மாயவரம் துபாஷி அக்ரகாரம். 1910 ஆண்டு. ஆந்திர தேசத்துக் குடும்பம் ஒன்று. ஒரு சிறுமி. தன் கணவர் யானமன்றம் ராமலிங்க ஐயர் 1871 ல் இறந்துபட அடுத்து வாழ்வில் அவள் எடுத்த முடிவும், அவள் அடைந்த புலமையும்தான் மிகவும் வியக்க வைப்பது. சம்ஸ்க்ருதத்தைக் கற்றுத் தேர்ந்தாள். அத்வைத சித்தாந்தத்தில் நெடுகப் பயின்றாள். ஆழமான புலமை. விளைவு அவள் தன் சொந்த உபயோகத்துக்கு என்று எழுதி வைத்த வடமொழிக் குறிப்புகள் அத்வைத நுணுக்கங்களைப் பற்றி, அதுவே நண்பர்கள் வற்புறுத்திப் போட வைத்தனர், அத்வைததீபிகா என்று 40 பக்கத்தில் அரிய, செறிய நூலாக ஆகியிருக்கிறது 1910ல்.
ஸ்ரீ டி எஸ் நடேச சாஸ்திரியார் அதை நூலாகப் பிரசுரித்துக் கூடவே ஆங்கிலத்தில் அதற்கான மொழிபெயர்ப்பும் தந்து 80 பக்க நூலாகத் தந்துள்ளார்.
துபாஷ் அக்ரகாரம் என்பது அம்மாளின் குல முன்னோரான துபாஷ் ராமஸ்வாமி ஐயர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டதுவாம். துபாஷ் என்றால் த்விபாஷி. அதாவது அரசாங்கத்தில் இருமொழித் தொடர்பு நிபுணர்.
நூலின் தொடக்கத்தில் ஏன் இந்த நூலை எழுதலாயிற்று என்று கூறுகிறார்.
“பரமபுருஷார்த்த ப்ரதாத்வைதஸித்தி க்ரந்தஸ்தாநாம் பக்ஷதாவச்சேதக விசாரமாரப்ய ப்ரத்யக்ஷஸ்யாகம பாத்யத்வ விசாராவதி கதிபயவாக்யாநாம் ஸம்யகுபபாதனாத்மக வாக்யஸமூஹரூப: அத்வைததீபிகாக்ய: ப்ரபந்த: ஸ்வபுத்திவைசத்யாய பாலாநாம் ஸுகபோதாய ச மஹாதிகாரவதா விதக்தேநாநுஜேந ஸுப்ரஹ்மண்யேநாதிஷ்டயா காமாக்ஷ்யா க்ரியதே | தஸ்மின் குணாட்யா: ஸந்த: கருணாம் க்ரியாஸுரிதி ஸவிநயம் அப்யர்த்தநா |”
அத்வைத சாஸ்திரங்களைக் கற்கும்போது சாஸ்திரம் கூறும் முடிவுகளுக்கும், பிரத்தியட்சமாகப் பார்த்துப் புரிந்து கொண்டுள்ள எண்ணங்களுக்கும் முரண் உண்டாகி ஐயங்கள் ஏற்படும்போது பலவித அனுமானங்களால்தான் அந்த ஐயங்களை நீக்கிச் சாஸ்திரங்களின் கருத்துகளில் உறுதி ஏற்பட முடியும். இந்த வழியே அத்வைதஸித்தி முதலிய நூல்களில் காட்டப்பட்டிருப்பதும் ஆகும். அந்த நூல்களை அடிப்படையாக வைத்தே சொந்த நலனுக்கும் சிறுவர்களின் நலனுக்குமாக இந்த அத்வைததீபிகா எழுதலாகிறது என்று கம்பீரமாகத் தொடங்குகிறார் காமாக்ஷி அம்மா.
1871ல் ஆரம்பித்த கல்வி 1910ல் நூலாக வெளிவந்திருக்கிறது. இதுபோல் எத்தனை மகத்தான பெண்மணிகள்! ஸ்ரீபெரும்புதூரில் இருந்த பத்தி யதிராஜம்மாள் (இவரைப் பற்றி முன்னர் எழுதியுள்ளேன்), கல்யாணி மாமி, சாது நித்யானந்தம்மாள் (இவரைப் பற்றியும் எழுதியுள்ளேன்), இப்பொழுது மாயவரம் காமாக்ஷி அம்மா. எப்படியோ நான் தெரிந்துகொண்டு விடுகிறேனா அல்லது இந்த மகனீயர்களான மாதாக்கள் என்னைத் தேர்ந்து தம்மைத் தெரியப் படுத்துகின்றனரா? எப்படியோ வியப்புதான் ஏற்படுகிறது. பெண்களின் உலகத்தையும், அவர்கள் உலகத்தைப் பார்த்துக் கொள்ளும் அபிப்ராயங்களையும் நாம் சரிவரக் கவனம் தந்து பொருந்திக் கேட்பதில்லை என்ற வருத்தம் எனக்கு முன்னரே உண்டு. மொழிவு எல்லாம் அவசர உலகத்து ஆண்வழியாகவே அமைந்து விடுகிறதோ என்ற தயக்கமும் இருக்கிறது. நினைத்துப் பாருங்கள் அந்தக் காலத்தில், 1871ல், ஒரு சிறுமி, நமது மாயவரத்தில், துபாஷ் அக்ரகாரத்தில், வாழ்க்கை தனித்துப் போய்விட, சம்ஸ்க்ருதம், அதவைதக் கல்வி என்று தன் பயணத்தைத் தொடங்கியவர் எழுதி வைத்திருப்பதெல்லாம் அரிய நடை வடமொழியில், பக்ஷம், ஸாதர்ம்யம், ஸாத்யதை, தோஷம், பக்ஷவிசேஷணம், அன்யதரஸித்தி, ஆச்ரயஸித்தி, சாத்யப்ரசித்தி என்றெல்லாம் நவ்யநியாயக் கடின பதங்களைப் பொழிந்து எழுதுகிறார் என்றால்... இன்னும் எவ்வளவு பெண்மணிகள் யாரும் அறியவராமலேயே... !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***