக்கமாக எழுதியிருக்கிறார் இந்த ஒரு சுலோகத்திற்கே, அதுவும் த்ரயீ, ப்ரஸ்தானம் என்னும் சொற்களுக்கு. பிறகு அவரே அந்தப் பகுதியை மட்டும் தனியே நூலாக மாணவர்கள் கற்க சௌகரியமாகவும் தந்திருக்கிறார் ப்ரஸ்தானபேதம் என்று ஒரு நூலாகவே.

இந்த நூலையும் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள் அழகாக 1912லேயே. யார்? கோவிலூர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீசுப்பைய சுவாமிகள். இதை ஹிந்து தியலாஜிகல் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதரான கோ வடிவேலு செட்டியார் அவர்களும், மங்கலம் சண்முக முதலியார் அவர்களும் சென்னை கோமளேசுவரன்பேட்டை சச்சிதாநந்த அச்சியந்திர சாலையில் பதிப்பித்திருக்கிறார்கள். பேரையே பாருங்கள்! ஹிந்து தியலாஜிகல் ! ஹிந்து தியாலஜி என்றே தனியே எழுத வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, அந்தக் காலத்தில் ஹிந்து தியலாஜிகல் ஸ்கூல்.!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

வேதம் தமிழ் செய்த விமலர்கள்

வேதம் தமிழ் செய்த விமலர்கள். வேதங்கள் நான்கு. ரிக், யஜுர், சாமம், அதர்வம். ஒவ்வொன்றிலும் மந்த்ர ஸம்ஹிதை, பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் என்ற உட்பிரிவுகள் உண்டு. எழுதாமறை என்று நெடுங்காலம் வந்து சேர்ந்து மிகப் பண்டைய காலத்து அருள் நூலாகவும், ஆன்மிக இலக்கியமாகவும் மனித குலத்தில் திகழ்வன. இவற்றை ஒன்றோ, இரண்டோ, பகுதியோ, முழுதுமோ தமிழில் தர முயன்றுள்ளார்கள் பல பெரியோர்கள். அவர்களை வேதம் தமிழ் செய்த விமலர்கள் என்று நாம் நன்றி பாராட்ட வேண்டும்.

ஸ்ரீசிவத்யாநாநந்த மஹரிஷி, குன்னூர், ஆநந்தாசிரமம். இவர் ரிக்வேதத்தை முதல் இரண்டு அஷ்டகங்கள், அதாவது மூன்றாவது மண்டலம் ஆறாம் ஸூக்தம் வரை தமிழ்ச் செய்யுளாகவும் ஆக்கி, அந்தச் செய்யுட்களுக்குத் தமிழில் பொருளும் எழுதியுள்ளார். 1918லும் அதைத் தொடர்ந்ந்தும் இரண்டு அஷ்டகங்கள் இரண்டு வால்யூம்களாக வந்துள்ளன. மொத்தம் சுமார் 900 பக்கங்கள்.

திருவொற்றியூரான் அடிமை என்று தம்மை அடையாளப்படுத்தியவரும், ஞானமும், செல்வமும், வேத ஞானத்தைத் தமிழகம் அறிய வேண்டும் என்று ஆராத ஆர்வம் கொண்டவருமான ஸ்ரீ த ப இராமசாமிப் பிள்ளை என்பவரின் விடாமுயற்சியாலும், மிக்க பொருள் உதவியாலும் ஸ்ரீகாசிவாசி சிவாநந்த யதீந்திரர் என்பார் ஸாயண பாஷ்யத்துடன் மொழிபெயர்த்த ஸாம வேதம் 1935ல் வந்தது. பின்னர் கிருஷ்ண யஜுர் வேதம் முழுவதும் ஸாயண பாஷ்யத்துடன் பத்து வால்யூம்களில் 1939ல் வந்தன. சங்கர திக்கு விஜயம், ரிக்வேத பஞ்ச ருத்திரங்கள் போன்ற நூல்களும் அவரால் மொழிபெயர்க்கப் பட்டன.

ஸ்ரீ எம் ஆர் ஜம்புநாதன் அவர்கள் நான்கு வேதங்களின் மந்திர ஸம்ஹிதைப் பகுதியை முழுவதும் மொழிபெயர்த்துள்ளார்.

வேதம் தமிழ் செய்த விமலர்களாம் இவர்களிடத்தில் நம் நன்றிகளும், வணக்கங்களும் என்றும் செலுத்துவோமாக.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஆனரபிள் கொடியாலம் வாசுதேவய்யங்கார்

ஆனரபிள் கொடியாலம் வாஸுதேவய்யங்கார் என்பவரை பண்டிட் பி ஆர் கிருஷ்ணமாசாரியார் என்பவர்,

‘மறையவர்தம் மணிவிளக்கே!
மதிளரங்கப் பெரும்பதியின் வாழ்வே! இந்தத்
தரையவர்தம் தவப்பயனே!
இரவலர்தம் புரவலனாம் தருவே! கல்வித்
துறையவர்தம் புகழ்க்கணியே!
எழில்வாஸுதேவனெனும் துரையே ! சென்னை
இறையவர்தம் சபைவிளங்கும் ஏறே!
என்னுயிர்க்குயிராய் இருந்த நண்பே!’

வாய்நிறையப் பாடுகிறார் என்றால் அந்தக் கொடியாலத்தாரின் வாழ்வு எப்படி இருந்திருக்க வேண்டும்! ஸ்ரீரங்கத்தாரின் பெருமைதான். வேறென்ன! இந்த வாஸுதேவய்யங்கார் 1907ல் பரமபதம் எய்திவிட்டார். அப்பொழுது அவருடைய பெருமைகளையும், நினைவுகளையும் சுமந்த சிறு ஏடாய் ஒரு நூல் 20 பக்கத்திற்கு ஸ்ரீவாணி விலாஸ் பிரஸ் தனது வாணி விலாஸினீ ஸீரீஸ் நம். 16 என்ற வெளியீடாய்க் கொண்டுவந்திருக்கிறது. எவ்வளவு சமுதாயப் பொறுப்புள்ள வேலை! என்றோ வாழ்ந்தவர்களைப் பற்றி மட்டும் பேசாமல் தம் காலத்தில் பலர் உவப்ப வாழ்ந்த பெரியோரைப் பற்றி அந்தச் சமூகம் கொண்டாடுமானால், அதன் தெளிவாக ஊரில் இருக்கும் பிரஸ் ஒரு சிறு நூல் போடுமானால், வாழி வாழி.!

ஸ்ரீவாஸுதேவய்யங்காரின் தந்தை கொடியாலம் ரங்கஸாமி ஐயங்கார் தாது வருஷம் நேர்ந்த பஞ்சத்தில் (அதாவது 1900ஆம் வருஷம் விகாரி, அதற்கு முந்தைய தாது 1878 ஆம் ஆண்டா?) அந்தக் கொடிய பஞ்ச காலத்தில் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் நெல்லை அளித்தும், விலை பெறாமலேயே பலரிடம் நெல்லீந்தும் தம் இதயம் சுரந்து புரந்ததனால் மக்களின் இதயத்தில் நிரந்தரமாகக் குடி புகுந்தார். மக்களுக்கு அன்னம் பாலிப்பதே அவருக்குப் பெரும் நிறைவாக இருந்தது என்கிறார் பண்டிதர். ஸ்ரீரங்கஸாமி ஐயங்காரின் பெரும் ப்ரார்த்தனைகளுக்குப் பிறகு அவருக்கு அக்ஷய வருஷம் பிறந்தவர் ஸ்ரீவாஸுதேவய்யங்கார்.

கல்வி, பாஷைகளில் தேர்ச்சி, பி எ படிப்பு, அதற்குள் தந்தை பரமபதம் எய்தியதால் எஸ்டேட்டுகளைத் தாமே கவனித்துக் கொள்ள நேர்ந்தது. பல நல்ல நூல்களைத் திரட்டிப் படிப்பதில் ஆர்வம். கல்வி பயில்வார்க்கு ஆன உதவிகள், பண்டிதர்களுக்குத் தாராளமாகச் சன்மானம், நல்ல காரியங்களுக்கு முன் நின்று தம்மால் ஆன உதவிகளை நல்குதல் என்று பண்டிதர் கிருஷ்ணமாசாரியார் விவரிக்கும் போது நம் மனம் அந்தக் காலத்திற்கே போய்விடுகிறது. இவருடைய பெரு முயற்சி திருச்சியில் நேஷனல் ஹைஸ்கூல் நல்ல முறையில் விரைவாக உருவாகக் காரணமாக இருந்தது என்கிறார் பண்டிதர். உண்டி கொடுத்தும், உறுபொருள் கொடுத்தும், உயர்வதற்குக் கல்விக்கான உதவிகள் கொடுத்தும் உயர்ந்த குடும்பம் கொடியாலம் வாஸுதேவய்யங்கார் குடும்பம்.

கொடியாலத்தில் வருஷம் தோறும் இவர் நடத்திய உற்சவத்தில் சுற்றுப்புறம் பத்து மயிலுக்கு உட்பட்ட ஊரிலுள்ளார் அனைவரும் வந்து உற்சவம் பத்து நாளும் கொடியாலத்திலேயே தங்கிக் கலந்து கொள்வார்கள். அவர்களை முழுவதும் ஒரு குறை நேராவண்ணம் விருந்துபசாரம் ஸ்ரீவாஸுதேவய்யங்காரால் செய்யப்படும் என்கிறார் பண்டிதர். ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, முனிஸிபாலிடி, தேவஸ்தானம் முதலிய எல்லாவற்றிலும் வாஸுதேவய்யங்காரின் பிரஸன்னம் பல நன்மைகளைச் செய்திருக்கிறது என்பதைப் படிக்கும் பொழுது நம் மனம் நிறைகிறது. காங்கிரஸ் மஹாசபையில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். சென்னைச் சட்ட நிரூபணச் சபைக்குக் குடிகளுக்குப் பிரதிநிதியாக ஒரு மெம்பரை நியமிக்க வேண்டி யாரை நியமிக்கலாம் என்று கவர்னர் யோசித்த பொழுது ஸ்ரீமான் வாஸுதேவய்யங்காரின் பெயரே பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. சென்னைக்குச் சென்று அந்தப் பணியை மேற்கொள்ளக் கிளம்பிய போது எடுத்த படம் மிகவும் மங்கலாக இருந்தாலும் அவருடைய புகழை மிகவும் பிரகாசமாகக் காட்டுகிறது. காரணம் படத்தில் ஒரு தரப்பு மக்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகள், பெரியோர், கற்றோர், எளியோர் என்று ஊர் முழுமையின் பிரதியாகச் சமுதாயமே இருக்கிறது. இவருக்கு அவ்வமயம் வாழ்த்திப் பலரிடமிருந்து வந்த தந்திகள் குவிந்தன. டாஸ்மானியாவிலிருந்து ஸர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரிடமிருந்து வந்த தந்தி விசேஷம். அவர் சென்னையில் முன்னர் கவர்னராக இருந்தவராம். ஒரு சிறு நூலில் ஊரின் இதய ஒலி பதிந்திருக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஒரே பண்பாட்டின் இதய ஒலி

நான் ஏதோ தகவல் தந்தியாக விஷயங்களைப் போடுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் யாராவது படிக்கின்றவர்கள் சிந்திக்க மாட்டார்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். என்னவெனில் எவ்வளவோ மகான்கள், தொடர்ந்து காலம் நெடுகிலும் பார்த்தால் தென் கோடியில் இருக்கிறவர் எங்கோ பஞ்ஜாப், காஷ்மீரம் என்று இருப்பவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார் வேதாந்தத்தில். எங்கோ ரோஹ்டா ஊரில் இருக்கும் நிச்சல்தாஸ் காசியில் வந்து வேதாந்தம் கற்கிறார். அத்தனை வேதாந்த நூல்களையும் கற்ற நிச்சல்தாஸ் எழுதிய விசாரசாகர் என்னும் நூல்தான் ஹிந்தி சமுதாயத்தில் வேதாந்தம் நன்கு பழக அடிப்படையாகிறது. அதைத் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீகுப்புசாமி ராஜு தமிழில் ஆக்குகிறார். தென்னாட்டு ஸ்ரீசேஷ ஐயங்கார் பஞ்ஜாப்பைச் சேர்ந்த மூலராமசாதுவிற்கு வேதாந்தம் கற்பிக்கிறார். கற்பவர்களோ, கற்பிப்பவர்களோ ஓரினம் ஒரு மொழி ஓரிடம் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனாலும் அவர்களை ஆத்மபந்தமாகப் பிணைப்பது எது? நான் ஒவ்வொருவரின் இனத்தைக் குறிப்பிடவில்லை. காரணம் ஆத்மிக வித்யையில், பாரமார்த்திகப் பண்பாட்டில் இனம், மொழி, ஆண் பெண் ஆகிய வேறுபாடுகளுக்கு மதிப்பு இல்லை. ஆத்மாவின் மொழி ஒன்றுதான். ஆத்மிகக் குலமும் ஒன்றே என்பதைத்தான் இந்த மகனீயர்கள் காட்டுகிறார்கள் தம் வாழ்வினால். காஷ்மீரத்திற்குச் சென்று சுவடி தேடுகிறார் ஸ்ரீராமாநுஜர். அவருக்கு முன்னால் ஸ்ரீஆதிசங்கரர் தமது சங்கர பாஷ்யத்தில் மேற்கோள் காட்டுவதோ சௌந்தரபாண்டியனின் சுலோகங்களை. அதற்கும் முன்பு பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சியின் வரிகளில் வேதாந்தம் பேசப் படுகிறது என்கிறார் நச்சினார்க்கினியர். எழுநூறு வருஷங்களுக்கு முன்னர் (அறுநூறா, ஐந்நூறா) தத்வராயர் ஸ்வரூபாநந்தர் 146 வேதாந்தத் தமிழ் நூல்களிலிருந்து செய்யுட்களைத் தொகுத்துப் பெருந்திரட்டு செய்கிறார். 15 நூற் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் ராதா பக்தியில் முக்கியமான வடிவத்தை ஸ்ரீரங்கத்தில் வந்திருந்தபொழுது கிடைத்த பார்வைகளால் (திருவாய்மொழியின் மூலம்) திரும்பியபின்னர் ரூபகோஸ்வாமியைக் கூப்பிட்டுப் பகிர்ந்து கொள்கிறார். மல்லன் மகாபக்தன் ஆகிறார். கண் ஒன்று கண்டேன் என்று பாடியவர் கண் என்ன கண்ணே என்று ஆகிவிடுகிறார். தெருவில் நடந்து போகும் ஈசூர் சச்சிதாநந்தம் பிள்ளையைப் பார்ப்பவர்கள் ப்ரஹ்மம் நடந்து போகிறது ப்ரஹ்மம் வருகிறது என்று நகையாடும் அளவிற்கு அத்வைத ப்ரஹ்ம சிந்தனையில் தோய்ந்தவராக இருக்கிறார். சாது நித்தியானந்தம்மாள் 20 வயதிற்கு மேல் எழுதப் படிக்கக் கற்று வேதாந்தம் பயின்று இரண்டு அரிய நூல்கள் ஆக்கித் தந்துவிடுகிறார். கரபாத்திர சுவாமிகள் சகஜாநந்தரை உருவாக்குகிறார். நாத்திகரான சிங்காரவேலு முதலியார் விவேகாநந்தரின் ஸ்பரிசத்தால் வாழ்க்கையில் யோகத்தில் ஆழ்ந்துவிடுகிறார். யோகி பார்த்தசாரதி ஐயங்காரின் மருமானான ஸ்ரீஅளசிங்கமய்யங்கார் விவேகாநந்தரே சரணம் என்று ஆகிறார். ‘எங்களுக்கு வழிநடத்த யாருமில்லையே’ என்று அங்கலாய்த்த பாரதியிடம் சகோதரி நிவேதிதா கூறியதோ ‘ஏனில்லை? ஸ்ரீஅளசிங்கம் இருக்கிறாரே!’ தாம் யாருக்கும் தீக்ஷையே தரமாட்டேன் என்று அடமாக நிற்கும் சுவாமி பிரம்மாநந்தர், பேலூர் மடத்தில், நாடகக் கொட்டகையில் ஸ்ரீராமாநுஜர் தாம் நரகம் போனாலும் பரவாயில்லை என்று கோபுரத்தின் மீது ஏறி நின்று அனைத்து மக்களுக்கும் அரிய மந்திரத்தை விளக்கியதைக் காட்சியாகக் கண்டவுடன் மறுநாளே தாமும் பக்தர்களுக்கு தீக்ஷை தரத் தொடங்குகிறார். பத்ரிநாத், கேதார்நாத்தில் போய்நின்று தென்கோடியைச் சேர்ந்த பாமரன் பரவசமாகி நிற்கிறான். ஹிமாசலத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்ரீரங்கம், மதுரை என்று வந்து கண்ணீரும் கம்பலையுமாய் குமரியில் போய் அன்னையின் திருமுன்னர் சரணடைகிறார். பல மொழிகள் பேசினாலும், பல ஊர்களில் வதிந்தாலும் பண்பாடு ஒரே இதயத்துடன் ஒலிக்கிறது ஓம் ஓம் என. ஓம் என்பதுதானே வடிவிலும், பொருளிலும் நம் பாரதத் திருநாடு.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

மூலராம் சாதுவும் வேதாந்த சம்ஞாவும்

சிந்து தேசத்தில் ஸ்ரீநாநக் சம்ப்ரதாயத்தில் சுகாநந்தர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு 1806ல் ஓர் ஆண்மகவு பிறந்தது. அதற்கு மூலராம சாது என்று பெயர் வைத்தனர். மூலராமசாது தமது 14ஆம் அகவையில் ஆன்ம விழிப்புற்றவராய்ச் சத்சங்கம், சாத்திரக் கல்வி, விசாரம் என்று தம் ஆன்மிகப் பயணத்தினைத் தொடர்ந்தார். ஹிந்தி, பார்ஸி முதலிய மொழிகளில் நல்ல பாண்டித்யம் அடைந்தார். ஸ்ரீகிருஷ்ண தாசர் என்பவரிடம் சம்ஸ்க்ருதம் முதல்நிலைகளைக் கற்றார். அப்பொழுது அங்கு தெய்வாதீனமாகத் தென்னாட்டிலிருந்து ஸ்ரீராமாநுஜ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஸ்ரீசேஷ ஐயங்கார் என்னும் அற்புதமான வித்வான் மூலராமசாது இருந்த ஊரில் வந்து வதிந்தார். அவரிடம் மூலராமசாது சாரீரக பாஷ்யம், நியாயம் போன்ற துறைகளில் நன்கு பயின்றார். தீவிர விசாரம், ஆன்ம சாதனம், சத்சங்கம், ஞானிகளை அண்டித் தொண்டு புரிதல் என மூலராமசாது நன்கு பரிபாகம் மிக்க ஆத்ம குணங்கள் நிறைந்த ஞானியாக வளர்ந்தார். அவருடைய பொலிவைக் கண்டவர்கள் அவருக்கு மூலசந்த்ர ஞானி என்று பெயரழைத்தனர். தாம் கற்றுத்தரும் கல்விக்கு யாரிடமும் ஒரு காசு பெறுவதில்லை. தமது தந்தையார் வைத்துப் போன செல்வத்திலேயே வரும் மாணாக்கருக்கான உணவு முதலிய செலவுகளைத் தாமே ஈந்து வித்யையைப் பரப்பினார். ஹிந்தி பாஷையில் பல வேதாந்த நூல்களையும், உரைகளையும் இயற்றினார். அவருடைய ஹிந்தி பஞ்சாப் பகுதியில் வழங்கும் ஹிந்தியாய் இருந்தது.

சம்ஸ்க்ருதத்தில் இன்னார் ஆசிரியர் என்று அறியப்படாத ஒரு நூல் வேதாந்த சம்ஞா என்னும் ஒரு நூல். அஃது வேதாந்தத்தில் எண்கள் வாரியாக வேதாந்த தத்துவங்கள் இன்னவை இவ்வளவு என்று தரப்பட்டிருக்கும் பட்டியல் போன்றது. அதாவது 2 என்று எடுத்துக் கொண்டால் இம்மை, மறுமை என இரண்டு. இப்படி என்ன என்ன இரண்டுபட உண்டோ தத்துவங்கள் அதையெல்லாம் வரிசையிட்டிருக்கும். நான்கு என்றால் வேதங்கள், புருஷார்த்தங்கள் என்று போகும். மூன்று என்றால் ஏடணை மூன்று, குணங்கள் மூன்று என்று காட்டும். இந்த நூலுக்கு ஹிந்தியில் வேதாந்த பதார்த்த மஞ்ஜூஷா என்று விளக்க நூலை எழுதினார். மூலசந்த்ர ஞானி ப்ரஹ்மத்தோடு கலந்தது 1876ல் ஆகும்.

1916ல் கோவிலூர் மடத்தைச் சார்ந்த திருக்களர் ஸ்ரீவீரசேகர ஞாநதேசிக சுவாமிகளின் மாணாக்கரான ஸ்ரீகாசிகாநந்த ஞானாசார்ய சுவாமிகள் அவர்கள் சம்ஸ்க்ருத நூலான வேதாந்த சம்ஞா என்பதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்தார். சென்னை கோமளேசுவரன்பேட்டை சச்சிதாநதம் பிரசில் பதிப்பிக்கப்ப்பட்டது. ஸ்ரீகாசிகாநந்த சுவாமிகள் அவர்களே 1935ல் சம்ஞாவுக்கு ஹிந்தியில் மூலசந்த்ர ஞானியால் எழுதப்பட்ட விளக்கமான வேதாந்த பதார்த்த மஞ்ஜூஷா என்பதையும் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்து விட்டார். சம்ஸ்க்ருத மூல நூல், அதற்கான ஹிந்தி விளக்க உரை இரண்டையும் தமிழில் கொண்டு வந்த மகனீயர் ஸ்ரீகாசிகாநந்த ஞானாசார்ய சுவாமிகள் ஆவர்.
பரம்குருப்யோ நம: பரமரிஷிப்யோ நம:
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

புஷ்பங்களின் தத்துவம்

என்ன என்ன நூல்கள்! எந்தப் பொருள் பற்றி! எந்தப் பூக்களை எந்தக் காலத்தில் பறிக்க வேண்டும்; எந்தத் தெய்வத்திற்கு எந்தப் பூ உகந்தது - இப்படி ஒரு புத்தகம் புட்பவிதி. நூல் செய்தவர் திருவாரூர் ஞானப்ரகாச பட்டாரகர். நூல் வந்த ஆண்டு 1906. இன்னும் ஒரு நூல் புட்பபலன். எந்தப் பூவை எந்தத் தெய்வத்திற்குப் பூசித்தால் என்ன பலன். உள்ளே போனால் பூக்களுக்கும், மனத்தின் பாவங்களுக்கும், தெய்வத்தின்பால் பக்திக்கும் உள்ள பரஸ்பரம் வியப்பாக இருக்கிறது. (ஸ்ரீஅன்னை அவர்கள் மலர்களைப் பற்றிய ஆன்மிகத் தன்மைகளை விளக்கி ஒரு நூல் உண்டு ஸ்ரீஅரவிந்த ஆஸ்ரமத்தில்.)

பூக்களில் பொதுவான வகைகள் என்ன என்று புட்பவிதியும் புட்பபலனும் என்னும் நூல் கூறுகிறது 1906ல்.

’கோட்டுப் பூக் கொடிப்பூ நீர்ப்பூ குலவிய நிலப்பூ நான்காம்
கோட்டுப் பூவதனில் கொன்றை
கொடிப்பூவில் தாளியாகும்
நீட்டுநீர்ப் பூவில் நீலோற்பலமாகும்
நிலப்பூதன்னில்
நாட்டிய தும்பைதானே நவிலதில் அதிகமாகும். ‘

பூக்கள் நான்கு வகை. கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஔவைக்குறள் பற்றி

ஔவையின் குறள் மிகுந்த யோக ரகசியம் செறிந்தது. பல யோக நூல்களில் வரும் கருத்துக்களைக் கூடத் தம் குறள்களில் ஔவையார் குறிப்புணர்த்தி விளக்கியிருக்கிறார். ‘தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்’ என்பது திருமூலர் வாக்கு. இதை தியானிக்கும்போது ஔவையின் குறள்கள் நன்கு விளக்கமாக அர்த்தப்படுகின்றன.

‘எண்ணற் கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.

ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு.

இந்த இடத்தில் அருந்தவத்தால் உணர்வு நண்ணப்படும் என்ற ஔவையார் அந்தத் தவம் என்பது ஞானத்தால் ஆய உடம்பாக இருப்பது என்கிறார். நாம் இன்னும் புரியாமல் விழித்தால் அடுத்து ஒரு குறளில் நம் அல்லல் அகற்றித் தெளிவிக்கிறார்.

’ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்.’

ஞானத்தால் ஆய உடம்பு என்பதில் அந்த அறிவின் இயல்பு எத்தகையது? ஆதியோடொன்றும் அறிவு. ஜகத்காரணவஸ்துவும், பரவஸ்துமான பகவானுடன் ஒன்றுதலான அறிவே உணர்வை எழுப்பும். அத்தகைய அறிவைப் பெறுவது ஒன்றே தவம் என்று அறியப்படும். உணர்வு வாய்க்கப்பெறின் அடுத்து என்ன நிகழும்?

‘உள்ளமே பீட முணர்வே சிவலிங்கந்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு.’

அர்ச்சனை என்ற பக்தியோகம் உணர்வு என்ற சிவலிங்கத்தை நாம் பெற்றபின்னரே தொடங்குகிறது. உணர்வைப் பெற ஆய தவம் ஆவது ஆதியோடொன்றும் அறிவைப் பெறுவது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பகவான் தத்தாத்ரேயர்

பகவான் தத்தாத்ரேயர் என்னும் அவதார புருஷரைப் பற்றிப் புராணங்கள் நெடுகிலும் புகழ்கள் காணப்படுகின்றன. அவருடைய வைபவத்தைக் குறித்த தொகுப்புகளும் வந்துள்ளன. தளாதன மகரிஷி என்பவர் செய்த ஸ்தோத்திரம் தத்தலஹரி என்பதாகும். 102 ச்லோகங்களால் துதிக்கும் ஓர் அரிய நூல் இது. ப்ரஹ்மஸ்ரீ ஆங்கரை ரங்கஸ்வாமி சாஸ்திரிகள் என்பார் இதனைத் தமிழ்ப் பதவுரை, விளக்கத்துடன் பதிப்பித்துள்ளார். நூல் வந்த ஆண்டு 1950.

மஹாயோகாதீசை: அவிதித மஹாயோகசதுரம்
கதம் ஜாநந்தி த்வாம் குடில மதயோ மாத்ருச ஜநா: |
ததாபி த்வாம் ஜாநே தவ பத யுகாம்போஜ பஜநாந்ந
சேத்த்வத் பாதாப்ஜ ஸ்ம்ருதிவிஷயவாணீ கதமபூத் ||

‘மஹாயோகீஸ்வரர்களுக்கு அறியவொண்ணா மஹாயோகத்தில் வல்லவர் நீர்; என் போன்ற குடில மதி உள்ளவர்கள் யாங்ஙனம் தங்கள் பெருமையை அறிய முடியும்? ஆயினும் தங்கள் சரணகமலங்களில் தோய்ந்து தொழுவதை அறிந்திருக்கிறோம் அன்றோ! பின் எப்படித்தான் தங்கள் இணையடி மலர்களைப் பற்றிய நினைவால் ஆன வாக்கு எங்களிடம் ஏற்பட்டிருக்கும்!’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

விநாயகர் கலிவெண்பாவும் திரு தி குப்புசாமி ஐயரும்

ராஜமன்னார்குடியில் 1912ல் நேஷனல் ஹைஸ்கூலில் தமிழ்ப்பண்டிதராய் இருந்திருக்கிறார் திரு தி குப்புசாமி ஐயர் அவர்கள். அவர் தேன்பாகாய்ச் சில செய்யுட்கள் இயற்றியுள்ளார். விநாயகர் கலிவெண்பா, விநாயகர் இரட்டைமணி மாலை, ஸ்ரீவாதவூரடிகள் இரட்டைமணி மாலை என்பன. மூன்றும் சேர்த்தாலும் நூல் மொத்தம் 16 பக்கங்கள்தாம் வருகின்றன. விநாயகர் அகவலோடு இந்த விநாயகர் கலிவெண்பாவும் சேர்ந்து, நமது பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலையும் சேர்ந்தால் சதுர்த்தி ஸ்பெஷலாக இருக்கும்.

“திங்களணி செஞ்சடையாய் தெய்வத் திருநீற்றாய்
கொங்கவிழும் கொன்றையணி குஞ்சரமே - யங்கொருநாள்

பூதரந் தன்னில் புனிதமாம் பாரதத்தை
யாதரங் கொண்டெழுது மற்புதத்தோய் - காதலித்த

வன்பாளர் வேண்ட வவர்முன்னர்ப் போந்தருளி
யின்பார் வரமளிக்கு மேந்தலே - வன்பார்

மலமாயை கன்மமெனு மாமலத்தைப் போக்கிக்
குலமான ஞானங் கொடுப்போய் - நிலையான

வேதப் பொருளாயவ் வேதமுங் காணரிய
போதப் பொருளாய புத்தேளே...”

என்று போகிறது கலிவெண்பா.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

கீதையைக் கற்க

கீதையின் விஷயம் தனி. பல அளவுகளிலும், சுருக்கம், விரிவு, கையடக்கம் என்று பல மகனீயர்களும் தொடர்ந்து கீதைக்கு விளக்கம் கொடுத்து வந்திருக்கிறார்கள். சிறப்பு. ஒன்று மிகச் சிறந்த துதி நூலாகவும் இருக்கும்; அதே நேரத்தில் பக்தி என்னும் மார்கத்தைப் போதிப்பதோடு நிற்காமல் பக்தியைத் தன்னைப் பாராயணம் செய்யும் பொழுதே அனுகாரம் (பா4வித்தல்) செய்யத்தக்கதாகவும் அமைந்திருக்கும்; ஒரே சமயத்தில் ஹிந்து தியாலஜியின் சாரம் அனைத்தும் தன்னகத்தே கொண்டு விளங்கும்; அதே பொழுதில் சாத்திரங்களின் பெரும் விவாதங்களிலெல்லாம் அதன் ஐயப்பாட்டைக் களையும் உன்னத சான்று நூலாகவும் திகழும்; உபநிஷதங்களின் சாரமாக இருக்கும்; அதே நேரம் உபநிஷதக் கருத்துகளுக்கான விளக்கமாகவும் விளங்கும்; ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்களின் கருத்துப் படிவளர்ச்சியைத் தெளிவாக்கும்; அதே நேரம் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்னும் வழிவழியான துறையே தான் கூறும் கருத்துகளுக்கான உடனடிச் சான்றாகக் காட்டும் நூலாகவும் திகழும் - இத்தனையுமாக ஒரு நூல் அதுவே கீதை, ஸ்ரீமத் பகவத் கீதை. நன்மை செய்பவர் ஒரு பொழுதும் நாசம் அடையார் என்ற மங்களகரமான உத்தரவாதத்தை உலகிற்குத் தந்த உன்னத நூல் கீதை.

கீதைக்கான விளக்கங்களும் சித்தாந்த ரீதியாகப் பலவாகப் பெருகி நிற்கின்றன. எனவே இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்வது கடினம். ஆயினும் கீதைக்கான சங்கர பாஷ்யம் ஆங்கில மொழிபெயர்ப்பு என்றால் எனக்கு மிகவும் பிடித்தது ஸ்ரீ சி வி ராமசந்திர ஐயர் மொழிபெயர்த்தது. ஸ்ரீபாரதீய வித்யா பவன் போட்டது. இவர் அமுதம் தோய்த்து எழுதவல்ல ஸ்ரீ ரா கணபதி அவர்களுடைய தந்தை என்று நினைக்கிறேன். விசிஷ்டாத்வைதம் தமிழில் கொடுத்து வைத்தது. கீதைக்கு ஸ்ரீ உ வே புத்தூர் ஸுதர்சனர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களின் ஐந்து வால்யூம்களாக கீதா பாஷ்யம். ஸ்ரீராமானுஜரின் கீதா பாஷ்யம், அதற்கு ஸ்ரீவேதாந்த தேசிகரின் தாத்பர்ய சந்திரிகை ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான தமிழில் விளக்க உரை என்றால் ஸ்ரீஸுதர்சனருடையது. ஆங்கிலத்தில் சுவாமி ஆதிதேவாநந்தா அவர்கள் ஸ்ரீராமானுஜரின் கீதா பாஷ்யத்தை மூலத்தையும் போட்டுக் கீழே தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பாகவும் கொண்டு வந்துவிட்டார். மொழிபெயர்ப்பு அருமை. த்வைத சித்தாந்த ரீதியிலான கீதையின் விளக்கத்திற்குத் தமிழில் ஸ்ரீஸத்யானந்தம் க்ருஷ்ணாசார்யர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஸ்ரீமத் ஸத்யத்யான தீர்த்தர் அவர்களுடைய கீதை விளக்க நூல்.

சமீப காலத்தில் வந்துதித்த மகனீயர்கள் பலரும் கீதைக்கு நன்கு விரிவாக விளக்கங்கள் கண்டுள்ளனர். சுவாமி அபேதாநந்தர், சுவாமி ரங்கநாதாநந்தர், பரமஹம்ஸ யோகாநந்தர் என்று நீளும் வரிசை. பகவான் ஸ்ரீஅரவிந்தரின் ’கீதையைப் பற்றிய கட்டுரைகள்’ என்பது சிறப்பாக எனக்குப் படுகிறது. உண்மையில் கீதைக்கான விளக்க நூல்களின் பட்டியலைப் போட்டு முடிக்க முடியுமா என்பது சந்தேகமே. இதோ இப்பொழுது இதை எழுதும் பொழுதே அதை விட்டுவிட்டோம் இது விட்டுப் போய்விட்டது என்று ஏகப்பட்ட நினைவூட்டல்கள் என் மனத்திலேயே தோன்றுகின்றன. எவ்வளவு தடவை எழுதினாலும் இந்த நிலைமை மாறாதது என்பதால்.....
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பத்து உபநிஷதங்களையும் கற்க

பத்து உபநிஷதங்களையும் படிக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் உண்டான அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத சித்தாந்தபரமான அர்த்தங்களையும் கூடவே சுருக்கமாகவேனும் படிக்க வேண்டும். அதற்கென்று ஏகப்பட்ட நூல்களையெல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டு நூலகமாக வைத்துக் கொண்டு படிக்க ஆசைதான். ஆனால் எங்கே நேரம்? ஒரே நூலில் இவ்வளவும் கிடைத்தால், பரவாயில்லை கொஞ்சம் பெரிய சைஸ் நூலாக இருந்தாலும், பையில் இடம் போதாது, பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். அப்படி ஏதாவது இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள் என்று சும்மா ஒரு வார்த்தைக்குக் கூட என்னிடம் சேலஞ்ஜாகச் சொல்லிவிடாதீர்கள்! ஏனென்றால் அப்படி ஒரு நூல் இருக்கிறது. நீங்கள் ஒன்றும் பெரிய நூலை கஷ்டப்பட்டுப் பையில் எல்லாம் சுமந்து திரிய வேண்டியதில்லை. லேப்டாப்பில் போட்டு வைத்தால் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறது. க்ளிக்கினோமா, படித்தோமா என்று அமைதியாக வேலை முடியும். ஆமாம். அதுவும் 1900 ஆம் ஆண்டே வந்தது.

தசோபநிஷத் பத உரையோடு கூடியது. அர்த்தங்கள், விளக்கங்கள் தமிழில் கொடுக்கப்பட்ட திராவிட பாஷ்யம்.

சங்கர ராமானுஜ மத்வ பாஷ்யத்துடன் ஈச, கேந, கட, ப்ரச்ந, முண்டக, மாண்டூக்ய கௌடபாத காரிகை, தைத்திரீய, ஐதரேய, ப்ரஹதாரணிய, சாந்தோக்கிய உபநிஷத்துக்கள்.

மதத்ரய வித்வான்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்ப்பித்து கெ அநந்தாசார்யர் அவர்களால் சென்னை மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. ஆண்டு 1900.

என்ன அவர்கள் அவ்வளவு செய்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் நம் காலத்தில் கொஞ்சம் அதில் சில வேலைகளைச் செய்தால் இன்றும் நன்கு புரியும் நடை. இதைவிட எளிமை என்றால் இருக்கவே இருக்கிறது சுவாமி ஆசுதோஷானந்தரின் தொகுதி.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

இருக்கிற நிலையில் வேதாந்தம் கற்க ஒரு கணக்கு

இப்பொழுது ஒரு கணக்கு போடுவோம். சம்ஸ்க்ருதம் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார் ஒருவர். ஆர்வம் நிறைய. ஆனாலும் காலம், வேலை எல்லாமும் சேர்ந்து... . ஆனாலும் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்களைக் கற்று அதன் வழியாக உபநிஷதங்களை எப்படி அணுக வேண்டுமோ அப்படி முறையாக அணுகிக் கற்பதில் ஆசை. ஏதோ இப்பொழுதைக்கு ஸ்ரீபகவத் கீதைதான் தமக்குப் பிடித்த சித்தாந்த ரீதியாக உரைகளின் மொழிபெயர்ப்பைக் கொண்டும், வித்வான்களின் உரைகளைக் கொண்டும் அனுபவிக்க முடிகிறது. ஆனால் வேதாந்தம் என்பதை இன்னும் சாட்சாத்தாகப் படிப்பது என்றால் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள், அந்த த்ருஷ்டியில் உபநிஷதங்கள் இப்படிப் போய்ப் பார்க்க ஆசை. ஆனாலும் வடமொழி பழகி இன்னும் எவ்வளவு.. காலம்... - இது போன்ற கவலையெல்லாம் தேவையில்லை என்று தோன்றுகிறது. முறையாக வித்வான்களிடம் அமர்ந்து கேட்டுத் தம் படிப்பை நிறைவு செய்துகொள்ள முடிந்தால் பெரும் பாக்கியம். ஆனால் இன்றைய காலம், சூழல், அவசரம், அவசியம் எல்லாமும் ஒரு பக்கத்தில் இழுக்க, அபூர்வமான வேதாந்த ஆர்வம் மொட்டாகவே கருகிவிட வேண்டாமே! இருக்கிற நிலைமையிலிருந்து தொடங்குவதும் நல்லதுதானே. அதற்கு என்ன வழி?

விசிஷ்டாத்வைதம் என்றால் ஸ்ரீபாஷ்யம், ச்ருதப்ரகாசிகையோடு முதல் நான்கு ஸூத்ரங்களான சதுஸ்ஸூத்ரீ பகுதிக்குத் தமிழில் இருக்கிறது. முழு ஸ்ரீபாஷ்யமும் என்றால் ஆங்கிலத்தில் தீபா மொழிபெயர்ப்பு. தமிழில் புரிசை உ வே ஸ்ரீகிருஷ்ணமாசாரியார் ஸ்வாமியின் சுகபோதினி. கோழியாலம் ஸ்வாமியின் சாரீரக காரிகாவளி (4 பாகங்கள்), ஆங்கிலத்தில் ஸ்ரீபாஷ்ய மொழிபெயர்ப்பு ஸ்ரீ எம் ரங்காசாரியர், ஸ்ரீ வி கே ராமானுஜாசாரியர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது, ஸ்ரீகர்மர்கார் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக யதீந்த்ரமததீபிகையை நன்கு பரிச்சயம் செய்துகொண்டு விடுவது புத்திசாலித்தனம். அதனுடைய ஆங்கிலம் சுவாமி ஆதிதேவாநந்தருடையது அருமை. ஆனாலும் ஸ்ரீ உ வே ஸுதர்சனர் புத்தூர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின் தமிழ் விளக்கத்தோடு உள்ள யதீந்த்ரமத தீபிகை கம்பல்ஸரியாக ஒரு டஜன் முறை படித்துவிடுவது நல்லது. இந்த ஆயத்தம் எல்லாம் ஆனபிற்பாடு கொஞ்சம் நன்கு பரிச்சயம் ஆகச் சில துணை நூல்கள். வேளுக்குடி வரதாசாரியாரின் ஸ்ரீபாஷ்ய ஸாரம், உத்தமூர் ஸ்வாமியின் ஸ்ரீபாஷ்ய ஸாரம். அதாவது சம்ஸ்க்ருதத்தில் பெரிய பாண்டித்யம் அடையாமல் இதற்குள் எல்லாம் போக முடியாது; அதனால் நான் தொடவே இல்லை என்று வருந்த வேண்டாம். அதற்குச் சொன்னேன்.

அத்வைதம் என்று சொன்னால் நிறைய இருக்கின்றன. சுவாமி யோகானந்த கிரி அவர்களின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து மொழிபெயர்ப்பு. தீபா செய்த மொழிபெயர்ப்பு. ஆனாலும் தமிழில் கடலங்குடி நடேச சாஸ்திரிகள் மிகவும் கச்சிதம். சதுஸ்ஸூத்ரீ பகுதி மட்டும் என்றால் பாமதி வியாக்கியானத்துடன் சங்கர பாஷ்யம் ஆங்கிலத்தில் ஸ்ரீ எஸ் எஸ் சூர்யநாராயண சாஸ்திரி, ஸ்ரீ குன்ஹன்ராஜா அவர்களுடைய அற்புதமான நூல்.

த்வைதம் என்பதில் தமிழில் ஸ்ரீப்ருஹ்மஸூத்ர மொழிபெயர்ப்பு வந்திருக்கிறதா தெரியவில்லை. அணுபாஷ்யம் தமிழில் வந்தது முன்னர் என்னிடமே இருந்தது. யாரோ த்வைத சித்தாந்தியான நண்பர் ஒருவர் அதைப் பிரசுரிக்க வேண்டும்; யாரிடமோ அதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வாங்கிக் கொண்டு போனார். பிறகு என்னிடமே புத்தகங்கள் இல்லாத நிலை வந்ததினால் நானும் அதை விசாரிக்கவில்லை. ஆங்கிலத்தில் என்றால் ஸ்ரீசுப்பாராவ் அவர்களின் மொழிபெயர்ப்பு.

நானறிந்தவரை, நினைவுக்கு வந்தவரையில் சொன்னேன். ஆர்வம் இருந்தால் சால்ஜாப்பிற்கு இடமில்லை என்று சொல்ல வந்தேன். எல்லோரும் மிகவும் பிஸி என்பதை நானும் அறிவேன். ( நம் கம்பெனி சீக்ரட்டை வெளியில் சொல்வேனா? :-) )
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Monday, March 2, 2020

உபநிஷதங்களை எப்படிக் கற்பது?

நாம் உபநிஷதங்களைப் படிப்பது என்பது வேறு. அதுவே வேதாந்திகள் உபநிஷதங்களைப் படிக்கும் முறை என்பது வேறு. நாம் ஏதோ கண்ணில் பட்டதை அப்படி அப்படியே மேற்கோள் என்ற கணக்கில் படிப்போம். சில இடங்கள் நமக்குக் கதையம்சங்கள் உள்ளதுபோல் தோன்றும். அதற்கு மேல் நமக்கு அதனுடைய ஆழமோ, தத்துவப் புலச்செறிவோ மனம் கொள்ள முடியாததாய் இருக்கும். சிலசமயம் நம்முடைய இயலாமையை ஒப்புக்கொள்ள மனமின்றி, ஏதோ அதெல்லாம் அந்தக் காலத்து வழிவழியாக வந்த நூல்கள் என்று மேம்போக்காக விமரிசனம் பூசிப் பேசுவோம். ஆனால் அந்தத் துறைக்கு என்று முற்றிலும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள் எப்படி அதை அணுகுகிறார்கள், எந்த விதத்தில் உபநிஷத வாக்கியங்களைப் புரிந்துகொள்கிறார்கள் என்று கவனம் கொண்டு பார்த்தோமானால் அஃது ஒரு பெரும் கண்திறப்பாக இருக்கும்.

உபநிஷதங்களை எப்படிப் படிக்க வேண்டும், எப்படி உபநிஷத வாக்கியங்களை உள்ளர்த்தங்களைத் தவறவிடாமல் கற்க வேண்டும் என்ற வித்யைத்தான் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் கற்றுக் கொடுக்கின்றன. நியாயம், வியாகரணம், பூர்வ மீமாம்ஸை என்னும் இயல்களில் எந்த எந்தப் பொதுவிதிகள் கைக்கொள்ளப் படுகின்றனவோ, நிரூபிக்கப்பட்ட அணுகுமுறைக் கோட்பாடுகள் என்ன உண்டோ அவையெல்லாம் பொருத்தம் கருதி உபநிஷதங்களை ஊன்றிக் கற்பது என்னும் துறையான வேதாந்தம் என்பதிலும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஸ்ரீபிரஹ்ம ஸூத்ரங்கள் காட்டுகின்றன. ஸ்ரீபிரஹ்ம ஸூத்ரங்கள் என்பவை பெரும் துறையின் சாரமான கருத்துகளைச் சிமிழ்ப்புறச் சுருக்கமான எழுத்துகள் அமைந்த நூற்பாக்களால் தந்த வடிவம். அதுவே பெரும் துறையான பெருக்கத்திற்கும் அடிப்படைக் குறிப்புகளாகவும் அமைந்திருக்கின்றன.

உபநிஷத வாக்கியம் ஒன்றை நாம் படித்தால் பொதுவாக ஏதோ ஒரு வாக்கியம் என்றுதான் படிப்போம். ஆனால் ஸ்ரீபிரஹ்ம ஸூத்ரங்கள் அதையே எப்படிப் படிக்க வேண்டும் என்று கற்றுத் தரும் போது என்ன சொல்கின்றன. வாக்கியத்தின் தாத்பர்யம் என்ன என்று பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அவ்வாறு தாத்பர்யம் என்ன என்று பார்க்கும் பொழுது ஆறு அடையாளங்களைக் கொண்டு இன்னதுதான் தாத்பர்யம் என்று நிர்ணயிக்கலாம் என்றும் சொல்கிறது. அதற்கு ஷட்வித தாத்பர்ய விங்கங்கள் என்று பெயர்.

ஷட்வித - ஆறுவிதமான; விங்கம் - அடையாளம்.

என்ன என்ன அவை? உபக்கிரம உபஸம்ஹாரங்கள். ஒரு கருத்து உபநிஷதம் சொல்லும் பொழுது தொடக்கமும் முடிவும் எப்படி அமைந்திருக்கிறது என்று பார். அதைப் பார்த்தாலே என்ன தாத்பர்யத்தில் சொல்ல வந்தது என்பது புரியும்.

அடுத்து, அப்யாஸம். ஒரு கருத்து மீண்டும் மீண்டும் ஒரு பகுதியில் அப்யாஸமாக, மீட்டு மொழிதலாகச் சொல்லப்படுமானால் அதன் மூலமும் தாத்பர்யம் என்ன என்று உணர முடியும்.

அபூர்வதை - ஒரு பகுதியில் ஒரு கருத்து முன் எப்பொழுதும் சொல்லப்படாமல் புதியதாகச் சொல்லப்படுமேயானால் அப்பொழுது தெரிந்து கொள்ளலாம் அந்தப் புதிய கருத்தைச் சொல்வதன் தாத்பர்யத்தை.

பலன் - ஒரு கருத்தைச் சொல்லிய பின்பு அதன் பலன், அந்தக் கருத்தால் ஆகும் பயன் உரைக்கப்படுமானால் அதுவும் தாத்பர்யம் உணர வழியாகும்.

அர்த்தவாதம் - ஒரு விஷயத்தை மிகவும் பாராட்டி உபநிஷதப் பகுதி உரைக்குமானால் அப்பொழுதும் நாம் அதன் தாத்பர்யம் அதுதான் என்பதை உணர முடியும்.

உபபத்தி - ஒரு விஷயத்தை உரைத்து அதன் பொருத்தம் பொருந்தாமைகளையும், அதற்கான யுக்திகளையும் விரிவாக விளக்குமேயானால் அப்பொழுதும் நாம் தாத்பர்யம் என்ன என்பதை உணர முடியும்.

எனவே உபக்கிரம உபஸம்ஹாரங்கள், அப்யாஸம், அபூர்வதை, பலன், அர்த்தவாதம், உபபத்தி அல்லது யுக்தி என்னும் இவையே ஆறுவிதமான தாத்பர்ய அடையாளங்கள். (ஷட்வித தாத்பர்ய லிங்கங்கள்)

இதைப் போல் அணுகுமுறை நெறிக் கருத்துகள் இன்னும் பல உண்டு ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் சார்ந்த படிப்பில். இந்த வழியில் நன்கு பயிற்றப்பட்ட பின்னர்தான் உபநிஷதங்களே நன்கு புரியவரும் என்பது வேதாந்தம் போதிக்கும் பாடம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஸ்ரீப்ரஹ்மஸூத்ர சங்கர பாஷ்யத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

பொதுவாகப் பழைய நூல்கள் தமிழில் வந்துள்ளவற்றைக் காணுங்கால் மனம் கொஞ்சம் பதறும். இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் நம் நண்பர்களும், இளம் தலைமுறைகளும் இழக்கின்றனரே என்று. ஆனால் இந்த நூலைக் கண்டதும் மிகவும் வருத்தம் உண்டாகிறது. ஏனெனில் எவ்விதத் துணிச்சலுடன் இந்த மஹான் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் என்பது கொஞ்சம் நம் அவசர உலகின் புத்தியை நிறுத்திப் பார்த்தால்தான் புரியும். நான் சொல்வது ப்ரஹ்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ர சங்கர பாஷ்யம் என்ற நூலைப் பற்றித்தான். ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் நான்கு அத்யாயங்கள் கொண்டது என்று பார்த்தோம். ஸமன்வய அத்யாயம், அவிரோத அத்யாயம், சாதன அத்யாயம், பல அத்யாயம் என்பவை அந்த நான்கு. இவற்றில் ஸமன்வய அத்யாயம் என்னும் முதல் அத்யாயத்திற்கான சங்கர பாஷ்யத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, பக்கங்களில் மேல் பகுதியில் சம்ஸ்க்ருதத்தில் சங்கர பாஷ்ய மூலமும், கீழே அந்தந்தப் பக்கத்தில் அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பும் கொடுத்து முதல் புத்தகமாக 1928 ஆம் ஆண்டு போட்டிருக்கிறார். இரண்டாவது அவிரோத அத்யாயம் 1931 ஆம் ஆண்டு வந்திருக்கிறது. மூன்று நான்காவது அத்யாயங்கள் 1932 ஆம் ஆண்டு வந்திருக்கிறது.

1928 முதல் 1938 வரை ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்களின் காலம் தமிழில் என்று தோன்றுகிறது. ஏனெனில் முன்னரே பார்த்திருக்கிறோம், ஸ்ரீரங்கத்தில் ஓர் இராப்பத்து அன்று 1930 களில் பல பக்தர்களும் ஒருங்கு கூடி முடிவு பண்ணி ஸ்ரீபாஷ்ய தமிழ்மொழிபெயர்ப்பு சங்கம் என்று நிறுவி, ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்களில் முதல் நான்கு ஸூத்ரங்களுக்கு மட்டுமான ஸ்ரீபாஷ்யம், அதற்கான சுருதப்ரகாசிகை என்று சதுஸ்ஸூத்ரீ பகுதியை மட்டும் வெளிக்கொணர்ந்தனர் என்று. இங்கோ ஸ்ரீப்ரஹ்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் 1928லிருந்து 1932க்குள் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் முழுவதற்கும், அதாவது மொத்தம் 500க்கும் மேற்பட்ட ஸூத்ரங்களுக்குமான சங்கர பாஷ்யத்தைத் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுவிட்டார். இவர்கள் அனைவருக்கும் இருந்த தமிழ்க் காதல், தமிழை வளப்படுத்த வேண்டும் என்ற அக்கறை, வடமொழிப் பரிச்சயம் இல்லாதோரும் இழக்கக் கூடாது என்ற சமுதாயப் பொறுப்பு எண்ணி நன்றி பாராட்டப் பட வேண்டியதாகும்.

ஸ்ரீநடேச சாஸ்திரிகளோ தாம் கற்கும் போது ஸ்ரீபைங்கானாடு கணபதி சாஸ்திரிகளிடம் மிகக் கடுமையான நியமங்களை அனுசரித்துக் கற்றவர். அவருடைய குருவோ மஹாமஹோபாத்யாய ஸ்ரீராஜு சாஸ்திரிகள் ஸ்ரீஅப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் வந்தவர். இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை வழுக்கள் களைந்து செப்பனிட்டுக் கொடுத்த ப்ரஹ்மஸ்ரீ கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் அவர்கள் கூறும்பொழுது, ‘இம்மொழிபெயர்ப்பில் எமது பரமாசாரியர் அந்தரங்க அபிப்ராயம் ஐயமறத் துலங்குகிறது..’ என்று கூறுகிறார். ஸ்ரீசாஸ்திரிகளின் தமிழோ கஷ்டப்படுத்தாத தமிழ். கொஞ்சம் நாம் ஆர்வமும், முயற்சியும் காட்டினால் பிறகு வெகு எளிதில் பழகிவிடும். தமிழ்நாட்டில் ஹிந்துக்களின் கடமைகளில் இம்மாதிரியான நூல்களில் கவனம் செலுத்துவதும் ஒன்று என்பதில் சந்தேகம் உண்டோ!

ஸ்ரீசாஸ்திரிகள் இந்தச் சாதனையோடு நிறுத்தியவர் அல்லர். சாங்கிய சாஸ்திரம் யோக தர்சனம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்று பெரும் பெரும் நூல்களையெல்லாம் தமிழில் கொண்டுவந்த மகனீயர். இந்த நூல்களையெல்லாம் மறதிக்கும், அலட்சியத்திற்கும் இலக்காக்கும் துர்பாக்கியம் நமக்கு இல்லாமல் போக அரங்கனே அருளட்டும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பரம்பொருள் ஒன்று பக்தி பலவிதம் - முக்திகோபநிஷதம்

பரம்பொருள் ஒன்று. அதை ஞானிகள் பலவாறாக விவரிக்கிறார்கள் - என்னும் கருத்தை வேதம் எவ்வளவு வழிகளிலெல்லாம் அலுக்காமல் உணர்த்துகிறது!

முக்திக உபநிஷதம் என்பதில் ஆஞ்சநேயருக்கு ஸ்ரீராமபிரான் உபதேசிப்பதாக வருகிற பகுதியில் ததேதத் ருசாப்யுக்தம் - அதுவே ரிக்வேத மந்திரமும் சொல்கிறது - என்று ஒரு மந்திரம் மேற்கோள் காட்டப் படுகிறது. உயர்ந்த சாக்ஷாத்காரத்தை அடைந்த ஞானிகள் அங்கு பரம்பொருளை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கு அரிய ஓர் உதாரணம் கூறப்படுகிறது. கண் எப்படி அங்கும் இங்கும் எங்கும் ஒரேமட்டாகப் பரவிய ஆகாயத்தைப் பார்வை கொள்ளுமோ அதைப் போல் விஷ்ணுவின் பரமம் பதம் என்னும் அந்த உயர்ந்த சாக்ஷாத்கார நிலையில் பாரமார்த்திக அனுபவம் இருக்கிறது.

அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது

என்று ஸ்ரீதாயுமானவரின் வார்த்தைகள் அந்த நிலையை எப்படிப் படம் பிடிக்கின்றன!

அந்த அனுபவத்தை வெளியில் சொல்லும் பொழுது ஞானிகள் பலவாறாக விவரிக்கிறார்கள்.

தத் விஷ்ணோ: பரமம் பதம்
ஸதாபச்யந்தி ஸூரய:
திவி இவ சக்ஷுராததம்
தத் விப்ராஸோ விபந்யவோ
ஜாக்ருவாம்ஸ: ஸமிந்ததே
விஷ்ணோர் யத் பரமம் பதம்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***