Tuesday, December 1, 2020

ஆங்கிலம் குறித்த ஸ்நாபரி !

 மொழி ரீதியிலான ஸ்நாபரி - காட்டிக்கொள்ளும் பாவனை - சிலது இங்கிலீஷ் சம்பந்தமாக நம்மிடையே உலவி வருவதுண்டு. மிகவும் படித்தவர்கள் கூட இந்த மாதிரியான பாவனைகளை இசைந்து கொள்கின்றனர். இந்தியர்கள் பேசும் இங்கிலீஷ் - இது என்ன மாதிரியான பாவனை? இங்கிலீஷ் என்பது ஒரு மொழி. அதைப் பிறந்தது முதல் பேசிப் பழகும் சமுதாயம் ஒரு விதத்தில் பேசும். கற்றுக் கொண்டு பேசுவோரின் பேச்சில் சில மாற்றங்கள் தெரியும். அது இங்கிலீஷுக்கு மட்டுமன்று. எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அப்படித்தான். தமிழை நாம் பேசுவது போல் பிற நாட்டுக்காரர் பேச முடியாது. அது போலத்தான் ஹிந்தி, மற்ற மொழிகளும். நேடிவ் ஸ்பீக்கர் போல் பேச வேண்டும் என்பது ஏதோ கற்கும் பொழுது ஓரளவிற்கு இருக்கலாமே அன்றி என்னமோ மஹா விதிபோல், அதுவும் இங்கிலீஷ் சம்பந்தமாக இன்னும் அதிகம், பாவனை காட்டப் படுவது சும்மாவேனும் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின் மீது உயர்பாவனை கொள்ளத்தான் பயன்படுகிறதோ என்று தோன்றுகிறது. உடனே மொழியை யார் வேண்டுமானாலும் இஷ்டத்திற்கு மனம் போன போக்கில் பேசலாமா? என்று கோபப் படாதீர்கள். நான் சொல்ல வருவது நன்கு கற்பதில் எந்த சுணக்கத்தையும் நானும் விரும்பாதவன். ஆனால் இப்படிப் பேசினால் ஃபாரினர்ஸ் கேலி செய்வார்கள்; அவர்களுக்கு வினோதமாக இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு நாம் பேசுவது யூகிக்க வேண்டியதாய் இருக்கக் கூடாது என்பது போன்ற, அளவிற்கு மீறிய ஜப்ருதஸ்துகளைச் சொல்கிறேன். அவர்கள் வந்து இங்கு நம் மொழி எதையேனும் அப்படியே நேடிவ் ஸ்பீக்கர் போல் பேசி விடுகிறார்களா? நாம் ஓரளவு யூகத்துடன் அவர்கள் பேசுவதைக் கேட்டு பதில் அளிப்பதில்லையா? நாங்கள் பேசும் அளவுக்கு இல்லை. ஸோ.. என்று தோளைக் குலுக்கிக்கொண்டு போகிறோமா? அப்பொழுது நாம் புரிந்துகொண்டு நடக்கிறோம் என்றால் அவர்களும் அவ்வாறு நடக்கத் தடையென்ன? என்ன கடைசியில் எல்லாம் எதில் வந்து முடியும்? நீ உனக்கு வேண்டும் என்றுதானே ஃபாரின் போகிறாய்? எனவே அவர்களுக்கு ஏற்றால் போலத்தான் நீ நடக்க வேண்டும். அவர்களுக்கு இங்கே வரவேண்டும் என்ற தேவையில்லையே என்று பொருளாதாரத்தில் வந்து முடியும். அதை நேரடியாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவதுதானே? ஏன் சுத்தி வளைத்து மொழிசார் ஒழுகுமுறை போல் பேச வேண்டும்.


அங்கு போய் வருபவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். ஆனால் இந்தியாவில் பேசுபவர்கள் நன்கு இலக்கண சுத்தமாகப் பேசினால், இது ரொம்ப செயற்கை, அங்கே இருப்பவர்கள் இப்படிப் பேசுவதைக் கேட்டால் சிரிப்பார்கள் என வேண்டியது. சரி இங்கு உள்ள கலோக்கியல் ரீதியாகப் பேசினால் ஐயய்யோ இதெல்லாம் அங்கு ஒன்றும் அர்த்தமே ஆகாது என வேண்டியது. அவ்வாறில்லாமல் சரியாகப் பேசினால் அது கொஞ்சம் அக்சண்ட் இருக்கு. அங்க உடனே கண்டு பிடிச்சுருவாங்க. ‘நீங்க இந்தியாலேந்தான்னு’. ஏன் கண்டு பிடிச்சா என்ன? நீ முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே? நீ ஏன் அவனை மாதிரி காட்டிக்கணும்னு நினைக்கிற? ஆனால் அங்கு பேசுபவர்கள் பேசுவதைக் கேட்டால் இலக்கணமும் கிடையாது. இஷ்டத்துக்குக் கொச்சை ஆக்க வேண்டியது. அமெரிக்கன் இங்கிலீஷை இங்கிலாந்து ஒப்புக்கொள்ளுமா? ஒருத்தர் ‘கீப் சைலன்ஸ்’ என்று சொல்வது மகா குற்றம் என்று ஆர்க்யூ பண்ணார். சரி இது இந்திய ஆங்கிலம். அங்க மட்டும் என்ன வாழுதாம். இஷ்டத்துக்கு பிரயோகங்களை மாற்ற வேண்டியது, ஸ்பெல்லிங் மாற்ற வேண்டியது. கேட்டா இது இங்கத்தி இங்கிலீஷ் என்று சொல்ல வேண்டியது. அதேமாதிரிதான் இது இங்கத்தி இங்கிலீஷ் - இந்திய இங்கிலீஷ். அதை நீ கற்றுக்கொள். ஒரே இங்கிலீஷ் என்னும் நாட்டாமை மாறி உலகெங்கும் பல இங்கிலீஷ்கள் உண்டு என்று அகராதிக்காரனே புத்தகம் போட்றான். 


இந்தியாவில் இங்கிலீஷ் பேசறவங்க, முழுமையாக, அரைகுறையா, பேசலைன்னாலும் புரியும் என்ற ரகம், சமாளிக்கற அளவுக்கு ஏதோ தெரியும் - இப்படி ஆங்கிலம் பரிச்சயம் உள்ளவர்கள் என்ற மொத்த கணக்கு என்பது இங்கிலீஷ் பேசும் கண்டங்களில் (இங்கிலாந்து, அமெரிக்கா, ந்யூஸிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா) உள்ள மொத்த மக்களின் தொகையை விட அதிகம் என்று முன்னால் ஒரு பேப்பர் யாரோ எழுதியிருந்தாங்க. இந்திய ஆங்கிலத்துக்கு ஒன்றும் ஹி ஹி என்று அசடு வழிய வேண்டிய தேவையே இல்லை. அவர்கள் அவர்களுடைய இங்கிலீஷைப் பேச என்ன நியாயம் இருக்கோ அதைவிட இந்திய ஆங்கிலத்துக்கு அதிகமாகவே நியாயம் உண்டு. ஆங்கிலேயர்கள் சாஸர், மில்டன், ஷேக்ஸ்பியர், கீட்ஸ், ஷெல்லி, கோல்ட்ஸ்மித் என்று இறக்குமதி செய்தார்கள். அவர்களுடைய இங்கிலீஷையே நமது ஆட்கள் வாங்கி இந்தியன் இங்கிலீஷாக மாற்றி அவர்கள் போகும் போது, கேசவ் சந்திர சேன், சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீரவீந்திரநாத் தாகூர், ஜே கிருஷ்ணமூர்த்தி, சுவாமி சின்மயானந்தார், ஓஷோ என்று அவர்களையே நிதமும் படிக்க வைத்து விட்டார்கள்.

No comments:

Post a Comment