Tuesday, April 21, 2026

ஒற்றை விளக்கு (ஏகச்லோகீ ப்ரகரணம் - ஸ்ரீஆதிசங்கரர்)

நூறு செய்யுள், பத்துச் செய்யுள், ஐந்து செய்யுள் என்ற அளவில் எல்லாம் அத்வைதப் பேருண்மையை எளிமையாக விளக்கி நூல்கள் செய்த ஆதிசங்கரர் ஒரே செய்யுளிலும் அந்த அத்வைத தத்துவத்தைப் புரிய வைக்கும் அற்புத சுலோகம்தான் இந்த ஏகச்லோகீ என்பது. முக்கால் வரியிலேயே கூட அத்வைதத்தை விளக்கிக் காட்டியவர்தான் ஆதிசங்கரர். 

அத்வைத தத்துவம் யாது என்று அறியத் துடிக்கும் மனத்திற்கு அந்த முக்கால் வரியே போதுமானது. அந்த வரி இதுவாகும். ‘ப்ரஹ்ம ஸத்யம், ஜகன்மித்யா, ஜீவோ ப்ரஹ்மைவ, நாபர:’

இதன் பொருள் - பிரம்மம் மட்டுமே சத்யம். இந்த ஜகம் மித்யையே ஆகும். இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமேயாக இருக்கிறது. வேறாக இல்லை. 

முக்கால் வரியில் உணர்த்தியதை ஒரு சுலோகத்திலும் உணர்த்துகிறார் பகவத்பாதர். இந்த ஒரு சுலோக நூல் தோன்றிய சூழலைப் பற்றி உரையாசிரியர்கள் சில தகவலைத் தருகின்றனர். கண்ணொளி இல்லாது போன ஒருவர் ஸ்ரீஆதிசங்கரரைக் காண ஏங்கியதாகவும், அவரிடம் பகவத்பாதர் சென்று காண்பதற்கான ஒளி என்பதை வைத்தே படிப்படியாக விளக்கி, ஒற்றை விளக்காகவும், ஒற்றை ஜோதியாகவும் இருப்பது ஆத்மா என்றும், அதுதான் உண்மையில் அவரே என்றும் உணர்த்தி ஞானம் நல்கினார் என்பது சூழலின் கதை. 

ஒரே சுலோகம் என்பதால் ஒவ்வொரு சொல்லும் நன்கு நிறுத்தி நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உலகில் பொருளை நமக்குக் காட்டித்தரும் ஒளி எது? ஜோதி எது? என்ற கேள்விதான் தொடக்கம். 

இதை ஸ்ரீஆதிசங்கரர் கண்ணொளி இழந்த அந்த மனிதரை நோக்கிக் கேட்டதாக நினைப்பதைவிட நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கிறார் என்பதும் பொருத்தமாக இருக்கும். நாம் உண்மையைக் காணும் கண்ணொளி இல்லாமல்தானே அவதிப்படுகிறோம்? இனி சுலோகத்துள் போவோம். ஆதிசங்கரர் கேட்பதற்கு நம்முடைய பதில் என்று படிப்படியாகப் போகிறது. 

பொருள் இருப்பதைத் தெரிவிக்கும் வெளிச்சம் உனக்கு எது? 

பகலில் சூரியன் தான். சூரிய ஒளியில்தான் நாம் பொருட்களைப் பார்க்கிறோம். 

ஆனால் இரவில் உனக்குச் சூரிய வெளிச்சம் இருக்காதே! அப்படியென்றால் இரவில் உனக்கு உற்ற வெளிச்சம் எது? 

இரவில், ஏற்றிவைக்கப்படும் விளக்கு, மற்ற தீபங்கள் (நம் காலத்தில் இன்னும் அதிகமான விளக்குச் சாதன வகைகள்) இவைதாம் எனக்கு வெளிச்சம். 

அப்படியா? இருக்கலாம். ஆனால் சூரியனும், விளக்குகளும் இருந்தாலும் அந்தச் சூரியனும், விளக்குமே இருப்பது தெரியவேண்டும் என்றால் அதற்கு என்ன வெளிச்சம்? 

சூரியனையும், விளக்கையும் காட்டும் வெளிச்சமா? ஹாங்.. அது என் கண்கள்தாம். 

சரி. உன் கண்கள் 24 மணி நேரமும் மூடாமல் அயராமல் திறந்து பார்த்துக்கொண்டேவா இருக்கிறது? தூக்கத்தில் கண்கள் மூடிவிடுகின்றன. மூர்ச்சையில் கண் திறந்திருந்தாலும் பார்ப்பதில்லை. அப்படியென்றால் கண்ணே மூடிய பொழுதும் இருக்கும் வெளிச்சம் எது? 

கண்ணே மூடிய பொழுது ... என் புத்திதான் அப்பொழுது வெளிச்சம். அதாவது மனம். கண் தூங்கிய நிலையிலும் என் மன உணர்வு இருக்கிறதே. கனவு காண்கின்றேனே! 

சரி. சிலசமயம் ’என் புத்தி சரியில்லை’ என்று கூறுகிறாய். ’மனம் சரியில்லை’ என்று உணர்கிறாய்? அப்படியென்றால் மனத்தையும், புத்தியையும் உணரும் வேறு ஒரு வெளிச்சம் உண்டல்லவா? அது எது? 

... அது ’நான்’ தான். 

ஆம். நீர்தான் உமக்கு மேலான ஒரே வெளிச்சம். கடைசியில் மறையாமல் நிற்கும் ஒற்றை விளக்கு நீர்தான். நன்கு யோசித்துப் பாரும். புரியும். 

ப்ரபுவே! அந்த ஏக ஜோதி, ஒற்றை விளக்கு, தனிச்சுடர், அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியான ஒளி, அருட்பெரும் ஜோதி, அதுவாகத்தான் நான் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன் பிரபுவே! திறக்க வேண்டிய கண் திறந்து கொண்டது. என்றும் இருக்கும் ஒற்றை விளக்கு, அதுதான் நான் என்பது புரிந்தது. “ 

“ கிம்ஜ்யோதிஸ்தவ பானுமான் அஹநி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம் 

ஸ்யாதேவம் ரவிதீபதர்சநவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே | 

சக்ஷுஸ்தஸ்ய நிமீலநாதிஸாமயே கிம்தீர்தியோதர்சநே 

கிம் தத்ராஹமதோ பவாந் பரமகம் ஜ்யோதிஸ்ததஸ்மி ப்ரபோ || “ 

இந்த ஒற்றைச் சுலோகத்தில் ஸ்ரீஆதிசங்கரர் பிரகதாரண்யக உபநிஷதத்தின் 4ஆவது அத்யாயம், மூன்றாவது பகுதியில் யாக்ஞவல்க்யருக்கும், ஜனகராஜருக்கும் நடந்த ஸம்வாதமான ஜோதி என்பது எது என்னும் உபதேசத்தையே சுருக்கித் தந்துவிட்டார் என்கிறார்கள் உரையாசிரியர்கள். பிரகதாரண்யக உபநிஷதத்தில் வரும் அந்தக் கட்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சி என்னவென்றால் - 

ஒரு நாள் ஜனகரின் சபைக்கு யாக்ஞவல்கியர் அரசரைக் காணச் சென்றார். போகும் பொழுதே இன்று மன்னன் என்ன கேட்டாலும் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்று முடிவு கட்டியவண்ணம் சென்றார். 

(கேள்வி கேட்டே எல்லாவற்றையும் போட்டு வாங்கி விடுவார் போல் இருக்கிறது ஜனகர்!). 

ஆனால் மன்னர் அதைவிடக் கெட்டிக்காரர். முன்னொரு சமயம் ஏதோ சந்தர்ப்பத்தில் இதே யாக்ஞவல்கியர் ஜனகருக்கு ஒரு வரம் தந்திருக்கிறார். அதாவது எப்பொழுது வேண்டுமானாலும், விரும்பிய எதைப் பற்றியும் வேண்டியவாறு கேட்டுத் தன்னிடமிருந்து விடையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அந்த வரம். பாவம் முனிவர் மறந்து விட்டார். மன்னர் அதை நினைவு வைத்திருந்து இப்பொழுது அந்த வரத்தின்படிப் பதில் சொல்லுமாறு கேட்க வேறு வழியில்லாமல் யாக்ஞவல்கியர் பதில் சொன்னார் என்று வருகிறது அந்தச் சூழல். 

(எப்படியாவது நம்மையெல்லாம் கேள்வி கேட்குமாறு தூண்டுவதற்குச் செய்யப்படும் சூழ்ச்சி! நாமா அசருவோம்?) 

மன்னர் கேட்ட கேள்வியே இதுதான். எது நமக்கு வெளிச்சம்? எது மாறாத ஜோதி? என்னும் கேள்வி. அந்தப் பகுதிக்கே பெயர் ஜோதிப் பிராம்மணம் என்பது. அதை இன்னும் சுருக்கித்தான் இங்கே ஒற்றைச் செய்யுள் ஆக்கித் தந்துவிட்டாரே கருணையின் மூர்த்தி! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, April 12, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 05

எல்லையே அற்ற சுகவாரி ஆக இருப்பது ஆத்மா. அந்த ஆத்ம சுகத்தின் ஒரு திவலையில் திளைத்துத்தான் இந்திரன் முதலிய பதவியில் இருப்போரும் சுகிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த ஆத்ம சுகத்தை, தம் ஸ்வரூப சுகத்தை, தம் மனத்தில் அலைகளே எழாவண்ணம் மனம் அடங்கிய முனிவர்கள், என்றும் துய்த்தவாறு ஆனந்தபரர்களாக இருக்கின்றனர். அந்த நித்ய சுகம் ஆகிய எல்லையில்லாத பெருங்கடலில் தம்முடைய மனம் கரையப் பெற்றவர் எவரோ, அவர் யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் பிரம்ம ஞானியாகக் கூட ஆவதில்லை. பிரம்மமேயாக ஆகிவிடுகிறார். அவர் யாராய் இருந்தால் என்ன? அவர் குருமட்டும் அன்று. இந்திரன் முதலிய தேவதைகள் எல்லாம் தொழத்தக்க நிலையை அடைந்து விடுகிறார். இதுதான் தம்முடைய நிச்சயமான கருத்து என்று மநீஷா பஞ்சகத்தை நிறைவு செய்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

இனிப்பு இருக்கிறது. அதை ஒருவர் வாயிலிட்டுச் சுவைத்தால் அதன் இனிப்பை உணர முடியும். பிரம்மானந்தமாகிய ஆத்ம சுகத்தை அவ்வாறு அனுபவிப்பவரை நாம் பிரம்மத்தை உணர்ந்தவர் என்று கூறலாம். ஆனால் ஒருவர் பிரம்மமேவாக ஆகிவிட்டார் என்று சொன்னால் அவரை எப்படிப் பிரம்ம ஞானி என்று சொல்ல முடியும்? இனிப்பேயாக ஒருவர் ஆகிவிட்டால் இனிப்பைச் சுவைக்கும் அனுபவம் நிகழ முடியுமா? இனிப்பு விஷயத்தில் அது முடியாது. ஏனெனில் ஒரு சில புலன்கள், சூழ்நிலைகள், பொருட்கள் என்ற மாதிரியான உபாதிகளை முன்னிட்டு ஜீவன் உணரும் சுகம்தான் உலக சுகம் எல்லாம். அதுபோல் அறிதல் என்னும் உபாதியை முன்னிட்டு, மனத்தின் அறிவு நிகழ்ச்சி என்னும் உபாதியை முன்னிட்டுப் பிரம்மத்தை அனுபவிப்பது என்பது பிரம்மத்தை அறிந்து அனுபவித்தல் என்னும் பொருள்கொண்ட பிரம்மவித் என்னும் நிலையைத் தருகிறது. ஆனால் அந்த உபாதியும் அகன்று, எந்த உபாதியும் இல்லாத பிரம்மமேயாக ஒருவர் ஆகிவிட்டால், உபாதிகளுக்கு நிலைக்களனாய் இருக்கும் மனம் என்பதே ஆத்மா என்பதில் கரைந்து போய்விட்டால் பின்னர் யார் அறிவதற்கு இருக்கிறார்கள்? அங்குப் பிரம்மம் மட்டுமே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ‘அது ஆனால் அதுவாவர். அதுவே சொல்லும்’ என்கிறார் ஸ்ரீதாயுமானவர். 

‘யத்சௌக்யாம்புதி லேசலேசத இமே சக்ராதயோ நிர்வ்ருதா: 

யத்சித்தே நிதராம் ப்ரசாந்தகலனே லப்த்வா முநிர்நிர்வ்ருத: | 

யஸ்மின்நித்ய சுகாம்புதௌ கலிததீர் ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித் 

ய: கச்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மநீஷா மம ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, April 10, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 04

விளக்கை ஏற்றுகிறோம். பொருள்கள் தெரிகின்றன. அதற்கு முன்னர் இருட்டிலும் பொருள் இருந்தது. ஆனால் அதன் இருப்பு தெரியவில்லை. விளக்கின் ஒளி அதைத் தெரிவிக்கிறது. நம்மால் விளக்கின் ஒளியையும் பார்க்க முடிகிறது. பொருளையும் பார்க்க முடிகிறது. ஆனால் அல்ட்ராவைலட் ஒளி இருக்கிறது. அது நம் பார்வைக்குத் தெரியாது. ஆனால் பொருளில் அந்த யூ வி வெளிச்சம் பட்டு அந்தப் பொருள் ஒளிரும். இருட்டில் யூ வி லைட் போட்டால் பொருள் மட்டும் அலாதியாக ஒளிரும். பொருள் ஒளிர்வதை வைத்து நாம் யூ வி லைட் ஒளி இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறோம். 

ஆத்மா என்பது அறிவுமயமான ஒளி. அது இருப்பதால்தான் நாம் வெளியில் பொருள் இருப்பதையோ, அல்லது நமக்குள் மனம், புலன்கள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் உணரமுடிகிறது. நம்மில் ஐம்புலன் அறிவு ஏற்படுவதே நமக்குள் ஆத்ம ஒளி இருக்கிறது என்பதை அடையாளமாக நின்று காட்டுகிறது. 

எனவே, நமக்குக் கண்ணில் பொருள் தெரிகிறதே! அது போல் ஆத்மா எங்குத் தெரிகிறது? என்று நாம் நினைத்தால் அது நன்கு யோசிக்காமல் பேசும் பேச்சு. நமக்குக் கண்ணின் மூலம் காட்சி ஏற்பட்டு அந்தப் பொருள் இருப்பதாகப் புலன் அனுபவம் உண்டாவதே, அடிப்படையாக ஆத்ம ஒளி இருக்கப் போய்த்தான் ஏற்ப்படுகிறது. நாம் கண்ணால் பார்க்கிறோம் என்பதே, காதால் கேட்கிறோம் என்பதே, மூக்கால் முகர்கிறோம் என்பதே, நாவால் சுவைக்கிறோம் என்பதே, தொட்டு உணர்கிறோம் என்பதே உண்மையில் பார்க்கப் போனால் ஆத்ம ஒளி இருக்கிறது, இருக்கிறது என்று சான்று சொல்லும் அடையாளங்கள்தாம். இது விசித்திரமாக இல்லை! உலகில் நாம் அன்றாடம் அடையும் புலன் அறிவுகளே பார்க்கப் போனால் ஆத்மாவை நமக்குக் காட்டித்தரும் சாட்சிகள்தாம் என்பது? 

ஆனால் ஆத்ம ஒளியால்தான் நாம் புலன் அறிவுகளை அர்த்தப் படுத்திக் கொண்டாலும், உலகைக் காணும் உற்சாகம் நமக்கு உள் ஒளியான ஆத்ம ஒளியை மறைத்து விடுகிறது. சூரியனின் ஒளியில்தான் மேகங்கள் பலவேறு வடிவங்களில், பிரகாசமாக நமக்குக் கண்ணில் தெரிகின்றன. ஆனால் அதே சூரியனை அந்த மேகங்களே நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்தும் விடுகின்றன. அதைப் போன்று ஆத்ம ஒளியால் நமக்குப் புலனாகும் உலகம் அதே ஆத்மாவை நம் அனுபவத்தில் மறைக்கவும், மறக்கவும் செய்துவிடுகிறது. 

ஆனால் ஞானியானவர் என்ன செய்கிறார், உலகம் என்பதைக் காணும் போதே அதுவே ஆத்மா என்பதைக் காட்டும் என்பதை உணர்ந்து, உலகக் காட்சிகளூடே ஆத்மாவையே பார்க்கிறார். கோவிலுக்குப் போகிறோம். சந்நிதியில் தீபம் ஏற்றிக் காட்டுகிறார்கள். நாம் அந்தத் தீபத்தைப் பார்ப்பதில்லை. அந்தத் தீபத்தால் காட்டப்படும் மூர்த்தியைத் தரிசனம் செய்கிறோம். உலகமே ஒரு பெரும் தீபத் தட்டு. சதாசர்வ காலமும் தீபம் ஏற்றி நமக்கு இந்த உலகம் எதைக் காட்டுகிறது? நமக்குள் இருக்கும் ஆத்மாவைத்தான், அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்த பிரம்மத்தைத்தான் நாம் உணரக் காட்டுகிறது. ஆனால் உலகத்தின் தீபத்தட்டைப் பார்த்தபடியே நாம்தான் ஆத்மாவைப் பார்க்கத் தவறுகிறோம். ஞானி அந்த ஆத்மாவைப் பார்க்கிறார். அவர் பார்வையில் உலகமே ஆத்மாவுக்கான அடையாளம். அவருக்கு இந்த உலகமே ஆத்மாவைக் காட்டும் தீபம். என்றும் தடைப்படாத ஆத்ம தரிசனத்தைத் தியானித்தபடி இருக்கும் அவரே உண்மையில் குரு. இதுதான் என்னுடைய அறுதியான கருத்து என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘யா திர்யங்நரதேவதாபி: அஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே 

யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹ விஷயா பாந்தி ஸ்வதோSசேதநா: | 

தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந் 

யோகீ நிர்வ்ருத மானஸ: ஸ குரு: இத்யேஷா மநீஷா மம ||’ 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, April 9, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 03

நல்ல தூக்கம். கடுமையான கனவு. மலையில் ஏறிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று மலைச்சரிவு. பெரிய பாறை அப்படியே உருண்டு நெட்டுக் குத்தாகத் தலைமேல் விழ வருகிறது. ஓடுகிறீர்கள். ஓடி, பார்த்தால் நெடுஞ்சாலைக்கு வந்து விட்டீர்கள். ஓட்டம். திரும்பிப் பார்க்கிறீர்கள். அப்பொழுது கால்தடுக்கிப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் விழுந்து நனைந்தபடி நிலைமை. அப்பொழுது விழிப்பு. அந்தப் பாறை, ஓட்டம், தடுக்கு, குளம், நீரில் நனைதல் எல்லாம் என்ன ஆயிற்று? படுத்த நிலையில் எழுந்து உட்கார்ந்து என்ன ஆயிற்று என்று முழிக்கிறீர்கள். ஞானத்திற்கும், கர்மாவிற்கும் இதுதான் தொடர்பு. ஞானம் என்பது விழிப்பு. கர்மா, வினைப்பயன்கள் என்பது கனவு நிகழ்வு. ஆனால் கனவு முடிந்திருக்கலாம். ஆனால் அந்தப் பயம், அதில் வேர்த்து, ரத்த ஓட்டம் எகிறிப் பதட்டம் எல்லாம் விழித்த பின்பும் தொடரத்தானே செய்கிறது. அதனால்தானே ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டி எழுந்து போய் ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கிறீர்கள். நனவில் தொடரும் அந்தப் பதட்டம்தான் கர்மாவின் பிராரப்த வினைப்பயன். 

அதாவது கேள்வி என்னவென்றால், பிரம்மம்தான் சத்யம். இந்த உலகம் மித்யை என்று குருவின் உபதேசத்தாலும், அதை நன்கு உணர்வு பூர்வமாகத் தனக்குள் சுய ஞானமாக ஆக்கிகொண்டதாலும் அந்த ஞானியின் ஞானத்தீயில் அவரின் கர்ம பலன்கள் அழிந்து விடுகின்றன. என்றால், அது எப்படி? அதற்குத்தான் கனவு உதாரணம். ஆனாலும் கர்மாவில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. சேர்ந்து போன பழைய கர்மா (சஞ்சிதம்), இனிப் புதிதாகச் சேரும் கர்மா(ஆகாமி), இப்பொழுதைக்குப் பலன் தரத்தொடங்கியிருக்கும் கர்மா (ப்ராரப்தம்). பலன் தரத் தொடங்கியிருக்கும் வினைப்பயனால்தான் ஒரு ஞானியின் உடல் வாழ்க்கையே தொடர்கிறது. ஒரு ஞானி தொடர்ந்து இருந்து இந்த உலகிற்கு அவரால் விளையும் நன்மைக்கு வழிவகுப்பது இந்தப் பிராரப்த கர்மம் என்னும் தொடங்கியுள்ள கர்மாதான். 

விழிப்புற்ற ஞானியானவர் என்ன செய்கிறார்? தம் உடல், அதைச் சார்ந்த வாழ்க்கை இதையெல்லாம் பிராரப்த கர்மாவிற்கு ஒப்புக் கொடுத்துவிட்டுத் தாம் எந்த வினைப்பயனும் அற்றவராக இருக்கிறார். ஏன்? நிலைத்தது ஒன்றுதான். அது பிரம்மம். நிலயற்றது மற்றது அனைத்தும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட காரணத்தால் அவர் மனத்தில் ஏற்பட்ட பதிவுகள் என்னும் வாசனைகள் நீங்கி விடுகின்றன. மனம் புதிதாக எந்த அலையையும் ஏற்படுத்துவதில்லை. மனம் அடங்கிய நிலையில் உள்ளிருக்கும் ஆன்ம ஒளி தடைப்படாமல் பிரகாசிக்கிறது. இதுதான் என் முடிவான கருத்து என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘சச்வந்நச்வரமேவ விச்வமகிலம் நிச்சித்ய வாசா குரோ: 

நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருசதாம் நிர்வ்யாஜசாந்தாத்மநாம் | 

பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்விந்மயே பாவகே 

ப்ராரப்தாய ஸமர்பிதம் ஸ்வவபு: இத்யேஷா மநீஷா மம ||’ 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, April 3, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 02

அதாவது குரு என்பவர் யார் என்றால் தாம் இந்தத் தேகம் இல்லை. உள்ளே சதாசர்வ காலமும் விளங்கும் உணர்வு, சைதன்யம் இதுதான் தாம் என்று யார் உறுதியாக உணர்ந்துவிட்டாரோ அவர்தான் குரு. A teacher is one who has realised that one's identity is Consciousness and not the body. அவர் எதுவும் பேச வேண்டாம். அவர் இருந்தாலே போதும். அது உபதேசம் ஆகும். ‘எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி’ என்று வர்ணிக்கிறது திருவிளையாடல் புராணம். ‘பொய்யாம் சடக்கைச் சடக்கெனச் சதமென்று சின்மயம் தானாகி நிற்பது என்றோ’ (கடைசியில் பொய்யாகிப் போகும் இந்த உடலைப் பொய் என்று முதலிலேயே உணர்ந்து, நிலைத்தது சைதன்யம் என்று உணர்ந்து சின்மயம் ஆகித் தன் இயல்பும், உருவும் உண்மையில் சைதன்யமே என்று அவ்வாறே உணர்ந்து நிற்பது என்றோ) என்று பாடுகிறார் ஸ்ரீதாயுமானவர். 

‘தான்’ என்பது இந்த உடல், புலன்கள், மனம், புத்தி, சூழ இருக்கும் இந்த உலகம், இதில் தான் யார் என்றும், தன்னுடையது எது என்றும் பல உபாதிகளின் தொடர்பில் அந்தத் ‘தான்’ என்பது ஒருவருக்கு ஜீவன் என்றும், இன்னார், இன்ன பெயருடைய மனிதர் என்றும் சுய அடையாளமாக நடைமுறையில் தெரிகிறது. நீங்கள் யார் என்று கேட்டால் நாம் ஒரு பயோடேட்டாவே வைத்திருப்போம். ஆனால் இந்த உபாதிகள் சமபந்தப்பட்டுத் தோன்றும் சுய அடையாளம் நன்கு தத்துவ விசாரம் செய்யும் போது பரம உண்மையாக இருப்பதில்லை. நனவில் இருக்கும் மனிதர் கனவில் இருப்பதில்லை. கனவில் இருந்தவர் முழித்தபின் எங்குப் போனார் தெரிவதில்லை. ஆனால் எல்லாம் நாம்தான் என்று நினைவின் தொடர்ச்சியை வைத்துக்கொண்டு வியவகாரம் (நடைமுறை) போகிறது. நாம் என்பது உண்மையில் யார் என்று அக்கறையோடு விசாரம் செய்யப் போனால் உபாதிகளின் சம்பந்தம் அற்ற தூய சைதன்யம், சித் என்பதுதான் மிஞ்சுகிறது. அந்தச் சைதன்யம் என்பது அந்தப் பிரம்மமேதான். இவ்வாறு நன்கு விசாரம் செய்து ‘நான் இந்த உபாதிகளோ, உபாதிகளால் கட்டமைக்கப்பட்டுத் தோற்றமளிக்கும் ஜீவனோ, ஸம்ஸாரி மனிதரோ இல்லை. நான் உண்மையில் பிரம்மமே தான்’ என்ற நிச்சயம், ஐயங்கள் அற்ற திடமான உணர்வு ஒருவருக்கு ஏற்படுமேயானால் அவர் யாராய் இருந்தால் என்ன? சாத்திரம் கற்ற பிராம்மணராய் இருந்தாலும் சரி, அல்லது கீழ்க்குலம் என்று சொல்லப்படும் எவராய் இருந்தாலும் சரி அவரே உண்மையில் குரு என்பதில் சந்தேகமில்லை. 

இவ்வாறு ‘நான் பிரம்மமே தான். இந்த உலகம் அனைத்தும் அந்தச் சைதன்யத்தின் விரிவாகத்தான் புலப்படுகிறது. சைதன்யம் இல்லாது நேரடியாக இந்த உலகம் என்பது நம் உணர்வுக்கு வந்ததும் இல்லை. வருவதும் இல்லை. வரப்போவதும் இல்லை. எனவே ஜகத் முழுமையும் சித் என்பதின் விஸ்தாரம்தான். இந்த விஸ்தாரமான இவையனைத்தும் மட்டுமா உணர்வில் தோன்றுகிறது? தான் ஜீவன் என்றும் தோன்றுகிறது. ஜீவனாகிய தான் நற்கதிக்கு வேண்டிப் பிரார்த்திக்கின்ற ஈசுவரன் என்றும் வியவகார உலகில் உணர்வில் தோன்றுகின்றன. ஜீவன், ஜகத், ஈசுவரன் என்னும் மூன்றுவகையான இந்த வியவகார உலகின் உண்மைகள் எப்படி அனுபவத்தில் ஏற்படுகின்றன? நான் பிரம்மமே என்னும் அந்த பாரமார்த்திக உணர்வு நிலையில் ஊன்றி நிற்கும் போது ஒரே சத்யம்தான் இருக்கிறது. ஆனால் வியவகார நிலையிலோ என்றால் ஜீவனாகிய தான்தான் அவித்யையின் காரணமாக, முக்குணங்களின் வசப்பட்டு, ஈசுவரன், ஜகத், ஜீவன் என்னும் இந்த முப்படையான காட்சி அனுபவ நிலையைக் கல்பித்துக் கொள்கிறேன்.’ - இவ்வாறு மிக உயர்ந்த ஆனந்தமும், நித்யமும், தான் அவித்யையின் காரணமாகக் கல்பித்துக் கொள்ளும் இந்த வியவகார நிலையால் எந்தப் பாதிப்பும், குறைவும் தன்பால் ஏற்படாத நிர்மலமானதும், என்றும் மாறாத சத்யமுமான பரத்தில் நிலைத்த திடமான மதி யாருக்கு இருக்கிறதோ அவர் எந்தச் சாதியாக இருந்தாலும் சரி, அவரே உண்மையில் குரு’ என்று இரண்டாவது சுலோகத்தில் பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

பரமசிவன் உலகிற்கு எந்த வெளிச்சம் தர வேண்டும் என்று நினைத்தாரோ அது நடந்தேவிட்டது. 

‘ப்ரஹ்மைவாஹம் இதம்ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம் 

ஸர்வம் சைதத் அவித்யயா த்ரிகுணயா ஸேசம் மயா கல்பிதம் | 

இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே 

சாண்டாளோSஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மநீஷா மம || ‘ 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***