Sunday, March 29, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 01

'என்னுடைய கருத்து இதுதான்’ என்று சொல்வோம். அல்லது ‘முடிவாக நான் கருதும் நிச்சயம் இதுதான்’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இவ்வாறு ஒருவர் பலவிதங்களில் பரிசீலித்துப் பார்த்து இதுதான் தாம் கொள்ளும் கடைசி நிச்சயமான முடிவு என்று சொல்வதற்கு ‘மநீஷா’ என்று பெயர். மநீஷா என்றால் அறுதியான முடிவான கருத்து என்று பொருள். யாரோ ஸ்ரீஆதிசங்கரரிடம் கேட்டிருப்பார்கள் போல் இருக்கிறது, அவருடைய அறுதியான கருத்துகள் என்ன என்று. ஐந்து சுலோகங்களில் ‘மம மநீஷா நூநம்; என்று சொல்லிச் சொல்லிப் பாடுகிறார். மம - என்னுடைய, மநீஷா - அபிப்ராயம், கருத்து, முடிவு; நூநம் - நிச்சயம். எனவே ஏதோ பாட்டுக்கு என்று சொல்லிவிட்டார் என்று இதைக் கொள்ள முடியாது. தம்முடைய தேர்ந்த முடிவான கருத்து என்று அவரே சுருக்கமாக ஐந்து சுலோகங்களில் சொல்லும் போது, இது எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடியும். எனவேதான் போலும் இந்த சுலோகத்திற்கே ‘மநீஷா பஞ்சகம்’ என்று பெயர் வந்துவிட்டது. பஞ்சகம் என்றால் ஐந்து எண்ணிக்கை உள்ள தொகுதி என்று பொருள். இங்கே ஐந்து சுலோகங்கள் கொண்ட இந்தச் சிறுநூல். ஆங்கிலத்தில் எழுதினால் My Considered Conclusions in Five Verses என்று வரும். 

இந்தச் சுலோகங்களை வாசித்தால் இதில் திரும்பத் திரும்ப ஸ்ரீஆதிசங்கரர் யார் உண்மையில் குரு என்று வலியுறுத்திச் சொல்வது போல் இருக்கிறது. இதைப் படிக்கும் போது நமக்கே ஒரு நிமிஷம் சந்தேகம் வந்துவிடுகிறது. மரபு ரீதியாகச் சொல்லப்பட்ட ஏதோ ஓர் ஆசாரியரின் சுலோகத்தை வாசிக்கிறோமா? அல்லது நவீன யுகத்தின் ஜே கிருஷ்ணமூர்த்தி போன்ற புரட்சிகரச் சிந்தனையாளர்களின் கருத்துகளைத்தான் படிக்கிறோமா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. மீண்டும் ஒரு தடவை புத்தகத்தின் தலைப்பைத் திருப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால் ஸ்ரீஆதிசங்கரர் இன்றும் நம்முடன் பேசுகிறார், இன்றைய மனிதராகவும் நம்முடன் பேசுகிறார் என்பது எத்தனை பெரிய விஷயம்! 

பொதுவாக ஞானிகள் யாவருமே என்றும் நம்முடன், நாமாகி, நம் பிரச்சனைகளைப் பேசக் கூடியவர்கள்தாம். ஆனால் நாம்தான் கொஞ்சம் வழிவழி வழக்கம், மாமூல் அபிப்ராயப் பழக்கம் என்று மாட்டிக் கொள்ளாமல் நம்மை விடுதலையாக, நம் மனத்தைத் திறந்து வைத்துக் கொண்டால் ஞானிகளின் ஓம்காரம் காதில் விழும். இல்லையென்றால் ஆமாம்சாமி கோஷத்தில் நாம் பேசுவதுதான் நம் காதுகளைக் கப்பிக் கொண்டு கிடக்கும். உண்மையை ஒப்பி உவந்து நீங்கள் ஏற்றால் அது ‘ஓம்’. உண்மைக்குப் பயந்து மனிதர்களின் ஒப்பந்த அபிப்ராயத்திற்குச் சிந்திக்காமல் நீங்கள் தலைவணங்கினால் அது ‘ஆம்’. 

‘அவர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும். எந்தச் சாதியாக வேண்டுமானால் இருக்கட்டும். இப்படி இருந்தால் அவர் குரு’ என்று சொல்லும் ஒருவரை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள் என்பதை இந்தச் சுலோகத்தைப் படித்தபின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள். 

மரபு ரீதியாகச் சில கதையாடல்கள் இந்தச் சுலோகத்தைச் சார்ந்து எழுந்துள்ளன. அந்தச் சூழ்நிலை விவரணைகளை இந்தச் சுலோகத்திற்கு ‘தாத்பர்ய தீபிகை’ என்னும் உரை எழுதிய ஸ்ரீசதாசிவ ப்ரஹ்மேந்த்ர யோகியார் தந்திருக்கிறார். ‘மதுமஞ்ஜரீ டீகை’ எழுதிய ஸ்ரீபாலகோபாலேந்த்ர முனிவரும் இந்தச் சூழ்நிலை விவரணையைத் தருகிறார். அதாவது காசியில் கங்கையில் குளித்துவிட்டு ஸ்ரீஆதிசங்கரர் வரும்பொழுது, எதிரே, இழிந்த சாதியாகக் கருதப்பட்ட ஒருவர் வர, அவரை ஆசாரியர் விலகும்படிக் கூறவும், அவர் பதிலாகக் கேட்ட கேள்வியே ஒரு சுலோகமாக அமைந்து, அதனால் விழிப்புணர்வு அடைந்த ஆதிசங்கரர் கூறுகின்ற பதிலாக இந்தச் சுலோகம் அமைந்தது என்பது அந்தக் கதையாடலின் சாரம். அவ்வாறு எதிரில் வந்தவர் காசியம்பதியின் சிவபெருமானே ஆவார் என்றும் இந்த விவரணை சொல்கிறது. அதாவது பிரம்மம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அத்வைதம் போதித்த ஆசாரியருக்கும் மனத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பிறவி சார்ந்த ஏற்றத் தாழ்வு என்னும் எண்ணத்தை இறைவனே வந்து சுட்டிக் காட்டி, அது ஆசாரியரின் அத்வைதத் தத்துவத்திற்கே பொருந்தாதது என்று விழிப்புணர்த்திச் சென்றார் என்பது நல்லதொரு சமுதாயச் செய்தியை உடையது. ஆனால் இந்தச் சுலோகம் அமைந்த போக்கிற்குப் பொருந்தி வரவில்லை அந்தச் சூழ்நிலை விவரணை. இருப்பினும் மரபு ரீதியாக வந்திருக்கும் நல்லவிதமான செய்தி என்பதும் ஒரு விஷயம்தான். பரமசிவனார் கேட்ட கேள்விகள் இரண்டு சுலோகங்களாக உரைகள் குறிக்கின்றன. 

‘அன்னமயமான உடல் ஒன்றிலிருந்து இன்னொரு அன்னமயமான உடலையா? அல்லது (உம்முடைய அத்வைதக் கொள்கையின் படி உபாதிகளற்ற ஒரே படித்தான) சைதன்யத்திலிருந்து சைதன்யத்தையா எதிலிருந்து எதை விலகிப் போகும் படிச் சொல்கிறீர் யதிகளில் சிறந்தவரே?’ 

‘(நீர் உடலைச் சொல்லவில்லை, உயிரைத்தான் சொல்கிறீர் என்னும் பட்சத்தில்) தனக்குத்தானே என்றும் ஒளிரும் ஆத்மாவில் இவன் பிராம்மணன், இவன் நாய்மாம்சம் தின்னும் தாழ்ந்த பிறவியன் என்று பிரித்துக் காணும் இது என்ன பெரிய பிரமை! கங்கை நதியில் பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கும், எங்கோ சேரியில் தெருவில் தங்கியுள்ள ஜலத்தில் பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கும் பேதம் இருக்கிறதா? அல்லது தங்கப் பாத்திரத்தில் இருக்கும் ஆகாயத்திற்கும், மண்குடத்தில் இருக்கும் ஆகாயத்திற்கும் வேற்றுமை இருக்கிறதா? யதிகளில் சிறந்தவரே!’ 

இதற்கு ஸ்ரீஆதிசங்கரர் கூறும் பதில் : 

‘நனவு, கனவு, ஆழ்ந்த துயில் ஆகிய மூன்று நிலைகளிலும் எந்தச் சைதன்யமானது மிகத் தெளிவாக விளங்குகிறதோ, இந்த உலகுக்கெல்லாம் எது என்றும் சாக்ஷியாக அனைத்தையும் பார்த்தபடி விளங்குகிறதோ, பிரம்மா முதல் எறும்பு வரையில் அனைத்து உடல்களிலும் எது ஊடுருவித் திகழ்கிறதோ அந்தச் சைதன்யம்தான் நான், பார்க்கப்படும் இந்த உலகமோ, பொருளோ எதுவும் நான் இல்லை என்று யாருக்குத் திடமான பிரக்ஞை இருக்கிறதோ, அவர் சண்டாளரோ அல்லது இருபிறப்பாளரான அந்தணரோ யாரே ஆயினும் அவரே குரு. இதுவே என் உறுதியான கருத்து’ 

(ஜாக்ரத்ஸ்வப்னஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்வித் உஜ்ஜ்ரும்பதே 

யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்த தனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ | 

ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்த்விதி த்ருடப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத் 

சாண்டாளோSஸ்து ஸ து த்விஜோSஸ்து குருரித்யேஷா மநீஷா மம ||) 

இனி மநீஷா பஞ்சகம் என்னும் பிரகரணத்தின் முதல் சுலோகத்தைப் பார்ப்போம். 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***