ஊருன்னா எங்க ஊருதான். இதெல்லாம் என்ன ஊரு? எங்கு பிறந்து வளர்ந்த மனிதரும் இதைத்தான் சொல்கின்றார்கள். எங்களுடைய சுற்றம், எங்களுடைய உற்றார், எங்களுடைய நண்பர் - இவர்க்கு இணை இந்த உலகிலேயே இல்லை. ‘நீங்க நம்மாளா?’ சொன்னவுடன் ஒரு கேண்மை. ஏன் மனிதர்களுக்கு இப்படி ஓர் அவநம்பிக்கை இந்த உலகின் மீதும், இந்த உலகில் கூடப் பிறந்த மக்கள் மீதும். வேற்று நாடு என்றதும் ஓர் எதிரியான எண்ணம், ஓர் ஜாக்கிரதை, சந்தேகம். வேற்று நாடு என்று வேண்டாம். வேற்று இனம், வேற்று மாகாணம், வேற்று மொழி - என்ன மாற்றம் வந்து விடுகிறது நம் மனத்தில்!
நம்மவர்கள் - அவர்கள் இந்த விஷ நுகத்தடியில் சிக்கி நம் நல்லெண்ணங்கள் பாழாவதுதான் எத்தனை எத்தனை! அதாவது நம்மவர்கள் மத்தியில் கவலை இல்லாமல் தன்னிச்சையாக இருக்கலாம் என்பதும், மற்றவர்கள் என்றால் இயல்பாய் இருக்க முடியாது என்பதும் இந்த விஷ சிக்ஸாவிற்கு நாம் சொல்லும் காரணம்.
ஆனால் எந்த நாடாய் இருந்தால் என்ன? எந்த ஊராய் இருந்தால் என்ன? எந்த மொழி, எந்த இனமாய் இருந்தால் என்ன? ஒருவருக்கு ஒரு தீமை வரவேண்டும் என்றால் அது இன்னாரால்தான் வரவேண்டும் என்று இல்லையே. பிறர் தர வருவது அல்லவே தீமையும், நன்மையும். பின்? நாம் செய்த வினைகள், அவற்றின் பயன்கள் அன்றோ பின் ஒரு காலத்தில் வினைப்பயன்களாக வந்து ஊட்டுகின்றன. வந்து சேர வேண்டிய வினைப்பயன் எல்லா கதவுகளையும் மூடினாலும் உள்ளிருந்தே கிளம்பி அன்றோ வந்து எய்தும்!
மேலும் மக்களே! வாழ்க்கையில் நோவதும், பின்னர் அந்த நோவு தணிந்து மாறுவதும், நோய், முதுமையின் தளர்ச்சி போன்றவையும், அது போன்றே சாதல் என்பதும் இனிமேல்தான் நாம் புதிதாக முதன்முறையாக அனுபவிக்கவா போகிறோம்? இல்லை மக்களே இல்லை. எனவே வாழ்க்கையை ஆஹா மிக இனியது என்று கொண்டாடாதீர்கள்! அது போல் வாழ்க்கையை ஐயோ மிகவும் இன்னாதது என்று சினம் கொள்ளாதீர்கள். நீங்கள் பயிற்சிக் கூடத்தைப் பள்ளியறை என்று நினைத்து மயங்குகிறீர்கள். அதனால் சில சமயத்தில் வெறுத்து பாழும் பள்ளம் என்று வெறுக்கிறீர்கள். இல்லை இல்லை. வாழ்க்கை வாழ்க்கைதான் மக்களே! நன்றாக நினைத்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நோதலும்
தணிதலும்
அவற்றோரன்ன சாதலும்
புதுவதன்றே!
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே.
முனிவின் இன்னாது என்றலும் இலமே.
நீங்கள் மின்னல் மின்னி வானம் இடித்து மழை பெய்து மலையின் சிரங்களில் வந்து இறங்கி, பின்னர் பல அருவிகள் ஒன்று கலந்து மேட்டிலிருந்து பள்ளத் தாக்குகளில் வரும் பொழுது வேகம் கூடி பெரும் வெள்ளமாக, பெருக்கெடுத்த வற்றாத நதியாக வரும்பொழுது அதில் ஒரு புணை, நீந்த உதவும் கட்டை, அந்த ஓட்டத்தோடு அதன் வேகத்தோடு அதன் திசையில் எல்லாம் உருண்டு, பிரண்டு முற்றிலும் நதியின் வசத்தில் தன் கதி என்று வருகின்ற அந்தப் புணையைப் பார்த்திருக்கிறீர்கள் தானே? அந்த மாதிரிதான் ஆருயிர் என்பது பண்டைய வினைகளின் கூட்டு வேகம் ஆகிற ஊழ், முறை எனப்படும் நியதியின் வேகத்திற்கு ஆட்பட்டு வாழ்க்கையில் ஒரு புணை போல் மிதந்து வருகிறது. ஒவ்வோருயிரும் ஏதோ தான் சுதந்திரமாக நடப்பது போல் தோன்றினாலும் அத்தனைக்கும் பின்னால் இயக்க வேகமாக இந்த முறை அல்லது விதி அல்லது ஊழ் இருக்கிறது என்பதைச் சாதாரணமாக மக்கள் உணர்வது இல்லை. மிகவும் ஆழ்ந்து தியானிக்கும் திறன் வாய்க்கப் பெற்ற திறவோர் காணும் தத்துவக் காட்சியில்தான் இந்த உண்மை நமக்கும் காணக் கிடைக்கிறது.
மின்னொடு வானம்
தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கு
மல்லற் பேர் ஆற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல்
ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்.
எனவே மக்களே! இதனால் ஒரு தெளிவுக்கு வந்திருக்கிறோம் யாம். என்னவென்று கேட்கிறீர்களா? அவரவர் வினைப்பயன் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் புணைபோல் இயங்கும் உயிர்கள்தாம் அனைவரும் என்பதால் ஒரு மனப்பான்மை எமக்கு ஏற்பட்டுவிட்டது. பெருமையில், மாட்சியில் மிகப்பெரியவர் என்போரை ஏதோ மனிதரால் முடியவே முடியாத அருமையான வியப்பு போல் யாம் கருதிப் பார்ப்பதில்லை. அதைவிடவும் முக்கியமாக மாட்சியில் சிறியோரை, பெருமையில் குறைவு பட்டோரை, ஊரறிந்த புகழ் கிட்டாமல் அடக்கமாக இருக்கும் எளியவர்களை இகழ்தல் என்பது யாம் ஒரு காலும் நினைப்பதில்லை.
ஆகலின்
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல்
அதனினும் இலமே.
புறநானூறு, 192ல் கணியன் பூங்குன்றனார் கூறியதை விட ஒரு sane attitude towards life என்பது என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்!
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
No comments:
Post a Comment