Saturday, October 24, 2020

ஞானபாகம் பொதுவுடைமை?

 ’ஞானபாகம் பொதுவுடைமை’ இப்படி ஒருவர், மேடைப் பிரசங்கியார்,பலகாலம் முன்பு என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. என்ன அர்த்தமிதற்கு? அதாவது அறிவு என்பது யாருடைய தனிச் சொத்தும் அன்று. அனைவருக்கும் பொதுவானது என்பதுதான் அதன் பொருளோ? பார்த்தால் நியாயம்தானே என்று கூடச் சமயத்தில் தோன்றலாம். ‘லாம்’ என்றால் அப்பொழுது உண்மையில் உண்மையில்லையா? ஆம் உண்மையில்லை. இருந்தாலும் உண்மைதான். குழப்பம்.

அதாவது அறிவதில் ஆர்வம் கொண்டு முயல்வோர் யாருக்கும் சரியான விதத்தில் முயற்சி அமையும் போது, அதுவரை விடாத முயற்சியும் தொடரும் போது கிடைக்கக் கூடியதுதான் அறிவு என்பது. இன்னாருக்குத்தான் கிடைக்கும் என்று இயற்கையில் தடையில்லை. மனிதர் பொதுவானது. ஒரு உராங்குட்டான் எவ்வளவு முயன்றாலும், அது முதலில் முயற்சி செய்யுமா, முயற்சி செய்ய வேண்டும் என்று அதற்கு முதலில் அறிவுத் தேட்டம் விழுமியமாக அமைய இயலுமா, சரி எவ்வளவு முயன்றாலும் இயற்கை வைத்த தடையை அகற்றுவது இன்றைய நிலைவரையில் பார்த்தால் முடியாது. ஏதோ சில வார்த்தைகள், பொருளுக்கும், சொல்லுக்கும் தொடர்பை நெடும் பழக்கத்தால் நினைவில் கொள்ளுதல் போன்ற சில இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நூலகத்தில் புத்தகம் தேர்ந்தெடுத்துவிட்டுப் பதிவேட்டில் பதிய நிற்கும் க்யூவில், பின்னாடியில் இருந்து முதுகில் சொரிந்து ‘எக்ஸ்க்யூஸ் மி, அர்ஜண்டாகப் போக வேண்டும். நான் முன்னால் சென்று பதிந்துகொண்டு போகிறேன். அனுமதிப்பீர்களா’ என்று உரங்கார் சொல்லும் நிலை ஒரு நாளும் உருவாகாது எனலாம். ஏனென்றால் மூளை அமைப்பு, இயற்கையின் வடிவம் எல்லாம் காரணம்.
சரி மனித வடிவம், மூளை எல்லாம் இயற்கைதான் தந்துவிட்டதே, அனைவருக்கும் ப்ளக்கில் சொருகினால் போல் அறிவு டவுன்லோட் ஆகிறதா என்று பார்த்தால் ம்.. ம் அதற்கும் வழியில்லை. நீங்கள் கருத வேண்டும். விழைய வேண்டும். வேட்கை வேண்டும். பிறகு சரியான முயற்சி. ஓ தட் சிம்பிள்! முயற்சி செய்ததும் கிடைத்து விடுமா? ‘லாம்’ தான் இங்கேயும். விடாப்பிடியான வைராக்கியம் வேண்டும். வெறுமனே முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டுவிட்டால் வைராக்கியம் வந்துவிடாது. ஏக்கம் அடிப்படையாக இருந்தால்தான் வைராக்கியமும் வரும். இல்லையென்றால் வெறுமனே ஊருக்காக வெற்று விரைப்பு என்று ஆகிவிடும். பெரும்பாலும் காமெடி பீஸில் முடிந்துவிடும். எனவே இங்குதான் இருக்கிறது அறிவு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் தன்மை, முயற்சி, ஆர்வம் பொறுத்த தனிப்பட்ட ஈட்டம் என்பது சொல்லாமலே விளங்கும். அவ்வாறு ஈட்டிய அறிவர்கள் தம் கருணையினால் பின்னால் தம்மைப் போல் பேரார்வம் கொண்டு ஏக்கம் கொண்டு முயலும் மாந்தருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று தாம் பெற்ற அறிவையும், பட்ட கஷ்டங்களையும் பற்றி எழுதி வைத்துவிட்டுப் போகலாம். சொல்லிவிட்டுப் போகலாம். உடனே ஆகா பொதுவுடைமை ஆகிவிட்டது. இனி விட்டது கவலை. ஜாலி. குழாயைத் திறந்தால் தண்ணி, நூலைத் திறந்தால் அறிவு என்று டோண்ட்கேர் டான்ஸெல்லாம் ஆடமுடியாது. காரணம், நூலைத் திறந்தால் வரிகள் இருக்கும், எழுத்துகள் இருக்கும், மொழி இருக்கும், மொழியமைதி இருக்கும், சொல்லப்பட்ட பொருள் பாதி, குறிப்புணர்த்தும் பொருள் மீதி என்று இருக்கும். அத்தனைக்கும் ஒழுங்கான பயிற்சி அடிப்படையாக அமைய வேண்டும். பிறகு நூலின் வாக்கியங்களை நெட்டுரு போட்டு ஒப்பித்தால் சாக்கலேட்டுத்தான் கிடைக்கும் அறிவு கிடைக்காது. ஏனெனில் அறிவை உற்று உள்வாங்கும் உணர்வு உள்ளே விழிக்க வேண்டும். அதெல்லாம் யார் சார் பார்த்துக்கிட்டு.. இருக்கவே இருக்கு காப்பி பேஸ்ட், யாருக்குத் தெரியப் போறது... என்றால் இம்சை அரசனில் போல் உராங்ஏ காறியுமிழ்ந்துவிடும்.
இவ்வளவு ஏன் என்று மிக அழகாகச் சொல்லிக் கொடுக்கிறார் திருவள்ளுவர் - எப்படிக் கற்பது என்று -
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
இருக்கறவங்க முன்னால் நின்று ஏதேனும் கிடைக்காதா என்று இல்லாதவர்கள் ஏங்கி நின்று வாங்குவது போல், அறிவு நம்முள் உண்டாகும் வழிவகை யாதோ என்று கவலை கொண்டு, ஏக்கத்துடன் விடாமல் முயற்சி செய்வோருக்கே அறிவு உடைமையாகும்.
***

No comments:

Post a Comment