Monday, January 31, 2022

கடவுள் இயல்

அது என்னது கடவுள் இயல்? புவி இயல், இயற்பியல். இயந்திர இயல் எல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அது போல் கடவுள் இயலா? அப்படியென்றால் கடவுளை ஒரு பொருள் போல் புறத்திலிட்டு இப்படி இப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து எழுத முடியுமா? ஆம் இப்படிக் கேள்விகள் எழுவது இயல்புதான். ஆனால் கடவுள் இயல் என்றால் இவ்வாறு புறத்திலிட்டு ஆராயும் பொருள் போன்றது இல்லை. கடவுள் என்பது ஒரு பொருளோ அல்லது ஓர் ஆளோ அல்லது ஓர் ஆற்றலோ என்பது இல்லை. பின்னர் புறத்திலிட்டு ஓர் ஆள் போன்றோ, பொருள் போன்றோ ஓர் ஆற்றல் போன்றோ ஆராய முடியாது என்றால் கடவுளைப் பற்றி என்ன பேச முடியும்? பின் கடவுள் இயல் என்று ஒன்றை எப்படிச் சொல்ல முடியும்? 

கடவுள் என்ற கருத்து மனித வரலாற்றில் ஆதிப் பழங்காலத்திலிருந்தே வந்து கொண்டிருக்கிறது. மேலும் சாதாரணமான பேச்சு வழக்கத்தில் நாம் கடவுள் என்று பயன்படுத்தும் போது அவரை ஓர் ஆள் போன்றும், எங்கோ இருப்பவர் போன்றும் நாம் பழகும் உலகில் பேசக் கூடிய ஒரு விஷயமாகப் பேசுகிறோம். அப்பொழுது அது நமக்கு வித்யாசமாகத் தெரிவதில்லை. அந்த மாதிரி நேரங்களில் நாம் கடவுள் என்று எதைப் பற்றி மனத்தில் நினைத்துக் கொள்கிறோம் என்று சற்றுப் பொறுமையாகச் சிந்தித்தால் பொதுவாக நம்மை மீறிய ஒரு சக்தி, பேரறிவு, அருள் நிறைந்த ஆனால் கண்ணிற்குப் புலனாகாத ஒன்று என்று ஏதோ ஒருவிதத்தில் கருதிப் பேசுகிறோம். பல சூழ்நிலைகளிலும் அது நமக்கு ஆதரவு தரக் கூடிய உணர்வாகவும், பேச்சாகவும் இருக்கிறது. 

இத்தகைய கடவுள் பற்றிய பேச்சுகளிலும் ஓரளவிற்குத் தெளிவைப் பெறுவது எப்படி என்று பல நாடுகளிலும் பல அருளாளர்களும் பல விதங்களிலும் நூல்கள் தந்துள்ளனர். கடவுளைப் பற்றிப் பேசும் போது இன்ன இன்ன விதங்களில் பேசுவது கூடுதல் தெளிவைத் தரும் என்றும், இன்ன இன்ன விதங்களில் பேசாமல் தவிர்க்க முயல்வதும் தெளிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் தம்முடைய நூல்களில் சில கருத்துகளைக் கூறியுள்ளனர். இவ்வாறு இந்தக் கடவுள் இயல் என்பதற்கு ஆங்கிலத்தில் ‘தியாலஜி’ என்று பெயர். தியாஸ் என்றால் கிரேக்கத்தில் தெய்வம் என்று பொருள். லொஜி என்றால் இயல். 

இவ்வாறு இந்துமதத்தில் கடவுள் இயலைக் குறித்துப் பேசும் நூல்கள் உபநிஷதங்கள். இந்துமதத்தில் இருக்கும் பல வழிபாட்டு நெறிகளும் அடிப்படையான நூலாக ஒப்புக்கொள்ளும் ஒரே நூல் உபநிஷதங்கள். உபநிஷதங்களில் கடவுள் என்பதற்குப் பிரம்மம் என்று பெயர் தருகிறார்கள். மிக மிகப் பெரிய விஷயம் என்ற பொருள் கொண்டது பிரம்மம் என்னும் சொல். அது மட்டுமன்று தம்மைக் குறித்துக் கற்பவரைப் பெருநிலையை எய்துமாறு ஆக்கும் கடவுள் ஆகையாலே பிரம்மம் என்று பெயர். 

உபநிஷதங்கள்தாம் இந்துமதப் பிரிவுகள் அனைத்திற்கும் அடிப்படையான ஒரே மூல நூல். அதில் பிரம்மத்தைக் குறித்து என்ன என்ன கருத்துகள், எப்படிப் பேசப் பட்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்து முறையாக ஓர் இயல் என்ற வடிவில் தரப்பட்டதுதான் பிரம்ம சூத்ரம். பிரம்ம சூத்ரம் என்றால் உபநிஷதங்களைக் குறித்து முறையாக ஆராய்ந்து நெறிப்படத் தரப்பட்ட நூல் என்று பொருள். உபநிஷதங்கள்தாம் மூலம். அதனைக் குறித்த ஆராய்ச்சி முடிவுகள்தாம் பிரம்ம சூத்ரம். இதே உபநிஷதங்களின் கருத்துகளைச் சாரமாகக் கவிதை வடிவில் செய்யுள்களாகத் தரப்பட்ட நூல்தான் ஸ்ரீ பகவத் கீதை. ஸ்ரீ பகவத் கீதையில் கூடுதலாக ஸ்ரீ கிருஷ்ணர் மீதான பக்தி என்பது போதிக்கப்பட்டிருக்கும். ஆக கீதையோ, பிரம்ம சூத்ரமோ தனித்தனியான நூல் அன்று. இரண்டுமே வெவ்வேறு விதத்தில் உபநிஷதத்தின் கருத்துகளைக் கோவையாக்கி, சாரமாகத் தந்த நூல்கள்தாம். உபநிஷதங்கள், கீதை, பிரம்ம சூத்ரம் என்று மூன்று நூல்களிலும் இந்துமதத்தின் கடவுள் இயலைக் குறித்துத் தெளிவான விளக்கம் தரப்பட்டிருக்கிறது. தெளிவுக்காகத் தரப்பட்ட நூல்களைக் குழப்பிக் கொள்ளாமல் இருத்தல் நம் கடமை அல்லவா! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***