ரங்கன் மனத்தடம்
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Wednesday, November 20, 2024
நிலைப்பாடு 2
“சாதாரண மனிதராக இருப்பது அவ்வளவு சிறப்பில்லை; ஏதோ சித்தாந்தங்களுக்கோ, சம்ப்ரதாயங்களுக்கோ நம்மை முற்றிலும் ஈடுகொடுத்து விடுவதுதான் சிறப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் உள்ளில் மறைவாக இருந்தது. பிறகு உண்மையில் சாதாரண மனிதராக இருப்பதுதான் இயல்பானதும், சிறந்ததும் ஆகும் என்பது சிறிது சிறிதாகப் புரிந்தது. ஏனெனில் ஒரு நெறியில் நம்மை முற்றிலும் கொடுத்துவிடும் போது, ஒரு சித்தாந்தம் ரீதியாக நாம் முற்றிலும் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும் போது அது ஏதோ ஒரு வேகத்தை நம்முள் ஏற்படுத்துவது போன்ற ஒரு உணர்வை உண்டாக்குவது. ஆனால் மிகச் சாதாரணமான பல அம்சங்களையும், மிக இயல்பான விஷயங்களையும் கூட நாம் அப்பொழுது உரிய கவனம் கொள்ளத் தவறிவிடுகிறோமோ என்றுதான் தோன்றுகிறது. என் வரையில் பார்க்கும் பொழுது நான் அப்படி உணர்ந்தேன். பிறருக்கு எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது.
“ஒன்றுமில்லை. இத்தனைக்கும் பகுத்தறிவை மிகக் கறாராகப் போதிக்கும் சித்தாந்தம்தான் அயின் ரேண்டின் கொள்கைகள். ஆனால் அதில் முற்றிலும் தோய்ந்து ஈடுகொடுக்கும் நிலை வந்த போது என் மனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், நான் பிறரோடு கொண்ட பரிமாற்றங்கள் எல்லாம் நான் உற்று கவனித்து வந்தேன். இத்தனைக்கும் அயின் ரேண்ட் சித்தாந்தத்தில் யாரையும், எதையும், பண்டைய சான்று என்ற காரணமாக மாறாக்கோள் என்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆயினும் ஒரு சித்தாந்தம், ஒரு நெறி என்ற அளவில் ஆகும் பொழுது அவருடைய சித்தாந்தத்தில் தம்மை ஈடுபடுத்தி கொண்ட ஒருவரின் மனத்தளவில் என்ன மாதிரியான பார்வைக் குருடுகள் ஏற்பட முடியும் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“’அப்படி அவர் சொன்னாரா? நீயாகச் செய்துகொண்டால் அவர் என்ன பண்ணுவார்?’ இந்த கேள்வி கேட்கப்படலாம் எந்த சித்தாந்தத்தைக் குறித்தும். ஆனால் இந்தக் கேள்விக்கான நியாயம் எந்த சித்தாந்தத்திலும் கிடைக்குமா தெரியாது. ஏனெனில் எந்த சித்தாந்தம் என்பது இல்லை. ஒரு சித்தாந்தம் என்ற அளவில் முற்றிலும் ஈடுகொடுத்துத் தோயும் போது அது மனத்தை எப்படித் தன்வயப் படுத்தும் என்பதுதான் விஷயம். பொது புத்தியில் உறைக்கக் கூடிய பலதும், இயல்பாக அர்த்தம் ஆகக் கூடிய பலதும், ஸ்வாபாவிகமாகப் புரியக் கூடிய மென்மையான பல தர்மசங்கடங்களும் ஏன் ஒரு கோட்பாட்டில் தன்னை முற்றிலும் தோய்த்துக் கொள்ளும் மனத்திற்குக் காண முடியாத, கண்டாலும் உணர்வில் பொருள் கொள்ளாதவைகளாய் ஆகிவிடுகின்றன என்பது நான் உணரும் போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“இத்தனைக்கும் நான் அயின் ரேண்ட் சித்தாந்தத்தில் ஈடுபட்டது வாழ்வில் படிப்பு முடிந்து வேலைக்குப் போன காலத்தில்தான். அந்த நிலையிலும் ஒரு சித்தாந்தத்தில் முற்றிலும் ஈடுகொடுத்தல் என்பதன் விளைவு அத்தகையதாகத்தான் இருந்தது. அதேபோல் சம்ப்ரதாயங்களை அவற்றின் மூல நூல்கள், பண்டைய ஆசிரியர்களின் விளக்கங்கள் என்ற ரீதியில் உடன்பாட்டோடு தோய்ந்து ஈடுபடும் நிலையில் மனத்தளவில் எழுந்த மாற்றங்கள், ‘நாம் சிறப்பானவர்கள்; இதை இழந்த பிறர் ஐயோ பாவம்’ என்றவிதமான நாம்>< பிறர் என்ற மனப்பிளவு, பார்வையை எவ்வளவு தூரம் மாற்றும் என்பதைக் கவனத்தில் உணர்ந்தேன். ஆனால் இந்த கவனம் என்பதை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. சம்ப்ரதாயம் சார்ந்த பார்வைதான் இயல்பானதாக மனம் கருதியது. ‘கொடுத்து வைத்தவர்கள் >< இழந்து போனவர்கள்’ என்ற எதிர்புதிர் இல்லாமல் பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பின்னர்தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 'உண்மையைப் பல நிலைப்பாடுகளில் நின்றும் பார்க்கப் பழகுவது' என்ற அணுகுமுறையின் உன்னத தாத்பர்யம் சிறிது சிறிதாக விளங்கியது. இது என் அனுபவம். மற்றவர்களுக்கு இது என்ன பயன்படும் என்பதை அறியேன். ஆனால் என் வாழ்க்கை இனிமையாய் இருக்கிறது. என் வாழ்க்கை, என்னுடைய வாழ்க்கையாக எனக்குக் கிடைக்கிறது என்பது சந்தோஷம்தானே! ”
அது என்ன சாதாரண ஹிந்து என்று சொல்லிக் கொள்கிறாயே, என்ன அர்த்தம் என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். நல்ல கேள்வி. ஏனென்றால் நான் ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், அன்னை, பாரதி, ஸ்ரீரமணர் என்றெல்லாம் சொன்னவுடனே சிலர் கஷ்டப்பட்டு அவர்களின் நூலைக் குடைந்து அவர்களே சில சூழல்களிலோ, அல்லது அவர்கள் சொன்னதாக, கூட இருந்தவர்கள் தங்களுக்குப் புரிந்தவகையில் ஏதோ பதிவு செய்தோ வைத்ததை எடுத்து வந்து ‘பார்! அவர்கள் கூட இன்ன வகைக் கருத்தை மறுக்கவில்லை; வெறுத்து ஒன்றும் சொல்லவில்லை. அவர்களைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு நீ என்னமோ பெரிய பிடுங்கி போல் பேசுகிறாய்’ என்றெல்லாம் மடக்குவதுண்டு. அவர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள், எதற்கு, எந்த வாதத்திற்காகச் சொன்னார்கள் என்று அவர்களின் எழுத்துகளை முழுவதும் வாசிக்கும் எனக்குப் புரிகிறது. அப்படியே அவர்கள் கவனமின்றிப் பிழையான கருத்துகளைச் சிலசமயம் சொல்லக் கூடும். எதை விட்டு எதைக் கொள்ள வேண்டும் என்பது எனக்குப் புரிந்த விஷயம். ஆனால் மடக்க வேண்டும் என்று ஆத்திரத்தில் பேசும் ஒருவரிடம் நான் என்றும் எதிர்வாதம் செய்வதில்லை. ‘மடமை வாழ்க’ என்று கடந்து போய்விடுவதுதான் வழக்கம். ஏனென்றால் நான் ஒரு சாதாரண ஹிந்து.
அதாவது எனக்குப் பொது புத்தியில், மானிட நன்மை என்னும் உணர்வில் எது சரி, எது தவறு என்று சிம்பிளாக முடிவு செய்து கொண்டு போகின்றவன். நல்ல கருத்தாக ஒன்று பழைமையில் இருந்தால் அதை ரசிப்பதும், பொருந்தாத, மானிடத்திற்கு முரணான கருத்தாக இருந்தால் அதை விமரிசன புத்தியோடு விட்டுவிட்டு வேலையைப் பார்ப்பதும் செய்வதால் சாதாரண ஹிந்து என்று சொல்லிக் கொண்டேன் என்று சொல்லி நண்பருக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை அவர் மனத்தில் ‘ஒரு வடை போச்சே’ என்ற மோமெண்டாக இருக்கலாம். யார் கண்டது?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Monday, November 18, 2024
நிலைப்பாடு
Friday, October 25, 2024
மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 08
ஜர்மானிய தத்துவ அறிஞர்களில் தமக்கென்று சிறப்பிடம் பெற்றவர் ஃப்ரெட்ரிக் நீட்ஷே. அவருடைய ஜாரதுஷ்ட்ரர் நூல் பலருக்கும் அறிமுகமான ஒன்று. ஒரு புதுக் கிளர்ச்சியுடனும், முற்றிலும் மாற்றான கோணத்திலும் கருத்துகளைச் சொல்வது அவருடைய பாணி. ’அறநெறியின் கோத்திர வரலாறு’ என்னும் பொருள்பட அவர் எழுதுவதன் தொடக்கத்தில் ஒரு கருத்தைச் சொல்கிறார். எல்லாவற்றையும் அறிகின்ற மனித யத்தனத்தில் அவனுள் ‘அறிபவன்’ எவனோ அதை அறிகின்ற வழி மட்டும் இல்லை என்கிறார். வெளியிலிருந்து அறிவுகளைச் சேமித்துக் கொண்டு வந்து தேனடை போலும், புதையல் போலும் தனக்குள் சேர்க்கின்ற மனிதன் தான் யார் என்பதை அறியும் வழிதான் யாது என்று அவர் கேட்கிறார்.
“We are unknown, we knowers,- ourselves to ourselves : this has its own good reason. We have never searched_for_ourselves - how should it then come to pass, that we should ever find ourselves ? Rightly has it been said : " Where your treasure is, there will your heart be also." Our treasure is there, where stand the hives of our knowledge. It is to those hives that we are always striving; as born creatures of flight, and as the honey-gatherers of the spirit, we care really in our hearts only for one thing—to bring something home to the hive ! ... Of necessity we remain strangers to ourselves, we understand ourselves not, in ourselves we are bound to be mistaken, for of us holds good to all eternity the motto, " Each one is the farthest away from himself" - as far as ourselves are concerned we are not ' knowers.' " (Geneology of Morals, Friedrich Nietzsche)
இதைப் படித்துவிட்டுப் போக வேண்டிய என் மனம் ஏன் ப்ருஹதாரண்யக உபநிஷத்திற்குச் செல்கிறது? சக்ரரின் மகனான உஷஸ்தர் என்பவர் யாக்ஞவல்க்யரைக் கேள்வி கேட்கிறார். சாக்ராயணரான (சக்ரரின் மகனார் ஆன) உஷஸ்தர் கேட்டார்: ‘எல்லாரின் உள்ளேயும் இருக்கின்றதும், என் உள்ளே இருக்கின்றதும் ஆன அந்த ஆத்மா எது?’. யாக்ஞவல்க்யரின் பதில் : ‘பார்வையைப் பார்ப்பவனைப் பார்க்க இயலாது; கேள்வியைக் கேட்பவனைக் கேட்க இயலாது. சிந்திப்பதைச் சிந்திப்பவனைச் சிந்திக்க இயலாது. அறிவதை அறிபவனை அறிய இயலாது.’
‘ந த்ருஷ்டேர்த்ரஷ்டாரம் பச்யே:, ந ச்ருதே ச்ரோதாரம் ச்ருணுயா, ந மநேர்மந்தாரம் மன்வீதா, ந விஜ்ஞாதேர் விஜ்ஞாதாரம் விஜானீயா; ஏஷ த ஆத்மா ஸர்வாந்தர:’ (ப்ரு உ 3.4.2)
இதை எதில் படித்தேன்? நீஷேயில் உபநிஷதமா? உபநிஷதத்தில் நீஷேயா? இரண்டிற்கும் உள்ளே நிலவுவது ஒரே மனித யதார்த்தம்தானே!
ஜ்யார்ஜ் பைரன் அல்லது லார்டு பைரன் எனப்படும் ஓர் ஆங்கிலக் கவி தமது நாடகம் ஒன்றில் இவ்வாறு எழுதுகிறார்:
“My slumbers - if I slumber - are not sleep,
But a continuance of enduring thought,
Which then I can resist not: in my heart
There is a vigil, and these eyes but close
To look within; and yet I live, and bear
The aspect and the form of breathing men.
But grief should be the instructor of the wise;
Sorrow is knowledge: they who know the most
Must mourn the deepest o'er the fatal truth,
The Tree of Knowledge is not that of Life.”
அறிவு என்பதே, அறிதல் என்பதே சோகம் என்கிறார் பைரன். ‘உயிர் என்பனும் துயரோ? அருள் உளது என்பதோர் உளவோ?’ என்று கேட்கிறார் திருலோக சீதாராம். பைரனின் இந்த வரிகளைப் படிக்கும் போது என் மனம் மனித குலத்தை ஒற்றை மனித உருவமாகக் காண்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Tuesday, October 22, 2024
மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 07
திருவாய்மொழிக்கு அடுத்தடுத்து அமைந்த உரைகளில் தனக்கென்று ப்ரத்யேகத் தன்மைகளைக் கொண்டு விளங்குவது ஸ்ரீவாதிகேசரி ஜீயரின் பன்னிரண்டாயிரப் படி என்னும் உரை. (என்னடா இது படி, மரக்கால் என்று அஞ்சாதீர்கள். இவை பழங்காலத்தில் Stationary என்பதைத் தீர்மானித்த விஷயங்கள். எழுதுபொருள், எழுத்து ஓலை என்பதைத் தயாரிக்க இந்த மாதிரியான அளவுகள் பயன்பட்டன. உயிர், உயிர்மெய் எழுத்துகள் 32 கொண்டது ஒரு படி என்னும் கணக்கு. இப்படி 12000 >< 32 என்ற அளவிற்கு ஓலைகளைச் செப்பனிட்டுத் தயார் செய்யப் பயன்படும் குறிப்புகள். நம் அச்சு ஊடகத்தில் பைண்ட், பைண்டர், க்ளாத் பௌண்ட், டெமி ஆக்டேவோ என்றெல்லாம் ஸ்டேஷனரி குறிப்புகள் நூல்களையே விவரிக்கத் தொடங்கியது போல் எனலாம்). விஷயத்திற்கு வருவோம்.
ஸ்ரீவாதிகேசரி ஜீயர் ஓர் அருமையான கருத்தைச் சொல்கிறார். வேதங்களில் சொல்லப்படும் தத்வார்த்தங்கள் வடமொழியில் சொல்லப்படும் பொழுது ஏதோ சிலருக்கானதாகவும், அனைவருக்கும் உரிமை வழங்காத ரீதியிலும் இருக்கின்றன. அது மட்டுமின்றி, ஏதோ பழங்காலத்திய விஷயம் போலவும் தோன்றுவதாய் இருக்கின்றன. ஆனால் அதுவே தமிழில் சொல்லும் போது அனைவருக்கும் உரிமை நல்குவதாகவும், புதுமையின் மலர்ச்சி திகழ்வதாகவும் இருக்கின்றன என்னும் கருத்துப் பட உரைக்கிறார். அவருடைய சொற்களையே பார்ப்போம்:
திருவாய்மொழி, 2.7.13ல் ‘வண்ண மாமணிச் சோதியை அமரர் தலைமகனை, கண்ணனை நெடுமாலைத் தென்குருகூர்ச் சடகோபன் பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள்’ என்ற பாடலில் ’தமிழ்மாலை ஆயிரத்துள்’ என்னும் சொற்றொடருக்கு உரை எழுதும் ஸ்ரீஜீயர் சொல்வது கவனத்திற்குரியது. ‘தமிழ்மாலை ஆயிரத்துள் - ஸர்வாதிகாரமான த்ராவிட ஸந்தர்ப்ப ரூபமான ஆயிரம் திருவாய்மொழிக்குள்ளும்’ என்பது ஜீயரின் உரைப்பகுதி. தமிழ்மாலை ஆயிரம் என்றால் ஆயிரம் பாக்களைக் கொண்ட தமிழ்ப் பிரபந்தம் என்று பொருள் சொல்ல வேண்டியிருக்க, பிரபத்தி நெறியை அனைவருக்கும் உரியதாக்கின திருவாய்மொழி என்பதைக் கவனத்தில் கொண்டு வரும் ஜீயர் தமிழில் சொல்வதே ஒரு கருத்தை அனைவருக்கும் உரிமை உடையதாக ஆக்குவது (ஸர்வாதிகாரமான திராவிட ஸந்தர்ப்பரூபமான திருவாய்மொழி என்று உரைவரைகிறார். அதே போல் திருவாய்மொழி, 4.5.10ல், ‘உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்’ என்னும் பாட்டில் ‘வணதமிழ் நூற்க நோற்றேன்’ என்னும் சொற்றொடருக்கு உரைவரைகின்ற போது, ‘வண்’ என்னும் உரிச்சொல்லுக்குப் பொருளாக ‘விலக்ஷணமாய் ஸர்வாதிகாரமான த்ராவிட ப்ரபந்தத்தை’ என்று சொல்கிறார். மேலும் வண் தமிழ் என்பதற்குப் பொருளாக அவர் கூறுவது: ‘வண் தமிழ் ஆகையாவது உதாரமாய் இருக்கை; தன்னை அநுசந்தித்த மாத்திரத்திலே ஸகலபலப்ரதமாய் இருக்கை. அன்றிக்கே பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாய் இருக்கை.’ கவனிக்க வேண்டிய பகுதி ‘பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாய் இருக்கை’. அதாவது தமிழில் சொல்லும் போது அது பொதுமையும், புதுமையுமாக ஆகிவிடுகிறது என்றுதானே ஜீயர் சொல்லவருகிறார். (குறிப்பு: ஸ்ரீராமாநுஜரும், சமத்துவமும் பக்கம் 114, 115)
இவ்வாறு தமிழ் வேதம் செய்த மாறன், வேதம் தமிழ் செய்யும் போது அதனைப் பொதுமையும், புதுமையும் வாய்ந்ததுவாய்ச் செய்துவிடுகிறார் என்பது ஜீயர் சொல்லும் சாராம்சம். தமிழ்நாட்டில் பிறந்து இதைப் படிக்கும் எனக்கு எங்கோ லெபனானில், பெய்ரூட்டில் ‘கவிதையின் புதுமலர்ச்சி’க்காகப் பாடுபட்ட யூஸுஃப் அல்கல் என்பவரைக் குறித்து, City of Beginnings, Poetic Modernism in Beirut என்னும் நூலில் Robyn Creswell என்பவர் எழுதும் போது யூஸுஃப் அல்கல் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Jacques Ametis சொல்கிறாராம் “Ezra Pound was the most significant cultural influence on Yusuf al- Khal’s literary and artistic character.” எஸ்ரா பௌண்ட் யூஸுஃப் அல்கல் விஷயத்தில் மட்டுமன்று, பெய்ரூட்டின் கவிஞர்கள் பலருக்கும் தாக்கமும், ஊக்கமும் கொண்டவராக இருக்கிறார் என்று கூறுகிறார்.
அதாவது எஸ்ரா பௌண்ட் கூறும் ஓர் உன்னத கருத்து - பழக்கப்பட்டு போன அலட்சியத்திற்கு உள்ளான உண்மைகளைப் புனரெழுச்சி கொள்ள வைக்கும் முறை என்பது அவற்றைப் புதிய அந்நிய வடிவத்தில், உதாரணமாக வெளிநாட்டு இலக்கியங்களை மொழிபெயர்த்தல், புதிய வழிகளில் அந்த உண்மைகளைக் குறித்து எழுதுதல் போன்றவற்றால் இயலும் என்பது. “The American poet’s intuition that the best way of making it new was to make it foreign, that literary innovation might result from an estrangement through ancient or “exotic” codes and structures, was consistently instructive for the Beiruti poets.” (பக்கம் 85). யூஸுஃப் அல்கல் 1957ல் ஆரம்பித்த Shi'r ஷீர் (கவிதை) என்னும் பத்திரிக்கைக்கு வழிகாட்டும் கருத்தாகவும் இதுவே அமைகிறது என்று கூறுகிறார் ரோபின் ரெஸ்வெல். “
பதிமூன்றாம் நூற் கி பி யில் எழுதும் ஜீயரின் கருத்தான ‘தமிழில் சொல்லும்போது பழையதாகச் சொன்னவை பொதுமையும், புதுமையும் வாய்ந்ததுவாய்த் திகழ்கின்றன’ என்பது எப்படி நம் காலத்தில் எங்கோ லெபனான், பெய்ரூட்டில் கவிதை இயக்கத்தின் அடிநாதமான எஸ்ரா பௌண்ட்டின் கருத்தைப் பற்றிய ஓர்மையோடு ஒத்திசைந்து போகிறது? மனிதகுலம் ஒன்று அன்றும், இன்றும் என்பதுதானே கவிதையும், இலக்கியமும் காட்டும் காட்சி.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Sunday, October 20, 2024
மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 06
'பாடல்’ என்பது ஒரு தனிப்பட வகை. இசைப்பாடல் அல்லது பத்துப் பாடல்களாகக் கணக்கிட்டுப் பாடக் கூடிய பதிகம் என்றும் சொல்லலாம். கிரேக்கத்தில் இதை லிரிக் என்றார்கள். இசைப்பாடல் அல்லது கீதம் என்ற பொருளில் மெலிக் என்றார்கள். கிரேக்கத்தில் ஒன்பது பெயர்கள் புகழ்பெற்ற லிரிக் கவிஞர்கள், இசைப்பாடல் புலவர்கள் என்று கணக்கு சொல்கிறார்கள். அல்க்மன் (ஸ்பார்ட்டா), ஸாஃபோ (லெஸ்போஸ்), அல்கேயஸ் (மைதிலீன்), அனக்ரயான் (தியாஸ்), ஸ்டெஸிகோரஸ் (மெடோரோஸ்), இபிகஸ் (ரீஜியம்), ஸிமோனிடிஸ் (ஸியோஸ்), பாக்கிலீடஸ் (ஸியோஸ்), பிண்டார் (தீப்ஸ்). இதில் பிண்டாருக்கும், ஸிமோனிடிஸ், பாக்கிலீட்ஸ் என்பவர்களுக்கும் இடையே புலமைக் காய்ச்சல் இருந்தது என்றும் ஆய்வாளர்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ‘நான் உயரப் பறக்கும் கழுகு. அதைப் பொறுக்காமல் கீழே திரியும் காக்கைகள் கரைகின்றன’ என்று காட்டமாகப் பிண்டார் குறிப்பிடுவது இவர்களைத்தான் என்கின்றனர். புலமைக் காய்ச்சலும் ஓரிடத்திற்கும், ஒரே பண்பாட்டிற்கும், ஒரே காலத்திற்கும் உரியதல்ல போலும்.
ஸாஃபோ (600 கி மு) என்னும் பெண்பாற் புலவர் காதலைப் பற்றிப் பாடுவதில் புகழ் வாய்ந்தவர். பொதுவாக அரசியல், சமுதாயம், தனிப்பட்ட உணர்ச்சிகள், சுற்றுப்புற நிகழ்வுகள், காதல் என்று பல கருப்பொருள்களுக்கும் லிரிக் என்னும் வடிவம் இடம் கொடுக்கும்.
ஸோலோன் (560 கி மு ) என்பவர் கிரேக்கத்தில் ஆதிகாலத்தில் அறநெறி வகுத்த ஆன்றோர் எழுவரில் ஒருவராகக் கருதப்படுபவர். அவருடைய முதுமையில் ஒரு நாள் ஸோலோனின் மருமகன் எக்ஸிஸெஸ்டிடெஸ் என்பவர் ஸாஃபோவின் லிரிக் ஒன்றை இசையுடன் பாடியிருக்கிறார். அதைக் கேட்டதும் அவரது மாமாவான முதிய அறிவனார் அந்தப் பாட்டைத் தமக்குக் கற்பிக்கும்படி வேண்டி அதை மெனெக்கெட்டென்று சுருதி சுத்தமாகப் பயின்றிருக்கிறார். இதைப் பார்த்திருந்த ஒருவர் ‘இது என்னத்துக்கு இந்த வயதான காலத்தில்?’ என்று வினவினார். ‘ஒன்றுமில்லை. இதை நன்றாகப் பாடியவாறே நான் இறந்துவிட விரும்புகிறேன். அல்லது இறக்கும் தருணத்தில் இதைப் பாடியவாறே விடைபெற நினைக்கிறேன்’ என்றாராம் அறமுனிவர் ஸோலோன்.
‘காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்...
இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே’
என்று பாடுகிறார் பாரதியார். காலத்தின் இடைவெளிதான் சுமார் 2500 ஆண்டுகள் இருக்கும். காதலுக்கு ஏது இடைவெளி? காற்று புகுவதற்கும் கூட இடைவெளி காதலில் இல்லை என்கிறார்கள் கவிஞர் பெருமக்கள். தனக்கும், காதலனுக்கும் இடையே தென்றல் காற்று நுழைந்து சிறிது வீசவும், தன்னிடம் அன்பு குன்றியதோ, அதனால் பிரிவோ என்று எண்ணிப் பசப்புற்றாள் காதலி என்கிறார் திருவள்ளுவர்.
‘முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்”
காதல் தெய்விகமானதா என்று கேட்பவர்களும் தெய்விகம் காதல் என்பதை மறுக்க இயலார்.
ஒரு பாடலில் ஸாஃபோ கூறுகிறார்:
“A little thing of two cubits' stature like me could not expect to touch the sky. ” (Greek Literary Fragments)
‘எண்சாண் உருவமுள்ள நான் எவ்வண்ணம் விண்ணைத் தொடுவது ?"
கவிஞர் திருலோக சீதாராம் பாடுகிறார்:
‘என்றென்றும் தளர்ந்த நடைபோட்டுத்
தப்படியால் அளந்து தாண்டிவிட முடியாத
தாரணியும் வானுலகும்
ஈரடியால் அளக்கின்ற
செப்படி வித்தை எற்கும் தெரிந்துவிடும்”
ஸாஃபோ பாடுகிறார்:
“.... and pours down a sweet shrill song from beneath his wings, when the Sun-god illumines the earth with his down-shed flame outspread"
பாரதியின் பாட்டு:
“கடலின் மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி ஐயா,
படரும் வானொளி இன்பத்தைக் கண்டு
பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள்.’
ஸாஃபோ வின் பாடல்:
“The Moon is gone
And the Pleiades set,
Midnight is nigh ;
Time passes on,
And passes ; yet
Alone I lie"
பாரதியின் பாட்டு, இதே களம் வேறு மூர்ச்சனையில்:
“வானில் இடத்தையெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்,
மோனத் திருக்குதடீ - இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?”
ஸாஃபோ பாடுகிறார்: அதன் தொடர்ச்சியைப் பாரதி பாடுகிறார்.
“Stand up, look me in the face as friend to friend,
and unveil the charm that is in your eyes. "
”சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?”
ஒன்பது புலவர்களில் ஒருவராகிய பாக்கிலீடஸ் என்பவர் வாழ்க்கையைப் பற்றிய ஓர்மையை இங்ஙனம் பாடுகிறார்:
“One goal there is, one path, of mortal happiness, the power to keep a heart ungrieving to life's end. Whoso busieth his wits with ten thousand cares and afflicteth his spirit night and day for the sake of things to come, the labour of such an one beareth no fruit. For -what ease is there left us if we keep the heart astir with vain lament? "
" I say and ever shall, that the greatest honour belongeth to virtue and valour; though wealth may be found walking with cowards and is fain enough to exalt a man's spirit, a nobler hope doth cheer the heart of one that is good to the Gods ; and if, for all his mortality, he hath dower of health and can live on what is his own, then vies he with the first. Disease and helpless poverty apart, every human life is attended of delight. The poor desireth small things as much as the rich desireth great ; to have a plenty of everything is no pleasure to mortal men, rather seek they to catch that which flies them. He whose heart is stirred by most vain solicitudes, he getteth his honour only for his lifetime ; as for virtue, it may give a man toil, but well completed it leaveth him, even thougli he die, a right enviable monument of fame." (Greek Literary Fragments)
இந்தப் பகுதியைப் படிக்கும் போது ஏன் எனக்கு விநாயகப் புராணத்துச் செய்யுட்கள் நினைவுக்கு வரவேண்டும்?
“ஐது குடியில் பிறந்து அருநூல் ஆய்ந்து, செல்வத்து உயர்ந்ததனால் எய்தல் அரிது பெருமை.
அஃது எய்தும் - கொடை, ஒப்புரவு ஆதி செய்தற்கு அரிய செய்து, பிறர் செயிர் கூறாமல், தருக்காமல், உய்திநெறியில் பிறழாமல் ஒழுகுவார்க்கு.
உள்ளுதி, மைந்தா!”
“அன்பு, ஒப்புரவு, கண்ணோட்டம், அழியா வாய்மை, நாண் ஆதி
இன்பம் பெருக்கும் நற்குணங்கள் எல்லாம் நிறைந்த சான்றோர்கள்
துன்புற்றவர்க்கும் இனியனவே சூழ்வர்:
துணையின் வினை முடிப்பர்;
வன்பில் தளரார்;
நட்டார்க்கும் அடங்கித் தோற்றல் நாணாரே.”
கிரேக்கத்து ஐந்தாம் நூற் கி மு பாக்கிலீடஸ், விநாயகப் புராணச் செய்யுட்களோடு ஒத்து இசைந்து உரையாடுவது எதனால்? மனித குலம் ஒன்று என்பதனால்தானே?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Saturday, October 19, 2024
மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 05
ஆதிகால மனிதக் குழுக்களிடையே படைப்பைப் பற்றிய எண்ணங்கள், தங்களுடைய குழு எப்படி உண்டாயிற்று என்ற தொன்மங்கள் இவற்றிடையே நிலவும் ஆச்சரியமான ஒப்புமை நம் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒன்று. 1600 கி மு அல்லது பொதுயுகம் முன் சுமேரியக் களிமண் பலகைப் பதிவு எரிடு படைப்புக் கதை எனப்படுகிறது. பண்டைய பாபிலோனியப் பதிவுகளில், சதபத ப்ராம்மணம், புராணங்கள் போன்றவற்றில், அமெரிக்க பூர்வ குடிகளின் நினைவு மொழிகளில் என்று பல படைப்புக் கதைகளிலும் பெரும் வெள்ளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலிருந்து தெய்வத்தின் உதவியால் ஒரு மனிதர் பெரும் மீன் ஒன்றின் உதவியுடன், அல்லது பெரும் ஆமை ஒன்றின் உதவியுடன் அல்லது பெரும் மரக்கலம் ஒன்று கட்டி அதன் உதவியுடன் மனிதர் வெள்ளம் வடியும்வரை காத்திருந்து தப்புகின்றனர்.
சதபத ப்ராம்மணத்தில் மீன் வடிவில் வந்த தெய்வத்தின் ஒற்றைக் கொம்பில் கப்பலைக் கட்டி மலைக்கு எடுத்துச் செல்லப் படுகின்றனர்.
எரிடு வெள்ளத்தைப் பற்றிக் கிடைத்த பழம் குறிப்புகளில் வெள்ளம் பற்றிய செய்தியை மொழிபெயர்த்துத் தளத்தில் ஏற்றி வைத்திருக்கின்றனர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில்.
“All the windstorms and gales arose together, and the flood swept over the ……. After the flood had swept over the land, and waves and windstorms had rocked the huge boat for seven days and seven nights, Utu the sun god came out, illuminating heaven and earth. Zi-ud-sura could drill an opening in the huge boat and the hero Utu entered the huge boat with his rays. Zi-ud-sura the king prostrated himself before Utu. The king sacrificed oxen and offered innumerable sheep...” (https://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?text=t.1.7.4# )
வைவஸ்வத மனுவிடம் மீன் தன்னைக் காப்பாற்றிப் போற்றி வளர்க்கும்படியும், விரைவில் பெரும் வெள்ளம் வந்து சூழும் போது தாம் அவரையும், அவர் தம்மவர்களையும் காப்பதாகவும் கூறுவதாகச் சதபத ப்ராம்மணம் கூறுகிறது:
“ என்னைக் காப்பாற்றிப் போற்றி வளர்ப்பாயாக. உன்னை நான் காப்பாற்றுவேன்.
எப்படி என்னைக் காப்பாற்றுவாய்?
பெரும் வெள்ளம் இந்த உயிர்களையெல்லாம் அடித்துச் செல்லும். அதுகால் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.....
அவர் அதைக் காப்பாற்றினார். கடலைச் சேர்ந்து அந்த மீன் ஜ2ஷம் என்னும் பெரிய மீனாக ஆயிற்று. ஜ2ஷம் என்பதே மீன்களில் மிகவும் பெரியது. அவரை நோக்கி அது கூறியது. ‘குறிப்பிட்ட இந்த ஆண்டு பெரும் வெள்ளம் சூழும். கப்பல் ஒன்றைக் கட்டி வைத்துக் கொள். நான் சொன்னபடி கேட்டு நடந்து வெள்ளம் விஞ்சும் போது அந்தக் கப்பலில் ஏறிக்கொள். நான் உன்னை அப்பொழுது காப்பாற்றுவேன்.’
சொன்னபடியே அவரும் கப்பலைக் கட்டி வைத்திருந்தார். வெள்ளமும் வந்தது. ஜ2ஷமும் வந்தது. அதன் கொம்பில் கப்பலைக் கயிற்றால் நன்கு கட்டினார். மீன் இழுத்துச் சென்று கப்பலை வடக்கு மலையின் சிகரத்தில் வைத்தது.” (முதற் காண்டம், எட்டாம் அத்யாயம்)
(மூலம்: ஸ ஹாஸ்மை வாசம் உவாத | பிப்ருஹி மா, பாரயிஷ்யாமி த்வா இதி |
கஸ்மாந்மா பாரயிஷ்யஸி இதி |
ஔக இமா: ஸர்வா: ப்ரஜா நிர்வோடா. ததஸ்த்வா பாரயிதாஸ்மி இதி |
தந்மா நாவம் உபகல்ப்ய உபாஸாஸை, ஸ ஔக உத்திதே நாவம் ஆபத்யாஸை, ததஸ்த்வா பாரயிதாஸ்மி இதி ||
ததிதீம் ஸமாம் நாவம் உபகல்ப்ய உபாஸாஞ்சக்ரே | ஸ ஔக உத்திதே நாவமாபேதே | தம் ஸ மத்ஸ்ய உபந்யாபுப்லுவே | தஸ்ய ச்ருங்கே நாவ: பாசம் ப்ரதிமுமோச | தேநைதமுத்தரம் கிரிமதிதுத்ராவ | )
சால்டிய நாகரிகத்துப் பழம் பலகைகளில் பொறிந்த கதை கில்காமெஷ் பெர்நபிஷ்டிம் என்னும் நித்யத்வம் என்னும் வரம் பெற்ற குல முன்னவனை வேறு ஓர் உலகத்தில் கண்டு, அவரைக் கேட்கிறான், எப்படி நீங்கள் நித்யத்வம் பெற்றுக் கடவுளர் வாழும் இவ்வுலகில் என்றும் வாழும் வரம் பெற்றீர்கள் என்று:
“ GILGAMESH spake to him, even to Pernapishtim the remote; "I look up to thee (with amazement), Pernapishtim; Thy appearance has not changed, like unto me art thou. And thou thyself art not changed, like unto me art thou, Although thou didst depart from this life. But my heart has still to struggle against all that no longer lies upon thee. Tell me how thou didst come to dwell (here) and obtain life in the assembly of the gods."
Pernapishtim, then, spake to him, even to Gilgamesh:
"I will disclose unto thee, Gilgamesh, the hidden story, and the oracle of the gods I will tell thee. The city of Shurippak, a city which, as thou knowest, is situated on the bank of the river Euphrates, This city was ancient (already), when the gods within set their hearts to bring a deluge (literally, a cyclone), even the great gods, as many as] there were: their father Anu, their counsellor, the warlike Bel their leader Adar, their champion the god En-nu-gi. But god Ea, the lord of the unfathomable wisdom, argued with them, Their plan he announced to the forest (calling), "Forest, forest, town, town; Forest hear, and town pay attention : O man of Shurippak, son of Ubara-Tutu Build a house, construct a vessel ; leave thy possessions, save thy life (literally: lives), Leave thy property, but save (thy) life ; Bid the seed of life of every kind to mount into the ship. The ship, that thou shalt build, let her proportions be measured (i. e., have a design made) ; Her width and her length be equal. Into the sea then launch her." (These words Atrachasis heard in a dream-oracle).”
எரிடு நாகரிகத்துப் பதிவாக இருக்கட்டும், சால்டியன் நாகரிகத்துக் கில்காமெஷ் பதிவாக இருக்கட்டும், சதபத ப்ராம்மணம் கூறும் மனுவும் மீனும் என்னும் பதிவாக இருக்கட்டும், எல்லாம் காட்டுவது ஒன்றைத்தான். மனித குலம் ஒன்றே. காடு, மலை, வெள்ளம், கடல், கப்பல், மரணம், வாழ்க்கை என்று காலம் தாண்டிக் கேட்கும் குரலும் ஒரே ஆதி மனிதக் குரல்தான். தட்பவெப்ப நிலையும், மொழிகளும், பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும், தொன்று முதிர்ந்த தொல் நம்பிக்கைகளும் அனைத்தும் பல சுரங்களாகிப் பாடும் ஒரே பண் மனித இதயப் பண்ணைத்தானே!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Wednesday, October 16, 2024
மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 04
’ஒரு சந்தை. அங்குப் பலர். ஒரு மனிதன் அங்கு வந்து நிற்கிறான். வேலை தேடி நிற்கிறான். பெரும் வணிகன் ஒருவன் ஆடம்பர வாகனத்தில் அங்கு வருவதைக் கண்டு பிறர் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். வந்த வணிகன் ஓடாமல் நிற்கும் மனிதனை வேலை வேண்டுமா என்று கேட்கிறான். மனிதன் ஆம் என்று சொல்கிறான். ஆனால் அவன் கேட்கும் கூலி அதிகம். வணிகன் கட்டாது என்று யோசிக்கிறான். அப்படி என்றால் கட்டிவரும் எத்தனையோ பேர்களில் ஒருவரைத் தேடிக்கொள் என்று மனிதன் சொல்கிறான். ஓடி ஒளியும் இத்தனை பேர்களில் ஓடாமல் நின்று தான் விரும்பும் கூலி கேட்கும் மனிதனே மேல் என்று வணிகன் அவனை அழைத்துச் செல்கிறான். காடு, மலை, கடல் தாண்டி அவன் தீவு. ஓங்கி எரியும் நெருப்பு போல் சுடர்விடும் அவன் மாளிகை. அங்கு அவனுடைய மனைவி, மகள். அழகான மகள் வந்த மனிதனின் வலிமை, துணிச்சல் ஆகியன கண்டு காதல் கொள்கிறாள். அவனை இரகசியத்தில் சந்தித்து ஆபத்துக் காலத்தில் உதவும் மாயப் பொருட்களைத் தருகிறாள். வணிகன் மனிதனை எங்கோ ஆபத்தான மலைக் குன்று ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு கடப்பாரையைக் குத்தியதுமே ஏகப்பட்ட தங்கப் பாளங்கள் காத்துக் கிடக்கின்றன. மனிதன் உழைப்பில் பல தங்க மூட்டைகளை வண்டியேற்றிய வணிகன் மனிதனை அங்கேயே நிராதரவாய் விட்டுச் செல்கிறான். இதற்கு முன்னர் பலரும் வந்து மீளாத எலும்புகள் நடந்த கதைக்குச் சாட்சிகளாய்ச் சிதறிக் கிடக்கின்றன. ஏன் வணிகனைக் கண்டதும் சந்தையில் பலரும் ஓடி ஒளிந்தனர் என்று புரிகிறது. ராட்சத காகங்கள் தாக்க வரும் போது அவற்றினின்றும் தற்காத்து மீள்கிறான். ஆனால் தப்பும் வழி என்ன என்று திகைக்கும் போது காதல் வயப்பட்ட பெண் தந்த மாயப் பொருட்கள் நினைவிற்கு வரவே அதைப் பயன்படுத்துகிறான். வீரர் இருவர் ‘கட்டளை இடுங்கள்’ என்று சொல்லியவாறு திடீரெனெத் தோன்றுகின்றனர். தன்னை அவ்விடம் விட்டு அகல்விக்குமாறு மனிதன் சொல்ல அவ்வாறே அவனை அகற்றி கடற்கரையில் சேர்க்கின்றனர். பிறகு மீண்டுவந்து அதே சந்தையில் அதே மனிதன் வேலை தேடி வந்து நிற்கிறான். அதே பெரும் வணிகன் அங்கு மீண்டும் வர, அவனிடமே மீண்டும் வேலைக்குச் சேர்ந்து தங்கமலைக்குச் சென்று வணிகனை மாட்டிவிட்டுத் தான் தங்கக் கட்டிகளை மூட்டைகட்டி, காதலித்த பெண்ணுடன் கூடிக் குடும்பம் நடத்துகிறான்.’
-- இது ருஷ்ய நாட்டு வாய்மொழிக் கதைகளில் ஒன்று. இந்தக் கதையை ஆராய்ந்தால் பல சூட்சுமங்கள் உட்குறிப்புகளாகக் காணக் கூடும். உழைப்பைச் சுரண்டும் பெரும் வணிகன், கூலியில் சமரசம் செய்து கொள்ளாத சந்தை மனிதன், தோண்டினால் வளம் கொழிக்கும் தங்க வயல், உரிய நேரத்தில் தப்பிக்கவில்லையென்றால் குத்திக் கிழிக்கும் பெருத்த காக்கைகள், தற்காப்புக்குக் காதலி தந்த மாயப் பொருள், மீண்டும் சந்தையில் உழைப்புக்குப் பேரம் படியும் போது வழியை மாற்றிக் கெலித்த மனிதன் - என்று பல குறிப்புகளும் அடங்கிய கதை ஒன்று வாய்மொழிக் கதையாக ருஷ்யாவில் வழிவழியாக வந்திருக்கிறது.
இப்பொழுது நாம் பாரதியாருக்கு வருவோம். தம் வாழ்க்கையையும் பாரதியார் ஒரு சந்தையாக உருவகப்படுத்திப் பார்க்கிறார். தாம் வணிகன் இல்லை. ஆனால் வாழ வழிகாட்டும் ஒரு துணை என்னவோ தேவை. ஆயினும் வந்து நிற்பதோ ஒரு சேவகன். தன்னைக் கண்ணன் என்று அழைப்பார்கள் என்று சொல்கிறான். ‘கூலி மிகக் கேட்பார். கொடுத்ததெல்லாம் தாம் மறப்பார்.’ஆனால் வேலை மட்டும் நடக்காது என்று இருக்கும் சூழ்நிலையில் கூறி முடிக்கும் முன்னர் வேலையை முடித்து நிற்கும் இப்படி ஒரு சேவகன் அதிசயம்தானே! ஆனால் ஒரே ஒரு கஷ்டம். இந்தச் சேவகனிடம் அதிகாரம் செய்தால் ஒன்றும் நடவாது. தன்னிடம் நாம் தோற்க வேண்டும். அந்தத் தோல்வியையும் மனம் உவந்து கைகளைத் தூக்கி ஒப்புக் கொண்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதிசயச் சேவகன் இந்தக் கண்ணன். இந்தச் சூட்சுமத்தைக் கண்டுபிடித்து விடுகிறார் பாரதியார். ஆனால் கண்டுபிடித்த பின்னர் கண்ணன் அங்கு நிற்பதில்லை. வாழ்க்கையின் இரகசியமே கண்ணன் ஆகிய தன்னிடம் உவந்து தோற்பதும், அந்தத் தோல்வியை உண்மையுடனும், உள்ளம் ஒப்பியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திலும்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவே வந்தவன் போல் சென்றுவிடும் சேவகன் கண்ணன் என்று காட்டுகிறார். இது பாரதியாரின் கற்பனைக் கதை என்றோ அல்லது அவர் வாழ்வின் மீநிஜக் கதை என்றோ சொல்லலாம்.
” கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்;
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
என்றுபல சொல்லி நின்றான்
''ஏது பெயர்? சொல்'' என்றேன்
''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்;
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறுக'' என்றேன்.
''ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்
ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு, மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டு விட்டேன். அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது.
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!”
இவ்வாறு பாரதியார் கண்ணனைச் சேவகனாய் அடைந்து பெற்ற நன்மையைக் கூறியவர், அவனை அதிகாரம் செலுத்தி ஆளத் தொடங்கும் போது தாம் தோற்றதையும், அந்தத் தோல்வியைத் தாம் உவந்து உண்மையாய் ஒப்புக்கொண்ட பொழுது அதே கண்ணன் தமக்குத் தந்த வாழ்க்கைச் செய்தியையும் கண்ணன் என் சீடன் என்ற பகுதியில் கூறுகிறார்.
“மகனே, ஒன்றை ஆக்குதல் மாற்றுதல்,
அழித்திடல் எல்லாம் நின்செயல் அன்று காண்.
தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய், உலகினில் வேண்டிய தொழில் எலாம்
ஆசையும், தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ’ என்றான்”
வணிகனும், மனிதனும் சந்தையில் நின்று உரைக்கும் செய்தியைச் சுமந்து ருஷ்ய நாட்டு வாய்மொழிக் கதை கூறும் குறிப்பும், பாரதியார் கண்ணனைச் சேவகனாய், தம் சீடனாய்க் கருதி அடைந்த வாழ்க்கை உபதேசமும், நன்மைகளும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன என்றால் இலக்கியம் ஆதிமனிதக் குரலைச் சுமந்து வரும் சரடு என்பதில் என்ன சந்தேகம்?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***