இப்பொழுதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. உடனே அதைத் தாயே என்று கூப்பிடுகிறார் ஒரு கவிஞர். அதுவும் கண்ணனைப் பார்த்து ! கூப்பிட்டாலும் பரவாயில்லை. அதனிடம் போய் நாம் பாதுகாத்துப் போற்றிப் பேணி வளர்க்க வேண்டியிருக்க, அதனிடம் என்னைக் காப்பாற்று! உன்னைச் சரணடைந்தேன் என்றா சொல்வது?
சரணடைந்ததுதான் அடைந்தார். எதற்காகவாம்? பொன் வேண்டுமாம். உயர்வு வேண்டுமாம். புகழ் வேண்டுமாம். இதையெல்லாம் விரும்பிடும் இவரைக் கவலைகள் தின்னத் தகாது என்று அவற்றினின்றும் காக்க வேண்டிச் சரணடைகிறார்.
என்னது இது! கண்ணன் பிறந்திருக்கிறான். ஏதோ கவிஞர். அதனால் அம்மா என்று கூப்பிட்டார் என்று பார்த்தால், சரணம் என்றார். சரி பக்தி போலும் என்று பார்த்தால், பொன் வேண்டும், உயர்வு வேண்டும், புகழ் வேண்டும். இவ்வளவும் வேண்டும் என்பவர் அதையாவது கண்ணனிடம் கேட்கிறாரா? இல்லை. இதையெல்லாம் வேண்டும் தனக்குக் கவலைகளால் பாதிப்பு நேரக் கூடாது என்கிறார். கொஞ்சம் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறார் போலும்! இல்லை. மகாகவி பாரதி என்றால் அதில் ஆழ்ந்திருக்கும் கவியுளம் இருக்குமே!
கருத்துச் சுருக்கமாக இந்தப் பாடல் ‘கண்ணம்மா எனது குலதெய்வம்’ என்பது அமைந்திருக்கிறது.
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
ஏனென்றால்,
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
சரணடைந்ததாகத்தான் கூறுகிறார். ஆனால் அவர் பாடுவதற்கு ஆன விளக்கம் அவருடைய பாடல் பிறிதொன்றில் வழக்கமாகக் கிட்டும். இந்தப் பாடலுக்கு விளக்க உரையாக ஒரு பாடல் அமைந்திருக்கிறது. அதுதான் ‘கண்ணம்மா என் குழந்தை’ என்பது. அதில்,
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும் பொற் சித்திரமே!
என்று பாடுகிறாரா.. இப்பொழுது புரிந்தது அவர் வேண்டும் பொன் என்ன என்பது. பிள்ளைக் கனியமுது, செல்வக் களஞ்சியம் ஆன கண்ணம்மா அவரை என்ன செய்கிறது? கண்ணம்மா வந்தவுடனே கவிஞரைக் கலி தீர்த்து உலகில் ஏற்றம் புரிய வைத்து விட்டது. உயர்வும், புகழும் தன்னைப் போல் கண்ணம்மா வந்ததுதான் தாமதம், தாமாக உண்டாகிவிட்டன. ஆனால் இந்தப் பொன்னையும், உயர்வையும், புகழையும் விரும்புவதற்கு எது தடையாக இருந்தது? கவலைகள். கவலைகள் என்பன வைரஸ் மாதிரி. வாழும் உயிரைத் தின்று பெருகும். வளத்தைத் தின்னும். ஏன்? பொன்னாகவும், உயர்வாகவும், புகழாகவும் வந்து தோன்றும் கண்ணம்மா பாதுகாத்தால்தான் கவலைகள் போகுமா? ஆம்.
ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் எழுதுகிறார். ஜீவனாகிய இவன் செய்ய வேண்டியதெல்லாம் என்ன எனில் வெறுக்காமையும், விலக்காமையுமே செய்ய வேண்டியது. மற்றபடி ஜீவனின் நன்மைக்கு உண்டான அனைத்தும் கண்ணன் செய்து கொண்டிருக்கிறான்.
ஜீவனின் சாமர்த்தியமே நித்தமும் கவலைப் பயிராக்கித் தனக்குக் கடவுள் செய்யும் நன்மையைத் திறமையாக விலக்கிக் கொண்டு தட்டழிவதே ஆகும். ஜீவன் பிரார்த்திக்க வேண்டியதே பகவானிடம், தன்னைத் தன் கையில் காட்டிக் கொடுக்காமல் இருக்க வேண்டித்தான். ஏனெனில் தனக்கு நன்மை என்று நினைத்துத் தீமையைச் சூழ்த்துக் கொள்வதில் ஜீவன் மிகவும் கைதேர்ந்தது. எனவே கவலைகள் தன்னைத் தின்னத்தகாது என்று சரணடைகிறார்.
பார் படைத்தவன் தேரோட்டியாக அமர்ந்திருக்கிறான். ஆனால் அர்ச்சுனனோ கவலையில் விழுந்து உழல்கிறான். அர்ச்சுன விஷாதம் என்றால் அர்ச்சுனனின் கவலை.
என்ன கவலை? அதன் உருவம் என்ன? ஏழ்மை, மிடிமை, உள்ளத்தின் வறுமை, அச்சம். இவை நெஞ்சில் குடி புகுந்தால் பின்னர் ஒளி போய்விடும். ஏன் இதை ஜீவன் தானே போக்கிக் கொள்ள முடியாதா? தான் என்று ஜீவன் நினைத்ததால்தானே இந்த வறுமையும், அச்சமும் உண்டாவதே. இதைத்தான் அடுத்த கண்ணியில் பாடுகிறார் கவிஞர்.
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வணம்
நின்னைச் சரணடைந்தேன் என்கிறார். தான் என்பதில் நங்கூரம் போடும் பொழுது கவலைக் கடலில் ஆழும். அவன் செயல் என்று ஐக்கியமாகி ஒன்றும் பொழுது விண்ணாய் விரியும். விண்ணாய் விரிய வேண்டியது கவலையில் எத்துண்ணும் துரும்பாய் ஆவது என்ன மிடிமை! இதற்குக் காரணமே தான் தான் என்று அந்தரங்கத்தில் உணரும் உயிர் அச்சத்தில் நடுங்காமல் என்ன செய்யும்? தன்னிலிருந்து தன்னைக் காக்க தலைவன் தாளே சரண்.
தன் செயல் இல்லையாகி விட்டது இனி எல்லாம் அவன் செயல் என்றால் அப்பொழுது அங்கே துன்பம் என்பது ஏது? சோர்வுதான் ஏது? தோல்வி என்பதும் ஒன்றும் இல்லையே. கர்மம் நிஷ்பலம் ஆகும். ஆனால் கைங்கரியம் ஒரு நாளும் பொய்க்காதே! தன்னில் வைத்த பாரத்தை அவனில் வைத்துவிடும் போது அங்கு கர்மம் கைங்கரியத்தில் புகும் என்றல்லவோ பிள்ளை உலகாரியன் வாக்கு!
பின்னர்த் துன்பம் இல்லை, தோல்வி இல்லை, சோர்வு இல்லை என்றால் என்னதான் உண்டு அங்கே?
அன்பு ஒன்றுதான் உண்டு. சரி அது மனநிலை. ஆனால் நெறி? அந்த அன்புதான் நெறியும் ஆம்.
அன்பு நெறியாக ஆனால் அங்கே அறங்கள் தாமே வளரும். இதையே செந்நாப்போதார் வேறுவிதமாகச் சொன்னார். என்பு இல்லாத உயிரை வெயில் காயும். அதுபோல் அன்பு இல்லாத உயிரை அறம் காயும். அன்பு என்று ஒன்று இருந்தால் அது வெறுமனே இருக்காது. ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும். அந்தக் குழந்தைதான் அருள். அருள் இருக்கும் இடத்தில் அவ்வுலகம் தானே இருக்கும்.
அதெல்லாம் சரி. முதலில் அறம் என்றால் என்ன? திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என்கிறார். ஓஹோ!
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் என்றால், அந்த மாசு என்பது யாது? ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களில் விசேஷமானவர் லாடு மஹராஜ் என்னும் சுவாமி அத்புதானந்தர். லாடு மஹராஜுடன் ஒப்பிட்டால் ஸ்ரீராமகிருஷ்ணர் மிக அதிகமாகக் கல்வி கற்றவர் என்று சொல்லலாம் என்றால் லாடு மஹராஜ் எவ்வளவு கல்வி வாய்ந்தவர் என்பது புரியும். ஆனால் அந்த அத்புதானந்தர்தான் மிக முக்கியமான கேள்விக்குப் பதில் சொல்கிறார். மனத்தில் மாசு என்றால் என்ன? அவரைக் கேட்டார்கள். சித்த சுத்தி என்கிறார்களே? அப்படியென்றால் சித்தத்தில் இருக்கும் அழுக்கு எது? அசுத்தி எது? லாடு மஹராஜ் சொன்னார்: அது ஒன்றுமில்லை. நான் என்று தன்னையே மையமாக நினைக்கும் அகங்காரம் இருக்கே அதுதான் மாசு, அசுத்தி. அதை நீக்கினால் சித்தம் சுத்தியாகிவிடுகிறது.
இங்கே மகாகவி என்ன சொல்கிறார்? தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து இங்கு நின் செயல் செய்து நிறைவு பெறுவது என்கிறார். இந்த மனத்துக்கண் மாசு இருக்கும் வரையில் கவலைகள் தின்னும். மிடிமை, அச்சம் நெஞ்சில் குடிகொள்ளும். அறங்கள் தேயும். அன்பிலாத உயிரை அறம் காயும். இதையெல்லாம் நாம் கவனமாக எப்படிப் பார்த்துப் பார்த்து நீக்குவது? நம்மை நாமே காப்பது? ஒரே வழி. உத்தமமான வழி.!
நல்லது தீயது நாம் அறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக !
அப்படியென்றால் நீர் என்ன செய்கிறீர்?
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து இங்கு
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
பாவம்! பிறந்த குழந்தைக்கு நாம் எல்லாம் செய்ய வேண்டியிருக்க அதற்கு நாம் எவ்வளவு வேலை வைக்கிறோம் பார்த்தீர்களா?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
abaaram um viLakkam,
ReplyDeleteyogiyar
ஆஹா எத்தனை எத்தனை செய்திகள் பொதிந்திருக்கிறது மஹாகவியின் பாடல்களில்
ReplyDelete