டெர்ரர் கௌரிபதி என்றால் எல்லாருக்கும் ஒரு சிரிப்புதான்.
ரசக்கிரண்டியைத் தொங்கப் போட்டு அதின் நடுவில் தட்டினால் வரும் ஓசையைப் போன்று குரலில், சமயத்தில் கோபத்தில்,
‘எனக்கும் டெர்ரர் ஆக இருப்பது எப்படீன்னு தெரியும். ஆமான்னேன். இல்லை என்ன நினைச்சிண்ட்ருக்கா? கிள்ளுக் கீரையா?’
இப்படி
அடிக்கடி இரைந்து அவர் கத்தும் போது அழுத பிள்ளையும் சிரிக்கும் என்பதால்
அவருக்கு டெர்ரர் என்ற முன்னொட்டு வழக்கமாகிவிட்டது.
டெர்ரர்
வருது பார் என்று சொன்னால் புதிதான ஆட்கள் கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டுப்
பின்னர் நிம்மதி அடைந்து சிரிப்பது அவருக்கு இயல்பாக அமையும் வரவேற்பாக
அமைந்து விட்டு அவரை எங்கும் பிரபலப் படுத்திக்கொண்டிருந்தது.
அவருடைய
பிரபலம் அவருக்குச் சமயத்தில் கொஞ்சம் இடைஞ்சலாக ஆனதும் உண்டு. தன் டெர்ரர்
அடைமொழிக்குத் தனக்கு உவந்தால் போல் ஏதாவது கதை சொல்லலாம் என்று
ஆரம்பித்தால். எங்கோ பார்டரில், மிலிடரியில் ஏதோ ஒரு சமயம் தான் மிகக்
குறுகிய காலமே இருக்க நேர்ந்த பொழுதில் இந்தப் பெயருக்கான ஆரம்பம் என்று
அவர் கஷ்டப்பட்டு பில்டப் கொடுத்தால், யாராவது தெரிந்தவர்கள் அங்கு வந்து
தொலைத்து, ‘அப்பொழுது மேடம் அங்க இருந்தாங்களா?’ என்று கேட்டுத்
தொலைத்தால், எவ்வளவு எரிச்சல்!
‘அவ கிடக்கா! நான் இல்லை என்றால் அவ பாடு திண்டாட்டம்தான்.’
கண்களுக்கு விவஸ்தை கிடையாது. அவள் அங்கு பக்கத்தில் எங்கேனும் தென்படவில்லையே என்று நோட்டம் விட்டுக் கொள்ளும். பாவம்
இவரைத் தொந்தரவு செய்யாதவர்களில் ஒருவனாக என்னை நான் வைத்துக்கொண்டது
எதேச்சையாகத்தான். ஏதோ பிரின்ஸிபிள் அது இது என்றெல்லாம் கிடையாது. நம்ம
நிலைமையே இவரைவிட மோசம் என்றால் வேறொரு விதத்தில், நாம் ஏன் இவர்
வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டும். விளைவு,
மங்குவய்யர் காபி பேலஸில், இவருக்கு எதிரில், அல்லது எனக்கு எதிரில் இவர்
என்றுதான் அமரும்படி ஆகும். அலுத்துப் போனவனின் அமைதியும், ஆற்றாமை
மிகுந்தவனின் புலம்பலும் ஒன்றுக்கொன்று அட்ஜஸ்ட் ஆகிக்கொள்ளும்.
ஏன் அகமுடையாளை இப்படித் திட்டுகிறீர்? பாவம் ஐயா! என்று நான் சொன்னது தப்பாகப் போய்விட்டது.
தினம் வீட்டுப் புராணம். அவ இப்படி ஹிம்சை பண்றா; இப்படி செய்யறா. மனுசனாகவே மதிக்கறதில்ல. அவமரியாதை பண்றா.
பயங்கர திமிர் சார்! தலை வெட்டி நிக்கறா! ஆமாம்.
என்ன சார் ஆம்பளைன்னா அவ்வள்வு கேவலமா இவளுக்கு?
ஒரு
புழு பூச்சியைக் கூட கொஞ்சம் பயமா பாப்போம் சார். ஏதாவது கடிச்சி வைக்கப்
போறதேன்னு. ஆம்படையான்ன்னா என்ன அலட்சியம் சார் இவளுக்கு.?
சரி கௌரி சார்! நீங்க ஓபனா சொல்லிட வேண்டியதுதானே! என்னை இன்சல்ட் பண்றது பிடிக்கலைம்மா என்று.
நான் டெர்ரர் என்ற ஒட்டைப் பயன்படுத்துவதில்லை. பாவம் வீட்டில் டெர்ரராகி அல்லல் படும் மனுஷனை டெர்ரர் என்று கூப்பிடுவது மிகவும் கெட்ட சாடிஸம் என்று அருவருப்பு. கொஞ்சம் உளவியல், பாலியல் மனோதத்துவம், என்று ஏகப்பட்ட குப்பைகளை மனத்தில் ஏற்றியதன் விளைவு,
‘ஏன் சார். உங்களுக்குள் உறவு நல்லபடியாகத்தானே இருக்கிறது. அதில் ஒன்றும் மனத்தாங்கல் இல்லையே.’
அதை
ஏன் சார் கேட்கறீங்க? உங்களை என் சொந்த தம்பி மாதிரி நினைச்சு சொல்றேன்.
அவளுக்குன்னு வேணும்னா ஆர்டர் போடவேண்டியது. நான் சிப்பந்தி மாதிரி
ஓடவேண்டியது. அவளுக்கு மூட் இல்லையா? அவ்வளவுதான் நான் பேச்சே எடுக்கக்
கூடாது. என்னது சார் இது? எனக்குன்னு மனசு இல்லையா? நான் என்ன படுக்கை
சிப்பந்தி அவ்வளவுதானா?
அப்படி
இல்லை கௌரி சார்! நீங்கதான் பொறுமையா, அவங்க மனம் இனிக்க நடந்துகொண்டு,
மகிழ்ச்சிப் படுத்தி, இதமாகக் கொண்டு போகணும். ஆண்பிள்ளை என்று நாம் பெருமை
அடித்துக்கொள்கிறோமே அன்றி மணவாழ்க்கையின் படுக்கைக் கடமையில் பெரும்
பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது என்பதை மட்டும் நினைத்துப் பார்க்க
மறந்துவிடுகிறோம்.
நீங்க
என்ன சொல்றீங்க? நான் அவள் மனத்தை இனிமைப்படுத்தி
நடந்துகொள்ளவில்லையா?.....இல்லை சார்...அதெல்லாம் சரிப்படாது...என்ன சார்
ராட்சசியா இருக்கா? கனிவா போய்ப் பேசினாலே எரிஞ்சு விழறா. இல்லைனா பயங்கர
நக்கல் அடிக்க வேண்டியது. அன்னிக்கி அப்படித்தான், அவ ஏதோ மறந்துட்டுப்
போறாளேன்னு, பதைபதைக்க, ஓடிக் கூப்பிட்டுச் சொல்றேன்....எங்கயோ கதவை
நகர்த்தி கதவிடுக்குல பார்க்கறா சார்! என்னன்னு கேட்டா எலி ஏதாவது
மாட்டிண்ட்ருத்தோன்னு பார்த்தேன்ங்கறா......என் குரலை அவ்வளவு
கிண்டல்...அப்பயும்...
ஏதோ
என் கற்பனை....ஓட்டத்தில் அழுந்தி....கதவிடுக்கில் கௌரி சார்
மாட்டிக்கொண்டு, அவர் மனைவி அழுத்தி அழுத்தி அவரைக் கத்தவிட்டு வேடிக்கை
பார்க்கும் காட்சி. முகேஷ், அவருடன் பால்ய சிநேகிதன், அப்பொழுது எங்கு அங்கு வந்தானோ.....காதில் வாங்கிக் கொண்டிருந்தான் போல.
‘டெர்ரரு! இப்பிடீ பேசிக்கினே இருந்தேன்னு
வச்சுக்க. அங்க பாட்டுக்கு எவங்கூடயாவது பழக்கம், காதல் அது இதுன்னு
ஆகிப்போயி அப்பறம் மங்கு ஐயர் ஹோட்டலே கதின்னு ஆகிடும் பொழைப்பு.
பாத்துக்க...’
என்று
சொன்னவன் முடிப்பதற்குள் கௌரி சார் அவனை அடிக்கப் போய்விட்டார். ‘ராஸ்கல்!
யாரை என்ன சொல்ரதுன்னு விவஸ்தை கிடையாது! நாயே! கொன்னுபுடுவேன் கொன்னு.
இந்தப் பக்கம் வந்தே உன்னைக் கொன்னுட்டு ஜயில்லுக்குப் போனாலும் போவேன்
ஆமா’
முகேஷுக்கு
அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை போலும். அவன் பாட்டுக்கு ’சரி சரி உடனே
பெரிசா கூவாத! உன் நல்லத்துக்குத்தான் சொன்னேன். பொண்டாட்டிய அடக்கி
ஆளணும். அப்பத்தான் அவகளே நம்மை விரும்புவாளுக. புரிஞ்சு நடந்துக்க’ என்று
சொல்லிப் போய்க்கொண்டே இருந்தான்.
கதவிடுக்கு
எலி, புலியாகத் தாற்காலிகமாக மாறியதை அவன் முகத்தில் வடிந்துகொண்டிருந்த
கோபங்கள் எதிரில் அமர்ந்த எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தன.
இல்லை சார்! என்ன பேசிட்டுப்
போறான் பாருங்க சார்! அவ ராட்சசிதான். நான் இல்லைங்கலை. ஆனா நெருப்பு சார்
நெருப்பு. ஒரு பய அவளைத் தவறான கண்ணோட்டத்துல பார்க்க முடியாது, நெருங்க
முடியாது. மவனே அப்பறம் அவன் ஜன்மத்துக்கும் செத்தான். என்னை
அலட்சியப்படுத்தறா. அது வேற. ஆனா கற்புல சொக்கத் தங்கம் சார். என்னிக்கும்
நான் அந்த விஷ்யத்துல மட்டும் எவ்வளவு கோபம்னாலும் , மனசுக்குள்ள எவ்வளவு
திட்டினாலும், அந்த விஷயத்துல மறந்துபோய் கூட சொல்ல மாட்டேனே. அது
போலத்தான் நானும். இன்னொரு பெண்ணைத் தவறான நோக்குல பார்க்கவே மாட்டேன்
சார். எதுக்கு? வீட்டுல நமக்குனு ஒருத்தி இருக்கா இல்ல. அப்பறம் மத்த
பெண்களை ஏன் பார்க்கணும்? என்ன சார் நான் சொல்ரது?
என்
மனக்கண்ணில் எலிக்குள் இருந்து அழகான பறவைகள் வெளியில் வந்து பறந்த
வண்ணமாய் இருந்தன. மனிதம் சிக்கலும், ஆழமும், அழகும் மிக்கது. பாவம்
கொஞ்சம் மதிப்பு, அனுசரணை, கனிவு இது மட்டும் இருந்தால் கௌரி
சொர்க்கவாசிதான்.
பல
நாள் ஆயிற்று மங்கு ஐயர் கடை காபியைக் குடித்து. வழக்கமான என் டேபிள்.
எதிரில் காலி. மனம் அங்கு கௌரி சாரைக் கொண்டுவைத்துப் பார்த்தது.
‘என்ன சார்! அன்னிக்கு அப்படி
எகிறினானே டெர்ரர்? அவன் மனைவி அன்னிக்குப் பாருங்க அந்த ஷோக்கு
வின்ஸெண்டோட பைக்குல போறாங்க. என்ன அநியோன்யம்! சிரிப்பு, கொஞ்சல்.
அதெல்லாம் அந்த அம்மாவைத் தப்பு சொல்ல முடியாது சார். அது என்ன பண்ணும்?
இவன் எடுபிடியா இருந்தா போதும்னு நினைக்கிறான். டாமினேட் பண்ணணும் சார்.
அடக்கி ஆண்டாத்தான் பெண்களுக்கு ஆண்களைப் பிடிக்கும். நீங்க சாஃப்டா
இருந்தீங்கன்னு வச்சுக்குங்க, அவங்களுக்கு மேட்ச் ஆகாதுல்ல. மனசு தான சார்.
கொம்புலதான் கொடி படரும். கொம்பும் தானும் கொடி மாதிரி ஆகி படருகிறேன்ன்னு
ஆரம்பிச்சா கொடி என்ன பண்ணும்?’ -- முகேஷ் எதிர் சீட்டில்.
உங்களுக்கு
என்னத்துக்கு சார் ஊர்ல இருக்கறவனோட வீட்டைப் பற்றியெல்லாம் அக்கப்போர்?
அதெல்லாம் எதுவும் தெரியாம சட்டுனு பேசிடக் கூடாது.
சார்! எனக்கு அக்கப்போரா? நீங்க
ஒண்ணு. நான் அவனோட வெல்விஷ்ர் சார். பாவம் அப்பாவி. வாழ்க்கையைத் தொலைக்கப்
போறானேன்னு சொல்றேன். அவனுக்கு ஏதாவது பண முடைன்னா எங்கிட்ட தான் சார்
வருவான். மற்றவங்களைப் பற்றி எனக்கு என்ன கவலை? அந்த ஷோக்கு
நாயைப்பற்றியும் எனக்கு நன்னா தெரியும். ஆனா ஜகஜ்ஜாலக் கில்லாடி. அது
உண்மை. எது வேணுமின்னாலும் அவ்னால ஆகாதது கிடையாது. பாடினான்னா ஜேஸுதாஸ்
தோத்துடும். அப்படி இருக்கும் குரல். ஆனா என்ன பயங்கர ஜொள்ளு. பாருங்க
கொஞ்ச நாள்ல கௌரியே அழுதுகிட்டு இங்க வரப்போறான் பாருங்க. அப்ப தெரியும்
நான் சொல்ற சீரியஸு.
சரி
மனிதர்களை எடை போடுவது எளிதன்று. சில நாள் கழிந்தது. பல வேலை. மாலைப்
பொழுதில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிவிட்டு வரலாமேயென்று போனேன். காபி கடை.
வழக்கமான என் டேபிள். அதிசயம்.
கௌரி சார் அமர்ந்திருந்தார். ஆளே பெரிய மாற்றம். முகத்தில் ஒரு புதுத்
தெம்பு. கெட்டப்பே முழுக்க மாற்றம். எனக்கு சந்தேகம். டெர்ரர் சார்தானா?
வாங்க சார்! உங்களை இன்னிக்குப் பார்ப்பேன்ன்னு என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அதுக்குத்தான் வெயிட் பண்ணின்ட்ருக்கேன்.
கௌரி சார் தானே?
ஆமாம் அசல் டெர்ரர் தான்.
இருவரும் சிரித்தோம்.
தேவலை நல்ல மாற்றம் காண்கிறேன். மகிழ்ச்சி.
எல்லாம்
உங்க வாய் முகூர்த்தம்தான். என் ப்ரைவேட் வாழ்க்கை நல்லபடியா ஆகணும்னு
நினைச்ச ஒரே மனுஷன் நீங்கதான் சார். உங்க கிட்ட சொல்லணும்னுதான் வெயிட்
பண்றேன் இவ்வளவு நாழி.
ஓ வொண்டர்ஃபுல்! சொல்லுங்க.
அன்னிக்கு
ஒரு நாள் திடீர்னு என் மனைவி என்ன தோணித்தோ தெரியல்ல. என் கையைப்
பிடிச்சுண்டு அழ ஆரம்பிச்சுட்டா. ஏம்மான்னு கேட்டா, ‘என்னை விட்டுப்
போய்டாதீங்க. நான் உங்களை ரொம்ப ஊண்ட் பண்ணியிருக்கேன். ரொம்ப தவறு.
மன்னிச்சுக்குங்க. என்னை வெறுக்காதீங்க ப்ளீஸ் -- அப்படீன்னு ஒரே அழுகை.
என்னமா ஏதாவது உடல்நலம் சரியில்லையா? அப்படீன்னா அதெல்லாம் ஒண்ணும் இல்லை;
நீங்க கல்மஷம் இல்லாத குழந்தை. நான் தான் மோசமானவள். அப்படீ இப்படீன்னு
ஏதேதோ அழறா. ச....என்ன அன்பான ஜீவன் சார் அவ. அவளைப் போயி நான் என்ன
எல்லாம் திட்டியிருப்பேன். என்ன பெரிசா என்னை அலட்சியப் படுத்தினான்னு
கோபம். என்ன சார் நாம அலட்சியப் படுத்தாததை இப்ப அவ எனக்குப் பண்ணிட்டா?
காலம் காலமா நாம பண்ணதை அவங்க சகிச்சாங்களே, என்னைப் பண்ணான்ன உடனே எவ்வளவு
ஆத்திரம் சார்! நான்லாம் மனுஷனா சார்?...
விட்டால்
போய்க்கொண்டே இருப்பார் போல்தான் தோன்றியது. எனக்கும் அந்தச் சந்தோஷக்
கதையைக் கேட்க ஆசைதான். ஆனால் முகேஷ் வந்து ஏதாவது ஏடாகூடமாக உளறினால்
பாவம் நல்ல மனுஷன் இப்பொழுதுதான் நல்ல உற்சாகமான மாற்றத்தைப்
பெற்றிருக்கிறான்.
சரிங்க
சார். அப்ப இங்க அடிக்கடி உங்களைப் பார்க்க முடியாது. வீடே சொர்க்கம்.
என்ஜாய்! கிளம்புங்க. உங்கள் கடமை இனி உங்கள் மனைவியுடன் ப்ழகுவதில்தான்.
ஊரில் யார் என்ன சொன்னாலும் காதிலேயே போட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள்
ஆத்மாவுக்கு உங்க மனைவி சாட்சி. உங்கள் மனைவியின் ஆத்மாவுக்கு நீங்களே
சாட்சி.
கரெக்டா
சொன்னீங்க சார். ஒரு நாளைக்கு வீட்டுக்குச் சாப்பிட வாங்க. ந்ம்ம நல்லதை
விரும்புபவரை நாம் நன்றியுடன் போற்ற வேண்டும். என் வெல் விஷர் நீங்க
ஒருத்தர்தான்.
ஆம்
அதனால்தான் சொல்கிறேன். சீக்கிரம் கிளம்புங்க. அப்புறம் ஒரு நாள்
வருகிறேன். வாழ்க்கை முழுதும் இனி உங்களுக்கு இனிமையாகவே கழியட்டும்.
எழுந்து கொள்ளும் போதே ஒரு துள்ளல். கல்லாவில் போய் நின்று, ‘சார்! உங்களுக்கும் சேர்த்து பே பண்ணிட்டேன். தாங்க்யூ!’
மனித வாழ்க்கை மிகவும் சிக்கலானதும், ஆழமானதும், அழகானதும் ஆகும்.
***
No comments:
Post a Comment