Monday, September 14, 2026

புனித கங்கையும் பிள்ளையாரும்

புராணங்களில் வம்சாவளிகளை வைத்தும், காலநிரலை வைத்தும் ஆய்நது பார்த்து, காலத்தால் முந்தைய புராணங்கள் எவையாக இருக்கலாம் என்று ஒரு கருத்தை உருவாக்கும் ஸ்ரீ பி எல் பார்க்கவா என்னும் அறிஞரின் கருத்துப் படி, காலத்தால் முந்தைய புராணங்களில் ஒன்றாக பல அம்சங்களில் தெரிய வருகின்ற புராணம் பிரம்ம புராணம் எனலாம். மிகப் பழையது என்றால் மார்கண்டேய புராணம், அதற்கடுத்து வாயு புராணம், அடுத்து விஷ்ணு புராணம் என்று வரும். புராணங்களின் காலநிரலை மிகத் துல்லியமாகச் சொல்லிவிடவும் முடியாது. ஆனால் அல்பரூனி 1000 கி பி யில் எழுதும் நூலில் புராணங்களின் ஒரு நிரலைத் தருகிறார். அதில் பிரம்ம புராணம் இருக்கிறது. 

பிரம்ம புராணத்தில் ஒரு பகுதி கௌதமீ மாஹாத்ம்யம் என்பது. கௌதமீ என்றால் கங்கையைக் குறிக்கிறது. அதாவது கௌதம ரிஷியால் கொண்டுவரப் பட்ட கங்கை என்னும் பொருளில் கங்கைக்குக் கௌதமீ என்று பெயரும், அந்தக் கங்கையின் பெருமையைக் கூறுவதால் இந்தப் பகுதிக்குக் கௌதமீ மாஹாத்ம்யம் என்றும் பெயர். கௌதம ரிஷியும் தன்னைப் போல் கங்கையைக் கொண்டு வந்துவிடவில்லை. அவரைக் கொண்டுவரும்படிச் செய்தது நமது பிள்ளையார் என்பதுதான் பழம்புராணம் தெரிவிக்கும் விஷயம். அதைப் பற்றிச் சில குறிப்புகளையும், உட்கருத்துகளையும் இங்குப் பார்ப்போம் என்பதுதான் இந்த ‘புனித கங்கையும், பிள்ளையாரும்’ என்னும் கட்டுரை. 

பொதுவாகப் புராண இதிகாசக் கருத்துப்படிக் கங்கையைக் கொண்ரந்தது பகீரதன் என்னும் அரசன் என்றும், எனவேதான் கங்கைக்கே பாகீரதி என்றும் பெயர் வந்தது என்றும் படித்திருப்போம். ஆனால் கங்கையைக் கௌதமர் கொணர்ந்த செய்தியும், அதற்குக் கணேச பகவான் காரணமாக இருந்ததையும் பழம்புராணமான பிரம்ம புராணம் சொல்கிறது. ஹரஹர மஹாதேவரின் ஜடாமகுடத்தில் அடைபட்டுக் கிடந்த கங்கையென்றும், அந்தக் கங்கையை மண்ணகமும், மனிதர்களின் ஆன்மிகமும் ஒருங்கே பயனுற வேண்டிப் பார்வதி தேவி, இமயத்து அன்னை உமாதேவி பிள்ளையாரை அதற்கான ஆவன செய்யுமாறும், தம் இளவல் குஹனாரைக் கலந்து ஆலோசித்துக் கணேச பகவான் கௌதம ரிஷியை அதற்காக ஊக்கப் படுத்தினார் என்றும் பிரம்ம புராணம் சொல்கிறது. 

பெரும் வறட்சி நிலவிய காலம். ‘சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’ என்று திருவள்ளுவரின் வாக்குப்படி, வேள்வியோ, பூசனையோ எங்கும் நின்று போன காலத்தில் அவற்றை விடாமல் செய்து புகழ் பெற்றவர் கௌதமர். அவற்றோடு தானம், தவம் இரண்டும் தங்கிய தளராத வாழ்க்கையை வாழ்ந்தவரும் அவரே. எனவே அவருடைய வேண்டுதலைத்தான் சிவனார் செவி மடுப்பார் என்று கருதிய பிள்ளையார் கௌதமரைச் சிவனாரிடம் சென்று கங்கையை மக்களுக்குப் பயனுறப் பெற்றுத்தருமாறு மூட்டினார். சிவனாரும் கௌதமரின் பொதுநல ஊக்கத்தில் மனம் மகிழ்ந்து என்றென்றும் புனிதம் நல்கும் பொன்னதியாகக் கங்கையைத் தந்தார் என்பது பிரம்ம புராணம். 

தவம் என்று தனிப்பட்ட ஆன்மிகம் தழைத்திருந்த காலத்தில் தீர்த்தாடனம் என்ற மக்கள் பொதுவான ஆன்மிக நன்மைக்காக வழிவகுத்தவர் பிள்ளையார் எனலாம். எனவேதான் நதிக்கரையே பெரும்பாலும் தமது இடமாகக் கொண்டு விளங்குகிறார் போலும்.! சிவனாரின் ஜடாமுடி தவம் என்னும் ஆன்மிகத்தைக் குறிக்கிறது என்றால், தவத்தில் ஊறிக் கனிந்த தயையான உமாதேவியின் கருணை தீர்த்தாடனம் என்னும் பொது ஆன்மிக வாய்ப்பாட்டிற்குக் காலம் மாறுவதை ஆசி கூறித் தடை அகற்றும் பெருங்கருணையாகப் பிள்ளையாரை நியமிக்கிறது என்றுதான் கருதத் தோன்றுகிறது. பொது ஆன்மிகத்தின் ஊற்றுக் கண்ணிலேயே பிள்ளையார், விநாயகர், கணேசர் கோயில் கொண்டு விடுகிறார். 

விநாயகரால் ஊக்கப்படுத்தப்பட்ட கௌதமர் கேட்டதற்கு இணங்கி கங்கை தன்னை மூன்று பிரிவாகப் பிரித்துக் கொண்டது. மண்ணுலகத்திற்கு ஒன்று, பாதாளத்திற்கு ஒன்று, தேவ லோகத்திற்கு என்று ஒன்று. கண்ணுக்குத் தெரிவது ஒரு கங்கை ஆனாலும் உண்மையில் மூன்று கங்கை. தொடக்கம் முதல் கடைசி வரை தெய்வத்துவம் குறையாமல் ஓடுகிறது கங்கை. அஞ்ஞானிகளுக்கு அதன் தெய்வத்தன்மை கண்ணில் தெரியவில்லை. ஓடும் நதியெல்லாம் கங்கைதான் தீர்த்தாடனம் என்னும் பார்வையில். தீர்த்தாடனம் என்னும் புனிதம் நிகழும் இடமெல்லாம் கோயில் கொண்ட பிள்ளையாகக் காட்சி தருவது விநாயகர். 

’த்ரேதாSத்மாநம் விபஜ்யாத ஸ்வர்கமர்த்யரஸாதலே |... ஸர்வத்ர ஸர்வபூதைவ ஸர்வபாப விநாசினி | ஸர்வகாம ப்ரதா நித்யம் ஸைவ வேதே ப்ரகீயதே |’ (பிரம்ம புராணம், 76ஆவது அத்யாயம்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment