Saturday, April 4, 2020

ஸ்ரீச்ருதி ஷட்லிங்க சங்கிரகம்

உபநிஷதங்களைப் படிக்கும் முறை என்பது ஆறு அம்சங்களைக் கொண்டு உபநிஷதங்களில் வரும் விசாரங்களின் தாத்பர்யம் என்ன என்று உணர வேண்டும். அந்த ஆறு அம்சங்கள், அர்த்தம் இன்னதுதான் என்று ஒருங்குணரும் விதத்தில், அவற்றுக்குப் பெயர் ஷட்வித தாத்பர்யலிங்கங்கள் என்பதாகும். தாத்பர்யவிங்கம் என்றால் இன்னதுதான் பொருள் என்று கண்டுபிடிக்க ஏதுவான அடையாளங்கள் என்று பொருள். ஷட்வித என்பது ஆறுவிதமான என்பதாகும். இவ்வாறு உபநிஷதங்களை எப்படிப் படிக்க வேண்டுமோ அத்தகைய கோட்பாடுகளின்படி முரண்பாடுகளின்றி அர்த்தம் செய்து கொண்டுதான் ஸ்ரீபிரஹ்ம ஸூத்ரம் என்னும் வேதாந்த ஸூத்ரமும் அமைந்திருக்கிறது.

இத்தகைய படிக்கும் முறைகள் அடிப்படையானவை. இவற்றை நமக்குக் கற்றுத் தரும் துறைக்குப் பெயர்தான் மீமாம்ஸை. வேள்விகளைப் பற்றிக் கற்பிக்கும் பூர்வ மீமாம்ஸையில் என்ன என்ன படிக்கும் முறைகள் கையாளப்பட்டனவோ அவைதான் உத்தர மீமாம்ஸை என்னும் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ர ஆய்விலும், உபநிஷதங்களின் அர்த்த நிர்ணயமான வேதாந்த விசாரத்திலும் கையாளப்படும். எனவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றும் படிப்புகள் உண்மையில் தம்முள் நன்கு தொடர்ச்சியும், பொருத்தமும் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தாத்பர்ய ஷட்வித லிங்கங்களைப் பயன்படுத்தி உபநிஷதங்களிலும், ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ர வியாக்கியானங்களிலும் நெடுக அர்த்தம் அறுதியிட்டாலும் தனிப்பட இவ்வாறு ஷட்வித லிங்கங்களைப் பயன்படுத்தி பத்து உபநிஷதங்களுக்கும் அர்த்தம் காணும் கிரமத்தைத் தனி நூலாகப் பெரிதும் யாரேனும் செய்து வைக்கவில்லை. இஃது வித்வான்களுக்குத் தேவையில்லை எனினும், தொடக்க நிலையில் இருக்கும் அபிமானிகளுக்கு அறிமுகப் பயிற்சிகள் என்ற விதத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனாலும் ஸ்ரீபரமானந்த ஸரஸ்வதி என்பவர் அத்வைத சித்தாந்த ரீதியாகப் பொருளுணரும் விதத்தில் பத்து உபநிஷதங்களுக்கும் இவ்வாறு ஒரு நூல் எழுதியுள்ளார். அதாவது ஷட்வித லிங்கங்களை பத்து உபநிஷதங்களுக்கும் பொருத்திக் காட்டி அனைத்து உபநிஷதங்களும் ஒருமிக்கச் சொல்ல வருவது அத்வைத சித்தாந்தபரமான நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மமே என்று பொருத்திக் காட்டுகிறார். அந்த நூலுக்குப் பெயர் ஸ்ரீசுருதி ஷட்லிங்க சங்கிரகம் என்பதாகும்.

தஞ்சைமாநகரத்தில் ஸ்ரீ வி குப்புஸ்வாமி ராஜு என்னும் பெரும் வித்வானும் ஞானியுமான ஒருவர் இருந்தார் என்பாதை முன்னரே கண்டிருக்கிறோம். அவர்தான் நிச்சலதாஸ் அவர்களுடைய நூல்களையும், உபநிஷதங்களையும், இன்னும் பல நூல்களையும் தமிழில் ஆக்கி நம் தமிழ்நாட்டிற்கு வேதாந்த வளம் பெருகக் காலம் காலமாக வழிவகுத்தோரில் ஒருவரானார். அவரே பின்னாளில் ஸ்ரீப்ரஹ்மானந்ந்த ஸ்வாமிகள் என்று சந்நியாஸ ஆச்ரமம் பூண்டார். அவர் இந்த ஸ்ரீசுருதி ஷட்லிங்க சங்கிரகம் என்னும் நூலை மூலமும் தமிழில் பதவுரையும் தந்து தமிழுரையும் பெய்து அந்நாளில் (1920) கொண்டு வந்தார். மற்ற சித்தாந்தபரமாகவும் இவ்வாறு பிரகரண கிரந்தங்கள் வந்திருக்கலாம். தமிழிலும் ஆக்கித் தந்துள்ளனரா என்று தெரியவில்லை. நம் காலத்திலும் அறிஞர்கள் இவ்வாறு அந்த அந்த சித்தாந்த ரீதியாக இங்ஙனம் ஆறு பொருள்கோள் முறைகளைப் பொருத்திக் காட்டிச் சிறுநூல் இயற்றுதல் முன்னோர் பணியைத் தொடரும் நற்செயலாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment