Thursday, January 15, 2015

பொங்கும் நினைவுகள்...

ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ அண்ணங்கராசாரியர். நடுவில் படம் ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாசாரியர். வலப்பக்கம் மூன்றாவது படம் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனர் ஸ்ரீ  உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். இப்படி ஒரு படம் முகநூலில் பார்த்தேன். இதில் ஸ்ரீஅண்ணங்கராசாரியாரின் உரைகளை ஸ்ரீரங்கத்தில் சிறுவயதில் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். நேரில் சந்தித்து உரையாடியதில்லை. ஆனால் அவருடைய மகத்தான பணிகளின் பலன்களை வாழ்வில் அனுபவிக்காத நாள் இல்லை. அவர் நடத்திவந்த இதழான ஸ்ரீராமாநுஜன் என்பது இதழ் வடிவில் இருக்கும் ஒரு பல்கலைக் கழகம் எனலாம். வடமொழிக் காவியங்கள், சாத்திரங்கள், தமிழ் மொழியின் நயங்கள், ஆழ்வார்களின் பாசுர நுட்பங்கள், வேதங்களில், வேத பாடங்களில், வேதாந்த வியாக்கியானங்களில் என்று எங்கெங்கோ மறைந்திருக்கும் மிக நுட்பமான குறிப்புகளைக் கடல் பொங்கினால் போல் அவருடைய நூல்களில், அந்தப் பழைய இதழ்களில் பரந்திருக்கக் காணலாம். வடமொழி, தமிழ்மொழி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் அபரிமிதமான பாண்டித்யம் மிக்கவர். அனைத்து மொழிகளிலும் அவர் இயற்றியிருக்கும் நூல்களே, அதாவது பிரதியே கிடைக்காமல் போனவை போக, கணக்குக் கிடைத்தவை 500க்கும் மேல் என்று ஒரு கேடலாக் என்னிடம்  இருக்கிறது. வடமொழி, வேதம், வேதாந்தம் என்று பெரும் பாண்டித்யம் மிக்கவராக இருந்தும் ஆழ்வார்களின் ஈரத்தமிழை அநவரதம் முழங்குவதிலேயே, கோயில்களில் விடாமல் கூடித் தமிழ் வேதங்களை முழங்குவதையே தனது ஜீவாதுவாக (உயிர்ப்பற்று) கொண்டிருந்தார் தம் கடைசி வாழ்நாள் வரையில். அவருடைய கடைசி நாளைய பிரார்த்தனை, அவரே எழுதியது, 'அடுத்த பிறவி வேண்டும். அதுவும் அரையர் சுவாமியாகப் பிறக்க வேண்டும். கோயில்களில் ஆண்டவனின் முன்பு ஆழ்வார்களின் அமுதத் தீந்தமிழை கானம் செய்து ஆடிப்பாடித் தொண்டு செய்து, அப்படி ஒரு பிறவி தமக்குத் தந்துவிட்டுத்தான் ஆண்டவன் தமக்கு திருநாடு எனும் பேற்றை அறுதியாகத் தர வேண்டும்.' என்னும் உளப்பூர்வமான வேண்டுதலைக் கொண்டிருந்தார் என்றால் அவருடைய பெருமையை என்னென்று சொல்வது!

அடுத்து வேளுக்குடி வரதாசாரியர் என்னும் பெருந்தகையான பேரறிஞர். வாக்கில் அமுதம் பொழியும் கடல் போன்ற அழகிய பேச்சு எழில் கொண்டவர் என்று அவருக்கு ஒரு பட்டம் உண்டு - வாக் அம்ருத வர்ஷி - என்று. இது எழுத்துக்கு எழுத்து உண்மை என்பதைச் சிறுவயது முதற்கொண்டே உணர்ந்து அநுபவித்தவன் நான். ஸ்ரீரங்கத்தில் மேலச்சித்திரை வீதி பூர்வ சிகை ஸ்ரீவைஷ்ணவ சபையின் புண்ணியம், இவர்களின் சொற்பொழிவுகளை நட்ட நடு வீதியில் அமர்ந்து கேட்கும் படி அவ்வளவு சுலபமான பாக்கியம்! உண்மையான பாண்டித்யம் என்றால் என்ன, அதுவும் பண்டைய கல்விமுறையின்படிக் கசடறக் கற்ற குரவோர் என்பவரின் படிப்பு எவ்வண்ணம் இருக்கும் என்று நேரடியாக ஒருவரைக் காண வேண்டும் என்றால் அது இந்த சுவாமிதான். இவரோடு எனக்கு நன்கு பரிச்சயமும் உண்டு. வாக்குவாதம், ஆர்க்யுமண்ட் எல்லாமும் உண்டு. அதையெல்லாம் சகித்துக்கொண்டு, அப்படியிருந்தும் என்னிடம் அன்பு காட்டினார் என்றால் இவருடைய உளப்பாங்கை என்ன என்று சொல்ல! தம்புச் செட்டித் தெருவில் இருந்தார் என்று நினைவு. திடீரென்று ஒரு நாள் ஆபீஸுக்கு போன் வந்தது. யார் என்றால் சுவாமி. எனக்கு அதிர்ச்சி. 'என்ன பேச்சு காணும்? ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் பற்றி இங்கு சாரிடீஸ் ஒன்றில் உபந்யாஸம். அதான் உமக்குச் சொல்லலாம் என்று பண்ணேன்'. ஆஹா வந்து விடுகிறேன் என்று சீக்கிரம் கிளம்பிப் போய் விட்டேன். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைக் குறித்து ஒரு புதிய உலகமே திறந்ததுபோல் இருந்தது. உபந்யாஸம் முடிந்ததும் நேரடியாக வந்தார். 'எப்படி இருந்தது?' நான் அவர் பேசும் பொழுது கூறிய சிறப்புக் குறிப்புகளைச் சிலவற்றைக் குறிப்பிட்டு, 'இதையெல்லாம் கவனித்தேன்' என்று சொன்னதும் பெரும் உவகைச் சிரிப்பு ஒன்று. ஆழ்பொருள் சொல்வோருக்கு அவற்றைக் கவனிக்க ஆள்  இருக்கிறது என்னும் போதுதான் என்ன உவகை! அதைப் பார்க்கக் கொடுத்து வைத்தேன். அவருடைய கடைசி காலத்திற்கு முன் ஓரிரு தினங்கள் முன்புதான் அவருடைய வீட்டில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய நூலகத்தை நன்கு செப்பனாக முறைப் படுத்த வேண்டும் என்று. 'ஸ்ரீரங்கத்திற்குப் போகிறேன். போய்விட்டு வந்து விடுகிறேன். ஆரம்பிச்சுடுவோம்' என்றார். அவ்வளவுதான் அந்த யுகம் முடிந்தது.

சிறு வயதிலிருந்து எனக்கு ஒரு கெட்ட பழக்கம். இது போல் வயதானவர்களுடன் பெரியோர்களுடன் பழகுவது. அதனால் அவர்கள் போகும் போதெல்லாம் என் வாழ்க்கை வெறுமை அடித்துப் போய் என்னுடைய ஏதோ ஒன்றை இழந்த துக்கம் கவியும் நிலை மீண்டும் மீண்டும் தொடர்ந்த வண்ணம்! தஞ்சை திரு டி என் ஆர் சொன்னார் ஒரு முறை.- அவருக்கு கவிஞர் பெருமான் திருலோக சீதாராம் கூறினாராம். - 'நீங்க வயதானவர்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டால் ஒரு தொல்லை. இழப்புகளின் துயரத்தை மீண்டும் மீண்டும் அடைய வேண்டியிருக்கும். அதற்கு நெஞ்சத்தை என்றும் தயார் பண்ணிக் கொள்ளுங்கள்' என்று. என்ன தயார் பண்ணிக் கொண்டால் என்ன அந்தத் துயரம் அடிக்கும் போது வேதனைதான். பாருங்கள்! இவர்களுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்? என் வாழ்க்கையும், சிந்தனைகளும், பாதைகளும் எங்கே! இவர்களின் சம்ப்ரதாய ரீதியான வித்வத்தும், வாழ்நெறியும், அவர்களின் உலகமும் எங்கே! ஆனால் இன்று இவர்களின் படங்களை ஃபெஸ் புக்கில் பார்த்ததும் என்னவோ தெரியவில்லை. நெஞ்சைப் பிசைந்துகொண்டு வருகிறது. இவரைப் போலவே இவர் கூடவே கல்வி கற்று அபரிமிதமான வித்வானாக விளங்கியவர் சதாபிஷேகம் சுவாமி என்று சொல்லப்பட்டவர். ஆழ்வார் திருநகரி கோயிலில் நம்மாழ்வாரை உள்ளபடியான விக்கிரக அழகை வெளிக்கொணர்ந்தவர். சாத்திரங்களில் மிக நெருடலான நுணுக்கங்களுக்கும் மிக அழகாகவும் எளிமையாகவும் விளக்கம் சொல்லிப் புரிய வைக்கும் பொறுமையும், கனிவும் மிக்கவர் என்பது எனது அநுபவம். அவர் கடைசி காலங்களில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த பொழுது நான் அலுவலகத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விட்டேன் அவரைப் பார்க்க. அதுவரை முடியாமல் பேசவும் இயலாமல் இருந்தவர் என்னைப் பார்த்ததும், 'எங்கடா வந்த?' என்றார். நீங்கள் மருத்துமனையில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதான் லீவு சொல்லிவிட்டு வந்து விட்டேன்' என்றேன். மனிதர் அழாக்குறை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் தொடர்ந்து சாத்திர நுணுக்கங்களை எனக்கு விளக்கிய வண்ணம் எழுந்து உட்கார்ந்து விட்டார். அவருடைய மனைவிக்கோ ஒரே ஆச்சரியம்! என்னது இது என்னது இது என்றவண்ணம் இருந்தார். கமல்ஹாஸனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தின் காட்சி மாதிரிதான் இருந்தது. இந்த சுவாமியோடு, அதாவது சதாபிஷேகம் சுவாமியோடு ஒரு சமயம் கிட்டத்தட்ட ஒரு வாரம் மாலை 6 மணி தொடங்கி இரவு 12 மணிவரையிலும் கூட சாத்திர விஷயங்களில் வாதம், கேள்வி, ஐயம் தெளிதல்.

மூன்றாவது படத்தில் காண்பவர் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் என்னும் இதழை அவருடைய தகப்பனார் ஸ்ரீ உ வே ஸ்ரீநிவாஸய்யங்கார் ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தவர். இன்று ஸ்ரீவைஷ்ணவத்தின் சான்று நூல்கள், உரை நூல்கள் மிகக் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைத்தவண்ணம் இருப்பதற்கான காரணமே இந்தப் பெருந்தகையாளர்தான். ஆம். தமது தந்தை பெரும் மூலதனத்தை உண்டாக்கி ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திற்காக என்று ட்ரஸ்ட் உண்டாக்கி, அதன் மூலமாக ஸ்ரீவைஷ்ணவ நூல்களை வெளியிட்டுப் பாதுகாக்க வேண்டும் என்ற பெரு முயற்சி இவரால்தான் நன்கு வளர்ந்து செழிக்கும் விதத்தில் பாதுகாக்கப்பட்டு நடைபெற்றது என்பது பலரும் அறிந்ததே. புத்தகங்களை மிகவும் திறமையாகத் திறனாய்வுப் பதிப்பாக வெளிக்கொணருவதில் இவருக்கு இணை வேறு எவரும் இலர். ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர் பதிப்பு என்பது ஹால்மார்க். அதை வைத்துக்கொண்டு இனி மேலே ஆய்வுகள் செய்யலாம் என்று அறிஞர் குழாம் கொண்டாடும் தன்மைத்து அவருடைய பதிப்புத் திறமை. அவரோடு மிக நெருங்கிய பழக்கம் எனக்கு. கல்லூரி படிக்கும் காலம் தொட்டே, ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த இயக்க ஈடுபாடு காரணமாக அவரோடு எனக்கு வாக்குவாதங்கள், (உண்மையாகச் சொல்லப் போனால் அவருடைய அறிவுரைகள்) நிகழ்ந்த காலம் தொடங்கியே நல்ல பழக்கம் உண்டு. அந்த வாக்குவாதங்களைத் தனியே எழுதியிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர்தான் திருநாடு அடைந்தார். அவரோடு பழகிய நாட்கள், பேசிய பேச்சுகள், கருத்தாடல்கள், இவற்றைத்தவிர அவருடைய விளக்க நூல்களும் பதிப்பு நூல்களுமே எனக்கு மட்டுமின்றிப் பலருக்கும் புகலாக இருக்கும் நிலை எல்லாம் சேர்ந்து அவர் போன போது என்னைச் செயலிழக்கச் செய்து விட்டது. மீண்டும் அதே தொடரும் துயரம்.

ஒரு காலத்தில் பொங்கல் என்றால், போகிப் பண்டிகை என்றால் என்னைப் பொறுத்தவரையில் இது போன்ற பெரியோர்களைச் சென்று வணங்கி, பேசிக் கொண்டிருப்பதும், வாழ்த்து பெற்று வருவதுமாக இருந்தது. இன்று யாரிடம் போவது யாரைப் பார்ப்பது...! வெறுமனே பொங்கல் மட்டும் வந்து பார்த்து விட்டுப் போகிறது. தேஹி நோ திவசம் கதா: - பார்த்துக் கொண்டிருக்கும் போதே போயின நாட்கள் - என்று உத்தரராம சரித சம்புவில் வரும் என்று ஸ்ரீஅண்ணங்கராசாரியார் எழுத்துகளில் படித்த நினைவு. 'எங்கடா வந்த..' என்று நினைவுகள் கேட்ட வண்ணம் இருக்கின்றன. எவ்வளவோ நூல்களை படியெடுப்பார் நாளொரு பொழுதும் படியெடுக்க நிறுத்திச் சொல்லியவண்ணம் அவர் சாய்ந்து இருந்த மரக்கட்டில் இன்று போனாலும் அந்த உறையூரில் இருக்குமோ. ஆனால் அதுவும் நினைவுகளைச் சுமந்த வெறும் கட்டிலாகத்தான் இருக்கப் போகிறது. ஒரு வேளை நினைவுகளின் பொங்குவதும் ஒரு விதப் பொங்கல்தானே! 'எங்கடா வந்த..' என்று காலம் கேட்கும் வரையில் இப்படித்தான் இருக்குமோ...!

***