Tuesday, February 16, 2016

கொசுகுட்ஸு

கொசுகுட்ஸு 

படிக்கவிடாமல் படுத்துகிறது கொசு. அதைத் துரத்தும் போது காணாமல் போகிறது. சரி போய் ஒழிந்தது என்று படிக்க முனைந்தால் எங்கிருந்து எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்கிறதோ சரியாக வந்து மூக்கில் லேண்ட் ஆகிறது.
என்ன கணக்கு ! தன் மூக்கில் தானே அடித்துக் கொள்ள மாட்டார்கள் என்று அதற்கு எப்படித் தெரிகிறது? 

நானும் விடாமல் ஒரு கொசுவை வந்து போகும் பாதையைப் பிடித்து விட வேண்டும் என்று முனையும் போது ஓரு ஹம்மிங் சைஸுக்கு ஒரு சிரிப்பு!
நான் பயந்து விட்டேன். என்ன கொசு சிரிக்குமா? 

அப்பொழுதுதான் உற்றுப் பார்த்தேன். கொசு அளவிற்குத் தன்னைச் சுருக்கிக் கொண்டு ஒரு ஸென் முனிவர், ‘இங்கு உட்காரலாமா? என்னையும் கொசு என்று நினைத்து அடித்து விடமாட்டாயே?’ என்று சியாஙித்தார்.
சியாஙித்தல் என்றால் என்ன என்று பார்க்கிறீர்களோ? தியானித்தல் இல்லை. இது சியாஙித்தல். சியாங் என்றால் சீன மொழியில் சிரித்தல்.
ஐயனே! நல்ல வேளை என் கவனத்தைப் பேச்சால் கவர்ந்தீர்கள். இல்லையென்றால் ஐயோ கொசு போலும் என்று கண்மூடித் தனமாக.....
ம்.. ம் அதுதான்.. கண்மூடித்தனம். உன்னிடம் நிறையவே இருக்கிறது. அதைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். நீ விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது இந்தக் கொசு அடிக்கும் கணத்தில்தான் என்பதைக் கவனித்தேன். அதான் இந்த நேரம் பார்த்துப் பேசலானேன்.
அது சரி ஐயனே! ஏன் இப்படிக் கொசு உருவத்தில்? என்ன இது மர்மமாக இருக்கிறது.... 

ஏன் கொசு உருவம் என்றால் கேவலமா? எவ்வளவு சௌகரியம் இதில் உனக்குத் தெரியுமா? மேலும்  எவ்வளவு காற்று மண்டலத் தொழில் நுட்பம் இதில் உள்ளது. இதை ஒப்பிட்டால் நீங்கள் எல்லாம் சரியான எருமை மாடுகள். ரத்தக் கிடங்குகள். அவ்வளவுதான். நான் வாழ்க்கையில் தியானத்தை, அதாவது ஸாஸென்னை கொசுவிடமிருந்து கற்றுக் கொண்டேன். அதற்காகவே கொசு போல் உடலை ஆக்கிக் கொண்டு, அதன் பின்னாலேயே போய் அதனுடைய இயக்கம் எல்லாம் கவனித்துப் பயின்றேன். கொசுவிடம் கலை பயின்றதால் மலைகளின் நடுவே எனக்குப் பெயர் கொசுகுட்ஸு என்று ஆனது.
என்ன இது... ஒரே ஆச்சரியமாக இருக்கிறது... நான் தான் ஏதாவது தூக்கத்தில் உட்கார்ந்து கொண்டே கனவு காண்கிறேனா 

இல்லை இல்லை... முதலில் இந்த மாமூல் பார்வையைக் கைவிடு. நிகழ்ச்சிகள் எப்படி நடந்தாலும் அத்தனையும் உண்மையில் சூனியம். எதுவும் இல்லை என்று நீ உணர்ந்தால் பின்னர் வெறும் சாதாரண ஒரு நிகழ்வு கூட எவ்வளவு ஆச்ச்சரியமானது என்பது புரியும். இப்பொழுது ஒரு கொசுவை விரட்டிச் சுற்றினாயே.. அந்தக் கொசுவை உன்னால் பார்க்கவோ பிடிக்கவோ முடிந்ததா? 

இல்லை ஐயனே... மட்டைக்கே பாச்சா காட்டிவிட்டு எங்கு போயிற்றோ?
எங்கும் போகவில்லை. அதுதான் மர்மம். நீ அது நகரும் என்று நினைத்து வேகமாக இயங்கும் போது அது தந்திரமாக நகராமல் தரையில் எங்காவது உட்கார்ந்து விடுகிறது. அது போய்விட்டது என்று நீ அசையாமல் உட்கார்ந்ததும் அது உன் ரத்த நாளத்தைத் தேடி வருகிறது.
பின் என்னதான் செய்வது? 

அசையாமல் அசை. அசைவது போல் அசையாமல் இரு.
அப்பொழுதுதான் எனக்குக் கொஞ்சம் உறைக்க ஆரம்பித்தது. ‘ நீங்கள் சொல்வது... கொசு அடிக்கவா... இல்லையென்றால்....’ 

கொசு ஒரு தொல்லையே இல்லை. அது உண்மையில் உனக்குக் கற்றுக் கொடுக்க வருவதோ ‘விழிப்பில் துயில்’ என்னும் ஒரு கலையை. அது உன்னை எவ்வளவு தூரம் இக்கணத்தின் மயமாக ஆக்கிவிடுகிறது பார்! இந்தக் கணம் மட்டுமே இருக்கிறது. அதோடு அந்தக் கணம் அழிந்து விடுகிறது. நீயும் முழுவதும் இந்தக் கணமயமாகவே ஆகிவிட்டால் நீயும் இல்லாமல் ஆகிவிடுவாய். நீ அடுத்த கணத்திற்கு இருக்கிறாய் என்று நினைவைக் கட்டியிழுத்துக் கொண்டு போவதால்தான் கொசுவின் கடி உன்னைத் துரத்துகிறது. அது உனக்கு உனக்கு உணர்த்த வருவதோ - ‘இக்கணம் மட்டுமே உண்டு. ஏன் அடுத்த கணத்தில் ஸம்ஸரிக்கிறாய்?’ என்பதுதான். 

ஒரு நிமிஷம் கொசு கடித்த கணத்தில் முழு மனத்தையும் நிறுத்திப் பார்த்தேன். அந்தக் கண மயமாகவே ஆனேன். அந்தக் கணம் முடிந்தது. நானும் முடிந்தேன். அப்பாடா.. இனிமேல் கொசுக்கடித் தொல்லை இல்லை. நன்றி ஐய்னே என்று அவரைத் தேடினேன். அவரைக் காணவில்லை. சியாங்ஙோடு குரல் மட்டும் கேட்டது. 

அதோ பார்! உன் காலடியில் அந்தக் கொசு இருக்கிறது. நீ அதை அடிக்காதே. நீ அடியாகவே மாறு. அது சாகும். 

கற்றுக் கொடுத்ததையா? அது பூர்வ கணம். அதைக் கொன்றால்தான் அடுத்த கணம் பிறக்கும். யோசிக்காதே. நினைவு என்பது ஸம்ஸாரம். இந்தக் கணம் இறந்து அடுத்த கணம் பிறக்கும். 

அப்புறம் சொன்னதைக் காதில் வாங்கவில்லை. நானும் அந்தக் கணமாகவே மாறி அடியாகக் கொசு மீது இறங்கினேன். அந்தக் கணம் அழிந்தது.
அடுத்த கணம்... என்ன ஆயிற்று...? பழையபடி நானேதான். மீண்டும் ஒரு கொசு வேவு பார்க்க வந்துவிட்டது. 

கொசுகுட்ஸு காணவில்லை. வந்தால் சில க் ஏ ள் வ் இ க் அ ள் கேட்க வேண்டும்? ஆமாம் சேர்த்துக் கேட்டால் அது நினைவுகள் செய்யும் கற்பனையாமே... கணம் கணமாகப் பிரித்து விடு. முதல் கணம் அழியும். அடுத்த கணம் பிறக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லையாம். அதான் பிரித்தே போட்டுவிட்டேன்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

2 comments:

  1. அபாரம் புதிய சிந்தனை. இப்படிச் சொல்வதனால் என் அறையில் கொசு அடிக்கமாட்டேன் எனில் உத்தரவாதமில்லை. கவியோகி

    ReplyDelete
  2. அருமை. கொசு கடியின் மூலம் உயர் தத்துவம்

    ReplyDelete