Wednesday, June 24, 2026

Sergei Rachmaninoff இன் சங்கீதம் பற்றி

To speak of music is to foster an illusion, a ’category mistake’ as logicians would put it. It is to treat music as if it was or was very close to natural language. It is to transfer semantic realities from a linguistic to a musical code. Musical elements are experienced or classified as syntax; the evolving construct of a sonata, its initial and secondary ’subject’ are designated as grammatical. Musical statements (itself a borrowed designation) have their rhetoric, their eloquence or economy. We incline to overlook that each of these rubrics is borrowed from its linguistic legitimacies. The analogies are inescapably contingent. A musical ’phrase’ is not a verbal segment. 

(George Steiner, The Poetry of Thought, 2011) 


இசையைப் பற்றி மொழியின் மூலம் விவரிப்பதே ஒரு மாய பிம்பத்தைத் தெரிந்தே வளர்ப்பது என்கிறார் இந்த மேற்கோள் பகுதியில் ஜியார்ஜ் ஸ்டீனர். அளவையியல் வல்லுநர்கள் கூறுவதற்கேற்ப ‘துறை பிறழ் தவறு’ என்று ஆகிவிடுமாம் மொழிக் கூறுகளால் இசையின் அனுபவத்தைப் பேசுவது. கிளவியாக்கத்தின் கூறுபாடுகளைக் கொண்டுபோய்க் கீதம் மிழற்றும் இன்னிசை உருவுகளுக்குப் பொருத்துவது என்பது வேலி தாண்டிக் குதித்துச்
சொற்களைக் கடத்திப் பொருத்தும் வேலை என்று ஒரு குற்றச்சாட்டாகச் சொல்லாமல் விவரிப்பு என்ற முறையில் கூறுகிறார். இன்னிசையின் வாக்கியங்கள் என்று சொல்வதே கடன் வாங்கி ஒட்ட வைத்த ஜோடனை என்றாலும், இன்னிசையின் வாக்கியங்களுக்கு என்று ஒரு பேச்சு, ஒரு ஆவேசப் பொழிவு, ஒரு வேகச் சிக்கன நெறி இருக்கத்தான் செய்கிறது. ஆக மொத்தம் அவர் சொல்ல வருவது ’ஓர் இன்னிசை சொற்கோவை என்பது மொழித்தன்மையான பகுதி அன்று’ என்பதேயாகும். இருந்தாலும் இன்னிசையைப் பேசுவதும் ஓர் இனிய சுகம்தான். அதுவே ஒரு துறைதான் என்பது என் எண்ணம். 

கொஞ்ச நாள் வாய்ப்பாட்டுடன் ஹார்மொனியமும் கற்றுக்கொண்டேன், ஒரு பாட்டு வாத்யாரிடம். சிறு வயதில், தந்தையின் ஏற்பாட்டில். அப்பொழுதெல்லாம் அந்த வாத்யார் ஸ்வரக் கட்டைகளைக் கையாளும் விதத்தைப் பார்த்துப் பிரமிப்பாய் இருக்கும். ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்குப் போகும் போதோ அல்லது ஒன்று விட்டு ஒன்றுக்குத் தாவும் போதோ இரண்டு ஸ்வர வீடுகளும் கூடவே வந்து பிரிவுபசாரம், வரவேற்பு
விருந்துபசாரம் இரண்டையும் ஒரே சமயம் கலந்து செய்வது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவித்து வாசிப்பார். அடேயப்பா...என்று ஒரு மலைப்பு. நானும் கொஞ்சமாக அதைப் போல் முயற்சி செய்தால் அது குளிரில் நடுங்கும் கிழவியின் சொற்கள் போல் அலையலையாக வந்து கடுப்படிக்கும். அவர் சிரித்துக் கொண்டே, அதெல்லாம் போகப் போக கைவரும் என்பார். அந்தத் தான்சேனுக்கு நான் ஒரு மஹாராஜா. சிறு வயதில் பிரமிக்கும் ஒன்று விழிப்பு ஏற்பட்டதும் எப்படி விரஸமாகக் காட்சியளிக்கிறது! அவர் வாசித்த முறை எப்படியென்றால் ஸ்வரங்கள் எல்லாம் நன்றாக மொந்தைக்கள்ளைக் குடித்துவிட்டு ‘அண்ணாச்சி....நீ தனியாவே போகக் கூடாது..ஆமா சொல்லிட்டேன்...’ என்று கட்டித் தழுவி, தடுமாறி இழைந்து நெளிந்து குலாவுவது போன்ற வேலை. It is a mart of doping the notes. அதுவும் ஹார்மொனியத்தில் இது போன்ற சில்லரை வேலை நன்றாகவே செய்யலாம். அது போல் வாய்ப்பாட்டிலும். ஆனால் தூய ஸ்வர தேவதைகளின் அழகிய உடலை, அந்தத் தேவதைகள் சப்தம் என்னும் நதியில் பிறந்த மேனிக்குக் குளிக்கும் போது மர இடுக்களிலிருந்து ஒளிந்து பார்க்கும் சாகசங்களைப் பார்ப்பதுதான் இசையில் நாம் பெறும் மகோன்னதம் என்ற எண்ணம் எனக்குப் பின்னர்தான் ஏற்பட்டது.

அயின்ரேண்டின் நாவல்களில் தோய்ந்த பின்னர்தான் இந்த எண்ணம் மேலும் வலுப்பெற்று என்னிடம் ஒரு பார்வையாகவே ஆகியது. நானும் இந்த ஸ்வர தேவதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவர்கள் காடுகளில் திரியும் போது, அருவிகளில் சுதந்திரமாகக் குளிக்கும் போது காணும் வாய்ப்பு கிட்டாதா என்று யோசித்ததுண்டு. ஆனால் நான் பார்க்க நேர்ந்த இசையெல்லாம் ஒரே ஸ்வரக்கட்டு கிட்டங்கியாக அங்கப்ரதக்ஷிணம் கணக்காக 
உருண்டனவேவொழிய நிற்கக் கூட இசையின் கொழுந்துகளுக்கு
வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்பது போல் பட்டது. ஆனால் ஸ்வர தேவதைகள் காட்டின் ஆழத் தனிமையில், பொங்கும் ஒலி வெள்ளத்தில், ஒளிரும் முழுத் திருமேனிகளுடன், அந்தத் திருமேனிகளின் பூரித்த அத்தனை லாவண்யங்களுடனும் குளிப்பதை ஒரு சமயம் தர்சனம் செய்யத்தான் செய்தேன். அது எப்பொழுது என்றால் செர்கய் ராக்ஹ்மனினோஃப் (Sergei Rachmoninoff) அவர்களின் இசை ஊழியில்தான். அவருக்கு முன்னால் பிதாமகர் Tchaikovsky (ச்ட்செய்கோவ்ஸ்கி) போன்றவர்களும் உண்டு. ஆனால் வியாசரைப் பார்த்தால் அப்சரசுகள் குளிக்கும்போது தங்களை மூடிக்கொண்டது போன்று ஸ்வரங்கள் அவர்களிடத்தில் எல்லாம் always in attire. ஆனால் படுபாவி, Rachmaninoff விஷயத்தில் என்றால் அந்தத் தேவதைகள் எல்லாம் சுதந்திரமாக, சுய ரூபத்தில் முழுமையாகத் திரிகின்றன. 


ரஷ்யாவின் செவ்வியல் இசை மரபு என்பது கிராமிய இசையில் ஊற்றம் கொண்டு எழுந்த இயல்பான வளர்ச்சி. கிளிங்கா (Klinka) அவர்களின் காலம் தொடக்கமாக ஐரோப்பிய செவ்வியல் இசையில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. கிளிங்காவிற்குப் பின் பலர் செவ்வியல் இசையின் ஆலமரங்களாய்த் தொடர்ந்தனர். அந்த மரபில் Tchaikovsky (ச்டெய்க்கோவ்ஸ்கி) அவர்களுக்கு ஓர் தனி இடம் உண்டு. அவரது Piano முதலிய வாத்யங்கள் மூலமான இசை மொழியின் ஆழங்களால் ஈர்க்கப்பட்ட Rachmaninoff 1917ல் ரஷ்யா விட்டுக் கிளம்பு முன்பே தமது மஹத்தான படைப்புகளை யாத்துவிட்டார். அமெரிக்கா அவருக்குப் புகல் நாடாக உதவியது, பெவர்லி ஹில்ஸில் அவர் இறுதி நாட்கள்வரை. 

ரஷ்யாவின் இசை மரபு விமரிசகர்கள் அவரின் படைப்புகளைப் பெரிதும் குற்றம் கண்டே எழுதினர். மென்மையான மனம் கொண்ட Rachmaninoff மிகவும் மனம் உடைந்தார். தன்னை உளவியல் சிகிச்சை மூலம் அடுத்த படைப்புகளைத் தர உதவிய மருத்துவருக்கே தமது மீண்டு வந்த இசை யாப்பை அர்ப்பணித்தார். அவரது இசையில் எப்பொழுதும், சொல்லவரும் அரட்டை குறைவாகவும், உணர்த்தவரும் ஸ்வரங்களின் தூய பிரஸன்னம் அதிகமாகவும் இருந்த இயல்பால் இன்றும் அவரது இசை ஆதி நாதத்தில் குளித்து வந்த புத்துணர்ச்சியை நமக்கும் கடத்த வல்லதாகிறது. Sergei Rachmaninoff அவர்களின் Symphony No 2, E Minor, Opus 27 என்பது அவர் யாத்த சூழ்நிலையையும், முதன் முதலில் அந்த ஸிம்ஃபொனி மாஸ்கோவில் அடைந்த வரவேற்பையும் பற்றி நிகோலை பஷனோவ் தமது நூலான Rachmoaninov என்பதில் அருமையான விவரணை தருகிறார். இசைக்கான உரைநடையையே மேற்கத்திய இசை தத்துவ இயலாளர்கள் வளர்த்துள்ளனர். அந்த விவரணைகளைக் கொஞ்சம் தமிழில் தர முயற்சி செய்கிறேன்.: 


”26ஆம் தேதி ஜனவரி 1908ல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஸிம்ஃபொனி 2 வழங்கப்பட்டது. மூன்றாவது ஒத்திகையும் முடிந்து இசை யாத்தவர் தமது இசையீன் குழவியைத் தந்த உடனே சென்றுவிட்டார். மாஸ்கோ என்ன சொல்லுமோ என்று எதிர்பார்ப்பு. ஆனால் மாஸ்கோவும் அவருக்காகக் காத்துக் கொண்டுதான் இருந்தது. பழைய தலைமுறைகள் போய்விட்டன. புதிய இளைய தலைமுறைகள் புதிய ஆர்வத்தின் தொனிகளை வெளிப்படுத்தினர். 

நேரே வந்தார் இசை அரங்கிற்கு ராஹ்மனினோஃப். இதயம் கொஞ்சம் அடித்துக் கொண்டது. ஆனால் உள்ளே நுழையும் போதே அவரால் உணர முடிந்தது கூடியிருந்த உள்ளங்கள் அனைத்தும் இதயத் துடிப்பில் ஒத்திசைத்தன என்று! லாகவமான ஓர் உடல் வணக்கம் செய்து விட்டுத் தொடங்கினார். சட்டென்று திரும்பி வாத்ய அணிவரிசையைப் பார்த்தார். ஒரே சில்லென்ற அமைதி. அவருடைய உடல், நெடிய அந்த உருவம் உறைந்தது ஒரு கணம். கைகள் இசைக்குறிப்புகள் மயமாயின. முதல் இசைக் குறிப்பு அவருடைய கைகளில் முகிழ்த்தது. 


ஆழ்ந்த நிதானத்துடன் அமைதியின் விக்கல்களாய் செல்லோக்கள் (Cellos) தொடங்கின. கீழ்ஸ்தாயியில். திடீரென்று ட்ரம்பட்டுகளின் முழக்கம், பிரெஞ்சு ஊது குழல்களின் எக்காளம் மன்றத்தில் வெடித்தன. மொத்த ஊழி இசையும் சேர்ந்து கூரையில் கீழே தொங்குவது போன்ற பிரமை உள்ளே காற்றில் எங்கும் அப்பிக் கிடந்தது. ராஹ்ம்னனினோஃப் விட்டுப் பிடிக்கத் தெரிந்தவராய் இருந்தார். கை அபிநயங்களில் கச்சிதம். அவரது கையசைவுகளோடு சேர்ந்து மொத்த வாத்ய அணிகளும் மூச்சிழுத்து விட்டுப் பழகின. 


வாத்யங்கள் மட்டுமா? அவற்றோடு சேர்ந்து எண்ணற்ற இசைப் பிரியர்கள் ஹாலில், அவர்களுடைய உள்ளங்களும் ஊக்கங்களும் அவரோடு எழுந்து அவரோடு மயங்கி முயங்கின. அவர்களை எதுவுமே அச்சுறுத்த முடியாது என்றுதான் பட்டது. எதுவுமே, சூறைக் காற்று ஓலமிட்டால் என்ன, இடிகள் குழல் வேட்டுகளாய் உடைந்தால் என்ன, ட்ரம்பட்டுகளின் உயிர் உறைந்து போகும் போர் ஓலம் கேட்டால் என்ன, உயர எழும் குளம்படிகள், பூட்ஸ் குதிகால் படுஓசைகள் படியாய் எழுந்தால் என்ன, எதுவும் பொருட்டில்லை. 


வயல்வெளிகளில், காற்று வீசும் இரவுகளில் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே மக்கள் அவரை இசையில் மனத்தால் பின் தொடர்ந்தனர். 


இசையின் இந்த மந்த கதி மயங்கும் கட்டத்தில் இசையின் நடைபெயர்வு கண்ணுக்கே புலனாகிறது போன்ற ஒரு தோற்றரவு! ஒவ்வொரு முகிழ்ப்பிலும் விருப்பமின்றிப் பிரியும் ஒரு சிணுங்கல் தயக்கத்துடன், ஒவ்வொரு இசைச் சங்கதியும் அதிஅற்புதமான இசையின் மொத்த நெசவில் பின்னிப் பிணைந்து அந்தச் சுடரும் நிறங்களுடன், தழல் கொண்ட அந்த இங்கிதத்துடன்..... 

அப்படியே இசை, சிறுகச் சிறுக ஓய்வது போல் உள்ளொடுங்க....கிளாரினட் திடுமென்று சில்மிஷம் போல் கொஞ்சும் குரலில் சிந்து பாட, மூலையில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி, கருநீல ஆடையில், தன்னை மறந்து மகிழ்ச்சியில் துள்ளிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். 

ராஹ்மனினோஃப் அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம். தன் ஆசான்களில் ஒருவரான அந்த செர்கி இவானோவிச் தனயெவ் வருவாரா? நுழைவுச் சீட்டு அனுப்பி வைத்தாயிற்று. ஆனால்
தான் போய் நேரில் கூப்பிட நேரம் இல்லாமல் போனது. இல்லை வரமாட்டார்.... கண்ணுக்குப் பக்கத்து ஒளியும் காரிருளும் கலந்து மறைத்த கலவைக் காட்சியினூடு ஆஹா வாசலில் வந்து நிற்பது தனயெவ் அவரேதான். வந்து அழைத்து அமரச் செய்கின்றனர். ஒரு கணம் கண்கள் சந்தித்தன. கோபம் இல்லை. பெருமிதம். பேராநந்தம் அவரது கண்களில்

மிளிர்ந்தது கண்ணீரில் நெளியும் மின்னலாய். விமரிசகர்கள் எழுதினர்: 

'செர்கியின் இந்த ஸிம்ஃபொனி மறுமை உலகங்களையோ, அதிமானுட திறப்புகளையோ பற்றிய ஆவேச ஊக்கங்களாய் இல்லாமல் ஓ எவ்வளவு புத்தம் புதிய, இயல்பான, இயற்கையான தூய எழிலாய் ஒளி விடுகிறது!' 

ஆம் அவர்தம் இசைமொழி உள்ளதைப் பேசியது; உள்ளதை மட்டுமே பேசியது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, June 15, 2026

வர்ணதர்மமும் பாரதியாரும்

வர்ணதர்மம் என்றால் மனிதர்களால் செய்யப்பட்ட ஏற்பாடு என்று விளக்குகிறார் ஹரதத்தாசாரியர் தாம் ஆபஸ்தம்ப தர்ம ஸூத்திரத்திற்கு எழுதிய உரையில். அதாவது இன்னதைச் செய் என்பது விதி. இன்னதைச் செய்யாதே என்பது ப்ரதிஷேதம். செய்ய வேண்டியதை எப்படிச் செய்வது என்பது நியமம்.

விதி, நியமம், ப்ரதிஷேதம் இம்மூன்றும் அடங்கியது சமயாசாரம். இந்தச் சமயம் என்பது இன்றைய பயன்பாட்டில் மதம், வழிபாட்டு நெறி என்பதற்குப் பயன்படும் சொல். ஆனால் ஹரதத்தர் உரையில் அவர் சொல்வது துறைசார்ந்த சொல்லாகிய சமய ஆசாரம். அதற்குப் பொருள் மதம் அன்று. விதி, நியமம், ப்ரதிஷேதம் என்னும் மூன்று அம்சங்கள் கொண்ட சமுதாய ஒழுகுமுறை. What to do, how to do, what not to do என்பனதான் முறையே விதி, நியமம், ப்ரதிஷேதம் என்பன.

இந்த சமயாசாரத்தின் கீழ் வருவதுதான் வர்ணதர்மம். ஆபஸ்தம்பர் தமது நூலை ஆரம்பிக்கும் பொழுதே ‘சமயாசார தர்மங்களை இனி விளக்குகிறேன்’ என்றுதான் சொல்கிறார். இந்த சமயாசாரம் என்றால் என்ன என்று விளக்கும்பொழுது ஹரதத்தாசாரியர், விதி, நியமம், ப்ரதிஷேதம் என்னும் மூன்று பிரிவுகள் கொண்ட சமயாசாரம் என்னும் இதைத்தான் மனிதர்கள் செய்துகொள்ளும் ஏற்பாடு என்கிறார். அவருடைய வரிகள்:

‘..பௌருஷேயீ வ்யவஸ்தா சமய: | ஸ ச த்ரிவித: | விதிர் நியம: ப்ரதிஷேத இதி |’

ஆனால் பொதுவாக வர்ணதர்மம் என்றால் கீதையையும், அதில் ஸ்ரீக்ருஷ்ணனுடைய கருத்தான ‘குணம், தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டது வர்ணம்’ என்பதையும் மேற்கோள் காட்டுவது பொது வழக்கம். நால்வர்ணக் கருத்து என்னும் இதைக் கீதையின் சமுதாயக் கொள்கை என்று பெயரிட்டு அழைக்கிறார் மகாகவி பாரதியார்.

ஆனால் கீதையின் இந்தக் கருத்தின் அடிப்படையில் என்றேனும் நடைமுறை இருந்ததுண்டா என்னும் கேள்வியைத் தாமே எழுப்பி, அவ்வாறு என்றும் இருந்ததில்லை என்று பாரதி எழுதுகிறார். எதில்?

பாரதியார் The Crime of Caste என்று ஓர் ஆங்கிலக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் சாதி அல்லது வர்ணம் அல்லது காஸ்ட் என்பதைப் பற்றி எழுதுகிறார். பாரதியார் எழுதும் வரிகள்:

‘I may be permitted to call this Chaturvarnya (Four Varna System) by the name of "the Gita theory of society", although it is well known that the same ideal is upheld in most of the ancient writings. I do so for convenience. The Gita theory may or may not, promote the highest interests of man. It was never tried in its pure form, or, if it was, history tells us nothing about it....

'But the caste law is leagues away from the Gita theory....
'And instead of four varnas, you have four thousand castes! But, alas, the ignorant masses of our country have been made to believe that this caste chaos is a special divine gift to our country and whoever transgresses it has to go to hell. It is this belief more than anything else that makes people insensible to the injurious results of caste.'

அதாவது, சாதி அமைப்பு என்பது மாற்றவே கூடாத, தெய்வ வரமாக அமைந்த நெறிமுறை என்றும், அதை மீறினால் நரகம்தான் கிடைக்கும் என்றும் அறியாமையில் ஆழ்ந்த மக்களை நம்பவைத்து, இந்த நம்பிக்கையின் காரணமாகவே மக்கள் இதன் பாதிப்புகளைச் சகித்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள் என்று சாடுகிறார் பாரதியார்.

என்னதான் தீர்வு? பாரதி சொல்லும் விழிப்பின் வழி என்ன? அவரே தொடர்ந்து எழுதுகிறார்:

‘The sole remedy is in inter-dining and intermarrying. The others are mere quack remedies of an anaesthetic character. There are many difficulties in the way of applying this remedy on a large scale.'

அந்தக் கஷ்டங்கள் உணவு பழக்க வழ்க்கங்கள் சமபந்தமானவை என்றும், அதைப் பொறுமையாகத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் எழுதுகிறார். வேறு வழி இல்லையா? பாரதியார் எழுதுவது:

‘I repeat there are many - but not insuperable - difficulties in the way of applying that remedy. But there is no other remedy that the human mind can think of.'

'There is no rational excuse for not doing that.' என்று பாரதி எழுதியிருப்பது முக்கியமாகக் கருதத் தகும்.

சாதி அமைப்பை விமரிசித்தால் பொதுவாகச் சாதி அபிமானிகளாய் இருக்கும் மக்கள் கூறும் பதிலையும் பாரதி குறிப்பிடுகிறார். அது என்னவென்றால், ‘இங்குத்தான் இப்படி இருக்கிறதா? உலகத்தில் ஒவ்வொரு இடத்திலும் இதுபோன்று பிரிவினைகள், மக்கள் பிளவுண்ணும் பேதங்கள் இருக்கிறது அல்லவா?’ என்பதுதான். அதற்குப் பாரதியார் எழுதும் பதில்:

‘If other people are fools, that is no reason why we should be such'.

மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நாம் செய்த தவறை இன்று அவர்கள் செய்கி்றார்கள் என்றால் அவர்களை எச்சரித்து அந்தத் தீமையிலிருந்து விலக்குகிறவர்களாக நாம் செயல்பட வேண்டுமே அன்றி, அவர்கள் செய்வதை நாம் செய்வதற்கு வாய்ப்பான சால்ஜாப்பாகக் கருதக் கூடாது என்று தெருட்டுகிறார் பாரதி.

பாரதியின் இந்தக் கருத்துகளை யாரும் பேசுகிறார்களா தெரியவில்லை. ஆனால் எனது நூலான ‘வேதம் புதுமை செய்த பாரதி’ என்னும் நூலில் இதை விரிவாகப் பேசியிருக்கிறேன். சமீபத்தில் மறுபதிப்பாக வந்த ‘பாரதியின் காளி’ என்னும் என் நூலிலும் கூட. சந்தியா பதிப்பகம் இந்த இரண்டு நூல்களையும் போட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Monday, June 1, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 05

இந்துமதத்தின் ஆகச்சிறந்த பொதுமைக் கருத்தை மிக அழகாக, நகைச்சுவையுடன் இந்த சுலோகத்தில் வெளியிடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். அதுவும் இன்றைய காலத்தில் இந்துமதத்தில் உள்ளவர்கள் மட்டுமன்று, உலகெங்கும் உள்ள அக்கறை உள்ள பெருமக்கள் யாவரும் தம் உள்ளத்தில் நன்கு பதிவிடவேண்டிய சுலோகம் இந்த சுலோகம் ஆகும். 

முதல் நான்கு சுலோகங்களில் ஸ்ரீஆதிசங்கரர் சொன்னதைச் சற்று பார்ப்போம். மகாகவி பாரதியார் எழுதிய மாயா பஞ்சகம் அவருடைய கவிதையான ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்றால், ஸ்ரீஆதிசங்கரர் எழுதிய ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்னும் கவிதைதான் இந்த மாயா பஞ்சகம் என்பது. அதுவும் ஐந்தாவது சுலோகத்தில் ஆணித்தரமாக அவர் இடுகின்ற வேரான கருத்து இந்துமதத்தின் ஆகச்சிறந்த அடிப்படை ஆகும். 

மாயையின் விசித்திரத்தை வியக்கின்ற பகவத்பாதர் முதலில் இந்த மாயையை ஓர் அடைமொழி இட்டு நமக்கு அடையாளப் படுத்துகிறார். அதுதான் ‘ஆகாததை ஆக்கி, கூடாததைக் கூட்டி வைக்கும் மாயை’ என்பது. அகடித கடநா படீயஸீ மாயா. (கடித என்றால் சாத்தியப் படுத்தும் என்று பொருள். அகடித என்றால் சாத்தியப் படுத்த முடியாத என்று பொருள். கடநா என்றால் சாத்தியப் படுத்த என்று பொருள். படீயஸீ என்றால் வல்லமையுள்ளதாக இருக்கிறாய் என்று பொருள்.) இந்த மாயையானது சாத்தியப்படுத்த முடியாததை சாதிக்கும் வல்லமை கொண்டதாய் இருக்கிறது. எப்படி? 

சித் மயமாய் (அறிவு மயமாய்), ஆனந்த வடிவாய், என்றும் உள்ள ஒரே சத்யமான ஆத்மாவிற்குள்ளேயே இந்த மாயை என்ன செய்கிறது? உலகம் என்றும், அதில் ஜீவர்கள் என்றும், அந்த ஜீவர்களின் வியவகார நிலையில் அனைத்தையும் நியமிக்கும் ஈச்வரன் என்றும் இந்த ஜீவ ஜகத் ஈச்வர மூன்றை வியாவகாரிக சத்யமாகத் தோற்ற வைக்கிறது அன்றோ! 

அடுத்து, வேதாந்தம் கற்ற மிகப் பெரிய வித்வான்களையும் இந்த மாயை தன் வல்லமையால் பணம், காமம் முதலிய ஆசைகளைக் காட்டி, வெறும் நாலு கால் மிருகங்கள் போல் ஆக்கிவிடுகின்றது அன்றோ! 

அடுத்து, ஆத்மா முற்றிலும் சடம் என்பதே கலவாத தூய அறிவு மயமானது. ஆனாலும் இந்த மாயை என்ன செய்கிறது? ஐம்பூதச் சேர்க்கையால் ஆன சடமான சரீரத்தோடு ஒன்றுபட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இந்த ஜீவனைத் தான் இந்தச் சரீரம்தான் என்று முற்றிலும் நம்ப வைத்துவிடுகிறதே! 

அடுத்து, சத் சித் ஆனந்த வடிவான ஆத்மாவில் எங்கிருந்து வந்தது வர்ணம், ஜாதி, குணம் எல்லாம்? ஆனால் இந்த மாயை என்ன செய்கிறது? இந்த ஜீவனை, தான் பிராம்மணன், தான் வைசயன் என்றெல்லாம் தன்னைப் பற்றி அகங்காரம் கொள்ளச் செய்து, என் மக்கள், என் மனைவி, என் கணவன், என் வீடு என்றெல்லாம் மமகாரம் என்ற உடைமை உணர்வில் இந்த ஜீவனை மயங்கச் செய்து விடுகிறதே! என்ன வியப்பு! 

ஐந்தாவதாக, இந்த மாயை செய்யும் விசித்திரம் பற்றிச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். சத் சித் ஆனந்த மயமான ஆத்மாவே பிரம்மமாக இருக்கிறது. அதில் ஜீவன், ஜகத், ஈச்வரன் என்று பேதங்கள் எல்லாம் மாயை உண்டாக்கும் தோற்றம். ஆயினும் மெத்தப்படித்த ஞானியரும் கூட என்ன செய்கின்றனர்? அந்தப் பிரம்மம் விஷ்ணுதான் இல்லை இல்லை சிவன் தான். இல்லை இல்லை நான்முகன் ஆகிய பிரம்மன் தான், என்று பேதங்களில் தம்மை இழந்து, பரம்பொருள் ஒன்றே, ஞானியர் பலவிதமாக அதை விவரிப்பார்கள் என்று வேதம் சொல்வதையும் மறந்து, மிகுந்த பிரமையில் அன்றோ ஆழ்த்திவிடுகிறது! என்ன வியப்பு இந்த மாயை! 

‘விதி ஹரிஹர பேதம் அபி அகண்டே 

பத விரசய்ய புதாநபி ப்ரகாமம் | 

ப்ரமயதி ஹரிஹர விபேதபாவாந் 

அகடித கடநா படீயஸீ மாயா ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, May 31, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 04

பொதுவாக உலகில் ஒரு பொருள் தான் என்னவாக இருக்கிறதோ உண்மையில், அது தெளிவாகவும், திடமாகவும் இருக்கும். தன்னை வேறு ஒரு பொருளாக யாரேனும் நினைத்து மயங்கினால் அவர் பொருளாகிய தன்னை நன்கு நோக்கினால் போதும், உண்மையில் தான் எந்தப் பொருள் என்பதை விளக்கும் வகையில் அந்தப் பொருள் இருக்கும். 

உலோகத்தால் ஆனது போல் ஒரு சிறிய பெட்டி கீழே கிடக்கிறது. பார்த்தால் உலோகம் போல்தான் படுகிறது. ஆனால் நிச்சயம் இல்லை. வேறு பொருளாக இருக்குமோ என்று சந்தேகம். எடுத்துப் பார்த்தால் அது ஏதோ ப்ளாஸ்டிக் போன்ற மென்மையான பொருளால் ஆனது. உலோகச் சாயம் பூசியதால் அப்படித் தெரிகிறது என்று புரிய வருகிறது. பேருந்து வருவதற்குக் காத்திருக்கிறோம். நாம் எதிர்பார்த்த நம்பர் பேருந்துதான் வருகிறது என்று தோன்றுகிறது. ஆனால் கிட்ட வந்ததும் நன்கு கவனித்தால் அது வேற நம்பர். 

அதாவது உண்மையில் இருப்பது எதுவோ அது நம் ஐயத்தைப் போக்கித் தன்னை நன்கு திடமாகக் காட்டுவதாக அமைந்திருப்பதுதான் உலகில் அனுபவம். ஆனால் மாயை இந்த அனுபவத்திலும் ஒரு விசித்திரத்தை நிகழ்த்துகிறது. நடைமுறையில், வியவகாரத்தில், தோற்றம் மிகத் தெளிவாகவும், திடமாகவும் அனுபவப் படுகிறது. ஆழ்ந்த சிந்தனை ஆராய்ச்சி என்பதன் விளைவாகப் புரியவரும் உண்மை வெறும் தோற்றம் போல் நிழலாடச் செய்கிறது. தோற்றம் திடமாகவும், தத்துவம் நிழலாகவும் தோன்றும் விசித்திரம் இந்த மாயையின் ஜாலம். 

இருக்கின்ற ஒரே உண்மை என்னவோ இந்த ஆத்மா. அறிவு மயமாகவும், ஆனந்த மயமாகவும் ஆனது ஆத்மா. சித் வடிவாகவும், சுக வடிவாகவும் உள்ள இந்த ஆத்மா யாருக்கேனும் நிச்சயமாகத் தெரிகிறதா? ‘அப்படி என்று சொல்வார்கள்’, ‘ஏதோ புத்தகத்தில் படித்தது. யார் கண்டார்?’ - இப்படித்தான் பதில் சொல்வோம். ஆனால் அந்தப் பதிலைச் சொல்வதும் ஆத்மாவாகிய நாம்தான் என்பது விநோதம். 

வெட்ட வெளிச்சமான, பட்டப் பகல் போன்ற உண்மை நிச்சயமற்றது போல் தோன்றுகிறது. ஆராய்ந்து பார்த்தால் தன் இருப்பே இல்லாமல் போகும் வியவகார வஸ்துகள் ஆகப்பெரும் சத்யம் போல் திடமாகத் தோன்றுகின்றன. குணம், வர்ணம், ஜாதி என்று எதுவுமற்ற ஆத்மாவில் நான் பிராம்மணன், நான் வைச்யன், போன்ற வர்ண ஜாதி பேதங்கள் சார்ந்த அஹங்காரம் எப்படித் தோன்றுகிறது? இது என் பிள்ளை, இது என் மனைவி, கணவன், இது என் வீடு போன்ற மமகார மயக்கங்கள் தோன்றுவது எப்படி இந்த ஆத்மாவில்? இப்படி வியவகாரத்தில் தோற்றத்தை மிகத் தெளிவானது போல் காட்டும், ஆகாததை ஆக்கி, கூடாததைக் கூட்டி வைக்கும் வல்லமை உள்ள இந்த மாயையின் விசித்ரம்தான் என்னே! 

‘அபகத குணவர்ண ஜாதி பேதே 

ஸுகசிதி விப்ரவிடாதி அஹங்க்ருதிம் ச | 

ஸ்புடயதி ஸுததாரகேஹ மோஹம் 

து அகடிதகடநா படீயஸீ மாயா ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, May 28, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 03

படித்தவர்களையும் சிலசமயம் பட்டிநிகராக ஆக்கிவிடுகிறது இந்த மாயை. சேராததைச் சேர்த்து, கூடாததைக் கூட்டி இந்த மாயை ஆடும் விளையாட்டு இந்த உலகம். பொருள் இல்லாப் பொருளின் விளைவு இல்லா விளைவு என்கிறார் மகாகவி பாரதியார். ஸ்ரீஆதிசங்கரர் இந்த மாயையின் விளையாட்டை, விசித்திரத்தை வியக்கிறார். காரணம், உண்மையில் இருப்பது சித் மயமாகவும், ஆனந்த மயமாகவும், தன்னைத் தவிர இரண்டாவது இல்லாததும், எல்லை பிரிவு அற்றதுவாய், என்றும் உளதான ஆத்மா ஒன்றே இருக்கிறது. ஆயினும் எங்கிருந்து ஆகாயம், வாயு, நெருப்பு, நீர், மண் என்று ஐம்பூதச் சேர்க்கையும், அதனால் ஆன உடலும், அந்த உடலே தான் என்ற மயக்கமும், அந்த மயக்கத்தால் அடுத்து அடுத்து மாறி மாறி நீளும் பிறப்பு இறப்பு என்னும் பிறவாழித் தொடரும் எல்லாம் இந்த அகண்டமான அறிவு மயமான ஆத்மா என்பதற்குள்தான் நடக்கிறது. பிரபஞ்சமே தோன்றி, தொடர்ந்து, தோய்வதும் இந்த சித் மயமான ஆத்மாவினுள்தான். 

‘சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகு சமைத்தாய்’ என்கிறார் பாரதி. ஆகாததை ஆக்கிவைக்கும் சாமர்த்தியம் உள்ள மாயை என்று வியக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். ‘அகடிதகடனா படீயஸீ மாயா’. 

‘அம்மா! காளீ! நீயும் என்னை விழிப்புடன் பார்த்தவண்ணம் இருக்கிறாய். நானும் உன் பிரசன்னத்தில்தான் விழிப்புடன் இருக்கிறேன். பின் எப்படி நடந்தது இந்தக் களவு?’ என்று சண்டை போடுகிறார் வங்காளத்துக் காளிபக்தர் ஸ்ரீராம்பிரசாதர்.

‘ஸுகசித் அகண்ட விபோதம் அத்விதீயம் 

வியத் அநிலாதி விநிர்மிதே நியோஜ்ய | 

ப்ரமயதி பவஸாகரே நிதாந்தம் 

து அகடிதகடனா படீயஸீ மாயா ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Sunday, May 17, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 02

என்னவெல்லாம் செய்கிறது இந்த மாயை! விவரம் தெரியாதவர்கள் சத்யம் எது என்று அறியாமல் மயங்கினால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் படித்தவர்கள்? வேதங்களைக் கற்று, வேதாந்தம் என்னும் உபநிஷதங்களை நன்கு கற்றுத் தேர்ந்து அறிஞர்களாக இருப்பவர்களும் கூட, பணம் மற்றும் பல நயங்களைக் கண்டு மனம் பேதுற்று, நாலுகால் பிராணிகளைவிட வித்யாசம் எதுவும் இல்லாதவர்களாய்க் கலங்க வைத்துவிடுகின்றதே சில சமயம் ! அப்படி ஆக்கிவிடுகிறதே இந்த மாயை! ஆகாததை ஆக்கிவைக்கும் இந்த மாயையின் வியப்புதான் என்னே! 

‘ச்ருதிசத நிகமாந்த சோதகாநபி 

அஹஹ தநாதிநிர்தர்சநேந ஸத்ய: | 

கலுஷயதி சதுஷ்பதாதி அபிந்நாந் 

அகடித கடநா படீயஸீ மாயா ||’ 


ஸ்ரீதாயுமானவ சுவாமிகள் அருமையாகப் பாடுகிறார்: 

‘ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு? 

என் அறிவு அன்றி இடம் இல்லையோ? 

அந்தரப் புஷ்பமும், கானலின் நீரும், ஓர் 

அவசரத்து உபயோகமோ? 

போதித்த நிலையையும் மயக்குதே! அபயம் நான் 

புக்க அருள் தோற்றிடாமல், 

பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி, என் 

புந்திக்குள் இந்த்ரஜாலம் 

சாதிக்குதே! இதனை வெல்லவும் உபாயம் நீ 

தந்து அருள்வது என்று புகல்வாய்?’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Friday, May 15, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 01

மெட்ரோ தடம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெரிய சைஸ் பொருட்களை அநாயாசமாகத் தூக்கி வைக்கிறது ஒரு கிரேன். கீழே பாறை போன்று கல்பகுதி இருந்தால் வெடி வைத்துத்தான் தகர்க்க முடிகிறது. மிக உயரத்தில் உழைப்பாளர் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். கீழே இருந்து பார்த்தால் மிகச் சின்ன உருவம். அவர்தான், அவரைப் போலப் பலர்தான் சிறுகச் சிறுக, கணத்திற்குக் கணம் வேலை செய்து இத்தனை பெரிய, நீளமான வேலையை இயற்றுகின்றனர். ஒரு நிமிஷம், இந்தப் பெரிய கற்கள், இரும்புப் பொருட்கள், இயந்திரங்கள், மனிதர்கள், கிரேன்கள் எல்லாம் உண்மையில் கனமற்ற வெட்ட வெளி என்று சொன்னால் என்னை நீங்கள் சிரிக்க மாட்டீர்களா? எவ்வளவு கனம், பரிமாணம், நிச்சயம் எல்லாம் கண்ணுக்கும், அனுபவத்துக்கும் தெரிந்தும் எல்லாம் உண்மையில் வெட்ட வெளி என்று சொன்னால் அது சரியான முட்டாள்தனம் இல்லாமல் வேறு என்ன? 

நான் சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் அறிவியல் சொன்னால் என்ன செய்வீர்கள்? சாதாரண அனுபவத்தில் நீங்கள் நினைப்பதுதான் சரி. நானும் அதைத்தான் உணர்கிறேன். ஆனால் ஆழமாக அறிவியல் ரீதியாக ஆராய்ந்து போகும் பொழுது. பொருளின் அடிப்படைத் தன்மை என்று போய்ப் பார்க்கும் பொழுது விஞ்ஞானம் சொல்வது என்ன? இரும்பையோ, கல்லையோ எடுத்துக் கொள்வோம். நுணுக்கமான நிலையில் அது எதனால் ஆனது என்று பார்த்தால் அணுவால் ஆனது. அணுவின் அமைப்பு ரீதியாகப் போய்ப் பார்த்தால் ந்யூக்ளியஸ் அதைச் சுற்றி எலக்ட்ரான்கள். இந்த ந்யூக்ளியஸுக்கும், எலக்ட்ரானுக்கும் இடையில் இருப்பது வெட்ட வெளிதான். ந்யூக்ளியஸுக்குள் ஓர் அமைப்பு. அதனுள்ளும் வெட்ட வெளி. அதாவது வெட்ட வெளி என்பதை அகற்றி விட்டுப் பொருட் கூற்றின் பகுதியை மட்டும் உருட்டி வைத்தால் இந்த பூமியே சின்ன கோலி குண்டு அளவுக்கான குளிகை ஆகிவிடும் என்கிறார்கள். அப்படியென்றால் வெட்ட வெளியே பெரும்பாலும் நிறைந்த அமைப்புக் கட்டிடம்தான் நாம் காணும் கனமான பொருட்கள், நமது உடல், வெளியில் இருக்கும், நகரும் நகரா பொருட்கள் அனைத்தும். அதாவது வெட்ட வெளிக்கு மேல் வெட்ட வெளி நின்று கொண்டும், நகர்ந்து கொண்டும் போடும் ஆட்டம்தான் உலக இயக்கமோ என்று கவிதை இயற்றலாம் போல் இருக்கிறது யதார்த்த உலகம். 

ஆனால் நடைமுறை அனுபவத்தில் அப்படித் தெரிவதில்லை. ஆழ்ந்து ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாகச் சிந்தித்தால்தான் இந்த உண்மை தெரிகிறது. இதைத்தான் அத்வைதம் வேறு மொழியில் சொல்கிறது. அதாவது வியாவகாரிக நிலையில் ஒருவித உண்மையாக உலகம் புரிய வருகிறது. ஆனால் பாரமார்த்திக நிலையில் உண்மை என்பது முற்றிலும் வேறு என்று. பரம அர்த்தம் என்றால் Final Meaning. பரம அர்த்தம் என்பதனுடைய adjectival form பாரமார்த்திகம். பாரமார்த்திகம் என்றால் Meaning arrived at the final analysis என்று பொருள். ஆனால் பாரமார்த்திகம் என்ற சொல்லை நாம் போட்டுக் குழப்பிக் கொண்டு என்னவோ ஏதோ என்று பூடகமாக்கி மயங்குகிறோம். 

சரி. இதுதான் இப்படி என்றால், நமக்குத் தெரிந்தவர் ஒருவர் அயல்நாடு போகிறார். இன்றுதான் கிளம்பினார். இன்றைக்கு என்ன தேதி என்று கூட நம்மிடம் கேட்டார். சொன்னோம். ஆனால் பல மணி நேரங்கள் கழித்து, மறு நாள் இரவு போன் பண்ணுகிறார். பேச்சு வாக்கில் இன்றைக்குத் தேதி என்று நேற்றைய தேதியையே சொல்கிறார். இல்லை சார். இன்றைக்குத் தேதி என்று கரக்டாக நாம் சொல்கிறோம். இல்லவே இல்லை. இந்தத் தேதிதான் என்று அவர் முதலில் தவறாகச் சொன்னதையே மீண்டும் சொல்கிறார். என்ன ஆயிற்று இவருக்கு! அப்புறம்தான் விளக்குகிறார். அவ்வளவு நெடிய தொலைவு பறக்கும் போது காலக் கோடு மாறுகிறதாமே! இன்றைக்குக் கிளம்பி, நாளைக்குப் போய், மீண்டும் இன்றைக்கே அந்தத் தொலைதூர இடத்தை அடைந்து விடுகிறார் அவருடைய கணக்கின் படி. இதற்கே தலை சுற்றினால் எப்படி? 

விஞ்ஞானம் வேறு ஒரு விஷயம் சொல்கிறது. ஒளிதான் இருப்பதிலேயே மிக அதிக வேகமாகச் செல்லும் ஒன்று. ஆனால் அந்த ஒளியே சூரியனை விட்டுக் கிளம்பி நம்மை வந்தடைவதற்குள் 8 நிமிஷம் கடந்துவிடுகிறது. அதாவது எட்டு நிமிஷத்திற்கு முந்தைய சூரியனைத்தான் ஒவ்வொரு கணமும் நாம் காண முடிகிறது என்று பொருள். சூரியனாவது பரவாயில்லை. இன்னும் சில விண்வெளிக் கோளங்களிலிருந்து நமக்கு ஒளி வந்து சேரப் பல ஆண்டுகள், பல நூற்றாண்டுகள் கூட ஆகின்றன என்று விஞ்ஞானம் சொல்கிறது. அதாவது இன்று நேற்று நாளை என்பது ஒரு சின்ன எல்லைக்குள் நாம் ஆடுகின்ற பாண்டி விளையாட்டு. நமக்கு வாய்த்த எல்லைக்குள். நம் எல்லைகளை நாம் விரிவுபடுத்திப் பார்க்கலாம். அதாவது சில்லாக்கைச் சற்றுத் தள்ளித் தள்ளிப் போட்டு விளையாடலாம். ஆனாலும் என்றுமே இச்சா இனியாதான். 

ஒரு கற்பனை. ஒளியின் வேகத்தை விட அதிகமாகச் செல்லும் ஒரு ராக்கட் கட்டி அதில் பயணப்பட்டுப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போய்விட்டு ஓர் அரைமணி நேரத்தில் திரும்பி வந்து விடுவோம் என்றும் வைத்துக் கொள்வோம். வந்து பார்த்தால் பல நூறு வருஷங்கள் கடந்து போய்விட்ட பூமிக்கும், அதில் நாம் கிளம்பிய நம்முடைய வீட்டிற்கும் ( அப்படி ஒரு வேளை அப்படியே அந்த வீடும், சூழலும் காப்பாற்றப் படுமானால் ) வந்து சேருவோம். 

விஷ்ணு புராணத்தில் ககுத்மியின் பெண் ரேவதியைப் பற்றிய கதை வருகிறது. ரேவதியை அழைத்துக் கொண்டு ககுத்மி பிரம்ம லோகம் போகிறார். பிரம்மா ஏதோ வேலையாக இருக்கவும் சற்றே காத்திருக்கிறார். மிகச் சிறிய காலம்தான் காத்திருக்க வேண்டியிருந்தது. உடனேயே பிரம்மா ‘என்னப்பா! என்ன இங்கெ வந்திருக்கிறாய்?’ என்று கேட்டார். பெண்ணுக்கு நல்ல வரன் அமைய வேண்டும். நீங்கள்தான் வரம் தர வேண்டும் என்றார். பிரம்மா சிரித்தார். ‘என்ன ஆளுய்யா நீ? காலம் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு கணக்கில் ஓடுகிறது. நீ ஒரே காலம்தான் பூமியிலும், இந்த மண்டலத்திலும் என்று நினைத்துக் கொண்டு வந்து விட்டாய். நீ இங்கே காத்திருந்த சில நிமிஷப் போதுகளில் உங்கள் பூமியில் பல சதுர்யுகங்கள் கடந்து போய்விட்டன. நீ இப்பொழுது மீண்டும் போனால் உன் ராச்சியம் இருக்காது, உன் உறவினர் யாரும் இருக்க மாட்டார்கள். நீ வரும் பொழுது இருந்த உலகமே இருக்காது. எல்லாம் மாறிவிட்டது, கடந்து விட்டது’ என்று கூறுகிறார். ககுத்மி, ரேவதி, பிரம்மா எல்லாம் புராணப் பெயர்களாக இருக்கலாம். ஆனால் சொல்லப் பட்ட விஷயம் காலத்தையும், ஆகாய வெளியையும் பற்றிய உண்மை விஞ்ஞானம் இன்று சொல்லும் உண்மை. 

இந்த சிருஷ்டி, இந்தப் பிரபஞ்சம் இதை நன்கு புரிந்துகொள்ளக் கவனம் செலுத்தினால் முழுக்க முழுக்க வியப்புதான். இந்த வியப்புதான் மாயை. இந்த மாயையை உடலும், மனமும் கொண்ட சமுதாய நிலைப்பட்ட மனிதன் என்ற கோணத்திலிருந்து விஞ்ஞானம் வியந்தும், நயந்தும் ஆய்வு நடத்துகிறது. 

இந்த மாயையை உடலும், மனமும் உபாதிகளாகக் கொண்ட ஜீவநிலை கடந்த, காலம், தேசம் என்ற எல்லைகள் அற்ற ஆத்மாவின் நிலையில் நின்று வியந்து ஸ்ரீஆதிசங்கரர் பாடிய ஐந்து சுலோகங்கள்தாம் இந்த மாயா பஞ்சகம் என்பது. 

காலம், தேசம், உடல், மனம், பஞ்ச பூதங்கள் என்ற உபாதிகளின் உள்ளே நிலவும் பிரபஞ்சத்திலேயே ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானம் இயற்கையின் அதிசயத்தை, காலத்தின் தன்மை, வெட்ட வெளியின் தன்மை எல்லாம் எவ்வளவு வினோதமாகவும், விடை ஓயாத புதிராகவும் விரிகிறது, மாறுகிறது என்னும் மாயா விசித்ரத்தை வியக்கிறது. 

மெய்ஞ்ஞானமோ உபாதிகளைக் கடந்து, உணர்வுமயமாகி நின்று, ஆத்ம போதத்தில், சித் ஸ்வரூபமாய் நின்ற அகண்டத்தில் இந்தப் பேத விசித்ரங்களை எப்படி மாயா ஜால நிகழ்ச்சிகள் போன்று நடத்துகிறது இந்த மாயை என்று வியக்கிறது. விஞ்ஞானத்தின் வியப்பு இன்றைய நவீன க்வாண்டம் அறிவியல் என்றால், மெய்ஞ்ஞானத்தின் வியப்பு பகவத்பாதரின் இந்த மாயா பஞ்சகம். 

இந்த மாயா பஞ்சகத்தில் பேசுவது யார் என்று பார்த்தால் நீங்கள், நான், அவர். ஆம். உடல்கள் தோறும் உள் நின்ற உயிராக இருப்பது நான் என்ற கண்ணன் கூற்றின் வெளிப்பாடுதான் இந்த வியப்பு. 

இதைப் புரிந்துகொள்ள ஒரு சின்ன உத்தி: வெட்ட வெளியில் இருக்கும் பொருளாக இல்லாமல் நீங்கள் உங்களை அந்த வெளியாகவும், உங்களுக்குள் இந்தப் பொருட்களும், பிரபஞ்சமும் உள்ளடங்குவதையும் ஒரு கற்பனையாகவேனும் தியானித்துப் பாருங்கள். உபாதிகளின் கட்டமைப்பிலிருந்து வெளியேறிய பார்வையைப் பெற அது ஒரு நல்ல பயிற்சி ஆகும். அந்தப் பார்வைக் கோணத்தில் நின்று புரிந்துகொள்ள வேண்டிய கருத்துகள் ஸ்ரீஆதிசங்கரர் இங்கே கூறும் கருத்துகள் என்பதை மறக்காதீர்கள். 

பார்த்தல் என்றதுமே நமக்கு மனத்தில் எழும் சித்திரம் ஓர் உருவம், அதற்குக் கண்கள். அதன் விழியில் படும் பொருட்கள். இந்தச் சித்திரத்தை மாற்றி உருவம் இல்லாது, விழி, கண் என்று இல்லாமல் பார்வை மட்டுமே, பார்வையாகவே பரந்த, நிறைந்த ஆகாயம். பார்வையாகவே ஆகிய தளம். Perceiving Field. அதுதான் நீங்கள் என்பதை எவ்வளவு ஆழமாக உள்வாங்குகிறீர்களோ அந்த அளவிற்கு ஸ்ரீஆதிசங்கரர் உங்களுக்கு அர்த்தம் ஆவார். 

நிச்சயம். சித் மயமாக இருக்கும் ‘உங்களுக்கு’ (எனக்கு, அவருக்கு) ஒப்புமையாக, உதாரணமாகக் காட்டக் கூடிய வேறு ஒன்று எங்கே இருக்கிறது? அன்றும், இன்றும், என்றும் இருக்கும் சித் கனமாகிய உங்களுக்கு மாற்றமோ, மறைவோ, என்றும் இல்லை என்பதனால் நீங்கள் நித்யம் ஆனவர். முற்றிலும் அறிவே மயமாக சித் மயமாக இருக்கும் உங்களிடம் இவ்வளவு அம்சம் என்று கூறுபோட்டுப் பார்க்க இயலாது ஆகையினாலே நீங்கள் நிரம்சகர். உடலாக இருந்தால் இதுதான் உங்கள் உருவம். இதனோடு நீங்கள் முடிந்துவிடுகிறீர்கள் என்று எல்லைகளை வகுத்துக் கூறலாம். ஆனால் அறிவு மயமான ஆகாயமாக இருக்கும் உங்கள் இருப்பு கண்டமானது (பகுதிபடுத்தக் கூடியது) அன்று. நீங்கள் அகண்டம். அறிவு மயமான உங்களிடம் (சித் மயமான உங்களிடம்) சித் இல்லாத வேறு எதுவும் கலந்திருந்தால் உங்களுக்குள்ளேயே கூட எதுவரை சித், இது சித் பகுதியா அல்லது சித் அற்ற பகுதியா என்று வேறுபடுத்திப் பார்க்க (விகல்பித்துப் பார்க்க) முடியும். முழுக்க முழுக்க சித் மயமே ஆன அகண்டாகார வெளியாக இருக்கும் உங்களிடம் அப்படி ஏதும் விகல்பிக்க முடியாது. அனைத்துவித விகல்பிக்கலாம் சாத்யங்களும் அற்றுப் போன நிலை உங்கள் நிலை. ஸர்வவிகல்பனாதிசூந்யம். இங்குதான் உங்கள் வியப்பின் தொடக்கம். 

இப்படி சித் மயமான அகண்டாகார வெளியாக, மாற்றம், மறைவு, கூடுதல், குறைவு, வேறுபடுதல் எனும் எதுவுமற்ற சைதன்யமாகிய என்னிடம் (நீங்கள் சிதாகாசம், உங்களுக்குள் அடங்கியிருப்பது பிரபஞ்சம்) ஜகத் என்றும், அதில் ஜீவர்கள் என்றும், அதில் நான் ஒரு ஜீவன் என்றும், ஜகத்துக்கும், ஜீவர்களுக்கும் நியாமகமாய் ஈச்வரன் என்றும் இப்படிப் பேதமயமான சித்திரத்தை, சாத்யமே இல்லாத இத்தகைய வியாவகாரிக உலகைச் சாத்யப்படுத்தி நடத்துகிறதே இந்த மாயை! என்ன வியப்பு என்ன வியப்பு ! 

நிருபம நித்ய நிரம்சகேSபி அகண்டே 

மயி சிதி ஸர்வ விகல்பநாதி சூன்யே | 

கடயதி ஜகதீச ஜீவ பேதம் 

து அகடித கடநாபடீயஸீ மாயா ||’ 

 

‘சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்குச் 

சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய் 

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம் 

ஆகப் பலபல நல்லழகுகள் சமைத்தாய்’ (மகாகவி பாரதி) 

’சக்தி முதற்பொருள் 

பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு 

சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை 

சக்திவீணையிலே ஞாயிறு ஒரு வீடு, ஒரு ஸ்வரஸ்தானம் 

சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்’ (மகாகவி பாரதி) 

 ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, May 6, 2026

அத்வைத பஞ்சரத்னம் 05

மிகப் பெரிய பிரபஞ்ச உண்மை ஒன்றை இந்தச் சுலோகத்தில் கூறுகின்றார் ஸ்ரீஆதிசங்கரர். உண்மையில் மொழியில் கொண்டுவர மிகவும் சிரமமான உண்மை இது. மொழி குளறுபடி ஆகும். மிகவும் முயன்றால் மொழியில் வெறுமனே கோடிகாட்டத்தான் முடியும். ஆனாலும் அந்த உண்மையை மக்களுக்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்ற பெரும் ஆவல் ஸ்ரீசங்கரரை உந்துகிறது. இதைப் புரிந்துகொள்ளுவதற்கு ஓரிரு விஷயங்களை நன்கு மனத்தில் வாங்கிக் கொண்டால் நன்கு யூகிக்க வசதியாக இருக்கும். 

நீங்கள் மனத்தால் ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். உங்களைச் சுற்றிலும், அறையிலோ, அலுவலகத்திலோ, தெருவிலோ எங்கும் நீங்கள், மற்றவர்கள், மற்ற பொருட்கள், இந்த மனிதர்கள், உயிர்கள், பொருட்கள் எல்லாவற்றையும் உட்கொண்ட ஆகாயம், வெட்ட வெளி அனைத்தையும் உள்ளடக்கியபடி விரிந்து பரந்து அனைத்தையும் கவிந்திருக்கிறது. நீங்கள் விளையாட்டாக ஒரு கற்பனையைச் செய்து பாருங்கள். அதாவது நீங்கள் இந்த ஆகாயத்தினுள் அடங்கியுள்ள ஒரு பொருளாக, ஒரு எண்டிடியாக இல்லாமல், நீங்கள்தான் இந்த பரந்த ஆகாயம். உங்களுக்குள்தான் இந்தப் பொருட்கள், மனிதர்கள் எல்லாரும் இருக்கின்றனர். இதை நன்கு கற்பனை செய்து தத்ரூபமாக நினைத்துப் பாருங்கள். 

உங்களுக்குள்தான் எல்லாப் பொருட்களும், அவற்றின் இயக்கங்களும் நிகழும். நீங்கள் எந்தப் பொருளாலும், எந்த இயக்கத்தாலும் பாதிக்கப்படாத ஆகாயமாகச் சாட்சியாக மட்டும் இருப்பீர்கள். அதாவது நீங்கள் நன்கு கற்பனை செய்வீர்கள் என்றால், ஆகாயத்தினுள் அடங்கிய பொருளாக இருப்பதற்கும், அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கிய ஆகாயமாக இருப்பதற்கும் இயல்பிலேயே வேறுபாடு என்ன என்பதை யூகிக்க முடியும். 

அடுத்து, ஒரு பெரும் நிலைக்கண்ணாடி முன்னால் நில்லுங்கள். அதனுள் தெரியும் ஆகாயம், பொருட்கள், உங்களுடைய பிம்பம், மற்றவர்களின் பிம்பம் என்ற அனைத்தும் கலந்த ஓர் உலகமே அந்தக் கண்ணாடியுள் தெரிகிறது. வெளீயில் நீங்கள் இருக்கின்ற உலகம் சரி. ஆனால் கண்ணாடியுள் தெரியும் உலகத்தில் உங்கள் பிம்பம், பொருட்களின் பிம்பங்கள் எல்லாம் தத்ரூபமாகத் தெரிகின்றன, நகர்கின்றன, உங்கள் பிம்பமே இடம் வலம் மாறினாலும் கூட உங்களை மாதிரியே பேசுகிறது, கைகால் அசைக்கிறது. அப்படியென்றால் கண்ணாடிக்குப் புறத்தே தெரியும் நீங்கள் இருக்கின்ற இந்த உலகத்தைப் போன்றே, கண்ணாடியினுள் தெரிகின்ற அந்தப் பிரதிபிம்ப உலகமும் அதேபோல் உண்மையா? அப்படியென்றால் நீங்கள் வாங்கி மாட்டிய இந்தக் கண்ணாடிக்குள் ஓர் உலகமேவா இருக்கிறது? இல்லையே. அந்தப் பிரதிபிம்ப உலகம் உங்கள் உலகத்தைப் போன்று உண்மை இல்லை என்பது இப்பொழுது உங்களுக்குப் புரியும். அப்படியென்றால் கொஞ்சம் விடாமல் சிந்தனையைச் செலுத்தி இன்னும் ஒரு விஷயத்தையும் மனத்தில் வாங்கப் பாருங்கள். நீங்கள் இருக்கும் இந்த நிஜமான உலகமே மிகவும் மெய்ம்மையான கடந்தநிலையில் இருக்கும் ஒரு பரம சத்யத்தினுள் தோன்றும் ஒருவித பிரதிபிம்ப உலகம்தான் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? 

நாம் இப்பொழுது பார்த்த இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் நன்கு புரிந்துகொண்டால் ஸ்ரீஆதிசங்கரர் சொல்லும் இந்தச் சுலோகம் உங்களுக்குச் சுலபமாக இருக்கும். 

ஆத்மவஸ்து ஆகிய நான் மட்டும்தான் இங்கு இருக்கிறேன். என்னைத் தவிர ஒரு பொருள் இங்கு இல்லை. என்னிலும் வேறாகப் பிரபஞ்சம் என்று எதுவும் இல்லை. மாயையின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வெளி, பொருட்கள் முதலிய பேதங்கள் எல்லாம், இரண்டற்ற அத்வைதமான என்னிடம், கண்ணாடியினுள் தோன்றும் பொருட்கள் போன்று, எனக்குள்ளேயே தெரிகின்றன. இவை எவற்றாலும் சிறிதும் பாதிக்கப்படாமல் விளங்குவதால் நான் சிவமாகிய பிரம்மமேயாக இருக்கிறேன்.’ 

‘மத்தோ நாந்யத் கிஞ்சிதத்ராஸ்தி விச்வம் 

ஸத்யம் பாஹ்யம் வஸ்து மாயோபக்லுப்தம் | 

ஆதர்சாந்தர் பாஸமானஸ்ய துல்யம் 

மய்யத்வைதம் பாதி தஸ்மாச்சிவோSஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, May 5, 2026

அத்வைத பஞ்சரத்னம் 04

பிறந்து வளர்கிறோம். அப்பொழுது இயற்கையின் ரீதியாகப் பல நெறிகளை நாம் கடைப்பிடித்தாக வேண்டியிருக்கிறது. வளர்ந்த நிலையில் நம்மால் தாங்கக் கூடிய சில விஷயங்கள், பிறந்த குழந்தை நிலை, சற்று வளர்ந்த சிறுவயது நிலையில் எல்லாம் சாக்கிரதையாகத் தவிர்க்கப் படவேண்டியவையாய் இருக்கும். வளர்ந்த பின்னரும் பல சூழல்களைப் பொறுத்துச் செய்ய வேண்டியன, செய்யத் தவிர்க்க வேண்டியன, தட்பவெட்ப நிலையைப் பொறுத்து, மக்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து, நோக்கங்களைப் பொறுத்து என்று பல காரணங்களால், வழிவழியான பண்பாட்டின் காரணமாகவும் கூட, செய் செய்யாதே என்றபடியான விதிகள், விலக்குகள் எல்லாம் வாழ்க்கையின் இயற்கையில் நமக்கு ஏற்படுகின்றன. 

இதுவரையில் சொன்னதில் இந்த ‘நமக்கு’ என்ற சொல்லைத்தான் உன்னிப்பாக ஆராயச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். அதாவது பிறக்கிறோம், வளர்கிறோம், செய் செய்யாதே என்ற விதி விலக்குகள் ரீதியாக நமது கடமைகள், முயற்சிகள் எல்லாம் அமைகின்றன என்றோமே, இதில் நாம் என்பது எதைக் குறிக்கிறது என்று கேட்கிறார். அதாவது அவரவர், தம்மைப் பொறுத்தவரையில், ‘நான்’ என்பது என்ன என்று யோசிக்க வேண்டும். இந்த உடல், தானே தன் போக்கில் நான் என்று சொல்லிக் கொள்வதில்லை. நான் என்பது இந்த உடல் இல்லை. அதனால்தான் என்னுடைய உடல் என்று நம்மால் சொல்லவும் முடிகிறது. இந்த உடலை தன்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் ஒன்றுதான் நான். 

அந்த நான் உணர்வு மயமாக இருக்கும் ஆத்மா. அது பிறப்பதில்லை. பிறப்பது உடல்தான். வளர்வதும் ஆத்மா அன்று. பலவேறு சூழல்கள், கட்டுபாடுகள், விதிகள், விலக்குகள் எல்லாம் ஆத்மாவுக்கு இல்லை. அதாவது அவரவர் தன்னுள் எண்ணிக்கொண்டால் ‘எனக்கில்லை’. நான் பிறப்பதும் இல்லை. வளர்வதும் இல்லை. இயற்கையாக அமைந்த பல நெறிகளும், செய் செய்யாமைகளும் எனக்கில்லை. நான் செய்தேன் என்னும் கர்த்துருத்துவம் (செய்வோன் என்னும் தன்மை) அகங்காரத்திற்குத்தானே ஒழிய ஆத்மாவான எனக்கில்லை. ஆத்மா ஆகிய நான் சின்மயமாக, ஞான மயமாக இருக்கிறேன். பொருள்தன்மை சிறிதும் என்னிடம் கிடையாது. பொருள்தன்மை இருக்கும் எதுவும் பிறக்கும், மாறும், மறையும். நிலைத்து இராமல் இவ்வாறு தோன்றி மாறி மறையும் தன்மை என்பது சுபம் அற்றது. இத்தகைய அசுபம் சற்றும் இல்லாத நிலைத்த நித்யமான ஞானமயன் ஆகிய ஆத்மா நான். எனவே நான் சிவம். 

நான் பிறந்தவன் அன்று, வளர்ந்தவன் அன்று அழிபவனும் அன்று 

இயற்கையில் அமைந்த தர்மங்கள் இந்த உடலுக்கு அமைந்தவை ஆகும் 

செய்வோன் என்ற தன்மையும் அகங்காரம் பற்றியது ஆகும் 

சின்மயன் ஆகிய ஆத்மா என்னைப் பற்றியது அன்று சிவமே நான்’ 

‘நாஹம் ஜாதோ ந ப்ரவ்ருத்தோ ந நஷ்டோ 

தேஹஸ்யோக்தா: ப்ராக்ருதா: ஸர்வதர்மா: | 

கர்த்ருத்வாதிச்சின்மயஸ்யாஸ்தி நாஹங் 

காரஸ்யைவ ஹ்யாத்மனோ மே சிவோஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, May 2, 2026

அத்வைத பஞ்சரத்னம் 03

'விழித்துக்கொண்டே கனவு காண்கிறாயா?’ என்று சிலரைக் கேட்போம். நம்மையும் சிலர் கேட்டிருப்பார்கள். என்ன காரணம்? தூக்கத்தில்தான் ஒருவர் கனவு காண்பார். தமக்குள் எதையோ காண்பார். பேசுவார், முனகுவார். கனவின் விளைவு என்று புரிந்துகொள்வோம். அதாவது தூக்கத்தின் காரணமாக, உறக்க நிலையில் கனவுகள் நிகழ்கின்றன. கனவு காணும் போது, ‘விழித்துக் கொண்டிருந்தேன்.. பிறகு தூங்கினேன். தூக்க நிலையில் கனவு காண்கிறேன்’ என்றெல்லாம் நமக்கு நினைவு இருக்காது. விழித்தவுடன் தெரியும் அதுவரை கனவு கண்டோம் என்பது. கனவில் எத்தனை காரியம் செய்கிறோம். நாம் நம்மைப் பற்றிக் கூட எண்ணம் கொண்டும் இருக்கிறோம். ஆனால் அது விழிப்பு நிலையில் இருந்த நம்மைப் பற்றிய எண்ணத்தோடு தொடர்பு உடையதாய் இருக்காது. ஆனாலும் கனவில் நாம் நாமேதான் என்பதில் எந்தச் சந்தேகமும் ஏற்படுவதில்லை. 

கனவு கண்ட நிலையில் நாம் ஜீவனாக இருந்தோம் என்று ஓர் உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். விழித்த பின்னர் நாம் ஆத்மாவாக இருக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். இதே போல்தான் விழிப்பு நிலையில் நம்மை ஜீவனாக உணர்கிறோமே, இது ஞானம் அடையும் போது மாறி விடுகிறது. அப்பொழுதுதான் நாம் ஆத்மா என்பதைப் புரிந்துகொள்கிறோம். அதாவது ஆத்ம ஞான நிலையைக் கருத்தில் கொண்டால் நமது இந்த விழிப்பு நிலையும் ஒருவித கனவு நிலை போலத்தான். 

தூக்கத்தால் எப்படி நமக்குக் கனவுகள் உண்டாகின்றனவோ அது போன்று அஞ்ஞானத்தால் இந்த உலகம் என்ற நிலையில்லாத, வியவகாரத்தில் மட்டும் உண்மை போன்று இருக்கின்ற இது தோன்றுகிறது. நாமோ சத்யமான ஞான ஆனந்த உருவமான ஆத்மாவாய் இருக்கிறோம். நம்மிடமே தோற்றம் தரும் இந்த உலகம் உண்மையன்று. ’நானோ’ அஞ்ஞானத்தால் உண்டான இந்தத் தோற்றத்தால் பாதிக்கப்படாமல் சுத்தமாக இருக்கிறேன். இந்தத் தோற்றம் மறைந்துவிட்டால் அதனால் எந்தக் குறைவும் என்னிடம் உண்டாகாத வகையில் நான் பூர்ணமாக இருக்கிறேன். கனவுகள் முடிவுக்கு வருவது போல இந்தத் தோற்றமய உலகம், அதன் விஷயங்கள் முடிவுக்கு வருகின்றனவே அன்றி நானோ நித்யமாக இருக்கிறேன். ஒன்றை நம்பிப் பிறிதொன்றின் தோற்றம் ஏற்படும் தன்மை உடையதாக இருக்கிறது உலகம். நானோ இருப்பதற்குப் பிறிதொன்றின் சார்பு எதுவும் வேண்டாத ஏகமாய் இருக்கிறேன். ஞானம், சத்யம், ஆனந்தம் மயமாகவே நான் நிறைந்து இருப்பதால் என்றும் சிவமாக இருக்கிறேன். 

‘ஆபாதி இதம் விச்வம் ஆத்மனி அஸத்யம் 

ஸத்யஞானானந்த ரூபே விமோஹாத் | 

நித்ராமோஹாத் ஸ்வப்னவத் தந்ந ஸத்யம் 

சுத்த: பூர்ணோ நித்ய ஏக: சிவோஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Thursday, April 30, 2026

அத்வைத பஞ்சரத்னம் 02

ஜீவன் என்பது சுகம், துக்கம், வியவகாரங்கள், காலம், இடம் என்று அனைத்தோடும் சமபந்தப்பட்டு, ஓர் உடலில் இருந்து செயல்கள் புரிவது. ஆத்மா என்பது காலம், இடம், வியவகாரங்கள், சுகம், துக்கம் என்று அனைத்திலும் தொடர்பின்றிச் சாட்சியாய் இருப்பது. அப்படியென்றால் ஜீவன், ஆத்மா என்று இரண்டு இருக்கிறதா? இல்லை. ஒருவர் தம்மை ஜீவன் என்று கருதும் போது அங்கு ஆத்ம ஞானம் மறைபடுகிறது. தாம் ஆத்மா என்ற ஞானம் நிலவும் போது ஜீவன் என்ற உணர்வு இருப்பதில்லை அப்படியென்றால் ஜீவன் என்ற நினைவுதான் ஏன் ஏற்பட வேண்டும்? ஆத்மா என்ற ஞானமே இருந்துவிட்டால் என்ன? இதற்குக் காரணம் அத்யாஸம். ஒரு பொருளின் தன்மையை மற்றொரு பொருளில் ஏற்றி அந்தப் பொருளை அந்தத் தன்மை கொண்ட பொருளாகக் கருதுதல் அத்யாஸம். ஒருவர் ஒரு கயிற்றைப் பாம்பு ஆகக் கருதிவிட்டால் அந்தத் தருணத்தில் அவர் காட்சிக்கு அங்குப் பாம்புதான் தென்படுகிறது. அதைப் பொறுத்துத்தான் அவருடைய செயல்கள், அவருடைய உடலில் ஏற்படும் அட்ரினலின் சுரப்பு, இரத்த அழுத்தம் எல்லாம். அவரே துணிந்து சென்று ஒரு குச்சியால் கிண்டிப் பார்த்தாலோ அல்லது யாராவது அவருக்குச் சொன்னாலோதான் அந்த மாதிரி கயிற்றில் பாம்பின் தன்மையை ஏற்றி உணர்ந்ததான அத்யாஸம் நீங்குகிறது. அந்த ஆத்யாஸம் நீங்குவதற்குத்தான் துணை தேவையாக இருக்கிறது. அந்தத் துணை அவருடைய துணிச்சலான முனைப்பாக இருக்கலாம் அல்லது அவர் நலனில் அக்கறை உள்ள நண்பராக இருக்கலாம் அல்லது பொதுவில் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் யாரேனும் இருக்கலாம். அந்த அத்யாஸம் நீங்கிய பின்னர் இதுதான் கயிறு என்றும், கயிற்றின் தன்மையைக் குறித்தும் யாரும் அவருக்கு விளக்க வேண்டுவதில்லை. அந்த விளக்கத்தை அந்தக் கயிறே, தான் உணரப்பட்ட அந்தக் கணமே தந்துவிடுகிறது. இந்த உதாரணத்தைப் போலவே ஜீவன், ஆத்மா, பிரம்மம், ஜகத் போன்ற விஷயங்களிலும் ஒன்றின் தன்மையைப் பிறிதொன்றில் ஏற்றிக் காணும் அத்யாஸம் நடைபெறுகிறது என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். உலகப் பொருட்களின் தன்மையைத் தன்னில் ஏற்றித் தான் ஜீவன் என்று நினைப்பதும் அத்யாஸம். ஜீவனின் தன்மையை ஆத்மாவில் ஏற்றி ஆத்மாவாகிய தான் ஜீவன் என்று நினைத்து ஸம்ஸாரத்தில் ஆட்படுதலும் அத்யாஸமே. அப்பா நீ இந்த ஜீவன் இல்லை. உண்மையில் ஆத்மாவே என்று யாராவது இவருக்குச் சொல்லி, அந்த மனிதரின் சான்றாண்மையில் இவருக்கும் பூரண விச்வாசம் இருந்து அதை ஏற்றால், அப்பொழுது அந்த அத்யாஸம் நீங்கிச் சத்யத்தில் தாம் ஆத்மா என்ற ஞானம் பிறக்கிறது. ஆத்மா என்னவாக இருக்கிறது என்பது அவருக்கு அனுபூதியில் ஸ்புரித்துவிடும் ஒன்று. சாத்திரங்கள் செய்கின்ற வேலையெல்லாம் இவருடைய அத்யாஸம் நீங்க வேண்டிய உபதேசங்களும், அதனால் இவரது அவித்தையின் நீக்கமும்தான். அத்யாஸம் காரணமாக எழும் அவித்தையை அகற்ற வேண்டித்தான் சாத்திரங்கள். என்றும் இருக்கும் ஆத்மாவின் ஞானம் ஒளிர்வது சொந்த சத்யத்தின் அடிப்படையில். நேரடி அனுபூதிக்கு அப்பாற்பட்டது பரோக்ஷம். அவ்வாறு நேரடி அனுபூதிக்கு அப்பாற்படாதது அபரோக்ஷ அனுபூதி. ஆத்ம ஞானம் அபரோக்ஷ அனுபூதி. அத்யாஸம் காரணமாக எழுந்த அவித்தையின் நீக்கம் சாத்திரத்தின் பலன். 

‘இது கயிறு என்று அறியாத காரணத்தால் கயிற்றில், கயிற்றை மறைத்துத் தோன்றும் பாம்பு. அதுபோல் தன் ஆத்மாவில் அறியாமையின் காரணத்தால் ஜீவன் என்ற தோற்றம். சான்று மிக்கோரின் (ஆப்தர்கள்) வார்த்தையால் பாம்பு என்ற மயக்கம் விலகி, கயிறு என்ற உண்மை தெரிவது போல, குருவின் உபதேசத்தால் நான் ஜீவன் இல்லை; ஆத்மாவாகிய சிவமே நான் என்று உணரப்படும்.’ 

‘ரஜ்ஜ்வக்ஞானாத் பாதி ரஜ்ஜௌ யதாஹி: 

ஸ்வாத்மாஜ்ஞானாத் ஆத்மனோ ஜீவபாவ: | 

ஆப்தோக்த்யாSஹிப்ராந்திநாசே ஸ ரஜ்ஜு: 

ஜீவோ நாஹம் தேசிகோக்த்யா சிவோSஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 



Wednesday, April 29, 2026

அத்வைத பஞ்சரத்னம் 01

அத்வைதம் நேரடியாக மிக எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய தத்துவப் பார்வை. ஆனால் சிக்கல் சிடுக்காக நாம் கட்டிவைத்திருக்கும் நம் மனத்தை அதற்குத் தகுந்த வகையில் எளிமையாக்கிக் கொள்வதுதான் பெரிய சிரமம். 

நம் மனத்திற்கு முதலில் தேவையானது எப்பொழுது அடைவோம் என்றே தெரியாமல் ‘அம்மா வீடு எங்கே? இன்னும் கொஞ்சம் தூரம்’ என்றபடி இழுத்துக் கொண்டே போகும் நீண்ட நெடிய மார்க்கம். கூடுதலாகக் கடைசியில் அடைவோமா என்பதும் நிச்சயமில்லை என்றபடி ஒரு மர்மம் இருந்தால்தான் நமக்கு எதுவுமே ரசிக்கிறது. அதற்கு உச்சபட்சமான மதிப்பையும் தரமுடிகிறது. அத்வைதம் போல் பொசுக்கென்று உண்மையைப் போட்டு உடைக்கும் ஒரு பார்வை முதலில் நமக்கு எரிச்சலைத்தான் தருகிறது. நாமோ ஏதேதோ உலகங்களுக்குப் படிப்படியாகப் போய், அங்கு நமக்கு ஏற்பட்ட பரிந்துரை, போனால் போகிறதென்ற தயவு எல்லாம் கனிந்து, நம்முடைய மன்னிக்கவே முடியாத குற்றம் எல்லாம் பெரும் தாட்சண்யத்தின் காரணமாக ஒதுக்கப்பட்டு, உள்ளே போகலாம் என்ற அனுமதி கிடைக்கின்ற வழிப்பட்டியலில் ஏற்படும் ஓர் உள்ளார்ந்த கனம் அலாதியானதுதான். அதை விட்டுவிட்டு நம்மைப் பார்த்து, ‘நீ உண்மையில் பரம்பொருள்தான். முக்தி என்பது ஏதோ இனிமேல் அடையப்படும் ஒன்றல்ல. அது ஏற்கனவே எக்காலத்திற்கும் அடையப்பட்டுதான் இருக்கிறது. நீதான் அவித்யையின் காரணமாக அடையாத ஜீவனாக உன்னை நீயே பிரமித்து, அடையப்படும் உலகம், அடைவதற்கான பெருவழி என்று பிரமைக்கு மேல் பிரமை என்று பின்னிக்கொண்டு இருக்கிறாய். விழித்திடு. நீ யார் என்று உணர்’ என்று அத்வைதம் சொல்லும் போது கன்னத்தில் பளார் என்று அறைவிட்டது போல் உணர்கிறோம். ஆட்டம் முடிந்துவிடுமோ என்ற அச்சமும் நமக்குள் எங்கோ எட்டித்தான் பார்க்கிறது. 

பிரமைகள் நிறைந்த மனிதரிடம் சென்று, ’இதெல்லாம் உன் பிரமைகள், உண்மை இதுதான்’ என்று சொல்ல ஒருவருக்கு அசகாயத் துணிச்சல் இருக்க வேண்டும். நமது நல்ல காலம். அத்தகைய துணிச்சல் கொண்டு வந்தவர் ஸ்ரீஆதிசங்கரர். சிறியதும், பெரியதுமாகப் பல நூல்களும், பிரபந்தங்களும் செய்தவர், அத்வைதம் என்பதில் நமக்கு எங்குச் சிக்கல் ஏற்படுமோ அந்தச் சிக்கல்களைத் தொட்டு விளக்கும் முகத்தால் ஐந்து சுலோகங்களை ‘அத்வைத பஞ்சரத்னம்’ என்று தந்திருக்கிறார். 

முதலில் பெரும் சிக்கல் ஜீவனா? ஆத்மாவா? என்பது. இரண்டும் ஒன்றுதானே என்பது குழப்பம். சில இடங்களில் ஜீவனைச் சொல்ல வேண்டிய இடத்தில் ஆத்மா என்று சொல்லியிருக்கிறதே என்ற சந்தேகம். ‘அவர் ஒரு நல்ல ஆத்மா’ என்று சொல்லும்போது ஜீவனைத்தானே சொல்கிறோம். நீங்கள் ஒரு ஜீவன் என்றால், நான் ஒரு ஜீவன் என்றால் நாம் படும் அவஸ்தை நமக்குத் தெரிந்துதானே இருக்கிறது. அப்பொழுது திடீரென்று ஒருவர் வந்து ‘அப்பா! நீ இந்த உடல், மனம், உணர்ச்சிகள், உறவுகள், இந்த உலகம், என்பதெல்லாம் உபாதிகளால் கட்டம் கட்டப்பட்டு, வேறு வேறு பேதங்களாகக் காட்சி அளிக்கும் அவித்யை. எப்படி ஒரே ஆகாயமோ அதே போல் நீ அந்த எல்லையற்ற ஆத்மா. ஆகாயம் ஒரு மண்பானைக்குள் இருக்கும் ஆகாயம், ஒரு அறைக்குள் இருக்கும் ஆகாயம், ஒரு குடுவைக்குள் இருக்கும் ஆகாயம் என்று வேறு வேறுபடுத்திப் பார்க்க முடிந்தாலும் உண்மையில் ஆகாயம் என்பதில் எந்தப் பிரிவினையும் இன்றி எல்லாம் ஒரே ஆகாயமோ அதுபோல்தான் ஆத்மா ஒன்று. உபாதிகளில் கட்டுண்டு ஜீவர்கள், இந்த ஜீவன், அந்த ஜீவன், நீ, நான் என்றெல்லாம் தோன்றுகிறது. இது அவித்யையால் தோன்றும் காட்சி. உண்மையில் இவ்வாறு இல்லை’ என்று ஒருவர் சொல்லும் போது, நாம் தெளிவதா? இன்னும் குழம்புவதா? என்று புரியாமல் முழிக்கிறோம். இந்தச் சிக்கலை முதலில் தீர்த்து விடுகிறார் முதல் சுலோகத்தில். முதலில் ஆத்மா என்றால் இன்னதென்று தெளிவாகக் காட்டிவிடுகிறார்.

‘நான் இந்த தேகம் இல்லை. நான் இந்த பொறிபுலன்கள், இந்திரியங்கள் இவையும் இல்லை. இந்த இந்திரியங்களையெல்லாம் உள்ளே இருந்து வாங்கிச் சிந்திக்கும் மனமும் இல்லை. மனத்தில் நான் நான் என்று எழுகின்ற அகங்காரம் அதுவும் நான் இல்லை. உள்ளே இயக்கமாக உணரப்படும் பிராணன் அதுவும் நான் இல்லை. மனம் பலவாறாகச் சிந்தித்த பின்னர் இது சரி இது சரியில்லை என்று முடிவு செய்கிறதே புத்தி, அதுவும் நான் இல்லை. இவைகள் எல்லாமே இப்படி என்றால் புறத்தில் உறவுகளாக இருக்கும் கணவன் மனைவி, பெற்றவர் குழந்தைகள், வசிக்கும் இடம், இருப்பில் இருக்கும் செல்வம் இதெல்லாம் நான் என்ற உண்மைக்கு மிகத் தூரத்தில் இருப்பவை என்பது சொல்ல வேண்டியதில்லை. சரி. இதெல்லாம் நான் இல்லையென்றால் அந்த ‘நான்’ என்பதுதான் என்னவாக இருக்கிறது என்ற விவரம்தான் என்ன? 

இதுவரையில் சொன்ன தேகம், மனம், இந்திரியம், புத்தி, புற உறவுகள், அந்த உறவுகள் பழகும் உலகம், அந்த உலகத்தில் இருக்கும் இடம், வாழத் தேவையான செல்வம் என்று அனைத்திலும் படாமல், பார்வையாளராக, சாட்சியாக ஒன்று உள்ளே இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. நம் தேகம் சுகம் உற்ற போதும் அது பார்வையாளராக, சாட்சியாக இருக்கிறது. தேகம் நோய் உற்ற காலத்திலும் சாட்சியாக இருக்கிறது. மனம் குதுகலம் அடையும் போதும் அது சாட்சி. மனம் நோகும் போதும் அது சாட்சி. புத்தி தீர்க்கமாக இருக்கும் போதும் அது சாட்சி. புத்தி தடுமாறும் போதும் அது சாட்சி. இந்திரியங்கள் அடங்கி, அமைதியாக  இருக்கும் போதும் அது சாட்சி, இந்திரியங்கள் தறிகெட்டு ஓடும்போதும் அது சாட்சி. உறவுகள் கூடிக் குலவும் போதும் அது சாட்சி. உறவுகள் பிணங்கித் தனிமைப்பட்ட காலத்தும் அது சாட்சி. சாட்சி தத்துவமாக மாறாமல் நம்முள் இருக்கும் அந்த ஒன்றுதான் உண்மையில் ‘நான்’. ஆத்மா. எதிலும் கலந்து உருண்டு பிரளாமல் தன்னில் தான் சாட்சியாக இருந்தபடியே இருக்கும் ஆத்மா. 

ஆனால் ஜீவன் என்பது சுகம் என்றால் குதிக்கும். கூடிக் குலவும். பார்க்கும் எதனோடும் அது இல்லாமல் தான் இல்லை என்று மயங்கும். மனத்தோடு ஒன்றறக் கலந்து புரளும். அகங்காரத்தோடு ஐக்கியமாகி நானே நான் என்று ஆணவப்படும். துக்கம் வந்த காலத்து ‘ஐயோ அப்பா தாங்கலையே..’ என்று அழுது ஓலமிடும், ஓடும், சுகம் வராதா என்று ஏங்கும், நிலையற்ற உறவுகள் பிரிந்தால் தான் அழிந்ததாக அஞ்சும். செல்வத்தில்தான் தன் உயிரே இருக்கிறது என்று பதைக்கும். இதுதான் நம்முடைய நிலைத்த முகவரி என்று நாமே மயங்கும்படி இருப்பதுதான் ஜீவன். இந்த ஜீவனையும் பார்த்தபடிச் சாட்சியாக இருப்பதுதான் உண்மையில் நான் என்று நாமாக இருக்கும் ஆத்மா. 

ஆத்மா என்ன என்று ஒரு வார்த்தையில் சொன்னால் ‘சாட்சி’. அந்தச் சாட்சி ஒரு காலத்துக்கு அன்றி எக்காலத்துக்கும் சாட்சியாகவே இருப்பது. அது நித்யம். நித்யமாய்ச் சாட்சியாக இருப்பது. அது சாட்சியாக இருப்பதைப் பார்க்க வேறு ஒன்று கிடையாது. அதுவேதான் தான் சாட்சியாக இருப்பதைத் தானே உணர்ந்து இருக்கிறது. தன்னுடைய இருப்பு, இயல்பு பிறிதொன்றால் அறியப்பட்டு அதன் மூலம் தன்னுடைய இருப்பு அடையாளப்படும்படி ஒன்று இருக்குமானால் அந்தப் பொருள் ‘பராக்’ என்ற வகையில் சேரும். பராக் என்றால் தான் பிறிதொன்றால் அறியப்பட இருப்பது என்று பொருள். ஆனால் எது ஒன்று தன் இருப்பு தன்னால் நேரடியாக உணரப்பட்டு இயலுமோ அந்தப் பொருள் ‘ப்ரத்யக்’ என்னும் வகையைச் சேர்ந்தது. ‘ப்ரத்யக்’ என்பது ஆத்மா. ப்ரத்யகாத்மா என்று சொல்வது வழக்கம். தான் யார் என்று உணராமல், சூழ்நிலையோடு மயங்கித் துன்புறும் ஜீவனின் உலகில் சிவம் எட்டாக் கனியாகத் தெரிகிறது. ஆனால் தான் என்பதில் மயக்கமின்றி என்றும் சாட்சியாக நிலைத்த ஆத்மா, அதுவேதான் சர்வமங்களமான சிவம். அந்தச் சர்வமங்களமான, சிவமான, சாட்சி உருவமான, ப்ரத்யக் என்னும் ஆத்மா தான் உண்மையில் நான்.’ 

‘நாஹம் தேஹோ நேந்த்ரியாணி அந்தரங்கோ 

நாஹங்கார: ப்ராணவர்க்கோ ந புத்தி: | 

தாராபத்யக்ஷேத்ர வித்தாதிதூர: 

ஸாக்ஷீ நித்ய: ப்ரத்யகாத்மா சிவோSஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, April 21, 2026

ஒற்றை விளக்கு (ஏகச்லோகீ ப்ரகரணம் - ஸ்ரீஆதிசங்கரர்)

நூறு செய்யுள், பத்துச் செய்யுள், ஐந்து செய்யுள் என்ற அளவில் எல்லாம் அத்வைதப் பேருண்மையை எளிமையாக விளக்கி நூல்கள் செய்த ஆதிசங்கரர் ஒரே செய்யுளிலும் அந்த அத்வைத தத்துவத்தைப் புரிய வைக்கும் அற்புத சுலோகம்தான் இந்த ஏகச்லோகீ என்பது. முக்கால் வரியிலேயே கூட அத்வைதத்தை விளக்கிக் காட்டியவர்தான் ஆதிசங்கரர். 

அத்வைத தத்துவம் யாது என்று அறியத் துடிக்கும் மனத்திற்கு அந்த முக்கால் வரியே போதுமானது. அந்த வரி இதுவாகும். ‘ப்ரஹ்ம ஸத்யம், ஜகன்மித்யா, ஜீவோ ப்ரஹ்மைவ, நாபர:’

இதன் பொருள் - பிரம்மம் மட்டுமே சத்யம். இந்த ஜகம் மித்யையே ஆகும். இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமேயாக இருக்கிறது. வேறாக இல்லை. 

முக்கால் வரியில் உணர்த்தியதை ஒரு சுலோகத்திலும் உணர்த்துகிறார் பகவத்பாதர். இந்த ஒரு சுலோக நூல் தோன்றிய சூழலைப் பற்றி உரையாசிரியர்கள் சில தகவலைத் தருகின்றனர். கண்ணொளி இல்லாது போன ஒருவர் ஸ்ரீஆதிசங்கரரைக் காண ஏங்கியதாகவும், அவரிடம் பகவத்பாதர் சென்று காண்பதற்கான ஒளி என்பதை வைத்தே படிப்படியாக விளக்கி, ஒற்றை விளக்காகவும், ஒற்றை ஜோதியாகவும் இருப்பது ஆத்மா என்றும், அதுதான் உண்மையில் அவரே என்றும் உணர்த்தி ஞானம் நல்கினார் என்பது சூழலின் கதை. 

ஒரே சுலோகம் என்பதால் ஒவ்வொரு சொல்லும் நன்கு நிறுத்தி நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உலகில் பொருளை நமக்குக் காட்டித்தரும் ஒளி எது? ஜோதி எது? என்ற கேள்விதான் தொடக்கம். 

இதை ஸ்ரீஆதிசங்கரர் கண்ணொளி இழந்த அந்த மனிதரை நோக்கிக் கேட்டதாக நினைப்பதைவிட நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கிறார் என்பதும் பொருத்தமாக இருக்கும். நாம் உண்மையைக் காணும் கண்ணொளி இல்லாமல்தானே அவதிப்படுகிறோம்? இனி சுலோகத்துள் போவோம். ஆதிசங்கரர் கேட்பதற்கு நம்முடைய பதில் என்று படிப்படியாகப் போகிறது. 

பொருள் இருப்பதைத் தெரிவிக்கும் வெளிச்சம் உனக்கு எது? 

பகலில் சூரியன் தான். சூரிய ஒளியில்தான் நாம் பொருட்களைப் பார்க்கிறோம். 

ஆனால் இரவில் உனக்குச் சூரிய வெளிச்சம் இருக்காதே! அப்படியென்றால் இரவில் உனக்கு உற்ற வெளிச்சம் எது? 

இரவில், ஏற்றிவைக்கப்படும் விளக்கு, மற்ற தீபங்கள் (நம் காலத்தில் இன்னும் அதிகமான விளக்குச் சாதன வகைகள்) இவைதாம் எனக்கு வெளிச்சம். 

அப்படியா? இருக்கலாம். ஆனால் சூரியனும், விளக்குகளும் இருந்தாலும் அந்தச் சூரியனும், விளக்குமே இருப்பது தெரியவேண்டும் என்றால் அதற்கு என்ன வெளிச்சம்? 

சூரியனையும், விளக்கையும் காட்டும் வெளிச்சமா? ஹாங்.. அது என் கண்கள்தாம். 

சரி. உன் கண்கள் 24 மணி நேரமும் மூடாமல் அயராமல் திறந்து பார்த்துக்கொண்டேவா இருக்கிறது? தூக்கத்தில் கண்கள் மூடிவிடுகின்றன. மூர்ச்சையில் கண் திறந்திருந்தாலும் பார்ப்பதில்லை. அப்படியென்றால் கண்ணே மூடிய பொழுதும் இருக்கும் வெளிச்சம் எது? 

கண்ணே மூடிய பொழுது ... என் புத்திதான் அப்பொழுது வெளிச்சம். அதாவது மனம். கண் தூங்கிய நிலையிலும் என் மன உணர்வு இருக்கிறதே. கனவு காண்கின்றேனே! 

சரி. சிலசமயம் ’என் புத்தி சரியில்லை’ என்று கூறுகிறாய். ’மனம் சரியில்லை’ என்று உணர்கிறாய்? அப்படியென்றால் மனத்தையும், புத்தியையும் உணரும் வேறு ஒரு வெளிச்சம் உண்டல்லவா? அது எது? 

... அது ’நான்’ தான். 

ஆம். நீர்தான் உமக்கு மேலான ஒரே வெளிச்சம். கடைசியில் மறையாமல் நிற்கும் ஒற்றை விளக்கு நீர்தான். நன்கு யோசித்துப் பாரும். புரியும். 

ப்ரபுவே! அந்த ஏக ஜோதி, ஒற்றை விளக்கு, தனிச்சுடர், அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியான ஒளி, அருட்பெரும் ஜோதி, அதுவாகத்தான் நான் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன் பிரபுவே! திறக்க வேண்டிய கண் திறந்து கொண்டது. என்றும் இருக்கும் ஒற்றை விளக்கு, அதுதான் நான் என்பது புரிந்தது. “ 

“ கிம்ஜ்யோதிஸ்தவ பானுமான் அஹநி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம் 

ஸ்யாதேவம் ரவிதீபதர்சநவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே | 

சக்ஷுஸ்தஸ்ய நிமீலநாதிஸாமயே கிம்தீர்தியோதர்சநே 

கிம் தத்ராஹமதோ பவாந் பரமகம் ஜ்யோதிஸ்ததஸ்மி ப்ரபோ || “ 

இந்த ஒற்றைச் சுலோகத்தில் ஸ்ரீஆதிசங்கரர் பிரகதாரண்யக உபநிஷதத்தின் 4ஆவது அத்யாயம், மூன்றாவது பகுதியில் யாக்ஞவல்க்யருக்கும், ஜனகராஜருக்கும் நடந்த ஸம்வாதமான ஜோதி என்பது எது என்னும் உபதேசத்தையே சுருக்கித் தந்துவிட்டார் என்கிறார்கள் உரையாசிரியர்கள். பிரகதாரண்யக உபநிஷதத்தில் வரும் அந்தக் கட்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சி என்னவென்றால் - 

ஒரு நாள் ஜனகரின் சபைக்கு யாக்ஞவல்கியர் அரசரைக் காணச் சென்றார். போகும் பொழுதே இன்று மன்னன் என்ன கேட்டாலும் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்று முடிவு கட்டியவண்ணம் சென்றார். 

(கேள்வி கேட்டே எல்லாவற்றையும் போட்டு வாங்கி விடுவார் போல் இருக்கிறது ஜனகர்!). 

ஆனால் மன்னர் அதைவிடக் கெட்டிக்காரர். முன்னொரு சமயம் ஏதோ சந்தர்ப்பத்தில் இதே யாக்ஞவல்கியர் ஜனகருக்கு ஒரு வரம் தந்திருக்கிறார். அதாவது எப்பொழுது வேண்டுமானாலும், விரும்பிய எதைப் பற்றியும் வேண்டியவாறு கேட்டுத் தன்னிடமிருந்து விடையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அந்த வரம். பாவம் முனிவர் மறந்து விட்டார். மன்னர் அதை நினைவு வைத்திருந்து இப்பொழுது அந்த வரத்தின்படிப் பதில் சொல்லுமாறு கேட்க வேறு வழியில்லாமல் யாக்ஞவல்கியர் பதில் சொன்னார் என்று வருகிறது அந்தச் சூழல். 

(எப்படியாவது நம்மையெல்லாம் கேள்வி கேட்குமாறு தூண்டுவதற்குச் செய்யப்படும் சூழ்ச்சி! நாமா அசருவோம்?) 

மன்னர் கேட்ட கேள்வியே இதுதான். எது நமக்கு வெளிச்சம்? எது மாறாத ஜோதி? என்னும் கேள்வி. அந்தப் பகுதிக்கே பெயர் ஜோதிப் பிராம்மணம் என்பது. அதை இன்னும் சுருக்கித்தான் இங்கே ஒற்றைச் செய்யுள் ஆக்கித் தந்துவிட்டாரே கருணையின் மூர்த்தி! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, April 12, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 05

எல்லையே அற்ற சுகவாரி ஆக இருப்பது ஆத்மா. அந்த ஆத்ம சுகத்தின் ஒரு திவலையில் திளைத்துத்தான் இந்திரன் முதலிய பதவியில் இருப்போரும் சுகிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த ஆத்ம சுகத்தை, தம் ஸ்வரூப சுகத்தை, தம் மனத்தில் அலைகளே எழாவண்ணம் மனம் அடங்கிய முனிவர்கள், என்றும் துய்த்தவாறு ஆனந்தபரர்களாக இருக்கின்றனர். அந்த நித்ய சுகம் ஆகிய எல்லையில்லாத பெருங்கடலில் தம்முடைய மனம் கரையப் பெற்றவர் எவரோ, அவர் யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் பிரம்ம ஞானியாகக் கூட ஆவதில்லை. பிரம்மமேயாக ஆகிவிடுகிறார். அவர் யாராய் இருந்தால் என்ன? அவர் குருமட்டும் அன்று. இந்திரன் முதலிய தேவதைகள் எல்லாம் தொழத்தக்க நிலையை அடைந்து விடுகிறார். இதுதான் தம்முடைய நிச்சயமான கருத்து என்று மநீஷா பஞ்சகத்தை நிறைவு செய்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

இனிப்பு இருக்கிறது. அதை ஒருவர் வாயிலிட்டுச் சுவைத்தால் அதன் இனிப்பை உணர முடியும். பிரம்மானந்தமாகிய ஆத்ம சுகத்தை அவ்வாறு அனுபவிப்பவரை நாம் பிரம்மத்தை உணர்ந்தவர் என்று கூறலாம். ஆனால் ஒருவர் பிரம்மமேவாக ஆகிவிட்டார் என்று சொன்னால் அவரை எப்படிப் பிரம்ம ஞானி என்று சொல்ல முடியும்? இனிப்பேயாக ஒருவர் ஆகிவிட்டால் இனிப்பைச் சுவைக்கும் அனுபவம் நிகழ முடியுமா? இனிப்பு விஷயத்தில் அது முடியாது. ஏனெனில் ஒரு சில புலன்கள், சூழ்நிலைகள், பொருட்கள் என்ற மாதிரியான உபாதிகளை முன்னிட்டு ஜீவன் உணரும் சுகம்தான் உலக சுகம் எல்லாம். அதுபோல் அறிதல் என்னும் உபாதியை முன்னிட்டு, மனத்தின் அறிவு நிகழ்ச்சி என்னும் உபாதியை முன்னிட்டுப் பிரம்மத்தை அனுபவிப்பது என்பது பிரம்மத்தை அறிந்து அனுபவித்தல் என்னும் பொருள்கொண்ட பிரம்மவித் என்னும் நிலையைத் தருகிறது. ஆனால் அந்த உபாதியும் அகன்று, எந்த உபாதியும் இல்லாத பிரம்மமேயாக ஒருவர் ஆகிவிட்டால், உபாதிகளுக்கு நிலைக்களனாய் இருக்கும் மனம் என்பதே ஆத்மா என்பதில் கரைந்து போய்விட்டால் பின்னர் யார் அறிவதற்கு இருக்கிறார்கள்? அங்குப் பிரம்மம் மட்டுமே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ‘அது ஆனால் அதுவாவர். அதுவே சொல்லும்’ என்கிறார் ஸ்ரீதாயுமானவர். 

‘யத்சௌக்யாம்புதி லேசலேசத இமே சக்ராதயோ நிர்வ்ருதா: 

யத்சித்தே நிதராம் ப்ரசாந்தகலனே லப்த்வா முநிர்நிர்வ்ருத: | 

யஸ்மின்நித்ய சுகாம்புதௌ கலிததீர் ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித் 

ய: கச்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மநீஷா மம ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, April 10, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 04

விளக்கை ஏற்றுகிறோம். பொருள்கள் தெரிகின்றன. அதற்கு முன்னர் இருட்டிலும் பொருள் இருந்தது. ஆனால் அதன் இருப்பு தெரியவில்லை. விளக்கின் ஒளி அதைத் தெரிவிக்கிறது. நம்மால் விளக்கின் ஒளியையும் பார்க்க முடிகிறது. பொருளையும் பார்க்க முடிகிறது. ஆனால் அல்ட்ராவைலட் ஒளி இருக்கிறது. அது நம் பார்வைக்குத் தெரியாது. ஆனால் பொருளில் அந்த யூ வி வெளிச்சம் பட்டு அந்தப் பொருள் ஒளிரும். இருட்டில் யூ வி லைட் போட்டால் பொருள் மட்டும் அலாதியாக ஒளிரும். பொருள் ஒளிர்வதை வைத்து நாம் யூ வி லைட் ஒளி இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறோம். 

ஆத்மா என்பது அறிவுமயமான ஒளி. அது இருப்பதால்தான் நாம் வெளியில் பொருள் இருப்பதையோ, அல்லது நமக்குள் மனம், புலன்கள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் உணரமுடிகிறது. நம்மில் ஐம்புலன் அறிவு ஏற்படுவதே நமக்குள் ஆத்ம ஒளி இருக்கிறது என்பதை அடையாளமாக நின்று காட்டுகிறது. 

எனவே, நமக்குக் கண்ணில் பொருள் தெரிகிறதே! அது போல் ஆத்மா எங்குத் தெரிகிறது? என்று நாம் நினைத்தால் அது நன்கு யோசிக்காமல் பேசும் பேச்சு. நமக்குக் கண்ணின் மூலம் காட்சி ஏற்பட்டு அந்தப் பொருள் இருப்பதாகப் புலன் அனுபவம் உண்டாவதே, அடிப்படையாக ஆத்ம ஒளி இருக்கப் போய்த்தான் ஏற்ப்படுகிறது. நாம் கண்ணால் பார்க்கிறோம் என்பதே, காதால் கேட்கிறோம் என்பதே, மூக்கால் முகர்கிறோம் என்பதே, நாவால் சுவைக்கிறோம் என்பதே, தொட்டு உணர்கிறோம் என்பதே உண்மையில் பார்க்கப் போனால் ஆத்ம ஒளி இருக்கிறது, இருக்கிறது என்று சான்று சொல்லும் அடையாளங்கள்தாம். இது விசித்திரமாக இல்லை! உலகில் நாம் அன்றாடம் அடையும் புலன் அறிவுகளே பார்க்கப் போனால் ஆத்மாவை நமக்குக் காட்டித்தரும் சாட்சிகள்தாம் என்பது? 

ஆனால் ஆத்ம ஒளியால்தான் நாம் புலன் அறிவுகளை அர்த்தப் படுத்திக் கொண்டாலும், உலகைக் காணும் உற்சாகம் நமக்கு உள் ஒளியான ஆத்ம ஒளியை மறைத்து விடுகிறது. சூரியனின் ஒளியில்தான் மேகங்கள் பலவேறு வடிவங்களில், பிரகாசமாக நமக்குக் கண்ணில் தெரிகின்றன. ஆனால் அதே சூரியனை அந்த மேகங்களே நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்தும் விடுகின்றன. அதைப் போன்று ஆத்ம ஒளியால் நமக்குப் புலனாகும் உலகம் அதே ஆத்மாவை நம் அனுபவத்தில் மறைக்கவும், மறக்கவும் செய்துவிடுகிறது. 

ஆனால் ஞானியானவர் என்ன செய்கிறார், உலகம் என்பதைக் காணும் போதே அதுவே ஆத்மா என்பதைக் காட்டும் என்பதை உணர்ந்து, உலகக் காட்சிகளூடே ஆத்மாவையே பார்க்கிறார். கோவிலுக்குப் போகிறோம். சந்நிதியில் தீபம் ஏற்றிக் காட்டுகிறார்கள். நாம் அந்தத் தீபத்தைப் பார்ப்பதில்லை. அந்தத் தீபத்தால் காட்டப்படும் மூர்த்தியைத் தரிசனம் செய்கிறோம். உலகமே ஒரு பெரும் தீபத் தட்டு. சதாசர்வ காலமும் தீபம் ஏற்றி நமக்கு இந்த உலகம் எதைக் காட்டுகிறது? நமக்குள் இருக்கும் ஆத்மாவைத்தான், அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்த பிரம்மத்தைத்தான் நாம் உணரக் காட்டுகிறது. ஆனால் உலகத்தின் தீபத்தட்டைப் பார்த்தபடியே நாம்தான் ஆத்மாவைப் பார்க்கத் தவறுகிறோம். ஞானி அந்த ஆத்மாவைப் பார்க்கிறார். அவர் பார்வையில் உலகமே ஆத்மாவுக்கான அடையாளம். அவருக்கு இந்த உலகமே ஆத்மாவைக் காட்டும் தீபம். என்றும் தடைப்படாத ஆத்ம தரிசனத்தைத் தியானித்தபடி இருக்கும் அவரே உண்மையில் குரு. இதுதான் என்னுடைய அறுதியான கருத்து என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘யா திர்யங்நரதேவதாபி: அஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே 

யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹ விஷயா பாந்தி ஸ்வதோSசேதநா: | 

தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந் 

யோகீ நிர்வ்ருத மானஸ: ஸ குரு: இத்யேஷா மநீஷா மம ||’ 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, April 9, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 03

நல்ல தூக்கம். கடுமையான கனவு. மலையில் ஏறிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று மலைச்சரிவு. பெரிய பாறை அப்படியே உருண்டு நெட்டுக் குத்தாகத் தலைமேல் விழ வருகிறது. ஓடுகிறீர்கள். ஓடி, பார்த்தால் நெடுஞ்சாலைக்கு வந்து விட்டீர்கள். ஓட்டம். திரும்பிப் பார்க்கிறீர்கள். அப்பொழுது கால்தடுக்கிப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் விழுந்து நனைந்தபடி நிலைமை. அப்பொழுது விழிப்பு. அந்தப் பாறை, ஓட்டம், தடுக்கு, குளம், நீரில் நனைதல் எல்லாம் என்ன ஆயிற்று? படுத்த நிலையில் எழுந்து உட்கார்ந்து என்ன ஆயிற்று என்று முழிக்கிறீர்கள். ஞானத்திற்கும், கர்மாவிற்கும் இதுதான் தொடர்பு. ஞானம் என்பது விழிப்பு. கர்மா, வினைப்பயன்கள் என்பது கனவு நிகழ்வு. ஆனால் கனவு முடிந்திருக்கலாம். ஆனால் அந்தப் பயம், அதில் வேர்த்து, ரத்த ஓட்டம் எகிறிப் பதட்டம் எல்லாம் விழித்த பின்பும் தொடரத்தானே செய்கிறது. அதனால்தானே ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டி எழுந்து போய் ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கிறீர்கள். நனவில் தொடரும் அந்தப் பதட்டம்தான் கர்மாவின் பிராரப்த வினைப்பயன். 

அதாவது கேள்வி என்னவென்றால், பிரம்மம்தான் சத்யம். இந்த உலகம் மித்யை என்று குருவின் உபதேசத்தாலும், அதை நன்கு உணர்வு பூர்வமாகத் தனக்குள் சுய ஞானமாக ஆக்கிகொண்டதாலும் அந்த ஞானியின் ஞானத்தீயில் அவரின் கர்ம பலன்கள் அழிந்து விடுகின்றன. என்றால், அது எப்படி? அதற்குத்தான் கனவு உதாரணம். ஆனாலும் கர்மாவில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. சேர்ந்து போன பழைய கர்மா (சஞ்சிதம்), இனிப் புதிதாகச் சேரும் கர்மா(ஆகாமி), இப்பொழுதைக்குப் பலன் தரத்தொடங்கியிருக்கும் கர்மா (ப்ராரப்தம்). பலன் தரத் தொடங்கியிருக்கும் வினைப்பயனால்தான் ஒரு ஞானியின் உடல் வாழ்க்கையே தொடர்கிறது. ஒரு ஞானி தொடர்ந்து இருந்து இந்த உலகிற்கு அவரால் விளையும் நன்மைக்கு வழிவகுப்பது இந்தப் பிராரப்த கர்மம் என்னும் தொடங்கியுள்ள கர்மாதான். 

விழிப்புற்ற ஞானியானவர் என்ன செய்கிறார்? தம் உடல், அதைச் சார்ந்த வாழ்க்கை இதையெல்லாம் பிராரப்த கர்மாவிற்கு ஒப்புக் கொடுத்துவிட்டுத் தாம் எந்த வினைப்பயனும் அற்றவராக இருக்கிறார். ஏன்? நிலைத்தது ஒன்றுதான். அது பிரம்மம். நிலயற்றது மற்றது அனைத்தும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட காரணத்தால் அவர் மனத்தில் ஏற்பட்ட பதிவுகள் என்னும் வாசனைகள் நீங்கி விடுகின்றன. மனம் புதிதாக எந்த அலையையும் ஏற்படுத்துவதில்லை. மனம் அடங்கிய நிலையில் உள்ளிருக்கும் ஆன்ம ஒளி தடைப்படாமல் பிரகாசிக்கிறது. இதுதான் என் முடிவான கருத்து என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘சச்வந்நச்வரமேவ விச்வமகிலம் நிச்சித்ய வாசா குரோ: 

நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருசதாம் நிர்வ்யாஜசாந்தாத்மநாம் | 

பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்விந்மயே பாவகே 

ப்ராரப்தாய ஸமர்பிதம் ஸ்வவபு: இத்யேஷா மநீஷா மம ||’ 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, April 3, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 02

அதாவது குரு என்பவர் யார் என்றால் தாம் இந்தத் தேகம் இல்லை. உள்ளே சதாசர்வ காலமும் விளங்கும் உணர்வு, சைதன்யம் இதுதான் தாம் என்று யார் உறுதியாக உணர்ந்துவிட்டாரோ அவர்தான் குரு. A teacher is one who has realised that one's identity is Consciousness and not the body. அவர் எதுவும் பேச வேண்டாம். அவர் இருந்தாலே போதும். அது உபதேசம் ஆகும். ‘எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி’ என்று வர்ணிக்கிறது திருவிளையாடல் புராணம். ‘பொய்யாம் சடக்கைச் சடக்கெனச் சதமென்று சின்மயம் தானாகி நிற்பது என்றோ’ (கடைசியில் பொய்யாகிப் போகும் இந்த உடலைப் பொய் என்று முதலிலேயே உணர்ந்து, நிலைத்தது சைதன்யம் என்று உணர்ந்து சின்மயம் ஆகித் தன் இயல்பும், உருவும் உண்மையில் சைதன்யமே என்று அவ்வாறே உணர்ந்து நிற்பது என்றோ) என்று பாடுகிறார் ஸ்ரீதாயுமானவர். 

‘தான்’ என்பது இந்த உடல், புலன்கள், மனம், புத்தி, சூழ இருக்கும் இந்த உலகம், இதில் தான் யார் என்றும், தன்னுடையது எது என்றும் பல உபாதிகளின் தொடர்பில் அந்தத் ‘தான்’ என்பது ஒருவருக்கு ஜீவன் என்றும், இன்னார், இன்ன பெயருடைய மனிதர் என்றும் சுய அடையாளமாக நடைமுறையில் தெரிகிறது. நீங்கள் யார் என்று கேட்டால் நாம் ஒரு பயோடேட்டாவே வைத்திருப்போம். ஆனால் இந்த உபாதிகள் சமபந்தப்பட்டுத் தோன்றும் சுய அடையாளம் நன்கு தத்துவ விசாரம் செய்யும் போது பரம உண்மையாக இருப்பதில்லை. நனவில் இருக்கும் மனிதர் கனவில் இருப்பதில்லை. கனவில் இருந்தவர் முழித்தபின் எங்குப் போனார் தெரிவதில்லை. ஆனால் எல்லாம் நாம்தான் என்று நினைவின் தொடர்ச்சியை வைத்துக்கொண்டு வியவகாரம் (நடைமுறை) போகிறது. நாம் என்பது உண்மையில் யார் என்று அக்கறையோடு விசாரம் செய்யப் போனால் உபாதிகளின் சம்பந்தம் அற்ற தூய சைதன்யம், சித் என்பதுதான் மிஞ்சுகிறது. அந்தச் சைதன்யம் என்பது அந்தப் பிரம்மமேதான். இவ்வாறு நன்கு விசாரம் செய்து ‘நான் இந்த உபாதிகளோ, உபாதிகளால் கட்டமைக்கப்பட்டுத் தோற்றமளிக்கும் ஜீவனோ, ஸம்ஸாரி மனிதரோ இல்லை. நான் உண்மையில் பிரம்மமே தான்’ என்ற நிச்சயம், ஐயங்கள் அற்ற திடமான உணர்வு ஒருவருக்கு ஏற்படுமேயானால் அவர் யாராய் இருந்தால் என்ன? சாத்திரம் கற்ற பிராம்மணராய் இருந்தாலும் சரி, அல்லது கீழ்க்குலம் என்று சொல்லப்படும் எவராய் இருந்தாலும் சரி அவரே உண்மையில் குரு என்பதில் சந்தேகமில்லை. 

இவ்வாறு ‘நான் பிரம்மமே தான். இந்த உலகம் அனைத்தும் அந்தச் சைதன்யத்தின் விரிவாகத்தான் புலப்படுகிறது. சைதன்யம் இல்லாது நேரடியாக இந்த உலகம் என்பது நம் உணர்வுக்கு வந்ததும் இல்லை. வருவதும் இல்லை. வரப்போவதும் இல்லை. எனவே ஜகத் முழுமையும் சித் என்பதின் விஸ்தாரம்தான். இந்த விஸ்தாரமான இவையனைத்தும் மட்டுமா உணர்வில் தோன்றுகிறது? தான் ஜீவன் என்றும் தோன்றுகிறது. ஜீவனாகிய தான் நற்கதிக்கு வேண்டிப் பிரார்த்திக்கின்ற ஈசுவரன் என்றும் வியவகார உலகில் உணர்வில் தோன்றுகின்றன. ஜீவன், ஜகத், ஈசுவரன் என்னும் மூன்றுவகையான இந்த வியவகார உலகின் உண்மைகள் எப்படி அனுபவத்தில் ஏற்படுகின்றன? நான் பிரம்மமே என்னும் அந்த பாரமார்த்திக உணர்வு நிலையில் ஊன்றி நிற்கும் போது ஒரே சத்யம்தான் இருக்கிறது. ஆனால் வியவகார நிலையிலோ என்றால் ஜீவனாகிய தான்தான் அவித்யையின் காரணமாக, முக்குணங்களின் வசப்பட்டு, ஈசுவரன், ஜகத், ஜீவன் என்னும் இந்த முப்படையான காட்சி அனுபவ நிலையைக் கல்பித்துக் கொள்கிறேன்.’ - இவ்வாறு மிக உயர்ந்த ஆனந்தமும், நித்யமும், தான் அவித்யையின் காரணமாகக் கல்பித்துக் கொள்ளும் இந்த வியவகார நிலையால் எந்தப் பாதிப்பும், குறைவும் தன்பால் ஏற்படாத நிர்மலமானதும், என்றும் மாறாத சத்யமுமான பரத்தில் நிலைத்த திடமான மதி யாருக்கு இருக்கிறதோ அவர் எந்தச் சாதியாக இருந்தாலும் சரி, அவரே உண்மையில் குரு’ என்று இரண்டாவது சுலோகத்தில் பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

பரமசிவன் உலகிற்கு எந்த வெளிச்சம் தர வேண்டும் என்று நினைத்தாரோ அது நடந்தேவிட்டது. 

‘ப்ரஹ்மைவாஹம் இதம்ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம் 

ஸர்வம் சைதத் அவித்யயா த்ரிகுணயா ஸேசம் மயா கல்பிதம் | 

இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே 

சாண்டாளோSஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மநீஷா மம || ‘ 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, March 29, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 01

'என்னுடைய கருத்து இதுதான்’ என்று சொல்வோம். அல்லது ‘முடிவாக நான் கருதும் நிச்சயம் இதுதான்’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இவ்வாறு ஒருவர் பலவிதங்களில் பரிசீலித்துப் பார்த்து இதுதான் தாம் கொள்ளும் கடைசி நிச்சயமான முடிவு என்று சொல்வதற்கு ‘மநீஷா’ என்று பெயர். மநீஷா என்றால் அறுதியான முடிவான கருத்து என்று பொருள். யாரோ ஸ்ரீஆதிசங்கரரிடம் கேட்டிருப்பார்கள் போல் இருக்கிறது, அவருடைய அறுதியான கருத்துகள் என்ன என்று. ஐந்து சுலோகங்களில் ‘மம மநீஷா நூநம்; என்று சொல்லிச் சொல்லிப் பாடுகிறார். மம - என்னுடைய, மநீஷா - அபிப்ராயம், கருத்து, முடிவு; நூநம் - நிச்சயம். எனவே ஏதோ பாட்டுக்கு என்று சொல்லிவிட்டார் என்று இதைக் கொள்ள முடியாது. தம்முடைய தேர்ந்த முடிவான கருத்து என்று அவரே சுருக்கமாக ஐந்து சுலோகங்களில் சொல்லும் போது, இது எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடியும். எனவேதான் போலும் இந்த சுலோகத்திற்கே ‘மநீஷா பஞ்சகம்’ என்று பெயர் வந்துவிட்டது. பஞ்சகம் என்றால் ஐந்து எண்ணிக்கை உள்ள தொகுதி என்று பொருள். இங்கே ஐந்து சுலோகங்கள் கொண்ட இந்தச் சிறுநூல். ஆங்கிலத்தில் எழுதினால் My Considered Conclusions in Five Verses என்று வரும். 

இந்தச் சுலோகங்களை வாசித்தால் இதில் திரும்பத் திரும்ப ஸ்ரீஆதிசங்கரர் யார் உண்மையில் குரு என்று வலியுறுத்திச் சொல்வது போல் இருக்கிறது. இதைப் படிக்கும் போது நமக்கே ஒரு நிமிஷம் சந்தேகம் வந்துவிடுகிறது. மரபு ரீதியாகச் சொல்லப்பட்ட ஏதோ ஓர் ஆசாரியரின் சுலோகத்தை வாசிக்கிறோமா? அல்லது நவீன யுகத்தின் ஜே கிருஷ்ணமூர்த்தி போன்ற புரட்சிகரச் சிந்தனையாளர்களின் கருத்துகளைத்தான் படிக்கிறோமா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. மீண்டும் ஒரு தடவை புத்தகத்தின் தலைப்பைத் திருப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால் ஸ்ரீஆதிசங்கரர் இன்றும் நம்முடன் பேசுகிறார், இன்றைய மனிதராகவும் நம்முடன் பேசுகிறார் என்பது எத்தனை பெரிய விஷயம்! 

பொதுவாக ஞானிகள் யாவருமே என்றும் நம்முடன், நாமாகி, நம் பிரச்சனைகளைப் பேசக் கூடியவர்கள்தாம். ஆனால் நாம்தான் கொஞ்சம் வழிவழி வழக்கம், மாமூல் அபிப்ராயப் பழக்கம் என்று மாட்டிக் கொள்ளாமல் நம்மை விடுதலையாக, நம் மனத்தைத் திறந்து வைத்துக் கொண்டால் ஞானிகளின் ஓம்காரம் காதில் விழும். இல்லையென்றால் ஆமாம்சாமி கோஷத்தில் நாம் பேசுவதுதான் நம் காதுகளைக் கப்பிக் கொண்டு கிடக்கும். உண்மையை ஒப்பி உவந்து நீங்கள் ஏற்றால் அது ‘ஓம்’. உண்மைக்குப் பயந்து மனிதர்களின் ஒப்பந்த அபிப்ராயத்திற்குச் சிந்திக்காமல் நீங்கள் தலைவணங்கினால் அது ‘ஆம்’. 

‘அவர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும். எந்தச் சாதியாக வேண்டுமானால் இருக்கட்டும். இப்படி இருந்தால் அவர் குரு’ என்று சொல்லும் ஒருவரை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள் என்பதை இந்தச் சுலோகத்தைப் படித்தபின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள். 

மரபு ரீதியாகச் சில கதையாடல்கள் இந்தச் சுலோகத்தைச் சார்ந்து எழுந்துள்ளன. அந்தச் சூழ்நிலை விவரணைகளை இந்தச் சுலோகத்திற்கு ‘தாத்பர்ய தீபிகை’ என்னும் உரை எழுதிய ஸ்ரீசதாசிவ ப்ரஹ்மேந்த்ர யோகியார் தந்திருக்கிறார். ‘மதுமஞ்ஜரீ டீகை’ எழுதிய ஸ்ரீபாலகோபாலேந்த்ர முனிவரும் இந்தச் சூழ்நிலை விவரணையைத் தருகிறார். அதாவது காசியில் கங்கையில் குளித்துவிட்டு ஸ்ரீஆதிசங்கரர் வரும்பொழுது, எதிரே, இழிந்த சாதியாகக் கருதப்பட்ட ஒருவர் வர, அவரை ஆசாரியர் விலகும்படிக் கூறவும், அவர் பதிலாகக் கேட்ட கேள்வியே ஒரு சுலோகமாக அமைந்து, அதனால் விழிப்புணர்வு அடைந்த ஆதிசங்கரர் கூறுகின்ற பதிலாக இந்தச் சுலோகம் அமைந்தது என்பது அந்தக் கதையாடலின் சாரம். அவ்வாறு எதிரில் வந்தவர் காசியம்பதியின் சிவபெருமானே ஆவார் என்றும் இந்த விவரணை சொல்கிறது. அதாவது பிரம்மம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அத்வைதம் போதித்த ஆசாரியருக்கும் மனத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பிறவி சார்ந்த ஏற்றத் தாழ்வு என்னும் எண்ணத்தை இறைவனே வந்து சுட்டிக் காட்டி, அது ஆசாரியரின் அத்வைதத் தத்துவத்திற்கே பொருந்தாதது என்று விழிப்புணர்த்திச் சென்றார் என்பது நல்லதொரு சமுதாயச் செய்தியை உடையது. ஆனால் கேள்விக்குப் பதிலாக அமைந்த இந்தச் சிறுநூலின் சூழ்நிலைச் சித்திரம், விரிவான விவரப் பதிவுகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக நமக்குப் புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது (ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் மணிப்பிரவாளப் பதிவுகள் போன்று). இருப்பினும் மரபு ரீதியாக வந்திருக்கும் நல்லவிதமான செய்தி என்பதும் ஒரு விஷயம்தான். பரமசிவனார் கேட்ட கேள்விகள் இரண்டு சுலோகங்களாக உரைகள் குறிக்கின்றன. 

‘அன்னமயமான உடல் ஒன்றிலிருந்து இன்னொரு அன்னமயமான உடலையா? அல்லது (உம்முடைய அத்வைதக் கொள்கையின் படி உபாதிகளற்ற ஒரே படித்தான) சைதன்யத்திலிருந்து சைதன்யத்தையா எதிலிருந்து எதை விலகிப் போகும் படிச் சொல்கிறீர் யதிகளில் சிறந்தவரே?’ 

‘(நீர் உடலைச் சொல்லவில்லை, உயிரைத்தான் சொல்கிறீர் என்னும் பட்சத்தில்) தனக்குத்தானே என்றும் ஒளிரும் ஆத்மாவில் இவன் பிராம்மணன், இவன் நாய்மாம்சம் தின்னும் தாழ்ந்த பிறவியன் என்று பிரித்துக் காணும் இது என்ன பெரிய பிரமை! கங்கை நதியில் பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கும், எங்கோ சேரியில் தெருவில் தங்கியுள்ள ஜலத்தில் பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கும் பேதம் இருக்கிறதா? அல்லது தங்கப் பாத்திரத்தில் இருக்கும் ஆகாயத்திற்கும், மண்குடத்தில் இருக்கும் ஆகாயத்திற்கும் வேற்றுமை இருக்கிறதா? யதிகளில் சிறந்தவரே!’ 

இதற்கு ஸ்ரீஆதிசங்கரர் கூறும் பதில் : 

‘நனவு, கனவு, ஆழ்ந்த துயில் ஆகிய மூன்று நிலைகளிலும் எந்தச் சைதன்யமானது மிகத் தெளிவாக விளங்குகிறதோ, இந்த உலகுக்கெல்லாம் எது என்றும் சாக்ஷியாக அனைத்தையும் பார்த்தபடி விளங்குகிறதோ, பிரம்மா முதல் எறும்பு வரையில் அனைத்து உடல்களிலும் எது ஊடுருவித் திகழ்கிறதோ அந்தச் சைதன்யம்தான் நான், பார்க்கப்படும் இந்த உலகமோ, பொருளோ எதுவும் நான் இல்லை என்று யாருக்குத் திடமான பிரக்ஞை இருக்கிறதோ, அவர் சண்டாளரோ அல்லது இருபிறப்பாளரான அந்தணரோ யாரே ஆயினும் அவரே குரு. இதுவே என் உறுதியான கருத்து’ 

(ஜாக்ரத்ஸ்வப்னஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்வித் உஜ்ஜ்ரும்பதே 

யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்த தனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ | 

ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்த்விதி த்ருடப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத் 

சாண்டாளோSஸ்து ஸ து த்விஜோSஸ்து குருரித்யேஷா மநீஷா மம ||) 

இனி மநீஷா பஞ்சகம் என்னும் பிரகரணத்தைத் தொடர்ந்து பார்ப்போம். 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 



Wednesday, January 28, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 29

பொதுவாக ஒரு நூலோ அல்லது ஒரு ஸ்தோத்திரமோ செய்பவர்கள் எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசிப் பகுதியில் அந்த நூலை, சுலோகத்தைப் படிப்பதன் பலன், அவசியம், செய்தவரின் நோக்கம் என்று பொதுவாகச் சொல்லி முடிப்பார்கள். ஆனால் ஸ்ரீஆதிசங்கரர் இந்தக் கடைசி சுலோகத்தில் மிகச் சிறந்த செய்தியையே நமக்குத் தருகிறார். ஆத்ம சாதகர்களுக்கான மிக முக்கியமான குறிப்பையும், மக்களுக்கு மிகவும் அத்யாவசியமான தெளிவையும், பொதுவாக ஹிந்துமதம் என்பதன் உயிர்நாடியையும் ஒருங்கே அளிக்கும் வண்ணம் பகவத் பாதர் எழுதியிருப்பது மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்கதாகும். 

உலகில் இருட்டு என்பது கொடியது. ஒளியின் இல்லாமை இருட்டு. ஒளியின் விளக்கத்தில்தான் வாழ்வு துலங்குகிறது. பொருள் இருந்தாலும், காணும் கருவி இருந்தாலும், காட்டும் ஒளி இல்லையேல் காட்சி இல்லை. 

பலவித இருட்டுகள் இருக்கின்றன. புற இருட்டு என்பதே மிகவும் தொந்தரவானது. அதிலும் அக இருட்டு என்றால் கேட்கவே வேண்டாம். தெளிவும், ஊக்கமும் இல்லாத குழப்பம் அக இருட்டு. உள்ளத்தில் தன்னம்பிக்கையும், பெருமை உணர்வும் தான் ஒருவர்க்கு உண்மையில் அகத்தின் ஒளி என்கிறார் திருவள்ளுவர். ‘ஒளி ஒருவர்க்கு உள்ள வெறுக்கை’. 

உள்ளத்தின் ஒளியைப் பெருக்க உன்னதமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். Be a light unto yourself என்றார் பகவான் புத்தர். அவ்வாறு உள் ஒளியாய் ஒவ்வொருவரும் இலக வழி சொல்கிறார் சங்கரர். ஒவ்வொரு ஒளியும் அணைந்து விட்டால் பின் எது ஒளியாய் இருக்கும் என்று கேட்டுப் பல ஒளிகளைச் சொல்லிக் கடைசியில் எல்லா ஒளிகளும் இல்லாமல் போன பின்பும் நிலைத்து என்றும் மறையாது உயிர்க்கு உற்ற ஒளியாய் இருப்பது ஆத்ம ஒளி என்று உபநிஷதம் சொல்கிறது. அதை நினைவு படுத்துகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

உள்ள வெறுக்கை என்கிறார் திருவள்ளுவர். வெறுக்கை என்றால் பெருமை உணர்வு. ஓர் உன்னத இலட்சியத்தின்பால் மனிதர் ஈர்க்கப்படும் பொழுது அவர்களுடைய முழு சிந்தனையும், உள்ளமும், ஆர்வமும் எல்லாம் அந்த இலட்சியத்தில் குவிவதை இந்த உள்ள வெறுக்கை என்பது குறிக்கிறது. அப்பொழுது மனிதர் தம் அகத்துள் சிதறுண்டு நிற்காமல் ஒரே உணர்வாகத் திரண்டு இயங்குவதை யோகிகள் இதயம் என்று குறியீட்டு மொழியில் உணர்த்துகின்றனர். இது உடலில் இடப்பக்கம் இருக்கும் உறுப்பான இதயம் என்பதைக் குறிப்பது அன்று. 

உள்ளம் ஒன்றித்துத் திரண்ட உயிர்கெழு ஆர்வம் என்பதை உருவகப்படுத்த உற்ற சித்திரம் கமலம். எனவே இதய கமலம் என்று உரைக்கின்றனர் யோகிகள். புற உலகில் மொட்டாக இருக்கும் தாமரையை மலரச் செய்ய சூரியனின் கதிர்கள் அந்தக் கமலத்தின் மீது படுவது போன்று, அக உலகில் இதய கமலத்தை மலர்த்தும் கதிர், ஆத்ம ஒளி ஆகும். இந்த ஆத்ம ஒளிதான், கற்று அறிந்து பயின்ற கலைகள் அனைத்தின் சாரமும், முடிவுமாக இருப்பது. எனவே ஆத்ம ஞானம் என்பதை வேத ஸாரம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

அத்வைதத்தின் உயிரான கருத்து ‘பிரம்மம் ஒன்றே உண்மை. உலகம் வெறும் மித்யையே. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே. வேறன்று’ என்னும் இதுதான். இதைத்தான் ‘ப்ரஹ்ம சத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:’ என்னும் வாக்கியம் உணர்த்துகிறது. 

இந்தக் கருத்தின் நுணுகிய திரண்ட வடிவாக இருப்பது பிரணவம் என்னும் ஓம். பிரணவம் மூன்று எழுத்துகளைக் கொண்டு உருவானது. அ, உ, ம் என்னும் மூன்று எழுத்துகள் அவை. அ, உ இரண்டும் சேர்ந்து ஓ என்று ஆகி, ம் என்பதுடன் சேர்ந்து ஓம் என்று ஆகிறது. இந்த எழுத்துகளின் அமைப்பு ரீதியான உட்பொருளில் அத்வைதத்தின் ஆன்ற மறைமுடிவான கருத்து அடங்கியிருக்கிறது. இலக்கண ரீதியாகப் பார்த்தால் இந்த எழுத்துகள் தம்மளவிலேயே அர்த்தங்கள் உடையன. ‘அ’ என்பது பிரம்மத்தைக் குறிக்கும் எழுத்து ஆகும். ‘ம்’ என்பது ஜீவனைக் குறிக்கும் சொல்லாகும். ‘உ’ என்பது ’அதுவே’ என்னும் பொருள்தரும் ஏவகாரம் என்பதை உணர்த்தும் குறிப்பு எழுத்து. ஏவகாரம் என்பது ஒன்று அதுவேதான் என்று வலியுறுத்திச் சொல்வது. ஏன் ம் என்பது ஜீவனைக் குறிக்கும் எழுத்து என்று சொல்கிறோம்? அதற்குக் காரணம் இருக்கிறது. வேதாந்தத்தில் உலக தத்துவங்கள் ஆன 24 தத்துவங்களை (அதாவது ஞான இந்ந்திரியங்கள் 5, கர்ம இந்திரியங்கள் 5, இந்திரிய உணர்ச்சிகள் 5, பூதங்கள் 5, அந்தக்கரணம் ஆகிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் நான்கு - மொத்தம் 24) வடமொழி அரிச்சுவடி ரீதியாக க, க2, க3, க4, ஞ, ச, ச2, ஜ, ஜ2 என்ற வரிசையில் நிரல்படுத்திக் கொண்டே வருவார்கள். அப்படியே ப4 வரை 24 தத்துவங்கள் வரிசைபடுத்தப் படும். 25 ஆவதாக வரும் எழுத்து ‘ம’ என்பதாகும். அதை 25 ஆவது தத்துவமான ஜீவன் என்பதைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள். எனவேதான் ஜீவனுக்கே மகார வாச்யன் (ம என்னும் எழுத்தின் பொருளாக இருப்பவன்) அல்லது பஞ்சவிம்சதியான தத்துவம் (பஞ்சவிமசதி - 25, 25 ஆம் தத்துவம்) என்று பெயர் சொல்வார்கள். இப்பொழுது அ, உ, ம் என்னும் எழுத்துகளை வரிசையாக வைத்து அந்த எழுத்து உணர்த்தும் தத்துவத்தை நினைத்துப் பாருங்கள். அ + உ+ ம் = பிரம்மம் + அதுவே + ஜீவன். அதாவது ‘பிரம்மம் ஒன்றே சத்யம். இந்த உலகம் உண்மையில் சத்யமன்று. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே’ என்னும் அத்வைத சாரமான, வேத ஸாரமான கருத்தையே அ, உ, ம் என்னும் எழுத்துகள் தம்மளவிலேயே உணர்த்துவதைக் காணலாம். எனவேதான் இதய கமலத்தில் ஒளிரும் ஆத்ம தீபத்தையே பிரணவமயம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

ஓம் என்பதை விரித்தால் அ + உ + ம். இந்த மூன்று எழுத்துகளை விளக்கினால் அதுவே அத்வைத ஸாராம்சம். 

அறிவுகள் அனைத்தும் உணர்வை அடிப்படையாக கொண்டன. உணர்வோ நம்முள் இருப்பது. நாம் உணர்வுமயமாக இருக்கிறோம். சித்கனம் ஆக இருப்பது ஆத்மா. உணர்வு இருக்கப் போய்த்தான் உலகமே நம்க்கு இருப்பு உடையதாக ஆகிறது. அப்படி இருக்கும் போது இந்த உணர்வை நமக்குப் புறத்தில் இட்டு அறிய முயல முடியாது. ஏனெனில் உணர்வை புறத்தில் இட்டால் அப்பொழுது நாம் உணர்வு இல்லாத ஒன்றாக ஆகவேண்டும். அப்பொழுது அறிவோ உலகமோ என்ற பேச்சே இல்லை. எனவேதான் சித் மயமாக் இருக்கும் ஆத்மாவை, உணர்வுமயனை ஒருநாளும் தர்க்கம் கொண்டு, அல்லது அனுமானம், ஊஹம் முதலியன் கொண்டு அணுகவே முடியாது. பின் நாம் எப்படி ஆத்மாவை உணர்கிறோம் என்ற கேள்வியே பொருளற்றது. ஏனெனில் நாம் உணர்வதே ஆத்மா அடிப்படையாகத்தான். ‘விஞ்ஜாதாரம் கேன விஜானீயாத்?’ என்று கேட்கிறது உபநிஷதம். உணர்பவனை எதைக் கொண்டு உணர்வது? எனவேதான் பிரணவமயமான் ஆத்ம தீபம்தான் அனைத்தையும் நமக்குப் புலப்படுத்துகிறது. ஆனால் அதுவோ தர்க்கத்துக்கு எட்டாதது. ‘அதர்க்யம்’ என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

தர்க்கத்துக்கு எட்டாதது. புறத்தில் இட்டு ஒரு பொருள் போல் அறிய முடியாதது. என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? கையில் ஒரு டார்ச் இருக்கிறது. இருட்டில் இருக்கும் பொருளைப் பார்க்க அந்த டார்ச்சைப் பயன்படுத்துகிறோம். அது ஒளி பாய்ச்சி அந்தப் பொருளைக் காட்டுகிறது. அந்தப் பொருளில் இருக்கும் பிரச்சனையை இந்த டார்ச் ஒளிகொண்டு சரி செய்கிறோம். டார்ச்சுக்குள்ளேயே ஒரு பிரச்சனை. உடனே ஒடித்து வளைத்து டார்ச்சுக்குள் அந்த டார்ச் ஒளியை அடித்துப் பார்க்கவா முயற்சி செய்கிறோம்? உடனே டார்ச்சைத் தனித்தனியாக கழட்டி உள்ளே முதலில் அடிப்படையாக இருக்கும் கருவியின் உப பொருளில் என்ன ஆயிற்று என்று நோக்குகிறோம். 

டார்ச்சின் ஒளியைக் கொண்டு நாம் புறப்பொருளில் இருக்கும் பிரச்சனையைப் பார்ப்பது தர்க்கம். டார்ச்சினுள் இருக்கும் பிரச்சனையைப் பார்க்க டார்ச்சையே தனித்தனியாக அலசிப் பார்க்கிறோமே அதை எதற்கு உவமையாகச் சொல்லலாம்.? அதைத்தான் யோகிகள் தியானத்தில் ஆழ்ந்து புரிந்துகொள்ள முயலும் பிரச்சனைக்கு உவமையாகச் சொல்லலாம். உணர்வின் மயமாக அகத்துள் அமைந்துள்ள ஆத்மாவைப் பார்க்க உற்ற வழியாக யோகத்தில் ஆழ்ந்த தியானம் உதவுகிறது. தியானம் என்பது புறத்தைத் தள்ளி அகத்தை அலசி உற்று உணர்ந்து நோக்குதல். 

Atman is not understood inductively or deductively but you become aware of it by intuition

அதனால்தான் அரிஸ்டாடில் Contemplation is the activity of Gods என்றார். 

எனவேதான் ஸ்ரீஆதிசங்கரர் சொல்கிறார், இந்த ஆத்மா யோகிகளால் தியானத்தில் அடையப்படுகிறது. 

சிலர் நினைக்கலாம். நாங்கள் எல்லாம் விஷ்ணுவை வணங்குபவர்கள். நாங்கள் சிவனை வணங்குபவர்கள். எங்கள் குருமார் வேறு. அவர்கள் சொன்ன மார்க்கங்கள் வேறு. எங்களுக்கும் அத்வைதம் சொல்லும் இந்தக் கருத்திற்கும் என்ன சம்பந்தம்? சிவன், விஷ்ணு என்பதால் இரண்டு வழி என்றில்லை. மற்ற தெய்வங்களை வணங்குபவர்களையும் குறிக்கின்றதுதான். இப்படி அந்த அந்தத் தெய்வ வழிபாட்டைச் சொல்லக் கூடியது அந்த அந்த நெறிக்கான ஆகம சாத்திரம். எந்த ஆகம சாத்திரம் ஆகட்டும், அது சைவ ஆகமமோ, வைஷ்ணவ ஆகமமோ, சாக்தமோ, காணாபத்யமோ, கௌமாரமோ, அல்லது சூரியனை வழிபடும் சௌரமோ எதுவானாலும் அந்தத் தெய்வத்தைப் பற்றிச் சொல்லும் போது, அந்தத் தெய்வம் எதுவே வடிவானது என்று சொல்கிறார்கள்? ஏதாவது பொருளால் ஆனது என்றா சொல்கிறார்கள்? இல்லை. எந்தத் தெய்வ வடிவாயினும் அது சித் வடிவே ஆனது என்றுதான் எந்த ஆகமமும் சொல்லக்கூடிய வார்த்தை. 

சித ஆத்மகம், சின்மயம், சித்கன ரூபம் என்று சொல்லாமல் எந்தத் தெய்வத்தையும் யாரும் விவரிப்பதில்லை. ஸ்ரீஆதிசங்கரர் சொல்வதோ அந்தச் சித் கனம், சித் மயம் என்பதைத்தான் பிரம்மம் என்கிறார். அதுமட்டுமன்று. விஷ்ணு என்றால் எங்கும் விரிந்தது என்ற பொருள். பிரம்மத்தைக் குறிக்கும் பெயர். சிவம் என்றால் மங்களம், நன்மையே வடிவானது என்று பொருள். பிரம்மத்தைத் தவிர மங்களமானதும், நன்மையே வடிவானதும் வேறு எது? 

குரு என்னும் பதமே அர்த்தம் நிறைந்தது. அஞ்ஞானம் என்னும் இருட்டை நீக்கி விளக்கம் பெய்யும் ஒளியாய் இருப்பது குரு என்னும் தத்துவம். பிரம்மம் தன்னளவில் ஒற்றை ஒரே சத்யமாய் இருக்கலாம். சத்யம், ஞானம், அநந்தம், ஆநந்தம் என்று பிரம்மத்தின் இயல்பை எடுத்துக் கூறுகிறது உபநிஷதம். உலகமோ, நாமோ உண்மையில் இருக்கும் சத்யம் இல்லை என்றும் இருக்கலாம். அஞ்ஞானத்தில் பந்தப்பட்ட நிலையும், அதனால் நாம் கொள்ளும் ஓராயிரம் பிரமைகளும் சிறிதும் அடிப்படை அற்ற நிலைமாற்றத் தோற்றங்களேயாக இருக்கலாம். ஆனால் அஞ்ஞானம் விலகி நம் உண்மை இயல்பை உணரும் பொழுதுதான் அந்த ஞானம் நம் தாகத்தைத் தணிக்கும். அதுவரை தொடரும் அவஸ்தையினின்றும் விடுதலையை மித்யையோடு கலந்து வந்து நமக்களிக்கும் அருள் அதே பிரம்மத்தின் இயல்பில் இருக்கப் போய்த்தான் நமக்கு அத்வைதமே கிடைக்கிறது. அந்த அருள்முகம் பிரம்மத்தின் குரு தத்துவம். 

குரு எந்த வடிவத்திலும் வரலாம். ஸ்ரீமத் பாகவதத்தில் யதுமகாராஜனுக்கும் ஒரு பிரம்ம ஞானிக்கும் நட்ந்த உரையாடலாக எழுதும் போது அந்தப் பிரம்ம ஞானி தமக்குக் குருவாக 24 பேர்கள் அமைந்தனர் என்று கூறுகிறார். அந்த 24 ஒரு வினோதமான வரிசை.’பூமி, காற்று, ஆகாயம், ஜலம், அக்கினி, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, சமுத்திரம், விட்டில்பூச்சி, தேனீ, யானை, தேனெடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் வேசி, குரரப்பக்ஷி, குழந்தை, குமரி, அம்புதொடுப்பவன், பாம்பு, சிலந்திப் பூச்சி, குளவி என்று 24 பேர்கள் தமக்குக் குருவாக இருந்தனர் என்கிறார் பிரம்ம ஞானி. அதாவது அதன் பொருள் ஒருவருக்கு அவருடைய ஆத்மாவே குருவாக உள்ளிருந்து நடத்துகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணன் அப்பொழுது விளக்குகிறார் உத்தவரிடம். 

‘ஒரு மனிதருடைய ஆத்மாவுக்குச் சிறப்பாக அவருடைய ஆத்மாவேதான் குருவாக அமைகிறது. ஏனெனில் ஆத்மாவின் உந்துதலால் ஒரு மனிதர் தம் பிரத்யக்ஷத்தாலும், அனுமானத்தாலும் கூட உயர்நலனை அடைகிறார்கள்.’ (ஆத்மனோ குருர் ஆத்மைவ புருஷஸ்ய விசேஷத:| யத் ப்ரத்யக்ஷானுமானாப்யாம் ச்ரேயோSஸாவநுவிந்ததே || ) (11.7.20) 

எதேச்சையாக நம் கையில் கிடைக்கும் நூல், நாம் சந்திக்கும் மனிதர், நமக்கு நடக்கும் ஒரு நிகழ்ச்சி, நம் கண்முன் நடக்கும் ஒரு காட்சி, ஏன் ஏதோ ஒரு பறவை, ஏதொ ஒரு விலங்கு என்று எந்த ரூபத்திலும் பிரம்மத்தின் குரு முகம், அருள் பாய்வு நடந்தாலன்றி மாயைத் திரையும் கிழிவதில்லை. அப்பால் நிற்பது போல் நின்று குமிணகைக்கும் பரமசிவமோ, அறிதுயில் அமர்ந்து அனைத்தும் அறிந்த குறும்பில் புன்னகைக்கும் ஆதிநாராயணமோ அப்பொழுதுதான் நம் கனவு இரிந்த நிதர்சனமாய் நமக்கும் அர்த்தப் படுகிறது. 

இதையே தேஜோபிந்து உபநிஷத் கூறுகிறது. ‘பகுதியாக்கப் படாமல் ஒரே முழுமையான சைதன்ய ரஸம்தான் பிரம்மா, அதே சைதன்ய ரஸமே ஹரி, அதே சைதன்ய ரஸமே ருத்ரர், அதே சைதன்ய ரஸமே நான், அதே சைத்ன்ய ரஸமே ஆத்மா, அதே சைதன்ய ரஸமே குரு’ (அகண்டைக ரஸோ ப்ரஹ்ம, அகண்டைக ரஸோ ஹரி:, அகண்டைக ரஸோ ருத்ர, அகண்டைக ரஸோSஸ்மி அஹம், அகண்டைக ரஸோஹி ஆத்மா ஹி அகண்டைக ரஸோ குரு:) (2.5-6). 

வேத ஸாரத்தைச் சொல்ல வந்த ஸ்ரீஆதிசங்கரரும் அதையே சொல்கிறார். விஷ்ணு, சிவம், குரு அனைத்தும் ஒன்று கலந்தது பிரம்மம். அதுவே உன் இதய கமலத்தில் இருள் கடியும் ஆத்ம தீபமாக இருப்பது. அவ்வாறு அதை நீ தியானம் செய்வாயாக. 

அனைத்து உயிர்களிலும் அந்த ஒளி, ஆத்மா என்ற பிரம்மம் திகழ்கிறது. என்றால் பலப்பல ஜீவர்கள் போல் தோன்றினாலும் ஒரே ஆத்மாவாகத் திகழ்கிறது. ஒளிரும் சூரியன் ஒன்றுதான். ஆனால் பல நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கும் சூரியன்கள் பல போன்று தோன்றினாலும் உள்ள சூரியன் ஒன்றேதான். 

ஒருமுறை விலகிய இருள் மீண்டும் வந்து ஒட்டுவதில்லை. ஒரு முறை கலைந்த கனவு மீண்டும் வந்து தொடர்வதில்லை. ’பயப்படும் குழந்தை முகமூடி போட்டு ஆடும் நபர் தன் தந்தை என்று உணர்ந்ததும் பின்னர்ப் பயப்படுவதில்லை’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதுபோல் ஒரே ஒரு முறை நன்கு சிந்தித்து இந்தப் பிரம்மத்தைப் புரிந்துகொண்டு விட்டால் பின்னர் அந்த மனிதர் முக்தர்தான் என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

’இதய கமலத்தின் உள்ளே 

இலகும் தீபமாய் வேத சாரம் 

பிரணவமயமாய், தர்க்கம் கடந்து, 

தியானத்தில் யோகிகளால் அடையப்படும். 

ஹரி, குரு, சிவம் கலந்த யோகம் 

அனைத்து உயிரிலும் திகழும் ஏகம் 

ஒருமுறை மனத்தால் சிந்தித்து உணர்ந்தால் 

போதும் அவர் முக்தரே ஆவார்.’ 

(ஹ்ருதயகமல மத்யே தீபவத் வேதஸாரம் 

ப்ரணவமயம் அதர்க்யம் யோகிபிர் த்யானகம்யம் | 

ஹரிகுருசிவ யோகம் ஸர்வபூதஸ்தம் ஏகம் 

ஸக்ருதபி மநஸா வை சிந்தயேத் ய: ஸ முக்த: || ) 

முற்றும். 

சுபம். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***