Friday, March 11, 2016

ஸ்ரீபகவந் நாம மஹிமை - (ஒரு கனவு)

யாரோ முன்பின் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் போன் செய்து, ‘ஸ்வாமி இருக்காரா?’ என்றார்.

‘சாரி. ராங் நம்பர். அப்படியெல்லாம் யாரும் ஸ்வாமி இங்க இல்லையே’ என்றேன்.

விளக்கமாக ஒரு முறை நம்பரைச் சொன்னார். ’ஆமாம். நம்பர் சரி. ஆனால் ஸ்வாமி யாரும் இங்க கிடையாது.’

அப்புறம் என் பேரைச் சொல்லி இருக்காரா என்றார். ‘நான் தான் பேசுகிறேன்’ என்றேன்.

‘என்ன ஸ்வாமி! கேட்டா யாரும் இல்லைன்னுட்டீர்’

‘அ..ம்..இல்ல நான் ஸ்வாமி இல்லை. வெறும் ஆள்தான் அதான்... எனக்கும்.. புரியல்ல’

‘உம்ம புத்தகம் ஸஹஸ்ரநாமம் பார்த்தேன். படிச்சப்பறம் எனக்கும் சொல்லணும்னு ஆசை ஏற்பட்டுடுத்து. ஆரம்பிச்சுட்டேன். பிரமாதம்’

‘அப்படியா? உங்களை இங்க இருந்தே நமஸ்காரம் பண்ணிக்கிறேன். அப்படியே உங்க பங்குக்கு இன்னும் பலபேரைச் சொல்ல வைச்சுருங்கோ’

அப்பறம் சிலது புகழ்ச்சி சொன்னார். அது போகட்டும். ஆனால் என்னமோ அசதி. அப்படியே உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டேன். நல்ல கனவு. இன்னொரு விதத்தில கொஞ்சம் திகில் கனவு.

ஸ்ரீவைகுண்டம். ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் ரிஷிகள் எல்லாம் ஒரே கம்ப்ளெயிண்ட்.

‘என்னது இது! கிருத யுகத்துல எங்களைப் பெரும் ரிஷிகளாகப் படைத்துவிட்டு, பெரிய பெரிய ஞான சக்தி, கிரியா சக்தி, தபோ பலம் எல்லாம் தந்துட்டு, எங்களை எவ்வளவோ உயர்த்தறா மாதிரி உயர்த்திவிட்டு, கடைசியில கலியுகத்துல பிறந்தவாளுக்குத்தான் மிகப்பெரிய சலுகை என்று பண்ணி விட்டீரே! இது நியாயமா? அப்ப நாங்கள் எல்லாம் இப்படி நெடுங்காலம் தவம் சாதனம் என்று மூச்சடக்கி பேச்சடக்கி கடுமையாக முனைந்து இன்னும் முயன்று கொண்டிருக்கிறோம். அங்க என்னடான்னா கலியுகத்துல அவரவர்கள் ஒரு தூய்மை இல்லை, சுத்தி இல்லை, நல்லது கெட்டது இல்லை, புண்ணியம் என்பது கிஞ்சித்தும் இல்லை. பாபமோ மலைமலையாகப் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால்...’

ஸ்ரீநாரதர் குறுக்கே புகுந்து, ‘நீங்க பெரியவர்கள். அவர்களை ஆசீர்வாதம் பண்ணுங்கோ...’

‘என்ன ஆசீர்வாதம் பண்றது. நாங்க எங்க குறைகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நீர் என்ன நடுவுல...’

‘அப்படியில்ல. அவர்கள் ஏதோ அவர்களால் முடிந்தது பகவந் நாமத்தைச் சொல்லுகிறார்கள். நீங்கதான் பெரிய மனசு பண்ணி....’

‘என்ன பகவந் நாமத்தைச் சொல்றா? அதுக்குன்னு பகவானின் நாமத்தைச் சொன்னா அவர்களுடைய கர்ம வினைகள் எல்லாம் தூள் தூளா எரிஞ்சு போய், அவர்களுக்குப் பெரும் சித்த சுத்தி தானா ஏற்பட்டு, அவர்களுக்கு உயர்ந்த மோக்ஷமும் கிடைச்சுடுமா? என்னது இது... அப்ப நாங்க எல்லாம் எவ்வளவு காலமா கடுந்தவம் பண்ணிண்டு இருக்கோம்...’

அவர்கள் எல்லாம் சின்னவா....

‘சரி அதுதான் அப்படின்னா... யாரோ ஒரு பிள்ளையாண்டான்... அவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு? ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் பற்றி எழுதிவிட்டானாம். அதை யாரோ வாங்கிப் படிச்சாளாம். உடனே அவாளோட பாப சமூகம் எல்லாம் எரிஞ்சு சாம்பல் ஆகி, அவாளுக்கு எல்லாம் உயர்ந்த முக்தியா?’

‘யாரு...ஆசாரியர்கள் எல்லாம் ஸஹஸ்ரநாமத்துக்கு வியாக்கியானம் எழுதியிருக்கா... வேற யாரு நீங்க... ஏதோ பிள்ளையாண்டான்னு... யாருன்னு...’

நானோ சர்வ நாடிகளும் ஒடுங்கிப்போய் ‘எங்கயாவது கண்டு பிடிச்சுட்டா நம்ம கதி என்னாறதுன்னு’ அங்க நிறுத்தியிருந்த புஷ்பக விமானங்களுக்குப் பின்னாடி போய் ஒளிந்து கொண்டேன். ஆனால் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நமுட்டுச் சிரிப்போடு கலந்த பார்வை என்னைத் தேடி வந்து கண்டு பிடித்து விட்டது. ஐய்யயோ நம்மை எங்காவது காட்டிக் கொடுத்து விடுவாரோ என்று பயந்தது போல் நடக்கவில்லை. கண்டும் காணாதது போல் காட்டிக் கொள்ளாமல் இருந்தார் எம்பெருமான்.

நாரதருக்குத்தான் கவலை ஓவர் டைம் வேலை செய்து கொண்டிருந்தது. சரி யாரோ ஒருவன் என்று விட வேண்டியதுதானே! அது யார் தமக்குத் தெரியாமல் என்று நோண்ட வேண்டியது.... சரி ஏதோ ஒரு அசத்து... துணிஞ்சு எழுதி விட்டது. இப்ப என்ன அதுக்கு இப்போ... வீணையை மீட்டினோமா நாராயணா பாடினோமான்னு போகாம... என்று சாக்கிரதையாக பம்மியபடியே பின் நகர்ந்து வந்த பொழுது அங்கு ஏதோ தடுக்கிவிடவே தடால் என்று உருண்டு கீழே விழும் போது முழிப்பு தட்டியது. ச .. நல்ல தூக்கத்தில் சாய்ந்து சேரிலிருந்து கீழே விழப்போனேன் நல்ல வேளை சுதாரித்துக் கொண்டேன்.

இதுக்குத்தான் எதையாவது ஆசைப்பட்டு எழுதிவைக்கக் கூடாதுங்கறது. பாருங்கள் ஸ்ரீவைகுண்டம் வரைக்கும் போயிடிச்சு விஷயம். நல்ல வேளை அருளாளப் பெருமான். அதுனால தப்பிச்சோம். இல்லன்னா ‘தோ பாருங்க... அவன் தான் எழுதினது’ என்று கையைக் காட்டியிருந்தால்... அந்த ரிஷிகள் இருந்த கடுங்கோபத்திற்கு..... யப்பா நினைக்கவே பயமா இருக்கு.

எழுந்து உட்கார்ந்து ஸ்ரீபகவந் நாம ஜபம் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். அங்க போனால் இல்ல தெரியுது. நம்ம கலிகாலத்தின் சலுகை என்ன என்பதும், ஒரு தடவை பகவந் நாமம் சொன்னாலே என்ன விளைவு என்பதும் ! இனிமே ஒரு நிமிஷம் வேஸ்ட் ஆக்கக் கூடாது. விட்டா கலிகாலத்தின் பெரும் சிறப்பையே மாத்த வச்சுருவாங்க போல இருக்கெப்பா... என்ன பண்றது ரிஷிகளுக்கு அவங்க வருத்தம்..... எப்படியோ போகட்டும். அந்தப் புத்தகத்தை நாமதான் எழுதினதுன்னு... நல்ல வேளை..... நாம எங்க எழுதினோம்? நாமா எழுதினோம்... எல்லாம் அவனுடைய கிருபை. அவன் எழுத வைத்தது... ஆ ஆ அப்படிச் சொல்லிட வேண்டியதுதான் கேட்டா.’

***

2 comments:

  1. நல்ல கனவு! சீக்கிரமே பலிக்கட்டும்! :-)))))

    ReplyDelete
  2. //எல்லாம் அவனுடைய கிருபை. அவன் எழுத வைத்தது... ஆ ஆ அப்படிச் சொல்லிட வேண்டியதுதான் கேட்டா.’
    ///>>>>>இதனால் தானே உங்களுக்கும் அன்னையும் அரங்கனும் அறிவை வாரிவாரி வழங்குகிறார்கள்! வாசிக்க நாங்களூம் கொடுத்துவைத்திருக்கிறோம்!!!

    ReplyDelete