Thursday, May 2, 2019

ஏண்டா நீ ஏதோ சாமியாராப் போப்பறேன்னாளே...!

ஏண்டா நீ ஏதோ சாமியாராப் போப்பறேன்னாளே...உனக்கேண்டா ஆத்தரம் இப்பவே.... ம்.புல்ளையா லட்சணமா, அப்பா அம்மாவை கவனிச்சுண்டு...அவா ஆசீர்வாதம் இல்லன்னா ஒன்னும் உருப்படாது வச்சுக்கோ.....ஆமாம் 

காலம் காத்தால தூக்கத்தின் இறுதிச் சொட்டில் இருந்த என் விழிகளை பலாத்காரமாகத் திறந்த ஓசை இது ராஜி அத்தையோட குரல். யாரோ சொல்லியிருக்கிறார்கள், மடத்துக்கு ஓடீட்டானான்...பாவம் அவாத்துல ஒரே வருத்தம் அழுகை...பிள்ளை ஒண்ணு இப்படியா செய்யும்...அது அது உலகத்துல எப்படி இருக்கு...இந்த மாதிரியா.. அதல்லாம் சின்ன வயசுலயே தறுதலைத்தனம்...என்னை எழுப்பிவிட்டுவிட்டு அடுத்ததாக இருக்கும் வீட்டுக் கூடத்தில் தான் ஏன் வந்தோம்...யார் சொல்லி வந்தோம்... இப்படி ஒரு ஆபத்து அவசரத்துக்கு மனுசாள் இல்லைன்னா பின்ன ஏதுக்கு...எல்லாம் நல்ல திருப்பள்ளி எழுச்சி...பல காலத்துக்கு முந்தி நடந்த ரகளைகள்... அதாவது அப்பொழுது நான் எந்த சொந்தக் காரர் வீட்டுக்கும் போய் வர முடியாத சூழ்நிலை, நானே உருவாக்கிக் கொண்டது. மீறிப் போனால் பல நாட்கள், பல மணி நேரங்கள், பல சந்தர்ப்பங்களில் உபதேச மழையாகப் பொழியும்; சாடல் சர்வ சாதாரணம்; வயசுல பெரிசுகள் இருந்தால் வாய்க்கு வாய் ‘தறுதலை, தறுதலை..’ கரிச்சுத் தாளிச்சுக் கொட்டி.. எல்லாம் நடக்கும். தாங்கள் ஏன் சிறு வயதிலேயே ஆன்மிகம், மதம் ரீதியான புததகங்கள், வழிபாடுகள் இவற்றில் அக்கறை கொள்ளவில்லை என்பதற்குத் தகுந்த காரணமாகப் பல பெரிசுகளுக்குப் பயன்பட்ட புண்ணியம் எனக்கு என்றும் உண்டு. 

’இப்படித்தான் என் சிநேகிதனோட ஷட்டகருக்கு அம்மாஞ்சி முறையாகணும், அவரோட பையன்...’என்றி ஒருவர் இழுத்தால் அப்பறம் அது இந்தியா ரப்பர்தான். எங்கயோ திடீரென்று இமாலயாவுக்கு ஓடிவிட்டதாகவும், அல்லது ஊர் பேர் தெரியாத காடுகளில் எங்கோ ஒரு பாழடைந்த கோவிலில் இருந்ததைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்ததாகவும், பல த்ரில் கதைகள் மூச்சைப் பிடித்துக்கொண்டு வெளியில் வரும். மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் எல்லாரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டே உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார். அதாவது அறிவுரை சொல்லுங்கள் அறிவுரை சொல்லுங்கள் என்று கேட்டுக் கேட்டே ஆளைக் கொல்லும் ரகம். ஆனால் என் விஷயத்திலோ ஆளுக்கு ஆள் உபதேசம் சொல்கிறேன் பேர்வழி என்று என் மேல் தங்கள் ஆத்திரத்தையெல்லாம் தீர்த்துக் கொண்டார்கள். அதாவது என் தந்தையிடம் அவ்வளவு அக்கறையாம். 

எல்லாம் விஷயம் என்னவென்றால் விவேகாநந்தரின் நூல்களைப் படித்துவிட்டு, டிகிரி படிக்கும் காலத்தில் நான் மடத்தில் சேரப் போகிறேன் என்று கிளம்பிவிட்டேன். நானாவது கொஞ்சம் யோசிச்சிருக்கணும். அதெல்லாம் தோன்றிய போது கிளம்பிவிடுவதுதான் துறவிக்கழகு என்று கிளம்பினால் எல்லாருக்கும் பலிக்குமா? அப்படிக் கிளம்பிப் போனால் ஒருவன் என்ன ஆனாலும் திரும்பி வந்துவிடக் கூடாது. எங்காவது கண் மறைவாகக் காணாமல் போய் விடவேண்டும். இல்லையென்றால் வந்த ஆளைத் திருத்துகிறேன் சாக்கு என்று அவரவர் தங்கள் வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்கும் விடம்பனம் இருக்கிறதே அது மஹா கஷ்டம். ஆனால் அத்தனையையும் தாங்கிப் பொறுமை காத்த காரணத்தால் துறவு என்று ஒன்று தனியே வேண்டாம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. அந்த விதத்தில் நல்ல பயிற்சி தந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மனித மனத்தின் எவ்வளவு கோணல்கள் உண்டோ அவ்வளவும் சிறிய காலத்தில் எதிர்படும் பயிற்சி. 

ஆனால் அப்பொழுது நடந்த சம்பவம் ஒரு சின்ன நிகழ்ச்சி இன்றும் மனத்தில் நிலைபெற்றிருக்கிறது. எத்தனையோ பேர் வந்து உபத்திரவப் படுத்தினாலும், ஒரு கிழவி படுத்திய பாடு ஆனாலும் மறக்க முடியாதது. 

பால் கறக்கும் மாடு வந்து, கறந்து எங்கள் ஓரிரு வீடுகளுக்கு ஊற்றிச் செல்லும் வழக்கம். பால்காரக் கிழவி எங்களையெல்லாம் குழந்தையிலிருந்தே கண்டு, கொஞ்சி, அதட்டி, மிரட்டி, அப்பாவிடம் கோள்மூட்டி, நாங்களும் அவள் கன்றுக்குட்டியைக் கட்டி வைத்தால் அவிழ்த்துவிட்டு அவள் வாயில் விழுந்து புறப்பட்ட அனுபவங்கள், அப்பொழுது எல்லாம் அம்மாவின் ஆத்திரத்திற்கு அவள் ஆளாகி, அவளுடைய திட்டுதல்களுக்கு நாங்கள் ஆளாகி, அப்பா வரையில் கூட வழக்கு சென்ற சமயங்கள் உண்டு. ஆனால் அந்தப் பால்காரக் கிழவிதான் என்னை அப்பொழுது ஒரு வழி பண்ணிவிட்டாள். 

தந்தையும் தாயும் படும் கஷ்டத்தைக் கண்டு அவள்தான் அவ்வளவு ஆதரவாம்! பயப்பாடாதீங்க....வருத்தப்படாதீங்கன்னு எவ்வளவோ தெம்பு மூட்டி... தந்தையைப் பார்த்துத்தான் அவளுடைய அங்கலாய்ப்பு...’இந்த மனுசன் அளுது நான் பார்த்ததில்ல்யே சாமீ....’

சின்ன வயதில் செய்த விஷமம் வேறு. ஆனால் பள்ளி கல்லூரி என்று வந்ததும், அந்தத் தலைமுறைகளின் பார்வையில் சின்ன பையன் என்றாலும் அந்தஸ்து உயர்ந்துவிடுகிறது. அவளிடம் அவ்வளவு திட்டு வாங்கியதுண்டு சிறு வயதில் ஆனால் வயதிற்கு வந்த பிள்ளை, படிக்குது என்றவுடன் அந்தப் பக்கம் கிராஸ் ஆனால் போதும் உசந்த குரல் அடங்கிவிடுகிறது. ஏதோ அமைதி. அம்மாவிடம், ‘சின்னவரு என்ன படிக்கிறாரு...’ என்று ரகசியக் குரலில் விசாரிப்பு. எனக்கு அது புரிந்ததே இல்லை..எப்படித்தான் அவ்வளவு அந்நியத்தனம் அவ்வளவு இயல்பாக வந்து விழுந்துவிடும் என்று! 

அவள்தான் பார்க்க வேண்டுமாம். நான் தான் அப்பொழுது யார் வேண்டுமானாலும் வந்து பார்த்து உபதேசம் செய்துவிட்டுப் போக வாய்ப்பான ஆளாயிர்றே! இவள் என்ன சொல்லப் போகிறாள், நெடுக ஒரு அறிவுரை, ஆனால் மர்றவ்ர்கள் மாதிரி வக்கிரங்கள் இருக்காது, பாவம் படிப்பறிவில்லாத எளிய கிழவி. 

வந்தாள். வந்தாள் என்பதை விட ஏதோ நாணிக் கோணிக்கொண்டு... சரி உபதேசம் ஆரம்பிக்கட்டும்..எல்லாவத்தையும்தான் பொறுத்துக்கறோம் இதையும் தாங்கிப்போம் என்று என்னம்மா...என்றேன். 

தன் புடவை சொருகிய கொசுவச் சுருளிலிருந்து எதையோ திறந்து ஒரு பொட்டலம் கொடுத்தாள். தானே பண்ணி எடுத்து வந்த ஏதோ பணியாரம். கொடுத்துவிட்டு நான் சாப்பிடுவதைப் பார்த்து, ‘நீங்க படிச்சவுக. உங்களுக்குத் தெரியாதது இல்ல. நான் என்ன சொல்ல முடியும்? எங்க இருந்தாலும் நன்னா இருங்க.’ என்று சொன்னவள் புடவை நுனியால் கண்களைத் துடைத்தவாறே திரும்பி நடந்தாள். பாதி சாப்பிட்ட நான் வாய் விக்கித்துப் போய் கண்ணீர் பணியாரத்தில் உப்பு கரிக்க விழித்துக்கொண்டிருந்தேன். 

அங்கு அவள் என் தந்தை தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதுகளில் விழுந்தது. ‘பாவம் குழந்தையைத் திட்டாதீங்க. அது என்ன தப்பு செஞ்சுது? பெத்தவங்களுக்குப் புண்ணியத்தைத்தான் தேடிக் கொடுத்திருக்கு.’ - இது காதில் விழுந்ததும் என்னால் அடக்க முடியவில்லை. அறையில் சென்று தாளிட்டுக் கொண்டு அழத்தொடங்கிவிட்டேன். எப்படியெல்லாம் அவள் திட்டியிருக்கிறாள்...சின்ன வயதில்...அப்பொழுது பார்த்தால் சிடுசிடுவென்று....ஆனால் அதே அவள்..அந்தக் கிழவிதான் எதை எதையோ எனக்கும், மற்றவர்களுக்கும் சொல்லிப் பாதியும் சொல்லாமல் மீதியுமாகச் சொல்லிவிட்டாள். 

அவளோடு என் தந்தை ஏதோ பேசும் குரல் கேட்கிறது. சரி வழக்கப்படி...என்னைப் பற்றி வசவுகள்... இப்படித்தான் இருக்கும் என்று காதை தீட்டியவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னைப் பற்றி நேரடியாக ஒன்றும் இல்லை. தந்தை.....

... அதாவது அவரோட நூல்கள் எல்லாம் படித்துவிட்டு அவர் ஆரம்பித்த மடத்திற்கே போய்ச் சேர வேண்டும் என்று....நான் தப்பு சொல்லலை... இல்லமா நான் திட்டலை....ஆனால்...யாரு? 

அவரா...? அவர் விவேகாநந்தர் என்று பெரிய மகான். தெய்வக் குழந்தை. பெரிய மேதை. கல்கட்டாவுல கல்லூரியில் படிக்கும் போது அவருக்குக் கடவுளைக் காண வேண்டும் என்ற நாட்டம் வந்து, அது தீவிரமாக ஆகி, அங்கே காளி கோயில்ல ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்னு ரொம்பப் பெரிய மகான். இங்க வாம்மா... இல்ல சும்மா வா... அட வாம்மா...அதெல்லாம் ஒண்ணும் இல்ல...தாராளமா வரலாம்...ஏன் தயங்கற...எல்லாரும் கடவுளோட குழந்தைகள்தாம்மா..வா இங்க வந்து பாரு......இவருதான் ராமகிருஷ்ணர்னு பெரிய தெய்வ புருஷர்..அதாவது காளி அவருக்கு நேர ப்ரத்யக்ஷம். ஆமாம். அவர் புத்தகம் எல்லாம் எழுதினது கிடையாது . ஆனால் அவர் சொன்ன சின்ன சின்னக் கதைகள் இருக்கே அப்பாடா அபாரமான ஞானம்.. எவ்வளவோ சாத்திரங்களில் தெரியாத விளக்கம் எல்லாம் அவரோட கதைகளில் தெளிவாப் புரிச்ஞ்சுடும். இவருகிட்டத்தான் விவேகாநந்தர் போய்ப் பார்க்கறாரு. பார்த்து அவரைப் பார்த்துக் கேட்கிறாரு, ‘நீங்க சொல்றதெல்லாம் சரி. முதல்ல நீங்கக் கடவுளைப் பார்த்திருகீஜ்ங்களா?’ 

அவரு சொல்ற பதில் - ‘கொழந்தே! கடவுளை நான் பார்த்திருக்கேன். உனக்கும் காட்ட முடியும்’ 

இவரா...இவர் அங்க வங்காளத்துலயேதான் ஆமாம் இவரும் சரி விவேகாநந்தரும் சரி அங்க வங்காளத்துலதான் பிறந்தாங்க. இவருக்கு, ராமகிருஷ்ணருக்கு பள்ளிக்கூடம் போனதே இல்ல...படிப்பறிவு இல்லாதவரு. ஆனால் விவேகாநந்தர் படிக்காத சாத்திரம் கிடையாது. அவரு படிப்போட உச்சம்னா அவரோட குரு படிப்புன்னால என்னன்னு தெரியாது. அப்படிச் சேர்ந்துது இரண்டும். அதான்...அதான் தெய்வ சங்கபம்கிறது. 

எது? வேற தெய்வமா...பெருமாள் படம் எல்லாமா.. இல்லை நான் ஆரம்ப நாள்லேந்தே இந்தப் படம் மட்டும்தான் இங்க பூஜை அறையில இருக்கும். 

ராஜி அத்தையின் குரல் தெளிவாகக் கேட்கிறது. அவள் எங்கு வந்தாள் இப்பொழுது.? 

‘ஏன் நீ பெருமாள் படம்லாம் வைக்கிறதை விட்டுட்டு மனுஷாள் போட்டோவை,,அது எவ்வளவு பெரியவரா இருக்கட்டும், வைச்சுருக்கே பூஜை ரூம்ல?’ 

‘தோ பாரு அக்கா...எனக்குக் கடவுளைத் தெரியாது. நான் கடவுளைப் பார்த்ததில்லை. அவர் கடவுளைப் பார்த்திருக்கார். அதுனால எனக்கு அவர்தான் கடவுள்’ 

நிசப்தம்.....என்ன.... எல்லாரும்......! 

நீண்ட மௌனத்திற்குப் பிறகு... பால்கார மூதாட்டி விடை பெற்றுச் செல்லும் பேச்சு சபதங்கள் அங்கே கூடத்தில். 

இங்கோ அறைக்குள் பூட்டியபடி நான் நாணித் தலை கவிழ்ந்தவனாய் உட்கார்ந்திருக்கிறேன். அடுத்தடுத்து என் முகத்தில் அறைந்ததுபோல் அந்தப் பால்கார மூதாட்டியும், அடுத்து என் தந்தையும்... 

வாழ்க்கையில் அவளுடைய பக்குவத்திற்கு முன், அவளுடைய தூய அன்பிற்கு முன் நான் எம்மாத்திரம்? 

தன் மகன் தன்னை விட்டுப் பிரிந்து போகக் காரணமாய் இருந்த ஒருவரின் படத்தை விடாமல் தான் தன் பூஜை அறையில் வைத்துக்கொண்டு அவரேதான் தனக்குக் கடவுள், அதில் சிறிதும் மாற்றம் இல்லை என்றிருக்கும் என் தந்தையின் அந்தச் சஞ்சலமற்ற அந்தத் திடமான பக்திக்கு முன்னால் நான் யார்? 

*** 



No comments:

Post a Comment