Sunday, April 5, 2020

தர்மம், கர்மம், யக்ஞம்

தர்மம், கர்மம், யக்ஞம்

இந்த மூன்று முக்கியமான கருத்துகளைப் புரிந்து கொள்வது மனித வாழ்க்கைக்குப் பெரும் ஆக்கமாக அமையும். வழக்கமாகச் சொல்லப்படும் விதத்தில் இவற்றைப் புரிந்துகொள்வதை விட உள்ளபடி நன்கு நம் வாழ்க்கையுடனும், காலத்துடனும் பொருத்திப் பார்த்து நுட்பமாகப் புரிந்துகொண்டால் பொதுவான உலகம் தழுவிய மனித வாழ்க்கைக்கான ஆக்கபூர்வமான பார்வையை நாம் அடையமுடியும். பெரும் கருத்துகளைத் தக்கவிதத்தில் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு மனிதருக்கு என்றும் உண்டு.

தர்மம் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் தரிக்கப்படுகிறது, தரித்தல் என்னும் பொருள் அம்சம் அடிப்படையாக இருக்கிறது. தரித்தல் என்றால் என்ன? ஒரு பொருள் மற்றொரு பொருளைத் தாங்கி நிற்குமேயானால் அப்பொழுது அது தரிக்கிறது என்று சொல்லிவிட முடியுமா? புழக்கத்தில் அங்கும் நாம் சொல்கிறோம் என்றாலும், அங்கு வெறுமனே ஒரு பொருளின் எடையை மற்றொரு பொருளின் கூடுதல் எடையின் திறனால் ஏந்தி நிற்கிறது என்பதுதான். ஆனால் தரிக்கிறது என்ற சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. மழை பொழிகிறது. நிலத்தில் வளத்துடன் பச்சை பொலிகிறது. நிலத்தின் வளமான பச்சையை நம்பி உயிரினங்கள் அடுக்கடுக்காக ஜீவிக்கின்றன. கதிரொளியும், வெயிலும் இந்தத் தொடர் உயிராக்கத்திற்குப் பெருந்துணையாக நிற்கின்றன. நிலத்தில், நீரில், மரத்தில், வானில் வாழ் உயிரினங்களைத் தரித்து நிற்பவை கதிரும், மழையும் எனலாம், ஆனால் இங்கோ புற எடை ரீதியாக எந்தப் பொருளும் எந்தப் பொருளையும் ஏந்தி நிற்கவில்லை. ஆனால் இங்குதான் தரித்தல் என்பது மிகவும் பொருளுடையதாக இருக்கிறது.

கதிரின் வெப்பத்தினால் மேலே ஈர்க்கப்பட்ட நீர்ப்பசை காற்றின் குளிர்ச்சியில் ஒருங்குற்று நீரென நிலத்தில் பெய்கிறது. அத்துணையே அங்கு நடைபெறும் நிகழ்வு. ஆனால் அதன் தொடர்ச்சியாகக் காரண காரிய நியதியால் பல வேலைகள் அடுத்து அடுத்து நடைபெறுகின்றன. கடைசியில் பார்த்தால் பெறும் பொலிவிற்கு முதல்நிலை உதவியாக மழையும், கதிரும் திகழ்கின்றன. அப்பொழுது ஆக்க பூர்வமாகவும், ஆக்கத்தை மிகுக்கும் விதத்திலும், ஆக்கத்தின் விளைவை ஏற்படுத்தும் விதத்திலும் ஒரு பெரும் தொடர்ச்சியில் ஒரு பொருளோ, அல்லது ஒரு செயலோ, அல்லது ஓர் உயிரோ பங்கெடுக்குமானால் அங்கு தரித்தல், தரிக்கப்படுதல் என்ற சங்கிலியில் ஒரு பகுதியாக அமைந்துவிடுகிறது. அந்தத் தொடரில் பார்த்தால் ஒரு நோக்கில் தரிப்பதாக இருப்பது மறு நோக்கில் தரிக்கப் படுவதாகவும் அமைகிறது. இந்த பரஸ்பரம் சார்ந்து விளங்கும் வளம் சேர்க்கும் ஆக்க பூர்வமான உயிர்த் தொடர் நிகழ்வின் தத்துவத்திற்கு தர்மம் என்று பெயர்.

கர்மம் என்பது மனிதரின் செயல். ஒன்றைக் கருதிச் செய்யப்படுவது கர்மம். அந்தக் கர்மமானது உலகெங்கும் தொடர்ச்சியாக உயிராக்கத்தையும், வளத்தையும் கூட்டும் தர்மத்திற்கு விரோதிக்காமல், பொருந்தி அமையும் பொழுது அந்தக் கர்மம் சுபமான கர்மம், நன்மை தரும் செயலாக அமைகிறது. அதுவே தர்மத்திற்குப் புறம்பான கர்மம் என்னும் பொழுது அது அசுபமாக ஆகிறது. அப்பொழுது நமக்கு ஒன்று தெரியவரும். வாழ்வில், உலக நடவடிக்கைகளில் அசுபம் விளையும் காரணம் கர்மத்திற்கும், தர்மத்திற்கும் பொருந்தாமையினால் ஆகிறது. தர்மம் என்பது சூக்ஷ்மமானது. பொதுவான கல்வி, பொறுப்பு மிகுந்த பண்பாட்டுப் பயிற்சி முதலியவற்றால்தான் தர்மம் என்பதை நுணுகி மனிதர் புரிந்துகொள்ள முடியும். வழிவழியான படிப்பினைகளும், பாடங்களும் மனிதர்களுக்கு தர்மத்தைப் பற்றிய கவனத்தை வளர்க்கின்றன.

தம்முடைய கர்மங்கள் எல்லாம் அசுபமாக இல்லாமல் சுபமான கர்மங்களாக அமையும்படிக் கருத்துடனும், கவனத்துடனும், அடக்கமுடைமையுடனும் மனிதர் செயலாற்றுங்கால் அதுவே யக்ஞம் ஆகிறது. அதுவே கர்மங்கள் சுபமாக இல்லாமல் அசுபமாக அமையும்படி மனிதர் தம் பொறுப்பின்மையாலும், அறியாமையாலும், அகங்காரத்தாலும் நடந்து கொள்வார்கள் என்றால் அங்கு யக்ஞம் இல்லாமல் மறைந்து ‘தமஸ்’ என்னும் இருளே மிஞ்சுகிறது. எனவே தர்மத்திற்கு முரணாகாத கர்மங்கள் சுபமாக அமைந்து யக்ஞம் விளைகிறது. தர்மத்திற்கு ஒவ்வாத கர்மங்கள் மலியுங்கால் தமஸ் என்னும் இருளே மண்டுகிறது. நாம் சுபமான கர்மங்களையே வாழ்க்கையில் இயற்றி உலக வாழ்க்கை என்னும் யக்ஞத்திற்குத் துணை சேர்ப்போமாக.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment