Saturday, October 24, 2020

ஓம் ஹ்ரீம் ருதம் - ஸ்ரீராமக்ருஷ்ண ஸ்தோத்ரம் - சுவாமி விவேகாநந்தர்

 (சுவாமி விவேகாநந்தர் அருளிய ஓம் ஹ்ரீம் ருதம் என்னும் ஸ்ரீராமக்ருஷ்ண ஸ்தோத்ரம் முழுமையும் பொருள், குறிப்புகளுடன் - ஸ்ரீரங்கம் மோகனரங்கன்)

பக்தி உலகில் சில ஸ்தோத்திரங்கள் தாமே இயல்பாக மந்த்ரங்களாக அமைந்துவிடுவதும் உண்டு. பாடியவரின் ஆத்ம சக்தியும், தியானத்தின் பூர்ணதையும், தெய்வத்தின் கனிந்த பிரஸன்னமும் ஒரு சொல்லை மந்திரமாக ஆக்குகிறது. அந்த விதத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களின் உலகில் ஒரு ஸ்தோத்திரம் துதியாகவும் அதேநேரம் மந்திரமாகவும் கருதப்படுவது சம்ஸ்க்ருதத்தில் அமைந்த ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் என்னும் ஓம் ஹ்ரீம் ருதம் ஸ்தோத்ரமாகும். இதை அருளிச் செய்தவர் சுவாமி விவேகாநந்தர் ஆவார்.
இந்த ஸ்தோத்திரத்தில் சப்தாலங்காரம் ஒன்று அமைந்துள்ளது. நான்கு சுலோகங்களும் ஒரு கடைசி சுலோகம் நமஸ்கார மந்த்ரம் என்று அறியப்படுகின்றதுமான சுலோகம் சேர்ந்து ஐந்து சுலோகங்களால் ஆகியது இந்த ஸ்தோத்திரம். இதில் கடைசி நமஸ்கார சுலோகத்தைத் தவிர்த்து முதல் நான்கு சுலோகங்களைக் கவனித்தால் ஓர் அழகு புலப்படுகிறது. ஒவ்வொரு சுலோகத்திலும் இருக்கும் நான்கு வரிகளில் முதல் மூன்று வரிகளை மட்டும் கணக்கில் கொள்வோம். ஒவ்வொரு சுலோகத்திலும் வரும் நான்காவது வரி ஒரே வரியாக மடங்கி வரக் கூடியது. ‘எனவே நீரே எனக்குச் சரணம்...’ என்ற ப்ரார்த்தனையை மீட்டும் உரைப்பதாக வருவது. முதல் நான்கு சுலோகங்களிலும் உள்ள முதல் மூன்று மூன்று வரிகளின் முதல் எழுத்துகளை நிரல்பட அமைத்தால் நமக்குக் கிட்டுவதோ ஓம் நமோ பகவதே ராமக்ருஷ்ணாய என்னும் மந்த்ரம் ஆகும். இந்த ஸ்தோத்திரத்தைப் பாடும் பொழுதே ராமக்ருஷ்ண மந்த்ரத்தையும் ஜபிக்கும் விதமாக சுவாமி விவேகாநந்தர் அமைத்திருப்பது பக்தர்களுக்குப் பெரும் பேறு ஆகும்.
*
முதல் சுலோகம் :

ஓம் ஹ்ரீம் ருதம் த்வமசலோ கு3ணஜித் கு3ணேட்3
நக்தம் தி3வம் ஸகருணம் தவ பாத3பத்3மம் | 
மோஹங்கஷம் 3ஹுக்ருதம்  4ஜே யதோSஹம் 
தஸ்மாத்த்வமேவ ரணம் மம தீ3நப3ந்தோ4 || 

அனைத்து வேதங்களின் சாரமான கருத்துகளையும் ஓரெழுத்து ஒரு மொழி ஒன்றில் செம்மி வைக்க வேண்டும் என்றால் அந்த ஓரெழுத்து ஒரு மொழியானது ஓம் என்னும் ப்ரணவமாகும். ஓம் என்னும் எழுத்தாம் சொல்லையே தாது அர்த்தங்கள் என்ற ரீதியில் பொருள்படுத்தினால் அது கிட்டத்தட்ட பத்தொன்பது விதமான அர்த்தங்களைத் தரக் கூடும் என்று வியாகரண சாத்திரம் உரைக்கிறது. அதே போல் அனைத்து ஆகமங்களின் சாரமாகவும் திகழ்வது ‘வித்தாகும் எழுத்து’ என்று பொருள்படும் பீஜாக்ஷரமான ஹ்ரீம் என்பதாகும். வேதம், ஆகமம் என்ற இரண்டின் சாமரஸ்யமே பண்டைக் காலத்தில் சநாதனம் என்றும் இற்றைக் காலத்தில் ஹிந்துமதம் என்றும் போற்றப்படும் மஹத்தான ஆன்மிக நெறியாகும். ஹிந்துமதத்தின் உயிர்க்கருத்தாய் இருப்பது ’பலவழிகளிலும் சென்றடையக் கூடியது ஒரு பெரும் பரம்பொருள்’ என்னும் கருத்தாகும்.

பரம்பொருளைப் பற்றிய உயிரான கருத்து இதுவென்றால், பரம்பொருளை அடையும் வழிகளின் பொதுத்தன்மையின் உயிரான அம்சம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அத்தகைய அடையும் வழிகளைப் பற்றிய உயிரான அம்சமே த்யாகம்தான் என்பது உபநிஷதங்கள் அறுதியிட்டு உரைக்கும் முடிவாகும். உலகியல் என்பதைத் துறக்காமல் பரத்தின் உண்மையை உணர்தல் ஒருகாலும் இயலாது. ‘த்யாகேநைகே அம்ருதத்வமானசு:’ தியாகம் ஒன்றினாலேயே அம்ருதத்துவம் அடையப் படுகிறது. ‘நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ’ என்பார் ஸ்ரீதாயுமானவர்.
எனவே அடையப்படும் பெருநிலையைப் பற்றிய தெளிவையும், அடையும் வழிகளைப் பொறுத்தவரை இன்றியமையாத அம்சத்தையும் ஒருங்கே தம் வாழ்வாலும் வாக்காலும் விளங்கச் செய்த பரமபுருஷர் நம் காலத்தில் வந்த ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸர் ஆவார். ஸ்ரீராமக்ருஷ்ணரின் வாழ்க்கையே வேதம், ஆகமம், புராணம், தந்த்ரம், யோகம் என்ற பலதுறைகளின் சாரமாக அமைந்து திகழ்வது. ‘ஹிந்துமதமே அவருடைய குரு என்ற ஓருருவம் தாங்கி வாழ்ந்தது’ என்னும் பொருள்பட சகோதரி நிவேதிதை உரைக்கின்றார். எனவே முதல் சுலோகத்தின் தொடக்கச் சொற்களே பெரும் உள்ளடக்கமான பெரும் கருத்துகளின் சாரமாக அமைந்திருக்கிறது. ‘ஓம் ஹ்ரீம் ருதம்’ என்று. ‘வேதம் ஆகமம் ஆகியவற்றின் சாமரஸ்யமாகவும், த்யாகம் என்னும் வேதாந்த தர்மத்தின் வடிவாகவும் அமைந்தவர்’ என்பது அந்த மூன்று மந்த்ரச் சொற்களின் பொருளாம்.
அந்த த்யாகம் என்னும் பெரும் தர்மம் மாறுதலற்றது என்பதையே சநாதனம் என்னும் சொல் உரைக்கின்றது என்றால் இங்கோ சுவாமிஜியின் திருவாக்கில் அதே கருத்து அமையும் விதம் அழகு. ‘த்வமசலோ’ ஹிந்துமதத்தின் பேருருவாய் விளங்கும் நீர் கலக்கமற்றவர் என்னும் பொருளில் த்வம் அசல: என்கிறார். கலக்கமும், மாற்றமும், வேறுபாடும் சத்வம், ரஜஸ் தமஸ் என்னும் முக்குணங்களின் தாக்கத்தால் நிகழ்பவை. முக்குணம் கடந்த நிலையில் இருப்பவர் கலக்கமற்றவராக இருக்கிறார். ஆனால் அதேநேரம் அனைத்து உயர்குணங்களும் ஒருங்கே திகழும் ஒருவராயும் இருக்கிறார். அவருடைய குணங்களில் ஈடுபட்டவர்களால் அவர் என்றும் விரும்பப் படுகிறார். குணஜித் குணேட்ய:.
இரவுபகலாக இடையீடின்றி அவருடைய பாதகமலங்கள் ஒரு செயலைச் செய்கின்றன. அதுவும் நிஷ்காரணமான கருணையோடு செய்கின்றன. அது என்னவெனில் மோஹம் என்பதை நீக்கும் பெரும் செயலாம். ஆனால் அதே இரவுபகலாக இடையீடின்றி வணங்க வேண்டிய நானோ ஒன்றைச் செய்கிறேன். என்னவெனில் என்ன என்னவோ பலவேலைகளைச் செய்கிறேன் சம்பந்தமே இல்லாமல், அவருடைய பாதபத்மங்களை வணங்கும் ஒன்றைத் தவிர. இப்படி இருக்கும் எனக்கு என்னதான் வழி? நிர்கதிதானா? இப்படி நான் எதற்கும் பற்றாத தீனனாக, ஆத்மிகத் தகுதியில் கேட்பாரற்று நாதியற்ற வறியனாக ஆகிநிற்கும் எனக்கு என்ன கதி? எனவேதான் எங்கள் தீனபந்து ஆனவரே, திக்கற்றவர்க்கு உற்ற ஒரே புகலே! உம்மையே சரணம் என்று எய்தினோம் ஐயா!
தஸ்மாத் த்வம் ஏவ சரணம் மம தீனபந்தோ !
*
இரண்டாவது சுலோகம் :
4க்திர் 43ஸ்ச் 4ஜநம் 4வபே43காரி
3ச்ச2ந்த்யலம் ஸுவிபுலம் 3மநாய தத்வம் |
வக்த்ரோத்3த்4ருதோSபி ஹ்ருத3யே   பா4தி சிஞ்சித்
தஸ்மாத் த்வமேவ ரணம் மம தீ3நப3ந்தோ4 || 

பவம் என்னும் உலகியல் நோயை நீக்கவேண்டிப் பக்தி என்பதும், ஞான வைராக்கியாதி குணங்களான ஷட்குணங்களும், பஜனம் என்னும் சங்கீர்த்தனம் முதலியவற்றில் ஈடுபடுவதும் எல்லாம் தம்மளவில் பார்த்தால் ஓரொன்றுமே கூட பரதத்வத்தை அடைவதற்குப் போதியதும் பொருத்தமானதுமான சிறந்த வழிகளே ஆகும். ஆனாலும் என்ன, என் விஷயத்திலோவென்னில் எல்லாம் வாய்ப்பேச்சில் விளக்கமாய் இருக்கின்றன. இதயத்திலோ என்றால் ஒரு சிறிதும் ஒளிவிடக் காணேன். எனவேதான் எங்கள் தீனபந்து ஆனவரே, திக்கற்றவர்க்கு உற்ற ஒரே புகலே ! உம்மையே சரணம் என்று எய்தினோம் ஐயா!
*
மூன்றாவது சுலோகம் :

தேஜஸ்தரந்தி தரஸா த்வயி த்ருப்தத்ருஷ்ணா: ராகே3 க்ருதே ருதபதே2 த்வயி ராமக்ருஷ்ணே | மர்த்யாம்ருதம் தவ பத3ம் மரணோர்மி நாம் தஸ்மாத் த்வமேவ ரணம் மம தீ3நப3ந்தோ4 ||

ஞான வைராக்கியாதிகள் இல்லை, பக்தி இல்லை என்போரும் கூட உலகியல் வேகங்களைக் கடந்துவிடுகின்றனர். எப்படியென்றால் உம்மைப் பற்றிப் பேசுவதிலும், நினைப்பதிலும் திருப்தி உற்றவர்களாய், தமது பற்றின் விஷயமாக உம்மை ஆக்கிக் கொண்டு விடுகிறார்கள் ஐயனே ராமக்ருஷ்ண!. உம்மையே தாம் எய்த வேண்டிய சத்ய நிலையாக மட்டுமின்றி, அந்தப் பெருநிலையை அடைவிக்கும் நெறியாகவும் உம்மையே வரித்து விடுகின்றனர். மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு என்று இருக்கும் மனிதர்க்கு மரணமில்லாப் பெருநிலையை அளிக்க வல்லன உமது திருவடிகள். எனவேதான் எங்கள் தீனபந்து ஆனவரே, திக்கற்றவர்க்கு உற்ற ஒரே புகலே ! உம்மையே சரணம் என்று எய்தினோம் ஐயா!
(மரணோர்மி - பிறப்பு முதல் இறப்பு உள்பட ஆறு மாற்றங்களாக, அல்லது பவக்கடலின் ஆறு பெரும் அலைகளாக ஷட் ஊர்மி = ஷடூர்மி என்று சொல்லப்படும். அதில் மரணம் என்னும் ஊர்மியை நீக்கினாலே மற்ற ஊர்மிகள் தம்மிடையே மறையும்)
*
நான்காவது சுலோகம் :
க்ருத்யம் கரோதி கலுஷம் குஹகாந்தகாரி
ஷ்ணாந்தம் சிவம் ஸுவிமலம் தவ நாம நாத2 |
யஸ்மாத3ஹம் த்வரணோ ஜகதே3கக3ம்ய
தஸ்மாத் த்வமேவ ரணம் மம தீ3நப3ந்தோ4 ||
குற்றம் குறை இருந்தாலும் களைந்து நன்மைக்கு ஆக்கிப் பணிகொள்ள வல்லது பகவானின் கருணை. தோஷங்களுக்கெல்லாம் எதிர்தட்டாயது பகவானின் குணம். தன்னளவில் தோஷம் அற்றதாய் இருப்பதோடல்லாமல் தன்னைச் சரணடைந்தார்களின் தோஷங்களையும் நீக்குவது கடவுளின் சிறப்பு. இந்தக் கருத்தை முதல் வரியில் சொல்கிறார் சுவாமி விவேகாநந்தர். குஹக எனப்படும் மாயையை அழிப்பது பகவானின் திருநாமம். ராமக்ருஷ்ண என்னும் நாமம் ஷ்ண என்னும் எழுத்தில் முடிகிறது. ஷ்ண என்னும் எழுத்தில் முடிவதும், மங்களத்தையே நல்குவதும், தோஷங்களுக்கெல்லாம் எதிரானதும் ஆன ராமக்ருஷ்ண என்னும் திருநாமத்தின் சிறப்பை உன்னுங்கால் உவகை பெருக்குவது. நம்மிடம் இருக்கும் தவறுகளையும் திருத்தி நம்மை நன்மைக்கு ஆக்குவது. ‘செயல் நன்றாகவே திருத்திப் பணிகொள்வான்’ என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார் ஸ்ரீமதுரகவியாழ்வார். நானோ புகலிடம் ஏதுமற்றவன். செயல்களோ திருத்தம் இல்லை. அசரணனான எனக்கு என்ன கதி? எனவேதான் எங்கள் தீனபந்து ஆனவரே, திக்கற்றவர்க்கு உற்ற ஒரே புகலே ! உம்மையே சரணம் என்று எய்தினோம் ஐயா!
*
ஐந்தாவது சுலோகம் :
ஓம் ஸ்தா2பகாய 4ர்மஸ்ய ஸர்வத4ர்மஸ்வரூபிணே |
அவதாரவரிஷ்டா2 ராமக்ருஷ்ணாய தே நம : ||
நமஸ்கார மந்த்ரம் என்று அறியப்படும் இந்த சுலோகமானது சுவாமி விவேகாநந்தரால் 1898ல் ஃபெப்ரவரி 6 அன்று ஸ்ரீநவகோபால் கோஷரின் வீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட பூஜையறையின் தொடக்க பூஜையில் பாடப்பட்டது. இது அமைந்தவிதத்தால் ஸ்ரீராமகிருஷ்ண மந்திரமாகக் கருதப்பட்டு அடியார்களால் ஓம் ஹ்ரீம் ருதம் என்ற ஸ்தோத்திரத்துடன் சேர்த்துப் பாடப்பட்டு வருகிறது. இதற்குப் பல துறவியரும், அடியார்களும் ஓரொரு விதத்தில் பொருளுரைக்க முயன்றுள்ளனர். பெரியோர்கள் முயலும் விஷயத்தில் சில சிறுவர்களும் தங்கள் ஆர்வக் கோளாறு காரணமாக முயன்று நகைச்சுவைக்கு விஷயமாவது என்பது உலகில் புதிதல்ல. அந்தக் கணக்கில் என்னுடைய முயற்சியும் அமைகிறது. தகுதி என்று பார்த்தால் ஒரு நாளும் பொருந்தாத செயல். வித்வத் என்று பார்த்தால் வெறும் கேலிக்கே விஷயமாகும். இதையெல்லாம் விட ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸருக்கும் கொஞ்சம் ஹாஸ்யரஸத்திற்கான நிகழ்ச்சிகள் வேண்டாமா? அந்தக் கணக்கில் என்னுடைய முயற்சி.
இந்தச் சுலோகத்தில் ஸ்தாபகாய ச தர்மஸ்ய என்று சொல்கிறார் சுவாமிஜி. தர்மத்தை ஸ்தாபித்தவர் என்று வருகிறது. இதற்கு என்ன பொருள்? சநாதன தர்மம் என்பது இருந்துகொண்டு தானே இருக்கிறது? இங்குதான் நாம் உட்பொருள் என்ன என்றுபார்க்க வேண்டும். தர்மம் என்றால் என்ன? எது வாழ்க்கையைப் பயன் உள்ளது ஆக்குமோ அதுவே தர்மம். வாழ்க்கையை உணர்ச்சிகளின் வழியே செல்லும்படி விட்டுவிடுதல் மிருக நிலை. ஆனால் அதே வாழ்க்கையைக் கருத்துடன் ஊன்றிக் கல்வியினால் நன்கு விளங்கப் பெற்று அர்த்தம் உள்ளதாய் ஜீவிதத்தை ஆக்கினால் அப்பொழுதே மனிதப் பிறவி என்பது நிறைவு பெறுகிறது. வாழ்க்கையை உட்பொருள் துலங்க நிறைவு பெறுத்தும் வழிதான் கல்வி என்பது. அவரவர் கல்வியைப் பொறுத்து அவரவர்தம் வாழ்க்கையின் நிறைவு அமைகிறது. ‘வெள்ளத்தனையது மலர்நீட்டம். மாந்தர் உள்ளத்தனையது உயர்வு’ என்கிறார் திருவள்ளுவர். கல்வியின் முழுமை என்பது அஃது கடவுளைக் காட்டும் கல்வியாக ஆகும்பொழுது சித்திக்கிறது. எத்தனை கற்றும் கடவுளை நோக்கி மனித மனம் திரும்பாதவரையில் அஃது குறைக்கல்வியாகவே இருந்து விடுகிறது. இதைத்தான் ஆணியடித்தாற்போல் திருவள்ளுவர், ‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்’ என்று கூறுகிறார்.
வாழ்க்கையின் பயன் கடவுளைக் காணல்; கல்வியின் முழுமை கடவுளைக் காட்டல் என்றால் இப்பொழுது கடவுள் என்றால் என்ன, கடவுளைக் காணல் என்றால் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. கடவுள் என்றதுமே அது மதங்களின் விஷயம் என்றாகி விடுகிறது. ஆனால் கடவுள் என்பது வாழ்க்கையின் அறுதியான அர்த்தம் என்ற விதத்தில் வாழ்க்கையோடு சேர்ந்த விஷயம். பழங்காலங்களில் மக்கள் இந்த வாழ்க்கையின் ஆகச்சிறந்த அர்த்தத்தைக் குறித்துத் தாம் நம்பியவற்றை பலவேறு விதங்களில் நூல்களாகவும், நிறுவனங்கள் ஆகவும் ஆக்கி வருபவை நம்மிடையே பல நெறிகளாய் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கையின் அறுதியான அர்த்தத்தைத் தேடுவது என்பது ஒவ்வோர் உயிரினுள்ளும் கிளர்ந்து அவ்வுயிரை வாழ்வின் நிறைவுக்கு இட்டுச் செல்வது ஆகும்.
ஓர் உயிர் தனக்கு அமைந்த வாழ்க்கையை நன்கு புரிந்துகொண்டு, சூழும் உலகை நன்கு அறிந்து, தன்னையும் உள்ளடக்கிய முழுமையை உணரத் தலைப்படும் பொழுது அந்த ஏக்கம், அந்தத் தேட்டம் தலைசிறந்த தர்மம் ஆகும். அத்தகைய உயிரின் விழிப்புணர்வை, வாழ்க்கையின் நிறைவைக் குறித்த ஏக்கத்தை, கடவுள் காதலையே தனிப்பட நனிசிறந்த தர்மம் என்று ஸ்தாபித்தவர் என்று பார்த்தால் மனிதகுல வரலாற்றில் ஸ்ரீராமக்ருஷ்ணரைத் தவிர எவருமிலர். அனைத்து நெறிகளின் உட்கிடையும் இந்தக் கடவுள் தாகம்தான் என்றாலும் வெளிவடிவங்களிலும், நெறிகள் கோட்பாடுகள், ஒழுகுமுறைகள், கட்டளையிடுவோர், கீழ்ப்படிவோர், குழுக்கள், தம்மைச் சார்ந்தோர், மற்று பிறர் என்று பல நிறுவனமயமான விஷயங்களில் உட்சாரமான விஷயம் மறைந்து போனதுதான் நாம் காணக் கிடைப்பது. வாழ்க்கையின் இயல்பான நிறைவின் தர்மமாய் இருக்கும் ஒன்றிற்கு இனி அந்த நிலை ஏற்படாவண்ணம் வாழ்வின் நிறைவாம் கடவுளுக்கான ஏக்கத்தை நேரடியான தர்மமாக நிலைநாட்டிய ஸ்ரீராமக்ருஷ்ணர் என்றென்றும் மனித குல நன்றிக்கு உரியவர் ஆகிறார். எனவே அந்தச் சிறப்பையிட்டு ‘ஸ்தாபகாய ச தர்மஸ்ய’ என்கிறார் சுவாமிஜி.
அடிப்படையான உயிரான தர்மம் என்ன என்று நன்கு வாழ்வாலும், வாக்காலும் விளக்கிக் காட்டியவர் மக்களுக்குப் பழக்கத்தில் வந்து அமைந்த நெறிகள் அனைத்தையும் அனுஷ்டித்துக் காட்டி, அனைத்திலும் இந்த அடிப்படையான கடவுள் காதலே, வாழ்க்கையின் நிறைவுக்கான ஏக்கமே ஆகச் சிறந்த இன்றியமையாத அம்சம் என்று எடுத்துக் காட்டியது ஸ்ரீராமக்ருஷ்ணரின் சிறப்பாகும். அதையே ஸர்வதர்ம ஸ்வரூபிணே என்பதால் சுட்டுகிறார்.
ஒவ்வொரு காலத்திற்கும், பண்பாட்டிற்கும், சூழலுக்கும் உரிய வகையில் ஒவ்வொரு நெறியை ஓரோ காலங்களில் நிலைநாட்ட அவதார புருஷர்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் அடிப்படையான தர்மம் ஆன, வாழ்க்கையின் நிறைவு, அர்த்தம் என்பதற்கு நேரடியாக விளக்கம் தருவதான கடவுள் காதல், ஏக்கம் என்பதை வாழ்வாலும், வாக்காலும், வழிவழியான உபதேசங்களாலும் மறைந்து போகாத வண்ணம் ஆக்கி வைத்தவர் ஆகையினால் ஸ்ரீராமக்ருஷ்ணரை அவதாரவரிஷ்டர் என்று ஏற்றுகிறார் சுவாமி விவேகாநந்தர். அத்தகைய ஸ்ரீராமக்ருஷ்ணரிடத்தில் தம் உள்ளம் உரை செயல் என்ற அனைத்தையும் ஈடுபடச் செய்வதால் உயிரின் உன்னத நோக்கமான வாழ்க்கையின் நிறைவு, ஜீவிதத்தின் பூரண அர்த்தம் என்னும் இலட்சியம் எளிதில் நிறைவேறுகிறது என்பதைக் காட்டுவது ‘ஸ்ரீராமக்ருஷ்ணாய தே நம:’ என்பது.
ஸ்ரீராமக்ருஷ்ணருக்கு என்றும் வெற்றி உண்டாகுக !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment