Saturday, October 24, 2020

சுவாமி அபேதாநந்தர் அருளிய துதிப்பாக்கள்

 ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய துதிப்பாக்களில் சுவாமி அபேதாநந்தர் அருளியவை அதிகம் எனலாம். இன்னும் கூட அதிகமாக அருளிச்செய்திருக்காலாம் என்று நினைக்கத் தூண்டுபவை. அந்தத் துதிகளில் பஜ ராமகிருஷ்ண ஸ்தோத்திரம் என்பது ஒரு தனி அழகு! நாம் ஏதோ வழியல்லா வழிகளில் கண்டமேனிக்குத் திரிந்து களைத்து மரத்தடியில் மயங்கி விழுந்திருக்கும் பொழுது நம்முடைய நண்பரோ அல்லது உறவினரோ அல்லது ஆசிரியரோ மனம் வருந்தி முகத்தில் நீர் தெளித்து வாழ வழி சொல்வது போன்ற உணர்ச்சியைத் தரக் கூடியது. வாய்விட்டுப் பாடுங்கால் அழச்செய்து விடும் அருள்நலம் வாய்ந்தது.

ரே ப்ராந்த போகவிஷயேஷு கதம் ஹி ரக்தோ
மோஹம் கதோ ப்ரமஸி வர்த்மநி தீர்க்ககாலம்|
விச்ராந்திமிச்சஸி யதி ஹ்யநிசம் ஸுகாப்தௌ
ஸந்தாபஸம்ஸ்ருதிஹரம் பஜ ராமகிருஷ்ணம் ||
ஏ பைத்தியமே! இன்பவிஷயங்களில் பற்றுகொண்டு, மோஹம் அடைந்து பிரமையில் ஆழ்ந்து சுற்றித் திரிகின்றாயே நெடுங்காலமாக பைத்தியமே! பேரின்பமாகிய அமைதிப் பெருங்கடலில் ஆழ்ந்து ஸம்ஸாரப் பாலையின் வெப்பெல்லாம் நீங்கி விச்ராந்தியடைய நீ எண்ணினாய் ஆகில் துதிப்பாய் ராமகிருஷ்ணரை!
*
ஸ்ரீராமகிருஷ்ண லோகநாத ஸ்தோத்திரம் என்பது சுவாமி அபேதாநந்தர் அருளியது. அதில் ஒரு ஸ்லோகம் -
‘பூஜிதா யேந வை சச்வத் ஸர்வேSபி ஸாம்ப்ரதாயிகா:
ஸம்ப்ரதாய விஹீநோ ய: ஸம்ப்ரதாயம் ந நிந்ததி |
நமோSஸ்து ராமக்ருஷ்ணாய தஸ்மை ஸ்ரீகுரவே நம: |’
யாரால் அனைத்து சம்ப்ரதாயத்தினரும் பூஜிக்கப் பட்டார்களோ, யார் தமக்கென்று ஒரு தனி சம்ப்ரதாயம் அற்றவராய் இருந்தாரோ, எந்த சம்ப்ரதாயத்தையும் இகழாமல் இருந்தாரோ, அந்த ஸ்ரீகுருநாதரான ஸ்ரீராமகிருஷ்ணருக்கு நமஸ்காரம்.
*
வாஸனைகள் இருந்தால் ஆசைகள் உண்டாகும். அவருக்கோ வாஸனைகள் எதுவும் கிடையாது. ஆனால் வேட்கை இருந்தது. ஆம். பிறருக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்பதில் அப்படி ஒரு வேட்கை! அவரிடமிருந்து கர்மங்கள் கழன்று போயின. ஆனால் பிறருக்காக எப்பொழுதும் பிறர் ஆத்ம நலத்திற்காகச் செயல்கள் செய்தவண்ணம் இருந்தார். பிரம்மம் என்பதில் பிரதிஷ்டையாய் இருந்தவர். அவருக்கு ஏது துக்கம்? ஆனாலும் எப்பொழுதும் வருந்தியவண்ணம் இருந்தார். ஆம் ஆத்ம ஞானமடையாமல் உலகியலில் அமிழ்வோரைக் குறித்து, பக்தர்கள் தம் பக்தியில் முன்னேற வேண்டும் என்று எப்பொழுதும் கவலை, வருத்தம்! அப்படியெல்லாம் இருந்தவரான ராமகிருஷ்ணரைத் துதிப்பாய்.
நிர்வாஸநோSபி ஸததம் பரமங்களார்த்தீ
நிஷ்கர்மகோSபி ஸததம் பரகர்மகர்த்தா
நிர்துக்கலேசமபி தம் ஸததம் பரேஷாம்
துக்கேஷு காதரமஹோ பஜ ராமக்ருஷ்ணம் ||
(சுவாமி அபேதாநந்தர்)
*
என்னவோ சாஸ்திரங்கள், இந்த நூல் அந்த நூல் என்று ஆத்ம ஞானத்திற்கு உதவாத பிரயாசைகளையெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறாயே, இன்னதுதான் முடிவாகச் சொல்ல வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு அதற்குத் தகுந்தாற்போல் ஜோடித்து தர்க்கங்களை அமைத்துக் காட்டும் முயற்சிகள் பலதும் என்று நீ அறிய மாட்டாயா? உண்மை உணர்ந்த ஞானியர் கூறுவதற்கு நேர் விரோதம். தாமும் இன்னதுதான் முடிவு என்று எதையும் கூறா அவை. மந்த புத்தியுள்ள நீ அவற்றை ஒதுக்கு. சந்தேகம், பிரமை எல்லாம் அகற்றும் ராமகிருஷ்ணரைத் துதிப்பாய்.
சாஸ்த்ரேஷு அநாத்மஸு கதம் ஹி தவ ப்ரவ்ருத்தி:
துஸ்தர்கஜாலம் இஹ தேசிக வாக்விருத்தம் |
ஸித்தாந்தஹீநமபி ஸந்த்யஜ மந்தபுத்தே
ஸந்தேஹவிப்ரமஹரம் பஜராமக்ருஷ்ணம் ||
***

No comments:

Post a Comment