Friday, March 11, 2016

ஸ்ரீபகவந் நாம மஹிமை - (ஒரு கனவு)

யாரோ முன்பின் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் போன் செய்து, ‘ஸ்வாமி இருக்காரா?’ என்றார்.

‘சாரி. ராங் நம்பர். அப்படியெல்லாம் யாரும் ஸ்வாமி இங்க இல்லையே’ என்றேன்.

விளக்கமாக ஒரு முறை நம்பரைச் சொன்னார். ’ஆமாம். நம்பர் சரி. ஆனால் ஸ்வாமி யாரும் இங்க கிடையாது.’

அப்புறம் என் பேரைச் சொல்லி இருக்காரா என்றார். ‘நான் தான் பேசுகிறேன்’ என்றேன்.

‘என்ன ஸ்வாமி! கேட்டா யாரும் இல்லைன்னுட்டீர்’

‘அ..ம்..இல்ல நான் ஸ்வாமி இல்லை. வெறும் ஆள்தான் அதான்... எனக்கும்.. புரியல்ல’

‘உம்ம புத்தகம் ஸஹஸ்ரநாமம் பார்த்தேன். படிச்சப்பறம் எனக்கும் சொல்லணும்னு ஆசை ஏற்பட்டுடுத்து. ஆரம்பிச்சுட்டேன். பிரமாதம்’

‘அப்படியா? உங்களை இங்க இருந்தே நமஸ்காரம் பண்ணிக்கிறேன். அப்படியே உங்க பங்குக்கு இன்னும் பலபேரைச் சொல்ல வைச்சுருங்கோ’

அப்பறம் சிலது புகழ்ச்சி சொன்னார். அது போகட்டும். ஆனால் என்னமோ அசதி. அப்படியே உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டேன். நல்ல கனவு. இன்னொரு விதத்தில கொஞ்சம் திகில் கனவு.

ஸ்ரீவைகுண்டம். ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் ரிஷிகள் எல்லாம் ஒரே கம்ப்ளெயிண்ட்.

‘என்னது இது! கிருத யுகத்துல எங்களைப் பெரும் ரிஷிகளாகப் படைத்துவிட்டு, பெரிய பெரிய ஞான சக்தி, கிரியா சக்தி, தபோ பலம் எல்லாம் தந்துட்டு, எங்களை எவ்வளவோ உயர்த்தறா மாதிரி உயர்த்திவிட்டு, கடைசியில கலியுகத்துல பிறந்தவாளுக்குத்தான் மிகப்பெரிய சலுகை என்று பண்ணி விட்டீரே! இது நியாயமா? அப்ப நாங்கள் எல்லாம் இப்படி நெடுங்காலம் தவம் சாதனம் என்று மூச்சடக்கி பேச்சடக்கி கடுமையாக முனைந்து இன்னும் முயன்று கொண்டிருக்கிறோம். அங்க என்னடான்னா கலியுகத்துல அவரவர்கள் ஒரு தூய்மை இல்லை, சுத்தி இல்லை, நல்லது கெட்டது இல்லை, புண்ணியம் என்பது கிஞ்சித்தும் இல்லை. பாபமோ மலைமலையாகப் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால்...’

ஸ்ரீநாரதர் குறுக்கே புகுந்து, ‘நீங்க பெரியவர்கள். அவர்களை ஆசீர்வாதம் பண்ணுங்கோ...’

‘என்ன ஆசீர்வாதம் பண்றது. நாங்க எங்க குறைகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நீர் என்ன நடுவுல...’

‘அப்படியில்ல. அவர்கள் ஏதோ அவர்களால் முடிந்தது பகவந் நாமத்தைச் சொல்லுகிறார்கள். நீங்கதான் பெரிய மனசு பண்ணி....’

‘என்ன பகவந் நாமத்தைச் சொல்றா? அதுக்குன்னு பகவானின் நாமத்தைச் சொன்னா அவர்களுடைய கர்ம வினைகள் எல்லாம் தூள் தூளா எரிஞ்சு போய், அவர்களுக்குப் பெரும் சித்த சுத்தி தானா ஏற்பட்டு, அவர்களுக்கு உயர்ந்த மோக்ஷமும் கிடைச்சுடுமா? என்னது இது... அப்ப நாங்க எல்லாம் எவ்வளவு காலமா கடுந்தவம் பண்ணிண்டு இருக்கோம்...’

அவர்கள் எல்லாம் சின்னவா....

‘சரி அதுதான் அப்படின்னா... யாரோ ஒரு பிள்ளையாண்டான்... அவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு? ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் பற்றி எழுதிவிட்டானாம். அதை யாரோ வாங்கிப் படிச்சாளாம். உடனே அவாளோட பாப சமூகம் எல்லாம் எரிஞ்சு சாம்பல் ஆகி, அவாளுக்கு எல்லாம் உயர்ந்த முக்தியா?’

‘யாரு...ஆசாரியர்கள் எல்லாம் ஸஹஸ்ரநாமத்துக்கு வியாக்கியானம் எழுதியிருக்கா... வேற யாரு நீங்க... ஏதோ பிள்ளையாண்டான்னு... யாருன்னு...’

நானோ சர்வ நாடிகளும் ஒடுங்கிப்போய் ‘எங்கயாவது கண்டு பிடிச்சுட்டா நம்ம கதி என்னாறதுன்னு’ அங்க நிறுத்தியிருந்த புஷ்பக விமானங்களுக்குப் பின்னாடி போய் ஒளிந்து கொண்டேன். ஆனால் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நமுட்டுச் சிரிப்போடு கலந்த பார்வை என்னைத் தேடி வந்து கண்டு பிடித்து விட்டது. ஐய்யயோ நம்மை எங்காவது காட்டிக் கொடுத்து விடுவாரோ என்று பயந்தது போல் நடக்கவில்லை. கண்டும் காணாதது போல் காட்டிக் கொள்ளாமல் இருந்தார் எம்பெருமான்.

நாரதருக்குத்தான் கவலை ஓவர் டைம் வேலை செய்து கொண்டிருந்தது. சரி யாரோ ஒருவன் என்று விட வேண்டியதுதானே! அது யார் தமக்குத் தெரியாமல் என்று நோண்ட வேண்டியது.... சரி ஏதோ ஒரு அசத்து... துணிஞ்சு எழுதி விட்டது. இப்ப என்ன அதுக்கு இப்போ... வீணையை மீட்டினோமா நாராயணா பாடினோமான்னு போகாம... என்று சாக்கிரதையாக பம்மியபடியே பின் நகர்ந்து வந்த பொழுது அங்கு ஏதோ தடுக்கிவிடவே தடால் என்று உருண்டு கீழே விழும் போது முழிப்பு தட்டியது. ச .. நல்ல தூக்கத்தில் சாய்ந்து சேரிலிருந்து கீழே விழப்போனேன் நல்ல வேளை சுதாரித்துக் கொண்டேன்.

இதுக்குத்தான் எதையாவது ஆசைப்பட்டு எழுதிவைக்கக் கூடாதுங்கறது. பாருங்கள் ஸ்ரீவைகுண்டம் வரைக்கும் போயிடிச்சு விஷயம். நல்ல வேளை அருளாளப் பெருமான். அதுனால தப்பிச்சோம். இல்லன்னா ‘தோ பாருங்க... அவன் தான் எழுதினது’ என்று கையைக் காட்டியிருந்தால்... அந்த ரிஷிகள் இருந்த கடுங்கோபத்திற்கு..... யப்பா நினைக்கவே பயமா இருக்கு.

எழுந்து உட்கார்ந்து ஸ்ரீபகவந் நாம ஜபம் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். அங்க போனால் இல்ல தெரியுது. நம்ம கலிகாலத்தின் சலுகை என்ன என்பதும், ஒரு தடவை பகவந் நாமம் சொன்னாலே என்ன விளைவு என்பதும் ! இனிமே ஒரு நிமிஷம் வேஸ்ட் ஆக்கக் கூடாது. விட்டா கலிகாலத்தின் பெரும் சிறப்பையே மாத்த வச்சுருவாங்க போல இருக்கெப்பா... என்ன பண்றது ரிஷிகளுக்கு அவங்க வருத்தம்..... எப்படியோ போகட்டும். அந்தப் புத்தகத்தை நாமதான் எழுதினதுன்னு... நல்ல வேளை..... நாம எங்க எழுதினோம்? நாமா எழுதினோம்... எல்லாம் அவனுடைய கிருபை. அவன் எழுத வைத்தது... ஆ ஆ அப்படிச் சொல்லிட வேண்டியதுதான் கேட்டா.’

***

Wednesday, March 2, 2016

’டெர்ரர்ர்’ (சிறுகதை)

டெர்ரர் கௌரிபதி என்றால் எல்லாருக்கும் ஒரு சிரிப்புதான். 

ரசக்கிரண்டியைத் தொங்கப் போட்டு அதின் நடுவில் தட்டினால் வரும் ஓசையைப் போன்று குரலில், சமயத்தில் கோபத்தில், 

‘எனக்கும் டெர்ரர் ஆக இருப்பது எப்படீன்னு தெரியும். ஆமான்னேன். இல்லை என்ன நினைச்சிண்ட்ருக்கா? கிள்ளுக் கீரையா?’ 

இப்படி அடிக்கடி இரைந்து அவர் கத்தும் போது அழுத பிள்ளையும் சிரிக்கும் என்பதால் அவருக்கு டெர்ரர் என்ற முன்னொட்டு வழக்கமாகிவிட்டது. 

டெர்ரர் வருது பார் என்று சொன்னால் புதிதான ஆட்கள் கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டுப் பின்னர் நிம்மதி அடைந்து சிரிப்பது அவருக்கு இயல்பாக அமையும் வரவேற்பாக அமைந்து விட்டு அவரை எங்கும் பிரபலப் படுத்திக்கொண்டிருந்தது. 

அவருடைய பிரபலம் அவருக்குச் சமயத்தில் கொஞ்சம் இடைஞ்சலாக ஆனதும் உண்டு. தன் டெர்ரர் அடைமொழிக்குத் தனக்கு உவந்தால் போல் ஏதாவது கதை சொல்லலாம் என்று ஆரம்பித்தால். எங்கோ பார்டரில், மிலிடரியில் ஏதோ ஒரு சமயம் தான் மிகக் குறுகிய காலமே இருக்க நேர்ந்த பொழுதில் இந்தப் பெயருக்கான ஆரம்பம் என்று அவர் கஷ்டப்பட்டு பில்டப் கொடுத்தால், யாராவது தெரிந்தவர்கள் அங்கு வந்து தொலைத்து, ‘அப்பொழுது மேடம் அங்க இருந்தாங்களா?’ என்று கேட்டுத் தொலைத்தால், எவ்வளவு எரிச்சல்! 

‘அவ கிடக்கா! நான் இல்லை என்றால் அவ பாடு திண்டாட்டம்தான்.’ 

கண்களுக்கு விவஸ்தை கிடையாது. அவள் அங்கு பக்கத்தில் எங்கேனும் தென்படவில்லையே என்று நோட்டம் விட்டுக் கொள்ளும். பாவம் இவரைத் தொந்தரவு செய்யாதவர்களில் ஒருவனாக என்னை நான் வைத்துக்கொண்டது எதேச்சையாகத்தான். ஏதோ பிரின்ஸிபிள் அது இது என்றெல்லாம் கிடையாது. நம்ம நிலைமையே இவரைவிட மோசம் என்றால் வேறொரு விதத்தில், நாம் ஏன் இவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டும். விளைவு, மங்குவய்யர் காபி பேலஸில், இவருக்கு எதிரில், அல்லது எனக்கு எதிரில் இவர் என்றுதான் அமரும்படி ஆகும். அலுத்துப் போனவனின் அமைதியும், ஆற்றாமை மிகுந்தவனின் புலம்பலும் ஒன்றுக்கொன்று அட்ஜஸ்ட் ஆகிக்கொள்ளும். 

ஏன் அகமுடையாளை இப்படித் திட்டுகிறீர்? பாவம் ஐயா! என்று நான் சொன்னது தப்பாகப் போய்விட்டது. 

தினம் வீட்டுப் புராணம். அவ இப்படி ஹிம்சை பண்றா; இப்படி செய்யறா. மனுசனாகவே மதிக்கறதில்ல. அவமரியாதை பண்றா. 

பயங்கர திமிர் சார்! தலை வெட்டி நிக்கறா! ஆமாம். 

என்ன சார் ஆம்பளைன்னா அவ்வள்வு கேவலமா இவளுக்கு? 

ஒரு புழு பூச்சியைக் கூட கொஞ்சம் பயமா பாப்போம் சார். ஏதாவது கடிச்சி வைக்கப் போறதேன்னு. ஆம்படையான்ன்னா என்ன அலட்சியம் சார் இவளுக்கு.? 

சரி கௌரி சார்! நீங்க ஓபனா சொல்லிட வேண்டியதுதானே! என்னை இன்சல்ட் பண்றது பிடிக்கலைம்மா என்று. 

நான் டெர்ரர் என்ற ஒட்டைப் பயன்படுத்துவதில்லை. பாவம் வீட்டில் டெர்ரராகி அல்லல் படும் மனுஷனை டெர்ரர் என்று கூப்பிடுவது மிகவும் கெட்ட சாடிஸம் என்று அருவருப்பு. கொஞ்சம் உளவியல், பாலியல் மனோதத்துவம், என்று ஏகப்பட்ட குப்பைகளை மனத்தில் ஏற்றியதன் விளைவு, 

‘ஏன் சார். உங்களுக்குள் உறவு நல்லபடியாகத்தானே இருக்கிறது. அதில் ஒன்றும் மனத்தாங்கல் இல்லையே.’ 

அதை ஏன் சார் கேட்கறீங்க? உங்களை என் சொந்த தம்பி மாதிரி நினைச்சு சொல்றேன். அவளுக்குன்னு வேணும்னா ஆர்டர் போடவேண்டியது. நான் சிப்பந்தி மாதிரி ஓடவேண்டியது. அவளுக்கு மூட் இல்லையா? அவ்வளவுதான் நான் பேச்சே எடுக்கக் கூடாது. என்னது சார் இது? எனக்குன்னு மனசு இல்லையா? நான் என்ன படுக்கை சிப்பந்தி அவ்வளவுதானா? 

அப்படி இல்லை கௌரி சார்! நீங்கதான் பொறுமையா, அவங்க மனம் இனிக்க நடந்துகொண்டு, மகிழ்ச்சிப் படுத்தி, இதமாகக் கொண்டு போகணும். ஆண்பிள்ளை என்று நாம் பெருமை அடித்துக்கொள்கிறோமே அன்றி மணவாழ்க்கையின் படுக்கைக் கடமையில் பெரும் பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது என்பதை மட்டும் நினைத்துப் பார்க்க மறந்துவிடுகிறோம். 

நீங்க என்ன சொல்றீங்க? நான் அவள் மனத்தை இனிமைப்படுத்தி நடந்துகொள்ளவில்லையா?.....இல்லை சார்...அதெல்லாம் சரிப்படாது...என்ன சார் ராட்சசியா இருக்கா? கனிவா போய்ப் பேசினாலே எரிஞ்சு விழறா. இல்லைனா பயங்கர நக்கல் அடிக்க வேண்டியது. அன்னிக்கி அப்படித்தான், அவ ஏதோ மறந்துட்டுப் போறாளேன்னு, பதைபதைக்க, ஓடிக் கூப்பிட்டுச் சொல்றேன்....எங்கயோ கதவை நகர்த்தி கதவிடுக்குல பார்க்கறா சார்! என்னன்னு கேட்டா எலி ஏதாவது மாட்டிண்ட்ருத்தோன்னு பார்த்தேன்ங்கறா......என் குரலை அவ்வளவு கிண்டல்...அப்பயும்... 

ஏதோ என் கற்பனை....ஓட்டத்தில் அழுந்தி....கதவிடுக்கில் கௌரி சார் மாட்டிக்கொண்டு, அவர் மனைவி அழுத்தி அழுத்தி அவரைக் கத்தவிட்டு வேடிக்கை பார்க்கும் காட்சி. முகேஷ், அவருடன் பால்ய சிநேகிதன், அப்பொழுது எங்கு அங்கு வந்தானோ.....காதில் வாங்கிக் கொண்டிருந்தான் போல. 

‘டெர்ரரு! இப்பிடீ பேசிக்கினே இருந்தேன்னு வச்சுக்க. அங்க பாட்டுக்கு எவங்கூடயாவது பழக்கம், காதல் அது இதுன்னு ஆகிப்போயி அப்பறம் மங்கு ஐயர் ஹோட்டலே கதின்னு ஆகிடும் பொழைப்பு. பாத்துக்க...’ 

என்று சொன்னவன் முடிப்பதற்குள் கௌரி சார் அவனை அடிக்கப் போய்விட்டார். ‘ராஸ்கல்! யாரை என்ன சொல்ரதுன்னு விவஸ்தை கிடையாது! நாயே! கொன்னுபுடுவேன் கொன்னு. இந்தப் பக்கம் வந்தே உன்னைக் கொன்னுட்டு ஜயில்லுக்குப் போனாலும் போவேன் ஆமா’ 

முகேஷுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை போலும். அவன் பாட்டுக்கு ’சரி சரி உடனே பெரிசா கூவாத! உன் நல்லத்துக்குத்தான் சொன்னேன். பொண்டாட்டிய அடக்கி ஆளணும். அப்பத்தான் அவகளே நம்மை விரும்புவாளுக. புரிஞ்சு நடந்துக்க’ என்று சொல்லிப் போய்க்கொண்டே இருந்தான். 

கதவிடுக்கு எலி, புலியாகத் தாற்காலிகமாக மாறியதை அவன் முகத்தில் வடிந்துகொண்டிருந்த கோபங்கள் எதிரில் அமர்ந்த எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தன. 

இல்லை சார்! என்ன பேசிட்டுப் போறான் பாருங்க சார்! அவ ராட்சசிதான். நான் இல்லைங்கலை. ஆனா நெருப்பு சார் நெருப்பு. ஒரு பய அவளைத் தவறான கண்ணோட்டத்துல பார்க்க முடியாது, நெருங்க முடியாது. மவனே அப்பறம் அவன் ஜன்மத்துக்கும் செத்தான். என்னை அலட்சியப்படுத்தறா. அது வேற. ஆனா கற்புல சொக்கத் தங்கம் சார். என்னிக்கும் நான் அந்த விஷ்யத்துல மட்டும் எவ்வளவு கோபம்னாலும் , மனசுக்குள்ள எவ்வளவு திட்டினாலும், அந்த விஷயத்துல மறந்துபோய் கூட சொல்ல மாட்டேனே. அது போலத்தான் நானும். இன்னொரு பெண்ணைத் தவறான நோக்குல பார்க்கவே மாட்டேன் சார். எதுக்கு? வீட்டுல நமக்குனு ஒருத்தி இருக்கா இல்ல. அப்பறம் மத்த பெண்களை ஏன் பார்க்கணும்? என்ன சார் நான் சொல்ரது? 

என் மனக்கண்ணில் எலிக்குள் இருந்து அழகான பறவைகள் வெளியில் வந்து பறந்த வண்ணமாய் இருந்தன. மனிதம் சிக்கலும், ஆழமும், அழகும் மிக்கது. பாவம் கொஞ்சம் மதிப்பு, அனுசரணை, கனிவு இது மட்டும் இருந்தால் கௌரி சொர்க்கவாசிதான். 

பல நாள் ஆயிற்று மங்கு ஐயர் கடை காபியைக் குடித்து. வழக்கமான என் டேபிள். எதிரில் காலி. மனம் அங்கு கௌரி சாரைக் கொண்டுவைத்துப் பார்த்தது. 

‘என்ன சார்! அன்னிக்கு அப்படி எகிறினானே டெர்ரர்? அவன் மனைவி அன்னிக்குப் பாருங்க அந்த ஷோக்கு வின்ஸெண்டோட பைக்குல போறாங்க. என்ன அநியோன்யம்! சிரிப்பு, கொஞ்சல். அதெல்லாம் அந்த அம்மாவைத் தப்பு சொல்ல முடியாது சார். அது என்ன பண்ணும்? இவன் எடுபிடியா இருந்தா போதும்னு நினைக்கிறான். டாமினேட் பண்ணணும் சார். அடக்கி ஆண்டாத்தான் பெண்களுக்கு ஆண்களைப் பிடிக்கும். நீங்க சாஃப்டா இருந்தீங்கன்னு வச்சுக்குங்க, அவங்களுக்கு மேட்ச் ஆகாதுல்ல. மனசு தான சார். கொம்புலதான் கொடி படரும். கொம்பும் தானும் கொடி மாதிரி ஆகி படருகிறேன்ன்னு ஆரம்பிச்சா கொடி என்ன பண்ணும்?’ -- முகேஷ் எதிர் சீட்டில்.

உங்களுக்கு என்னத்துக்கு சார் ஊர்ல இருக்கறவனோட வீட்டைப் பற்றியெல்லாம் அக்கப்போர்? அதெல்லாம் எதுவும் தெரியாம சட்டுனு பேசிடக் கூடாது. 

சார்! எனக்கு அக்கப்போரா? நீங்க ஒண்ணு. நான் அவனோட வெல்விஷ்ர் சார். பாவம் அப்பாவி. வாழ்க்கையைத் தொலைக்கப் போறானேன்னு சொல்றேன். அவனுக்கு ஏதாவது பண முடைன்னா எங்கிட்ட தான் சார் வருவான். மற்றவங்களைப் பற்றி எனக்கு என்ன கவலை? அந்த ஷோக்கு நாயைப்பற்றியும் எனக்கு நன்னா தெரியும். ஆனா ஜகஜ்ஜாலக் கில்லாடி. அது உண்மை. எது வேணுமின்னாலும் அவ்னால ஆகாதது கிடையாது. பாடினான்னா ஜேஸுதாஸ் தோத்துடும். அப்படி இருக்கும் குரல். ஆனா என்ன பயங்கர ஜொள்ளு. பாருங்க கொஞ்ச நாள்ல கௌரியே அழுதுகிட்டு இங்க வரப்போறான் பாருங்க. அப்ப தெரியும் நான் சொல்ற சீரியஸு. 

சரி மனிதர்களை எடை போடுவது எளிதன்று. சில நாள் கழிந்தது. பல வேலை. மாலைப் பொழுதில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிவிட்டு வரலாமேயென்று போனேன். காபி கடை. வழக்கமான என் டேபிள். அதிசயம். கௌரி சார் அமர்ந்திருந்தார். ஆளே பெரிய மாற்றம். முகத்தில் ஒரு புதுத் தெம்பு. கெட்டப்பே முழுக்க மாற்றம். எனக்கு சந்தேகம்.  டெர்ரர் சார்தானா? 

வாங்க சார்! உங்களை இன்னிக்குப் பார்ப்பேன்ன்னு என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அதுக்குத்தான் வெயிட் பண்ணின்ட்ருக்கேன். 
கௌரி சார் தானே? 

ஆமாம் அசல் டெர்ரர் தான்.  

இருவரும் சிரித்தோம். 

தேவலை நல்ல மாற்றம் காண்கிறேன். மகிழ்ச்சி. 

எல்லாம் உங்க வாய் முகூர்த்தம்தான். என் ப்ரைவேட் வாழ்க்கை நல்லபடியா ஆகணும்னு நினைச்ச ஒரே மனுஷன் நீங்கதான் சார். உங்க கிட்ட சொல்லணும்னுதான் வெயிட் பண்றேன் இவ்வளவு நாழி. 

ஓ வொண்டர்ஃபுல்! சொல்லுங்க. 

அன்னிக்கு ஒரு நாள் திடீர்னு என் மனைவி என்ன தோணித்தோ தெரியல்ல. என் கையைப் பிடிச்சுண்டு அழ ஆரம்பிச்சுட்டா. ஏம்மான்னு கேட்டா, ‘என்னை விட்டுப் போய்டாதீங்க. நான் உங்களை ரொம்ப ஊண்ட் பண்ணியிருக்கேன். ரொம்ப தவறு. மன்னிச்சுக்குங்க. என்னை வெறுக்காதீங்க ப்ளீஸ் -- அப்படீன்னு ஒரே அழுகை. என்னமா ஏதாவது உடல்நலம் சரியில்லையா? அப்படீன்னா அதெல்லாம் ஒண்ணும் இல்லை; நீங்க கல்மஷம் இல்லாத குழந்தை. நான் தான் மோசமானவள். அப்படீ இப்படீன்னு ஏதேதோ அழறா. ச....என்ன அன்பான ஜீவன் சார் அவ. அவளைப் போயி நான் என்ன எல்லாம் திட்டியிருப்பேன். என்ன பெரிசா என்னை அலட்சியப் படுத்தினான்னு கோபம். என்ன சார் நாம அலட்சியப் படுத்தாததை இப்ப அவ எனக்குப் பண்ணிட்டா? காலம் காலமா நாம பண்ணதை அவங்க சகிச்சாங்களே, என்னைப் பண்ணான்ன உடனே எவ்வளவு ஆத்திரம் சார்! நான்லாம் மனுஷனா சார்?... 

விட்டால் போய்க்கொண்டே இருப்பார் போல்தான் தோன்றியது. எனக்கும் அந்தச் சந்தோஷக் கதையைக் கேட்க ஆசைதான். ஆனால் முகேஷ் வந்து ஏதாவது ஏடாகூடமாக உளறினால் பாவம் நல்ல மனுஷன் இப்பொழுதுதான் நல்ல உற்சாகமான மாற்றத்தைப் பெற்றிருக்கிறான். 

சரிங்க சார். அப்ப இங்க அடிக்கடி உங்களைப் பார்க்க முடியாது. வீடே சொர்க்கம். என்ஜாய்! கிளம்புங்க. உங்கள் கடமை இனி உங்கள் மனைவியுடன் ப்ழகுவதில்தான். ஊரில் யார் என்ன சொன்னாலும் காதிலேயே போட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆத்மாவுக்கு உங்க மனைவி சாட்சி. உங்கள் மனைவியின் ஆத்மாவுக்கு நீங்களே சாட்சி. 

கரெக்டா சொன்னீங்க சார். ஒரு நாளைக்கு வீட்டுக்குச் சாப்பிட வாங்க. ந்ம்ம நல்லதை விரும்புபவரை நாம் நன்றியுடன் போற்ற வேண்டும். என் வெல் விஷர் நீங்க ஒருத்தர்தான். 

ஆம் அதனால்தான் சொல்கிறேன். சீக்கிரம் கிளம்புங்க. அப்புறம் ஒரு நாள் வருகிறேன். வாழ்க்கை முழுதும் இனி உங்களுக்கு இனிமையாகவே கழியட்டும். 

எழுந்து கொள்ளும் போதே ஒரு துள்ளல். கல்லாவில் போய் நின்று, ‘சார்! உங்களுக்கும் சேர்த்து பே பண்ணிட்டேன். தாங்க்யூ!’ 

மனித வாழ்க்கை மிகவும் சிக்கலானதும், ஆழமானதும், அழகானதும் ஆகும். 

***

கலவை யந்திரம் - சிறுகதை

காலையில் எழுந்து கொள்வதற்கு முன்பே இன்று அலுவலகம் போக வேண்டாமே என்ற எண்ணம் எழுந்து கொண்டது. காரணம் இரவு புழுக்கம். திடீர் மழை. பிறகு என்னவோ போல் தட்ப வெட்ப நிலையில் ஒரு விதமான மௌடீகத்தனம் இதைத்தவிர நேற்று எங்கு எதைச் சாப்பிட்டேனோ வயிற்றுப் பிரச்சனை வேறு. இதெல்லாம் இல்லை. ஏதோ மன உளைச்சல். அதோடு ஆபீஸ் செல்ல மனமில்லை. இந்த விஷயத்தில் மனத்தை நான் ரொம்ப மதிப்பவன். விடுப்பும் போட்டாயிற்று. காப்பியை வைத்துக்கொண்டு ஒரு யோசனை. காலை வேளையில் முதல் காப்பி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்படி எல்லாம் இதுவரையில் இருந்ததே இல்லை. ஏனோ தானோ என்று காப்பிப் பொடியின் கடைசிப் பிராணன் நாவின் திசுக்களைத் தேய்த்துக் கொண்டிருக்கும். இத்தனைக்கும் முதல் டிகாக்‌ஷன். பால் சரியில்லை. வழக்கமான பதில். 
இவர்களுக்கென்று காமதேனுவைக் கட்டி வைத்தாலும் சரிப்படாது. ஆவின் என்ன செய்யும்? 

காப்பியைத் தொடர்ந்து கக்கூஸ். சாப்பிட்டதும் ஒரு மருந்து கலக்க வேண்டும். அது அப்படியே வயிற்றுப் பூச்சிகளை அடித்துக் கொண்டு வந்து கொட்டிவிட வேண்டும். சரி சீக்கிரம். முதலில் ஆபீஸுக்குப் போன் செய்து விடுவோம். 

-- சேர்ந்த நாள் தோட்டு லீவென்றால் முன்னாலேயே போன் வந்துவிடும். 

அவர் அதெல்லாம் கரெக்டா இருப்பார் --- 

அந்தப் பேர் இப்பொழுது நழுவிடக் கூடாது. 

இன்று எவ்வளவோ வேலையிருக்கிறது. தொட்டுத் தொட்டு செய்யாமல் விட்டதெல்லாம் சேர்ந்து இந்த மாதிரி திடுதிப் விடுப்பில் எழுந்து நிற்கும். 
முதலில் ப்ளக் பாயிண்ட். கரண்ட் வரவில்லை. என்ன ரிப்பேர் என்று பார்க்கச் சொல்ல வேண்டும். என்ன எலக்ட்ரீஷியனுக இவனுக? சொல்லிப் பத்து நாள் ஆகிவிட்டது. பதிமூணா நாள் சுப ஸ்வீகாரம்....எதுக்கும் எதுக்கும்னு சம்பந்தமே கிடையாதா?.....பகல் பத்து...ராப்பத்து..பத்து நாள் உபந்நியாசம்.....பத்தும் பத்தாக....சரி விடு....பத்து பாத்திரம்...ச விவஸ்தையே கிடையாது. 

என்ன இது? ஒரே சத்தம் ! தெருவில் அடுக்ககம் கட்டுகின்ற வேலை. கலவை மிஷின் ஓடுகிறது. வேலையாட்கள், பெண்கள், கிழவிகள், கைக்குழந்தைகள், தாய்மார்கள் எல்லாம் எங்கிருந்து இறக்குமதி...கையில் பின்னிய கூடை...கூடையில் எவர்சில்வர் தூக்கு..அழுக்குத் துணி. 

“ஓய்! அங்க என்னடா எட்டிப் பார்க்கிற? போ போ வாசலில் எல்லாம் உட்காரக் கூடாது” 

போன் பண்ணிவிட்டு வரும் பொழுது வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு தொட்டி மண், ஒரு தொட்டி கல், ஒரு மூட்டை சிமெண்ட்...’போட்டதைச் சாப்பிடுகிறேன் என்பது போல வாயைத் திறந்துகொண்டு இரும்பு முறத் தொட்டி நாக்கைத் துருத்திக்கொண்டு அந்தப் பெரிய யந்திரம் வயிறு மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. தொட்டியைப் பிடித்துப் போட இரண்டு இரண்டு பேர். ஒரே நடை ஒரே குனிதல் ஒரே செய்கை ஒரே வியர்வை. 

இந்த உழைப்பை எல்லாம் தின்று கலவையாக்கி மறுபக்கம் கொட்டுகிறது. இங்கு பார்த்தால் ஏறுவரிசை, இறங்கு வரிசையில் ஆட்கள், பெண்கள். 
கலவையைத் தட்டில் ஏந்தித் தருவன இரண்டு கைகள். இரண்டு இரண்டு கைகளாகத் தட்டு சுற்றிக் கொண்டு வருகிறது. ஒரு பெண் முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு தட்டு சுற்றிக்கொண்டு திரும்பும் முனையில் -- 

~~ எத்தனை சௌகரியம், வேலை செய்யும் பொழுது. வாங்கி வாங்கிப் போடும் பொழுது மேலாடை விகிதம் விகிதமாக நகர்ந்து புடவையின் ஒரு விளிம்பு காற்றில் படபடத்துக்கொண்டு விலகுவதும், அதை இழுத்துச் சொருகுவதற்குள், ‘பிடி! என்ன அழகு பார்க்கிறே?’ என்று அசரீரி ஒன்று இரைவதும் அவசியமே இல்லை. அது செந்தில் நகர்ல ஒரு கட்டடம் கட்றாங்களாமே அங்க போயிருக்கு. இல்லைன்னா அப்படி இப்படின்னு ஒரு விதத்துல ரொம்ப தோதா இருக்கும் ~ 

‘பிடி! என்ன ரோசனை?’ -- மேஸ்திரி போலும். 

~~ இன்னிக்கு முதல் அடுக்கு ரூஃபிங் போட்டுட்டம்னா கொஞ்ச நாளைக்கு நிம்மதி. செந்தில் நகர்ல கொஞ்சம் கவனிக்கலாம். வெறும் வேளா வேளைக்கு ஆளை விட்டு தண்ணி ஊத்தச் சொன்னா போதும். பணம் குடுத்தவனுக கொஞ்சம் பிடுங்காம இருப்பானுக....இதுகள ஒரு ஆளு பக்கத்துல நிக்கலைன்னா வேலை வாங்க முடியாது. அந்த ஏரிந்தியாகாரர்தான் பிராணனை வாங்கறார். இன்னிக்கு வரதாச் சொன்னாரு. அதுக்கு என்ன பண்றது. குமரன் காலனியிலே ஒரு கிரவுண்ட் வாங்கி நேத்திக்குத்தான் பதிவாச்சு. அதுக்கு விளம்பரம் போட்டாச்சு. அதுல பதிவுப்பணம் வந்துதான் இதை மேற்கொண்டு நடத்தணும். இவனுக இப்ப கொடுத்திட்டு மூணு மாசத்துல வீட்டைக் கொண்டான்னா முடியுமா? இவனுக கொடுத்த பணத்துலதான் செந்தில் நகர் முடிஞ்சிக்கிட்டு இருக்கு. இங்க கல் மண் சிமெண்ட் இன்னொரு இடத்துல கலவைன்னு கைமாறி ரூஃபிங். ~~ 

வீட்டுக் காம்பௌண்ட் சுவரை ஒட்டி வீதிக்கு வளைந்திருக்கும் கிளை. அதில் தூளி கட்டித் தூங்கும், பாசாங்கு செய்யும், அழும், யந்திர ஒலியில் அழுகை அமுங்கிப் போக சலித்துக் குரல் வாங்கி அமைதியாய் இருக்கும் குழந்தை. ஆம் இந்தக் குரலையும் அள்ளிப்போட்டு கலவையாக்கி அந்தப் பக்கம் கொட்டுகிறது யந்திரம். அதை அள்ளி அள்ளித் தாயின் கரம் கூரை வேய அனுப்புகிறது. 

“ஏய் ராஜா! பாண்டி...பாண்டீ இ” 

“தே தூங்குதூங்கேங். கூவிக்கினுருக்க” 

“இல்லை தூளியை உதைச்சுக்கிட்டுது” 

“:அது கொசு தொந்தரவா இருக்கும் வேலையைப் பாரு.” 

தாயின் குரலை இந்தப் பக்கம் கடத்தாது யந்திரம்.. கலவையின் அப்புறம் இருந்து இப்புறத்திற்கு எதையும் பிரித்துத் தரும் படியாக யந்திரம் அமைக்கப்படவில்லை. அப்பொழுதுதான் ஒரு குருவி தூளியின் மேல் முடிச்சில் உட்கார்ந்து பார்த்து வாகாக இல்லை என்றதும், விசித்துக் கிளைமேல் உட்காருகிறது. கலவைத் தட்டு மாறாமல் சென்று கொண்டிருக்கிறது. 

‘அது என்ன தூளி கீழ? நனைந்து இருக்கிறதா?’ 
கண்ட்ராக்டர் -- “ஏய்...ஏண்டா கம்பியை தூக்கிகிட்டு வரீங்க. சும்மா படபட்ன்னு நாலு தூறல் போட்டுட்டு நின்னு போச்சு. போங்கடா போயி...” 

போட்டதைச் சாப்பிடுகிறேன் என்று வாயைத் திறந்து கொண்டிருந்தது யந்திரம். 

இதோ கலவைத் தொட்டி, தூக்கல், குனியல், நடை, கல், சிமெண்ட், மண், தண்ணி எல்லாம் கலந்துதான் கலவை. நம்ம உழைப்பு. அது எங்க கண்ணுக்குத் தெரியுது? கூலிக்கு வரச்சொல்ல குடும்பமெ வரவேண்டியிருக்கு. கஞ்சியைக் குடிச்சிட்டு தூக்குக் கூடையோட, தூக்கின குழந்தையோட, வெய்யில் அடிச்சாலும், வானம் பெஞ்சாலும், மானம் பாத்த வாழ்க்கை...... போவைல பொட்டிக்கடைல அதுவும் வந்து சேர்ந்துக்கினு பேச்சும் சிரிப்பும்...ஏன் இதெல்லாம் கலந்து கலவையாகிதான் தூளியிலே தொங்குதே....சே...அதை என்ன யந்திரமா செஞ்சிது....அழுகைச் சத்தமே காணமே...நல்லாத் தூங்குகிறான்போல...யே பாண்டீ பாண்டீ...கண்ணு.. 

“இந்தாப் பிடீ ...”  

தட்டு தத்திச் செல்கிறது. 
யந்திரத்தின் வயிறு கலக்குகிறது. 

பரவாயில்லை...பாண்டீ அழாம தூங்குறான். 
‘விர் விர்’ என்று என்று டூவீலரில் ஒருவர் பறந்துகொண்டு துடிக்கிறார். 

‘ஏம்ப்பா...நகருப்பா..’ 
‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்’ 

‘என்னய்யா எல்லா இடத்தையும் அடைச்சிக்கிட்டுப் போட்டீங்கன்னா எப்படியா போறது...’ 

‘கொஞ்சம் நேரம் தான் சார். முடிஞ்சுடும்.’ 

‘போய்த்தொலை’ என்று யந்திர நாக்கு எழுந்துகொண்டது. பரபரப்பு புகையாக மிதந்தது. 

சிமுண்ட், மணல், கல் பல்லக்குகளில் வந்து போன வண்ணம் இருந்தன. வியர்வை வற்றாத ஜீவ நதிபோல் பெருகிக் கொண்டிருந்தது. 

வானத்திற்குக் காய்வதா, கொட்டுவதா என்பது இன்னும் முடிவாகவில்லை. 

‘எனக்கு ஒரு மகன் இருந்தான். படுபாவி இப்படி அம்போன்னு விட்டுட்டு விபத்துல போய்ச் சேர்ந்தான். ஒண்டிக்கட்டையா...இந்தக் கம்புதான் ஊன்றுகோல்...அம்மா...ராஜா...கொஞ்சம் இருங்கப்பா...அந்தப் பக்கம் போயிட்றேன். காலையே வைக்க முடியல்ல்லியேப்பா. கல்லா கிடக்கு’ 

‘இங்க இங்க பாட்டி...இப்படி வா... இருப்பா...கொஞ்சம் பாட்டி போயிடட்டும்’ 

‘அப்பா! மகராசனா இருப்பா...’ 

‘கொஞ்ச நேரத்துக்கு இப்படி வராத பாட்டி...’ 

‘என்னது...வராம என்ன பண்றது? மனுஷா போயி வர முடியலைன்னா...ஓரமா போட்டுக்கக் கூடாதாப்பா...’ 

‘ஏய்..பாட்டி போயிருண்டா..இதைப்பிடி...’ 
‘எக்ஸ்க்யூஸ் மீ...’ 

‘ஏய் வழியை விடு...’ 

‘இருங்கம்மா தட்டு தூக்கிடிச்சுன்னா வழி கிடைக்கும்’ 

கல்லில்லாத இடம் தேடி பெண்ணின் கால் தவ்விச் சென்றது. துணையாகப் பல கண்கள் கூடப் போய்விட்டு வந்தன. இதுதான் நல்ல நேரம் என்று ஒரு நாய் இடைவெளியில் புகுந்து பதுங்கிச் சென்றது. பெண்ணைப் பார்த்துக்கொண்டே ஒரு கை வீசிய கல்லில் பட்டதோ, உரசியதோ, இல்லையேல் காற்றில் விர்ர்ர்ரென்ற ஒலி கேட்டோ, எதுவாய் இருந்தால் என்ன? அடுத்து அடுத்து வரும் கல்லில் ஏதோ ஒன்று படப்போறது என்ற நிச்சயத்தில் ‘ஒள்ள்ள்ள்ள்’ என்று கத்திக்கொண்டே நாய் ஓட்டம் பிடித்தது. 

‘ஏய்! கலவையைப் போட்றான்னா நாயை அடிச்சிக்கிட்டு.....’ 

‘லேய்! தூளி தொங்குதில்ல... மேல பட்டுதுன்னா என்னாத்துக்கு ஆருது?’ 

‘ஐயோ பாக்கலைக்க...ஐயாம் ஸாரிக்கா..’ 

பாம் ...பாம்.  ஹ்ரைங்ங்ங் 
‘அண்ணே...அப்படியே போயிடுங்க. லாரி இங்க வரமுடியாது’ 

‘ஏய் ...ரிவர்ஸ் பார்றா...’ 
‘ஏண்ணே...’ 

‘கலவை போட்றாங்க...தெரு முக்கிலேயே தடுப்பு வைக்கக் கூடாது. அப்படியே போயிருப்பன்ல...’ 

‘இல்லைண்ண... வைச்சிருந்துது...டூவீலர் ஒத்தரு தட்டிவிட்ட்ட்டாரு..’ 

‘எலேய்...சூ சூ அந்த நாயை தொரத்துடா....தூளிகிட்ட போயி மூந்து பாக்குது...’ 

சிர்ர்ர்ர்ர்னு ஒரு கல்லு....ஒள்ள்ள்ள்ள் 

‘ஏண்டா அறிவில்லை...கல்லை விட்டு எறிஞ்சுகிட்டு...இன்னும் கொஞ்சம் இருந்தா என் கால்ல பட்டுருக்கும்....யாருய்யா இன்சார்ஜ்...? என்னய்யா இதெல்லாம்...?’ 

‘இல்லை சார் கோவிச்சுக்காதீங்க நீங்க போங்க......ஏண்டா பொறம்போக்கு வேலையைக் கவனிக்காம...நாயோட வெளையாடிக்கிட்டு...’ 
’இல்லண்ணா அக்கா சொல்லிச்சு...’ 

‘ஆமா அக்கா சொல்லிச்சு அம்மா சொல்லிச்சுன்னு’ 

‘ஸ்டுப்பிட்..’ 

‘நீங்க போங்க சார் நான் சொல்லிக்கறேன்...’ 

யந்திரத்திற்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. முன்னுக்கும் பின்னுக்குமாக கவிழ்ந்து கவிழ்ந்து வேலை செய்தது. அதற்கு உயிர் என்ற சுமை இல்லை. வாழ்க்கை என்ற பாரம் இல்லை. குடும்பம் பிள்ளைக் குட்டி என்ற கவலை இல்லை...கலவைக்காகவே உண்டானது கலந்து கலந்து கொட்டுகிறது. ஏதோ காதில் விழுந்த ரோசத்தில் போல் யந்திரம் நின்றுவிட்டது. கரங்கள் கழுவப்படுகின்றன. கூலியாட்கள் உணவு நேரம். கேலியும் சிரிப்பும் கூழும், கும்மாளமும் நிழல் திட்டுக்களாய்த் தெரிகின்றன. தூளியில் இருந்த பாண்டி இப்பொழுது வெளியில் வந்து பால் குடித்துக்கொண்டிருக்கிறது. கலவை யந்திரத்தை முன்னும் பின்னுமாகச் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்து பார்த்து நாய் ஒரு குறிப்பிட்ட ஓரத்தைத் தேர்ந்தெடுத்தது போல் காலைத் தூக்குகிறது. 
நடந்து போவோரும், இரண்டு சக்கரங்களும் வேகமாக அந்த ஒற்றையடி இடைவெளியில் புகுந்து புகுந்து போய்க் கொண்டிருக்கின்றனர். 

ஓய்வு நேரம் முடிந்த பின்னர் மீண்டும் கலவை யந்திரம் சுற்றத் தொடங்கும். 
*

(முதல் இடுகை கணையாழியில், பின்பு - 13-2-2011)

Tuesday, March 1, 2016

குழந்தை - (சிறுகதை)

சுசிம்மா! அங்க போகாத 

ஐயய்ய! பாரு 
துருப்பிடிச்ச குழாய்ல கையை வைச்சு...சு சுச் .. எவ்வளவு அழுக்கு பாரு... 

வணக்கம் சார். காத்தால போன் பண்ணியிருந்தேன். ... 

ம் வாங்க வாங்க. ...
உங்க விஷ்யம் சொல்லியிருக்கேன். சிறிது நாட்களில் முடிவாயிடும்....இதெல்லாம் எதுக்கு

இல்லை சார்.....பாப்பாவுக்கு...... 

அதெல்லாம் அவ வாங்க மாட்டா...
இல்லம்மா.. சுசி... 

கண்ணால் வாங்கிக் கொண்டும் கையால் வேண்டாம் என்று சொல்லியபடியும் வாயை இறுக்க மூடியபடி நடந்தது சுசி

என்ன சார்....வாங்க மாட்டேங்குது.....ஐயோ,.... 

அவளுக்கு வீட்டில் பண்ணதுதான் பிடிக்கும். கடையில் வாங்குவது எதுவும்....... 

சுசி அங்கிருந்தபடி அந்தக் கைப்பொருளை ஒரு நோட்டம் விட்டது ஒரு நொடி கண்ணை நிறுத்தாமல். அங்கிருந்தால் தேவையற்ற அல்லாடலுக்குத் தானும் தன் பெயரும் ஆளாகும் என்பதைத் தவிப்பதுபோல்அம்மாஎன்று சொல்லியபடியே சென்ற சுசியின் புராணம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. ஒரு நிலையில் உள்ளே சென்ற சுசி, அது மறந்து போய், திரும்ப அந்தப்பக்கம் வந்தபோது தந்தையின் விவரிப்புக்குப் பலம் சேர்ப்பது போல்வெளி பொருள்களைச் சாப்பிடக் கூடாது. வயிற்றுல புண் வரும்என்று உபதேசித்துவிட்டுச் சென்றதும்தான் அந்தப் புராணம் ஓய்ந்தது

வந்தவர் கொண்டு வந்த பொருளை ஏதோ மறந்து விட்டுச் சென்றவர் போல் ஒரு வழியாக நழுவிவிட்டார். அதை அங்கிருந்து எடுக்காமலேயே நெடுநேரம் விட்டுவைத்துக் கிடந்தது

சுசி அங்கும் இங்கும் பல தடவை போய்வந்து போய்வந்து அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமலேயே அதன் பக்கத்தில் கிடந்த பேப்பர், தன் புத்தகம் எல்லாவற்றையும் எடுத்து வைத்து என்ன என்னவோ செய்தாலும் அதன் பக்கம் மட்டும் கண் போகவில்லை

திடுதிப்பென்று கண்ணில் பட்டது போல் அதை எடுத்து, ‘ஐயய்யோ அந்த அங்கிள் இதை வைத்துவிட்டுப் போய்ட்டார்ர்ர்ர்என்று கண்டுபிடித்துக் கொடுத்துப் பார்த்தது

அது போகட்டும் அங்கேயே இருக்கட்டும்’ 

இதை வெளில தூலப் போட்ரவா...?’ 

வேணாம் வேணாம் அப்பறம் அந்த அங்கிளைப் பார்த்துக் கொடுத்துக்கலாம்’ 

அவா ஆத்துக்குப் போயா?’ 

நீ இன்னிக்கு வீட்டுப் பாடம் செஞ்சியா?’ 

சிக்னல் ரிஸீவ்டு. இனி அதைப பற்றி நோண்டிக் கேட்கக் கூடாது. ஏதோ ரைம்ஸ் ராகத்தை கோணல் மாணலாக வாயைச் சுளித்துக்கொண்டு ஆள்காட்டி விரலை சுவர், நாற்காலி, டேபிள் என்று அதே வரிசையில் உளள அனைத்தின் மீதும் இழுத்துக் கோடிட்டவாறே அவன் மீதும் அந்த ரேகையைத் தொடர வந்த போது நல்ல வேளையாக செல் ஒலித்தது

அப்புறம் அவன்செல்வந்தன் ஆனான். சுசி விடுதலை பெற்ற பறவைபோல் கைகளை இறக்கையாக்கி பறக்கும் பாவனையில் எங்கோ ஓடிச்சென்றது

சுசீ....... அம்மா கெடுபிடிக் குரல்....

அப்பா கெடுபிடி தடுக்கும் மூங்கில் கழி போன்றது. வேறு காரணத்திற்காக விலகும் போதோ, அல்லது அதிலேயே ஊஞ்சலாடியபடி கீழே விழும் பாவனையில் தரை மட்டமாக நகர்ந்து இந்தப் பக்கம் வந்தோ தப்பிவிடலாம். ஆனால் அம்மா கெடுபிடி என்பது ஆளைச் சுற்றும் கொடி போன்றது. கைகாலை நகர்த்துவதே மிகவும் கஷ்டம். தம் கட்டி உடலை இளக்கி ஒல்லியாக்கி உருவிக்கொண்டுதான் வரவேண்டும். முடியாமலும் போகலாம். அப்பொழுது முழு மனத்தோடு படிந்து போய் நெகிழ்வாக்கி அதை அடுத்த சலுகைகளுக்கு அச்சாரமாக ஆக்கிக்கொள்ளலாம்

சுசி ஈஸ் குட் கேர்ல்

சுசி ! அப்பாவைக் கூப்பிடேன் சாப்பிட்றதுக்கு

அப்பா!.....சொன்னதும் கேட்கும் வேகத்தில், எதற்கோ பதிலாக இரைந்து கூப்பிட சந்தர்ப்பம் வாய்த்த ஊக்கத்தில் சென்ற சுசி, கண் ஓட்டத்தில் அந்தப் பொருள் பட்டுவிடவே, மெதுவாகஅப்பாஎன்று ஒரு முறை கூப்பிட்டுவிட்டுத் திரும்ப ஏதோ விரட்டுவதுபோல் ஓடிவந்து 

அம்மா! அப்பா செல் பேசிண்ட்ருக்கா. வரேன்னு கையாட்டினா’ 

அந்தத் தட்டையெல்லாம் கொஞ்சம் அலம்பிப் போடும்மா! சமத்தோல்லியோ.....’ 

அம்மா கெடுபிடி குழைந்து இனிமையாக....அப்பாடா இப்படியே எப்பவும், இருந்தால்......எங்கோ பாத்ரூமில் இருந்து கேட்டாலும் எவ்வளவு பக்கத்தில் அரவணைப்பாய்.....

சரிம்மா....’ 

போய் சிங்க்கில் போட்டு ஒவ்வொன்றாக அலம்ப எடுக்கும் போது...அது என்ன காட்சி....ஐயய்ய்ய எவ்வளவு அழுக்கு....அப்படியே கன்னங்கரேல்னு கசடுக் குழம்பு....கொஞ்சம் காப்பிப் பொடித் தூள் வடிகட்டினதும் கலந்து....எண்ணை கலர் கலர் இழைகளாகித் தண்ணீரோடு இழைந்து கசடுகளின் இடுக்கில் நெளிந்து குழைந்து சிங்க் ஓட்டையில் போய் விழுந்து..... 

திரும்ப பார்த்தால்...அப்பா இன்னும் செல் போனில்....பாத்ரூமில் இப்பொழுதுதான் தண்ணீர் மக்கில் மொண்டு கொட்டும் ஒலி தொடங்கியிருக்கிறது. வேண்டிய அவகாசம் இருக்கிறது. அதற்குள் இதை ஒரு கை பார்த்துவிடலாம். அந்த கலர் எங்கிருந்து வருகிறது? ஐய என்ன இந்தக் கருப்புக் கசடு? ஐயோ என்ன சாஃப்டா இருக்கு! அட உள்ள ஷைனிங்கா ஒரு தோல் தக்காளியா? இன்னும் அப்படியே இருக்குமா? கண்கள் அப்படியும் இப்படியும் ஓரங்களுக்குப் போய்வந்தது. தக்காளித் துண்டு கையின் உபயத்தில் வாயில். து து து..... 

அதற்குள் செல் நின்று விட்டது போல் இருக்கிறது

ஓகே ஓகே ...நான் நாளைக்குப் பண்றேன்...ஷ்யூர்...இல்லை இல்லை நோ ப்ராப்ளம்..... 

சுசீ !....... 

அப்பா! ப்ளீஸ் கம் ஹியர்.....இங்க பாரு...... 

என்னடா பண்ணிண்ட்ருக்க?....ஐய... 

கையைக் கழுவி விடு. இந்த அம்மா பாரு. எப்படி அழுக்கைப் போட்டு வச்சு..ஐய டர்டி.... 

நீ எண்டா அங்க போய் கையை வச்ச

இல்லப்பா அம்மாதான் தட்டெல்லாம் அலம்பிப் போடுன்னா...... தட்டை அலம்பிப் போடலாம்னா கீழ விழுந்துடுத்து.....எடுத்தா ஒரே அலுக்கு.....ஐய.......

இவுளுக்கு சுத்தமா அறிவே கெடையாது......இரு இரு இப்படிக் கையைக் காட்டு.....

அப்பா நீ நகர்ந்துக்கோ ...உன் வேஷ்டியெல்லாம் ஆயிடும்....

பரவாயில்லம்மா அப்பா அப்பறம் குளிச்சுடுவேன்....

ஐய மேல பட்டா அப்பறம் ஜொரம் வரும்....உனக்கு டாக்டர் ஊச்சி போடுவார்..... 

ஏன் கொழந்தையை தட்டை அலம்ப சொல்ற? நான் தான் வந்துண்டே இருக்கேனே

இல்லப்பா கை தவறி விழுந்துடுத்து.... 

ஐயோ சாரி கண்ணா....அதைக் கழுவிடணும்னு நெனச்சேன், பைத்தியக் காரி மறந்துட்டு போயிட்டேன்....மேல ஆயிடுத்தா?...... 

இல்லம்மா இபிடீ எடுத்தேன் உள்ள விழுந்துடுத்து. அப்படீ மேல பிடிச்சு எடுக்கலாம்னு பார்த்தா கையில் பட்ருத்து....உடனே அப்பாவைக் கூட்டேன்.... 

ஐயோ சமத்து. ......சுசி ஈஸ் குட் கேர்ல்....

அப்பா ஈச் குட் அப்பா.... 

அப்ப அம்மா

அம்மா ஈஸ் குட் அம்மா...... 

ஹஹஹஹஹ ஹிஹிஹி ஊஉ  

பொல்லாது பொல்லாது பொல்லாது......