Monday, September 5, 2022

ஆசிரியர்களைப் பற்றிய ஏக்க நினைவுகள் !

ஏனோ திடீரென்று மனம் பியூசி படித்த காலத்திற்குப் போகிறது! ஆம் ஓர் ஆசிரியர். ஆங்கில ஆசிரியர். யூஜின் டி வாஸ் Eugene D'Vaz என்னும் பெயர். வகுப்பு எடுப்பதில் மன்னாதி மன்னன். அப்பா! காட்சிகளைத் தன் குரல் என்னும் மந்திரக்கோலால் வா போ என்று கட்டிமேய்க்கும் மாயாஜாலன் அந்த டி வாஸ். ஆங்கிலக் கவிதையை அவன் எடுத்துக் கேட்க வேண்டும்; கேட்க வேண்டும்; கேட்டவண்ணமே இருக்க வேண்டும். அப்படி ஒரு குரல்; அப்படி ஓர் ஈடுபாடு தாம் போதிக்கும் பாடத்தில். பல துறை மாணவர்கள் தம் தம் முன் வகுப்பு முடிந்து அவர் வகுப்புக்கு வந்து சேர வேண்டும். சமயத்தில் எங்கள் கெமிஸ்ட்ரி வகுப்பு செயிண்ட் ஜோஸப் கல்லூரியின் உயரக் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இருக்கும். சமனபாடுகளைச் சொல்லி அந்த வாத்யார் காலச் சமன்பாட்டைக் கோட்டை விட்டு விடுவார். ஐந்து நி லேட் என்றாலும் நானும் ரவிக்குமார் என்னும் தோழனும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வருவோம் அவரது வகுப்பிற்கு. ஒரு நாள் எங்கள் ஆர்வத்தைக் கேட்டறிந்த யூஜின் அன்றிலிருந்து நாங்கள் வரும்வரை ஏதாவது பேசிக் காலம் கடத்தி வந்த பின் ஆரம்பிப்பார். நண்பனாய், நல்லாசிரியனாய், அன்பே உருவான மனிதனாய் யூஜின் டி வாஸ் இன்றும் திடீரெனெ நினைவுக்கு வந்து ஹலோ என்கிறார். இன்றும் அவர் எந்த உலகத்திலோ இருக்க வேண்டும் என்றே மனம் அவாவுகிறது.

அடுத்து ஈ ஆர் ஹைஸ்கூலில் நான் சந்தித்த ஒரு மன்னாதி மன்னன் டி எம் எஸ். டி எம் ஸ்ரீநிவாசன். T M Srinivasan. குரலில் அப்படியே மயக்கப்பொடி குழைத்து வைத்தே படைத்தானோ என்று தோன்றும். பியானோவின் இசையேற்ற இறக்க அலைச்சுழிகள் ஒன்றுமே இல்லை அவருடைய குரலின் ஆரோகண அவரோகண ஜாலங்களில். நடத்துவதோ சரித்திரம். ஆனால் மன்னர்களும், காலங்களும், குதிரைகளும், பெரும் படை பீரங்கிகளும் சர்வ சாதாரணமாக வகுப்பிற்குள் வந்து போன வண்ணம் இருப்பார்கள். ஒரு சரித்திர காலம் முடிந்து இன்னொரு சரித்திர காலம் ஆரம்பம் என்றால் அந்த நேரமே சேகண்டி ஒலிக்கும்.

ஏதேதோ நினைவு... ஏதேதோ கனவு.... மெல்ல நகர்ந்து விரையும் காலம்.

(31 - மார்ச் 2016 அன்று எழுதியது இன்றைய நிலைக்குச் சிறு மாற்றத்துடன்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்


***

No comments:

Post a Comment