Thursday, December 31, 2015

’இன்றைக்கு ஆகிற வேலையைப் பாருங்க.’

’இன்றைக்கு ஆகிற வேலையைப் பாருங்க. சும்மா நாளைக்கு, இன்னும் எதிர்காலத்தைப் பற்றி நமக்கு என்னத்துக்கு? அன்றைக்குப் பொழுதை ஓட்டினோமா.. நாளைக்கு வருவதை நாளை பார்த்துக் கொள்வோம். இன்னி பொழைப்பைப் பாருங்க.’ - இந்த மனப்பான்மை தனி மனிதர்கள், நிறுவனங்கள் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் நெடுநாளாகவே தொற்றிப் படரும் வியாதி. இது கொஞ்சம் தீவிரப்பட்டு ‘கண்டதே காட்சி. கொண்டதே கோலம்’ என்ற பார்வையாக மாறிக் கணநேரக் களிமயக்குகளாய்ப் பொழுதை விழுங்கும் பொழுது போக்கு அம்சங்களுக்கு ஊட்டமாய் ஆகிறது.

இன்றைய நம் செயல் நாளை என்னவாக ஆகும்? நேற்றைய எந்த நம் செயல் இப்படி நிகழ்காலமாக நமக்கு ஆகிநிற்கிறது? - என்ற கவலைகள்தாம் காலம் காலமாக ஆழ்ந்து நீண்டு ‘கர்மம்’ என்ற கொள்கையாக நெடுங்காலம் முன்னரே பாரதப் பண்பாட்டின் கொள்கையாக உருப்பெற்றது. நேற்றைய கர்மம் இன்றைய அனுபவமாக மாறும் பொழுது, இன்றைய கர்மம் நாளைய விளைவாக ஆகும் என்பது இயல்பான யூகம். ‘எல்லாம் கர்மவினை. என்ன செய்வது?’ என்று கையறு நிலைக்குச் சாதகமாக இந்த ’கர்மம்’ என்ற கோட்பாட்டையும் நம்மால் மாற்றிக் கொள்ளமுடியும் என்பது நம் அறிவின் குறைபாடேவொழிய, இந்தக் கோட்பாட்டின் குறையாக ஆகாது.

கர்மம் என்ற கோட்பாட்டை நாம் ஏற்றாலும் விட்டாலும் நிச்சயம் குறைந்தபட்சம் இந்த வாழ்க்கையில், நம் அனுபவத்தில், நாம் மற்றவர்களோடு சேர்ந்து வாழும், இயங்கும் உலகில் என்ற அளவுக்காவது கர்மம் என்ற கோட்பாடு மறுக்கக் கூடியதாகத் தெரியவில்லை. நிச்சயம் ‘அன்றைக் கணத்திற்குக் கவலைப் படு; நாளையைப் பற்றி யாருக்கு அக்கறை’ என்ற பார்வை மிகவும் குருடான பார்வை என்பதையும் மறுக்க முடியவில்லை. அவ்வாறு மறுக்க முயன்றால் இயற்கை நம்மைக் கடுமையாக தண்டிக்கிறது என்பதும் நமக்கு நிதர்சனமாகக் கிடைக்கிறது.

‘இயற்கையை வெல்வதற்கு முதல் வழியே அதனிடம் நம் தோல்வியை ஒப்புக்கொண்டு விடுவதுதான்’ என்பார்கள் அறிஞர்கள். அந்த அடக்கம் நமக்கு வந்து விட்டால் நாம் இயற்கையைப் புரிந்து கொள்வதில் முனைப்பு காட்டுவோம். இயற்கையின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்துதான் நாம் இயங்க வேண்டும். அதுதான் வாழும் வழி, தனி ஒருவராக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி அல்லது உலக அளவிலும் சரி. இந்த அடக்கமும், இயற்கையைப் புரிந்து கொண்டு நடக்கும் மனப்பான்மையும் நமக்கு ஏற்படாமல் இருக்க ஒரு பெரும் தடையாக இருப்பது நம் அகங்காரம். அந்த அகங்காரத்தின் விளைவாக நம்மிடையே கிளம்பும் பேராசை. பேராசைக்குப் பலியாகி மிஞ்சும் கண்மூடித்தனம். இந்த அகங்காரம், பேராசை, கண்மூடித்தனம் இவற்றை நாம் அமைதியாக நம்முள் ஆட்டம் போடுவதை உணர்ந்துவிட்டால் அந்த வினாடியே இவற்றின் பிடி தளரும். நன்கு உணர உணர இவை முற்றிலும் கழலும். உணர்வில் காலூன்றி நிற்கத் தொடங்கினால் இவை மறைந்து ஒழியும்.

***