Sunday, April 5, 2020

இந்துமதத்தின் சிறந்த கருத்து

ஸ்ரீவைத்யநாத தீக்ஷிதர் என்பவர் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரில் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த கண்டிரமாணிக்கம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். அவர் தம் காலத்தில் வழங்கிவந்த ஆசாரம், அனுஷ்டானம், தர்மக் கோட்பாடுகள், நியதிகள் ஆகியவற்றை அவற்றுக்கான சான்று நூல் குறிப்புகளை ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒரு நிரல்படத் தொகுத்து ஆறு பகுதிகளாக ஸ்ம்ருதிமுக்தாபலம் என்னும் தலைப்பில் சம்ஸ்க்ருதத்தில் தந்தார். அதை நடுக்காவேரி ப்ரஹ்மஸ்ரீ ஸ்ரீநிவாஸ சாஸ்திரி என்பவரது தமிழ் மொழிபெயர்ப்புடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீசாஸ்திரியாரால் வெளியிடப் பட்டிருந்தது. பின்பு வேத தர்மசாஸ்திர பரிபாலன சபையாரால் இருபதாம் நூற் மத்தியில் மீண்டும் கொண்டுவரப் பட்டது. பின்னர் 2010ல் வைத்ய ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரியாரால் தொகுத்தளிக்கப் பட்டது. இந்த நூலின் சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு தலைப்பிலும் பல தர்ம சாஸ்திர நூல்கள், நிர்ணயஸிந்து, சந்திரிகா, மிதாக்ஷரீ, மாதவீயம் போன்ற விரிவான துணை நூல்கள் என்றபடி அனைத்தின் பொருத்தமான பகுதிகளையெல்லாம் ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒருங்குறத் தந்திருப்பதாகும். மிகப்பண்டைக் காலம் முதல் வழங்கிவந்த நூல்கள், பின்னர் மத்திய காலங்களில் தொகுப்புண்ட கருத்துரீதியான நூல்கள் என்று சான்று நூல்களின் கருத்துக் குறிப்புகள் அனைத்தும் ஓரிடத்தில் காணக் கிடைக்கும் அரிய நூலாகும்.

இஃது இவ்வண்ணம் இருக்க, இந்த நூலில் ஒரு முக்கியமான கருத்து கண்ணில் பட்டது. பத்ததி என்ற பழம் நூலிலிருந்து சான்றுப் பகுதியை எடுத்துத் தொகுப்பில் வழங்கியிருக்கிறார்கள். அஃது என்னவெனில் ஈசுவரனின் பல ரூபங்கள்தாம் சிவன், விஷ்ணு, இந்திரன் முதலிய பல மூர்த்திகளும் ஆவர். எனவே அவரவர் மனம் தோயும் விதத்தில் தங்களுக்கு இஷ்டமான மூர்த்தியை ஆராதிப்பதால் மற்ற ஒரு மூர்த்தியைத் தாழ்வாக நினைத்தல் கூடாது. புராணங்களில் ஒரு சில இடங்களில் ஒரு மூர்த்தியைப் புகழ்வதும், பிறிதொரு மூர்த்தியைத் தாழ்வாகச் சொல்லுவது போல் வரும் இடங்கள் உண்மையில் அந்த மூர்த்தி உபாசனையில் ஈடுபாடு கொண்டவர்களின் பக்தியை வலிமையாக்கும் பொருட்டேயாம். அதனால் அந்தப் பிறிதொரு மூர்த்தி தாழ்வு என்று சொன்னதாகக் கொள்ளக் கூடாது. இந்த முடிவு அனைத்து இதிகாசங்கள், புராணங்கள், வேதங்கள் அனைத்திற்கும் உள்கருத்தாக நிற்பதாகும் - என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பதைக் கண்டு ஒரு புறம் வியப்பு என்றாலும் மறு சமயம் இதில் வியப்பில்லை, ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி என்ற ரிக்வேத ரிஷிகளின் நிச்சயத்தைத் தானே மேலும் விவரித்துச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது ஸநாதந தர்மத்தின் மையக் கருத்தே இதுதானே என்று தோன்றுகிறது. அந்தப் பகுதி -

’ஏக ஏவ ஈச்வரோ ஜகத்ஸ்ருஷ்ட்யாதிகரணாய மாயயா ப்ரஹ்மவிஷ்ணுருத்ரேந்த்ராதி விக்ரஹாநுஸ்வீக்ருத்ய தத்தத் விக்ரஹே பக்தாந் தேந தேந ரூபேணாநுக்ருஹ்ணந் வர்ததே | அஷ்டாதச புராணாநாம் கர்த்தா வ்யாஸோபி தத்தத் விக்ரஹ பக்தாநாம் தத்ர தத்ர பக்த்யதிசயோத்பாதநாய தத்தத் ரூபம் ஸ்தௌதி | ’அயமேவ ஸர்வக்ஞ: ஸர்வேச்வர: ஸர்வாத்மா நாந்யே | அதோ அயம் ஏக ஏவ ஸேவ்ய’ இதி | ஸா து நிந்தா தேஷாம் நநிந்தாபரா பவதி | கிந்து ப்ரக்ருத விக்ரஹ ஸ்துதிபரா |”

பொருள் - ஈசுவரன் ஒருவனே உலகத்தின் ஸ்ருஷ்டி முதலியதைச் செய்வதற்காக, மாயையால், ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், இந்த்ரன் முதலிய மூர்த்திகளை ஸ்வீகரித்து, அந்தந்த மூர்த்தியில் பக்தி உடையவரை, அந்தந்த ரூபத்துடன் அனுக்ரஹிப்பவராய் இருக்கின்றார். பதினெட்டு புராணங்களை இயற்றிய வ்யாஸரும், அந்தந்த மூர்த்தியில் பக்தி உடையவருக்கு அது அதில் பக்தியை அதிகப்படுத்துவதற்காக அந்தந்த ரூபத்தை ஸ்துதிக்கின்றார். ‘இவனே ஸர்வக்ஞன், ஸர்வேச்வரான், ஸர்வாத்மா, மற்றவரல்ல, ஆகையால் இவனொருவனே ஸேவிக்கத் தகுந்தவன்’ என்று. அந்த நிந்தை அவர்களை நிந்திப்பதில் தாத்பர்யமுள்ளதல்ல. ஆனால் ப்ரக்ருதமான மூர்த்தியை ஸ்துதிப்பதில் தாத்பர்யமுள்ளது.

ஸநாதந தர்மம் என்னும் ஹிந்துமதத்தின் அடிப்படையான ’ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ என்னும் கருத்தை எவ்வளவு மகனீயர்கள், எவ்வளவு புராணங்கள், எவ்வளவு வேதப் பகுதிகள் வலியுறுத்தி வந்துள்ளன!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment