நாம் பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை உள்ளபடிப் புரிந்து கொண்டுள்ளோமா?
இந்த சந்தேகம் எனக்கு ஏன் வந்தது என்றால், மதுரைக் காஞ்சியில் சில வரிகள் -
'நின்னொடு முன்னிலை எவனோ
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்'
என்ற வரிகளுக்கு உரையில் கூறியிருக்கும் பொருளைப் பார்த்தால் தலையைச் சுற்றுகிறது.
முன்னிலை நின்னொடு எவனோ? என்று மாற்றிப் படிக்க வேண்டுமாம் முதல் வரியை. அடுத்து 'நின்' என்றது சீவான்மாவை. முன்னிலை என்பது ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருள்களை.
முன்னிலை நின்னொடு எவனோ - நுகரப்படும் ஐம்புல நுகர்ச்சிகளுக்கும், சீவான்மாவாகிய நினக்கும் என்ன தொடர்பு உண்டு?
அடுத்தது, கெடுக நின் அவலம் - உன்னிடம் உள்ள மாயை கெடுவதாகுக
அடுபோர் அண்ணல் - அம்மாயையைக் கொல்கின்ற போர்த்தொழில் வல்ல தலைவனே!
கொன் ஒன்று கிளக்குவல் - பெரிதாய் இருக்கும் பொருளாகிய பரம்பொருளைப் பற்றி உனக்குக் கூறுவேன்.
கேட்டிசின் - அதனை நீ வல்ல ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவாயாக.
அந்த பரம்பொருள் இயல்பாவது கந்தழி என்பதனை. அதன் விளக்கம் திருமுருகாற்றுப்படையின் ஈற்றுப் பகுதியில் கண்டு தெளிக - இவ்வண்ணம் போகிறது உரை.
திரு எம் சுந்தர்ராஜ் என்று ஒருவர் இருந்தார். இரயில்வேயில் பெரும் அதிகாரி. வேத ஆய்வுகளில் பெரும் ஈடுபாடு. பல நூல்கள் வேத ஆய்வுகள் பற்றி எழுதியுள்ளார்.
அவரிடம் பேசிக் கொண்டிருந்த சமயம் ஒரு தடவை கூறினார். - சங்க இலக்கியம் முழுதுமே ஆன்மிகப் பொருள் உடையது. இவர்கள் நினைப்பது போல் ஏதோ அகம் புறம் என்று காதல் வீரம் பற்றிப் பேசிய பாடல்கள் இல்லை அவை என்று. அதுதான் இப்பொழுது நினைவில் வந்தது.
***