Saturday, April 4, 2020

ஸ்ரீஸுப்ரஹ்மண்ய ஸஹஸ்ரநாமம்

பல கடல்கள் உள்பொதிந்த பெருங்கடல். ஸமுத்ரங்கள் பல சங்கமமாகும் பெரும் ஸமுத்ரம். இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது நம் ஹிந்துமதத்தின் அருட்செல்வங்களைக் காணும் பொழுது. ஸஹஸ்ரநாமம் என்ற வகையில்தான் எவ்வளவு ஸஹஸ்ரநாமங்கள்! கந்தா கடம்பா கதிர்வேலா என்னும் ஸ்ரீஸுப்ரஹ்மண்ய ஸஹஸ்ரநாமம். ஸ்காந்த புராணத்தில் வருகிற ஸஹஸ்ரநாமத்திற்கு அரிய உரை ஒன்றும் எழுதி அளித்திருக்கிறார் திருவெண்காடு, அபிநவவ்யாஸர், வரகவி, வேதாந்த வித்வான், தைவக்ஞ பூஷணம் பண்டிட் T K ராமச்சந்திர சாஸ்திரிகள், 1962ல். கிரி பிரஸ் கைலாஸம் ஐயர் தூண்டுதலின் பேரில். ஒரு விதத்தில் இந்தத் தூண்டுதல் உபகாரம் பண்ணவர்களுக்கே தனி நன்றிக் கட்டுரை எழுத வேண்டும். உயர்ந்த விஷயங்கள், பெரும் சாதனைகள் எவ்வளவோ பார்த்தால் இந்த மாதிரி வெளியில் தெரியாமல் அதற்கு உரியவர்களை இனங்கண்டு, அவர்களை எப்படிப் பேசினால் அவர்களுக்கு உற்சாகம் ஏற்படுமோ அவ்வண்ணம் பேசி அரும்பெரும் நூல்களை எழுதிக் கொண்டுவர காரண பூதர்களாய் இருக்கும் இதுபோன்ற தூண்டுகோல் மகானுபாவர்கள் நம் வந்தனத்திற்கு உரியவர்கள்.

ஸ்கந்தன், குமரன், சுப்ரஹ்மண்யன் புகழ் புராணங்களிலும், இதிகாசங்களிலும், சாஸ்திரங்களிலும் பேசப்படுவது. சேநாபதிகளில் நான் கந்தனாய் இருக்கிறேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் ஸ்கந்தனின் புகழை எடுத்துக் கூறுகிறான். ஸ்ரீபீஷ்மரும் சேனைக்குத் தலைமை ஏற்கும்பொழுது ஐயன் குமரனை வணங்கியே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். பரம்பொருளின் வடிவமாகக் குமரனின் வழிபாட்டைத் தருகிறது கௌமாரம். பாடியதுமே நம்முள் பேராற்றல் பிறக்கச் செய்வது ஸ்ரீஅருணகிரியாரின் திருப்புகழ். தமிழில் பெரும் விரிவான தமிழ்க் கடல் காவியமாக கச்சியப்ப முனிவர் இயற்றியது கந்த புராணம். சரவணபவ குஹ சரணம் சரணம் என்றாலே ஒரு தனி ஊக்கம் பிறக்கும் மந்திரம் அழகன் குமரனின் மந்திரம். பாலன் தேவாராய முனிவர் யாத்த கந்த சஷ்டி கவசம் பாடினாலும், கேட்டாலும் பரவசமூட்டக் கூடியது.

அத்தகைய ஸுப்ரஹ்மண்யனுக்கு உரிய ஸஹஸ்ரநாமம் என்பதில் எவ்வளவு செறிவான தத்துவங்கள் அடங்கியுள்ளன.!

நாரதருக்கு உபதேசிக்கும் பிரம்மா சொல்லும் பொழுதும், ‘..ஜ்ஞானமோக்ஷ ஸுகப்ரதம் ஸஹஸ்ராணி ச நாமாநி ஷண்முகஸ்ய மஹாத்மந: யாநி நாமாநி திவ்யாநி துக்க ரோக ஹராணி ச ஜப மாத்ரேண ஸித்யந்தி மனஸா சிந்திதான்யபி’.

ஞானம் மோக்ஷம் ஸுகம் தருவது ஷண்முகனின் ஆயிரம் நாமங்கள். அந்த திவ்ய நாமங்களோ துக்கம், ரோகம் ஆகியவற்றை அழித்து, ஜபித்த மாத்திரத்திலேயே மனத்தால் சிந்தித்ததைத் தருவது - என்கிறார் நான்முகனார்.

முன்னரே நாம் பார்த்தபடி ஹிந்துமதம் தெளிவாக உரைக்கும் இவ்வுலக நன்மை, மறுமையின் செம்மை ஆகிய அப்யுதயம், நிச்ரேயஸம் ஆகிய இரண்டையும் தரக் கூடியது ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸஹஸ்ரநாமம் என்கிறார்.

இஹ அமுத்ர பரம்போகம் லபதே நாத்ர ஸம்சய:

இஹம் - இவ்வுல்க நன்மை; அமுத்ர - மறுமையின் நன்மை.

ஸ்ரீஸுப்ரஹ்மண்யனின் ஸஹஸ்ரநாமங்கள் தொடங்கும் போதே குமரனின் நினைத்தற்கரிய சக்தி விசேஷத்தைச் சொல்லியே தொடங்குகிறது. ஓம் அசிந்த்யசக்தயே நம: என்று. அசிந்த்யசக்தி உடையவர். ஆனால் குறையற்ற, குற்றம் கடியும் சக்தி. அநகர். என்றும் கலங்காதவர் எனவே அக்ஷோப்யர். எதிலும் தோல்வியடையாதவர் ஆகையால் அபராஜிதர். ஆனால் அவர் நாதியற்றவர்களுக்குத் தாயினும் சிறந்த தயாவான தத்துவன். எனவே அநாதவத்ஸலர்.

கந்தன் ஒரு மந்திரத்தை... என்று பித்துக்குளியார் பாடிய குரல் நினைவில் ஒலிக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment