மொழி என்னும் போது நமக்குப் பொதுவாக மக்கள் புவிப் பிரதேசங்களில் வழங்கும், அகராதிகளின்பால் படும் அல்லது பேச்சுநிலையில் மட்டும் உள்ள மொழிகளைத் தான் தோன்றும். ஆனால் அது மட்டுமே மொழி என்பதற்குப் பொருளாகச் சொல்லிவிட முடியாது. மொழிதல் என்பதற்குப் பின்னால் இருக்கும் நெடிய மனவேலை, பண்பாட்டுக் காரணி, புரிந்து கொள்ளும் உள்ள இயக்கத்தின் அர்த்த வெளி என்பதும், அந்தப் புரிதலின் அர்த்த வெளியின் ஊடு மறுகும் பொதுவழங்கு முற்றம் என்பதெல்லாம் நம் கவனம் கூர்மைப் படுவதைப் பொறுத்து நம்மால் உள்வாங்கப் படுகின்றவை. உருவருவாகிப் பயிலும் இந்தப் பெரும் நிஜத்தின் ஒரு முனைதான் நம்மிடையே புழங்கும் மொழி என்னும் முகம்.
உதாரணமாக, cult என்னும் சொல்லை எடுத்துக் கொண்டால் அதன் வேர்ப் பொருள் என்ன? 16 ஆம் நூற் பிரஞ்சு அல்லது 17ஆம் நூற், culte வழிபடுதல், தொழுதல் என்பதா? இங்கும் வழி படுதல் என்றால் எதையோ பின்பற்றுதல், பின்னால் போகுதல் என்னும் பொருள் சேர்ந்து விடுகிறது. தொழுதல், வணங்குதல் என்பதா? இலத்தீனில் cultus அக்கறை, உழைப்பு, உழுதல், மதித்தல், தங்குதல் என்னும் பொருளில் எல்லாம் வந்து விடுகிறது. colere என்பதன் கடந்தகால வினை வடிவமாக cultus உழுதல் என்னும் பொருளில்; இதன் அடிப்படையில்தான் colony, உழவர் உறையுள்தான் காலனி என்ற சொல்லால் குறிக்கப் பட்டது. 19ஆம் நூற் மீண்டும் தலைதூக்கி இந்த கல்ட் என்னும் சொல் ஒரு குறிப்பிட்டவரைக் குறித்த போற்றுகை, சார்புக் கூட்டம் என்னும் பொருளில் புழங்க ஆரம்பித்து விட்டது. இந்த cult என்ற சொல்லைப் பண்பாடு தாண்டி நமது மண்ணில் புழங்கும் ஆகம வழிபாடுகள் என்பதற்குப் பயன் படுத்தினால் குத்து மதிப்பாக ஏதோ ஒரு சொல் என்ற அளவில் இருக்கிறதேவொழிய பொருளின் பொருத்தம் என்று வரும் போது மிகவும் தள்ளிப் போய் விடுகிறது. அதுவும் நம் காலத்தில் இது போன்று மொழிபெயர்ப்பு முகாந்திரத்தில் பயன்படுத்தப் படும் வேற்றுப் பண்பாட்டு மொழிச் சொல்லால் ஏற்படும் அர்த்தமே மீண்டும் நம் பண்பாட்டு மொழிகளின் அர்த்தப் பிரதேசங்களில் உல்டாவாக வந்து நுழையும் போது மிகவும் அந்நியமான ஒரு சித்திரத்தைத் தோற்றரவாகக் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. முதல் சான்றான நிஜத்தைப் புரிந்து கொள்ளப் போய்க் கடைசியில் அதுவும் புரியாமல், இந்தச் சொற்களால் விளையும் கானல் சித்திரங்களும் கூடுதல் புதிர்களாக ஆகிப் போய் விடுகின்றன. இந்தப் பிரச்சனைகள் புரிந்து கொள்ளாமையால் விளைவது என்பதை விட புரிந்து கொள்ளும் முயற்சியாலேயே விளைகின்றன எனலாம். இந்தப் பாடு ஆங்கிலம் என்பதால் மட்டும் ஏற்பட்டது என்று சொல்ல முடியவில்லை. ஆங்கிலம் என்பதற்குப் பதிலாக இங்கு தமிழ் அல்லது பிரதேச மொழி எதைப் பயன் படுத்த முனைந்தாலும் இந்தக் கஷ்டம் ஏற்படுகிறது. தீர்வு என்பது மொழிகளின் புறத் தோற்றங்களில் இல்லை. மொழிகளால் பயன்கொள்ளும் அடுத்த நிலையான புரிந்து கொள்ளும் மொழிப் புலம் என்பதை நாம் பண்டைய கருத்துலகங்களுக்கு உட்செறிவு கெடாமல் வென்றெடுக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டால் ஆகும் முயற்சிகளின் விளைவால் புழக்கப் படுத்துகிறோமா என்பதில்தான் இருக்கிறது. ***