Friday, February 14, 2025

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தின் கருத்துகள்

வேதாந்த தேசிகரின் விளக்கங்கள் பெரிதும் போற்றப்பட்டன, அவருடைய கருத்துகள் சில மாறுபட்டவையாய் இருந்தால் அவை விவாதிக்கப் பட்டன. அவர் மட்டுமன்று. இன்னும் சில ஆசார்யர்களின் கருத்துகளும் விவாதிக்கப்பட்டன என்னும் சூழ்நிலைதான் மணவாள மாமுனிகள் காலம், அதை ஒட்டிய காலம் வரையிலும் நிலவியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் ஸ்ரீராமாநுஜர் காலத்திலேயே கூட ஸ்ரீராமாநுஜரே ஒரு வித்வானுக்குப் பிரபத்தி நெறியைப் பற்றி விளக்கியுரைத்ததாகவும், அதைக் கேட்ட அந்த வித்வான் முடிவில் ஸ்ரீராமாநுஜரிடமே ‘ தாங்கள் உரைக்கும் அர்த்தம் அழகிது. ஆயினும் தாங்கள் உரைக்கும் நெறியைக் கைக்கொள்ளும் ருசி எனக்கில்லை’ என்று சொன்னதாக மணிப்பிரவாள நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே கருத்துகள் மாறுபடுவதும், அதன் அடிப்படையில் பரஸ்பரம் விவாதங்களும் வைணவ அறிஞர்களின் வரலாற்றில் புதிது என்று சொல்ல முடியாது. இதைக் குறித்துப் பெரும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஸ்ரீவேதாந்த தேசிகரே கூட தமது சம்ப்ரதாய பரிசுத்தி என்னும் நூலில் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றார். என்னவெனில், 

“ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்ய ஸம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதமில்லை. வாக்ய யோஜநா பேதமே உள்ளது.” 

அதாவது பொருள் ஒன்றுதான். அதைப் பார்க்கும் கோணமும், விளக்கும் விதமும் மட்டுமே வேறுபடுகிறது என்று அழகாகச் சொல்கிறார். 

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அநேகமாக அனைத்துப் பகுதிகளுக்கும் உரையெழுதிய பெருமகனார் பெரியவாச்சான் பிள்ளை. அவரே ரஹஸ்ய நூல்களும் இயற்றினார். அவருக்கு முன்னர் ரஹஸ்யம் குறித்துப் பிரபலமாக அறியப்பட்ட ஸ்தோத்திரம் பராசர பட்டரின் அஷ்டச்லோகி ஆகும். அவர் (பெரியவாச்சான் பிள்ளை) காலத்திற்குப் பிறகு பிள்ளை லோகாசாரியார் இயற்றிய அஷ்டாதச ரஹஸ்யம் என்னும் பதினெட்டு ரஹஸ்ய நூல்களின் தொகுதி ரஹஸ்ய நூலுலகில் பெரும் பிரசித்தி பெற்றது. அந்தப் பதினெட்டு நூல்களில் ஒன்றான தத்வத்ரயம் என்னும் நூலுக்கான வியாக்கியானத்தில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளால் ஆதரத்துடன் மேற்கோள் காட்டப்படும் நூலாகத் திகழ்கிறது ஸ்ரீவேதாந்த தேசிகரின் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்பதை நாம் காண முடிகிறது. அதேபோல் காலத்தால் தமக்கு மிகவும் அண்மையான முன்னவராகத் திகழும் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானத்தை ஆதரத்தோடு மேற்கோள் காட்டும் நிலையைத்தான் நாம் வேதாந்த தேசிகரின் நூலிலும் காண முடிகிறது. இந்தப் பெருமக்களுக்குள் கருத்து வேறுபாடு, விவாதம், மாற்றுக் கருத்து இருந்திருக்கலாம். ஆனால் யார் ஒருவருடைய நூலும் யார் ஒருவருக்கும் ’பிறருடைய’ நூலாக ஆகிவிடவில்லை என்பதைத்தான் தொகுத்து நாம் காணும் போது உணர முடிகிறது. ’நாம்’ >< ‘பிறர்’ என்ற பிளவான பார்வை பின்னர்க்காலங்களில் பரவத் தொடங்கியது என்றால் அதற்கு எந்த விதத்திலும் இந்த ஆசார்யப் பெருமக்கள் காரணமாக அமையவில்லை என்பதைத்தான் கூர்ந்து கற்கும் எவரும் உணரமுடியும். 

முந்தைய பகுதிகள் -- முதல் பகுதி , இரண்டாம் பகுதி 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் - தொடர்ச்சி

’சும்மா போகிற போக்கில் மணவாள மாமுனிகள் வேதாந்த தேசிகரை மேற்கோள் காட்டினார், வேதாந்த தேசிகர் பெரியவாச்சான்பிள்ளையை மேற்கோள் காட்டினார். இவர் அவரை அபியுக்தர் (கல்வியில் சிறந்த நிபுணர்) என்றார். அவர் தமக்கு முன்னோரை அபியுக்தர் என்றார் என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆதாரம் எங்கே’ என்கிறார் நண்பர். ஒருவரை ஒருவர் பாராட்டினார் என்பதற்கும் ஆதாரம் கொடுக்க வேண்டிய அளவிற்கு நாம் ஆகிவிட்டோமா என்பது ஒரு கேள்வி. இருந்தாலும் இருக்கிற ஆதாரத்தைத் தருவதில் நமக்கென்ன கஞ்சத்தனம்? 

அதற்கு முன்னர் அவரவர் வாழ்ந்த காலக் கிரமத்தைப் பார்ப்போம். (குறிப்பு உதவி - ஆசார்யர்களின் கால நிர்ணயம், ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர்) பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் காலம் 1167 - 1262 கி பி. வேதாந்த தேசிகர் இவருக்குப் பின்னர் ஏழு வருஷங்கள் கழித்துத்தான் 1269ல் தோன்றுகிறார். (1269 - 1369) மணவாள மாமுனிகள் தோற்றம் 1370 கி பி. அதாவது ஒருவர் மறைந்த பின்னர் ஒருவருடைய தோற்றம் என்ற காலக் கிரமத்தில் நிகழ்கிறது. பெரியவாச்சான் பிள்ளை திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் பாசுரமான ‘குலம் தரும் செல்வம் தந்திடும்’ என்ற இடத்தில் குலம் தரும் என்பதற்கு வியாக்கியானம் எழுதும் போது, நாராயண நாமம் ஒருவருடைய பண்டைக் குலம் எதுவாய் இருந்தாலும் அதை நீக்கித் தொண்டக் குலம் ஆக்கிவிடும்; ஆயினும் வழிவழியாக வருகின்ற திருமண உறவுகள் உலகியல் ரீதியில் அமைந்தாலும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பழகிக் கொள்வது தொண்டக் குலத்தின் ஞானப் பெருமையின் அடிப்படையாகப் பழக வேண்டுமே அன்றி அவர்களுடைய உலக ரீதியான பிறப்பின் அடிப்படையில் அன்று என்று தத்வார்த்தம் சார்ந்த உலக நடைமுறைக்கு ஒரு தெளிவான விளக்கம் தருகிறார் பெரியவாச்சான் பிள்ளை. அந்தப் பகுதியை அப்படியே தமது ரஹஸ்யத்ரய ஸாரத்தில் வேதாந்த தேசிகர், ‘ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரம்’ என்னும் பகுதியில் எடுத்துக் காட்டுகிறார். ‘குலந்தரும் என்னும் பாட்டுக்கு வ்யாக்யானம் பண்ணின அபியுக்தரும்’ என்று தொடங்கி, ‘ச்லாகை குணநிபந்தனம் என்று (அபியுக்தரும்) நிஷ்கர்ஷித்தார்கள்’ என்று மேற்கோள் காட்டுகிறார். ச்லாகை என்பது ஞானப் பெருமை அடிப்படையாக ஒருவரைச் சிறப்புற நடத்துவதும் கொண்டாடுவதும் ஆகும். நிஷ்கர்ஷித்தல் என்றால் பல அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஆய்ந்து அறுதியாக முடிவு கூறுதல் என்பது பொருள். தமக்கு ஏழு ஆண்டுகள் முன்னம் இருந்த ஆசாரியரை, அவருடைய தத்வார்த்தமான சமுதாயக் கருத்தியல் தீர்மானங்களை அவ்வண்ணமே உள்வாங்கிப் போற்றியுரைக்கும் பாங்கைக் கவனிக்க வேண்டும். 

விசிஷ்டாத்வைத தத்வத்திற்கும், ஸ்ரீராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யத்திற்கும் விளக்கமாகவும், அரணாகவும் பல நூல்களை இயற்றியவர் வேதாந்த தேசிகர். இதை அவருக்குப் பின்வந்த ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் எப்படிக் கருத்தில் கொண்டு அவருடைய தத்வார்த்த விளக்கங்களை மேற்கோளாக எடுத்து ஆள்கிறார் என்பதற்கு ஓர் உதாரணம் காட்டுகிறேன். ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ப்ரதாநப்ரதிதந்த்ர அதிகாரத்தில் உலகப் பொருட்களை உள்நின்று தாங்குபவனும் கடவுள்தான்; அதேநேரம் உள்நின்று தன் சங்கல்பத்தால் அவற்றின் இயக்கத்தைத் தாங்குபவன், செலுத்துபவனும் கடவுள்தான். உலகப் பொருட்களின் உள்நின்று தான் உண்மையால் அந்தப் பொருட்கள் உளதாம்படித் தன் இயல்பினாலேயே தாங்கி நிற்கவும் செய்கிறான். அதேநேரம் அவற்றின் இயக்கத்தையும், இருப்பையும் தன் சங்கல்பத்தாலும் நியமித்து நடத்துகிறான் - என்று இத்தகைய விளக்கத்தைத் தந்திருக்கிறார் வேதாந்த தேசிகர். அதற்கு உதாரணமாக அவர் காட்டுவது தூக்கத்தில் சலனம் இல்லை. நனவு நிலையில்லை. ஆனால் அப்பொழுதும் உயிர்கள் கடவுளால் தாங்கப்படுகின்றன. கடவுள் உள் இருக்கிறார் என்ற அவர் ஸ்வரூபத்தைச் சார்ந்துதான் உயிர்களின் இருப்பும் இயல்கிறது. இந்தச் சார்பு நிலையை ஸ்வரூபத்தைச் சார்ந்த இயல்பு இருப்பு நிலை என்று சொல்லலாம். அதாவது ஸ்வரூப ஆச்ரிதம். உயிர்களின் இந்தச் சார்பு நிலைக்கு ஆதேயத்வம் என்று பெயர். அதுவே விழிப்பு நிலையில் உயிர்களின் இயக்கத்தை உள்நின்று கடவுள் தன் சங்கல்பத்தால் நியமிக்கிறான். அப்பொழுது உயிர்களின் சார்பு நிலை ஸங்கல்ப ஆச்ரிதம். உயிர்களின் இந்தச் சார்பு நிலையிக்குப் பெயர் நியாம்யத்வம் (நியமிக்கப்படுவதாயிருக்கை). இந்த விளக்கத்தை வேதாந்த தேசிகர் அந்தப் பகுதியில் தருகிறார். 

பிள்ளை உலகாரியர் அருளிய 18 ரஹஸ்ய நூல்களுள் தத்வ த்ரயம் என்பது ஒன்று. அதற்கு வியாக்கியானம் எழுதிய மணவாள மாமுனிகள் அதில் சித் ப்ரகரணத்தில் 39 ஆவது சூர்ணையான 

“தார்யமாகை ஆவது அவனுடைய ஸ்வரூப ஸங்கல்பங்களை ஒழிந்தபோது தன்ஸத்தை இல்லையாம்படி இருக்கை.” 

என்பதற்கு வியாக்கியானம் எழுதும் போது ரஹஸ்யத்ரய ஸாரத்தில் வேதாந்த தேசிகர் ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரத்தில் அளித்த விளக்கத்தை மேற்கோள் காட்டும் போது மணவாள மாமுனிகள் எழுதுவது - தார்யவஸ்துக்களை ஸ்வரூப ஸங்கல்பம் இரண்டாலும் தரிக்கும் என்னுமிடம் அபியுக்தராலே விஸ்தரேண ப்ரதிபாதிக்கப்பட்டது.”, ”என்று இப்படி ரஹஸ்யத்ரய ஸாரத்திலே ப்ரதிபாதிக்கையாலே”. 

ஆனால் 1766 கி பி யில் வரும் ஸ்ரீஅண்ணா அப்பங்கார் தமது பழநடை விளக்கம் என்னும் நூலில் பெரியவாச்சான் பிள்ளையை வேதாந்த தேசிகர் சந்தித்தார் என்று எழுதுகிறார். பெரியவாச்சான் பிள்ளையின் உபதேசத்தால் வேதாந்த தேசிகர் கொண்டிருந்த சில மாறான கருத்துகளில் திருத்தம் பெற்றார் என்றும் எழுதுகிறார். ஏழு வருஷங்கள் முன்னர் இருந்தவரை ஏழு வருஷங்களுக்குப் பின்னர்த் தோன்றியவர் சந்தித்து விமரிசனமும் விளக்கமும் நடந்தன என்பதைப் போன்ற கால மயக்கமான விவரணைகள் எழுந்ததன் காரணம் அந்தக் காலச் சூழ்நிலையின் விமரிசனப் பதில் விமரிசன இயல்பைக் காட்டும் போலும். 

இதன் முதல் பகுதியைப் படிக்க இங்கே - முன் பதிவு

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, February 12, 2025

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் - நடைமுறை வாழ்க்கையில்

ஒரு பெரும் கம்பெனி. அதன் உற்பத்தி, விரிவு, செயல்திறன் எல்லாம் சேர்ந்து பெரும் கிளைகள் கொண்ட, இயக்கம் மிகுந்த அமைப்பு. இதை நினைத்துப் பாருங்கள். என்ன இது! ரஹஸ்யத்ரய ஸாரம் என்று தலைப்பு போட்டுவிட்டு கம்பெனி, அது இது என்று யோசிக்காதீர்கள். அந்தக் கம்பெனியில் எதிர்கால சாதனையை நோக்கிய தர்சன ஊக்கம் ஒன்றை ஒரு பிரிவோ அல்லது ஒருவரோ வெகு மும்முரமாகக் காட்சிப் படுத்திக் கொண்டேயிருப்பார். அந்தத் தர்சன ஊக்கம் என்பதை மும்முரமாகத் திட்டமிடும் தலைவருக்கு இன்றைய யதார்த்தம் என்பதை விட இனிவருங்காலம் எப்படி அமைய வேண்டும், என்ன சாதிக்க வேண்டும், இன்றைய செயல்பாடுகள் எதை நோக்கிப் போக வேண்டும், கடந்தகால கம்பெனி வரலாற்றிலிருந்து என்ன கற்றுக் கொள்ள வேண்டும், இதைத்தான் அவர் முக்கியமாகக் கருதுவார். அதே கம்பெனியில் இன்னும் ஒரு பிரிவில் எஸ்டாப்ளிஷ்மெண்ட், முதலீடு, செல்வம், இருப்புத் தொகை, அன்றாடம் என்பதை எப்படிக் கட்டி மேய்ப்பது, இன்றைய கட்டாந்தரையான யதார்த்தம் என்ன, எந்த அளவுக்கு கம்பெனி துணிந்து புதுமையில் நுழையலாம், பழைய பாடங்கள் என்ன, கம்பெனிக்கு என்று இருக்கும் எழுதப்பட்ட, எழுதப்படாத விதிகள், சட்டங்களின் சூழல் இவை தரும் அவகாசமும், புழக்க வெளியும் என்ன, என்று இவையெல்லாம் பற்றிய கவலையோடு ஒரு தலைவர், ஒரு பிரிவு. அதே பெரிய வளாகத்தில் தங்களுடைய கண்ணோட்டத்தை ஆணித்தரமாக வாதித்தவாறு வளைய வந்துகொண்டிருப்பார். இந்த இருவரில் யார் முக்கியம்? நிச்சயம் கம்பெனிகளின் பழகிய பலரும் நம்மால் சொல்ல முடியும். இரண்டு பேரும். ஒவ்வொரு விதத்தில். ஒருவர் முன்னே எடுத்துச் செல்கிறார். ஒருவர் இருக்கின்ற நிலையில் நிலைகுலையாமல் ஸ்திரப்படுத்துகிறார்.

இந்த உதாரணம்தான் எனக்குத் தோன்றியது ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனாரின் ஆசார்ய ஹ்ருதயம் என்ற நூலின் வழியே ஸ்ரீவைஷ்ணவத்தைப் புரிந்துகொண்ட எனக்கு, முதன்முதலில் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர் இயற்றிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்ற நூலைப் படித்த பொழுது. மகாத்மா காந்திஜிக்கு conscience-keeper என்று ராஜாஜி அவர்களைச் சொல்வார்கள். அதாவது சிறிதும் தயக்கமின்றி, துணிந்து தாம் என்ன நினைக்கிறோம் என்பதை, காந்தியின் கருத்துகளைக் குறித்தே காந்தியிடமே வெளிப்படையாக விவாதிக்கும் தன்மை உடையவராய் இருந்தார், அதனாலேயே காந்தி அவரைத் தமக்கு முக்கியமானவராகக் கருதினார் என்பதை இந்த கான்ஷியன்ஸ் கீப்பர் என்ற சொலவு குறிக்கிறது என்று நினைக்கிறேன். அரசியல் உதாரணத்தைக் காட்டுவதா என்று நீங்கள் தயங்கவில்லை என்றால் எனக்குத் தோன்றுவது ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆகட்டும், ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஆகட்டும் இருவருமே ஸ்ரீவைஷ்ணவத்தின் இருபெரும் கான்ஷியன்ஸ் கீப்பராகத்தான் தோன்றுகிறார்கள். அதாவது இருவரிடமும் உள்ள ஓர் ஒற்றுமை வெளிப்படையாக உடைத்துச் சொல்லும் அபாரமான துணிச்சல், தாம் ஏன் சொல்கிறோம் என்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் வாதங்கள். எனக்கு இருவரும் இன்றியமையாதவர்கள். ஏன் இனி வருங்காலத்தில் இத்தகைய மாபெரும் மனிதர்களை நாம் சந்திக்க முடியுமா தெரியவில்லை. நமக்கு இருவரில் ஒருவரிடம் சாய்வு இருக்கலாம். ஒருவர் சொல்லும் கருத்தில் நமக்கு உடன்பாடின்றி விவாதம் எழலாம். ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள் இருவரும் 700, 800 ஆண்டுகளுக்கு முன்னர்!

ஒருவர் பிரபத்தி நெறி பாகுபாடுகள், உயர்வு தாழ்வு, அந்தஸ்து, ஆண்பெண் பேதம், இல்லறம் துறவறம் வேறுபாடு எதுவும் கணக்கில்லை, அனைவருக்கும் உரியது, அதுவே நம்மாழ்வார் வழி நின்ற அனைத்து ஆசாரியர்களின் ஹ்ருதயம் என்று கூறுகிறார். அவர் ஆசார்ய ஹ்ருதயம் எழுதிய ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார். என்னைக் கவர்ந்தவர்.

மற்றவர் சாத்திரம், நியமம் என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை. பிரபன்னர்களுக்கும் சாத்திர நியமங்களின் வழி நின்று சரணாகத நெறியில் தொடர்வதுதான் சரியானது என்று கொள்கையுடைய ஸ்ரீவேதாந்த தேசிகர். விசிஷ்டாத்வைத தத்வத்தை விளக்கிப் பல நூல்கள் இயற்றியவர். மணவாள மாமுனிகள் இவர் இயற்றிய ரஹஸ்யத்ரய ஸாரத்திலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டி அபியுக்தரால் இவ்வாறு விஸ்தரேண பிரதிபாதிக்கப்பட்டது என்று கூறுகிறார். என்ன இடம் என்றால் உலகில் அனைத்துப் பொருட்களையும் கடவுள் உள் கலந்து உண்மையாகிய இயல்பால் மட்டுமே தாங்குகிறாரா அல்லது சங்கல்பத்தாலும் தாங்குகிறாரா என்பதற்கு விளக்கமாக வேதாந்த தேசிகர் காட்டிய விளக்கத்தை எடுத்துக் காட்டுகிறார். அதைப் போல் பெரிய திருமொழியில் நாராயண நாமம் குலம் தரும் என்று பாடியதற்கு விளக்கத்தை பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஒரு பகுதியை எடுத்துக் காட்டி ‘என்று அபியுக்தர் நிஷ்கர்ஷித்தார் (அறுதியாக நிலைநாட்டினார்)’ என்று கூறுகிறார் வேதாந்த தேசிகர். 

கல்லூரி வகுப்பு என்று கருதிப் பார்த்தால் வேதாந்த தேசிகரின் வகுப்பை இழக்க விரும்ப மாட்டேன். ஆனால் அவரோடு மாறுபட்டு சதா வாக்கு வாதம்தான். அதுவே ஆசார்ய ஹ்ருதயம் என்பது நான் பிரமிப்பது. பேச்சு வராது. அவர் வாதம் செய்தாலும் வியப்புதான். ஆனால் வேதாந்த தேசிகர் என்னும் பேராசிரியரோடு நான் கேள்வி மேல் கேள்வி கேட்டு உரையாட முடியும். அவர் நான் கேட்கும் கேள்விக்கு மேல் ஆயிரம் மடங்கு கேள்விகளை எழுப்பி விடையும் சொல்லக் கூடியவர். அதில் எனக்கு அவரிடம் வியப்பு.

இருவரையும் சரியாகப் புரிந்து கொள்வதில்தான் இனிவருங்காலத்து வைணவம் பலன் பெறும் என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு யதார்த்தம் பாரதி காலத்திலிருந்தே கூட. என்னதான் ஆசார்ய ஹ்ருதயம் என்றாலும் எல்லாரும் புழக்கத்தில் பின்பற்றுவது ரஹஸ்யத்ரய ஸாரத்தைத்தான் என்று தோன்றுகிறது. ஒன்றுமில்லை. ரஹஸ்யத்ரய ஸாரத்திற்கு ஐந்து வியாக்கியானங்கள் உண்டு, சாக்ஷாத் ஸ்வாமி எழுதிய உரை இன்னும் சில உரைகள். விரிவான உரை ஸ்ரீஸாரபோதிநீ (அழகியசிங்கர் 42ஆம் பட்டம்). அதில் நினைவு தோயவே ஒரு சிந்தனை.

(தொடரும்)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***