Tuesday, March 7, 2023

வாழ்வதற்கான தத்துவம் - தொடக்கம்

’என்ன இப்படி இறங்கிவிட்டாய், திடீரென்று?’ என்று பார்க்கிறீர்களோ! நியாயம்தான். வைணவம், தத்துவம், வேதாந்தம், மெடஃபிஸிகல் என்று எழுதிக் கொண்டிருந்த ஆள் திடீரென்று ‘அன்றாட வாழ்க்கையைப் பார்ப்போம் அப்பா’ என்று விரக்தியடைந்து எழுதுவது போன்று தொடங்கவில்லை. உண்மையிலேயே என்ன தத்துவம், மதம், கோட்பாடு, யோக நிலை என்றெல்லாம் யோசித்தாலும் கடைசியில் மிஞ்சுவது என்ன? இதோ இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, இந்த வாழ்க்கை. உணவு, பசி, தூக்கம், விழிப்பு, உடல்நலம், அலைச்சல், கவலைகள், பிறகு கொஞ்சம் ஓய்வு, ஓய்வில் படிப்பு, சிந்தனை, அதிலும் கவலை, பிறகு ஏதோ நிம்மதி, பிரச்சனை, குடைச்சல், பின்னர் தீர்வு, பெருமூச்சு, இதற்கு நடுவில் நாளுக்கு நாள் வயதாகிப் போய்க் கொண்டிருக்கும் கண்ணிற்குத் தெரியாத சன்னமான ஓட்டம் -- இதெல்லாம் கலந்த உருவமாக வாழ்க்கை. அப்படியென்றால் எந்தத் தத்துவம், ஆன்மிகம், யோகம், அதீதம் என்றாலும் எல்லாம் நாமாகி நிற்கும், நடக்கும், நகரும், ஓடும், ஓடாமல் உட்காரும், பின் தொடரும் வாழ்க்கை என்பதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஏதாவது உதவி செய்தால்தான் அந்தத் தத்துவம், கோட்பாடு எல்லாவற்றிற்கும் அர்த்தம் ஏற்படுகிறது. இல்லையென்றால் ‘அப்பப்பா பெரிய விஷயம் எல்லாம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று மிகவும் நாசூக்காக நம்முடைய மனமே அதை ஓரத்தில் அல்லது கைக்கெட்டாமல் பரணில் வைத்துவிட்டு ஜாக்கிரதையாகத் தள்ளிப் போய்விடுகிறது. அதாவது வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்றை நம்மால் உண்மையில் அக்கறை கொண்டு ஈடுபட முடியவில்லை. இது குற்றமன்று. ஏன் எனில் இப்படித்தான் நாம் கட்டமைக்கப் பட்டிருக்கிறோம். இதுதான் நாம். மனிதர் என்று சொல்லும் போது மனம் உடையவர் என்ற பொருளில், மனம் என்பது வாழ்க்கை என்பது யாது, அதற்குத் தேவை என்ன என்பதைக் கைக்கொண்டும், தொடர்பில்லாதவற்றைத் தள்ளி வைத்தும் கரிசனமும் சிக்கனமும் காட்டி நம்மைக் கொண்டு செல்கிறது. தொடக்கத்திலேயே இந்த உண்மையைக் கௌரவமாக, வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுவிடுதல் நலம். 

இந்த இயல்பான உண்மையை ஏற்றுக் கொண்டான பிறகு நம் விஷயங்கள் கொஞ்சம் சுலபமானது போல் ஆகிவிடுகின்றன. வாழ்க்கையை அமுக்கி அதன் மேல் ஏறி நின்று எங்கோ வானத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மனம் தன் இயல்பான இயக்கத்திற்கு வந்து சேருவதில் நஷ்டம் எதுவும் இல்லை. லாபமே. இப்பொழுது ஒரு புதிய கேள்வி பிறக்கிறது. வாழ்வதுதானே வாழ்க்கை? பின் பேசாமல் வாழ்ந்து விட்டுப் போவதை விட்டுவிட்டு ஏன் அதற்கான தத்துவம் என்று யோசிக்க வேண்டும்? இது ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குப் பதிலாக ஓரமாக நின்று ரன்னிங் காமண்ட்ரி சொல்வது போல் ஆகாதா? ஆம். இந்தக் கேள்வியை நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். அதாவது புரியாத அதீத விஷயங்களைப் பற்றித்தான் தத்துவம் என்று நினைத்துப் பழகிய நமக்கு அன்றாடம் வந்து சேரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்வதைப் போல் பெரிய யோகம் எதுவும் இல்லை என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனாலும் வாழ்க்கைக்கான தத்துவம் என்று நாம் தொடர்ந்து பார்க்கும் பொழுது இந்தக் கேள்வி பொருந்தாது என்பது தானே புரியும். அதுமட்டுமன்று. நாம் ஏதோ அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றித்தான் பேசுகின்றன என்று நினைத்த பல தத்துவங்களும் உண்மையில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வந்துவிட்டுத்தான் வார்த்தைகளில் சிக்கிக் கொண்டு எங்கோ அந்தரத்தில் நின்றுவிட்டன என்பதும் நமக்குப் போகப் போகப் புரியும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment