Saturday, November 22, 2025

காட்டுவதை வைத்துக் காணாததை உணர்தல்

உலகில் நமக்கு எதிலும் பார்த்தால் ஒரு பகுதி தெரிகிறது. இன்னொரு பகுதி தெரிவதில்லை. கண்கள் தெரிந்த பகுதியை மட்டுமே பார்க்கும் வல்லமை உடையது. தெரியாமல் மறைந்து இருக்கும் பகுதியை எப்படிக் காண்பது? தெரிந்த பகுதியைக் கொண்டு தெரியாத பகுதியைக் காணும் முறைதான் கருதல் என்பது. அனுமானம், யூகித்தல் என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் ஆரம்பம் கண்ணால் கண்டதைக் கொஞ்சம் கருத்து ஊன்றிச் சிந்திப்பதன் மூலமே காணாத பகுதி விளங்குகிறது. மரத்திலிருந்து ஆப்பிள் எல்லோர் மீதும் விழுந்துகொண்டுதான் இருந்தது. அனைவரும் கண்ட காட்சிதான் அது. ஆனால் நியூட்டன் அந்தக் காட்சியில் கருத்தை நாட்டினார். எனவே தெரியாமல் இருந்த பகுதியான விதியைக் கண்டுபிடித்தார். காட்டப்ப்பட்டது என்ன? கண்டது என்ன? கரந்து இருந்த பகுதியைக் கருதிக் கண்ட பொழுது அங்குக் கண்ட காட்சி என்ன? என்பதை ஞானசம்பந்தப் பெருமான் தமது தேவாரத்தில் ஒரு பாட்டில் சொல்கிறார். 

”கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.” 

சாதாரணமாகக் கண் என்பதைப் பார்க்கிறோம். கண்ணால் பார்க்கிறோம். கண்ணால் பார்க்கப்படுகிறோம். ஆனால் நுதல் என்ன வேலை செய்கிறது? பார்வையில்? அதுவே ஒருவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். அது நமக்கு எப்படிப் புலனாகிறது? அவருடைய புருவங்கள் குவிந்து, சுருங்கி அவர் ஏதோ தீவிர எண்ணத்தில் இருக்கிறார் அல்லது உணர்ச்சியில் இருக்கிறார் என்பதை நமக்குத் தடயம் சொல்கிறது. ஆனால் சிவனாரோ நுதல் விழியே உடையவர். அதாவது தியான விழியாலேயே அனைத்தையும் காண்பவர். தியானம் என்பது அனைத்து பேதங்களையும் நீக்கிக் காட்சியை ஒன்றாகக் காண்பதே காட்சி என்று ஆக்கவல்லது. எனவேதான் சிவனார் தமது நெற்றிக் கண்ணால் உலகை அழித்து விடும் வல்லமை உள்ளவர் என்கிறோம். உடனே நாம் ஏதோ உலகியல் ரீதியாக அழித்தல் என்று நினைக்கிறோம் ஆனால் அதுவோ பேதங்கள் அற்ற ஏகத்வமான பார்வையைக் குறிக்கிறது. பேதங்கள்தாமே நாம் காணும் உலகம். பேதங்கள் அற்ற பார்வைக்கு நாம் உயரவேண்டும் என்பதைத் தம் நெற்றிக் கண்ணால் உணர்த்துகிறார் முக்கண் முதல்வர். அந்தக் கண்காட்டு நுதலான் யார்? 

கனல் நாம் பார்க்கும் ஒன்று. ஆனால் ஊழித்தீ என்பது அனைத்தும் எரிந்து பின்பு சுடரும் தீ. உலகெலாம் அழிந்தபின்னர்ச் சுடரும் அந்தத் தீ என்ன? ஞானம் அல்லவோ? ‘ஞான அக்னியில் உன் கர்மங்கள் அழிந்துவிடும்’ என்கிறது ஸ்ரீபகவத் கீதை. கனலை வைத்து நாம் முடிவு செய்யலாம். அதை ஏந்தும் கை ஒன்று உண்டு என்று. ஞானம் வாய்க்கப் பெற்றால் நாம் உணரலாம் பிஞ்ஞகனராரின் பேரருள் கரத்தை. எனவே அந்தக் கனல் காட்டும் கையான் யார்? 

பெண் இருப்பது நம் காட்சிக்குப் புலனாகிறது. பெண் என்பவள் உயிரைக் கருவில் சுமந்து உருவாக்குபவள். எனவே உருவு பொலியும் பிரகிருதி, சக்தி என்பதற்கு அவளே தகுந்த குறியீடாக அமைகிறாள். ஆனால் உருவு என்பது கண்ணிற்குப் புலனாவது என்றாலும் அதற்குப் பக்கத்திலேயே புலனாகாத அருவம் என்பதுவும் இருக்கிறது. அந்த அருவத்தின் காரணமாகவே, துணைகொண்டே உருவும் தோன்றுகிறது. உண்மையில் உரு அரு என்பது நாம் காண்பதன் எல்லையையும், காணாததின் தொடக்கத்தையும் குறித்து நிற்கிறது. உரு அரு ஆக நிற்கும் சிவனாரின் கோலம் உருவருவத் திருமேனியாக பொலிகிறது. 

பிறை என்பதோ சந்திரனைக் குறிக்கிறது. இயற்கையின் பொங்கு நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் தூண்டுதலாக விளங்குவது பிறை. ஆனால் சிவனாரிடத்தில் அது காட்டுவதோ பொங்குவது அனைத்தும் அமைதியாக அடங்கிய நிலையைக் குறிக்கும் சடை அல்லது தவம். உலகில் ஒரு பொருளுள்ள பிறை கடவுளிடத்தில் கடந்த பொருளைக் காட்டி நிற்கிறது. தடைப்படாத செயல்களின் நடுவே தளும்பாத அமைதியைப் பேணும் குறிப்பை நமக்குக் காட்டுவது சிவனாரின் இந்தக் கோலம். பிறை காட்டும் சடையான் யார்? 

பாடல், இனிய பாடல், சோகமான பாடல், ஆழ்ந்த பாடல் கேட்கும் போது சொல்கடந்த நிலையில் நம் மனம் இசைகிறது. அந்த நிலையில் நம் மனத்தை இசைக்கிறது அந்தப் பண். சொல்லும், பொருளுமாய், பண்ணும் இசையுமாய் நிற்பது பார்வதி பரமேசுவரர்தான் என்பது நம் உணர்வில் உறைத்தால் எத்தனை நன்மை! பண் காட்டும் இசையோன் யார்? 

பாலை. வறண்ட நிலம். பயிர் வாடிக் கருகிக் கட்டைகள்தாம் இருக்கின்றன. என்ன கொடுமை என்கிறோம். எங்கோ போய்விட்டு மீண்டும் அந்த வழியே வருகிறோம். இடைப்பட்ட காலம் சில மாதங்கள்தான் என்றாலும், அந்த வறாட்சி எங்கே போயிற்று? பச்சை பசேல் என்று செடியும் கொடியும் போர்த்து, பூத்து, புள்ளும், மாவும் திரிந்து காட்சியே மாறிப் போய்விட்டது. கண்ணுக்குப் பயிர்தான் தெரிகிறது. ஆனால் அதன் பின்னால் பெய்த மழை, புயல் நம் கருத்திற்குப் புலனாகிறது. அதுபோல் வறண்ட வாழ்வில், கருகிப் போன பொழுதுகளில் அருளின் மழை பெய்கிறது. சிவனாரின் அருள் பெருமழையாய்ப் பெய்து வறட்சியை நீக்கி, எங்கும் புத்துணர்வையும், புது எழுச்சியையும் மலர்த்திவிடுகிறது. பயிர் காட்டும் புயலோன் ஆன அவன் யார்? 

திருவெண்காட்டில் உறைபவனும், விடை ஆகிய நந்தியைக் கொடியாக உடைய சிவபெருமான் தான் அது எல்லாம் என்று கவிதை பேசுகிறார் காழிப்பிள்ளை. தமிழ், கவிதைக்கான செல்ல மொழியோ என்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment