Thursday, December 11, 2014

Invading the Sacred நூலைக் குறித்து ஒரு மீள் யோசிப்பு 1

"இந்த நூலை ஒரே கோணத்தில் படித்தல் இயலாது என்றுதான் தோன்றுகிறது. பல நுழைவுகள் உடைய விவாதக் களம் என்றும் சொல்லலாம். இதில் Invading என்பது என்ன? Sacred என்றால் என்ன? படையெடுப்பு என்று கூறலாம் இன்வேடிங் என்பதை. அப்பொழுது மற்றொரு பிரதேசத்தின் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு. சேக்ரட் என்பதை புனிதம் என்பது அவ்வளவு சரியா? உண்மையில் தெய்வத்துக்கு என்று விடப்பட்ட விஷயம்/ ஸ்தலம் என்பது சேக்ரட் என்பதற்குக் கிட்ட வரும் பொருள். அப்பொழுது தெய்வத்திற்கு என்று விடப்பட்ட ஸ்தலம் / விஷயம் என்பதை நோக்கிப் படையெடுத்தல் என்றால் அவ்வாறு படையெடுப்பவர்கள் கையாளும் ஆயுதங்கள் என்ன? ஆக்கிரமிக்கும் வழிமுறைகள் என்ன? ஆக்கிரமிப்பாளர்களின் உள்மனக் கோணல் எத்தகையதாக அமைந்திருக்கிறது? "  

இவ்வாறு சொல்லித் தொடங்கினேன் என்று நினைக்கிறேன் 2009ல் இந்த நூலைப் பற்றி விமரிசனம் எழுதும் போது. இதில் முதல் வாக்கியம் மிக முக்கியம் என்று படுகிறது. ஆம் இந்த நூலை ஒரே கோணத்தில் படித்துக் கருத்து சொல்லிவிடுவது சரியன்று என்றுதான் தோன்றுகிறது. அதாவது நம்முடைய மதக் கருத்துகளையும், நூல்களையும், நாம் மிக மேலாக மதிக்கும் தெய்விக மனிதர்களைப் பற்றி ஆய்வுகள் என்ற பெயரில் உள் நோக்கம் கொண்டு செய்யப்படும் செயல்களைப் பற்றி நாம் வருத்தப்படுவது நியாயமே. ஆனால் நூலும், நூல் எழுந்ததற்கான முகாந்திரமான ஆய்வுகளும் பாரபட்சமின்றி நாம் பார்க்கப் போனால் நம்முடைய கருத்துகள் மாறுகின்றன. அதுவும் புராணங்களையும், இதிகாசங்களையும் நெடுக உள்ளோடிப் பார்த்தோமானால் ஏன் இத்தகைய கதைகள், அதுவும் தெய்விக மனிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களைக் குறித்தே, அதுவும் நாம் பெரும் முனிவர்கள் என்று கருதும் அவர்களாலேயே எழுதப்பட்டு, ஏன் இந்த இலட்சியங்களின் உருக்குலைவுகளும், சிதைவுச்சித்திரங்களும் ஏன் என்று மிகவும் மனக்கிலேசத்தை ஏற்படுத்திறது.  

இவ்வாறு எவ்வளவு கதைகள், எவ்வளவு விவரணைகள், இவையெல்லாம் என்ன செய்கின்றன இந்த நூல்களிலும், நாம் நம்முடைய இலட்சியங்களின் கேந்திரங்கள் என்று சொல்லும் நூல்களிலும்? அமெரிக்காவில் ஆய்வுக் கழகங்களில் செய்யப்படும் ஆய்வுகள் சில உள் நோக்கங்கள் கொண்டு செய்யப்பட்டதால் அவையிற்றின் செயல்பாட்டை 'இன்வேடிங் த சேக்ரட்' என்றால், பண்டைய காலங்களில் வழிவழியாக நூல்களில் முனிவர்கள் பெயரிலேயே பதியப்பட்ட இந்த மாதிரிக் கதையாடல்களை என்னவென்று சொல்வது? இவை புனிதத்தை, தெய்விகத்தை ஊடுருவிச் சிதைக்கும் வேலையில்லையா? முதலில் இத்தகைய கதையாடல்களில் ஏதேனும் புனிதத்தன்மை உள்ளதுவா?  

"ராஜயோகத்தில் ஏழு சக்ரங்களைப் பற்றிக் கூறுவார்கள். முதல் மூன்று சக்ரங்கள் மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம். இந்த சக்ரங்களில் மனது சஞ்சரிக்கும் வரை உலகாயத ரீதியிலான விஷயங்களில்தான் நாட்டம் செல்லும். அந்த விஷயங்களே உண்மை என்ற தீவிர பிடிப்பு இருக்கும். எந்த உயர்ந்த மனநிலைகளையும் எப்படியாவது தம்முடைய நிலைகளுக்கு ஏற்றாற் போல் மாற்றி அர்த்தம் பண்ணிக் கொள்ளத்தான் முனைப்பு இருக்கும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதுபோல் நாலாவது சக்ரமாகிய அனாகதத்திற்கு வந்ததும்தான் மனம் ஆன்மிக விஷயங்கள் என்பதையே ஆர்வமுடன் ஈடுபடும். ஆனாலும் வாசனா பலத்தால் மீண்டும் மீண்டும் கீழ் மூன்று சக்ரங்களில் போய் விழும். பிறகு ஐந்தாவதான விசுத்தி, ஆறான ஆக்ஞா ஏழான ஸஹஸ்ராரம் இவையெல்லாம் உறுதியான ஆன்மிக மனநிலைகள். உண்மையின் காட்சி மறைக்கப்படாத சக்ரங்கள்" 

இவ்வாறு முன்னர் எழுதும்போது இன்வேடிங் த சேக்ரட் என்னும் நூலுக்கான விமரிசனத்தில் அந்த நூலில் சொல்லப்பட்ட கருத்தை விளக்கும் முகமாக எழுதியிருந்தேன். இந்தக் கருத்து ஒரு கோணத்தில் பார்த்தால் நல்ல கருத்தே. ஆனால் மற்றும் ஒரு விதத்தில் நோக்கினால் தரமற்ற, மெலிவு தரும் கருத்தாடல்கள் காலத்திற்கும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள அணிந்து கொள்ளும் முகமூடியான சூழ்ச்சி மிக்க ஜோடனைக் கருத்து என்றும் படுகிறது. அதாவது இந்தக் கருத்து என்ன சொல்கிறது... பண்டைய நூல்களில் பார்ப்பதற்குத் தரக்குறைவான கதைகள் வர்ணனைகள் எல்லாம் இருக்கும். அவற்றை நீங்கள் அனாகதம் தொடங்கி உயர்ந்த சக்கிரங்களில் நின்று நோக்கினால் அவற்றுக்கான உள்ளர்த்தங்கள், கூடார்த்தங்கள், பூடார்த்தங்கள் எல்லாம் உங்களுக்குப் புலப்படும். அவ்வாறு உங்களுக்கு அவற்றை சரியாக அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியவில்லை என்றால் குற்றம் உங்களுடையதே அன்றி அந்தக் கதைகளின் மீது குற்றம் சொல்லக் கூடாது. ஏனெனில் நீங்கள் கீழ் மூன்று சக்கிரங்களில் மாட்டிக்கொண்டு சரியாக அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறீர்கள். யாராவது அந்த மாதிரிக் கதைகளைச் சப்பைக்கட்டு கட்டிப் பேசிவிட்டால் ஆ பாருங்கள் அவர் உயர்ந்த சக்கிரத்தில் இருந்து பார்க்கிறார். அவருக்குப் புரிகிறது -- இவ்வாறு சூழ்ச்சியான தற்காப்புக்கான போலிவாதங்களை உள் நோக்கம் கொண்டோர் ஏற்படுத்திக்கொள்ள வசதியாக இந்தக் கருத்து அமைந்துவிடுகிறது. இதில் எவ்வளவு பேதைமை இருக்கிறது என்பதைப் பார்ப்போம். 

ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம். நன்கு முழுக்கக் குடித்துவிட்டு ஒருவன் தள்ளாடிக்கொண்டு நடக்கிறான். அவனைப் பார்த்ததும் ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பரவச நிலை கூடிவிடுகிறது. காரணம் அவன் மதுவில் மனம் மயங்கிக் கிடந்தாலும், பார்த்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அது கடவுளின் பிரேமையின் போதையை நினைவுபடுத்தி அதனால் அவர் கடவுள் நினைவில் திளைத்தவராய்ப் பரவசம் உற்றார் என்று வருகிறது. இதை அந்தக் குடிகாரனின் ஒரு சூழ்ச்சியான வாதத்திற்குப் பயன்படுத்தப் படுவதை யோசித்துப் பாருங்கள். குடிகாரன் தான் குடிப்பதில் தவறில்லை, அது பார்ப்பவரின் பார்வையில்தான் தவறு என்பது இருக்கிறது என்று அவன் வாதம் செய்யக் கருதினால் என்ன சொல்வான்: 'ஐயா! பாருங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை. அவர் உயர்ந்த சக்கிரத்தில் இருந்து நோக்குவதால் நான் குடிப்பது அவருடைய பரவச நிலைக்கே காரணம் ஆகிவிட்டது. நீங்கள் எல்லாம் கீழான சக்கிரங்களில் நின்று பார்க்கிறீர்கள். அதனால்தான் ச குடிகாரன் என்று முகம் சுளிக்கிறீர்கள். கெட்டுப் போனவன் என்று திருத்த முயற்சி செய்கிறீர்கள். தவறு குடியில் இல்லை ஐயா. எந்தச் சக்கிரத்தில் நின்று பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறதாக்கும்.' இவ்வாறு அவன் சொல்லும் பதிலுக்கும் இந்த சக்கிரம் விளக்கம் ஏற்படுத்தும் சூழ்ச்சி சாத்தியத்திற்கும் என்ன வேற்றுமை இருக்கிறது? 

*

"விழித்தெழும் ஹிந்துவுக்கு அரைத்துக்கத்தில் திரும்பின இடத்தில் எல்லாம் முட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் தன்னுடைய ஸ்வாதீனமான ஆன்மிகச் சிறப்பை உணரத்தொடங்கினால் உடனே அறிவு, ஆய்வு, அறிவியல் என்பது எல்லாம் ஏதோ மேற்கத்திய சூழ்ச்சிகள் போல் அவனுக்கு சித்திரித்துக் காட்டப்படுகின்றன. அதையெல்லாம் தூர எறிந்துவிட்டு அவன் பண்டைய முனிவரர் போல் ஞான திருஷ்டியிலேயே அனைத்தையும் தெரிந்துகொள்ளும் பௌராணிக சித்திரத்துள் அடைக்கப் படுகிறான். சாஸ்திரங்களைப் பற்றிய பூரண ஞானம் அவனுக்கு வழிகாட்ட முனைவோரிடம் இல்லை. பாதி பகவத் கீதை, பாதி ஸ்லோகங்கள், மீதி பிரதேச மொழியில் எழுதியுள்ள அருளாளர்களின் பனுவல்கள் இப்படித்தான் அவனுடைய மேற்கோள் சுருக்குப்பை நிரம்பிக்கிடக்கிறது. பண்டைய குருகுலங்களில் கற்ற முறையிலும், ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் காலத்தில் கற்ற கிரந்த காலக்ஷேப முறையிலும், சைவ சித்தாந்த ஆதீனங்களில் பாடம் சொன்ன முறையிலும் அகல ஆழமாக நெடுகக் கற்ற கலங்கரை விளக்கங்கள் ஹிந்துவுக்கு இன்றைய தேவை. அது மட்டுமன்று ஹிந்துவினுடைய சாஸ்திரங்களே அவனுடைய வேதாந்தமே விடாப்பிடியான அறிவு நெறிக் கோட்பாட்டுகளினால் ஆக்கப் பட்டவை என்று அவனுக்கு யாரேனும் கஷ்டப் பட்டுப் புரிய வைக்க வேண்டும். இல்லையேல் அறிவு நெறி என்பதெல்லாம் மேற்குலக மாயை என்று அவனை மயக்கி வழிதப்பச் செய்ய, அவனுக்குள்ளும் வெளியேயும் ஆள் இருக்கிறது."  

இவ்வாறு Invading the Sacred என்னும் நூலுக்கான விமரிசனத்தில் முன்னர் எழுதியது இன்றும் சரி என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சில விஷயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். பண்டைய முறையில் கல்வி கற்றல் என்பது நாம் நினைப்பது போல் முழுக்க முழுக்க பிழையற்ற வழி என்று சொல்ல முடியாது. அதில் உள்ள முக்கியமான குறை 'சங்கடமான கேள்விகளைக் கேட்காமல் இருக்கக் கற்றுக் கொள்' என்பதாகும். அதுவுமின்றி ஒரு கேள்விக்கான முழுத்தீர்வுக்கும், உண்மையான முடிவுக்கும் திறந்த மனத்துடன், தைரியமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக சமாதானம் சொல்லிச் சமாளித்தல் என்ற பொருளற்ற பூசி மொழுகலும், 'இதைக் கேட்கிறாயே, அதைக் கேட்டுப் பாரேன்; அது குறை என்றால் அப்ப இதையும் கேட்காத; நான் அதைக் கண்டுக்கல, நீ இதைக் கண்டுக்காத' என்பது போன்ற மனோபாவங்களினால் தாக்குண்ட நொண்டி வாதங்களும் பெருமளவு மலிந்து கிடக்கும் முறை பழைய தர்க்க ரீதியான கிரந்த காலக்ஷேப முறையாகும். உண்மையான படிப்பு முறை, முழுமையான சுதந்திர அணுகுமுறையினால் எழும் ஆய்வுமுறை என்பது நமக்கு மேற்கத்திய நாகரிகத்தினால் விளைந்த அளப்பரும் நன்மை என்பதை மறந்துவிடக்கூடாது.  

*

நவீன விஞ்ஞான நெறிமுறைகளிலான ஆய்வுகள் வெறும் சட்ட திட்டங்களால் மட்டும் ஆனதில்லை. ஆய்வாளரின் மனப்பக்குவமும், அவரது அறிவு நெறிக் கடப்பாடும், உண்மையை உள் நோக்கத்துடன் அணுகாது, அறிய வேண்டும், தெளிவாக நிரூபிக்கப்பட்ட அறிவாக ஆக்கவேண்டும் என்றபடியான இலட்சியத்தோடு அணுகுவதாகவும் இருந்தால்தான் அகெடமி ரீதியாக நன்கு கட்டமைக்கப்பட்ட ஆய்வு நெறிகள் நிலைத்த தெளிவான், நன்மையைத் தரும். அவ்வாறு சரியான மனப்பான்மையில் செய்யாமல் அவசர அடியாக ஏதோ உள் நோக்கங்கள், திடீர் அதிர்ச்சி ஏற்படுத்திக் கவனத்தை ஈர்த்தல் என்ற வேகங்களினால் உந்தப்பட்டு செய்யப்படும் ஆய்வுகள், மிகவும் கேலிக்குரியவையாய் ஆகிவிடுகின்றன என்பதற்கு ஒரு உதாரணம் ஜெஃப்ரி க்ரைபல் அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிச் செய்துள்ள ஆய்வுகள். ஏதோ முன் முடிவுகள், முன் கட்டமைப்புகள இவற்றை மனத்தில் கொண்டே செய்தாரோ என்று ஐயுறும் வண்ணம் அமைந்துவிட்டன அவர்தம் ஆய்வுகள். அவர் ஸ்ரீராமகிருஷ்ணரை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டது மிக நல்ல முடிவு. ஆனால் ஆய்வுகள் உண்மை காணும் விழைவும், திறந்த உள்ளமும் கொண்டு இயற்றப்படவில்லையோ என்று தோன்றுகிறது 

ஸ்ரீராமகிருஷ்ணரை நிறைவேறாத காம உணர்ச்சிகளின் தாக்கத்தாலும், பயத்தாலும் பாதிக்கப்ப்ட்ட மன நோயாளி போன்று காட்ட வேண்டும் என்பது அவர்தம் முன் முடிவு போல் தோன்றுகிறது. அதை எப்படியாவது சித்திரித்துக் காட்ட க்ரைபல் படும் பாடுதான் அவருடைய த காளீஸ் சைல்டு என்னும் நூல். உதாரணத்திற்கு, வங்காளத்தில் உத்தீபனம் என்றால் மன எழுச்சி, உள்ளத்தின் ஊக்கம் என்று பொருள். ஆனால் க்ரைபலோ அந்தச் சொல்லுக்கு எப்படியாவது காம வேகத்தின் எழுச்சி என்று அடிமட்டமான பொருளைத்தான் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்துப் பொருத்தப் பார்க்கிறார். இது போல் பல உதாரணங்கள்.  

க்ரைபல்தான் முதன் முதலில் ஸ்ரீராமகிருஷ்ணரை ஆய்வுகளுக்குக் கருது பொருளாகக் கொண்டார் என்பதில்லை. வங்காளத்தைச் சேர்ந்த பலரும் ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஸ்ரீநரசிங்க சீல் என்பவர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் மிகக் கறாரான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற எண்ணம் உண்டு. நான் சொல்வது உண்மையான, சிறிதும் விட்டுக் கொடுக்காத நவீன விஞ்ஞான ரீதியான ஆய்வுகள். ஆனால் அவ்வாறு யாரும் செய்ததாகத் தெரியவில்லை. கருத்துகள் ரீதியான, கொள்கைகள் ரீதியான விமரிசனங்கள் ஆய்வுகள் என்பவை அவ்வளவு ஈர்ப்புடையதாக இருக்காது போலும் பலருக்குஆனால் க்ரைபலின் ஆய்வுகளால் ஒரு பயன் உண்டு. அதுவும் நல்ல பயன் 

என்னவென்றால், அவர் நோண்டியதன் விளைவு ஸ்ரீராமகிருஷ்ணர் வங்காளத்தில் அப்படியே அச்சு அசலாய் என்ன பேசினார்; என்ன கொச்சை மொழிகளைப் பயன்படுத்தினார், அவர் வாழ்ந்த வார்த்தைகளின் உலகம், உலக பிம்பங்களின் உலகம் என்ன என்பதெல்லாம் பற்றி இப்பொழுது மிக அதிக துல்லியமான தகவல்கள், தரவுகள் வரத் தொடங்கியுள்ளன. யாரோ ஒருவர் தப்பும் தவறுமாய் நோண்டப் போய்தான் இந்த பரிமாணங்கள் எல்லாம் வெளிச்சம் பெறுகின்றன. இல்லையேல் காலத்திற்கும், சுவாமி நிகிலாநந்தர் மொழிபெயர்த்த ஆங்கில வடிவத்தில்தான் ஸ்ரீராமகிருஷ்ணர், ஹார்வேர்டு பேராசிரியர் போன்று தத்துவச் சிந்தனைகளைப் பேசிக்கொண்டிருப்பார், சலவை செய்யப்பட்ட சவுக்கார மொழியில். இதை இன்றும் சுவாமி நிகிலாநந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பான The Gospel of Sri Ramakrishna என்பதையும், தர்ம்பால் குப்தா என்பவரால் அப்படியே சொல்லுக்குச் சொல் சரியாக மொழிபெயர்க்கப்பட்டு ஸ்ரீமா ட்ரஸ்ட் வெளியிட்டிருக்கும் ஐந்து வால்யூம்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த பார வித்யாசம் தெரியும்.  

சுவாமி நிகிலாநந்தர் செய்ததற்கும் செய்யாமல் விட்டதற்கும் அவருக்குப் பல நியாயமான காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் மிக உண்மையான் மொழிபெயர்ப்பு காட்டும் தத்ரூபத்தினால் விளையும் தெளிவிற்கு அவையெல்லாம் ஈடாகாது. இன்னும் மிகத் துல்லியமான மொழிபெயர்ப்புகளும் வந்துள்ளன. அதுவும் போதாது. ஒருபக்கம் மூலமும் ஒரு பக்கம் சரியான மொழிபெயர்ப்பும் கொடுத்து, பின்னால் ஏன் இந்த வார்த்தைக்கு இவ்வாறு பொருள் கொண்டோம் என்ற விளக்கங்களும் வரவேண்டும். நிச்சயம் ஸ்ரீராமகிருஷ்ணரை அவருடைய சொந்த மொழியின் கொச்சையில் பார்க்கும் பொழுது மிக அழகாக இருக்கிறது. ஹார்வேர்டு ப்ரொபஸர் போன்று மிகத் திருத்தமாகவும், தத்வார்த்த சொல்களைப் பெய்தும், மிக மென்மையாக சாந்த சொரூபியாகப் பேசும் ஸ்ரீராமகிருஷ்ணர் எதற்குப் பயன்படுவாரோ தெரியாது, எனக்கு உகப்பில்லை. I love the real, rustic, slang-tongued sage of Dakshineswar. ஏன் சொல்கிறேன் என்றால், க்ரைபலைக் கூட்டமாகச் சேர்ந்து கண்டனம் எழுதித் திட்டிவிடலாம், ஆனால் நவீன ஆய்வு நெறிகள் தவறு செய்யும் போதும் அதனால் நன்மையே விளைகிறது. பண்டைய வித்வத் பாண்டித்யமோ தான் மிகச் சரியாக இயங்கும் போதும் தொடர்ந்த அறிவு வளர்ச்சியை, பொதுமக்களின் அறிவுலக மேம்பாட்டை வழங்கிவிடுவதில்லை. மாறாக ஒருவித வழிபாட்டு மௌடீகத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது 

***  

No comments:

Post a Comment