Thursday, May 2, 2019

நிர்வாண ஷட்கம்

னம் புத்தி அகங்காரம் சித்தம் நானில்லை
செவிநாக்கு மூக்குக் கண் எதுவும் நானில்லை 
வான்மண்ணும் இல்லை வளிதீயும் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான். 

பிராணன்என்றதும் இல்லை பஞ்ச வாயுக்கள் இல்லை 
ஏழுதாதுக்களும் இல்லை பஞ்ச கோசங்கள் இல்லை 
வாக்குகை காலும் இல்லை அன்றி குறிகுய்யம் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான். 

வெறுப்புவிருப்பெனக்கில்லை பற்றுமோகங்கள் இல்லை 
மதம் எனக்கில்லை மற்று மாச்சரியம் இல்லை 
தர்மார்த்த காம மோக்ஷங்கள் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான் 

புண்ணியபாபங்கள் இல்லைநான் சுகம்துக்கமில்லை 
மந்திரம்தீர்த்தம் இல்லைநான் வேதயக்ஞங்களுமில்லை 
உணவும்நானில்லை உண்ணப்படுவதும் உண்போனும் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான் 

இறப்பின் அச்சம் எனக்கில்லை ஜாதிபேதங்கள் இல்லை 
தந்தை எனக்கில்லை தாயில்லை பிறவி இல்லை 
சுற்றம் இல்லை நண்பரில்லை குரு இல்லை சீடன் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான் 

விகல்பங்கள் அற்றோன்நான் வடிவற்ற ரூபன் 
விபுவாய்க் கலந்தெங்கும் அங்கத்துள்ளாகி 
என்றென்றும் ஒன்றாமெனக்கு முத்திபந்தங்கள் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான். 

***
(தமிழாக்கம் - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்) 

*

No comments:

Post a Comment