Thursday, May 2, 2019

யார் சார் இவுரு?

இன்னிக்கு ஒரு நீண்ட பயணம் ஆட்டோவிலேயே. உடல் நலம் சரியில்லை. மனமோ அதிதீவிரமாக யோசனை. அங்கு இறங்கி இங்கு அலைந்து ஓடிப் பிடித்து வீட்டுக்கு வர மிகவும் அலுப்பு. சரி பேசாமல் ஆட்டோவில் விடு சவாரி என்று வரும் பொழுது ஒரு சுவாரசியமான விஷயம்.

வழி நெடுக ஏகப்பட்ட பானர்கள். விவேகாநந்தரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு சாலையில் மத்ய ரேகையில் வரிசையாக. என்ன விஷயம் என்று யோசிப்பதற்குள், ஆட்டோக் காரர், 'யார் சார் இவுரு?' 

விவேகாநந்தரைத் தெரியாது! விவேகாநந்தரை அறியாமல் எப்படி ஓர் ஆள் இந்தியராக...என்ற திடுதிப்பு மனத்தில் உந்த ஏதோ சொல்ல வாயெடுக்குமுன்... என் உயிர்த் தோழியான காளி எங்கோ என்னைப் பார்த்துச் சிரிப்பது போல் ஓர் உணர்வு. ஆயிரம் படிச்சு இருக்கலாம்..அதெல்லாம் இங்க உதவாது. எங்கே இப்படிக் கேட்கும் ஒருவருக்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா பார். முடியாதென்றால் நீ படித்து என்ன பயன்...

இன்னும் விட்டால் மானத்தை வாங்கி விடுவாள் போல் இருந்தது. சரி என்று ஒரு முடிவெடுத்தேன். இன்னிக்கு நானும் இவருக்குச் சரியாக இருந்துதான் பேசுவது என்று. சும்மா வித்தகம் எல்லாம் காட்டக் கூடாது. சொல்றதுல முழுக்க அவரு கூட வர முடியணும், கருத்து முடியும் வரை. ஒன்றுல இரண்டு பார்த்துட்றது. காளிட்ட சேலஞ்ச் போட்டுத் தோத்துப் போனாலும் அது பரம இனிமை அல்லவா... 

ஆனால் இந்த ஆட்டோக் காரர் என்னை சும்மா சதாய்க்க வேண்டி இப்படிக் கேட்கிறாரா அல்லது நிஜம்ம்மாலுமே தெரியாதா....யோசிப்பதற்குள்... அவரே.. 

எந்தக் கட்சி சார் இவுரு.... 

இவரு விவேகாநந்தர். 

ஒரே இரைச்சல். ட்ராஃபிக். 

'ஆமாம் இதில்தான் சொல்லியாகணும் நீ.' 

இல்ல எங்க இருக்காரு.... 

இப்பொழுது நம் காலத்தில் இருப்பவர் இல்லை. 19ஆம் நூற்றாண்டு. சுதந்திரம் வாங்குவதற்கு எல்லாம் முன்னாடி...1893ல அமெரிக்காவில் உலகம் பூரா இருக்கற மதத்துலேந்து பலபேர்கள் சிகாகோ நகருல போய் அங்க நடந்த சர்வ மத மாநாடு ஒன்று, அதுல தங்க தங்க மதத்தைப் பத்திப் பேசினாங்க. உலக மக்களுக்கு தங்க மதம் என்ன என்ன பெருமை இருக்கு, எவ்வளவு சிறந்ததுன்னு எடுத்துச் சொல்ல. இவுரு ஹிந்து மதத்தோட பெருமையை உலக மக்கள் முன்னாடி எடுத்துச் சொல்ல போனாரு. இங்க சென்னைலேந்துதான், அப்ப இங்க படிச்சிக்கிட்டு இருந்த காலேஜ் பசங்கதான், பெரிய பெரிய டாக்டருங்க, வக்கீல்கள், பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து இவரைக் கப்பல் ஏத்தி அமெரிக்காவுக்கு அனுப்பிச்சாங்க. 

அப்படியா? சென்னைக் காரரா? 

கல்கட்டாகாரரு வங்காளி. அங்க கல்லூரியில் பெரும் படிப்பு படித்துவிட்டு, கடவுள்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும், அப்படி ஒன்று இருந்தா நேரடியாகவே பார்த்துடணும்னு தீவிரமா கிளம்பி பல பேர்கிட்ட போயி கேட்டுருக்காரு. அல்லாம்...யார் கண்டா? அப்ப்டீன்னு சொல்றாங்க...யாரு பார்த்தது?..பார்க்கல்லாம் முடியாது... பெரியவங்க அந்தக் காலத்துல சொல்லியிருக்காங்க...நம்பணும்..அப்படி இப்படின்னு சொல்லியிருக்காங்க... 

சார் பயங்கராமா நிக்குது சார்...படு ட்ராஃபிக்கு... அப்படிக் கொஞ்ட்சம் சுத்தி போயிடவா? கூட்டம் இருக்காது... 

ஆங்..போங்க... 

அவ்வள்:அவுதான்.. இந்தப் பக்கம் வந்துட்டோம்னா ப்ரச்சனை கிடையாது.... அப்பறம் சார்...அவரு பார்த்தாரா.... 

யாரு பார்க்கலையேப்பா... நாம்தான் இப்படி வந்துட்டோமே... 

இல்லை சார்... அவரு சொல்லிக்கிட்டுருந்தீம்ஹ்களே... விவேகாநந்தரு... 

ஆங்.. அப்பறம் தேடிக்கிட்டே போகச் சொல்லொ...ராமகிருஷ்ண பரமஹம்ஸருன்னு ஒத்தரு அங்க காளி கோயில்ல பூசாரியா இருந்தாரு.. பார்த்தா நாம என்னப் படிச்சுருக்கோம்... இந்த ஆளு என்ன சொல்லப் போறான்...ஏதோ பூசாரியா இருந்துக்கிட்ட்ருககன்...நண்பர்கள்ளாம் சொல்ல சரி போய்தான் பாப்பமேன்னு போயிருக்காரு.. இவரு விவேகாநந்தர்ட்ட என்ன ஒரு சுபாவம்னாக்க...யாரைக் கண்டாலும் இந்த மாதிரி தெய்வ மனுஷாளைக் கண்டா உடனே 'நீ கடவுளைப் பார்த்திருக்கிஆ?ன்னு கேட்ருவாரு. எல்லாம் ரிப்ளை நெகடிவ்தான்... 

ஆமாம் யார் பார்த்திருக்கப் போறாங்க... 

அதே மாதிர்தான் இவர்கிட்டயும் கேட்டாரு....பார்த்தாஅ... அந்தப் பூசாரி...அசால்டா சொல்டான்யா....'நானும் பார்த்திருக்கேன்... உனக்கும் வேணுமினா காட்ட முடியும்'னு... இவருக்கா பேஜாராப் போச்சு... இன்னாடா பண்றது... இந்த மனுசன் என்னடான்ன சுத்த பைத்தியக்காரன்கணக்கா இருக்கான்.,..ஆனால் ஒன்று... சும்மா சொல்லக் கூடாது...தூய்மைன்னா அப்படித் தூய்மையான ஆளு.... உள்ளம் கள்ளம் கபடே இலலம,..ஆசை, சூதுவாது ஏமாத்து ஒண்ணும் கிடையாது...அந்த மாதிரி நூறு பர்சண்ட் உள்ளத் தூய்மையான ஆளை ஜ்கன்மத்துல பார்த்ததுல்ல...சுமம அவனவன் வாயில ஒண்ணு சொல்றது செய்கைல ஒண்ணு காட்றது கேட்டா..ஆச்சா பூச்சான்னு ரீல் உட்றது.. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது இந்த ஆள்ட... அதுகாகவே போனாரு இவுரு அவுர்ட.. அடிக்கடி... சரி இவனும் சும்மா ஏமாத்தா பார்க்கலாம்னு... ஆனா பார்க்க் பார்க்க ஆளு சும்மா அசலு... ஒரிஜினலு....இம்மி குடா ஏமாத்து... பொருளாசை, பொண்ணுங்க ஆசை எதுவும் இல்லாத சுத்தமான அவரைப் பார்த்த உடனே இவருக்கே என்னடா நாம்ப படிச்சு இவ்வளவு பேரைக் கேட்டு.. என்ன இதெல்லாம்.. பாரு... மூணாம் கிளாஸ் கூட போகாத இந்த ஆளு... இவ்வளவு உள்ளும் புறமும் முழுக்க தூய்மையோட இருக்கான்... கவலையே படாம சொல்றான்... நான் கடவுளைப் பார்த்திருக்கேன்றான்...என்ன தெகிரியம்...வேணுமின்னா உனக்கும் காட்டுவேன்ங்கிறான்... என்ன நினைச்சுக்கிக்ட்டு இருககன் நம்மளை இவன்....இல்லை ஏதோ இருக்கு இவங்கிட்ட... இல்லாட்டி இப்படி நம்ம மனம் அவன்கிட்ட போய் ஒட்டிக்காது.. அப்[படீன்னு பழக ஆரம்பிச்சு...போகப் போக அவரால உண்மையா கடவுள்னா என்னா.. மதம் என்றால் என்னன்னு,..ஆன்மிகம்லாம் என்ன உண்மையில எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாரு...அவரும் இவரை அப்படி பழுக்க பழுக்கவுட்டு பக்குவமா எல்லாத்தையும் சொல்லி வச்சாரு..சூக்ஷுமலாம் சொல்லிக் குடுத்து கடவுள் அனுபவத்தையே கொடுத்தாரு...

அப்பறம் இவரு ராமகிருஷ்ணர் போன பிற்பாடு...அடசீ இந்த மாம்மூலான வாழ்க்கை கல்யாணம் குழந்தைகுட்டி கவலை இதெல்லாம் வேண்டாம்.. ஏதோ கடவுளோடத் திட்டம் இருக்கும் போலத் தெரியுது...நமக்கு ஒன்றும் புரியல்ல... நாம பாட்டுக்கு காடு மலைன்னு போயி தவம் தியானம்னு நம்ம வாழ்க்கையைக் கழிப்போம்...கடவுள் அனுபவம் ஒன்று போதும் நமக்கு.. சும்ம மத்த விசயம்லாம் நமக்கு எதுக்குன்னு ஊர் ஊரா திரிஞ்சுக்கிட்டு வந்தாரு...

அப்படியே சென்னைக்கு வந்து, இங்க சாந்தோம்ல தங்கியிருந்தாரு...அப்ப இங்க இருந்த காலேஜ் படிக்கற பசங்க பல பேரு என்னடா இது இங்கிலீஷ் பேசற சாமியாரு, சின்ன வயசுக் காரரு.. நவீன விஞ்ஞானம், கணிதம் சரித்திரம் எல்லாம் தெரிஞ்சுருக்கு... சாத்திரம் எல்லாம் அவருக்கு கைவந்த கலையா இருக்கு..ஆச்சரியாமா இருக்குன்னு போய்ப் பார்த்தாங்க அடிக்கடி.. 

யாரு இம்க்க சென்னைல? 

ஆமாம்...போய்ப் பார்த்தா...இவரு என்ன சாதாரண சாமியார் மாதிரியா பேசறாரு... எல்லாம் என்ன சொல்வாங்க... ஏதோ கடவுள் பத்தி...இந்த மதம் அந்த மதம். இந்த தெய்வத்துகிட்ட பத்தியா இரு இப்படி நடந்துக்க உனக்கு இது கிடைக்கும் அது கிடைக்கும் ஒரு மண்டலம் பூஜை பண்ணு இப்படி எதுனாச்சும்தானே சொல்லுவாங்க... இவரு என்னாடான்னா புதுமை புதுமையா பேசறாரு....

ம்ஹாங்.... 

உங்களுக்கு உண்மையான தெய்வம் எதுன்னு கேட்டா...இந்தத் தேசம்... இந்த பாரத தேசம் இதுதான் உண்மையில கன்கண்ட தெய்வம்...இதுன்கிட்ட பக்தியா இருக்கிஆ சொல்லு...மத்த தெய்வத்த எல்லாம் தூக்கிக் கடல்ல போடு...நம்முடைய பாரத தேசம் அது ஒண்ணு போதும், அதுக்காக் உன் உயிரைக் கூட கொடுக்க தயங்காத... அதன் மேல பக்தில என்னிக்கும் குறையாத... 

கல்லூரி மாணவர்களுக்குக் கேட்கணுமா... சும்மா ஜிவ்வுனு ஏறிக்கிச்சு...ச்ச சந்நியாசின்னா இவன் உண்மையான சந்நியாசிடான்னு எல்லாம் ஒரே எழுச்சி ஆயிட்டாங்க... இப்ப நீம்ங்க கேட்டா என்ன சொல்வீங்க.. எது நாத்திகம்னு கேட்டா என்ன சொல்வீங்க...யாருமே என்ன சொல்வோம்.. 

அதாவது.... 

அதாவது கடவுள் கிட்ட நம்பிக்கை இல்லைன்னா அதுதானே நாத்திகம்னு சொல்வோம் 

ஆமா 

இவரு சொல்றாரு... அடப்போய்யா..கடவுள்கிட்ட நம்பிக்கை இல்லாதவனை நாத்திகம்னு பழைய மதம்லாம் சொல்லுது ஆனால் உண்மையான நாத்திகன் யாருன்னு கேட்டா யாருக்கு தன்கிட்டயே நம்பிக்கை இல்லையோ அவன் தான்னு சொன்னாரு பாரு...இளைஞர்கள் எல்லாம் கண்ணு திறந்தா மாதிரி ஆயிடிச்சு...

நோஞ்சான் மாதிரி இரண்டு மூன்று இளைஞர்கள் அவர்கிட்ட வந்து எங்களுக்கு கீதை வகுப்பு எடுங்கன்னு கேட்டாங்க... அதுக்கு சொல்றாரு.. நீங்க கீதையைப் படிக்கறதை விட கால்பந்து விளையாடுங்க...மோக்ஷத்துக்கு இன்னும் உங்களுக்கு தகுதி ஏற்படும்னாரு..அவங்களுக்கா ஒண்ணும் புரியல்ல....சும்மா வீரம் நிறைஞ்ச வார்த்தையா வருது அவருகிட்டேந்து. 

சும்மா வீணாப் போட்டு மனசைக் குழப்பிக்காதீங்க... ஒன்று தெளிவாப் புரிச்ஞ்சுக்குங்க... ஆன்மிகம், மதம் கடவுள் எதுவானாலும் ஒரே டெஸ்ட் -- அது பலவீனத்தைத் தருதா? பலத்தைத் தருகிறதா? பலவீனத்தைத் தரும் எந்தக் கருத்தா இருந்தாலும் சரி அது என்ன ஆன்மிகம், கடவுள் பக்தி எதுவானாலும் சரி, பலவீனத்தைத் தந்தா அதை வெசத்தைத் தூக்கி எறியறா மதிரி எறிஞ்சுருங்க...எது உங்களை மேலும் மேலும் மனத்தில் வாழ்க்கையில் உடலில் பலம் உள்ளவர்களாக ஆக்குகிறதோ அதை மட்டுமே கைக்கொள்ளுங்கள். நீங்கள் கோழையாக இருந்து கொண்டு ஆத்திகரா இருக்கறதை விட தைரியம் உள்ள நாத்திகராக இருப்பது எவ்வளவோ மேல். 

பார்த்தாங்க அத்தனை பேரும்... பச்சையப்பன் ஸ்கூஇலில் ஹெட்மாஸ்டராக இருந்தவர் அழகியசிங்கம் ஐயங்கார்னு ஒத்தரு அவரு முழுக்க முழுக்க விவேகாநந்தரை எப்படியாவது அமெரிக்காவுக்கு சிகாகோ சர்வ மத மகாசபையில பேசுவதற்கு அனுப்பிடணும்னு ஹிந்து மதம் சார்பா பேச, சும்மா பசங்களை எல்லாம் மதியானம் ஆனால் போதும் கூட்டிக்கிட்டு எல்லா இடத்துலயும் போயி வீடு வீடா பணம் வசூலிக்க ஆரம்பிச்சுட்டாரு, கப்பல்ல அனுப்பற செலவுக்கு. 

அத்தனை பேரும் அவரைப் பேசி சம்மதிக்க வச்சி.. அவரா என்னடான்னா நான் எங்கய்யா போறது நானே ஊர் சுத்தற சந்நியாசி எங்கிட்ட ஏது காசு பணம் வசதில்லாம் கண்டம் விட்டுக் கண்டம் போகன்னு பார்ப்போம் கடவுள் சித்தம் இருந்தா எல்லாம் தானா நடந்துட்டுப் போவுதுன்னு இருந்தாரு...

எல்லாம் ஒரு வழியா அவரை ஏத்திவிட்டு கப்பல்ல அனுப்பிச்சா அங்கப் போனா அமெரிகாவுல.. சபை கான்ஃபரன்ஸ் கூட்றதுக்கு 2, 3 மாசம் முன்னாடியே வந்துட்டாரு...பார்த்தா கையில் இருக்கற காசெல்லாம் ஏகப்பட்ட செலவு நாளைக்கும்...பணமா கரையுது.. என்னடா இது பசங்க சொல்றதைக் கேட்டு நாமளும் சரியா விசாரிகாம வந்துட்டமேன்னு...சரி கடவுள்விட்ட வழின்னு.. என்ன என்னவோ கஷ்டம்.. பாவம்....பார்த்தா தெய்வக் கருணை யார் யாரோ முன்னைப் பின்ன தெரியாத்வங்க எல்லாம் ஃப்ரெண்ட்ஸாக ஆகி... 

கடைசியில சிகாகோவுல சர்வ மத சபை கூடுது... அங்க வந்திருக்கற ஆளை எல்லாம் பார்த்தா... எல்லாம் உலகத்துல பல மூலைகளேந்து வந்துருக்காங்க.....காத்தாலேந்து பேசு பேசுங்கறாங்க... இவருக்கா.. உள்ள பயம் பிடிச்சிக்குச்சு... என்னடா பேசப் போறோம் நாம...அவன் அவன் என்னாடான்னா ஏகப்பட்ட தடிதடியா கையில நோட்டுப் புத்தகம் எழுதி ரெடியா வந்திருக்கான்...நாம என்னாடான்னா நம்ம ஊருன்னு நினைச்சுக்கிட்டு மரத்தடியில பேசறா மாதிரி வெறும வந்து நிக்கறோம்...ஒரே உள்ள உதறுது...

பார்த்தா கடைசில அந்த சபைத் தலைவரே என்னடா இது பேசப் போறாரா இல்லையா... இதான் லாஸ்ட் சான்ஸ் இல்லைன்னா இன்னிக்கு கதைஅயி முடிச்சிக்க வேண்டியதுன்னு சொல்லி..என்னங்க இதான் கடைசி பேச வரீங்களான்னதும்.... ஒரு வேகம்....மனசுல குருநாதரை நினைச்சுக்கிட்டாரு,.,, சரஸ்வதியை நினைச்சுக்கிட்டாரு....விடுவிடுன்னு போய் நின்னாரு....என்னத்தை பேசினாரோ எதைப் பேசினாரோ... பார்த்தா அத்தனை மக்களும் சீட்டை விட்டு எழுந்துக்கினு நின்னு ஒரே கைதட்டல் கரகோஷம்....ஓயமாட்டேந்ங்குது/... 

ஆங்..பேசிட்டாரு....அன்னிக்கு..?. 

பேசிட்டாரா.. அன்னிலேந்து அவருதான் சூப்பர்ஸ்டார்.....அமெரிகக முழுக்க...அவரு  சும்மா மேடைல நடந்து போனால் போதும் எல்லா ஜனமும் எழுந்து கைதட்டுது, அவர் பேசறார்னா நாள் முழுக்க காத்துக் கிடக்குது... என்ன அதுவரைக்கும் என்ன நினைச்சாங்க அமெரிகக இங்கிலாந்து போல தேசங்கல்ள சரி இந்தியர்கள்னா என்ன கல்வி இருக்கு பண்பாடு என்ன இருக்கு எல்லாம் அடிமை நாடுகள், ஆளுங்க பார்த்தா காட்டுமிராண்டி மாதிரி இருககங்க.. இவங்க கிட்ட என்ன சிறப்பு இருக்கப் போகுது..ன்னு. ஆனால் விவேகாநதரு பேசினபப்றம் ஒன்று தெரிஞ்சுக்கிட்டாங்க...சரி நாம யாரையும் சரியா தெரிஞ்சுக்காம எடை போடக் கூடாது...அம்மாடி எவ்வளவு உயர்ந்த தத்துவங்கள், கருத்துகள், என்னமா இவௌரு பேசறாரு.. இப்படி பட்டவங்கெல்லாம் அந்த நாட்டுல பிறந்து வளர்ந்து வந்திருககங்கன்னா அந்த நாட்டுப் பண்பாடு அப்படி இல்லாம இப்படி எல்லாம் முடியுமா? அது மட்டுமில்ல...சென்னைதான் முதல்ல அவரைக் கண்டுக்கிட்டு.. சரி இப்படிப் பட்ட பெரிய ஆளு இவுருன்னு இவங்க அனுப்பிச்சு,, பேரும் புகழும் ஏற்பட்ட பிற்பாடுதான் அவுரு பிறந்த வங்காளத்துலயே எல்லாம் இவரைத் திரும்பிப் பார்க்குறாங்க. எல்லம் அது வரைக்கும் கண்டுக்காம இருந்தாங்க...யாரோ காளிகோயில் பூசாரி, இந்தப் பசங்க படிப்பு வீடு வாசலை விட்டுட்டு அவரு கூட சுத்திக்கிட்டு வீட்டுக்கு அடங்காமன்னு அப்ப்டிதான் நினைப்பு...ஆனால் சென்னை அவரைப் பெரிய மகான்னு தெரிஞ்சுக்கிட்டு அனுப்பிச்ச பிற்பாடு சும்மா இந்தியாவுக்கே நல்ல காலம். ஏன்னா அவரு இந்தியாவுல வந்து பேசி அந்தப் பேச்சுனாலதான் சுதேசிய இயக்கமே வந்துது நாட்டுல. சுதாசி இயக்கம் வரவுட்டுத்தான் 1906ல, இந்தியாவுக்கு சுதந்திரம் 1947ல கிடைக்குது. நம்ம நாட்டு சுதேசிய எழுச்சியின் தந்தைன்னு சொல்லணும்னா விவேகாநந்தர்தான்.

சார்! பெரிய வெசயம் சார்...இல்லை இன்னிக்குப் போனா இவனால அவனால வெளிநாட்டுல இந்தியாவுக்குத் தலைகுனிவு, அப்படி இப்படிங்கறாங்களே..பாருங்க அவரு பேசின நாள்லேந்து இந்தியாவையே அவுங்க நிமிர்ந்து பார்க்க ஆரம்பிசுட்டாங்கன்னு..அதான் சார் வேனும்...சார் இங்க ரைட்டா லெஃப்டா? 

இந்த ரைட்டை விட்ரு அடுத்த ரைட்டு..ஹாங் அதான்.. அப்படியே அந்த ஸ்கூட்டர் நிக்குது பார் அந்தக் கேட்டுதான். எவ்வளவு ஆச்சி? ... 

அதெல்லாம் கரெக்ட் மீட்டர் சார்.... ஏன் ஜாஸ்தியா இருகக சார்... 

இல்ல கொஞ்சம் சுத்தி வந்தமுல்ல... 

ஆனால் அது பெரிய விசயம் சார்... 

ஆங்... அதான்..சரி ரொம்ப தேங்க்ஸ்பா.... 

வரேன் சார்... 

இப்படி ஆரம்பித்திருக்கிறது புத்தாண்டு கொண்டாட்டத்தின் முற்றப் பொழுது, எனக்கு ! 

*** 
(31-12-2013)


ஏண்டா நீ ஏதோ சாமியாராப் போப்பறேன்னாளே...!

ஏண்டா நீ ஏதோ சாமியாராப் போப்பறேன்னாளே...உனக்கேண்டா ஆத்தரம் இப்பவே.... ம்.புல்ளையா லட்சணமா, அப்பா அம்மாவை கவனிச்சுண்டு...அவா ஆசீர்வாதம் இல்லன்னா ஒன்னும் உருப்படாது வச்சுக்கோ.....ஆமாம் 

காலம் காத்தால தூக்கத்தின் இறுதிச் சொட்டில் இருந்த என் விழிகளை பலாத்காரமாகத் திறந்த ஓசை இது ராஜி அத்தையோட குரல். யாரோ சொல்லியிருக்கிறார்கள், மடத்துக்கு ஓடீட்டானான்...பாவம் அவாத்துல ஒரே வருத்தம் அழுகை...பிள்ளை ஒண்ணு இப்படியா செய்யும்...அது அது உலகத்துல எப்படி இருக்கு...இந்த மாதிரியா.. அதல்லாம் சின்ன வயசுலயே தறுதலைத்தனம்...என்னை எழுப்பிவிட்டுவிட்டு அடுத்ததாக இருக்கும் வீட்டுக் கூடத்தில் தான் ஏன் வந்தோம்...யார் சொல்லி வந்தோம்... இப்படி ஒரு ஆபத்து அவசரத்துக்கு மனுசாள் இல்லைன்னா பின்ன ஏதுக்கு...எல்லாம் நல்ல திருப்பள்ளி எழுச்சி...பல காலத்துக்கு முந்தி நடந்த ரகளைகள்... அதாவது அப்பொழுது நான் எந்த சொந்தக் காரர் வீட்டுக்கும் போய் வர முடியாத சூழ்நிலை, நானே உருவாக்கிக் கொண்டது. மீறிப் போனால் பல நாட்கள், பல மணி நேரங்கள், பல சந்தர்ப்பங்களில் உபதேச மழையாகப் பொழியும்; சாடல் சர்வ சாதாரணம்; வயசுல பெரிசுகள் இருந்தால் வாய்க்கு வாய் ‘தறுதலை, தறுதலை..’ கரிச்சுத் தாளிச்சுக் கொட்டி.. எல்லாம் நடக்கும். தாங்கள் ஏன் சிறு வயதிலேயே ஆன்மிகம், மதம் ரீதியான புததகங்கள், வழிபாடுகள் இவற்றில் அக்கறை கொள்ளவில்லை என்பதற்குத் தகுந்த காரணமாகப் பல பெரிசுகளுக்குப் பயன்பட்ட புண்ணியம் எனக்கு என்றும் உண்டு. 

’இப்படித்தான் என் சிநேகிதனோட ஷட்டகருக்கு அம்மாஞ்சி முறையாகணும், அவரோட பையன்...’என்றி ஒருவர் இழுத்தால் அப்பறம் அது இந்தியா ரப்பர்தான். எங்கயோ திடீரென்று இமாலயாவுக்கு ஓடிவிட்டதாகவும், அல்லது ஊர் பேர் தெரியாத காடுகளில் எங்கோ ஒரு பாழடைந்த கோவிலில் இருந்ததைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்ததாகவும், பல த்ரில் கதைகள் மூச்சைப் பிடித்துக்கொண்டு வெளியில் வரும். மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் எல்லாரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டே உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார். அதாவது அறிவுரை சொல்லுங்கள் அறிவுரை சொல்லுங்கள் என்று கேட்டுக் கேட்டே ஆளைக் கொல்லும் ரகம். ஆனால் என் விஷயத்திலோ ஆளுக்கு ஆள் உபதேசம் சொல்கிறேன் பேர்வழி என்று என் மேல் தங்கள் ஆத்திரத்தையெல்லாம் தீர்த்துக் கொண்டார்கள். அதாவது என் தந்தையிடம் அவ்வளவு அக்கறையாம். 

எல்லாம் விஷயம் என்னவென்றால் விவேகாநந்தரின் நூல்களைப் படித்துவிட்டு, டிகிரி படிக்கும் காலத்தில் நான் மடத்தில் சேரப் போகிறேன் என்று கிளம்பிவிட்டேன். நானாவது கொஞ்சம் யோசிச்சிருக்கணும். அதெல்லாம் தோன்றிய போது கிளம்பிவிடுவதுதான் துறவிக்கழகு என்று கிளம்பினால் எல்லாருக்கும் பலிக்குமா? அப்படிக் கிளம்பிப் போனால் ஒருவன் என்ன ஆனாலும் திரும்பி வந்துவிடக் கூடாது. எங்காவது கண் மறைவாகக் காணாமல் போய் விடவேண்டும். இல்லையென்றால் வந்த ஆளைத் திருத்துகிறேன் சாக்கு என்று அவரவர் தங்கள் வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்கும் விடம்பனம் இருக்கிறதே அது மஹா கஷ்டம். ஆனால் அத்தனையையும் தாங்கிப் பொறுமை காத்த காரணத்தால் துறவு என்று ஒன்று தனியே வேண்டாம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. அந்த விதத்தில் நல்ல பயிற்சி தந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மனித மனத்தின் எவ்வளவு கோணல்கள் உண்டோ அவ்வளவும் சிறிய காலத்தில் எதிர்படும் பயிற்சி. 

ஆனால் அப்பொழுது நடந்த சம்பவம் ஒரு சின்ன நிகழ்ச்சி இன்றும் மனத்தில் நிலைபெற்றிருக்கிறது. எத்தனையோ பேர் வந்து உபத்திரவப் படுத்தினாலும், ஒரு கிழவி படுத்திய பாடு ஆனாலும் மறக்க முடியாதது. 

பால் கறக்கும் மாடு வந்து, கறந்து எங்கள் ஓரிரு வீடுகளுக்கு ஊற்றிச் செல்லும் வழக்கம். பால்காரக் கிழவி எங்களையெல்லாம் குழந்தையிலிருந்தே கண்டு, கொஞ்சி, அதட்டி, மிரட்டி, அப்பாவிடம் கோள்மூட்டி, நாங்களும் அவள் கன்றுக்குட்டியைக் கட்டி வைத்தால் அவிழ்த்துவிட்டு அவள் வாயில் விழுந்து புறப்பட்ட அனுபவங்கள், அப்பொழுது எல்லாம் அம்மாவின் ஆத்திரத்திற்கு அவள் ஆளாகி, அவளுடைய திட்டுதல்களுக்கு நாங்கள் ஆளாகி, அப்பா வரையில் கூட வழக்கு சென்ற சமயங்கள் உண்டு. ஆனால் அந்தப் பால்காரக் கிழவிதான் என்னை அப்பொழுது ஒரு வழி பண்ணிவிட்டாள். 

தந்தையும் தாயும் படும் கஷ்டத்தைக் கண்டு அவள்தான் அவ்வளவு ஆதரவாம்! பயப்பாடாதீங்க....வருத்தப்படாதீங்கன்னு எவ்வளவோ தெம்பு மூட்டி... தந்தையைப் பார்த்துத்தான் அவளுடைய அங்கலாய்ப்பு...’இந்த மனுசன் அளுது நான் பார்த்ததில்ல்யே சாமீ....’

சின்ன வயதில் செய்த விஷமம் வேறு. ஆனால் பள்ளி கல்லூரி என்று வந்ததும், அந்தத் தலைமுறைகளின் பார்வையில் சின்ன பையன் என்றாலும் அந்தஸ்து உயர்ந்துவிடுகிறது. அவளிடம் அவ்வளவு திட்டு வாங்கியதுண்டு சிறு வயதில் ஆனால் வயதிற்கு வந்த பிள்ளை, படிக்குது என்றவுடன் அந்தப் பக்கம் கிராஸ் ஆனால் போதும் உசந்த குரல் அடங்கிவிடுகிறது. ஏதோ அமைதி. அம்மாவிடம், ‘சின்னவரு என்ன படிக்கிறாரு...’ என்று ரகசியக் குரலில் விசாரிப்பு. எனக்கு அது புரிந்ததே இல்லை..எப்படித்தான் அவ்வளவு அந்நியத்தனம் அவ்வளவு இயல்பாக வந்து விழுந்துவிடும் என்று! 

அவள்தான் பார்க்க வேண்டுமாம். நான் தான் அப்பொழுது யார் வேண்டுமானாலும் வந்து பார்த்து உபதேசம் செய்துவிட்டுப் போக வாய்ப்பான ஆளாயிர்றே! இவள் என்ன சொல்லப் போகிறாள், நெடுக ஒரு அறிவுரை, ஆனால் மர்றவ்ர்கள் மாதிரி வக்கிரங்கள் இருக்காது, பாவம் படிப்பறிவில்லாத எளிய கிழவி. 

வந்தாள். வந்தாள் என்பதை விட ஏதோ நாணிக் கோணிக்கொண்டு... சரி உபதேசம் ஆரம்பிக்கட்டும்..எல்லாவத்தையும்தான் பொறுத்துக்கறோம் இதையும் தாங்கிப்போம் என்று என்னம்மா...என்றேன். 

தன் புடவை சொருகிய கொசுவச் சுருளிலிருந்து எதையோ திறந்து ஒரு பொட்டலம் கொடுத்தாள். தானே பண்ணி எடுத்து வந்த ஏதோ பணியாரம். கொடுத்துவிட்டு நான் சாப்பிடுவதைப் பார்த்து, ‘நீங்க படிச்சவுக. உங்களுக்குத் தெரியாதது இல்ல. நான் என்ன சொல்ல முடியும்? எங்க இருந்தாலும் நன்னா இருங்க.’ என்று சொன்னவள் புடவை நுனியால் கண்களைத் துடைத்தவாறே திரும்பி நடந்தாள். பாதி சாப்பிட்ட நான் வாய் விக்கித்துப் போய் கண்ணீர் பணியாரத்தில் உப்பு கரிக்க விழித்துக்கொண்டிருந்தேன். 

அங்கு அவள் என் தந்தை தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதுகளில் விழுந்தது. ‘பாவம் குழந்தையைத் திட்டாதீங்க. அது என்ன தப்பு செஞ்சுது? பெத்தவங்களுக்குப் புண்ணியத்தைத்தான் தேடிக் கொடுத்திருக்கு.’ - இது காதில் விழுந்ததும் என்னால் அடக்க முடியவில்லை. அறையில் சென்று தாளிட்டுக் கொண்டு அழத்தொடங்கிவிட்டேன். எப்படியெல்லாம் அவள் திட்டியிருக்கிறாள்...சின்ன வயதில்...அப்பொழுது பார்த்தால் சிடுசிடுவென்று....ஆனால் அதே அவள்..அந்தக் கிழவிதான் எதை எதையோ எனக்கும், மற்றவர்களுக்கும் சொல்லிப் பாதியும் சொல்லாமல் மீதியுமாகச் சொல்லிவிட்டாள். 

அவளோடு என் தந்தை ஏதோ பேசும் குரல் கேட்கிறது. சரி வழக்கப்படி...என்னைப் பற்றி வசவுகள்... இப்படித்தான் இருக்கும் என்று காதை தீட்டியவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னைப் பற்றி நேரடியாக ஒன்றும் இல்லை. தந்தை.....

... அதாவது அவரோட நூல்கள் எல்லாம் படித்துவிட்டு அவர் ஆரம்பித்த மடத்திற்கே போய்ச் சேர வேண்டும் என்று....நான் தப்பு சொல்லலை... இல்லமா நான் திட்டலை....ஆனால்...யாரு? 

அவரா...? அவர் விவேகாநந்தர் என்று பெரிய மகான். தெய்வக் குழந்தை. பெரிய மேதை. கல்கட்டாவுல கல்லூரியில் படிக்கும் போது அவருக்குக் கடவுளைக் காண வேண்டும் என்ற நாட்டம் வந்து, அது தீவிரமாக ஆகி, அங்கே காளி கோயில்ல ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்னு ரொம்பப் பெரிய மகான். இங்க வாம்மா... இல்ல சும்மா வா... அட வாம்மா...அதெல்லாம் ஒண்ணும் இல்ல...தாராளமா வரலாம்...ஏன் தயங்கற...எல்லாரும் கடவுளோட குழந்தைகள்தாம்மா..வா இங்க வந்து பாரு......இவருதான் ராமகிருஷ்ணர்னு பெரிய தெய்வ புருஷர்..அதாவது காளி அவருக்கு நேர ப்ரத்யக்ஷம். ஆமாம். அவர் புத்தகம் எல்லாம் எழுதினது கிடையாது . ஆனால் அவர் சொன்ன சின்ன சின்னக் கதைகள் இருக்கே அப்பாடா அபாரமான ஞானம்.. எவ்வளவோ சாத்திரங்களில் தெரியாத விளக்கம் எல்லாம் அவரோட கதைகளில் தெளிவாப் புரிச்ஞ்சுடும். இவருகிட்டத்தான் விவேகாநந்தர் போய்ப் பார்க்கறாரு. பார்த்து அவரைப் பார்த்துக் கேட்கிறாரு, ‘நீங்க சொல்றதெல்லாம் சரி. முதல்ல நீங்கக் கடவுளைப் பார்த்திருகீஜ்ங்களா?’ 

அவரு சொல்ற பதில் - ‘கொழந்தே! கடவுளை நான் பார்த்திருக்கேன். உனக்கும் காட்ட முடியும்’ 

இவரா...இவர் அங்க வங்காளத்துலயேதான் ஆமாம் இவரும் சரி விவேகாநந்தரும் சரி அங்க வங்காளத்துலதான் பிறந்தாங்க. இவருக்கு, ராமகிருஷ்ணருக்கு பள்ளிக்கூடம் போனதே இல்ல...படிப்பறிவு இல்லாதவரு. ஆனால் விவேகாநந்தர் படிக்காத சாத்திரம் கிடையாது. அவரு படிப்போட உச்சம்னா அவரோட குரு படிப்புன்னால என்னன்னு தெரியாது. அப்படிச் சேர்ந்துது இரண்டும். அதான்...அதான் தெய்வ சங்கபம்கிறது. 

எது? வேற தெய்வமா...பெருமாள் படம் எல்லாமா.. இல்லை நான் ஆரம்ப நாள்லேந்தே இந்தப் படம் மட்டும்தான் இங்க பூஜை அறையில இருக்கும். 

ராஜி அத்தையின் குரல் தெளிவாகக் கேட்கிறது. அவள் எங்கு வந்தாள் இப்பொழுது.? 

‘ஏன் நீ பெருமாள் படம்லாம் வைக்கிறதை விட்டுட்டு மனுஷாள் போட்டோவை,,அது எவ்வளவு பெரியவரா இருக்கட்டும், வைச்சுருக்கே பூஜை ரூம்ல?’ 

‘தோ பாரு அக்கா...எனக்குக் கடவுளைத் தெரியாது. நான் கடவுளைப் பார்த்ததில்லை. அவர் கடவுளைப் பார்த்திருக்கார். அதுனால எனக்கு அவர்தான் கடவுள்’ 

நிசப்தம்.....என்ன.... எல்லாரும்......! 

நீண்ட மௌனத்திற்குப் பிறகு... பால்கார மூதாட்டி விடை பெற்றுச் செல்லும் பேச்சு சபதங்கள் அங்கே கூடத்தில். 

இங்கோ அறைக்குள் பூட்டியபடி நான் நாணித் தலை கவிழ்ந்தவனாய் உட்கார்ந்திருக்கிறேன். அடுத்தடுத்து என் முகத்தில் அறைந்ததுபோல் அந்தப் பால்கார மூதாட்டியும், அடுத்து என் தந்தையும்... 

வாழ்க்கையில் அவளுடைய பக்குவத்திற்கு முன், அவளுடைய தூய அன்பிற்கு முன் நான் எம்மாத்திரம்? 

தன் மகன் தன்னை விட்டுப் பிரிந்து போகக் காரணமாய் இருந்த ஒருவரின் படத்தை விடாமல் தான் தன் பூஜை அறையில் வைத்துக்கொண்டு அவரேதான் தனக்குக் கடவுள், அதில் சிறிதும் மாற்றம் இல்லை என்றிருக்கும் என் தந்தையின் அந்தச் சஞ்சலமற்ற அந்தத் திடமான பக்திக்கு முன்னால் நான் யார்? 

*** 



வெட்டிப் பொழுது - சிறுகதை

பஸ்ஸுக்கு நின்றால் அது லேசில் வந்து விடுகிறதா? அதுவும் கையில் லைப்ரரியில் தவணை தேதி கடந்து புதுப்பித்து அதுவும் கடந்து, அதன் சகிப்பு நாள்களும் முடிந்து, ஒழுங்கு மரியாதையா கொண்டு வந்து கொடுக்கறியா இல்லையா என்ற கடுப்போலையும் வந்து, சரி தீராது என்று அள்ளிக் கொண்டு போய் நின்றால்...அந்த நேரம்தான் கொஞ்சம் கூட்டம் குறைவு. உட்கார இடம். ஓரு நான்கு தடவையாவது பார்த்திருப்பேன், ஊரன் மகிழ்நனின் ஒரு பெரும் தேர் வரும் ஓசையாவது கேட்கிறதா என்று சங்கத் தலைவிக்குப் போட்டியாக! ம்..ம்...சங்க காலத்து தேரே வந்து விடும் போல... 

நீங்களும் பஸ்ஸுக்குத்தான் நிக்கிறீங்களா..... 

பார்த்தால் பாவம் நல்ல மாமி. மிகக் களையான மங்களகரமான முகம். தாய்மையைப் போற்றுவோம் என்று பாரதி சொன்னதற்கேற்ப கொஞ்சம் வாய்த் துடுக்கை அடக்கிக் கொண்டேன். 
 
‘ஆமாம்மா...எங்க வருது....எவ்வளவு நேரம்..’ 

எதிலயாவது காலேஜுல ப்ரொபஸ்ரா இருக்கீங்களா.... 

இல்லம்மா.... குமாஸ்தா உத்தியோகம்.... 

ஓ இல்ல இவ்வளவு புஸ்தகம்லாம் லைப்ரரி புஸ்தகமா கொண்டு போறீங்களே.... 

ஆமாம்மா படிப்புல ஆர்வம். கொஞ்சம் எழுத்து. ஆய்வு, கவிதை என்று சொந்தப் பொழுதுகள் ஓடுகின்றன. 

ஓ நீங்க ரைட்டரா..... 

வேண்டாம் வாய்த்துடுக்கு வேண்டாம்.....அது தெரியாதும்மா ஆனால் எனக்குப் பிடித்த விஷயங்களை பத்திரிக்கைகளிலும், நூல்களாகவும் எழுதுவதில் ஒரு திருப்தி. 

பாருங்க...ஒரே தெருவுலதான் இருக்கோம்..ஆனால் இவ்வளவு டேலண்ட் இருக்கற உங்கள மாதிரி ஆட்களையெல்லாம் தெரிஞ்சுக்காம லைஃப் ஓடிண்டுருக்கு.... 

பஸ்ஸும் வர வழியா காணோம்....நீங்க என்னம்மா பண்றீங்க....கணவர் என்ன பண்றார்... 

நான்லாம் அடுப்படியே கதின்னு வாழ்க்கை ஓட்ற கூட்டம்தான் சார். எங்க கணவர் பெரிய ஐ டி கம்பெனியில் ரொம்ப உசந்த் உத்யோகம்....சதா வேலை...நான் கூடத் திட்டுவேன்..ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் கம்ப்யூட்டரே கதின்னு இருக்கீங்க...கொஞ்சம் ஜெனரல் புத்தகங்களையும் படிங்கோ..அக்கம் பக்கத்துல பேசுங்கோ...இப்படி மின் உலகமே கதின்னு இருக்காதீங்க என்று திட்டுவேன்... ம்..ம் எவ்வளவு திட்டினாலும்.... பத்து நி கழிச்சுதான் என்ன சொன்னே என்று கேட்பார்...சரி நானும் விட்டுட்றது. பாவம் நமக்கு ஏன். அவர்களின் அவசரம் எங்களுக்குப் புரியாது. நீங்க ஒரு நாள் அவரைக் கண்டிப்பா சந்திக்கணும். எல்லாத்துலயும் இண்ட்ரஸ்ட் உண்டு. மனிதர்களை மதிப்பார். ஆனால் என்னமோ கம்பெனி, கம்ப்யூட்டர்...அதுவும் கையிலேயே இப்ப கணிணியைக் கொண்டு வந்து விட்டார்களா....எப்பப் பார்த்தாலும் ஏதோ ரேகை ஜோஸியம் பார்க்கறவன் மாதிரி.... 

குபீல்ல்ல் என்று சிரித்து விட்டேன்....ச...என்ன வொண்டர்ஃபுல் சென்ஸ் ஆஃப் ஹ்யுமர்... 

ஏன் சிரீக்கிறீங்க? 

இல்ல...உங்க கணவரை ஒரு சோடா பாட்டில் கண்ணாடி போட்ட ரேகை ஜோஸியர் மாதிரி உட்கார்ந்து...கற்பனை பண்ணிப் பார்த்தேன்.... 

ச ...ச நன்றாக இருபபர்...பாவம் அவர்களின் வேலை உலகம். 

யா...சாரி....நீங்க சொன்ன நகைச்சுவையான விதம்.... 

இல்க்ல இல்ல பரவாயில்ல ஆனால் நீங்க ரெண்டு பேரும் ஒரு நாள் சந்திக்கணும். அவருக்கு அது நல்லது. ஒரு நாள் அவர் ஃப்ரீயா இருக்கும் போது வாங்க...நான் சொல்லி வைக்கிறேன்...அதுவுமில்லாம ஒரே தெருவுல இருந்துண்டு ஒரு ரைட்டரை அவர் தெரிஞ்சுக்கலன்னா...... 

ஒன்றும் அவருக்கு நஷ்டம் இல்லை விடுங்க. ஆனால் நீங்க சொன்னதற்காக நிச்சயம் சொல்லுங்கோ..எப்ப அவருக்கு சௌகரியமோ..பார்த்துஇ சந்திக்கலாம்.. தெருமுனையில் ரயில், புஷ்பக விமானம், ட்ராம் எல்லாம் கலந்த கலவையாக வண்டி வரும் தோற்றம். அவசரம் அவசரமாக கிளம்பி விட்டோம். 

பின்னர் கோவில் வாசலில் ஒரு நாள், தம்பதிகளைக் காணும் வாய்ப்பு. இவர்தான் நான் சொன்னேனே... ஷ்யூர் ஷ்யூர் ஷீ வாஸ் டெல்லிங் மீ அ லாட் அபௌட் யூ... ஒன் டே வீ ஷுட் மீட். இட் வில் பி மை ப்ளஷர்...என்று அவசர அடியில் ஐ டீ பெரியவர் அழைப்பு விடுத்துப் பிரிந்தது.... 

ஒரு ஞாயிறு மாலை. எதற்கோ வெளியில் போய்க் கொண்டிருந்தவனை ஒரு குரல் சார்....இப்ப ஃப்க்ரீயாத்தான் இருக்கார்...இப்பப் போனீங்கன்னா, உங்களுக்கு நேரம் இருந்தா, சாரி....நன்னா பேசிண்டு இருக்கலாம்.... 
 
ஓகே மாமி நிச்சயமாக. 

ஏதோ கர்டிஸிக்குத்தான் சொன்னேன். மாமி அவசர அவ்சரமாக தாம் சுலோகா கிலாஸ் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு விரைந்து விட்டார். ஆனால் மாமியின் சுலோகா வகுப்பின் மீதான அக்கறை பரிட்சைக்கு விரையும் மாணவியின் கவலையைப் போன்றதாக இருந்தது. 

சரி போய்த்தான் வருவோமே. பாவம் இவ்வளவு பெரியவர்கள் ஏதோ அக்கறையில் சொன்னால், அதற்கு மதிப்பு அளித்தால் என்ன.... 

வீடு பெரிய பாலஸ் கெட்டப்பு. உள்ளே போனால் ஹாலிலேயே ஐ டி உட்கார்ந்திருந்தார். மாமி சொன்னபடி கையில் ரேகைக் கண்ணாடி...ஓ சாரி கணிணி....மனிதர் தலையை அதற்குள்ளேயே விட்டுவிட்டார். ...சார் சார்.. 

ஒரு கால்.....யா யா ஷ்யூர்......புட் அப் தட் வொர்க்கிங்ஸ்.. நோ நோ...ஜஸ்ட் மெர்ஜ் த பூல்...கால் ஃபார் த டீம்.. நோ மேன்....இஃப் யூ டூ அ ராண்டம் செக்..... 

சரி முடியட்டும் என்று அமைதியாய் உட்கார்ந்தேன். கால் முடிந்தப்பறம் கணிணி கையும் கண்ணும்...... 

ஆனால் விட்டு விட்டு கைங்கைங்கைங் கக்க்கங்யிங் என்று சில சில்மிஷ ஓசைகள் போல் கணிணியில் கேட்டுக் கொண்டே இருந்தன. எனக்கு அந்த ஓசைகள் என்னமோ பொருந்தாதது மாதிரி ஒரு ஃபீலிங். ஒரு க்யூரியாஸிடி...அப்படி ஒரு பக்கமாய் வ்யூ தெரிகிறதா என்று பார்த்தேன்....ஐ வாஸ் ஸ்டன்டு. 

ஐ டி நான் குறுகுறுப்பாக சந்தேகித்ததற்கேற்ப வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது. பெரிய ராட்சசன் ஏதோ பாறையைத் தூக்கி எதன் மீதோ போடுகிறான். அவன் போட்ட பாறை விழுவதற்குள் இவர் எதையோ நகர்த்தி விட்டால் ஒரு சத்தம் இல்லை பாறை அதன் மீது விழுந்து விட்டால் அந்த அணில் பிள்ளை சத்தம். எனக்கு ஒரு ஆர்வம் இந்த மனிதர் எவ்வளவு நேரம்தான் நாம் வந்திருப்பதைக் கவனிக்காமல் அதை நோண்டிக்கொண்டு இருப்பார் என்று கவனிக்க. ஒரு முக்கா மணி நேரம் ஆகிவிடும் போல் இருந்தது. நல்ல வேளையாக வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒருவர் வந்து கதவைத் திறந்ததும்தான் அவர் அந்த உலகத்தை விட்டு வந்தார். ‘நீங்க?...’ என்று கொஞ்சம் புரியாமல் விழித்தார். நான் இன்னார் என்று ஞாபகம் படுத்திவிட்டு கடந்த அரைமணிக்கும் மேலாகக் காத்திருப்பதாகச் சொன்னேன். ‘அடடா! நீங்கள் கூப்பிட்டிருக்கலாமே....’ இல்ல சார் கூப்பிட்டுப் பார்த்தேன். நீங்க கணினியில் மும்முரமாக வேலையாக இருந்தீர்கள். சரி அதுதான் பொறுமையாக... 

ஆமாம் சார்! என்ன பண்றது.....கம்பெனி வேலை... ஏகப்பட்ட டிஸிஷன் மேகிங்......ப்ளானிங்.....எல்லாருக்கும் சமயத்துல வீட்டிலிருந்தே மேனேஜ் பண்ணுவேன். என்ன பண்றது ஒரெ டென்ஷன்...பாருங்க வேலை மும்முரத்துல நீங்க வந்ததைக் கூடக் கவனிக்காமல் நான் கம்ப்யுட்டரில் இருக்கிறேன் என்றால்...ஹி ஹி சாரி....என் மனைவிக்குத் தெரிந்தால் மிகவும் கோபித்துக் கொள்வாள்......சொல்லி விடாதீங்கோ...உங்களைப் பத்தி அன்னிக்கு... 

பரவாயில்ல சார்... நோ ப்ராப்ளம்.... 

என்ன சாப்பிட்றீங்க.. ஏதாவது கூல்ட்ரிங்ஸ்..... மனைவி வரவரைக்கும் காப்பி டீ எனக்கே கிடைக்காது.... 

ஒன்றும் வேண்டாம் சார். இங்கதான் வீடு. ஜஸ்ட் வாண்டட் டு மீட் யூ அட் ஹர் இன்ச்டன்ஸ்.... 

ஓ ரியலி குட் குட்.....நீங்க ஏதோ பத்திரிக்கையில் இருக்கறதா... 

இல்ல சார் பத்திரிக்கை இல்ல வங்கியில் குமாஸ்தா... சும்மா திருப்திக்கு பத்திரிக்கையில் கட்டுரைகள், நூல்கள் எழுதுவது இவ்வளவுதான். 

ஓ அப்படியா? ஏதாவது...எனி ஹெல்ப் யூ வாண்ட்? தாராளமா சொல்லுங்கோ.....ஆக்டுவலி...கம்பெனியில் சில சமயம் வெளியாட்களைக் கூப்பிட்டுப் பேச வைப்போம். நீங்க ஆர்வம்னா ஐ கேன் ரெகம்ண்ட் யூ... தே வில் பே யூ மச்.... 

இல்ல சார் நோ ப்ராப்ளம்...நான் அவ்வளவா பேச்சுக்குப் போறதில்ல...ஒன்றும்ம் தேவை கிடையாது... ஐம் க்வெயிட் ஹாப்பி.... 

ஓ கிரேட்...ஏதாவது உங்க புத்தகம் வெளியிடணும்னா கூட ஐ நோ சம் கம்பெனிஸ்...அவா இந்த மாதிரி அல்லொகேட் பண்ணி வச்சிருக்கா....சோஷல் ஸ்பெண்டிங் என்கிற வகையில்...ஐ கேன் புட் யுவர் ப்ரொபோஸல்.... 

இல்ல சார்... ஒன்றும் கவலைப் படாதீர்கள். ஏதாவது என்றால் நிச்சயம் சொல்கிறேன். இப்பொழுது நான் பார்க்க வந்தது நிஜமாவே சும்மாதான். 

ஓ..ஓ இருவரும் சிரித்துவிட்டோம். கொஞ்சம் அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. தாம் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர், இந்த மனிதனுக்கு தம் அருமையே தெரியவில்லையே....என்று மனத்திற்குள் நினைத்திருக்கலாம். 

பரவாயில்லை. அவர் உலகத்தில் அவர் மகிழட்டுமே. அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என்று நான் கிளம்பிவிட்டேன். தம்முடைய விசிட்டிங் கார்டு கொடுத்தார். அந்தக் கார்டின் தன்மையே அவருடைய ரேங்க்கைக் காட்டிக் கொண்டிருந்தது. தூரத்தில் கைக்கணினியில் அழைப்பு கேட்டது. நானும் கிளம்பி விட்டேன். 

எதை வெட்டிப் பொழுது என்பது? மாமி என்னடா என்றால் சுலோகா கிலாஸ் என்று அக்கறையாக நேரத்தைச் செலவிட்டு கிட்டத்தட்ட 150 சுலோகங்கள் மனப்பாடம் என்கிறார். வீட்டு வேலை போக மிச்ச நேரத்தைப் பார்த்து பார்த்து Quality Time ஆக ஆக்கிக்கொண்டிருக்கிறார், தன்னளவில். ஐ டி கணவன் கம்பெனி அக்கௌண்ட்ஸ், டிஸிஷன் மேகிங் என்று நண்பர்களிடம் பேசிய நேரம் போக வீடியோ கேம் பூதத்தோடு டூயட். ஆனால் அதையும் தம் கம்பெனி பிஸி டைம் என்பதாகத்தான் சொல்லுகிறார். நிச்சயம் ஒரு நாளில் பல மணி நேரங்கள் பூதத்தோடு அல்லது வேறு கேம்ஸோடு சல்லாபம்....காலத்தைச் சாப்பிடும். ஆனால் மாமியோ தாம் ஒன்றும் அறியா அடுப்பங்கரை; மாமாவோ ஆல்வேஸ் பிசி ஐடீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஐ டீ காரருக்கோ என்னைப் பார்த்தால் வெட்டிப் பொழுது போல் படுகிறது. ஆமாம் திறமையைக் காசாக்காமல் போனால், ஆஃபர் நேருக்கு நேர் சொல்லியும் வேண்டாம் என்று போனால் அவருடைய பிரம்ம சுவடி அவருக்கு அதை வெட்டிப் பொழுது என்றுதான் காட்டுகிறது. 

ஆனால் எது எப்படியோ...அந்த மாமி வெட்டிப் பொழுது போக்குகிறார் என்று எனக்கு நினக்கத் தோன்றவில்லை. 

பார்த்தீங்களா....இருந்தாரா... 

ஹாங் நன்ன பேசிண்டு இருந்தோம். ஆனால் அவர் மிகவும் பிஸி மேன். அப்புறம் சாவகாசமாகப் பேசலாம் என்று சொல்லியிருக்கிறோம். 

ஐயோ.,..அவர்தானே! அந்தக் கைக் கணினியில் உட்கார்ந்தார்னா பொழுதன்னிக்கும் கம்பெனி டிஸ்கஷன், கணக்கு, ஓயாம பேச்சு....ஏதேதோ கேல்குலேஷன்...எனக்கு என்ன புரியறது அதெல்லாம்....உங்க கிட்ட நன்றாகப் பேசினாரோல்லியோ.... 

ஆஹா...அதெல்லாம் வொண்டர்ஃபுல்..ஆனால் உங்க காப்பியத்தான் குடிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. 

என்னது? நான் தான் சுடச்சுட காப்பிப் போட்டு ஃப்லாஸ்குல வெச்சிட்டு அவர்கிட்ட சொல்லிட்டு வந்தேனே..அதான் அவர் கம்பெனியில் உட்கார்ந்தார்னா அப்புறம் எதுவுமெ நினைவுக்கு இருக்காது....நீங்க இன்னொரு நாள் வாங்கோ... 

நிச்சயம் உங்க காப்பிக்காகவே வருகிறேன். 

ஐயோ..நான்லாம் வெட்டிப் பொழுது போக்கற பொம்மனாட்டி..என்னைப் போய் சொல்கிறீர்களே.... 

வெட்டிப் பொழுது என்ற வார்த்தையில் தலையில் நின்று கொண்டு அந்தப் பூதம் கையில் பாறாங்கல்லை ஏந்திக் கொண்டு ஐ டீ எப்பொழுது அசருவார் என்று முறைத்துக்கொண்டிருந்தது. 

***

வாழ்வைப் பற்றிய பார்வை

ஊருன்னா எங்க ஊருதான். இதெல்லாம் என்ன ஊரு? எங்கு பிறந்து வளர்ந்த மனிதரும் இதைத்தான் சொல்கின்றார்கள். எங்களுடைய சுற்றம், எங்களுடைய உற்றார், எங்களுடைய நண்பர் - இவர்க்கு இணை இந்த உலகிலேயே இல்லை. ‘நீங்க நம்மாளா?’ சொன்னவுடன் ஒரு கேண்மை. ஏன் மனிதர்களுக்கு இப்படி ஓர் அவநம்பிக்கை இந்த உலகின் மீதும், இந்த உலகில் கூடப் பிறந்த மக்கள் மீதும். வேற்று நாடு என்றதும் ஓர் எதிரியான எண்ணம், ஓர் ஜாக்கிரதை, சந்தேகம். வேற்று நாடு என்று வேண்டாம். வேற்று இனம், வேற்று மாகாணம், வேற்று மொழி - என்ன மாற்றம் வந்து விடுகிறது நம் மனத்தில்! 

நம்மவர்கள் - அவர்கள் இந்த விஷ நுகத்தடியில் சிக்கி நம் நல்லெண்ணங்கள் பாழாவதுதான் எத்தனை எத்தனை! அதாவது நம்மவர்கள் மத்தியில் கவலை இல்லாமல் தன்னிச்சையாக இருக்கலாம் என்பதும், மற்றவர்கள் என்றால் இயல்பாய் இருக்க முடியாது என்பதும் இந்த விஷ சிக்ஸாவிற்கு நாம் சொல்லும் காரணம். 

ஆனால் எந்த நாடாய் இருந்தால் என்ன? எந்த ஊராய் இருந்தால் என்ன? எந்த மொழி, எந்த இனமாய் இருந்தால் என்ன? ஒருவருக்கு ஒரு தீமை வரவேண்டும் என்றால் அது இன்னாரால்தான் வரவேண்டும் என்று இல்லையே. பிறர் தர வருவது அல்லவே தீமையும், நன்மையும். பின்? நாம் செய்த வினைகள், அவற்றின் பயன்கள் அன்றோ பின் ஒரு காலத்தில் வினைப்பயன்களாக வந்து ஊட்டுகின்றன. வந்து சேர வேண்டிய வினைப்பயன் எல்லா கதவுகளையும் மூடினாலும் உள்ளிருந்தே கிளம்பி அன்றோ வந்து எய்தும்! 

மேலும் மக்களே! வாழ்க்கையில் நோவதும், பின்னர் அந்த நோவு தணிந்து மாறுவதும், நோய், முதுமையின் தளர்ச்சி போன்றவையும், அது போன்றே சாதல் என்பதும் இனிமேல்தான் நாம் புதிதாக முதன்முறையாக அனுபவிக்கவா போகிறோம்? இல்லை மக்களே இல்லை. எனவே வாழ்க்கையை ஆஹா மிக இனியது என்று கொண்டாடாதீர்கள்! அது போல் வாழ்க்கையை ஐயோ மிகவும் இன்னாதது என்று சினம் கொள்ளாதீர்கள். நீங்கள் பயிற்சிக் கூடத்தைப் பள்ளியறை என்று நினைத்து மயங்குகிறீர்கள். அதனால் சில சமயத்தில் வெறுத்து பாழும் பள்ளம் என்று வெறுக்கிறீர்கள். இல்லை இல்லை. வாழ்க்கை வாழ்க்கைதான் மக்களே! நன்றாக நினைத்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும். 

யாதும் ஊரே 
யாவரும் கேளிர் 

தீதும் நன்றும் பிறர்தர வாரா. 

நோதலும் 
தணிதலும் 
அவற்றோரன்ன சாதலும் 
புதுவதன்றே! 

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே. 

முனிவின் இன்னாது என்றலும் இலமே. 

நீங்கள் மின்னல் மின்னி வானம் இடித்து மழை பெய்து மலையின் சிரங்களில் வந்து இறங்கி, பின்னர் பல அருவிகள் ஒன்று கலந்து மேட்டிலிருந்து பள்ளத் தாக்குகளில் வரும் பொழுது வேகம் கூடி பெரும் வெள்ளமாக, பெருக்கெடுத்த வற்றாத நதியாக வரும்பொழுது அதில் ஒரு புணை, நீந்த உதவும் கட்டை, அந்த ஓட்டத்தோடு அதன் வேகத்தோடு அதன் திசையில் எல்லாம் உருண்டு, பிரண்டு முற்றிலும் நதியின் வசத்தில் தன் கதி என்று வருகின்ற அந்தப் புணையைப் பார்த்திருக்கிறீர்கள் தானே? அந்த மாதிரிதான் ஆருயிர் என்பது பண்டைய வினைகளின் கூட்டு வேகம் ஆகிற ஊழ், முறை எனப்படும் நியதியின் வேகத்திற்கு ஆட்பட்டு வாழ்க்கையில் ஒரு புணை போல் மிதந்து வருகிறது. ஒவ்வோருயிரும் ஏதோ தான் சுதந்திரமாக நடப்பது போல் தோன்றினாலும் அத்தனைக்கும் பின்னால் இயக்க வேகமாக இந்த முறை அல்லது விதி அல்லது ஊழ் இருக்கிறது என்பதைச் சாதாரணமாக மக்கள் உணர்வது இல்லை. மிகவும் ஆழ்ந்து தியானிக்கும் திறன் வாய்க்கப் பெற்ற திறவோர் காணும் தத்துவக் காட்சியில்தான் இந்த உண்மை நமக்கும் காணக் கிடைக்கிறது. 

மின்னொடு வானம் 
தண் துளி தலைஇ ஆனாது 
கல் பொருது இரங்கு 
மல்லற் பேர் ஆற்று 
நீர் வழிப்படூஉம் புணைபோல் 
ஆருயிர் 
முறைவழிப் படூஉம் என்பது 
திறவோர் காட்சியில் தெளிந்தனம். 

எனவே மக்களே! இதனால் ஒரு தெளிவுக்கு வந்திருக்கிறோம் யாம். என்னவென்று கேட்கிறீர்களா? அவரவர் வினைப்பயன் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் புணைபோல் இயங்கும் உயிர்கள்தாம் அனைவரும் என்பதால் ஒரு மனப்பான்மை எமக்கு ஏற்பட்டுவிட்டது. பெருமையில், மாட்சியில் மிகப்பெரியவர் என்போரை ஏதோ மனிதரால் முடியவே முடியாத அருமையான வியப்பு போல் யாம் கருதிப் பார்ப்பதில்லை. அதைவிடவும் முக்கியமாக மாட்சியில் சிறியோரை, பெருமையில் குறைவு பட்டோரை, ஊரறிந்த புகழ் கிட்டாமல் அடக்கமாக இருக்கும் எளியவர்களை இகழ்தல் என்பது யாம் ஒரு காலும் நினைப்பதில்லை. 

ஆகலின் 
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே 
சிறியோரை இகழ்தல் 
அதனினும் இலமே. 

புறநானூறு, 192ல் கணியன் பூங்குன்றனார் கூறியதை விட ஒரு sane attitude towards life  என்பது என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்! 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

புத்தகங்களோடு ஒரு டூயட் !

உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். வேறு யார் காதுக்கும் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

புத்தகங்களை நீங்கள் எதற்குப் படிப்பீர்கள்? ஏதாவது தகவல், எதைப் பற்றியாவது அறிந்து கொள்ள... இப்படித்தானே? 

ஆனால்.. பொழுது போகவில்லை என்றால், மனம் ஏதோ மாதிரி தொய்வாக இருந்தது என்றால், யாரிடமும் எதுவும் பேசாமல், அக்கடா என்று போய், நூல்கள் இருக்கும் அறைக்குள் புத்தகங்களை இன்னது என்று நோக்கமின்றி ராண்டமாக எந்தப் புத்தகத்தையாவது எடுத்து வைத்துக்கொண்டு அதில் ஏதாவது டாப்பிக்கில் ஈடுபாடு ஆகி உள்ளே தன்னை மறந்து போகும் பழக்கத்திற்கு என்ன என்று சொல்லலாம்? 

ஐயோ அது என்ன என்னவெல்லாமோ உலகத்திற்கு ஆளைக் கடத்திக்கொண்டு போய்விடும். அப்புறம்.. மனத் தொய்வாவது மண்ணாங்கட்டியாவது... 

ஆம் என் அனுபவம் இது. சமயத்தில் ஒரு வாரம் எல்லாம் எங்கோ ஊருக்குப் போகிறாற்போல் படு ஜரூராக முனைந்து லீவு போட்டுவிட்டு, நான் உண்டு, என் இடம் உண்டு என்று புத்தகங்களுடன் மொத்த வாரத்தையும் ஓட்டியிருக்கிறேன். இத்தனைக்கும் அந்த வாரம் முடியும் பொழுது முடிந்து விட்டதே என்று என் கண்களில் கண்ணீருடன்..! 

நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. தெரியும். ஆனால் என்ன சொல்வது? அசல் கிறுக்கு, புத்தகப் பைத்தியம் ஒன்றிடம் நீங்கள் என்னதான் எதிர்பார்க்க முடியும்? 



ரஷ்ய நாடகப் பள்ளிகள்

வாங்கிய போது நன்கு ஒரு தடவை பார்த்துவிட்டு வைத்தது. அப்புறம் சில தடவைகள் ஒன்றிரண்டை எடுத்துத் துருவியதுண்டுதான். ஆனாலும் வரியடைவே நன்கு முன்பின் நியாய விஸ்தரமாகப் பார்ப்பதற்கு, திருப்தியாக நேரம் கிடைக்காமல்தான் இருந்தது. 

என்ன அப்புறம் வரவேயில்லை இந்தப் பக்கம் என்பது போல் அந்தப் புத்தகங்களின் செட் சன்னமாக ஒரு குரல் கொடுத்தவண்ணம் இருந்ததை நானும் இதோ வருகிறேன் இதோ வருகிறேன் என்று தள்ளிக் கொண்டிருந்தேன். நேற்று எதையோ தேடப் போக இந்த செட் புத்தகங்கள் பிடித்துக்கொண்டு விட்டன. 

அதாவது இந்தப் புத்தகங்கள் எல்லாம் வானத்து நட்சத்திர மண்டலம் மாதிரி. சிலது ஒரு கூட்டமாகத்தான் இருக்கும். சில புத்தகங்கள் பார்த்தால் எப்பொழுதும் தன்னந்தனியாகத்தான் இருக்கும். சில நூல்கள் எப்பொழுதுமே இரட்டையர். சிலது மும்மூர்த்திகள். சில புத்தகங்களோ நல்லவர்கள் நால்வர் என்பது போல். சில நூல்கள் நின்னொடும் ஐவரானோம் டைப்பு. சில புத்தகங்களோ கார்த்திகை உடுக்குழாம் ஒப்ப அறுவர். சப்த ரிஷி மண்டலம், அஷ்ட திக்கஜங்கள், நவ ராத்திரிகள், தச அவதாரங்கள் என்பது போல் புத்தகங்களிலும் சொல்லிக்கொண்டு போகலாம். அதாவது வால்யூம்களோ அல்லது சமபந்தமான நூல்களோ அந்த அந்த எண்ணிக்கையில்தான் தம்முள் ஒரு முழுமையாக அமையும். இதற்கு மாய மந்திர காரணங்கள் ஏதேனும் உண்டோ என்று என்னைக் கேட்காதீர்கள். அப்படித்தான் அனுபவம் பேசுகிறது. 

நீங்களே பாருங்கள்- நாடகம் சம்பந்தமான ஓர் ஏழு நூல்கள் எப்பொழுது பார்த்தாலும் என் நூலகத்தில் ஒன்றாகவே இருக்கின்றன. எவ்வளவோ இடப்பெயர்வு, அடுக்கல் விளைவு, கட்டு வித்தை எல்லாவற்றையும் அவை அனுபவித்தாகிவிட்டன. ஆனாலும் அந்த ஏழு எப்பொழுதும் சப்த ரிஷி மண்டலம் போல ஒன்றாகவே நகர்கின்றன. ஒன்றாகவே சுடர்விட்டு என்னைச் சீண்டுகின்றன. 

நூல்களுக்கு வருகிறேன். 

1) Howard Barker's Theatre of Seduction, by Charles Lamb, Harwood academic publishers, 1997 

2) Meyerhold speaks, Meyerhold rehearses, by Aleksandr Gladkov, Tr by Alma Law, harwood..., 1997 

3) Yury Lyubimov at the Taganka Theatre, 1964 - 1994, Birgit Beumers, harwood..., 1997 

4) Elements of Performance, Pauline Koner, harwood..., 1993 

5) Moscow Performances, The New Russian Theater, John Freedman, 1991 - 1996, harwood..., 1997 

6) The Arab in Israeli Drama and Theatre, Dan Urian, Tr by Naomi Paz, harwood..., 1997 

7) Spanish Theatre 1920 - 1995, Volume 7, Part 3 of Contemporary Theatre Review, Issue ed., Maria M Delgado 

ஏன் இவை ஒரு சேர இருக்கின்றன என்பதற்கு ஒரு நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். அனைத்தும் நாடகத்தை மேடை நிகழ்த்து மெய்மை அல்லது உருவக உலகம் என்ற வகையில் ஒட்டியோ வெட்டியோ பார்க்கின்றன. 

மேடை என்றாலே வளைத்து அதற்கென்று ஒதுக்கிய இடம். அதற்குள் நுழைய வேண்டுமெனில் உங்களுக்கு வேண்டியது அனுமதிச் சீட்டு அன்று. அதற்கேற்ற கலை உணர்வு கூர்த்த மனம். அது இல்லாமல் நீங்கள் எவ்வளவு குறைந்த காசிலோ அல்லது அதிக விலை கொடுத்தோ சீட்டைப் பெற்றாலும், இல்லை ஓசியில் பார்த்தாலும், தண்டச் செலவிற்கான வவுச்சராகத்தான் உங்கள் கணக்கேட்டில் அது பதிவாகும். 

நாடக அரங்கம் என்பதில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று காணப்படும் இடம். மற்றொன்று காணும் இடம். 

காட்டும் இடம், காணும் இடம் ஆகிய இந்த முனைகளுக்குள்தான், இந்த இரண்டிலுமோ அல்லது இந்த இரண்டின் இடைப்பட்ட வெளியிலோ அல்லது அனைத்தையும் உள்ளடக்கி இவற்றில் தானடங்கா ஒரு மீப்பொது தளத்திலோதான் நாடகம் நிகழ்த்து மெய்மையில் வெளிப்படுகிறது. 

இதை Ortega எழுதிய Idea del teatro என்னும் நூலில் வரும் வரையறை மிகத் தெளிவாகச் சொல்கிறது என்கிறார் Stephen G H Roberts. 

Theatre is a building which has an organic inner form made up of two organs - auditorium and stage - set out in such a way as to fulfill two opposite but connected functions: seeing and being seen. 

மயக்கும் நாடகத்தகவு என்னும் பொருள்பட Theatre of seduction என்பதைச் சொல்ல வருகின்ற சார்லஸ் லாம்ப், இந்த நாடகக் கொள்கையையே தாம் ஹோவர்டு பார்கர் அவர்களுடைய நாடகங்களைப் புரிந்து கொள்ள சிரமபட்டு, அவரது நாடகங்களைப் புரிந்து கொள்ள வேண்டியே பிரத்யேகமாக உருவாக்கிய நாடகக் கோட்பாடு என்கிறார். சார்லஸ் லாம்பிற்கு ஊக்கத் துணை (Baudrillard) போத்ரிய்யார்ட் அவர்களின் Seduction மயக்குதல் பற்றிய கோட்பாடு. 

Seduction is that which extracts meaning from discourse and detracts it from its truth. 

என்கிறார் போத்ரிய்யார்ட். 

ஓர்டேகா கூறுவது தியேட்டர் என்பது நனவின் மெய்மையிலிருந்து ஒரு வித தப்பித்தல். இந்த escapism மனிதனுக்கு அவசியம் தேவை. அதை நாடகம்தான் தியேட்டர்தான் தர முடியும் என்பது ஓர்டேகாவின் கருத்து. 


ஹோவர்ட் பார்க்கரைப் பற்றி யூட்யூபிலும் நிறைய லிங்குகள் உள்ளன. அவருடைய வலைத் தளமே இருக்கிறது. 

ஜான் ஃப்ரீட்மன் ஐந்து வருஷங்களில் ரஷ்யன் தியேட்டரில் நிகழ்ந்த நிகழ்த்துகலைகள் பற்றிய தமது விமரிசனங்கள், கருத்துகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தரும் போது ஒரு சன்னல் திறந்து மாஸ்கோவின் கலைக் காற்று வீசுகிறது. 

பாலின் கோனர் எழுதிய Elements of Performance மிக அருமையான நிகழத்துகலைக் குறிப்புகளை உள்ளடக்கிய நூல். அதன் துணைத் தலைப்பு கூறுவது இந்த நூல் நடனம், நாடகம், குழு நாட்டியம் ஆகியவற்றுக்கான வழிகாட்டி நூல் என்பது. அவர் போதித்த அம்சங்களை அவரே தமது நிருத்தியத்தில் எவ்வண்ணம் பொதிந்து காட்டுகின்றார் 

சங்கீதக் காரர்களைக் குறித்து அவர் சொல்லும் போது When musicians use the interval between movements as a rest rather than a transition, the flow of the composition is fragmented. - மிகவும் பொருள் பொதிந்த வாக்கியம். 


யூரி ல்யுபிமோவ் என்னும் ரஷ்ய நாடக வித்தகர் கூறும் ஒரு வாக்கியம் - 

The most interesting thing in art is the unconscious process. Analysis starts later... 

அவரைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கிய பிர்ஜிட் ப்யுமர்ஸ் கூறுகிறார் - 

When I started my research in Moscow, the name Lyubimov was taboo: his productions were shown, but there was no indication of a director in the programmes; his picture and name were removed from all new editions of theatre histories. 

ஏன் அவருடைய நாடக உழைப்புகளைப் பற்றி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்? கூறுகிறார் பிர்ஜிட் ப்யூமர்ஸ் - 

His productions are tied not to the system under which they were created, but to the society he lived in and to the audience he played to...his work over thirty years reflects the development of humanist and spiritual values in Soviet and post- Soviet Russia. 

மேலே கவிந்த கம்யூனிஸ சித்தாந்தக் கட்டுப்பாட்டின் செயல்படுத்தும் இரும்புக் கரங்களாக ரஷ்யாவில் கலை நாடகத் துறை தணிக்கை அமைப்புகள் செயல்பட்ட போது பல நாடக சித்தாந்த வளாகங்களும் அதன் ஆட்சியைக் கீழ்ப்படிந்துதான் தம்முடைய இருப்பைத் தகக் வைத்துக் கொண்டன. ஆனல் ல்யுபிமோவின் வெற்றி அதை நிராகரித்து மேலமைப்புகளின் ஆடுபாவையாக கலை ஆகிவிடாமல் மக்களின் மனசாட்சியின் துணைவனாக நாடகக் கருத்தியல் வளாகம், தகங்க வளாகமாவது அவ்வண்ணம் யதேச்சையான உள்ள வெளிப்பாடாக செயல் பட வைத்தமை ஆகும். தகங்கா தியேட்டர் அதனாலேயே தான் இருக்கும் இடத்தின் பெயரை ஏற்றது. பெரிய இடத்துப் பெயர்களைச் சுமப்பதற்குப் பதிலாக. 

அவருக்கு ஊக்கத் துணை பெட்ரோல்ட் ப்ரெச்டின் கருத்துகள். 

தியேட்டரைப் பற்றி ல்யுபிமொவ் கூறுவது -- 

We must not forget for a minute that we are in the theatre, we must not try to act with untheatrical means, we must not imitate reality; then the feeling of truth and of life on stage will be stronger, and the spectator will believe us... 

மாறும் மனித வாழ்க்கையின் வேகத்தை தியேட்டர் புறக்கணித்து விட முடியாது. தகவல் பெருக்கம், தொடர்புத் தொழில் நுணுக்கமும் சுலபமான பயன்பாடு வழிகளும் மனித வாழ்க்கையின் அடிப்படை துரிதத்தைப் பற்றிய மேடை மீதான உருவகத்தை மாற்றியே ஆகும். நீளமான தனிமை மொழிப்பெருக்குகள், மணிக்கணக்கில் இருவர் கலந்துரையாடுவது போன்றவை வாழ்க்கையின் அடிப்படைத் தன்மைக்கே விரோதமாக உணரப்படும். 

சித்தாந்தங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் சித்தாந்தங்கள்  இருக்கின்றன என்பதை தகங்க தியேட்டரின் மூலம் வெளிக்காண்பித்தவர் யூரி ல்யுபிமோவ். அதனால் 1984ல் நாடு கடத்தப்ப்ட்டார். கோர்பசேவின் பெரஸ்டோரிகவினால் மீண்டும் ரஷ்யாவிற்கு 1988ல் வந்தார். 


ஓர்டேகா சொன்னதற்கு நேர் எதிர் போன்று இருக்கிறது மெயர்ஹோல்ட் என்னும் பிரபலமான ரஷ்ய நாடகாசிரியரின் கொள்கை. anti-illusionist கோட்பாடு, மயக்கத்தின் எதிரான, முரண்களை மூடி மறைக்காமல் மனித கவனத்தில் ஆழமாக சுழல விடும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது மெயர்ஹோல்ட் என்பவருடைய தியேட்டர் பள்ளி. 

அலெக்ஸாண்டர் க்ளாஸ்கவ் எழுதிய நூலை மொழிபெயர்த்த அல்மா லா கூறுவது - It would be difficult to exaggerate the influence the Russian theatre director, Vsevolod Meyerhold has had on the twentieth-century theatre. He was a tireless innovator with a boundless imagination who, in the words of Lee Strasberg, "exhausted almost every theatrical device and phase of theatre that could possibly be imagined". 

புரட்சிக்கு முந்தைய, அதாவது 1917க்கு முன்னரே நாடகத்தில் பெரும் பங்கு வகித்த மெயர்ஹோல்ட் பிறந்தது 1874. புரட்சியால் ஈர்க்கப்பட்டவர் 1918ல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து கலைகளைப் புனரமைக்கும் கம்யூனிசக் கனவில் ஈடுபட்டார். 1924ல் கனவுகள் கலையத் தொடங்கின. புரட்சியின் கொதிப்பு அடங்கி நிதானம் எழுந்த காலமாக அமைந்தது. ஆயினும் 1934 தொடங்கி ஸ்டாலினுடைய வெறுப்புக்கு ஆளானார் மெயர்ஹோல்டு. அவருடைய முந்தைய பெருமைகள் போலிட்புரோவின் கலைக்கரங்களாக செயல்பட்ட விமரிசனக் காரர்களால் மதிப்பிழக்க வைக்கும் நடவடிக்கைகள் அதிக அளவில் நடக்கத் தொடங்கின. கடைசியில் கைது செய்யப்பட்டு, மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டார். 

ஒரு நல்ல நாடக மேதை கம்யூனிச புரட்சிக்குத் தன்னை பலி கொடுத்து, அதனால் கலை மேதைமையும் பலியாகும் படி நேர்ந்து, கடைசியில் தன் உயிரையும் பலி கொடுத்த பரிதாபம் மெயர்ஹோல்ட். 

பாலின் க்ரோனர் கூறியதைப் போன்றே ஓரிடம் மெயர்ஹோல்ட் சொல்வது - 

Even in the pauses you have to know how to maintain the tempo of the dialogue. 

அவருடைய ஆத்மா எவ்வளவு தூரம் புரட்சிக்குப் பலியாகிவிட்டது என்பதற்கு ஓர் உதாரணம் - 

The rank of Soviet actor should be just as honorable as the rank of Red Army soldier. 

சில முக்கியமான ஒன்லைனர் அவருடைய மொழிகளில் = 

The voice of tragedy must be detached. Tears are inadmissible. 

An object held in the hand is an extension of the hand. 

A distinctly spoken line will pierce a wall of any thickness. 

***

நிர்வாண ஷட்கம்

னம் புத்தி அகங்காரம் சித்தம் நானில்லை
செவிநாக்கு மூக்குக் கண் எதுவும் நானில்லை 
வான்மண்ணும் இல்லை வளிதீயும் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான். 

பிராணன்என்றதும் இல்லை பஞ்ச வாயுக்கள் இல்லை 
ஏழுதாதுக்களும் இல்லை பஞ்ச கோசங்கள் இல்லை 
வாக்குகை காலும் இல்லை அன்றி குறிகுய்யம் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான். 

வெறுப்புவிருப்பெனக்கில்லை பற்றுமோகங்கள் இல்லை 
மதம் எனக்கில்லை மற்று மாச்சரியம் இல்லை 
தர்மார்த்த காம மோக்ஷங்கள் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான் 

புண்ணியபாபங்கள் இல்லைநான் சுகம்துக்கமில்லை 
மந்திரம்தீர்த்தம் இல்லைநான் வேதயக்ஞங்களுமில்லை 
உணவும்நானில்லை உண்ணப்படுவதும் உண்போனும் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான் 

இறப்பின் அச்சம் எனக்கில்லை ஜாதிபேதங்கள் இல்லை 
தந்தை எனக்கில்லை தாயில்லை பிறவி இல்லை 
சுற்றம் இல்லை நண்பரில்லை குரு இல்லை சீடன் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான் 

விகல்பங்கள் அற்றோன்நான் வடிவற்ற ரூபன் 
விபுவாய்க் கலந்தெங்கும் அங்கத்துள்ளாகி 
என்றென்றும் ஒன்றாமெனக்கு முத்திபந்தங்கள் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான். 

***
(தமிழாக்கம் - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்) 

*

Wednesday, November 8, 2017

திருப்பாவை முதல்பாட்டில் ஒரு வரி

திருப்பாவையில் முதல் பாட்டான மார்கழித்திங்கள் பாசுரத்தில் வரும் வரிகள், 

’கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்;
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்’ 

இதற்கு வியாக்யானங்களில் ஒரு நயவுரை காணப்படுகிறது. இதில் இருக்கும் முதல் வரியின் சொற்களைத் தனித்தனியாகப் பார்த்து ஏன் இந்தச் சொல் இங்கு வரவேண்டும் என்று அதற்கான அழகியல் நியாயங்களுடன் கவிதையின் தர்க்கத்தை வெளிக்கொணர்கிறார் மூவாயிரப்படியின் ஆசிரியரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவர்கள். ’கூர்வேல்’ என்பதில் உள்ள கூர்மையும், ‘கொடுந்தொழிலன்’ என்பதில் உள்ள கொடுமையும், ‘நந்தகோபன்’ என்பதில் உள்ள மகிழ்ச்சி என்பதைக் குறிக்கும் நந்த என்ற பகுதியும், ‘குமரன்’ என்பதின் பொருளும் அவர்களுடைய கவிதையாட்கொண்ட கண்களுக்குத் தனிப்பொருள் பெய்து நிற்கின்றன.
நந்தகோபன் ரொம்ப சாது. அவனைப் பார்த்தால் கோப தலைவன் என்பதே தெரியாது. பாடியில் இருக்கும் அத்தனைச் சிறார்களும், சிறுமியரும் அவனுக்குச் செல்லம். தங்கள் வீட்டில் கிடைக்காத பாசமும் அரவணைப்பும் அவன் ஒருவனிடத்திலே அவர்களுக்குக் கிடைத்தன. ஊருக்கே ஏதோ ஏவினதைச் செய்யும் வேலைக்காரன் போன்றுதான் அவன் பழக்கம். ஒருவர் துன்பத்தையும் காணப் பொறாதவன். இவ்வளவு நளினமானவன் என்பதை எப்படிச் சொல்வது? ‘நந்தகோபன் பசும்புல் சாவ மிதியாதவராய்த்து நம் சிறியாத்தானைப் போலே’ என்கிறார் வியாக்யான ஆசிரியர். சிறியாத்தான் என்பவர் அப்பொழுது வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர் ஒருவர். கல்வியும், கடவுட்காதலும், மன்னுயிர்பால் பெருகும் அருளும் அவரது அன்றாட நடவடிக்கைகளையே முற்றிலும் மாற்றிவிட்டது என்கிறார். அவர் பாட்டையில் நடக்கும் பொழுது அவர் நடப்பதே வினோதமாக இருக்கும். இங்கு ஒரு கால் வைப்பர். பிறகு பூச்சி புழு ஏதேனும் இல்லாத இடமாகத் தேடி அடுத்த காலடி வைப்பர். பசும்புல் தலை தூக்கியிருந்தாலும் போச்சு, வேறு இடம்தான் பார்க்கவேண்டும் அடுத்த அடி வைப்பதற்கு. நினைத்துப்பாருங்கள். பெரும் வேடிக்கையாக இருக்கும்.

இவ்வாறு இவர் உயிர் திகழ்ச்சி இருக்கும் இடத்தையெல்லாம் கண்டு அருளால் அஞ்சி ஒதுங்கித் தன்னால் அவ்வுயிருக்கு என் வருகிறதோ என்று பெருங்கவலையுடன் அன்றாடப் பொழுதைக் கழிப்பவரானால் அவரது மனப்பாங்கு எத்தனை மிருதுவானதாக, நளினமாக மாறியிருக்கவேண்டும். நம் கண்ணுக்குப் பழைய பைத்தியங்களில் இதுவும் ஒன்று என்று தோன்றினாலும்! அந்தச் சிறியாத்தானைப் போன்றவராம் நந்தகோபன். அத்தகைய சாத்வி, அமைதியும், இரக்கமும், உயிர்பால் சுரந்த அருளும் வடிவுகொண்டு இலகும் நந்தகோபன் திடீரென்று கொடுந்தொழிலன் ஆகிவிட்டார்!! அப்புறம்தான் அவருக்கு ஞாபகம் வருகிறது. இந்தக் கையில் ஏதோ குச்சி போன்று வைத்திருப்பார்களே முனையில் உலோகத்தில் கூர்மையாக ஹாங் ... வேல்!. அது எங்கே போட்டோம்? என்று பரண் ஒன்று விடாமல் தேடுகிறார். இது எதற்குத் தனக்கு? என்று தலைவன் ஆன அன்று ஏதோ மரியாதைக்கு சடங்கிற்காக கையில் வைத்துக்கொண்டு நின்றது. பின்னர் விட்டு எறிந்ததுதான். இங்குதான் எந்தப் பரணிலாவது இருக்கவேண்டும். அ.. அ..ம் இதோ என்று தேடிப்பிடித்து மும்முரமாக சாணை பிடித்துக் கொண்டிருக்கிறார். எறிந்தால் தப்பக் கூடாது. பட்டால் விழக்கூடாது. தைத்தால் நிற்கக் கூடாது. அப்படி இருக்க வேண்டும்!
என்ன ஆயிற்று இந்த ஆளுக்கு? எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்? சரி வேலைக் கையில் பிடித்தபடி என்ன செய்கிறார்? அங்கு கிருஷ்ணன் இருக்கும் தொட்டில் பக்கம் ஏதாவது எறும்பு போனாலும் போதும் உடனே பாய்ந்து வேல் முதலிலா இவர் முதலிலா என்று தெரியாதபடி கொடுந்தொழில்!. வெறும் புல் பூண்டு வண்டி பறவை என்று எந்த உருவிலும் கம்சன் ஏவிவிடும் அரக்கர்கள் வந்து தாக்கலாம் அல்லவா? இது எறும்புதானே என்று எப்படி விடுவது? எந்த அரக்கன் இந்த உருவில் கிருஷ்ணனை அண்ட முயற்சிக்கின்றானோ? சரி கிருஷ்ணன் தான் கடவுள் ஆயிற்றே? அனைவருள்ளும் இருந்து அனைத்தையும் காக்கும் கரம் அவனுடையதாய் இருக்க,....இதோ பாருங்கள் உங்களோடு வெட்டிப்பேச்சு பேச நேரம் இல்லை. இந்த இடைவெளியில் எந்த அரக்கன், ஏவல் பூதம், கிருஷ்ணனுக்கு ஊறு செய்யத் தேடுகிறதோ? கிருஷ்ணன் மேல் பாசம் இவனைப் படுத்தும் படி!
என்னதான் இருந்தாலும் இப்படியும் உண்டா? பாசம் இவ்வளவா கண்ணை மறைக்கும்? காதலும், பாசமும், அதற்கு ஊறு விளைந்து விடுமோ என்ற பயமும் சேர்ந்து என்ன மனநிலையைத் தோற்றுவிக்கும் என்று எப்படி சொல்லமுடியும்?
ஒருவர் விஷயத்தில் கடவுள் காதல் பசும்புல்லைக் கூட சாவ மிதிக்காமல் தத்தித் தத்தி நடக்கின்ற பைத்தியக்காரத்தனத்தில் கொண்டு போய் விடுகின்றது. இன்னொருவர் விஷயத்தில் தன்னியல்பு கெட்டுத் துருப்பிடித்த வேலைப் புகரெழக் கடைந்து, கண்முன் தெரியாது பாயும் கொடுந்தொழிலில் கொண்டு போய் விடுகிறது.