(முன்னர் 2008ல் வாழ்வியலோடு பூத்த தமிழ் என்னும் தலைப்பில் நான் இட்ட பதிவை இங்கு மீள்பதிவாக இடுகிறேன். இது 2008லேயே தமிழினி இதழிலும் வெளிவந்தது)
தமிழ்ப் பாடல் வரலாற்றில் பல நெடுநிலைச் செய்யுள், தொகை நூல்கள், தனிப்பாடல்கள் இவற்றைக் காண்கிறோம். ஆனால் பெரும்பாலும் அவை மற்றொரு கதையை, ஒரு மன்னனை, அல்லது ஒரு வள்ளலை, இப்படி ஏதாவது ஒரு முனை நோக்கிய படியே இருக்கும். சாதாரண அன்றாடம் வாழும் பலவகை மக்களை வைத்துப் பாடல் எழுவது மிக மிக அருமை. அதிலும் அந்த மக்களில் ஒருவரே பாடி அது பதிவு பெறுவது, காலத்தில் கடந்து வந்து நாம் காணக்கிடைப்பது என்பது அருமையிலும் அருமை. அப்படியும் சில பாடல்கள் குனிந்து ஒதுங்கி பதுங்கி மறைந்து ஒளிந்து காலத்தின் கண்களை ஏமாற்றி வந்துவிட்டன.
இந்த மாதிரி அபூர்வமாக வந்தது என்றாலே அது எத்தனை உணர்ச்சி பூர்வமான கதை சொல்லும்? ஏனென்றால் எளிய மக்களின் பாடல் என்னும் போது வாழ்வியலின் சுமை, வேதனை, வியர்வை, ஏக்கம் இவைதானே அங்கு சுரம் போடும். பாடலைத் தொட்டாலே பளீஇர் என்று உணர்ச்சி அடிக்கிறது.
ஒரு தெரு சந்தி. மக்கள் வந்து போகும் இடம். சந்தை, வண்டிகள்(மாட்டு வண்டி பல்லக்கு, குதிரை இப்படித்தான்) அந்தக் காலம் இல்லையா? வேதனை மட்டும் தான் எல்லாக் காலத்தும் ஒன்று. மற்ற காட்சிகள் எல்லாம் காலத்துக்குக் காலம் மாறுமே?
ஒரு கழைக்கூத்து. பறை ஒலிக்கிறது. கீழிருந்து பாங்கன் உருட்டி உருட்டிக் குரல் கொடுக்கிறான். மேலே கயிற்றில் ஒரு பெண் அநாயாசமாக நடந்து, அந்தரத்தில் தன்னையே போட்டு வாங்கி, தவறாமல் திரும்ப அந்தக் கயிற்றிலேயே வந்து அடைந்து நின்று, ஒயிலாக நடை பயின்று இத்தனையும் செய்கிறாள். கூட்டம் வைத்த கண்ணை வாங்கவில்லை. பெண்ணின் அழகு என்பதெல்லாம் தாண்டிச் செய்யும் சாகசத்தின் அபாயம் திக்க் என்கிறது. குரல் கொடுப்பவன் கணக்குப்படி இன்னும் வெகு நேரம் செல்லும் அந்தப் பெண்ணின் வியத்தகு கழை ஆட்டம். கொட்டும் அதற்கு ஏற்றாற் போல் சுருண்டு சுருண்டு விழுகிறது. ஆனால் திடீரென்று அந்தப் பெண் ஆட்டத்தை நிறுத்திவிட்டு கழையின் வழி இறங்கத் தொடங்குகிறாள். பாங்கனுக்கே புரியவில்லை.
என்ன இவள்? நல்ல விறுவிறுப்பு ஏறிய தருணத்தில், மக்களெல்லாம் எதையாவது போட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று எண்ணும் போது நிறுத்திவிட்டு வருகிறாள். தன்னை மீறி அவளாக வருகிறாள் என்றும் காட்டிக்கொள்ள முடியாது. அவர்களுக்கே உள்ள சங்கேத மொழியில் பதைத்துப் போய் வினவுகிறான். அவளோ சங்கடப் படுகிறாள். வெளிப்படையாகவே வேறு கேட்கத் தொடங்கிவிட்டான். எப்படிச் சொல்வாள்?
தான் சிறுமியாக இருந்தவள், இயற்கை நேரம் கெட்ட நேரத்தில் தன்னைப் பெரியவளாக ஆக்கிவிட்டது என்று தான் உணர்வதை எப்படி உணர்த்துவது? இந்த ஆண்களோ சரியான சமயத்தில் மூளை வேலை செய்யாது, குறிப்பறிய மாட்டாத நெடுமரமாக ஆகிவிடுவார்கள். மககள் கவனம் திரும்பும் முன் தெரிவித்தாக வேண்டும். இக்கட்டான நிலைமை...ச..நம் வாழ்க்கையும் இப்படியா? தாய் இருந்தால் என்ன சீராட்டு பாராட்டு? ஒன்றுமில்லை குழந்தாய்! இது இயற்கை. அஞ்சாதே. உடனே உற்றார் சுற்றம் அனைவரும் செய்தி அறிந்து.... ம்ம் அதெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இங்கு அரைவயிற்றுக் கஞ்சிக்கே ஆடிப்பாடி குதிக்க வேண்டியிருக்கிறது. அது போகட்டும். இந்த இக்கட்டை எப்படிச் சமாளிப்பது? தாயிருந்தாலாவது துணைக்கு வருவாள். ஆகா! என்று நினைவு வந்தவளாய் ஒரு பாட்டு வடிவில் செய்தியைச் சொன்னாள்.
கல்லுருகும் காலம்
கழுகறியும் அக்காலம்
வையகம் எல்லாம் மலர்ந்த பூ வண்டறியும்
ஓங்கல் அறியும்
உயர் கடலின் உள்ளாழம்
பாங்கனுக்குப் பாங்கன்
பயனறிவான் மன்ற
அறிவார் அறிவார்
அறியார் அறியார்
ஒரு காம்பு இருதலையும் பூ.
அறிவார் அறிந்தார். அறிவித்தது தமிழ். அந்தக் கழையணங்கும் கவலை தீர்ந்தாள். ஆனால் என்னவோ இந்தப்பாடல் நெஞ்சைப் பிசைகிறது. சீராட்டிப் பாராட்ட வேண்டிய ஒரு கணம், எல்லோரும் கைவிட்ட ஒரு பெண்குழந்தை......என்ன சமுதாயம்....என்ன வாழ்க்கை.....நல்லவேளை தமிழாவது போய்க் கைகொடுத்ததே!!
(பாடல் கிடைத்த நூல், பக்கம்--- பெருந்தொகை, பக் 423, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப் பிரசுரம், 1935--1936)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
அருமை. தாங்கள் எடுத்துக்கொடுத்தால்தான் எங்களுக்குக் கிடைக்கிறது. நன்றி.
ReplyDelete