வெறுமை சூழ்ந்த கணங்களில்
ஒரு மனமாற்றுக்காக
நண்பர்களுக்கு அல்லது
உற்றார் உறவினர்களுக்கு
தெரிந்தவர்க்கு ஒரு போன்
போடுவோம் என்றால்
நம்மீது குத்தாமல் விட்ட குறுவாள்களைக்
குத்துவதற்காகச் சமயம் பார்க்கும் குறுவாள்களை
அவசர அவசரமாகத் தங்கள்
வார்த்தைக் கோணிக்குள்
அடைத்து மூடும் அவசரத்தைக் கண்டு
நம் வார்த்தைகள் நாணி
வரத்தயங்கும் போது
இருவருக்குமற்ற
போக்கற்ற மௌனத்தில்
கசியும் விரசத்தை விட
முதல் வெறுமையே பரவாயில்லை
எனத் தோன்றும் அமைதியில்
ஏதோவாகிப் போன போன்
என் முன்னால்.
***