Tuesday, December 30, 2025

தசச்லோகீ - பத்துப் பாக்களில் மொத்த அத்வைதம்

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதரின் அத்வைத சித்தாந்தத்தையே பத்துச் சுலோகங்களில் அடக்கி உரைக்கும் அற்புதமான பிரகரண நூல் (தத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவிநூல்) தசச்லோகீ என்பது. இந்த நூல் தோன்றிய பின்னணியும் சுவாரஸ்யமானது. 

காலடியில் துறவறம் மேற்கொண்ட பின்னர்ச் சங்கரர் தம் குருவைத் தேடிப் போய் நர்மதா நதி தீரத்தில் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த கோவிந்தபகவத்பாதரை அண்டி அவரைத் துதித்த போது கண்விழித்த குரு கேட்கிறார்: ‘நீர் யார்?’. அதற்குத் தான் யார் என்று சுயத்தெரிவிப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் சங்கரர் தாம் யார் என்று சொல்ல முனையும் போது விளையும் பதிலாக எழுந்தது இந்த ‘தசச்லோகீ’ என்பது. தசச்லோகீ என்றால் பத்துச் சுலோகங்கள், பத்துச் செய்யுட்கள் என்று பொருள். 

இந்தச் சுலோகம் எத்துணை முக்கியம் என்பது இதற்கு மட்டும் எழுந்த வியாக்கியானங்களை நோக்கினாலே புரியவரும். ஸ்ரீமதுசூதன ஸரஸ்வதி என்னும் பெரும் அத்வைத ஞானியார் (17ஆம் நூற்) இதற்குச் ‘சித்தாந்த பிந்து’ என்று ஒரு பேருரையே செய்திருக்கிறார். அதவைத சித்தி, வேதாந்த கல்பலதிகா, ஸ்ரீபாகவதத்திற்கு ஓர் உரை, வோபதேவரின் ஹரிலீலா என்பதற்கு ஓர் உரை, சங்க்ஷேப சாரீரக வியாக்கியானம், கீதைக்குக் கூடார்த்த தீபிகை என்னும் வியாக்கியானம், சிவமஹிம்ன ஸ்தோத்திரத்திற்குச் சிவவிஷ்ணுபர டீகை, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய ஆனந்தமந்தாகினி என்னும் ஸ்தோத்திரம், பிரஸ்தான பேதம் என்று ஆதார நூல்களைப் பற்றிய நூல், பக்தி சம்பந்தமாகப் பக்தி ரஸாயனம் போன்ற நூல்களையும் எழுதியவர் இந்த மகான் ஸ்ரீமதுசூதன ஸரஸ்வதியே ஆவார். இவர் எழுதிய தசச்லோகீ என்பதற்கான உரைதான் சித்தாந்த பிந்து. இந்தச் சித்தாந்த பிந்து என்பதற்கே ஓர் உரை அதாவது உரைக் குறிப்பு என்னும் டீகா ஒன்றை எழுதியுள்ளார் ஸ்ரீபிரஹ்மானந்த ஸரஸ்வதி என்பவர். அவர் எழுதிய டீகாவிற்கு ந்யாயரத்னாவளி என்று பெயர். எனவே பத்துச் செய்யுட்களும் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர முடியும். 

உபநிஷதங்களில் முழுதத்துவ நிலைப்பாட்டையுமே ஒற்றை வரியில் அல்லது ஒரு சொற்கோவையில் சொல்லிவிடும் இடங்கள் உண்டு. அத்தகைய வரிகளை அல்லது சொற்கோவைகளை ஞானியர் ‘மஹாவாக்கியங்கள்’ என்று உரைப்பார்கள். ‘தத்வமஸி’, ‘அயம் ஆத்மா ப்ரஹ்ம’, ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’, ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’, ‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம’ போன்றவை அவையாகும். இவற்றில் ‘தத்வமஸி’ என்னும் மஹாவாக்கியம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நேரடியாக நம்மைப் பார்த்து நமக்கும் பரம தத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்பதை உடைத்துச் சொல்லும் வாக்கியம் இது. ‘தத்’ என்பது அந்தப் பரம தத்துவத்தைக் குறிக்கும். ‘த்வம்’ என்றால் நீ என்று நம் ஒவ்வொருவரையும் முன்னிலைப் படுத்திச் சொல்லும். ‘அஸி’ என்றால் இருக்கின்றாய் என்ற பொருளில் ஜீவனாகிய நாம் உண்மையில் என்னவாக இருக்கின்றோம் என்று நமக்கு விழிப்பை ஊட்டுவது இந்த வாக்கியம். ‘இந்தத் ‘தத்வமஸி’ என்னும் சொல் அல்லது சொற்கோவையின் பொருளை உள்ளபடிப் புரிந்துகொண்டாலே போதும் முக்திக்கான கல்வி நம் கைபுகுந்தது என்று சொல்லலாகும். 

இந்தத் தத்வமஸி என்னும் மஹாவாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கான உள்மறைப் பொருள் என்ன என்பதைப் பத்து சுலோகங்களில் முதல் மூன்று சுலோகங்களால் விளக்குகிறார் தசச்லோகீயில் ஸ்ரீஆதிசங்கரர். அடுத்து வரும் சுலோகங்கள் எல்லாம் தத் என்னும் பரம தத்துவமாகிய பரம்பொருள் என்ன என்பதைப் பற்றிய விவரம். இவ்வாறு பெரும் வேதாந்த விரிவையே உள்ளடக்கிய தத்வமஸி என்பதன் விளக்கமாக அமைந்த தசச்லோகீ என்னும் நூலிற்குப் பேருரைகள் எழுந்ததில் என்ன வியப்பு? 

தமது சித்தாந்த பிந்து என்ற உரையின் தொடக்கத்தில் ஸ்ரீமதுசூதன ஸரஸ்வதி கூறுகிறார்: “உலகில் ஜீவர்கள் தாமாகவே நேரடியாக விசாரத்தில் ஈடுபட்டோ அல்லது அறிந்தோர் மூலம் கேட்டறிந்தோ உலகியல் சுழற்சியினின்றும் விடுபட்டு உயர்வதற்கு ஆன வழியை பகவானான ஸ்ரீசங்கரர் ஆதமா அல்லாதவற்றைப் பிரித்தறிந்து ஆத்மாவின் உண்மைத் தன்மையாகிய நித்தியமானதும், சுத்தமானதும், புத்தமானதும், முக்தமானதுமான இயல்பை உணர்ந்து உய்வதற்காகச் சுருக்கமாக இந்தத் தசச்லோகீயை அருளினார்” என்று கூறுகிறார். 

(இஹ கலு சாக்ஷாத் பரம்பரயா வா ஸர்வான் ஜீவான் ஸமுத்திதீர்ஷு: பகவான் ஸ்ரீசங்கரோSநாத்மப்யோ விவேகேந ஆத்மானம் நித்யசுத்தபுத்தமுக்த ஸ்வபாவம் ஸங்க்ஷேபேண போதயிதும் தசச்லோகீம் ப்ரணிநாய) 

(ப்ரஹ்மானந்த ஸரஸ்வதியின் குறிப்பு: 

நித்யம் - காலத்தால் வரையறுக்கப்படாதது 

சுத்தம் - விருப்பு வெறுப்பு முதலிய அசுத்திகள் அற்றது 

புத்தம் - தன் உள்ளார்ந்த ப்ரகாசத்தில் ஆனந்தமாய் இருப்பது 

முக்தம் - அவித்யை உருவான பந்தங்கள் அற்றது )

தமிழாக்கம்:  

நிலமல்ல நீரல்ல நெருப்பல்ல காற்றுமல்ல 

வானல்ல புலனல்ல பொறிக்கூட்டம் அவையுமல்ல 

ஒருநிலையில் நில்லாத அவையெல்லாம் ஓய்ந்திட்ட 

ஆழ்துயிலில் மிஞ்சி நிற்கும் ஒன்றான சிவம் மட்டுமே நான். 

 

வர்ணங்கள் இல்லை எனக்கோ வர்ணாச்ரம தர்மங்கள் இல்லை 

மனம் குவிக்கும் தாரணை தியான யோகங்கள் இல்லை 

நானென்ற ஒட்டும் எனதென்று பற்றும் ஆத்மா அலாதவற்றில்  

அதயாஸம் அழிந்திட்ட படியால் அவையற்று மிஞ்சும் 

ஒன்றாகி நிற்கின்ற சிவம் மட்டுமே நான். 

 

தாயென்றும் தகப்பன் என்றும் தேவர்கள் மற்றும் லோகங்கள் என்றும் 

வேதங்கள் என்றும் வேள்விகள் தீர்த்தங்கள் என்றும் ஆழ்துயில் நிலையில் 

சொல்வதுமில்லை அந்நிலை சூனியமும் இல்லை ஆத்மாவின் உண்மையில் 

எல்லாம் அடங்கி எஞசிடும் ஒன்றான சிவம் மட்டுமே நான். 

 

 சாங்கியர் சொல்லும் படியன்று அதுவோ சைவரொடு  

பாஞ்சராத்திரியர் ஜைனர் மீமாம்சைக் கருத்தினரும் சொல்லுவதுமன்று 

சீர்மைமிகு அனுபூதிநிலையில் தூயதன் ஆத்ம நிலையாகி மிஞ்சி 

ஒன்றென்று நிற்கின்ற சிவம் மட்டுமே நான். 

 

மேலன்று கீழன்று உள்ளன்று வெளியன்று 

நடுவன்று அயலன்று திசையாய் முன்னன்று பின்னன்று 

விரிந்த வெளியெங்கும் வியாபித் தொருபடித்தாய் வரையற்று 

மிஞ்சுகின்ற அதுவாகி ஒன்றான சிவம் மட்டுமே நான். 

 

 வெளுப்பன்று கருப்பன்று சிவப்பன்று மஞ்சளன்று 

சிறிதன்று பெரிதன்று குறுக்கன்று நீளமன்று அதுவோ 

சோதிமயமாகி எங்கும் உருவற்ற ஒன்றாய் 

மிஞ்சி நிற்கின்ற அதுவான சிவம் மட்டுமே நான். 

 

 புகட்டுவோன் இல்லை புகலும் சாத்திரம் இல்லை 

சீடனுமில்லை மற்றும் புகட்டலும் இல்லை 

நீ என்பதும் இல்லை நான் என்பதும் இல்லை 

அயல்நின்ற பிரபஞ்சமும் இல்லை வேறுபடுத்துமெதுவும் 

இயலாததாகி இயலும் சொந்த இயல்பான ஞானமே மிஞ்சும் 

அதுவாகி நிற்கின்ற சிவம் மட்டுமே நான். 

 

விழிப்புநிலை இல்லை கனவொடு ஆழ்துயில் நிலையுமில்லை 

விழிப்பவன் கனவோன் துயிலன் என்றெதுவும் இல்லை 

மூநிலையும் அவித்தையின் மயமாயிருப்பதால் அவைகடந்த துரியமாய் 

மிஞ்சுகின்ற ஒன்றான சிவம் மட்டுமே நான் 

 

வியாபித்து எங்கும் இருப்பதனாலும் இதமாகி என்றும் இயல்வதனாலும் 

தன்னில் தான் என்றும் நிலைப்பதனாலும் தன்னின் வேறெதுவும் வேண்டாததாலும் 

தனக்கயலாய் உலகமெல்லாம் வெறும் தோற்றம் ஆனதாலும் 

தானாக மிஞ்சித் தன்னில் நிற்கின்ற சிவம் மட்டுமே நான். 

 

ஒன்றானதும் அன்று அதுதனக்கு வேறாய் இரண்டாவது எவ்வாறு? 

தனித்திருப்பதும் அன்று தானாய்த் தனிமைப்படாததும் அன்று 

ஒன்றலாத சூனியமன்று சூனியமலாத ஒன்றும் அன்று 

இரண்டற்ற ஒன்றாய் அதவைதமாகி வேதாந்த சாரமாகி 

விளங்குகின்ற ஒன்றையே எவ்வண்ணம் விரித்துரைப்பேன்? 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

 

No comments:

Post a Comment