Monday, February 20, 2017

நாடகத்தால் உன் மகன்போல் படித்து நான் நடுவே..

வாழ்வில் எப்பொழுதுதான் எதைக் கவனிக்கிறோம் என்பது ஒரு புதிர்தான். 
என்னுடைய தந்தையார் மிகச் சிறந்த நாடகாசிரியர். அமெச்சூர் என்னும் கலைக்காகவே ஈடுபாடு கொண்டு, காசு பார்க்காமல் நாடகத்தில் ஈடுபட்ட குழுக்கள் திருச்சியில், ஸ்ரீரங்கத்தில் 50, 60, 70, களில் நன்கு இருந்தன. ஜமால்மொஹமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசானாகப் பணியாற்றிப் பின்னர் உருமு தனலட்சுமி கல்லூரியில் முதல்வராய்ப் பணியாற்றிய திரு சி எஸ் கமலபதியின் தலைமையில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை மேடையேற்றும் அமெச்சூர் குழு ஒன்று தந்தையில் இயக்கத்தில் சீரும் சிறப்புமாய் திருச்சி, கும்பகோணம், மதுரை, சென்னை முதலிய பிராந்தியங்களில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை மேடையேற்றியது. நாடக மேடையளிப்பின் தரம் பற்றி நாம் குறிப்பிடுவதை விட இலண்டனைச் சேர்ந்த ஆங்கில ஆசான்மார்கள் பார்த்துச் சொன்ன வார்த்தை உண்மையானவை - It is worth walking miles to see Kamalapathi and Venu act the characters of the bard of Avon. ஆம் இந்த 'வேணு' எனப்பட்ட திரு ஆர் வேணுகோபால் அவர்கள்தான் என் தந்தையார்.

ஹைஸ்கூல் படிக்கும் ட்ரவுஸர் நாட்களிலேயே பிரின்ஸ் ஆஃப் மொராக்கோ, ரிச்சர்ட், ட்யூக் ஆஃப் நார்த்தம்பர்லண்ட், ஷைலாக், பஸ்ஸானியோ, அண்டோனியோ, ஜூலியஸ் ஸீஸர், மார்க் ஆண்டனி, கிளியோபாட்ரா, என்று பெரும் பாத்திரங்கள் நிறைந்த உலகமே என் மனத்தில் உருண்டு கொண்டிருந்த காரணம் யார் என்று சொல்லாமலே விளங்கும்.

இத்தகைய இயக்கங்களில் நான் ஸ்க்ரிப்ட் அஸிஸ்டண்டாகப் பணியாற்றிய (அப்பொழுதும் டவுசர் நிலைதான்) மெர்சண்ட் ஆஃப் வெனிஸ் என்னும் நாடகம் (80 களின் தொடக்கம் என்று ஞாபகம்) ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலின் நிதியுதவிக்காகப் போட்ட நினைவு. ஒரு நாடகத்தின் மூலப் பனுவல், அதன் மேடைப் பிரதி, மேடைப் புழக்கத்திற்கான ரீதியில் பிரதியை பகுதிப் படுத்துவது, மேடைக் குறிப்புகள், நடிகர்களுக்கான உதவிக் குறிப்புகள், எந்த நடிகர்கள் எங்கு தவறவிடுவார்கள் என்பதற்கான யூகச் சிட்டுகள், ரிஹர்ஸல் என்னும் ஒத்திகைகளின் நிரல்கள், அதன் முன்னேற்றங்கள் குறித்த படித்தரக் குறிப்புகள், ஆங்கில நாடகம் என்பதால், அதுவும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகம் என்பதால் நோ காம்ப்ரமைஸ் என்பதால், ஒவ்வொருவருக்கும் உச்சரிப்பை எப்படியாவது சுற்றுவழிகளிலாவது அவர்களுக்குள் கடத்திக் கொண்டு போய்ச் சொல்ல வைத்து விடுவது - இதில் எல்லாம் தொடக்கப் புள்ளிகள் தந்தை போட்டார் என்றால், தொடர்ந்து விரட்டி வேலை வாங்கி, முன்னேற்றம் காண்பிப்பது, ஏதேனும் முட்டுகள் இருந்தால் அவருடைய கவனத்திற்குக் கொண்டு செல்வது இவையெல்லாம் என் பொறுப்புகள் பணிகள். நல்ல வேளை கடைசியாக நடந்த நாடகம். அதற்கு முன்னால் நான் மிகவும் சின்ன பையன். இல்லையென்றால் என் கதி என்ன ஆகியிருக்கும்!

ஆனால் கடுமையான வேலை வாங்கும் ஆசாமிதான் என் தந்தை. என்னை வேலை வாங்குவது இருக்கட்டும். அதற்குப் பாதி காரணம் எனக்கே அந்த மாதிரி வேலைகள் மிகவும் பிடித்தவை. சிறுவர் நண்பர்களுடன் விளையாடப் போவதை விட இவ்வாறு என் தந்தையின் இலக்கிய நண்பர்களின் குழுவில் சேர்ந்துகொண்டு இருப்பதுதான் எனக்குப் பிடித்தப் பொழுது போக்காகவும் இருந்தது. 'ஏண்டா விளையாடப் போகல்லியா?' என்று அவருடைய நண்பர்கள் எவ்வளவு கேட்டாலும் ஹி ஹி என்று இளித்துக்கொண்டு அந்தக்கூட்டத்திற்குள்ளேயே வளைய வருவது எனக்குப் பிடித்த உலகமாய் இருந்தது. அந்தக் காலங்களில் டிவி கிடையாது, நெட்டு கிடையாது, ரேடியோ கூட எல்லார் வீட்டிலும் சரிவரக் கிடையாது. இருந்தாலும் வால்வு ரேடியோதான். அதை ஆன் செய்துவிட்டுப் போய் பல் தேய்த்துக் காபி குடித்து வரலாம் - அப்பொழுதுதான் காலை உபந்யாஸம் முடிவுக் கட்டம் மட்டும் கேட்கும். அதுவரையில் அந்த ரேடியோ சுருதி சேர்க்கும் ஓசையைக் கொஞ்சம் சகிக்கக் கற்க வேண்டும்.

அப்பொழுது எல்லாம் என் தந்தையும் அவரது தோழர் திரு மீனாட்சிசுந்தரம் என்னும் 'தரம்'உம் பல சமயம் திருஞானசம்பந்தர் பற்றிய நாடகம் ஒன்று போட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்ததைக் கூடவே ஒட்டிக் கொண்டு கேட்டிருக்கிறேன். அதற்கான நாடகப் பிரதியையும் எழுதி முடித்துவிட்டார். அதைப் படித்துக் காண்பித்த (சாரி..) நடித்துக் காண்பித்த (என் தந்தைக்கு வெறுமனே படிக்க வராது. அவர் படிக்கிறார் என்றால் அது நடிக்கிறார் என்னும்படிதான் இருக்கும்) நினைவு இன்னும் இருக்கிறது. திருச்சி மலைக்கோட்டை வீதியில் அவரும் தரமும் நடந்து செல்லுங்கால் யாரை திருஞானசம்பந்தராகப் போடுவது, யாரை சிவபாத இருதயராகப் போடுவது, யாரைச் சிவன் பார்வதியாகப் போடுவது என்றெல்லாம் ஒரே டிஸ்கஷன். சங்கர் கபேயில் அருமையான ஸ்வீட் காரம் காபி, ஆனால் அதைவிடவும் அவர்களின் பேச்சு சுவை மிக்கதாக இருந்தது.

இத்தனையும் ஏன் சொல்கிறேன் !! அந்த நாடகப் பிரதி. தேடிக் கொண்டிருந்தது கிடைத்தே விட்டது. நூலாக வராமல் கையெழுத்துப் பிரதி அதுவும் முழுமையாகக் கிடைத்து விட்டது என்றால்.... ரெட் இங்கிலும் ப்ளூ இங்கிலுமாக மாறி மாறி மேடைக் குறிப்புகளுடன் எழுதப்பட்ட பிரதியைப் பார்க்கும் பொழுது மனசால் பழையபடி அந்த சின்னப் பையனாக ஆகிவிட்டேன். என்ன ஒரு புரட்சிகரமான பிரதி அந்தக் காலத்தில்! பக்தி சமுதாயச் செய்தி, காலச் சூழல் என்று எவ்வளவு விஷயங்களைக் கவனம் கொண்டு எழுதியுள்ளார் என்பது இப்பொழுது படிக்குங்கால் பிரமிப்பாக உள்ளது. அப்பொழுது அதெல்லாம் கவனம் இல்லை. டேகன் ஃபார் க்ராண்டட்.

ஏன் சார்? இந்தப் போனவர்களும் தங்களுடைய குழந்தைகள் தங்களைப் பற்றியும், தங்களது சாதனைகளைப் பற்றியும் இறும்பூது அடைகிறார்கள் என்பதை எங்கிருந்தாவது உணர்வார்களா? அப்படி அவர்கள் உணர ஏதாவது வாய்ப்பு இருக்காதா, பரவாயில்லியே பையன் நம்மை மறக்காமல் இருக்கிறான் என்று மகிழ வாய்ப்பு இருக்காதா என்று மனம் ஏங்கிக் கனக்கிறது. இனிமேல் என்னத்தை எழுத?

***