Wednesday, March 2, 2016

கலவை யந்திரம் - சிறுகதை

காலையில் எழுந்து கொள்வதற்கு முன்பே இன்று அலுவலகம் போக வேண்டாமே என்ற எண்ணம் எழுந்து கொண்டது. காரணம் இரவு புழுக்கம். திடீர் மழை. பிறகு என்னவோ போல் தட்ப வெட்ப நிலையில் ஒரு விதமான மௌடீகத்தனம் இதைத்தவிர நேற்று எங்கு எதைச் சாப்பிட்டேனோ வயிற்றுப் பிரச்சனை வேறு. இதெல்லாம் இல்லை. ஏதோ மன உளைச்சல். அதோடு ஆபீஸ் செல்ல மனமில்லை. இந்த விஷயத்தில் மனத்தை நான் ரொம்ப மதிப்பவன். விடுப்பும் போட்டாயிற்று. காப்பியை வைத்துக்கொண்டு ஒரு யோசனை. காலை வேளையில் முதல் காப்பி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்படி எல்லாம் இதுவரையில் இருந்ததே இல்லை. ஏனோ தானோ என்று காப்பிப் பொடியின் கடைசிப் பிராணன் நாவின் திசுக்களைத் தேய்த்துக் கொண்டிருக்கும். இத்தனைக்கும் முதல் டிகாக்‌ஷன். பால் சரியில்லை. வழக்கமான பதில். 
இவர்களுக்கென்று காமதேனுவைக் கட்டி வைத்தாலும் சரிப்படாது. ஆவின் என்ன செய்யும்? 

காப்பியைத் தொடர்ந்து கக்கூஸ். சாப்பிட்டதும் ஒரு மருந்து கலக்க வேண்டும். அது அப்படியே வயிற்றுப் பூச்சிகளை அடித்துக் கொண்டு வந்து கொட்டிவிட வேண்டும். சரி சீக்கிரம். முதலில் ஆபீஸுக்குப் போன் செய்து விடுவோம். 

-- சேர்ந்த நாள் தோட்டு லீவென்றால் முன்னாலேயே போன் வந்துவிடும். 

அவர் அதெல்லாம் கரெக்டா இருப்பார் --- 

அந்தப் பேர் இப்பொழுது நழுவிடக் கூடாது. 

இன்று எவ்வளவோ வேலையிருக்கிறது. தொட்டுத் தொட்டு செய்யாமல் விட்டதெல்லாம் சேர்ந்து இந்த மாதிரி திடுதிப் விடுப்பில் எழுந்து நிற்கும். 
முதலில் ப்ளக் பாயிண்ட். கரண்ட் வரவில்லை. என்ன ரிப்பேர் என்று பார்க்கச் சொல்ல வேண்டும். என்ன எலக்ட்ரீஷியனுக இவனுக? சொல்லிப் பத்து நாள் ஆகிவிட்டது. பதிமூணா நாள் சுப ஸ்வீகாரம்....எதுக்கும் எதுக்கும்னு சம்பந்தமே கிடையாதா?.....பகல் பத்து...ராப்பத்து..பத்து நாள் உபந்நியாசம்.....பத்தும் பத்தாக....சரி விடு....பத்து பாத்திரம்...ச விவஸ்தையே கிடையாது. 

என்ன இது? ஒரே சத்தம் ! தெருவில் அடுக்ககம் கட்டுகின்ற வேலை. கலவை மிஷின் ஓடுகிறது. வேலையாட்கள், பெண்கள், கிழவிகள், கைக்குழந்தைகள், தாய்மார்கள் எல்லாம் எங்கிருந்து இறக்குமதி...கையில் பின்னிய கூடை...கூடையில் எவர்சில்வர் தூக்கு..அழுக்குத் துணி. 

“ஓய்! அங்க என்னடா எட்டிப் பார்க்கிற? போ போ வாசலில் எல்லாம் உட்காரக் கூடாது” 

போன் பண்ணிவிட்டு வரும் பொழுது வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு தொட்டி மண், ஒரு தொட்டி கல், ஒரு மூட்டை சிமெண்ட்...’போட்டதைச் சாப்பிடுகிறேன் என்பது போல வாயைத் திறந்துகொண்டு இரும்பு முறத் தொட்டி நாக்கைத் துருத்திக்கொண்டு அந்தப் பெரிய யந்திரம் வயிறு மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. தொட்டியைப் பிடித்துப் போட இரண்டு இரண்டு பேர். ஒரே நடை ஒரே குனிதல் ஒரே செய்கை ஒரே வியர்வை. 

இந்த உழைப்பை எல்லாம் தின்று கலவையாக்கி மறுபக்கம் கொட்டுகிறது. இங்கு பார்த்தால் ஏறுவரிசை, இறங்கு வரிசையில் ஆட்கள், பெண்கள். 
கலவையைத் தட்டில் ஏந்தித் தருவன இரண்டு கைகள். இரண்டு இரண்டு கைகளாகத் தட்டு சுற்றிக் கொண்டு வருகிறது. ஒரு பெண் முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு தட்டு சுற்றிக்கொண்டு திரும்பும் முனையில் -- 

~~ எத்தனை சௌகரியம், வேலை செய்யும் பொழுது. வாங்கி வாங்கிப் போடும் பொழுது மேலாடை விகிதம் விகிதமாக நகர்ந்து புடவையின் ஒரு விளிம்பு காற்றில் படபடத்துக்கொண்டு விலகுவதும், அதை இழுத்துச் சொருகுவதற்குள், ‘பிடி! என்ன அழகு பார்க்கிறே?’ என்று அசரீரி ஒன்று இரைவதும் அவசியமே இல்லை. அது செந்தில் நகர்ல ஒரு கட்டடம் கட்றாங்களாமே அங்க போயிருக்கு. இல்லைன்னா அப்படி இப்படின்னு ஒரு விதத்துல ரொம்ப தோதா இருக்கும் ~ 

‘பிடி! என்ன ரோசனை?’ -- மேஸ்திரி போலும். 

~~ இன்னிக்கு முதல் அடுக்கு ரூஃபிங் போட்டுட்டம்னா கொஞ்ச நாளைக்கு நிம்மதி. செந்தில் நகர்ல கொஞ்சம் கவனிக்கலாம். வெறும் வேளா வேளைக்கு ஆளை விட்டு தண்ணி ஊத்தச் சொன்னா போதும். பணம் குடுத்தவனுக கொஞ்சம் பிடுங்காம இருப்பானுக....இதுகள ஒரு ஆளு பக்கத்துல நிக்கலைன்னா வேலை வாங்க முடியாது. அந்த ஏரிந்தியாகாரர்தான் பிராணனை வாங்கறார். இன்னிக்கு வரதாச் சொன்னாரு. அதுக்கு என்ன பண்றது. குமரன் காலனியிலே ஒரு கிரவுண்ட் வாங்கி நேத்திக்குத்தான் பதிவாச்சு. அதுக்கு விளம்பரம் போட்டாச்சு. அதுல பதிவுப்பணம் வந்துதான் இதை மேற்கொண்டு நடத்தணும். இவனுக இப்ப கொடுத்திட்டு மூணு மாசத்துல வீட்டைக் கொண்டான்னா முடியுமா? இவனுக கொடுத்த பணத்துலதான் செந்தில் நகர் முடிஞ்சிக்கிட்டு இருக்கு. இங்க கல் மண் சிமெண்ட் இன்னொரு இடத்துல கலவைன்னு கைமாறி ரூஃபிங். ~~ 

வீட்டுக் காம்பௌண்ட் சுவரை ஒட்டி வீதிக்கு வளைந்திருக்கும் கிளை. அதில் தூளி கட்டித் தூங்கும், பாசாங்கு செய்யும், அழும், யந்திர ஒலியில் அழுகை அமுங்கிப் போக சலித்துக் குரல் வாங்கி அமைதியாய் இருக்கும் குழந்தை. ஆம் இந்தக் குரலையும் அள்ளிப்போட்டு கலவையாக்கி அந்தப் பக்கம் கொட்டுகிறது யந்திரம். அதை அள்ளி அள்ளித் தாயின் கரம் கூரை வேய அனுப்புகிறது. 

“ஏய் ராஜா! பாண்டி...பாண்டீ இ” 

“தே தூங்குதூங்கேங். கூவிக்கினுருக்க” 

“இல்லை தூளியை உதைச்சுக்கிட்டுது” 

“:அது கொசு தொந்தரவா இருக்கும் வேலையைப் பாரு.” 

தாயின் குரலை இந்தப் பக்கம் கடத்தாது யந்திரம்.. கலவையின் அப்புறம் இருந்து இப்புறத்திற்கு எதையும் பிரித்துத் தரும் படியாக யந்திரம் அமைக்கப்படவில்லை. அப்பொழுதுதான் ஒரு குருவி தூளியின் மேல் முடிச்சில் உட்கார்ந்து பார்த்து வாகாக இல்லை என்றதும், விசித்துக் கிளைமேல் உட்காருகிறது. கலவைத் தட்டு மாறாமல் சென்று கொண்டிருக்கிறது. 

‘அது என்ன தூளி கீழ? நனைந்து இருக்கிறதா?’ 
கண்ட்ராக்டர் -- “ஏய்...ஏண்டா கம்பியை தூக்கிகிட்டு வரீங்க. சும்மா படபட்ன்னு நாலு தூறல் போட்டுட்டு நின்னு போச்சு. போங்கடா போயி...” 

போட்டதைச் சாப்பிடுகிறேன் என்று வாயைத் திறந்து கொண்டிருந்தது யந்திரம். 

இதோ கலவைத் தொட்டி, தூக்கல், குனியல், நடை, கல், சிமெண்ட், மண், தண்ணி எல்லாம் கலந்துதான் கலவை. நம்ம உழைப்பு. அது எங்க கண்ணுக்குத் தெரியுது? கூலிக்கு வரச்சொல்ல குடும்பமெ வரவேண்டியிருக்கு. கஞ்சியைக் குடிச்சிட்டு தூக்குக் கூடையோட, தூக்கின குழந்தையோட, வெய்யில் அடிச்சாலும், வானம் பெஞ்சாலும், மானம் பாத்த வாழ்க்கை...... போவைல பொட்டிக்கடைல அதுவும் வந்து சேர்ந்துக்கினு பேச்சும் சிரிப்பும்...ஏன் இதெல்லாம் கலந்து கலவையாகிதான் தூளியிலே தொங்குதே....சே...அதை என்ன யந்திரமா செஞ்சிது....அழுகைச் சத்தமே காணமே...நல்லாத் தூங்குகிறான்போல...யே பாண்டீ பாண்டீ...கண்ணு.. 

“இந்தாப் பிடீ ...”  

தட்டு தத்திச் செல்கிறது. 
யந்திரத்தின் வயிறு கலக்குகிறது. 

பரவாயில்லை...பாண்டீ அழாம தூங்குறான். 
‘விர் விர்’ என்று என்று டூவீலரில் ஒருவர் பறந்துகொண்டு துடிக்கிறார். 

‘ஏம்ப்பா...நகருப்பா..’ 
‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்’ 

‘என்னய்யா எல்லா இடத்தையும் அடைச்சிக்கிட்டுப் போட்டீங்கன்னா எப்படியா போறது...’ 

‘கொஞ்சம் நேரம் தான் சார். முடிஞ்சுடும்.’ 

‘போய்த்தொலை’ என்று யந்திர நாக்கு எழுந்துகொண்டது. பரபரப்பு புகையாக மிதந்தது. 

சிமுண்ட், மணல், கல் பல்லக்குகளில் வந்து போன வண்ணம் இருந்தன. வியர்வை வற்றாத ஜீவ நதிபோல் பெருகிக் கொண்டிருந்தது. 

வானத்திற்குக் காய்வதா, கொட்டுவதா என்பது இன்னும் முடிவாகவில்லை. 

‘எனக்கு ஒரு மகன் இருந்தான். படுபாவி இப்படி அம்போன்னு விட்டுட்டு விபத்துல போய்ச் சேர்ந்தான். ஒண்டிக்கட்டையா...இந்தக் கம்புதான் ஊன்றுகோல்...அம்மா...ராஜா...கொஞ்சம் இருங்கப்பா...அந்தப் பக்கம் போயிட்றேன். காலையே வைக்க முடியல்ல்லியேப்பா. கல்லா கிடக்கு’ 

‘இங்க இங்க பாட்டி...இப்படி வா... இருப்பா...கொஞ்சம் பாட்டி போயிடட்டும்’ 

‘அப்பா! மகராசனா இருப்பா...’ 

‘கொஞ்ச நேரத்துக்கு இப்படி வராத பாட்டி...’ 

‘என்னது...வராம என்ன பண்றது? மனுஷா போயி வர முடியலைன்னா...ஓரமா போட்டுக்கக் கூடாதாப்பா...’ 

‘ஏய்..பாட்டி போயிருண்டா..இதைப்பிடி...’ 
‘எக்ஸ்க்யூஸ் மீ...’ 

‘ஏய் வழியை விடு...’ 

‘இருங்கம்மா தட்டு தூக்கிடிச்சுன்னா வழி கிடைக்கும்’ 

கல்லில்லாத இடம் தேடி பெண்ணின் கால் தவ்விச் சென்றது. துணையாகப் பல கண்கள் கூடப் போய்விட்டு வந்தன. இதுதான் நல்ல நேரம் என்று ஒரு நாய் இடைவெளியில் புகுந்து பதுங்கிச் சென்றது. பெண்ணைப் பார்த்துக்கொண்டே ஒரு கை வீசிய கல்லில் பட்டதோ, உரசியதோ, இல்லையேல் காற்றில் விர்ர்ர்ரென்ற ஒலி கேட்டோ, எதுவாய் இருந்தால் என்ன? அடுத்து அடுத்து வரும் கல்லில் ஏதோ ஒன்று படப்போறது என்ற நிச்சயத்தில் ‘ஒள்ள்ள்ள்ள்’ என்று கத்திக்கொண்டே நாய் ஓட்டம் பிடித்தது. 

‘ஏய்! கலவையைப் போட்றான்னா நாயை அடிச்சிக்கிட்டு.....’ 

‘லேய்! தூளி தொங்குதில்ல... மேல பட்டுதுன்னா என்னாத்துக்கு ஆருது?’ 

‘ஐயோ பாக்கலைக்க...ஐயாம் ஸாரிக்கா..’ 

பாம் ...பாம்.  ஹ்ரைங்ங்ங் 
‘அண்ணே...அப்படியே போயிடுங்க. லாரி இங்க வரமுடியாது’ 

‘ஏய் ...ரிவர்ஸ் பார்றா...’ 
‘ஏண்ணே...’ 

‘கலவை போட்றாங்க...தெரு முக்கிலேயே தடுப்பு வைக்கக் கூடாது. அப்படியே போயிருப்பன்ல...’ 

‘இல்லைண்ண... வைச்சிருந்துது...டூவீலர் ஒத்தரு தட்டிவிட்ட்ட்டாரு..’ 

‘எலேய்...சூ சூ அந்த நாயை தொரத்துடா....தூளிகிட்ட போயி மூந்து பாக்குது...’ 

சிர்ர்ர்ர்ர்னு ஒரு கல்லு....ஒள்ள்ள்ள்ள் 

‘ஏண்டா அறிவில்லை...கல்லை விட்டு எறிஞ்சுகிட்டு...இன்னும் கொஞ்சம் இருந்தா என் கால்ல பட்டுருக்கும்....யாருய்யா இன்சார்ஜ்...? என்னய்யா இதெல்லாம்...?’ 

‘இல்லை சார் கோவிச்சுக்காதீங்க நீங்க போங்க......ஏண்டா பொறம்போக்கு வேலையைக் கவனிக்காம...நாயோட வெளையாடிக்கிட்டு...’ 
’இல்லண்ணா அக்கா சொல்லிச்சு...’ 

‘ஆமா அக்கா சொல்லிச்சு அம்மா சொல்லிச்சுன்னு’ 

‘ஸ்டுப்பிட்..’ 

‘நீங்க போங்க சார் நான் சொல்லிக்கறேன்...’ 

யந்திரத்திற்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. முன்னுக்கும் பின்னுக்குமாக கவிழ்ந்து கவிழ்ந்து வேலை செய்தது. அதற்கு உயிர் என்ற சுமை இல்லை. வாழ்க்கை என்ற பாரம் இல்லை. குடும்பம் பிள்ளைக் குட்டி என்ற கவலை இல்லை...கலவைக்காகவே உண்டானது கலந்து கலந்து கொட்டுகிறது. ஏதோ காதில் விழுந்த ரோசத்தில் போல் யந்திரம் நின்றுவிட்டது. கரங்கள் கழுவப்படுகின்றன. கூலியாட்கள் உணவு நேரம். கேலியும் சிரிப்பும் கூழும், கும்மாளமும் நிழல் திட்டுக்களாய்த் தெரிகின்றன. தூளியில் இருந்த பாண்டி இப்பொழுது வெளியில் வந்து பால் குடித்துக்கொண்டிருக்கிறது. கலவை யந்திரத்தை முன்னும் பின்னுமாகச் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்து பார்த்து நாய் ஒரு குறிப்பிட்ட ஓரத்தைத் தேர்ந்தெடுத்தது போல் காலைத் தூக்குகிறது. 
நடந்து போவோரும், இரண்டு சக்கரங்களும் வேகமாக அந்த ஒற்றையடி இடைவெளியில் புகுந்து புகுந்து போய்க் கொண்டிருக்கின்றனர். 

ஓய்வு நேரம் முடிந்த பின்னர் மீண்டும் கலவை யந்திரம் சுற்றத் தொடங்கும். 
*

(முதல் இடுகை கணையாழியில், பின்பு - 13-2-2011)

1 comment:

  1. யதார்த்தமான விவரணங்கள்

    ReplyDelete