Thursday, March 9, 2023

பெண் என்னும் பெருந்தகைக்கு ...

பெண் என்னும் பெருந்தகைக்கு

உன்னோடு நான் பிறந்தேன்
உன்னோடுதான் நான் திரிந்தேன்.
உன்னோடு விளையாடி
உன்னோடு போராடி
உன்னோடு மன்றாடி
உன்னோடுதான் வளைய வந்தேன்.
தம்பியாக உன்னுடன் நான்
பிடித்த அடங்களில்
நீதான் விட்டுக் கொடுத்தாய்.
நீயாக சில நேரம்
உனக்கு அழகு அதுதான் என்று
உற்றோரும் பெற்றோரும் உபதேசித்து 
வேண்டா வெறுப்பாய்ச்
சில நேரம்.
ஆனால் தம்பியாக நான் உனக்குச்
செய்திருக்க வேண்டிய சேவைகள்தாம் எத்துணை!
நானும் செய்யவில்லை.
நாலும் அறிந்து சூழ் மனிதர்
எவரும் அதுதான் எனக்கு அழகு
என்று உபதேசித்து உறுத்தவில்லை.
ஆண்பிள்ளையின் அழகு என்று
அனைவராலும் ரசிக்கப்பட்டது.
விரசம் என்ன என்றால்
நீயும் ரசித்தாய்
என் தம்பி ஒரு முரடனென்று.
பண்படுத்திப் படுத்திய
பண்பாட்டின் அனிச்சைவினை
அது என்று நீ அறிவாயோ
அறியேன் அறிதொறும் என்னை
நாணம் கவிகிறது.
அண்ணனாக உன்னை
ஏவிக் கூவி அடக்கி நியமித்து
அதிகாரம் செய்திருக்கிறேன்;
ஆனால் அண்ணனாக நான்
காட்ட வேண்டிய பாசம்?
அக்கறை என்ற பெயரில்
அத்தனையும் மிச்சமாகி
நிற்கிறது மோசம்.
என் அண்ணா என்னிடம்
எவ்வளவு பாசம் !
என்று நீ விதந்தோதும்
கணம் ஒன்றில்
தூக்குக் கயிற்றில்
தொங்குகிறது என் உள்ளம்.
கல்யாணமாகிப் போய்விட்ட
கண்மணிகளை இழந்து
பாசக் குருடாய்
அலைகிறது நெஞ்சம்.
அண்ணன் என்ற முகமூடி களைந்து
அலறுகிறது அன்பின் உயிர்;
தம்பி என்ற தகவிழந்து
புயல்பறவையாய்த்
தடுமாறி அழிகிறது ஏழைப் பாசம்;
அடுத்த வீட்டுத் தோழியாய்
எதிர் வீட்டு நண்பியாய்
ஒரு வகுப்புச் சகியாய்
மேல் வகுப்புப் பாச தேவதையாய்
நீ வந்த போதெல்லாம்
நான் என்னை மட்டுமே
கண்டு கொண்டிருந்தேன்;
என் ஆண் அகங்காரத்தின்
உத்யான வனமாய் உன்னைக் கருதிய
என் பிழைக்கே உன்மத்தமானேன்.
அப்பொழுது எல்லாம்
உவந்து உவந்து நீ எனக்கு
உணர்த்திய குறிப்பையெல்லாம்
என் மமகாரத்தின் முற்றத்தில்
நீ ஆடிய நடனம் எனக் களித்தேன்.
தாயாகி நீ வந்த போது
தனயனாகிச் செல்வனாகித் திமிர்ந்தேன்;
பாட்டியாகி நீ வருங்கால்
என் படாடோபத்தின் பாசறை
என மகிழ்ந்தேன்;
ஆனால் என் போலித்தனம் எல்லாம்
கருகிப் போய்ச்
சுய உணர்வின் மின் தந்தியில்
அடிபட்ட இளம் புள்ளாய்
இருட்டில் சொட்டும்
பனிமழைக்கு நடுங்கி மாயும்
என் முன்னர் 
தெய்வமாகி
வந்து விடாதே!
பெண்ணே! 
இப்படிக்கு இந்த வேதனையுடன்
இறக்க விரும்பும்
ஓர் மனித உயிர். 
(ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் கவிதைகள், பக்கம் 198, தமிழினி, 2021)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


No comments:

Post a Comment