Saturday, August 1, 2015

ஞானவாசிட்டம்

தமிழில் தத்வார்த்தங்களை வெளிப்படுத்தமுடியும் என்பதை 2000 ஆண்டுகளுக்கும் மேலான மெய்ஞானவியல் சொல்லாடல்கள் நிறுவிவந்திருக்கின்றன. ஓரளவிற்கு தாராளமாகவே வடமொழிச் சொற்களை பயன்கொண்டு மீயியல் நுண்மைகளை மொழிப்படுத்தி வந்திருக்கின்றனர் நமது முன்னோர்.

ஒரு மதம், ஒரு வாதம், ஒரு தத்துவம் என்று இன்றி பொதுவாகவே அனைத்துத் தரப்பையும் சேர்ந்த கருத்தியலாளர்கள் வடமொழி சொற்தொகையை அதிக பட்ச கருத்துச்செறிவுடைய சொல்லுருவாக்கத்தை வேண்டி தங்கள் மொழியாடல் அமைப்பில் கைக்கொண்டனர். நேரடி தமிழ்ச் சொற்களை உருவாக்க முயன்றவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் 18, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாதவ சிவஞான யோகிகள். இவருடைய சிவஞான போத மாபாடியம் சைவ சித்தாந்தத்திற்கு பெருஞ்செல்வம் மட்டுமின்றி தமிழில் வேதாந்த அணுகுமுறைக்கான சொல்லாடல்களை முனைந்த பெருமுயற்சி என்ற கவனத்தையும் உடையது.

இதைப்போலவே சற்றேறக்குறைய இதே காலகட்டத்தில் ஸ்ரீஞானவாசிட்டம் எனப்படும் யோகவாசிஷ்டம், அதாவது வசிஷ்டர் இராமருக்கு தத்துவ ஞானம் போதிப்பதாக ஆரம்பித்து அத்வைதபரமான வேதாந்தத்தை ஒரு நுண்ணிய ரீதியில் கொண்டு செல்லும் நூல் இது. வடமொழியில் மஹாயோக வாசிஷ்டம் என்று பெருகியமைந்த நூலைச் சுருக்கி ஸ்ரீகாஷ்மீர பண்டிதர் லகுயோக வாசிஷ்டம் என்று ஒரு நூலைச் செய்தார். இதனை ஸ்ரீகவிராஜ பண்டிதர் குமாரர் வீரை ஸ்ரீஆளவந்தான் முனிவர் தமிழ்ச் செய்யுள் வடிவமாய் மொழிபெயர்த்தார். வடமொழி மூலத்திற்கு அமைந்த ஸம்ஸார தரணி என்னும் உரையை ஸ்ரீநித்தியானந்தர் தமிழில் 1870களில் சமுசார தரணி என்று மொழிபெயர்த்து வைத்திருந்தார். ஸ்ரீசுப்பைய ஞானதேசிகேந்திரர் பல வடமொழிநூல்களை ஆராய்ந்து ஸ்ரீவீரசேகரம் என்னும் உரையை இயற்றினார். மேலும், தமிழ்ச்செய்யுள், சமுசார தரணி, தம்முடைய ஸ்ரீவீரசேகரம் அனைத்தையும் சேர்த்து 1800 பக்கங்களில் பெரிய அளவு நூலாக 1928ல் சென்னை ஆனந்த போதினி அச்சுக்கூடத்தில் வெளியிட்டார்கள். அச்சு சின்னஎழுத்து.

இந்த நூல் ஸ்ரீரமண மஹரிஷியால் தம் கருத்துக்கு ஆதரவாக எடுத்துக்காட்டப்பட்ட நூல்..'நான் யார்?' என்ற விசாரத்திலேயே தத்துவம், வழி, தேட்டம், பயன் என்ற அனைத்தையும் அடக்கியவர் ரமணர். அவர் கருத்துக்கு ஆதரவாக ஒரு பாடல் ஸ்ரீஞானவாசிட்டத்தில், உபசமப்பிரகரணத்தில் 12வது பாடல்,

அகம் அகம்என்று
அனைத்துயிரினிடத்தும் இருந்து
அனவரதம் உரைப்பதாகி
நிகழ் ஒளியாய்
ஆன்ம தத்துவமான சொரூபத்தை
நினைத்தல் செய்வாம்.
திகழ் இதயக் குகை உறையும்
தேவதையை விட்டு
அயலே தெய்வம் தேடேல்.
மிக அரிய கௌத்துவத்தை எறிந்து
சிறுமணி தேடும் வேட்கை போல் ஆம்
.

மொழியை இயல்பாக தத்துவ நுண்கருத்திற்கு முறுக்கியிருக்கும் அழகைப் பார்க்கலாம்.

1928 ஆம் ஆண்டு வெளியிட்ட வீரசேகர ஸ்ரீ சுப்பய்ய ஞானதேசிகேந்திர ஸ்வாமிகள், அவரது சிஷ்யர் ஸ்ரீ அநந்தாநந்த ஸ்வாமிகள் சமுசார தரணி என்னும் தமிழாக்கமுற்ற உரையைப் பற்றி ஒரு தகவலைத் தெரிவிக்கின்றார்கள். ஸ்ரீ நித்தியநந்த ஸ்வாமிகள் என்பவர் அற்றைக்கு, அதாவது 1928க்கு 60 வருஷங்களுக்கு முன்னரே அந்தத் தமிழாக்கத்தைச் செய்து வைத்து அந்த 60 ஆண்டுகளாக அந்த உரை பாடம் கேட்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது என்கிறார்.

அப்படி என்றால் 1868ஆம் ஆண்டு, அதன் முன்னரும் தமிழில் அத்வைத சாத்திரங்களைப் பாடம் கேட்கும் முறை இருந்து வந்திருக்கிறது. வீரை ஆளவந்தார் முனிவர் ஞான வாசிட்டத்தை அழகிய விருத்தப்பாக்களால் தமிழாக்கியது 18 ஆம் நூற். எப்படியும் 16 ஆம் நூற் இருந்து அத்வைத சாத்திரம் தமிழ் நூல்கள் அல்லது தமிழ் மொழியின் மூலம் ஆன்மிக சாதகர்களால் பயிலப்பட்டு வந்திருக்கிறது.

*

ஞானவாசிட்டமாம் இந்த நூலுக்கு ஸ்ரீவீரசேகரம், சமுசாரதரணி என்னும் இரு உரைகள் இருக்கின்றன என்று பார்த்தோம். அதில் சமுசாரதரணி என்னும் உரையின் தொடக்க உரையில் ஓர் அருமையான செய்யுள் -

பொன்னுலகத்தினில்
புவியில்
அந்தரத்து
என்னுடை உட்புறத்து
இலங்குகின்றது
மன்னு சித் சோதியே
வடிவம் யாவுமாய்த் துன்னுவது
அப்பொருள் தொழுது இறைஞ்சுவாம்.

*

இந்த நூல் யாருக்காக எழுதப்பட்டது? யார் இதைக் கற்பதற்கு அதிகாரிகள்? மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறது உரையான சமுசாரதரணி.

பந்தம் உற்றனன்
பரபதத்தைச் சேர்க என்று
அந்த நிச்சயம் உளான்
அறிவிலான் அலான்
சிந்தனைத் துயர்கெடச்
சித்தைச் சேர்ந்துளான்
இந்த நூற்கு உரியவன்
என்று கொள்கவே.

*

இலக்கணம், சொரூபம், சாதனம், பலம் என்பவற்றால் ஜீவன்முக்தி நிலைமையை விரிவாகக் கூறுகிறது ஞானவாசிட்டம். அதற்கு முன்னர் அறிமுகமாக ஒரு பாடல்,

இறப்பிலா இந்த மோகம்
இறையும் மீட்டெண்ணமின்றி
மறப்பதே நல்லது என்று மதித்தும்
உயர் மனத்தினுக்குத் திறப்படக்
காணப்பட்டது இல் எனச்
சித்தினாலே உறப்பெறும் எப்போது
அப்போது உயர் பரசுகம் அதாமே.

*

யாருக்கு எது பாரம்? ஒரு பட்டியல் தருகிறது ஞானவாசிட்டம்

அவிவேகிக்குப் பாரம் சாத்திரம்
மெய்யறிவிலோர்க்கு அங்கம் பாரம்
நவில் சாந்தி இல்லாதோர்க்கு உளம் பாரம்
அவாவினர்க்கு ஞானம் பாரம்
செவிதான உரு, வாணாள், மனம், புந்தி
அகங்காரம் செயல்கள் எல்லாம்
குவிபாரமாம்
சுமடர் சுமை போலப்
புந்திநலம் கூடாதார்க்கே.

*
சுமடர் என்பது அந்தக் காலத்தில் சுமை தூக்குவோருக்குப் பெயர் என்று இந்த நூலின் உரை கூறுகிறது. அதாவது மூட்டைத் தூக்கி என்று அர்த்தம் வரும் போலும். அவர்கள் சுமை தூக்கும் போது அந்தச் சுமைக்குள் இருப்பதின் மதிப்பு என்ன என்பது அவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று. சுமை மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். ஒரே கையில், ஒரே தடவை தூக்கி விடலாமா அல்லது இரண்டு நடை போய் வர வேண்டுமா என்றுதான் யோசிப்பார்கள்.

அது போல் புந்தி ஆகிய அறிவுநலம் வாய்க்காதவர்கள் தாம் பெற்ற அரும் மதிப்பு உள்ள உடல், இந்திரியங்கள், வாழ் நாள், அஹங்காரம், மனம் என்பதையெல்லாம் உரியவண்ணம் அவற்றின் மதிப்பு அறிந்து பயன் கொள்ளாமல், அதாவது இந்த வாழ்க்கையிலேயே தம்முடைய முத்திக்கு முனையாமல் வீணடித்து, வெறுமனே உண்டு உடுத்து தூங்கி வாழ் நாள் சுகமே கழிவதை மட்டும் கணக்கில் கொண்டு விரயமாக்குவர் என்பதைச் சொல்ல வந்தது இந்தப் பாடல் ஞானவாசிட்டத்தில்.
*

உலகத்தில் எவ்வளவு பொருட்கள்! எவ்வளவு வாழ்க்கைகள்! எவ்வளவு இன்பங்கள்!
தோன்றுகின்ற இவையெல்லாம் என்ன?

பாவமதாய்
ஆபத்துப் பயிலிடமாய்த்
தம்மில் தாம் பற்றின்றாயும்
தாவு மனக் கற்பனையால் சம்பந்தமாய்
இருப்புச் சலாகை போலாம்
மேவு பெரும் செல்வத்துக்கு இடமாகும்
எப்பொருளும் விடயத்தாலும்
பூவலயத்தாலும்
எது பயன்?
யாமார்?
வருவதெது?
பொய் பொய் பொய்யாம்.

*
இவ்வாறு ஒருவர் வெறுமனே நினைக்க முடியாது. வாழ் நாளில் பல அனுபவம் உற்று, பல படிப்பினைகளை அடைந்து மனம் பக்குவம் உறும்போது, தாம் அதுவரை மிக திரமானது நிலைத்தது என்று நம்பிய அனைத்தும் பொய் மேல் பொய் மேல் பொய்யாகப் போய்விட்டதே என்று நிதரிசனமாக உணர்ந்து கொள்வது என்பது ஆன்மிக நெறியின் தொடக்கம். இந்தப் படிப்பினையை மனம் உணராதவரையில், உள்ளம் பச்சை மட்டையாக வாழ்வில் பற்றுடன் காணப்படும். இந்த விரக்தி நினைப்பாக இல்லாமல் வாழ்க்கையின் நிலைப்பாடாக உணர வாய்க்கும் போதுதான் ஆன்மிகத்தின் எல்கேஜியே ஆரம்பம். அதுவரையில் எதுவும் ஏதோ சொல்லி வைத்த கொடேஷன்கள் போன்று இருக்குமே ஒழிய உண்மையில் புரியாது. ஆயினும் மனம் பொறுமையும் ஆர்வமும் கொண்டு விடாமல் முயன்று வர, சிறுகச் சிறுக இந்த விரக்தி ஏற்படும். இதையே ஸ்ரீதாயுமானவரும், 'நிராசையின்றேல் தெய்வம் உண்டோ?' என்று கூறுகிறார்.
*

காவின் மதர் வண்டென்னப்
பாதலம் விண் திசை அனைத்தும்
கணத்துலாவும்
வாவிவளர் மயலொன்றே
வருத்தம் அனைத்தினும்
பெரிய வருத்தம் நல்கும்
மேவும் அரண் உறைபவர்க்கும்
துயர் செய்யும்
ஆசை என்னும் விடூசிகைக்குத்
தேவர் புகழ் மந்திரமாம்
சிந்தையறல்
உலகிடர் போம் சிந்தையற்றால்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

No comments:

Post a Comment