Tuesday, March 1, 2016

சப்த வசுக்கள் (சிறுகதை)

மொத மொதல்ல ஒரு தலைச்சன் பொறந்துது. எண்ணி ஏழே நாள்தான் இருந்துது. ...ப்ச்...அப்பறம்...பாவம்... இந்த வார்த்தையில் பழகித்தான் வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் போயிருக்கின்றன அவனுக்குதங்களுக்கெல்லாம் முந்தி வந்து மூவிரு நாள் இருந்து சென்று விட்ட அந்த ஜீவன் இன்று எங்கு இருக்கும்ஒரு வேளை தங்களிலேயே யாராகவேனும் கூடப் பிறந்திருக்குமோ? ஒரு தடவை எல்லாரையும் கூர்ந்து கவனித்தான். தன்னையும் எதேச்சையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். ஏதோ அப்படி இருந்தாலும்இதோஎன்று தெரிந்துவிட சாத்தியம் ஏதோ அங்கு இருக்கும் பாவனை

இருப்பாரைக் கவனி. இல்லாதாரைப் பற்றி என்ன யோசனைஅவன் குடும்பத்திலேயே பலமுறை அவனுக்கு சொல்லப் பட்டதுண்டு. ஆனாலும் அந்த தலைச்சன்சிறு வயதில் பாச்சுவாத்தில் அவனுக்குத் தங்கை பிறந்திருக்கிறது என்று செய்தி. பாச்சு ஏதோ முக்கியத் தகவல் இவனுக்கு மட்டும் முதல் தகவல் கொடுக்கும் வேகத்தில் வந்து சொல்லிய பின் மூன்று நாள் கழித்து அவர்கள் வீட்டில் ஏதோ தூளி போல் கட்டிப் புறப்பட்டார்கள்

இவனும் பாச்சுவோடு சேர்ந்து துக்கம் காத்திருக்கிறான்ஒரு தடவை, இரண்டு தடவை பொறுத்துப் பார்த்தாள் அம்மாஎன்னடா இது சும்மா அதைப் பத்தியே பேசிண்டு? வேலையைக் கவனி. அவாளெல்லாம் பெருமாள்ட சௌக்கியமா போய்ச் சேர்ந்திருப்பாஇருக்கறவாதான் ஐயோ பாவம். போனவா புண்ணியம் செஞ்சவா. அதுவும் பொறந்து கண்ணு முழிக்காம போயிட்றது எல்லாம் கொடுத்துவச்சதுகள். என்னமோ அதையே பெனாத்திண்ட்ருக்க? படிக்கற வேலையைப் பாரு.’ அவன் பேசுவதைக் கேட்க அப்பாவுக்குப் பிடிக்கும். சந்திர கதி சூர்ய கதி என்று ஒருவாறு அதன் பயணகதியை ஃபிக்ஸ் பண்ண முயல்வார்அதற்குள் அம்மா, ‘போய் கறிகா இல்லை. வாங்கிண்டு வாங்கோஎன்று துரத்திவிடுவாள்ஆனாலும் அந்தத் தலைச்சன் அங்கு எங்கோதான் சுற்றிக் கொண்டு இருக்கும்

மாலை நேரம். வெளியில் விளையாடி விட்டு வந்து கைகால் அலம்பிக்கொண்டு வீட்டுப் பாடம் படிக்க உட்காரும் வேளையில் அம்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வு. பழைய நினைவுகள் ஏதேனும் எழுந்துகொள்ளும். அந்த நினைவுகளைக் கொஞ்சம் எடுத்துத் தூசி தட்டி வைக்கும் போது அங்கு எங்கோ இடுக்கில் இந்தத் தலைச்சன் உட்கார்ந்திருக்கும். கொஞ்ச நேரம் அதை லாலனை பண்ணுவாள்அவன் பாடத்தை நிறுத்திவிட்டு உற்றுக் கேட்கிறான் என்றதும் பேச்சை மாற்றி விடுவாள்

எதிர்த்த வீடு. அவர்களாத்து டேச்சு கதை கதையாய்ச் சொல்வான். எந்த மரித்த ஜீவன் தங்காத்தில் பின் எந்த ஜீவனாக வந்து பிறந்தது என்று துல்லியமான விவரம் காட்ட அவனால் முடியும். தயவு அவன் கிராமத்துத் தாத்தா ஒருவர்ஏன் ஒரு ஜன்மத்தில் எங்கோ பொறையில் ஒளித்து வைத்துப் போன காதுக் கம்மலை அடுத்த பேத்தியாகப் பிறந்து நினைவாக இங்க இருக்குன்னு எடுத்துத் தந்ததாக டேச்சு சொல்வதைக் கேட்டால்தான் நம்பமுடியும்இருந்தாலும் அவர்கள் வீட்டில் மூன்றாவது குழந்தை, நாலு வயசு, அழகான பெண் குழந்தை, அதன் சிரிப்பு என்பது சர்வ ஆகர்ஷணம். காரணம் என்ன என்று தெரியவில்லை. இப்படித்தான் கேள்விக்குறியாகிப் போனது. நேர்த்திக்கடன் பாக்கி. அதுக்குத்தான் வசூல் என்று அப்பொழுதும் டேச்சு ஃபைலைக் க்ளோஸ் பண்ணிவிட்டான்

ஒரு நாள் டேச்சு, இவன், கண்ணாமணி, விச்சு எல்லாரும் சேர்ந்து இரவு 8 மணி வரையில் துளசிங்கத்தாத்துத் திண்ணையில் இருட்டுப் புறை ஒட்டுத் திண்ணையில் சீரியஸான டிஸ்கஷன். ஆவி இருக்கா இல்லையாவழக்கம் போல் டேச்சுதான் ஆவிக்குக் குலம் கோத்திரம், சயனம் சஞ்சாரம் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டான்ஒரு நாள் காலை 2 மணிக்குத் தெரு வழியாகவே ஓர் ஆவி போனதையும், அது இவன் முழித்திருக்கிறான் என்று உணர்ந்து இவாத்துக் குறட்டை உற்றுப் பார்த்து முழித்ததாகவும், உடனே டேச்சு சம்யோசிதமாகக் குறட்டை விடும் சப்தத்தை அபிநயிக்கவே அது சரிதான் என்று சாந்தமாகி டேச்சுவாத்து லைட் கம்பம் வழியாகப் பிடித்துக் கொள்ளாமலேயே ஏறி மாடிப் பக்கம் எங்கோ போய் விட்டதாகவும் கூறினான்

இவன் வுட்டா ரீலு உடுவாண்டா இவன்என்று கண்ணாமணி கடுப்பாகிக் கத்தியதற்கு டேச்சு முனீஸ்வரன் மேலயே சத்யம் செய்துவிட்டான். அதற்கப்புறம்தான் ஆவி என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது இவனுக்கு

விச்சுவுக்கு ஏன் திடீரென்று தோன்றியதோ, கட்டைக் குரலில், ‘ஏய்! நாம சுடுகாட்டில சத்தம் போடாம ஒரு மந்திரம் சொல்றேன் அதைச் சொல்லிண்டே போய் நின்னா நிச்சயம் இதெல்லாம் அங்கதாண்டா வரும். அப்ப பார்த்துடலாம். ஆனா இந்த டேச்சுவைக் கூட்டிக்கிட்டுப் போகக் கூடாதுடா. சமயம் பார்த்து டமார்க் குசுவை விட்டான்னா அவ்வளவுதான் அதெல்லாம் கடுப்பாயிடும். துரத்த ஆரம்பிச்சுடும் அப்பறம்.’ 

டேச்சு உத்தரவாதம் தந்ததன் பேரில் உளவுப்படை மறுநாளே புறப்பட்டுப் போய்ப் பதுங்கிப் பதுங்கிச் சுடுகாட்டை அடைந்ததுகொஞ்சம் முன்னாடியே வந்து விட்டதாக அலுத்துக்கொண்டான் டேச்சு. இரவு 11.45 மணி இருக்கும்இவனுக்கு அந்தத் தலைச்சன் அங்குதான் எங்காவது தென்படும் என்ற நிச்சயம் அதிகப்பட்டது

டேச்சுவுக்கு முழிகள் முகத்தைவிட்டுத் தனியே வந்துவிட்டன என்பது போலத்தான்
உளவுத்துறைக்கு வெளிப்படையாகவே உதறல். எல்லாம் டேச்சுவால் என்று பொதுப் பழி

நான் என்னடா பண்ணட்டும். விச்சுதாண்டா சொன்னான்என்று தொண்டையோடு தொண்டையாக ரகசியமாக அரைத்தான். ஆவிகளின் காதில் விழுந்திருக்காது1.30, 2 மணி இருக்கும் மண்டபத்தை ஒட்டிய இருட்டுத் திட்டு திடீரென எழுந்துகொண்டது. எவ்வளவு கைகள் என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அப்படியும் இப்படியும் நகர்வுஐய்யயோ இந்தக் கூட்டம் இருப்பது பார்த்துவிட்டதா? இந்தப் பக்கம் நோக்கியே வருகிறதுகண்ணாமணிக்கு அடக்க முடியவில்லை. வாய் தந்தி. முதலில் வாங்கடா என்று ஓட ஆரம்பித்தவன். கூட்டமே அவன் பின்னால் மந்திரித்து விட்டால் போல்

ஏய் இங்க என்னடா இம்மா நேரத்துல பண்றீகளூ?’ என்று அது கேட்கிறது. இவனுக்கு அந்தக் குரல் ஆரடிக் குரல் போல் இருக்கிறது. ‘ஆரடி?’ ஆரடி?’ என்று ஒரு பைத்தியம். பாவம் வாழ்ந்து பின் கெட்டு, துரத்தப்பட்டு, ஜீவனம் பிடுங்கப்பட்டு, நிம்மதியாகத் தூங்கச் சுடுகாடு புகலிடம்
ஒரு வேளை இதனிடமே கேட்கலாமோ அந்தத் தலைச்சன் பற்றி. ஏய் சீக்கிரம் வாடா..... 

மற்ற எல்லாரும் பக்குவமாகப் போய் செட்டில் ஆகிவிட்டார்கள். இவன் தான் கொஞ்சம் கவனப் பிசகில் சத்தம் வர, ஏய் யாரது? என்பதைத் தொடர்ந்து லைட்டுகள் போடப்பட்டு, இவன் என்னமோ நிதானமாக விளக்குபவன் போல்நான் தான் கதவைத் திறந்துண்டு வந்தேன்என்று சொல்ல, பிறகு பெரிய இன்வெஸ்டிகேஷன், எதிர்வீட்டு மாமா, வீட்டில் உள்ளவர்கள், வாசலில் ஒண்ணுக்குப் பெய்ய வந்த கிழவர் -- ஐம்பேர் ஆயம், எண்மர் குழுவாக ஆகி, தெருச் சட்ட சபை ஆக இருந்தது. நல்ல வேளை. யாருடைய குரலோஎல்லாம் நாளை காலையில் பார்த்துக் கொள்ளலாம்என்ற தீர்ப்பில் கலைந்து போனது

மறுநாள் இவனின் தகப்பனாரும், தாயும் துயரக் காட்சியாய் அழாக் குறையாகக் கேட்டார்கள். டேச்சு, கண்ணாமணி இன்னும் மற்றவர்களின் வீட்டுப் பெரியவர்களும் இவன் வீடு தேடி வந்துவிட்டனர். ‘இந்தப் பசங்க போக்கே ஒன்னும் சரியில்லை’ 

என்ன சார்! ராத்திரி எழுந்து சுடுகாட்டுக்குப் போயிருக்கானுக

என்னடா என்ன குறை வைச்சோம் உங்களுக்கு 

வந்து பொறந்துருக்கு பார் போன ஜன்ம கர்மம்

ஏண்டா நீயாவது இவாளுக்குச் சொல்லக் கூடாதோ? நீயும் சேர்ந்து போனியா

என்ன அம்மக்கள்ளனாட்டம் உம்முனு இருக்காத. சொல்லு

இல்ல அந்தத் தலைச்சன் அங்க இருக்குமான்னு பார்க்கப் போனேன்

அதான் அதான் இவனுக்கு அதே பல்லவிதான். என்ன கர்மாந்திரமோ.....பெத்தவ நானே மறந்துட்டு ஒக்காந்திருக்கேன்உனக்கு என்னடா வழுச நாயி...தலைச்சன்.....மண்ணாங்கட்டின்னு. எங்க பாவத்தைக் கொட்டிக்கறதுக்குன்னே வந்து தொலைச்சிருக்கியா

அது பாருங்கோ....சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்துருக்கா,,,பசங்க...ஏதாவது சாங்கியம் பண்ணிட்ங்கோ...ஏன் சொல்றேன்னா..... 

ஓய் சும்மா இதான் சாக்குன்னு ஏதாவது கதை பண்ணாதீர் சாங்கியம் அது இதுன்னு...வேலையைப் பாரும்.... நீர் ராத்திரி ஆச்சுன்னா அப்பப்ப அங்க சுடுகாட்டுப் பக்கம் தானே ரகசியமாப் போயிட்டு வரீர். உமக்கு என்ன சாங்கியம் பண்ரது?..... 

சு ...சு சூ ....பேசாம....எதாவது கிண்டியாய நமன்னு சொல்லிவுட்றீரே..... 

எந்தச் சம்பவமும் போன்றே சுடுகாட்டுச் சம்பவமும் சூடு தணிந்து அன்றைய பொழுது மாறி மாறிப் போய்க் கொண்டிருந்ததுமாலையில் தெருமுக்கில் கதாகாலட்சேபம் ஆரம்பம். இவனையும் கூட்டிக் கொண்டு இவன் தந்தை அங்கு போகும் சமயத்தில் சந்தனு கங்கை கெட்டம். அஷ்ட வசுக்கள். சாபத்தால் பிறந்து, உடனே அவளால் கொல்லப் பட்டு, எட்டாவது மிஞ்சியது

மிஞ்சின வசு பீஷ்மர்......... 

இவனுக்கு மீண்டும் தலைச்சன் பிரச்சனைஆம் அந்தத் தலைச்சன்கள் ஏழு பேர் என்ன ஆனார்கள்? அந்த எட்டாவது பீஷ்மனுக்கு இந்தக் கேள்வி எழுந்திருந்திருக்குமாஇப்படி அங்கங்கே பிறந்து உடனே பதிவு இல்லாமலேயே இறந்து மறையும் இந்த மாதிரியான ஸப்த வசுக்கள் என்ன ஆகின்றார்கள்தலைச்சனும் ஸப்த வசுக்களாய் ஆகியிருக்குமோ

கதையிலிருந்து திரும்பி வரும் போது ஆரடிப் பைத்தியம் கத்திக்கொண்டு இருந்தது கந்தன் கடையின் பக்கம்.... 

அந்தக் கெட்ட பசங்களோட சேராத.....’ 

*** 
(20 - 2 - 2011)

1 comment: