Wednesday, January 29, 2025

திருப்பராய்த்துறை மேவிய தவமுனிவர் சுவாமி சித்பவாநந்தர்

சுவாமி சித்பவாநந்தரின் நூல்கள் தமிழில் நமக்குற்ற பெரும்பயனாகும். இந்துமதக் கருத்துகள் குறித்த சிந்தனைகளின் தெளிவு சுவாமிகளின் எழுத்து, உரை அனைத்திலும் காணலாம். சுவாமிகளின் மொழிநடை மிகவும் அமைதியானதும், ஆழ்ந்ததும் ஆன நடை. படிப்பவருடைய மனப்பாங்கை மிகக் கவனம் கொண்டு சுவாமி சித்பவாநந்தர் அருளியிருக்கும் எளிமையும், அழகும் காலத்தை வென்று நிலைப்பது. தர்ம சக்கரத்தில் பல ஆண்டுகளாகப் பல அன்பர்கள் பல நேரங்களில் எழுப்பிய வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் சுவாமிகள் மிகவும் பொறுமையாகவும், கனிவுடனும் அருளிய விளக்கங்களும், பதில்களும் தொகுத்து (முன்னர்ப் பல சிறு பகுதிகளாக இருந்தன) மூன்று பகுதிகளாக ‘ஐயம் தெளிதல்’ என்று ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை 1997ல் போட்டிருக்கிறது. இது ஓர் அத்யாவசியமான பொக்கிஷம். மேலும் பல வேறு தலைப்புகளில் சுவாமிகள் சிறு சிறு நூல்கள் வரைந்துள்ளார். அவை அனைத்தும் இன்றும் எவ்வளவு முக்கியமான சேகரங்கள் என்பது அவற்றைப் படித்தாலே புரியும். 

1974 க்குப் பின்னர் எண்பதுகளில் பலதடவையும் தபோவனத்திற்குப் போவதும், பொதுவாக மகாசிவராத்திரி சமயத்தில், அங்குப் பிரம்மச்சாரிகளுடனான சத்சங்கமும், அதுபொழுது சுவாமிகள் முன்னிலையில் அனைவரும் அமர்ந்து நள்ளிரவும் தாண்டி நடைபெறும் தீவேள்வியும், கடவுளின் நாமம் துலங்க வீசும் காற்றும், மூன்றாம் சாமம் அனைவரும் அணியாகச் சென்று பராய்த்துறை மேவிய சிவனாரின் ஆலயத்தில் தொழுவதும் - இன்றும் நினைவுகளில் தெய்விகமாய்ப் பதிந்த அனுபவங்கள். சுவாமிகளுடைய பகவத் கீதை உரையும், திருவாசக உரையும் தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் சிறந்த வரவுகள். ஆங்கிலத்திலும் கீதைக்குச் சுவாமியின் உரை இருக்கிறது. முதலில், 60கள் அல்லது 70களாய் இருக்கலாம், சுவாமிகள் பகவத் கீதையைத் தொடர்ச் சொற்பொழிவாக நேஷனல் பள்ளி மைதானத்தில் ஆற்றியதாகவும், அதைக் கேட்பதே ஒரு தனி அனுபவமாக இருந்தது என்றும் எந்தையார் கூறியதுண்டு. சுவாமிகளின் நூல்களில் ஸ்ரீதாயுமானவரின் பாடல்களை விளக்கி எழுதிய நூல்களைக் குறிப்பிட வேண்டும். மேலும் ஞானயோகம், ராஜயோகம், பக்தியோகம், கர்மயோகம் என்று நான்கு வழிகளுக்கும் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளும், எழுதிய உரைகளும் தனித்தனி நூல்களாக ஆனவற்றைத் தழுவி சுவாமி சித்பவானந்தரும் ஞானயோக விளக்கம், கர்மயோக விளக்கம் என்று எழுதியிருக்கிறார். அதில் கர்மயோக விளக்கம் என்னும் தொடக்கப் பத்தியே அவருடைய நடையில் திகழும் தெளிவையும், சுருக்கத்தையும், கருத்தின் உள்பரப்பையும் காட்டக் கூடியது: 

“உயிர்களை இறைவனோடு இணைத்து வைப்பதற்கு ஏதுவாயிருப்பது யோகம். கையாளும் உபாயத்துக்கு ஏற்ப யோகத்துக்குப் பெயர்கள் பல உள. கர்மத்தின் மூலம் கடவுளை அடையுங்கால் அதற்குக் கர்மயோகம் என்று பெயர். கர்ம சாதனம் செய்கின்றவன் கர்ம யோகி. இம்முறையைக் கடைப்பிடித்தவர்கள் தொண்டர் என்றும் அழைக்கப்பட்டனர். அன்னவர்களின் சிறப்பைக் கூறும் நூல் தொண்டர் புராணம் என்று வழங்கி வருகிறது. இறைவனைத் தொழுகின்ற வகைகள் பல உள. அவைகளுள் தொண்டு தலையாயது. ஏனென்றால் அது ஸ்தூலமாக எல்லார்க்கும் தென்படுகிறது.” 

 இங்கு சுவாமிகள் கர்மத்தை யோகமாகச் செய்வதையே தொண்டு என்ற கருத்தோடு ஒன்றாக்கி விட்டார். பழைய நூல்கள் கர்மயோகம் தனியாகவும், தொண்டு என்னும் கைங்கரியம் வேறாகவும் சொல்லும் போது சுவாமிகள் கர்மயோகம் என்பதே தொண்டு என்று சொல்வது கருத்தை எவ்வளவு சுலபமாக ஆக்கிவிடுகிறது என்று பார்க்கலாம். 

அதேபோல் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு உரையெழுதும் போது அவர் எழுதும் வரிகள் மிகச் சுருக்கமாக, மிக விரிந்த பிரச்சனை ஒன்றிற்கான தெளிவான பதிலைப் பதிவு செய்துவிடுவதைப் பார்க்கலாம்.:

“வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன, ஆனால் வேதங்களினின்று தெள்ளியெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம், இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. ... உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய் இம்மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர்பெறுகின்றன, முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை கிடையாது, தத்துவ விளக்கம் அல்லது மெய்ப்பொருள் விளக்கம் இவைகளுள் முறையாக அமைந்திருக்கிறது. ஹிந்து மதத்துக்கு சாஸ்திரம் எது என்னும் கேள்வி எழுமிடத்துப் பிரஸ்தானத்திரயம் என்றே பதில் அளிக்கவேண்டும்.” 

’ஞானயோக விளக்கம்’ என்னும் நூலில் சுவாமி சித்பவானந்தரின் எழுத்து சுவாமி விவேகானந்தரின் கருத்தை விளக்கியுரைக்கும் பகுதி:

“பாரமார்த்திக வாழ்வே மனிதனை இந்த உயர் நிலைக்குக் கொண்டுவருகிறது. ஒவ்வொரு மனிதனிடத்தும் அளப்பரிய ஆத்ம சக்தி புதைந்து கிடக்கிறது. அந்த ஆத்ம சக்தியை இயக்குவது ஞான வாழ்க்கை ஒன்றேயாம் . அது ஜீவிதத்தைப் பண்படுத்துகிறது. நலன் அனைத்தையும் அது உண்டுபண்ணுகிறது. தனக்கும் மற்றவர்க்கும் சாந்தத்தை வழங்குவது ஞான வாழ்க்கை ஒன்றேயாம். இந்த ஞான வாழ்க்கையானது யாரோ சிலருடைய தனியுரிமை என்ற எண்ணம் நெடுங்காலம் உலகில் உலவி வந்திருக்கிறது, யாரோ சில புரோகிதர்கள்தான் இதை ரகசியமாகக் காத்து வைத்திருந்தார்கள் என்றும், தேவாலயங்களில் இது பரம ரகசியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டது என்றும் , தனியுரிமையாயிருந்த சில சாஸ்திரங்களில் மட்டும் இது குறித்து வைக்கப்பட்டிருந்தது என்றும், மற்றவர்களுக்கு விளங்காத கிரியா விசேஷங்களைக்கொண்டு சில தனிக் கூட்டத்தார் இதைப் பேணி வந்துள்ளார்கள் என்றும் - இப்படியெல்லாம் எண்ணி வந்திருந்த எண்ணங்கள் அடிபட்டுப் போய்விட்டன. உண்மையான ஞான வாழ்க்கை இனி உலகெங்கும் பரந்த பாங்கில் வளர்ச்சியடையப் போகிறது.” 

திருப்பராய்த்துறை மேவிய தவமுனிவரின் எழுத்துகள் நம்மை மேம்படுத்தட்டும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment