Thursday, May 2, 2019

வெட்டிப் பொழுது - சிறுகதை

பஸ்ஸுக்கு நின்றால் அது லேசில் வந்து விடுகிறதா? அதுவும் கையில் லைப்ரரியில் தவணை தேதி கடந்து புதுப்பித்து அதுவும் கடந்து, அதன் சகிப்பு நாள்களும் முடிந்து, ஒழுங்கு மரியாதையா கொண்டு வந்து கொடுக்கறியா இல்லையா என்ற கடுப்போலையும் வந்து, சரி தீராது என்று அள்ளிக் கொண்டு போய் நின்றால்...அந்த நேரம்தான் கொஞ்சம் கூட்டம் குறைவு. உட்கார இடம். ஓரு நான்கு தடவையாவது பார்த்திருப்பேன், ஊரன் மகிழ்நனின் ஒரு பெரும் தேர் வரும் ஓசையாவது கேட்கிறதா என்று சங்கத் தலைவிக்குப் போட்டியாக! ம்..ம்...சங்க காலத்து தேரே வந்து விடும் போல... 

நீங்களும் பஸ்ஸுக்குத்தான் நிக்கிறீங்களா..... 

பார்த்தால் பாவம் நல்ல மாமி. மிகக் களையான மங்களகரமான முகம். தாய்மையைப் போற்றுவோம் என்று பாரதி சொன்னதற்கேற்ப கொஞ்சம் வாய்த் துடுக்கை அடக்கிக் கொண்டேன். 
 
‘ஆமாம்மா...எங்க வருது....எவ்வளவு நேரம்..’ 

எதிலயாவது காலேஜுல ப்ரொபஸ்ரா இருக்கீங்களா.... 

இல்லம்மா.... குமாஸ்தா உத்தியோகம்.... 

ஓ இல்ல இவ்வளவு புஸ்தகம்லாம் லைப்ரரி புஸ்தகமா கொண்டு போறீங்களே.... 

ஆமாம்மா படிப்புல ஆர்வம். கொஞ்சம் எழுத்து. ஆய்வு, கவிதை என்று சொந்தப் பொழுதுகள் ஓடுகின்றன. 

ஓ நீங்க ரைட்டரா..... 

வேண்டாம் வாய்த்துடுக்கு வேண்டாம்.....அது தெரியாதும்மா ஆனால் எனக்குப் பிடித்த விஷயங்களை பத்திரிக்கைகளிலும், நூல்களாகவும் எழுதுவதில் ஒரு திருப்தி. 

பாருங்க...ஒரே தெருவுலதான் இருக்கோம்..ஆனால் இவ்வளவு டேலண்ட் இருக்கற உங்கள மாதிரி ஆட்களையெல்லாம் தெரிஞ்சுக்காம லைஃப் ஓடிண்டுருக்கு.... 

பஸ்ஸும் வர வழியா காணோம்....நீங்க என்னம்மா பண்றீங்க....கணவர் என்ன பண்றார்... 

நான்லாம் அடுப்படியே கதின்னு வாழ்க்கை ஓட்ற கூட்டம்தான் சார். எங்க கணவர் பெரிய ஐ டி கம்பெனியில் ரொம்ப உசந்த் உத்யோகம்....சதா வேலை...நான் கூடத் திட்டுவேன்..ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் கம்ப்யூட்டரே கதின்னு இருக்கீங்க...கொஞ்சம் ஜெனரல் புத்தகங்களையும் படிங்கோ..அக்கம் பக்கத்துல பேசுங்கோ...இப்படி மின் உலகமே கதின்னு இருக்காதீங்க என்று திட்டுவேன்... ம்..ம் எவ்வளவு திட்டினாலும்.... பத்து நி கழிச்சுதான் என்ன சொன்னே என்று கேட்பார்...சரி நானும் விட்டுட்றது. பாவம் நமக்கு ஏன். அவர்களின் அவசரம் எங்களுக்குப் புரியாது. நீங்க ஒரு நாள் அவரைக் கண்டிப்பா சந்திக்கணும். எல்லாத்துலயும் இண்ட்ரஸ்ட் உண்டு. மனிதர்களை மதிப்பார். ஆனால் என்னமோ கம்பெனி, கம்ப்யூட்டர்...அதுவும் கையிலேயே இப்ப கணிணியைக் கொண்டு வந்து விட்டார்களா....எப்பப் பார்த்தாலும் ஏதோ ரேகை ஜோஸியம் பார்க்கறவன் மாதிரி.... 

குபீல்ல்ல் என்று சிரித்து விட்டேன்....ச...என்ன வொண்டர்ஃபுல் சென்ஸ் ஆஃப் ஹ்யுமர்... 

ஏன் சிரீக்கிறீங்க? 

இல்ல...உங்க கணவரை ஒரு சோடா பாட்டில் கண்ணாடி போட்ட ரேகை ஜோஸியர் மாதிரி உட்கார்ந்து...கற்பனை பண்ணிப் பார்த்தேன்.... 

ச ...ச நன்றாக இருபபர்...பாவம் அவர்களின் வேலை உலகம். 

யா...சாரி....நீங்க சொன்ன நகைச்சுவையான விதம்.... 

இல்க்ல இல்ல பரவாயில்ல ஆனால் நீங்க ரெண்டு பேரும் ஒரு நாள் சந்திக்கணும். அவருக்கு அது நல்லது. ஒரு நாள் அவர் ஃப்ரீயா இருக்கும் போது வாங்க...நான் சொல்லி வைக்கிறேன்...அதுவுமில்லாம ஒரே தெருவுல இருந்துண்டு ஒரு ரைட்டரை அவர் தெரிஞ்சுக்கலன்னா...... 

ஒன்றும் அவருக்கு நஷ்டம் இல்லை விடுங்க. ஆனால் நீங்க சொன்னதற்காக நிச்சயம் சொல்லுங்கோ..எப்ப அவருக்கு சௌகரியமோ..பார்த்துஇ சந்திக்கலாம்.. தெருமுனையில் ரயில், புஷ்பக விமானம், ட்ராம் எல்லாம் கலந்த கலவையாக வண்டி வரும் தோற்றம். அவசரம் அவசரமாக கிளம்பி விட்டோம். 

பின்னர் கோவில் வாசலில் ஒரு நாள், தம்பதிகளைக் காணும் வாய்ப்பு. இவர்தான் நான் சொன்னேனே... ஷ்யூர் ஷ்யூர் ஷீ வாஸ் டெல்லிங் மீ அ லாட் அபௌட் யூ... ஒன் டே வீ ஷுட் மீட். இட் வில் பி மை ப்ளஷர்...என்று அவசர அடியில் ஐ டீ பெரியவர் அழைப்பு விடுத்துப் பிரிந்தது.... 

ஒரு ஞாயிறு மாலை. எதற்கோ வெளியில் போய்க் கொண்டிருந்தவனை ஒரு குரல் சார்....இப்ப ஃப்க்ரீயாத்தான் இருக்கார்...இப்பப் போனீங்கன்னா, உங்களுக்கு நேரம் இருந்தா, சாரி....நன்னா பேசிண்டு இருக்கலாம்.... 
 
ஓகே மாமி நிச்சயமாக. 

ஏதோ கர்டிஸிக்குத்தான் சொன்னேன். மாமி அவசர அவ்சரமாக தாம் சுலோகா கிலாஸ் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு விரைந்து விட்டார். ஆனால் மாமியின் சுலோகா வகுப்பின் மீதான அக்கறை பரிட்சைக்கு விரையும் மாணவியின் கவலையைப் போன்றதாக இருந்தது. 

சரி போய்த்தான் வருவோமே. பாவம் இவ்வளவு பெரியவர்கள் ஏதோ அக்கறையில் சொன்னால், அதற்கு மதிப்பு அளித்தால் என்ன.... 

வீடு பெரிய பாலஸ் கெட்டப்பு. உள்ளே போனால் ஹாலிலேயே ஐ டி உட்கார்ந்திருந்தார். மாமி சொன்னபடி கையில் ரேகைக் கண்ணாடி...ஓ சாரி கணிணி....மனிதர் தலையை அதற்குள்ளேயே விட்டுவிட்டார். ...சார் சார்.. 

ஒரு கால்.....யா யா ஷ்யூர்......புட் அப் தட் வொர்க்கிங்ஸ்.. நோ நோ...ஜஸ்ட் மெர்ஜ் த பூல்...கால் ஃபார் த டீம்.. நோ மேன்....இஃப் யூ டூ அ ராண்டம் செக்..... 

சரி முடியட்டும் என்று அமைதியாய் உட்கார்ந்தேன். கால் முடிந்தப்பறம் கணிணி கையும் கண்ணும்...... 

ஆனால் விட்டு விட்டு கைங்கைங்கைங் கக்க்கங்யிங் என்று சில சில்மிஷ ஓசைகள் போல் கணிணியில் கேட்டுக் கொண்டே இருந்தன. எனக்கு அந்த ஓசைகள் என்னமோ பொருந்தாதது மாதிரி ஒரு ஃபீலிங். ஒரு க்யூரியாஸிடி...அப்படி ஒரு பக்கமாய் வ்யூ தெரிகிறதா என்று பார்த்தேன்....ஐ வாஸ் ஸ்டன்டு. 

ஐ டி நான் குறுகுறுப்பாக சந்தேகித்ததற்கேற்ப வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது. பெரிய ராட்சசன் ஏதோ பாறையைத் தூக்கி எதன் மீதோ போடுகிறான். அவன் போட்ட பாறை விழுவதற்குள் இவர் எதையோ நகர்த்தி விட்டால் ஒரு சத்தம் இல்லை பாறை அதன் மீது விழுந்து விட்டால் அந்த அணில் பிள்ளை சத்தம். எனக்கு ஒரு ஆர்வம் இந்த மனிதர் எவ்வளவு நேரம்தான் நாம் வந்திருப்பதைக் கவனிக்காமல் அதை நோண்டிக்கொண்டு இருப்பார் என்று கவனிக்க. ஒரு முக்கா மணி நேரம் ஆகிவிடும் போல் இருந்தது. நல்ல வேளையாக வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒருவர் வந்து கதவைத் திறந்ததும்தான் அவர் அந்த உலகத்தை விட்டு வந்தார். ‘நீங்க?...’ என்று கொஞ்சம் புரியாமல் விழித்தார். நான் இன்னார் என்று ஞாபகம் படுத்திவிட்டு கடந்த அரைமணிக்கும் மேலாகக் காத்திருப்பதாகச் சொன்னேன். ‘அடடா! நீங்கள் கூப்பிட்டிருக்கலாமே....’ இல்ல சார் கூப்பிட்டுப் பார்த்தேன். நீங்க கணினியில் மும்முரமாக வேலையாக இருந்தீர்கள். சரி அதுதான் பொறுமையாக... 

ஆமாம் சார்! என்ன பண்றது.....கம்பெனி வேலை... ஏகப்பட்ட டிஸிஷன் மேகிங்......ப்ளானிங்.....எல்லாருக்கும் சமயத்துல வீட்டிலிருந்தே மேனேஜ் பண்ணுவேன். என்ன பண்றது ஒரெ டென்ஷன்...பாருங்க வேலை மும்முரத்துல நீங்க வந்ததைக் கூடக் கவனிக்காமல் நான் கம்ப்யுட்டரில் இருக்கிறேன் என்றால்...ஹி ஹி சாரி....என் மனைவிக்குத் தெரிந்தால் மிகவும் கோபித்துக் கொள்வாள்......சொல்லி விடாதீங்கோ...உங்களைப் பத்தி அன்னிக்கு... 

பரவாயில்ல சார்... நோ ப்ராப்ளம்.... 

என்ன சாப்பிட்றீங்க.. ஏதாவது கூல்ட்ரிங்ஸ்..... மனைவி வரவரைக்கும் காப்பி டீ எனக்கே கிடைக்காது.... 

ஒன்றும் வேண்டாம் சார். இங்கதான் வீடு. ஜஸ்ட் வாண்டட் டு மீட் யூ அட் ஹர் இன்ச்டன்ஸ்.... 

ஓ ரியலி குட் குட்.....நீங்க ஏதோ பத்திரிக்கையில் இருக்கறதா... 

இல்ல சார் பத்திரிக்கை இல்ல வங்கியில் குமாஸ்தா... சும்மா திருப்திக்கு பத்திரிக்கையில் கட்டுரைகள், நூல்கள் எழுதுவது இவ்வளவுதான். 

ஓ அப்படியா? ஏதாவது...எனி ஹெல்ப் யூ வாண்ட்? தாராளமா சொல்லுங்கோ.....ஆக்டுவலி...கம்பெனியில் சில சமயம் வெளியாட்களைக் கூப்பிட்டுப் பேச வைப்போம். நீங்க ஆர்வம்னா ஐ கேன் ரெகம்ண்ட் யூ... தே வில் பே யூ மச்.... 

இல்ல சார் நோ ப்ராப்ளம்...நான் அவ்வளவா பேச்சுக்குப் போறதில்ல...ஒன்றும்ம் தேவை கிடையாது... ஐம் க்வெயிட் ஹாப்பி.... 

ஓ கிரேட்...ஏதாவது உங்க புத்தகம் வெளியிடணும்னா கூட ஐ நோ சம் கம்பெனிஸ்...அவா இந்த மாதிரி அல்லொகேட் பண்ணி வச்சிருக்கா....சோஷல் ஸ்பெண்டிங் என்கிற வகையில்...ஐ கேன் புட் யுவர் ப்ரொபோஸல்.... 

இல்ல சார்... ஒன்றும் கவலைப் படாதீர்கள். ஏதாவது என்றால் நிச்சயம் சொல்கிறேன். இப்பொழுது நான் பார்க்க வந்தது நிஜமாவே சும்மாதான். 

ஓ..ஓ இருவரும் சிரித்துவிட்டோம். கொஞ்சம் அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. தாம் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர், இந்த மனிதனுக்கு தம் அருமையே தெரியவில்லையே....என்று மனத்திற்குள் நினைத்திருக்கலாம். 

பரவாயில்லை. அவர் உலகத்தில் அவர் மகிழட்டுமே. அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என்று நான் கிளம்பிவிட்டேன். தம்முடைய விசிட்டிங் கார்டு கொடுத்தார். அந்தக் கார்டின் தன்மையே அவருடைய ரேங்க்கைக் காட்டிக் கொண்டிருந்தது. தூரத்தில் கைக்கணினியில் அழைப்பு கேட்டது. நானும் கிளம்பி விட்டேன். 

எதை வெட்டிப் பொழுது என்பது? மாமி என்னடா என்றால் சுலோகா கிலாஸ் என்று அக்கறையாக நேரத்தைச் செலவிட்டு கிட்டத்தட்ட 150 சுலோகங்கள் மனப்பாடம் என்கிறார். வீட்டு வேலை போக மிச்ச நேரத்தைப் பார்த்து பார்த்து Quality Time ஆக ஆக்கிக்கொண்டிருக்கிறார், தன்னளவில். ஐ டி கணவன் கம்பெனி அக்கௌண்ட்ஸ், டிஸிஷன் மேகிங் என்று நண்பர்களிடம் பேசிய நேரம் போக வீடியோ கேம் பூதத்தோடு டூயட். ஆனால் அதையும் தம் கம்பெனி பிஸி டைம் என்பதாகத்தான் சொல்லுகிறார். நிச்சயம் ஒரு நாளில் பல மணி நேரங்கள் பூதத்தோடு அல்லது வேறு கேம்ஸோடு சல்லாபம்....காலத்தைச் சாப்பிடும். ஆனால் மாமியோ தாம் ஒன்றும் அறியா அடுப்பங்கரை; மாமாவோ ஆல்வேஸ் பிசி ஐடீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஐ டீ காரருக்கோ என்னைப் பார்த்தால் வெட்டிப் பொழுது போல் படுகிறது. ஆமாம் திறமையைக் காசாக்காமல் போனால், ஆஃபர் நேருக்கு நேர் சொல்லியும் வேண்டாம் என்று போனால் அவருடைய பிரம்ம சுவடி அவருக்கு அதை வெட்டிப் பொழுது என்றுதான் காட்டுகிறது. 

ஆனால் எது எப்படியோ...அந்த மாமி வெட்டிப் பொழுது போக்குகிறார் என்று எனக்கு நினக்கத் தோன்றவில்லை. 

பார்த்தீங்களா....இருந்தாரா... 

ஹாங் நன்ன பேசிண்டு இருந்தோம். ஆனால் அவர் மிகவும் பிஸி மேன். அப்புறம் சாவகாசமாகப் பேசலாம் என்று சொல்லியிருக்கிறோம். 

ஐயோ.,..அவர்தானே! அந்தக் கைக் கணினியில் உட்கார்ந்தார்னா பொழுதன்னிக்கும் கம்பெனி டிஸ்கஷன், கணக்கு, ஓயாம பேச்சு....ஏதேதோ கேல்குலேஷன்...எனக்கு என்ன புரியறது அதெல்லாம்....உங்க கிட்ட நன்றாகப் பேசினாரோல்லியோ.... 

ஆஹா...அதெல்லாம் வொண்டர்ஃபுல்..ஆனால் உங்க காப்பியத்தான் குடிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. 

என்னது? நான் தான் சுடச்சுட காப்பிப் போட்டு ஃப்லாஸ்குல வெச்சிட்டு அவர்கிட்ட சொல்லிட்டு வந்தேனே..அதான் அவர் கம்பெனியில் உட்கார்ந்தார்னா அப்புறம் எதுவுமெ நினைவுக்கு இருக்காது....நீங்க இன்னொரு நாள் வாங்கோ... 

நிச்சயம் உங்க காப்பிக்காகவே வருகிறேன். 

ஐயோ..நான்லாம் வெட்டிப் பொழுது போக்கற பொம்மனாட்டி..என்னைப் போய் சொல்கிறீர்களே.... 

வெட்டிப் பொழுது என்ற வார்த்தையில் தலையில் நின்று கொண்டு அந்தப் பூதம் கையில் பாறாங்கல்லை ஏந்திக் கொண்டு ஐ டீ எப்பொழுது அசருவார் என்று முறைத்துக்கொண்டிருந்தது. 

***

1 comment: